Tuesday, April 28, 2009

'ஈழப்பிரச்சினை' எனும் விற்பனைப் பொருள்

இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடனான கடைசிக்கட்ட போரில் ஈடுபட்டு பல அப்பாவி பொதுமக்களை அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலையில் அதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் வியாபாரம் படு வேகமாக சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான கட்சிகளின் இப்போதைய விற்பனைப் பொருள் 'ஈழப்பிரச்சினை'. அவரவர் திறமைக்கேற்ப தங்களின் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் உரக்க கூவிக் கொண்டிருக்கிறார்கள். திமுக இந்த வியாபாரத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் அதனுடைய பாசாங்கும் அரசியல் சுயலாப நோக்கங்களும் பகிரங்கமாக வெளிப்பட்டு விட்ட சூழ்நிலையில் மக்களின் நம்பிக்கையை பெரும்பாலும் இழந்துவிட்டது. திமுக ஏற்கெனவே பெற்ற லாபத்தைக் கண்டு பாமகவும் இந்த வியாபாரத்தை சூழ்நிலைக்கேற்ப நடத்திக் கொண்டு வருகிறது. மதவாதக் கட்சியான பாஜகவும் இந்த தேர்தலில் இதைக் கூவுவதைக் காணும் போது விற்பனைப் பொருளின் வணிக மதிப்பு அதிகமாகிவிட்டதாகவே தோன்றுகிறது. மதிமுக அல்லது வைகோ தொடர்ந்து இந்த பிராண்டை உறுதியாக விற்பனை செய்துக் கொண்டிருந்தாலும் விடுதலைப்புலிகளின் மீதான கண்மூடித்தனமான ஆதரவும் ஜெவுடன் கூட்டணி அமைத்ததும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விட்டது.

ஆனால் மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பது என்னவென்றால் இந்த விற்பனைப் பொருளை பல ஆண்டுகளாக புறக்கணித்துக் கொண்டிருந்த அதிமுக நிறுவனம் திடீரென்று பெருவிருப்பத்துடன் இதன் மீது காதல் கொண்டு இதனுடைய ஒட்டுமொத்த டீலர்ஷிப்பை ஏற்றுக் கொண்டதுதான். 'எனது மேனியழகின் ரகசியம்' என்று நடிகை விளம்பரங்களில் அருள்வாக்கு அளித்தவுடன் எப்படி அந்த விற்பனைப் பொருள் 'மளமள'வென காலியாகி லாபத்தை அதனுடைய தயாரிப்பாளருக்கு ஈட்டித்தருகிறதோ, அதே போன்றதொரு பரவசமான விற்பனை இன்று 'ஜெ'க்கு ஆதரவாக இணையத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

()

'நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழத்தை பெற்றுத் தருவேன்' என்று இதுவரை ஈழப்பிரச்சினையில் எதிர்நிலையைக் கொண்டிருந்த திடீர் ஞானோதயம் பெற்ற ஜெ. முழங்கியவுடன் வேறுவழியின்றி கருணாநிதி கூட்டணியே கதி என்று கிடந்தவர்கள் வீறுகொண்டு 'ஜெ'வை நோக்கி பாய்ந்து வர யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் 'ஜெ'வை ஜெயிக்க வைப்பது என்பதை விட திமுக கூட்டணியை தோற்கடிப்பது என்பதுதானாம். நாளைக்கே 'ஜெ' இன்னொரு அந்தர்பல்டி அடித்து 'இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது தர்மமாகாது' என்று பிரேமானந்தாவிடம் ஞானோதயம் பெற்று அருளாசி கூறினால் உடனே விஜயகாந்த்தையோ கார்த்திக்கையோ நோக்கி ஓடுவார்களாக இருக்கும். இப்படி கேனத்தனமாக சிந்தித்துக் கொண்டிருப்பதனால்தான் 'ஈழப்பிரச்சினை'யை முன்னுறுத்தி தமிழக அரசியல்வாதிகள் நீண்ட காலமாக நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்பிரச்சினையில் திடீரென்று இவ்வளவு கரிசனம் காட்டும் இந்த தமிழக அரசியல் கட்சிகள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக இணைந்து புறக்கணிக்கக்கூடாது?

கேட்பதற்கு நடைமுறைக்கு ஒவ்வாத, ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தாக தோன்றினாலும் இந்தப் பிரச்சினையை கண்டும் காணாமலும் இருக்கும் மத்திய அரசுக்கு தரும் அதிர்ச்சி வைத்தியமாக தர எல்லா அரசியல் கட்சிகளும் ஏன் முன்வரக்கூடாது? அவ்வாறு மட்டும் நடந்து விட்டால் அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியாகவே திகழும். ஆனால் பெயரில் மாத்திரம் புரட்சியை வைத்திருக்கும் அரசியல் வியாபாரிகள் இப்படியொரு சாத்தியத்தை பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றத்தர முடியும் என்றொரு விவாதம் எழுமானால் இதுவரை பெற்றிருந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இவர்கள் கிழித்ததுதான் என்ன? அதிகபட்சம் சபாநாயகரின் இருக்கையின் முன்னால் சற்று கூவியது மாத்திரம்தான்.

ஜெவின் இந்த சவடாலை எதிர்பார்க்காத கருணாநிதி, இதை அதிரடியாக எதிர்கொண்டு தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் யோசனையில் தன்னுடைய வழக்கமான திடீர் உண்ணாவிரத நாடகத்தை நிகழ்த்திவிட்டார். அவருடைய உண்ணாவிரதத்தினால்தான் இலங்கை அரசு போரில் 'கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது' என்று அதனுடைய இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருப்பது நிகழ்நதது என்கிற திமுகவினரின் வெற்றி கோஷத்தை [போர் நிறுத்தம் என்று இதை பசப்புகிறார்கள்] ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம் என்றாலும் கூட இதை ஏன் அவர் முன்னரே செய்து பலத்த சேதத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாமே? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

()

ஜெவின் இந்த திடீர் சவடாலில் தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரதான கவலை. 'கருணாநிதியை' எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கிற வெறியில் அவர் அடித்திருக்கும் ஸ்டன்ட் இது. ஜெ எப்படி ஒரு பாசிச மனப்பாங்கு கொண்டவர், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துபவர் என்பதை பல முறை முன்பே நிருபித்திருக்கிறார். அப்படியொரு ஆளுமையின் உறுதிமொழியை ஒரு பேச்சுக்குக்கூட நம்புவது அபத்தமானது. மேலும் திமுக கூட்டணியின் மீதுள்ள கோபத்தை நிரூபிக்க ஜெ. கூட்டணிக்கு வாக்களிப்பது அதனினும் அபத்தமானது. எலியை ஒழிக்க வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது இது.

மேலும் இது ஒரு நாடாளுமன்றத் தேர்தல். இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுள்ள சூழ்நிலையில் ஈழப்பிரச்சினை ஒரு பிரதானமான அஜெண்டாவாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் நம்மை ஆட்சி செய்யப் போகிறவர்கள் என்று நாம் நம்புவர்களை தேர்ந்தெடுக்கும் போது தொலைநோக்குப் பார்வையோடு தேசியக் கண்ணோட்டத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் அதனுடன் இணைத்துத்தான் இந்த தேர்தலை அணுக வேண்டும்.

இடியாப்ப சிக்கலான கூட்டணியைக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சிகளால் மிகுந்த குழப்பத்திற்குள்ளாகியிருக்கும் நான் இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வேன் என்று யோசித்த போது கீழ்கண்ட சாத்தியங்கள் தோன்றின.

1) எந்த அரசியல் கட்சி என்பதை பார்க்காமல் இருப்பதிலேயே தகுதியான வேட்பாளராக பார்த்து வாக்களிப்பது. இதில் நேர்மையான சுயேச்சைகளாக கருதப்படுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணம்: தென்சென்னையில் போட்டியிடும் டிராபிக் ராமசாமி போன்றோர்.

2) யாருமே தகுதியான வேட்பாளர்களாக தோன்றவில்லையெனில் 'யாருக்கும் ஒட்டளிக்க விருப்பமில்லை' என்கிற 49ஓ-வாய்ப்பை தேர்ந்தெடுப்பது. ஆனால் இது நடைமுறையில் அதிகம் சாத்தியமில்லை. ஒரு விண்ணப்ப படிவம் வாங்குவதற்கே பத்து முறை அலைய வைக்கும் அரசு இயந்திரம் நிச்சயம் இதற்கு ஒத்துழைக்காது.

