Monday, April 27, 2009

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்


பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிகுழு.... என்று 1980-களைப் போல தமிழ்த்திரையுலகில் தற்போது ஒரு புதிய அலை வீசுவதைக் குறித்துக் காண சற்று சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதை எந்திரனோ சந்திரனோ வந்து கெடுத்து விடக்கூடாமல் இருப்பதாக. என்றாலும் நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருவது போல் வழக்கமான வணிகநோக்குப் படங்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் படங்களைக்கூட உலகத் தரமான படைப்புகளாக கொண்டாட வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையில் நாம் இருக்கிறோம். சமீபத்திய உதாரணம், நான் கடவுள். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான நேரத்தை எடுத்துக் கொண்டு பாலா அவசர அவசரமாக கிளறிய ஆறிப் போன உப்புமா படமது. ஆனால் சாரு அதை அகிராவின் படத்தோடு ஒப்பிட்டு சிலாகிக்கிறார். சரி அது அவரது பிரச்சினை. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்ச் சினிமா இன்னும் தவழும் நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

கு... கொ..... வின் போஸ்டர்களே சற்று வித்தியாசமான திறமையான தொனியில் இருந்ததையும் தொலைக்காட்சியில் இந்தப்படத்தைப் பற்றின நிகழ்ச்சிகளையும் காட்சித்துணுக்குகளையும் கவனித்த போது இதுவும் மேற்கூரிய திரைப்படங்களைப் போன்ற திறமையான முயற்சிகளில் ஒன்றாக இருக்குமோ என்று யூகித்தேன். நான் யூகித்தது சரிதான் என்று சொல்ல விடாதவாறு படத்தின் இயக்குநர் ராஜாமோகன் செய்துவிட்டார் என்பது குறித்து வருத்தமாகத்தான் இருக்கிறது. ஏன்..? சொல்கிறேன்.

பாரதிராஜாவின் படங்கள், பாலாஜி சக்திவேலின் காதல், அமீரின் பருத்திவீரன் போன்றவை ராஜாமோகனை மிகவும் பாதித்திருக்க வேண்டும். தவறில்லை. ஆனால் 'முட்டம்' லொக்கேஷனிலேயே எடுத்தால் அதுவும் இன்னொரு 'கடலோர கவிதைகள்' மாதிரி ஆகிவிடும் என்று கணக்கு போட்டதுதான் தவறு. நாகர்கோவிலின் அருகே உள்ள இடத்தில் நிகழ்வதாக சித்தரிக்கப்படும் இத்திரைப்படத்தில் படத்தின் ஆரம்பக் காட்சிகளைத் தவிர யாருமே அந்த வட்டார வழக்கில் பேசுவதாகத் தெரியவில்லை. இந்த வட்டாரவழக்கு, நேட்டிவிட்டி, அகேலா கிரேன், டோனிங், கலர் கரெக்ஷன் இன்னபிற கசுமால விஷயங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு தரமான படத்தை தரமுடியாது. இவையெல்லாம் ஒரு பேப்பர், பேனா மாதிரிதான். எழுதும் விஷயமும் பாணியும்தான் முக்கியம்.

()

பதின்ம வயதுகளில் உள்ளவர்களாக சித்தரிக்கப்படும் அந்த இளைஞனும் யுவதியும் புல்மேட்டிலும், கடற்கரையிலும் காதலிப்பதை நிதானமாக காண்பித்து விட்டு படம் அடுத்த தளத்திற்கு நகர்வதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. [இந்த இடைவேளை என்கிற லெளதீக சமாச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுகிறவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும்]. படத்தின் இறுதிக்காட்சியில் ஸ்லோமோஷனில் ஓடிவந்து காதலர்கள் இணைகிற அபத்தங்கள் எல்லாம் இல்லாமல் உடனடியாகவே அந்த யுவதிக்கும் வில்லனுக்கும் திருமணமாகி விடுகிறது. பிறகு நடப்பது கொஞ்சம் பார்த்திபன்தனமான 'எங்கிருந்தாலும் வாழ்க அல்லது சாக'.

படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ராமகிருஷ்ணன் ஆரம்பகால பாண்டியராஜன் போல் இருக்கிறார். [இவர் சேரனிடம் உதவி இயக்குநராக இருந்தவராம். சேரனும் அவரைச் சேர்ந்தவர்களும் நடிப்பதற்கு வரக்கூடாது என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் யாராவது புகார் தரலாம்] :-) ஆரம்பத்தில் சற்று அந்நியமாகத் தெரிந்தாலும் போகப் போக பழகி விடுகிறார். படத்தின் பிந்தையக் காட்சிகளில் சற்று நடிக்கவும் செய்கிறார்.