3) எனவே ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லாத கடைசி வரிசையில் இருக்கும் சுயேச்சைக்கு வாக்களித்து தம்முடைய வாக்கு வீணாகக்கூடிய சாத்தியத்தையும் முறைகேடாக பயன்படுத்தக்கூடிய சாத்தியத்தையும் தடுப்பது.

[-எதிர்கருத்தைக் கொண்டிருந்தாலும் சரி- ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்கள் மாத்திரமே பிரசுரிக்கப்படும். எதற்காக இந்த குறிப்பு என்றால் சமீப காலமாக நான் நிறைய அநாயவசியமான பின்னூட்டங்களை நீக்குவதிலேயே நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. திரைப்படம் தொடர்பான எனது பதிவிற்கு இன்னொரு பதிவுடன் சம்பந்தப்படுத்தி நிறைய ஆபாச வார்த்தைகளுடனான பின்னூட்டங்கள் வந்தன. ஒருவர் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை இணைய வெளி அமைத்து தராமலிருப்பது குறித்து யோசிக்க ஆயாசமாக இருக்கிறது.]

suresh kannan

Monday, April 27, 2009

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்


பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிகுழு.... என்று 1980-களைப் போல தமிழ்த்திரையுலகில் தற்போது ஒரு புதிய அலை வீசுவதைக் குறித்துக் காண சற்று சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதை எந்திரனோ சந்திரனோ வந்து கெடுத்து விடக்கூடாமல் இருப்பதாக. என்றாலும் நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருவது போல் வழக்கமான வணிகநோக்குப் படங்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் படங்களைக்கூட உலகத் தரமான படைப்புகளாக கொண்டாட வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையில் நாம் இருக்கிறோம். சமீபத்திய உதாரணம், நான் கடவுள். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான நேரத்தை எடுத்துக் கொண்டு பாலா அவசர அவசரமாக கிளறிய ஆறிப் போன உப்புமா படமது. ஆனால் சாரு அதை அகிராவின் படத்தோடு ஒப்பிட்டு சிலாகிக்கிறார். சரி அது அவரது பிரச்சினை. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்ச் சினிமா இன்னும் தவழும் நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

கு... கொ..... வின் போஸ்டர்களே சற்று வித்தியாசமான திறமையான தொனியில் இருந்ததையும் தொலைக்காட்சியில் இந்தப்படத்தைப் பற்றின நிகழ்ச்சிகளையும் காட்சித்துணுக்குகளையும் கவனித்த போது இதுவும் மேற்கூரிய திரைப்படங்களைப் போன்ற திறமையான முயற்சிகளில் ஒன்றாக இருக்குமோ என்று யூகித்தேன். நான் யூகித்தது சரிதான் என்று சொல்ல விடாதவாறு படத்தின் இயக்குநர் ராஜாமோகன் செய்துவிட்டார் என்பது குறித்து வருத்தமாகத்தான் இருக்கிறது. ஏன்..? சொல்கிறேன்.

பாரதிராஜாவின் படங்கள், பாலாஜி சக்திவேலின் காதல், அமீரின் பருத்திவீரன் போன்றவை ராஜாமோகனை மிகவும் பாதித்திருக்க வேண்டும். தவறில்லை. ஆனால் 'முட்டம்' லொக்கேஷனிலேயே எடுத்தால் அதுவும் இன்னொரு 'கடலோர கவிதைகள்' மாதிரி ஆகிவிடும் என்று கணக்கு போட்டதுதான் தவறு. நாகர்கோவிலின் அருகே உள்ள இடத்தில் நிகழ்வதாக சித்தரிக்கப்படும் இத்திரைப்படத்தில் படத்தின் ஆரம்பக் காட்சிகளைத் தவிர யாருமே அந்த வட்டார வழக்கில் பேசுவதாகத் தெரியவில்லை. இந்த வட்டாரவழக்கு, நேட்டிவிட்டி, அகேலா கிரேன், டோனிங், கலர் கரெக்ஷன் இன்னபிற கசுமால விஷயங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு தரமான படத்தை தரமுடியாது. இவையெல்லாம் ஒரு பேப்பர், பேனா மாதிரிதான். எழுதும் விஷயமும் பாணியும்தான் முக்கியம்.

()

பதின்ம வயதுகளில் உள்ளவர்களாக சித்தரிக்கப்படும் அந்த இளைஞனும் யுவதியும் புல்மேட்டிலும், கடற்கரையிலும் காதலிப்பதை நிதானமாக காண்பித்து விட்டு படம் அடுத்த தளத்திற்கு நகர்வதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. [இந்த இடைவேளை என்கிற லெளதீக சமாச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுகிறவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும்]. படத்தின் இறுதிக்காட்சியில் ஸ்லோமோஷனில் ஓடிவந்து காதலர்கள் இணைகிற அபத்தங்கள் எல்லாம் இல்லாமல் உடனடியாகவே அந்த யுவதிக்கும் வில்லனுக்கும் திருமணமாகி விடுகிறது. பிறகு நடப்பது கொஞ்சம் பார்த்திபன்தனமான 'எங்கிருந்தாலும் வாழ்க அல்லது சாக'.

படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ராமகிருஷ்ணன் ஆரம்பகால பாண்டியராஜன் போல் இருக்கிறார். [இவர் சேரனிடம் உதவி இயக்குநராக இருந்தவராம். சேரனும் அவரைச் சேர்ந்தவர்களும் நடிப்பதற்கு வரக்கூடாது என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் யாராவது புகார் தரலாம்] :-) ஆரம்பத்தில் சற்று அந்நியமாகத் தெரிந்தாலும் போகப் போக பழகி விடுகிறார். படத்தின் பிந்தையக் காட்சிகளில் சற்று நடிக்கவும் செய்கிறார்.

படத்தின் நாயகி தனன்யாவும் அவ்வாறே. ராமகிருஷ்ணன் +2 படிப்பதாக காட்டியிருப்பது சற்று பொருந்தாமல் உள்ளதைப் போல் அல்லாமல் நிஜமாகவே ஒரு பதின்மவயதுப் பெண்ணுக்குரிய தோற்றத்துடன் சினிமாத்தனமான முகத்துடன் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். எப்படியோ சிரமப்பட்டாவது நடித்துவிடுகிறார். இவ்வாறான இயல்பான, பொருத்தமான முகங்களை பிரதான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். பார்த்து பார்த்து சலித்துப் போன எரிச்சலையடைய வைக்கும் வணிக பிம்பங்களின் நடுவே இம்மாதிரியான next door பிம்பங்கள் படைப்போடு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இவர்களை விட நாயகனின் அம்மா, நாயகியின் பாட்டி, தருமனின் அக்கா போன்றவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஊர் நடுவே அவமானப்பட்டு திரும்பும் போது பேருந்தில் அமர்ந்திருக்கும் பாட்டியின் ஒரு முகபாவம் என்னை மிகவும் சலனப்படுத்தியது. ஆரம்பகால ரஜினியின் பில்டப்களோடு அறிமுகமாகும் தருமன் பாத்திரத்தில் தோன்றுபவரும் நன்றாக வில்லத்தனத்தை காட்ட முயன்றிருக்கிறார்.

ஆரம்பக் காட்சிகளில் முட்டத்தின் நிலப்பரப்புகளையும் கடற்பரப்புகளையும் பிரமிப்பான பிரேம்களாக தந்திருக்கும் சித்தார்த்தின் காமிரா மனிதர்களைக் காட்டும் போது சற்று மெளனமாகிப் போயிருக்கிறது. யுவனின் சில பாட்டுக்கள் கேட்பதற்கு நன்றாகவே இருந்தாலும் ஏதோ பாப் மியூசிக் பாணி போல அவரே வழக்கமான தொனியில் கட்டாயமாக ஒரு பாட்டு பாடுவதை நிறுத்தி வைப்பது நலம். பின்னணி இசையைப் பொறுத்தவரை அவர் தந்தையிடமிருந்து கற்க வேண்டியது கடலளவு இருக்கிறது.

கடற்கரையின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் செயற்கையான கோயில், திருவிழாபாட்டு, அதில் போடப்படும் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரிண்ட் (ஆனால் வசனத்தில் "பழய பிரிண்டுப்பா" என்கிறார்கள்), கட்டுப்பாடான கிராமத்தில் காதலர்கள் சுதந்திரமாக உலவுவது, இதை நாயகனின் அம்மா அறியாமலிருப்பது ... என்று பல குறைபாடுகள் படத்தின் சுவாரசியத்தை குறைத்து விடுகிறது.

இயக்குநர் ராஜாமோகன் நிஜமாகவே ஒரு நல்ல படத்தை தந்துவிட வேண்டும் என்று சிரத்தையாகவே உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் வலுவில்லாத கதை, சுவாரசியமற்ற திரைக்கதை, தமிழ்ச்சினிமாவின் சில கிளிஷேவான சமாச்சாரங்கள், கிளைமேக்சில் நாயகனும் நாயகியும் இறந்து போனால் படம் வெற்றி பெறும் என்று ஒருவேளை நம்பின சென்டிமென்ட்... போன்றவைகளினால் ஒரு நல்ல திரைப்படத்தை கண்டோம் என்று பார்வையாளனை உணர வைப்பதிலிருந்து நிறையவே விலகிப் போயிருக்கிறார்.

படத்தின் பெரும்பான்மையான பிரேம்களை சில குறிப்பிட்ட பாத்திரங்களே பெரும்பான்மையாக ஆக்ரமித்துக் கொள்கின்றன. இதனால் ஏற்படும் பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய சலிப்பை பல சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் இயக்குநர் அதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக 'வெண்ணிலா கபடி குழுவில்' ஒரு காட்சி. நாயகன் நாயகியை ஒட்டமும் நடையுமாக பல குறுக்குச் சந்துகளில் தொடர்ந்து போகிறான். ஒரு கட்டத்தில் அவளைத் தவற விட்டு விடுகிறான். அந்த வழியாக தடியை ஊன்றிக் கொண்டு மிக மெதுவாக போயக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் இருவரையுமே கவனிக்கிறார். நாயகன் அவரிடம் 'அந்த பெண் எந்தப் பக்கம் போனாள்?' என்று பார்வையாலேயே கேட்கிறான். மிகவும் ரசிக்கத்தக்க ஒரு கேலிப்புன்னகையுடன் அந்த முதியவர் அந்தப் பெண் போன திசையை தடியினால் சுட்டிக் காட்டுகிறார். மிகக் குறுகிய நேரமாக இருந்தாலும் இந்தக் காட்சிக் கோர்வை உலகத்தரத்தி்ல் உருவாக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கு.... கொ....வில் நாயகன் "அம்மான்னா எனக்கு உசுரு" என்கிறான். ஆனால் அவனும் அம்மாவும் வீட்டில் இருப்பது போன்று ஒரு பிரேம் கூட இல்லை. அந்தக் கிராமத்தில் உள்ள பல கேரெக்டர்களை சுவாரசியமாக பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கடற்கரை அருகே ஒரு தெய்வச்சிலை காட்டப்படுகிறது. தங்களுடைய வாழ்வு நன்றாக அமைய வேண்டுமென்று அந்தச் சிலையை அந்த இளம் காதலர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு பலனுமிருப்பதில்லை. தங்களுடைய எதிர்பார்ப்பிற்கு நேர்மாறான நிகழ்வுகளின் பிறகு அந்தச் சிலையை வெறுப்புடனும் வன்மத்துடனும் நோக்குகிறார்கள். ஆனால் எந்தவித பிரக்ஞையுமின்றி அந்தச் சிலை அனைத்து கண்ணீருக்கும் ஒரு மெளன சாட்சியாகவே நிற்கிறது. இயக்குநர் ராஜாமோகன் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருப்பாரோ என்னமோ? இதே ராமநாராயணன் என்றால் கிராபிக்ஸ் உதவியுடன் பிரம்மாண்ட மாயாஜாலமெல்லாம் நிகழ்த்தி அந்தக் காதலர்களை ரம்யாகிருஷ்ணன் அல்லது மீனா வகையறாக்கள் உதவியுடன் இணைத்து வைத்திருப்பார்.

தமிழ்ச்சினிமா 'காதல்' என்கிற கச்சாப் பொருளிலிருந்து விலகி வரவேண்டும் என்பதே இந்தப்படத்தின் நீதியாக இருந்தாலும் எனக்கு நாயகியின் பாத்திரத்தின் சித்தரிக்கப்பட்டிருந்தத விதம் எனக்குப் பிடித்திருந்தது. இந்தியா போன்ற இன்னும் பெரும் நாகரித்தை எட்டாத நாடுகளில் ஆண்களைப் போல் தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே காற்றில் பறக்கும் சருகு போல எவ்வித கேள்விகளுமின்றி தங்கள் மீது திணிக்கப்படும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இப்படத்தில் வரும் நாயகியும் அப்படித்தான். தன்னை 'நன்றாக பார்த்துக் கொள்வதாக' சொல்லும் காதலனை முழுமையாக நம்பும் அவள் அவமானப்பட்டு ஊரைவிட்டு வெளியேற நேரிடுகிறது. பின்னர் ஒரு ரவுடியை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஆனால் அங்கிருந்தும் வெளியேறும் அவளை அக்காவின் கணவராக வருபவரும் அடைய துடிக்கிறார். பொதுவாக பெண்களுக்கு 'Security conscious' நிறைய உண்டு என்றும் அதைத் தரக்கூடியவர்களாக அவர்கள் நம்புவர்களைத்தான் அவர்கள் நெருங்கிப் போவார்கள் என்பது உளவியல் ரீதியிலான கருத்து. அது உண்மையாகத்தான் இருக்கக்கூடும். ஏனெனில் உடல்ரீதியான,சமூகரீதியான வன்முறை நெருக்கடிகளை அவர்களால் தனியே எதிர்கொள்ள முடியாதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.



()

தமிழகத்தில் எனக்குப் மிகவும் பிடித்த ஆளுமைகளுள் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடையதும் ஒன்று. அவர் நலமாக இருக்க ஒருமுறையாவது இந்த திரைப்படத்தை அரங்கில் கண்டு களிக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். :-)

suresh kannan

Wednesday, April 15, 2009

பிரியாணியும் பிரியாமணியும்

(எச்சரிக்கை: இது ஒரு பிரியாணி கலந்த மொக்கை பதிவு)

மிகவும் பிடித்தமானவைகளின் பட்டியல் ஒன்றை யாராவது என்னிடம் சொல்லச் சொன்னால் அதில் தவறாமல் நான் குறிப்பிடும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். 'பிரியாணி'.

'ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய பிரயாணிகள்..' என்கிற பத்திரிகை வாசகம் எனக்கு 'பிரியாணிகள்' என்று கண்ணில்படும் அளவிற்கு பிடித்தமான சமாச்சாரம் அது. எப்போது முதல் 'பிரியாமணியை.. சட்...'பிரியாணியைச்' சுவைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்தது முதல் பயங்கரமான பசி என்றால் எனக்கு உடனே சாப்பிட நினைப்பது பிரியாணிதான். அசைவ பிரியாணி என்றால் கூடுதல் பிரியம் என்றாலும் அதுதான் வேண்டுமென்று இல்லை. 'அடியார்க்கு அடியார்' போல பிரியாணி எந்த வடிவில்/வகையில் இருந்தாலும் பிடித்தமானதுதான்.. இந்த உணவு வடிவத்தை முகலாயர்கள்தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர் என்பது பரவலான நம்பிக்கை. 'உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழக் குரங்காகத்தான் இருக்கும்' என்று புதுமைப்பித்தன் தமிழ் ஆய்வாளர்களை கிண்டலடித்தாலும் நம்மாட்கள் விடுவதில்லை. பிரியாணி என்கிற வடிவம் முகலாயர்களின் வருகைக்கு முன்பே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது என்றும் அதற்கு "ஊன்சோறு" என்று பெயர் என்றும் நாளிதழின் குறிப்பொன்று சொல்கிறது.

ஊன்சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் ஒருவிதமாக இருந்து, முகம்மதியர் வருகையால் சற்று மாறுதல் அடைந்தது. ஏபுலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டன்ன ஊன்சோற்று அமலைஏ என்பதால் புலால் கறியும், சோறும் சேர்ந்து பிரியாணி சமைக்கப்பெற்றது தெளிவு.
என்கிறார் நா.கணேசன். [முழுக்கட்டுரையையும் படிக்க]

()

பிரியாணியின் மேலுள்ள காதலுக்காக இந்திய ஜனநாயக அமைப்பிற்கே ஒரு முறை நான் துரோகம் செய்திருக்கிறேன்.