படத்தின் நாயகி தனன்யாவும் அவ்வாறே. ராமகிருஷ்ணன் +2 படிப்பதாக காட்டியிருப்பது சற்று பொருந்தாமல் உள்ளதைப் போல் அல்லாமல் நிஜமாகவே ஒரு பதின்மவயதுப் பெண்ணுக்குரிய தோற்றத்துடன் சினிமாத்தனமான முகத்துடன் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். எப்படியோ சிரமப்பட்டாவது நடித்துவிடுகிறார். இவ்வாறான இயல்பான, பொருத்தமான முகங்களை பிரதான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். பார்த்து பார்த்து சலித்துப் போன எரிச்சலையடைய வைக்கும் வணிக பிம்பங்களின் நடுவே இம்மாதிரியான next door பிம்பங்கள் படைப்போடு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இவர்களை விட நாயகனின் அம்மா, நாயகியின் பாட்டி, தருமனின் அக்கா போன்றவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஊர் நடுவே அவமானப்பட்டு திரும்பும் போது பேருந்தில் அமர்ந்திருக்கும் பாட்டியின் ஒரு முகபாவம் என்னை மிகவும் சலனப்படுத்தியது. ஆரம்பகால ரஜினியின் பில்டப்களோடு அறிமுகமாகும் தருமன் பாத்திரத்தில் தோன்றுபவரும் நன்றாக வில்லத்தனத்தை காட்ட முயன்றிருக்கிறார்.

ஆரம்பக் காட்சிகளில் முட்டத்தின் நிலப்பரப்புகளையும் கடற்பரப்புகளையும் பிரமிப்பான பிரேம்களாக தந்திருக்கும் சித்தார்த்தின் காமிரா மனிதர்களைக் காட்டும் போது சற்று மெளனமாகிப் போயிருக்கிறது. யுவனின் சில பாட்டுக்கள் கேட்பதற்கு நன்றாகவே இருந்தாலும் ஏதோ பாப் மியூசிக் பாணி போல அவரே வழக்கமான தொனியில் கட்டாயமாக ஒரு பாட்டு பாடுவதை நிறுத்தி வைப்பது நலம். பின்னணி இசையைப் பொறுத்தவரை அவர் தந்தையிடமிருந்து கற்க வேண்டியது கடலளவு இருக்கிறது.

கடற்கரையின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் செயற்கையான கோயில், திருவிழாபாட்டு, அதில் போடப்படும் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரிண்ட் (ஆனால் வசனத்தில் "பழய பிரிண்டுப்பா" என்கிறார்கள்), கட்டுப்பாடான கிராமத்தில் காதலர்கள் சுதந்திரமாக உலவுவது, இதை நாயகனின் அம்மா அறியாமலிருப்பது ... என்று பல குறைபாடுகள் படத்தின் சுவாரசியத்தை குறைத்து விடுகிறது.

இயக்குநர் ராஜாமோகன் நிஜமாகவே ஒரு நல்ல படத்தை தந்துவிட வேண்டும் என்று சிரத்தையாகவே உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் வலுவில்லாத கதை, சுவாரசியமற்ற திரைக்கதை, தமிழ்ச்சினிமாவின் சில கிளிஷேவான சமாச்சாரங்கள், கிளைமேக்சில் நாயகனும் நாயகியும் இறந்து போனால் படம் வெற்றி பெறும் என்று ஒருவேளை நம்பின சென்டிமென்ட்... போன்றவைகளினால் ஒரு நல்ல திரைப்படத்தை கண்டோம் என்று பார்வையாளனை உணர வைப்பதிலிருந்து நிறையவே விலகிப் போயிருக்கிறார்.