வேட்பாளர்கள், வாக்காளர்களையும் தொண்டர்களையும் கவர்வதற்காக பிரியாணி போடுவது நெடுங்கால மரபு. இதிலிருந்தே பிரியாணிக்கு உள்ள செல்வாக்கை புரிந்து கொள்ளலாம். என்னுடைய பதின்மங்களில் நிகழ்ந்தது இது. தேர்தல் நேரம். ஆனால் வாக்கிடுவதற்கான வயது எனக்கில்லை. வீட்டில் தண்ணி தெளிக்கப்பட்டு 'வெட்டியாக' சுற்றிக் கொண்டிருந்தேன். வகுப்பு நண்பனொருவன் இருந்தான். என்னுடைய நண்பன் என்று சொன்ன பிறகு அவன் என்ன மாவட்ட ஆட்சியராகவா இருப்பான். மாநிலக் கட்சிக்காக தேர்தல் பணியில் நிழலான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். என்னை திடுக்கிட வைத்த யோசனையை அவன்தான் என்னிடம் முன்வைத்தான். அதாவது வேறு ஒரு நபரின் வாக்குச் சீட்டை பயன்படுத்தி நண்பன் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்திற்கு ஒட்டளிப்பது. நேர்மையான வார்த்தைகளில் சொன்னால் 'கள்ள ஓட்டு போடுவது'.

ஏதோ மாணவிகளை கிண்டலடிப்பது, மாவா போடுவது போன்ற சில்லறை குற்றங்களில் மாத்திரம் ஈடுபட்டிருந்த எனக்கு இது மலையேறும் சவாலாகத் தோன்றியது. மேலும் அப்போதுதான் டி.என்.சேஷன், தேர்தல் ஆணையாளர் என்கிற பதவியை உருப்படியாக தடாலடியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை பற்றி அரசல் புரசலாக அறிந்திருந்ததால் பயந்த என்னை கீதை கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஆற்றுப்படுத்தினான் நண்பன். புகைப்பட அடையாள அட்டை போன்ற கசுமால தொந்தரவுகள் அப்போது இல்லாததால் இதில் ஒன்றும் பிரச்சினையில்லை என்றான். சட்டத்தை மீறுவதில் உள்ள 'த்ரில்' பிடித்திருந்தாலும் பின்விளைவுகளை நினைத்து அவசரமாக மறுத்த என்னை அவன் சொன்ன ஒற்றை வாக்கியம் நிதானப்படுத்தியது. "இந்த மாதிரி ஓட்டு போடறவங்க எல்லாருக்கும் மத்தியானம் பிரியாணி விருந்து உண்டுடா". அது போதாதா? சேஷனை அல்சேஷனாக ஒதுக்கி விட்டு, தகுதிக்கு முன்னதாகவே ஜனநாயக கடமையை ஆற்றிய பெருமையை திகிலுடன் முடித்தேன். பிரியாணியின் மீது எனக்குள்ள பிரேமையை உங்களுக்கு உணர்த்தவே இந்த ராமாயணம்.

()

வலைப்பதிவராக உள்ள ஒரு இசுலாமிய நண்பர் ஒருவர் அவர் வீட்டிற்கு இ·ப்தார் விருந்துக்காக அழைத்திருந்தார். (அவர் பெயரை வெளியிடலாமா என்று தெரியவில்லை.). பொதுவாக 'பாய்' வீட்டு பிரியாணி என்றாலே அதற்கு தனிச்சுவை உண்டு. திராவிட பிரியாணியை விட ஆரிய பிரியாணி மீதுதான் எனக்கு மோகம் அதிகம். பொதுவாக தமிழர்கள் தயாரிக்கும் பிரியாணியில் காரச்சுவை அதிகமிருக்கும். அசைவம் என்றாலே அது காரசாரமாக இருக்க வேண்டும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. மேலும் பிரியாணி வேகும் போது ஆவியாகும் நீர், மறுபடியும் சாதத்திற்குள்ளேயே இறங்குவதால் சற்று கொழகொழவென்று இருக்கும் பிரியாணியின் சுவை சற்று மட்டுத்தான். மூடியிருக்கும் தட்டின் மீது நெருப்புத் துண்டங்களை வைத்து அந்த நீராவியை உறிஞ்சிக் கொள்ளும் முறையில் இசுலாமியர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க வேண்டும்.

சரி நண்பர் வீட்டு விருந்திற்கு வருகிறேன். ஏற்கெனவே சொன்னது போல் 'பாய்' வீட்டு பிரியாணி என்பதால் தூரத்தைக் கூட பார்க்காமல் சென்ற எனக்கு பெரியதொரு அதிர்ச்சியை தந்திருந்தார் அவர். தயாரிக்கப்பட்டிருந்தது வெஜிடபிள் பிரியாணி. முன்பே சொன்னது போல் பிரியாணி எந்த வகையில் இருந்தாலும் பிடிக்கும் என்றாலும் 'பாய்' வீடு என்பதால் நான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு போனது அசைவ பிரியாணியை. அவர் மீது எந்தவொரு குற்றமுமில்லை. அவர் அழைத்திருந்த நண்பர்கள் பலர் பாழாய்ப் போன சைவ பழக்கமுடையவர்கள் [:-)] என்பதால் இந்த ஏற்பாடு. என்றாலும் முழு மோசம் செய்யாமல் கூடுதலாக சிக்கன் வறுவல் ஏற்பாடு செய்திருந்ததினால் சற்று மனச்சாந்தி உண்டாயிற்று. நான் ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அவரிடம் சொன்னேன். "கலி முத்திடுச்சுன்றது உண்மைதான். பாய் வீட்ல போய் வெஜிடபிள் பிரியாணின்னா அடுக்குமா இது?".

(இப்படியாக இதை எழுதிவிட்டதால் இனிமேல் அழைப்பாரா என்று தெரியவில்லை). :-)

Photobucket

மெனு விஷயத்தில் 'Known devil is better than unknown angel' என்பதுதான் என் பாலிசி. எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, 'சிக்கன் பிரியாணி- லெக் பீஸ்' என்று சொல்லிவிடுவேன். விவேக் சொல்வது போல் 'லெக்-பீஸ்' இல்லையெனில் சற்று டென்ஷனாகி விடுவேன். வேறு உணவு வகைகளை முயற்சித்துப் பார்க்க எனக்கு தைரியம் போதாது. நல்ல பசி வேளையில் அது பிடிக்காமற் போய்விட்டால் ஏற்படும் வெறுப்பு நீண்ட நேரத்திற்கு அகலாது. அது வரை சாதா பிரியாணி வகைகளையே சாப்பிட்டுக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர் 'சர்வர்' ஒருவர்.

உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களில் இரண்டு வகைகளை பார்த்திருக்கிறேன். பெரும்பான்மையினர் மிகவும் சலிப்பான முகத்துடன் முயக்கத்தின் இடையில் எழுப்பப்பட்டவர்கள் போன்ற முகபாவத்துடன் வந்து "என்ன சாப்படறீங்க" என்பர். அவர் கேட்பதிலேயே நம் பசி போய்விடும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாள் முழுக்க ஒரே மாதிரியான பணியை திரும்பத் திரும்ப செய்கிறவர்களின் உளவியல் ரீதியான கோபம் அது. நம்மிடமும் குற்றமிருக்கிறது. எல்லா உணவு வகைகளும் நமக்கு சிறுவயதிலிருந்தே அறிமுகமானவைதான். மேலும் பொதுவாக எல்லா உணவகங்களிலும் அறிவிப்பு பலகையில் அன்றைய ஸ்பெஷல் உட்பட எல்லாமே பட்டியலிடப்பட்டிருக்கும். இருந்தாலும் சர்வர் வாயினால் கேட்டால்தான் நமக்கொரு திருப்தி.

இன்னொரு வகையினர் புன்சிரிப்புடன் வழக்கமான உணவு வகைகளை சொல்வதைத் தவிர "சார்... இன்னிக்கு ஸ்பெஷல் காலி·பளவர்ல பஜ்ஜி. டிரை பண்ணிப் பாக்கறீங்களா?" என்று கேட்பார்கள். அவர்கள் சொல்லும் முறையே அதை மறுக்கத் தோன்றாது. அப்படியான ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் 'சிக்கன் மொஹல் பிரியாணி'. வழக்கமான பிரியாணி போல் தூக்கலான காரம் அல்லாமல் முந்திரி, திராட்சைகளுடன் முட்டை தூளாக்கப்பட்டு மேலே தூவப்பட்டு உயர்ந்த ரக பாசுமதி அரிசியுடன் சாப்பிடுவதற்கே தேவார்மிர்தமாக இருந்தது. தலைப்பாகட்டு, பொன்னுச்சாமி, வேலு,அஞ்சப்பர் என்று எந்தவொரு பிராண்டாக இருந்தாலும், ஹைதராபாத், காஷ்மீரி, ஆந்திரா என்று மாநில வாரியான பிரியாணி வகைகளை சுவைத்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது சிக்கன் மொஹல் பிரியாணி.

இப்போது கூட மிகுந்த பசியென்றால் ரயில்வே நிலையத்திற்கு எதிரேயிருக்கும் அந்த நான்-வெஜ் ஹோட்டலுக்கு நான் நுழைந்தவுடன் சமயங்களில் என்னைக் கேட்காமலேயே கூட அவர்களாக ஆர்டர் செய்துவிடுவது இந்த அயிட்டமாகப் போய்விட்ட அளவிற்கு இதற்கு அடிமையாகிவிட்டேன். இது ஒருவேளை மரபு சார்ந்த கோளாறா என்று தெரியவில்லை. ஒரு முறை என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது கிடைத்த இடைவெளியில் பக்கத்து படுக்கையில் இருந்த இசுலாமிய குடும்பத்தினரிடம் என் அம்மா உரையாடிக் கொண்டிருந்தது "நீங்க பிரியாணி செய்யற பக்குவம் எப்படி?".

()

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரியாணியின் மெக்கா என்று 'ஆம்பூரைச்' சொல்கிறார்கள். இதற்காகவாவது வேலூருக்கு ஒரு நடை போய் வர வேண்டும். ஆனால் இப்படி பிரியாணியாக சாப்பிட்டு சாப்பிட்டு அதிகம் மிஞ்சியிருக்கும் கலோரிகளை எரிக்கத் தெரியாமல் விழியும் தொப்பையும் பிதுங்கிக் கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை. 'அமாவாசை' 'வெள்ளிக்கிழமை' போன்ற எந்தவொரு தடையும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை.

பதிவை முடிக்கும் முன்பு இதையும் சொல்லி விடுகிறேன். பிரியாணி ஆசை காட்டி என்னை 'கள்ள ஓட்டு' போட வைத்த நண்பர் அவர் தந்த வாக்குறுதியின் படி எனக்கு பிரியாணி விருந்து தரவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் பின்பற்றுவதில்லை என்பதின் காரணமாக இப்போது அவர் நிச்சயம் பெரிய அரசியல்வாதியாக மாறியிருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய சாபமோ என்னமோ தெரியவில்லை, அந்த முறை நான் வாக்களித்திருந்த கட்சி தோற்று விட்டது.

image courtesy: http://varshaspaceblog.blogspot.com/

இன்னொரு பிரியாணி பிரியரின் அனுபவத்தை வாசிக்க

நண்பரொருவரின் பிரியாணி அனுபவம்

suresh kannan

Monday, April 13, 2009

யாவரும் நலம்

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் இதன் அபாரமான திரைக்கதை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மனோபாலாவின்' பிள்ளை நிலா என்றொரு ஷாலினி நடித்த படம் சக்கைப் போடு போட்டது. பின்னர்.. யார், 13-ம் நம்பர் வீடு, மைடியர் லிசா போன்ற அசட்டு திகில் படங்கள் தமிழில் வந்தாலும் உருப்படியான thriller எதுவும் தமிழில் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் ரசித்துப் பார்த்த திகில் படைப்பு தொலைக்காட்சியில்தான் வந்தது. அது 'நாகா'வின் மர்மதேசம். split personality பற்றி தமிழ்த் திரை பேசுவதற்கு முன்பே அந்த சமாச்சாரத்தை தொட்ட தொலைக்காட்சி தொடர் அது. திகில் படங்களின் ஆதார விதி, அதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதுதான் போல. பார்வையாளனை நகத்தைக் கடித்தபடி இருக்கையின் நுனியில் அமர வைப்பதுதான் இயக்குநரின் முக்கியமான நோக்கமாக இருக்கும்.

Photobucket

அந்த வகையில் 'யாவரும் நலம்' வெற்றி பெற்றிருக்கிறது எனலாம். புது அபார்ட்மெண்டில் குடியேறும் மாதவன் விசித்திரமான நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டில் மாத்திரம் மதியம் 01.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரில் நிகழும் சம்பவங்கள் சற்றேறக்குறைய அவர் வீட்டிலும் அப்படியே நிஜத்தில் நிகழ்கின்றன. அதன் ஆணிவேரைத் தேடி மாதவன் பயணிப்பதுதான் மீதப்படம்.

மஹாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் எடுத்து தீமைகளை ஒழிக்கும் சூப்பர்மேன் நாயகர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதர்களை நாயகர்களாக சித்தரிப்பதில் மோகன் வகையறாகளுக்குப் பிறகு தற்போது மாதவன் மாத்திரமே அம்மாதிரியான பாத்திரங்களை துணிந்து ஏற்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமான திரைப்படங்கள் தவிர, அன்பே சிவம், நளதமயந்தி, எவனோ ஒருவன், குரு, ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால்... என்று அவர் தேர்ந்தெடுக்கும் படங்களே அலாதியாகத்தான் இருக்கிறது. இடையில் சீமான் போன்றோர்களிடம் மாட்டிக் கொள்ளும் அபாயமும் நேர்கிறது. தானே தனது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்று பதைபதைக்கும் போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

அவ்வளவு பெரிய அபார்மெண்டில் மாதவன் குடும்பமும் கண்பார்வையற்ற ஒருவரும் நாயும் மாத்திரம்தான் இருக்கிறார்களா, மாதவனின் மொழியில் அவரின் அம்மாவிற்கு 'பாய் பிரண்டாக' இருக்கிற அந்த நபரின் வீட்டில் நிகழ்ந்த துர்மரணம் பற்றி இவர்கள் அறியாமலா இருப்பார்கள்? என்று நமக்குள் எழுகிற கேள்விகளையெல்லாம் நமக்குள்ளேயே புதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

டிவி சீரியலில் நடிக்கவென்றே பிறந்தவர்களை இந்தப் படத்தில் பார்த்துத் தொலைக்க வேண்டிய சங்கடத்தைத் தவிர படம் மிக விறுவிறுப்பாகவே செல்கிறது. மண்டையோட்டுடன் மந்திரவாதி, இருட்டில் வெள்ளை சேலை போன்ற வழக்கமான அசட்டுத்தனங்ளை தவிர்த்துவிட்டு ஒரு ஹைடெக் திகில் படத்தைத் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமைப் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். பிரேமிற்குள் இருக்கிற அத்தனை பத்தாயிரம் வாட்ஸ் விளக்குகளையும் பயன்படுத்தி 'தெளிவாக' படம் எடுத்துக் கொண்டிருக்கிற தமிழ்த்திரையை இருளும் ஒளியுமான கலவையை நவீனமாக பயன்படுத்தி அதன் முகத்தை மாற்றியமைத்தவர்களில் முக்கியமானவர் பி.சி. அக்னி நட்சத்திர கிளைமேக்ஸ் போன்றவைகளை மாத்திரம் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். சங்கர் மகாதேவன் குழுவினரின் இசை சில சமயங்களில் இரைச்சலாக இருந்தாலும் பல சமயங்களில் திகிலை ஏற்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறது.