படத்தின் பெரும்பான்மையான பிரேம்களை சில குறிப்பிட்ட பாத்திரங்களே பெரும்பான்மையாக ஆக்ரமித்துக் கொள்கின்றன. இதனால் ஏற்படும் பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய சலிப்பை பல சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் இயக்குநர் அதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக 'வெண்ணிலா கபடி குழுவில்' ஒரு காட்சி. நாயகன் நாயகியை ஒட்டமும் நடையுமாக பல குறுக்குச் சந்துகளில் தொடர்ந்து போகிறான். ஒரு கட்டத்தில் அவளைத் தவற விட்டு விடுகிறான். அந்த வழியாக தடியை ஊன்றிக் கொண்டு மிக மெதுவாக போயக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் இருவரையுமே கவனிக்கிறார். நாயகன் அவரிடம் 'அந்த பெண் எந்தப் பக்கம் போனாள்?' என்று பார்வையாலேயே கேட்கிறான். மிகவும் ரசிக்கத்தக்க ஒரு கேலிப்புன்னகையுடன் அந்த முதியவர் அந்தப் பெண் போன திசையை தடியினால் சுட்டிக் காட்டுகிறார். மிகக் குறுகிய நேரமாக இருந்தாலும் இந்தக் காட்சிக் கோர்வை உலகத்தரத்தி்ல் உருவாக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கு.... கொ....வில் நாயகன் "அம்மான்னா எனக்கு உசுரு" என்கிறான். ஆனால் அவனும் அம்மாவும் வீட்டில் இருப்பது போன்று ஒரு பிரேம் கூட இல்லை. அந்தக் கிராமத்தில் உள்ள பல கேரெக்டர்களை சுவாரசியமாக பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கடற்கரை அருகே ஒரு தெய்வச்சிலை காட்டப்படுகிறது. தங்களுடைய வாழ்வு நன்றாக அமைய வேண்டுமென்று அந்தச் சிலையை அந்த இளம் காதலர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு பலனுமிருப்பதில்லை. தங்களுடைய எதிர்பார்ப்பிற்கு நேர்மாறான நிகழ்வுகளின் பிறகு அந்தச் சிலையை வெறுப்புடனும் வன்மத்துடனும் நோக்குகிறார்கள். ஆனால் எந்தவித பிரக்ஞையுமின்றி அந்தச் சிலை அனைத்து கண்ணீருக்கும் ஒரு மெளன சாட்சியாகவே நிற்கிறது. இயக்குநர் ராஜாமோகன் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருப்பாரோ என்னமோ? இதே ராமநாராயணன் என்றால் கிராபிக்ஸ் உதவியுடன் பிரம்மாண்ட மாயாஜாலமெல்லாம் நிகழ்த்தி அந்தக் காதலர்களை ரம்யாகிருஷ்ணன் அல்லது மீனா வகையறாக்கள் உதவியுடன் இணைத்து வைத்திருப்பார்.

தமிழ்ச்சினிமா 'காதல்' என்கிற கச்சாப் பொருளிலிருந்து விலகி வரவேண்டும் என்பதே இந்தப்படத்தின் நீதியாக இருந்தாலும் எனக்கு நாயகியின் பாத்திரத்தின் சித்தரிக்கப்பட்டிருந்தத விதம் எனக்குப் பிடித்திருந்தது. இந்தியா போன்ற இன்னும் பெரும் நாகரித்தை எட்டாத நாடுகளில் ஆண்களைப் போல் தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே காற்றில் பறக்கும் சருகு போல எவ்வித கேள்விகளுமின்றி தங்கள் மீது திணிக்கப்படும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இப்படத்தில் வரும் நாயகியும் அப்படித்தான். தன்னை 'நன்றாக பார்த்துக் கொள்வதாக' சொல்லும் காதலனை முழுமையாக நம்பும் அவள் அவமானப்பட்டு ஊரைவிட்டு வெளியேற நேரிடுகிறது. பின்னர் ஒரு ரவுடியை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஆனால் அங்கிருந்தும் வெளியேறும் அவளை அக்காவின் கணவராக வருபவரும் அடைய துடிக்கிறார். பொதுவாக பெண்களுக்கு 'Security conscious' நிறைய உண்டு என்றும் அதைத் தரக்கூடியவர்களாக அவர்கள் நம்புவர்களைத்தான் அவர்கள் நெருங்கிப் போவார்கள் என்பது உளவியல் ரீதியிலான கருத்து. அது உண்மையாகத்தான் இருக்கக்கூடும். ஏனெனில் உடல்ரீதியான,சமூகரீதியான வன்முறை நெருக்கடிகளை அவர்களால் தனியே எதிர்கொள்ள முடியாதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.()

தமிழகத்தில் எனக்குப் மிகவும் பிடித்த ஆளுமைகளுள் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடையதும் ஒன்று. அவர் நலமாக இருக்க ஒருமுறையாவது இந்த திரைப்படத்தை அரங்கில் கண்டு களிக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். :-)

suresh kannan

11 comments:

ஹரன்பிரசன்னா said...

கடைசியில என்னதான் சொல்ல வர்றீங்க?

குசும்பன் said...

ஹரன்பிரசன்னா said...
கடைசியில என்னதான் சொல்ல வர்றீங்க? //

என்ன இப்படி கேட்டுவிட்டீங்க கடைசியா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை தியேட்டரில் இந்த படத்தை பார்க்க சொல்கிறார்:)

முகமூடி said...