()

தொலைக்காட்சி தொடரில் வரும் சம்பவங்கள் protagonist-ன் நிஜ வாழ்விலும் நடைபெறும் காட்சித் தொடரை பார்த்தவுடன் என் மூளையில் மணியடித்தது. இதே போன்று எங்கோ பார்த்திருக்கிறோமே என்று. ஹாலிவுட்டின் பிரபல இந்திய தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ், sony pix தொலைக்காட்சியுடன் இணைந்து 'Gateway' என்றொரு ரியாலிட்டி நிகழ்ச்சியை தயாரித்தார். இந்தியாவில் உள்ள சினிமாவை தயாரிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியது. அதில் ஆரம்ப நிலை போட்டியில் பிஜோய் நம்பியார் என்ற போட்டியாளர் soap என்கிற குறும்படத்தை உருவாக்கினார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தோன்றும் சம்பவங்கள் உடனேயே தன் வீட்டில் நிகழ்வதை ஆச்சரியத்துடன் கவனிக்கிறார். உடனே ஆர்வமாகி அந்தத் தொடரை தொடர்ந்து கவனிக்கும் போது அதிலேயேயும் இவரைப் போன்றதொரு பேராசிரியர் பாத்திரம் சந்திக்கும் நிகழ்வுகளை பிற்பாடு இவரும் சந்திக்க நேரிடுகிறது. மனஉளைச்சலுக்கு ஆளாகும் பேராசிரியர், டிவி பேராசிரியர் ஒரு விபத்தை சந்தித்து இறப்பதை பார்க்கிறார். நிஜ வாழ்க்கையில் இவரும் அதே போன்றதொரு விபத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பி விடுகிறார். சாலையில் செல்லும் இன்னொரு நபர் அதில் சிக்கி இறந்து விடுகிறார். அவர் யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்?.

மிகச் சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருந்த அந்தக் குறும்படத்தில் கல்லூரி பேராசிரியராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தார். இறுதிப் போட்டியிலும் பிஜோய் நம்பியாரே வெற்றி பெற்றார். (rediff செய்தி)

இதே காட்சியமைப்புகளின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கண்ட தொலைக்காட்சித் தொடரை 'யாவரும் நலம்' இயக்குநரும் பார்த்து அதே போன்று அதைத் திரையில் நிகழ்த்த விரும்பினாரா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு கதாசிரியர் புகார் செய்திருப்பதாகவும் அறிகிறேன். படத்தில் வெளிப்படும் சுவாரசியங்களை விட இவை இன்னும் சுவாரசியமாக இருக்குமோ என்னவோ?

()

எனது முந்தைய பதிவின் சில குறிப்புகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை பின்னூட்டங்களின் மூலம் உணர முடிகிறது. என் நோக்கம் நிச்சயம் அதுவல்ல. பதிவை திறந்த மனத்துடன் படிக்கும் எவராலும் அதை உணர முடியும். அதற்கான தடங்கள் அந்தப் பதிவிலேயே உள்ளன. I was not trying to preach. 'அந்தப் படம் பாக்கறது வேஸ்டுப்பா' என்கிற ஒரு நண்பனின் குரல்தான் அது.

நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரி அல்ல. பல சமயங்களில் என்னை இளைப்பாற்றிக் கொள்ள நான் பார்ப்பது பொழுதுபோக்கு படங்களே. கலையின் ஆதாரத் துவக்கமே இளைப்பாறுதல்தான். ஆதிமனிதன் வேட்டையாடி, புணர்ந்து, இயற்கையுடன் போராடி சுற்றித் திரிந்து மீதமுள்ள தாராளமான பொழுதுகளைக் கழிக்க உருவாக்கின புனைவு, ஒவியம், நாடகம், இசை போன்றவற்றின் மிக நவீன வடிவங்கள் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருப்பது. அவற்றின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அதிலுள்ள குறைகளை களைந்து மிகுந்த நுண்ணுணர்வுடன் அணுகும், வணிகத்துக்காக செய்து கொள்ளும் சமரசங்களை முற்றிலுமாக புறக்கணிக்கும் படைப்புகளே 'கலைத்தன்மை' வாய்ந்தவை.

ஆனால் 'பொழுது போக்குத் திரைப்பட' இயக்குநர்களுக்கு வாஷிங் மெஷினுக்கு உள்ள மூளையாவது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேற்சொன்ன திரைப்படத்தை சுவாரசியமான திரைக்கதையுடன் அமைத்திருக்கும் இயக்குநரை நிச்சயம் பாராட்டுகிறேன். அம்மாதிரிப்படங்களை வரவேற்க வேண்டும். மாறாக என்ன நிகழ்கிறது. சுயமாக சிந்திக்கத் திராணியில்லாமல் பழைய திரைப்படங்களின் அடிப்படையை திருடிக் கொண்டு அதில் சதையையும் உதையையும் நாயகனின் பிம்பத்தையும் மிகையாக கலந்து சற்றும் சமூகச் சுரணையில்லாமல் பார்வையாளனை அந்தப் போதையிலேயே ஆழ்த்தி தன் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருந்தாலென்ன, நாசமாயப் போனாலென்ன?. சினிமாவை முதல்வர் நாற்காலிக்கான குறுக்குப் பாதையாக பயன்படுத்த நினைக்கும் கோமாளிகள் வேறு. இந்த அபத்தமான சூழ்நிலையை சகித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை வரவேற்கவும் ஆள் இருக்கிறது என்பதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

எப்படி சிலர் வியாபாரத்திற்காகவோ அறியாமையினாலோ வணிகப்படங்களை ஆதரிக்கும் நிலையை எடுப்பது போல அதை புறக்கணிக்கும் நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை வெளியை அமைத்துத் தருவதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியும்.

suresh kannan

Thursday, April 09, 2009

அருண் வைத்தியநாதனின் திரைப்படத்துக்கு விருது

Photobucket

நிறைய குறும்படங்களை எடுத்துள்ள சக பதிவரான நண்பர் அருண் வைத்தியநாதன், பிரசன்னா மற்றும் சிநேகா ஆகியோரின் நடிப்பில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ரெட் ஒன் காமிராவை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது என்று சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அமெரிக்காவின் Garden State Film Festival-ல் Home Grown category-ல் விருது கிடைத்திருப்பதை டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் செய்தியின் மூலம் இன்று அறிந்தேன். வலைப்பதிவு உலகத்திலிருந்து ஒருவர் இயக்குநராகி வெற்றி பெற்றிருக்கிறதனாலேயே இந்தச் செய்தி எனக்கு முக்கியமாகப் படுகிறது.

இன்னும் பல விருதுகள் பெற என்னுடைய வாழ்த்துக்கள் அருண். படத்தை தமிழ்நாட்ல எப்ப ரிலீஸ் செய்யப் போறீங்க?

டைம்ஸ் ஆ·ப் இந்தியா செய்தி

அருண் குறும்படங்கள் குறித்து என்னுடைய பழைய பதிவு

suresh kannan

Monday, April 06, 2009

திரைப்படத்தை பார்ப்பது எப்படி?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "இந்தப் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு ரசித்தீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?". அதற்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. "பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை அணுகும் போது அவர்களை அடிக்க நினைக்குமளவிற்கு எனக்கு மிகுந்த கோபம் வந்து விடும்". திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக கருதாமல் கலையின் உன்னத வடிவமாக நினைப்பவர்களின் உணர்வு இப்படியாகத்தான் இருக்க முடியும்.

Photobucket

சரி. ஒரு திரைப்படத்தை முறையாக ரசிப்பது எப்படி? மிக எளிமையாக தோன்றும் இந்தக் கேள்விக்குள் நமது சமூகத்தின் உள்ள விசித்திரமான முரண்கள் ஒளிந்திருக்கின்றன. சினிமாவிலிருந்து தம்முடைய வருங்கால முதல்வரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கும் திரைப்படத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் நாம் எவ்வாறு கையாள்கிறோம்? ஒரு புறம் உணர்ச்சி மிகுதியில் அவர்களை 'தலைவனாக' ஏற்றுக் கொள்ளும் மனம் இன்னொரு புறம் பிரச்சினையான சூழலில் அவர்களை 'கூத்தாடி'யாகவும் அணுகுகிறது. நம்மில் பெரும்பான்மையினருக்கு ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை என்றுதான் நான் சொல்வேன். பொழுதுபோக்கானதொரு அம்சத்தை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்கிறவர்களிடம் விவாதிக்க என்னிடம் ஒன்றுமில்லை.