// ... காட்சிக் கோர்வை உலகத்தரத்தி்ல் ... //

இந்த உலகத்தரம் உலகத்தரம்கிறாங்களே, அப்டீன்னா என்னா? அது எங்க கிடைக்கும்?

Unknown said...

//ஆனால் சாரு அதை அகிராவின் படத்தோடு ஒப்பிட்டு சிலாகிக்கிறார். சரி//

ஏன் சார்.... இவரை போய் பெஞ்ச்- மார்க்காக எடுத்துக்கொண்டு நீங்கள் சிலாகிக்கிறீர்கள். அதுதான் கொடுமை.

Parameswaran said...

//நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருவது போல் வழக்கமான வணிகநோக்குப் படங்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் படங்களைக்கூட உலகத் தரமான படைப்புகளாக கொண்டாட வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையில் நாம் இருக்கிறோம்.//

you are damn right, Kannan. Ellam namma thalavithi..

P.Parameswaran.

Anonymous said...

திரைக்கதையை சரியாக அமைத்தால் பிறவற்றை சமாளிப்பது எளிது. ஆனால் cliches கொண்டு ப்டத்தை
காப்பாற்ற முயலும் போது திரைக்கதை கந்தலாகிவிடும்.படத்தில் லாஜிக் உதைக்கும்,தொய்வு ஏற்படும்,
கதையை எப்படி முடிப்பது என்பதில்
குழப்பம் வரும். அதுதான் பல படங்களில் பிரச்சினை.படம் எடுக்க SPBயிடம் வாய்ப்பு கேட்டுப் பாருங்கள்-
கிடைத்தாலும் கிடைக்கும் :).
ஆயிரம் விமர்சனம் எழுதியவர்
அரை இயக்குனர் :).

Anonymous said...

'இந்த உலகத்தரம் உலகத்தரம்கிறாங்களே, அப்டீன்னா என்னா? அது எங்க கிடைக்கும்?'

முகமூடிக்களுக்கு எங்கும் கிடைக்காது :).

Anonymous said...

தூக்கமா வருது பாஸ்....

Joe said...

//
சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்ச் சினிமா இன்னும் தவழும் நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
//
Some celebrity mentioned during the Golden Globe ceremony few years ago that she liked watching Indian movies, because they remind her of the british movies from the 1940 & 50s.

I guess she sarcastically meant that our movies haven't progressed in the last 50 years.

There had been a few movies without songs, dances and unnecessary fight sequences, made by Adoor gopalakrishnan, Satyajit Ray, etc.,

But the mainstream movies made in India, are way behind the ones made elsewhere in the world.

சாணக்கியன் said...

ஆரம்பத்திலேயே படம் சரியில்லை என்று சொல்லிவிட்ட பிறகு மீதியை படிக்க சுவாரசியம் இல்லை! (ஆனாலும் முழுமையாக படித்தேன்). ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு தொடர்வதே நேர்மையானது. ஏன் சரியில்லை என்று சொல்கிறார் என தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கலாம்!

படத்தை விடுங்கள். இளைஞன் என்றும் அதற்கு பெண்பாலாக யுவதி என்றும் எடுத்தாண்டுள்ளீர்கள். யுவதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. யுவதிக்கு ஆண்பால் ’யுவன்’ தான்,இளைஞன் அல்ல!. சரி அப்பொழுது என்ன எழுதுவது இளைஞி என்பதும் சரியல்லவே என்றுதானே கேட்கிறீர்கள். பேரரிஞர் அண்ணா, தனது அமெரிக்கப் பயணக்கட்டுரை ஒன்றில் இப்படி எழுதி இருக்கிறார்...

“இளைஞர்களும் இளநங்கைகளும்” என்று. என்ன சரிதானே?

Sridhar V said...

//என்ன இப்படி கேட்டுவிட்டீங்க கடைசியா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை தியேட்டரில் இந்த படத்தை பார்க்க சொல்கிறார்:)//

அப்பச் சரி! அவரேப் பாத்துகிடட்டும்.

//பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிகுழு.... என்று 1980-களைப் போல தமிழ்த்திரையுலகில் தற்போது ஒரு புதிய அலை வீசுவதைக் குறித்துக் காண சற்று சந்தோஷமாகத்தான் இருக்கிறது.//

முழுவதுமாக சந்தோஷப்பட முடியவில்லை. கதைக் களன்கள் மாறுபட்டிருந்தாலும், கதைகள் எல்லாம் ‘செக்குமாடு’ போல காதலையே சுற்றிச் சுற்றி வருகின்றன.

’நான் கடவுள்’ பற்றிய உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்.