ஒரு திரைப்படத்தை எவ்வாறு முறையாக அணுகுவது என்பதை என் அனுபவங்களிலிருந்து குறிப்புகளாக இங்கே தந்திருக்கிறேன். இவை தீர்மானமான முறையான விதிகளோ அல்லது நிபந்தனைகளோ அல்ல. தோழமையுடன் கூடிய தகவல் பரிமாற்றம் மாத்திரமே. இவை நீங்கள் ஏற்கெனவே அறிந்தவைதான் என்றாலும் இதை நினைவுப்படுத்துதலாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். வணிகத்திரைப்படங்கள், மாற்றுத் திரைப்படங்கள்... என்று அனைத்துவகை திரைப்படங்களுக்கும் கலந்து கட்டி இந்தக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

()


நாம் பணம் கொடுத்துதான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம் என்றாலும் நம்முடைய சக பார்வையாளர்களும் அவ்வாறுதான் பணத்தைச் செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஏதோ திரையரங்கத்தையே நாம் விலைக்கு வாங்கி விட்டோம் என்கிற ரேஞ்சில் சந்திரமுகி அறிமுக ரஜினி மாதிரி ஷீக்காலை உயர்த்தி முன் பார்வையாளன் சீட்டில் வைப்பது, நாயகனின் தாய் உணர்ச்சிகரமாக சிரமப்பட்டு அழும் காட்சியில் எக்காளமாக கூக்குரலிடுவது, அறிமுக இயக்குநர் தயாரிப்பாளரிடம் சீன் பை சீனாக கதை சொல்வது போல் படத்தை முன்பே பார்த்துவிட்டு அதை இப்போது லைவ் கமெண்ட்ரியாக தருவது, திரைப்படத்தின் இடையில் குறுக்கே பிசாசு போல் நடமாடிக் கொண்டே இருப்பது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தராமல் தமக்கான மகிழ்ச்சியை அமைத்துக் கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும். (இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. 'அந்த வானத்தைப் போல' என்கிற விக்ரமனின் காவியம் ஒன்றை பார்க்கச் சென்ற போது தனது தம்பிகளை மழையிலிருந்து காக்க விடியும் வரை ஒரு அட்டையை தலைமேல் பிடித்திருந்த அண்ணன் விஜயகாந்த்தின் அசட்டுத்தனமான சென்டிமென்டை பொறுக்க முடியாமல் திரையரங்கமே வாய்விட்டுச் சிரித்தது.)

*

வணிக நோக்கில் எடுக்கப்படும் மசாலாப் படங்களுக்காக சிலர் வாதாடுவதைக் கவனித்திருக்கிறேன். நாளெல்லாம் உழைக்கும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்காக காணவிரும்பும் திரைப்படமும் பரிசோதனை முயற்சியாகவோ மூளையைச் சிரமப்படுத்தும் திரைப்படமாகவோ இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. இது ஒரு முதிரா மனநிலை. நம்மில் எத்தனை பேர் சிறுவயதில் படித்த வாய்ப்பாடு புத்தகத்தை இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம்? பெரும்பாலும் யாருமே இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். ஆனால் திரைப்படங்களைப் பொறுத்த மட்டில் ஏன் இன்னமும் சிறுவயதில் கண்டு மகிழ்ந்த அதே வகைமாதிரி படங்களை திரும்பத் திரும்பப் பார்த்து அம்மாதிரியான பட இயக்குநர்களை ஊக்குவிக்கிறோம்?

*

சிலர் திரையரங்கை உணவகம் போன்ற சூழலாக அமைக்கும் பெருமுயற்சியோடு மசால் தோசை, சோலாபூரி போன்ற அயிட்டங்களைத் தவிர இன்னபிறவற்றை உள்ளே கொண்டு வந்து கடுக்மொடுக்கென்ற சத்தத்தோடும், பிளாஸ்டிக் பேப்பர்களின் சலசலப்போடும் கலோரிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா முடிந்த பிறகும் இவர்கள் அடித்து பிடித்து விரைந்தோடும் இடம் 'சரவண பவனாகவோ' 'அஞ்சப்பர் செட்டி நாடாகவோ'த்தான் இருக்கும். புத்தகக் கண்காட்சியில் கூட கூட்டம் நிறைய இருக்கும் இடம் தின்பண்டங்கள் விற்கும் இடமாகவும் உணவகமாகவும் இருக்கும் தமிழர் கலாசாரத்தின் மர்மம் விளங்கவில்லை. இது கூட பரவாயில்லை. முதலிரவு அறையில் கூட ஜாங்கிரியும் மைசூர்பாக்கும் அடுக்கிவைக்கும் இந்த 'தின்னிப்பண்டாரங்களின்' சமூக நியதிகளை என்னவென்று அழைப்பது? செவிக்கு உணவு இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயச் சொல்லியிருக்கிறார் தாடிவாலா.

*

அனல்பறக்க பஞ்ச் டயலாக் பேசும் 'புல்தடுக்கி பயில்வான்களின்' வணிகத்திரைப்படங்களை முற்றிலும் புறக்கணிப்பது சிறந்தது என்றாலும் அவ்வாறு தவிர்க்க இயலாதவர்கள் அவற்றை முதல் நாளே காணச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்தச் சமூகக் காவலர்களை தெயவங்களாகப் போற்றும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகளின் தொந்தரவில் எந்த வசனத்தையும் கேட்க முடியாது. நாயகன் கக்கூசுக்குச் செல்வதைக் கூட ஸ்லோ மோஷனில் காட்டும் இயக்குநர்கள் அவன் கழுவுவதற்காகச் கையை உயர்த்துவதைக் கூட 'விஷ்க்' என்று வைக்கும் சத்ததிற்குக் கூட உணர்ச்சி மிகையுடன் கைதட்டி பேப்பர் துண்டுகளை பறக்கவிடும் தொண்டர்களின் அட்டகாசத்தை தாங்கவே இயலாது. இந்த மாதிரிப் படங்களை மாத்திரம் திருட்டி டிவிடியில் வீட்டில் அமர்ந்தவாறே பார்ப்பது உங்கள் பர்ஸிற்கும் நல்ல திரைப்படங்களின் வளர்ச்சிக்கும் நல்லது.

*

ஒரு திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவதில் நம்மில் பலருக்கு அசட்டுத்தனமான பெருமையுண்டு. இது நண்பர்களிடம் உரையாடும் போது "இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன்" என்று ஜம்பமாக பெருமையடித்துக் கொள்வதற்குத்தான் உதவுமே ஒழிய, வேறெதற்கும் உதவாது. அது எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் விமர்சனங்களுக்காகவும், நண்பர்களின் வாய்மொழியான சிபாரிசுக்காகவும் காத்திருங்கள்.

*


மிகவும் வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர்கள்....திரையரங்கத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சினிமா சம்பவத்தின் சஸ்பென்ஸை விட இவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்று சக பார்வையாளர்களுக்கு ஏற்படும் சஸ்பென்ஸை தடுக்கலாம். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு அது பிறக்கப் போவதற்கு முன்பாகவாவது நல்ல சூழலை அமைத்துக் கொடுத்தல் உங்கள் கடமை. மேலும் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களும் சினிமாவை அறவே தவிர்ப்பது நல்லது. சூழ்நிலையின் அபத்தத்தை தாங்காமல் குழந்தை வீறிட்டு அலற அதை சமாதானப்படுத்த முடியாமலும் மற்றவர்களின் எரிச்சலான பார்வைகளை சந்திக்க முடியாமலும் நேர்கிற சங்கடத்தை தவிர்த்து விடலாம். குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் வரை தாய்ப்பால் மாத்திரமே போதும். அதில் சினிமாவை கலக்க வேண்டாம்.

*

விருதுப் படங்களை அதிலுள்ள பாலுறவுக் காட்சிகளுக்காக மாத்திரம் பார்க்க வருவது முதிர்ச்சியற்ற முட்டாள்தனம். பாலுறவும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அது ஊடகத்தில் வெளிப்படுவதில் எவ்வித தவறுமில்லை என்கிற புரிதல் இல்லாதவரை இவை நமக்கு 'அம்மணக்குண்டி' படங்களாகத்தான் தெரியும். அதை விட தமிழ்ச்சினிமாவின் ஒரு காதல் பாடலை பார்த்தால் அதிக நிறைவு ஏற்படக்கூடும். சுஜாதா சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வதை இரண்டு பூக்களை வைத்து மறைப்பதுதான் அதிக ஆபாசமாய் தெரிகிறது. திரைப்படச் சங்க திரையிடலின் போது திரையில் தோன்றிய தொடர்ச்சியான நிர்வாணக் காட்சிகளைக் கண்டவுடன் இரண்டு பெண்கள் விருட்டென்று எழுந்து போனதைக் கண்டிருக்கிறேன். தங்களின் பதிவிரதைத் தன்மையை பறைசாற்ற இதை விடவும் சிறந்த சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு உள்ளன. இவர்கள் ஏன் இந்த மாதிரிப் படங்களுக்கு முட்டாள்தனமாய் வருகிறார்கள் என்பது தெரியவில்லை. சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது.

*

ஒரு மாற்றுத் திரைப்படத்தை காண்பதற்கு முன் அந்தப் படத்தைப் பற்றிய கூடுமானவரையான தகவல்களையும் கதைச்சுருக்கத்தையும் இயக்குநரைப் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது. படத்தின் முடிவை முன்பே அறிந்து கொள்வது திரைப்படத்தை சுவாரசியமாக பார்ப்பதற்கு தடையாக அமையும் என்பது எல்லாம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கும் வேண்டுமானால் ஒருவேளை பொருந்தலாம். ஒரு முதிர்ச்சியுள்ள திரைப்படப் பார்வையாளன் கதையின் போக்கை முழுவதும் அறிந்து கொண்டு அதை எவ்வாறு இயக்குநர் தன்னுடைய நுண்ணுணர்வுகளால் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதில்தான் கவனம் செலுத்துவான். மேலும் அயல்நாட்டுத் திரைப்படம் என்றால் அந்த நாட்டின் கலாசாரத்தையும் கொஞ்சம் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இல்லையென்றால் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொள்கிற அவர்களின் இயல்பான கலாசாரம் நம்முடைய ஆச்சாரமான கண்களுக்கு அவர்கள் 'ஹோமோக்களாக' தெரியும் விபரீதம் ஏற்படலாம்.

*

மாற்றுத் திரைப்படங்களை ஒத்த அலைவரிசை கொண்டவர்கள்வுடனோ அல்லது தனியாக பார்ப்பதோ உத்தமம். இல்லாவிடில் அவர்கள் உங்களை குறுக்கீடு செய்து கொண்டே உங்களின் அனுபவத்தையும் பாழ்படுத்துவார்கள். ஒரு திரைப்படத்தை மிக மெளனமாக கூர்மையாக உள்வாங்கிக் கொள்வதே சிறந்த முறை. இடையிடையே உரையாடுவது, எழுந்து செல்வது போன்றவற்றைச் செய்து சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநரை அவமானப்படுத்தக்கூடாது. உங்களுக்கு குறிப்பிட்ட படம் பிடிக்கவில்லையெனில் அங்கிருந்து கிளம்பி விடுவது நல்லது. மாறாக மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் காரியங்களில் ஈடுபடக்கூடாது.

*

ஒரு திரைப்படத்தின் அனுமதிச்சீட்டைப் பெறவும் திரையரங்கத்தினுள் நுழையவும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நாம் திரைப்படம் முடிவதற்குக் கூட காத்திராமல் ஏன் அப்படி வெடிகுண்டிற்கு பயந்து ஓடுகிறாற் போல் அவசரமாக வெளியே விரைகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களுக்காக மாய்ந்து மாய்ந்து அந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் நபருக்காக எழுந்து நின்று கைத்தட்டலை எழுப்புவதின் மூலம் சிறிய மரியாதையை செலுத்தி விட்டு பின்னர் அமைதியாக வெளியேறுவது சிறந்ததாக இருக்கும். மேலும் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வெளியிடப்படும் தொழில்நுட்ப நபர்களையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன் பின்னணியில் எத்தனை திறமையான தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என்பதோடு அவர்களைப் பற்றியும் நாம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.

*

ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்க்கச் செல்வதை விட மிகுந்த திட்டமிட்டு ஒரு நல்ல திரைப்படத்தை தேர்வு செய்து அதற்கான முன்திட்டங்களுடன் செல்வது நல்லது. திரைப்படம் காண்பதென்று புறப்பட்டுவிட்டால் ஏதாவது ஒரு திரைப்படத்தையாவது கண்டு திரும்புவதுதான் தமிழர்களின் வீரம் சார்ந்த மரபு. அது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் காணச் சென்ற திரைப்படத்திற்கு அனுமதிச் சீட்டு கிடைக்காத சூழலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனத்தோடு வேறு ஒரு குப்பையான திரைப்படத்திற்குச் சென்று பணத்தையும் மனதையும் பாழ்படுத்திக் கொள்வதை விட கடற்கரைக்கோ அல்லது வேறு பயனுள்ள நிகழ்ச்சிக்குச் செல்வதோ நல்லதாக தோன்றுகிறது.

*

சிலருக்கு தங்களின் புரிதலின் எல்லையைத் தாண்டிய சமாச்சாரங்களை கேலியாகவோ குழப்பமாகவோ எதிர்கொள்ளுவதான் வழக்கமாக இருக்கிறது. மிஸிஷோ பிக்காசோ என்ற இயக்குநரின் .... என்றுதான் கிண்டலாக எழுதுவார்கள். தவறில்லை. நானும் அப்படித்தான் இருந்தேன். தங்களின் உயரங்களைத் தாண்டின திரைப்படங்களையோ புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ பற்றியோ எவராவது பேசும் போது அதை தாம் சந்தித்தில்லையே என்கிற தாழ்வுணர்வு ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியில் அவற்றை கிண்டலடித்துப் பேசுவது எனக்கும் வழக்கமாகத்தான் இருந்தது. பிறகுதான் மெல்ல அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது எத்தனை சிறந்த விஷயங்களை இதுநாள் வரை தவற விட்டிருக்கிறோம் என்கிற உணர்வு ஏற்பட்டது. எனவே யாராவது உங்களுக்கு சிறந்த திரைப்படத்தையோ இயக்குநரையோ அறிமுகப்படுத்தும் போது 'நமக்கெங்கே அவையெல்லாம் புரியப்போகிறது' என்கிற அலட்சிய மனப்பான்மையோடு அல்லாமல் சிறுமுயற்சியாவது செய்யுங்கள்.

*

உங்கள் குழந்தைகளுக்கு உலக சினிமா குறித்தான பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது. சில மாதங்களுக்கு முன் என் மகளை அமர வைத்து சத்யஜித்ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யை திரையிட்டுக் காண்பித்தேன். துர்கா, அப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை அவள் விரும்பிப் பார்த்தாள். துர்காவின் மரணத்தின் போது அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. இந்தியக் கிராமங்களின் இன்றைக்கும் மாறாத வறுமையை அவள் திரையில் எதிர்கொண்டது அதுதான் முதலாதவதாக இருக்கும். இதன் மூலம் வணிகச் சினிமாக்களின் மேல் உள்ள ஈர்ப்பு மாறக்கூடும்.

*

உலக சினிமா பற்றி ஆர்வமுள்ள ஆனால் காண வசதியில்லாதவர்களுக்கு அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். என்னுடைய பதின்ம வயதில் சுஜாதாவின் கட்டுரையொன்றின் மூலம் சத்யஜித்ரேவைப் பற்றி அறிந்து அவரின் திரைப்படமொன்று (அகாந்துக்) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதை அறிந்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காணச் சென்றிருந்தேன். என்னுடைய வற்புறுத்தலால் தொலைக்காட்சியை இயக்கியவர் சற்று நேரமே பார்த்துவிட்டு "என்னப்பா.. ஆஷான்.. பூஷான்..ன்னு" பேசிண்டே இருக்காங்க:" என்று என்னைக் கேட்காமலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் சென்று விட்டார். அந்தத் திரைப்படத்தின் குறுந்தகட்டை தேடிப் பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் கடந்து விட்டது. நீங்கள் அறிந்த சினிமாக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப் பற்றி ஆரோக்கியமாக உரையாடுங்கள். சினிமா உருவாவதான தொழில் நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சினிமாவில் உள்ளவர்களே இதில் சம்பந்தப்படாதவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையில்லை என நினைக்கிறார்கள். கேமராவின் கோணங்கள், பின்னணி இசை, லைட்டிங் பற்றியும் அதை இயக்குநர்கள் எப்படி கலாபூர்வ பிரக்ஞையுடன் கையாண்டு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும் போது இன்னமும் அந்தத் திரைப்படத்துடன் ஆழமாக நீங்கள் ஒன்ற முடியும்.

()

இப்போதைக்கு இவற்றோடு முடித்துக் கொள்கிறேன். நிச்சயம் இவை யாருக்கான அறிவுரைகளோ இடித்துரைக்கும் முயற்சியோ அல்ல. தோழமையான நினைவூட்டல் மாத்திரமே. சிறந்த திரைப்பட காண்பனுவங்களைப் பெற என்னுடைய வாழ்த்துகள்.

suresh kannan