Tuesday, February 05, 2008

'நான் வித்யா' - புத்தகப்பார்வை - இறுதிப் பகுதி

பகுதி 1 | பகுதி 2

திரும்பவும் பிச்சை எடுக்கச் சென்றது குறித்து வித்யாவிற்கு வேதனையாக இருந்தது. 'எங்காவது வேலை செய்யலாம்' என்று முடிவு செய்து தனது ஊருக்கு திரும்ப முடிவு செய்கின்றார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. 'நிர்வாணம்' நடந்த மற்றும் உடம்பு தேறுவதற்கான காலம் முழுதும் மூத்த திருநங்கைகளே பணம் செலவு செய்கின்றனர், எப்படியும் பின்னால் வரப்போகிறதென்று. எனவே அவர்களுக்குத் தெரியமாமல் ஊருக்கு ரகசியமாக வருகிறார். மாமாவின் வீட்டில் வித்யாவை ஏற்றுக் கொண்டாலும் பெண்ணுடையில் இருப்பதால் எரிச்சலடைகிறார். அங்கும் தங்க இயலாமல் வெளியேறுகிறார் வித்யா.

மதுரை. எழுத்தாளர் கோணங்கி, நாடக ஆசிரியர் முருகபூபதி ஆகியோர்களுடன் வெகுநாட்களுக்குப் பின்னான சந்திப்பு. ஆறுதலாக பேசுகின்றனர். சிறிது நாட்கள் பிரச்சினையில்லாமல் போகிறது. என்றாலும் அடுத்தவர் தயவில் தொடர்ந்து இருக்க இயலவில்லை. நண்பர்களின் மூலம் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை மறுக்கிறார்.

... எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. 'நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்' என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம். (பக்கம் 182)

விஜயா என்கிற அன்பான பெண்மணி அடைக்கலம் தருகிறார். அங்கிருந்த படியே வேலை தேடும் படலம். எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆனந்த அதிர்ச்சியாக வேலை கிடைக்கிறது. அடைக்கலம் கொடுத்தவர் அமெரிக்கா சென்றுவிட மறுபடியும் தங்குமிடத்திற்கான போராட்டம்.

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வலைப்பதிவாளர் பாலபாரதியின் அறிமுகம். வலைப்பதிவில் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். livingsmile.blogspot.com பிறக்கிறது. சக வலைப்பதிவாளர்கள் தொடர்ந்து எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துகின்றனர். அச்சு ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசு இயந்திரத்துடன் நீண்டதொரு உரிமை போராட்டத்திற்குப் பிறகு 'சரவணன்' என்கிற தன் பெயரை 'லிவிங் ஸ்மைல் வித்யா' என மாற்றம்.

()

நான் முன்னர் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில் (வழக்கறிஞர்கள் சூழ்ந்த வாசனையுடன் உடைய எலிப் பொந்துகள் அவை) திடீரென்று விநோதமான கைத்தட்டல் ஓசைகளும், குரல்களும் கேட்கும். எரிச்சலுடன் நாங்கள் புரிந்து கொள்வோம். கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்லாமல் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தராவிட்டால் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள். அதற்குப் பயந்தே பல அலுவலகங்களில் முடிந்த அளவு பணத்தை தந்து அனுப்பி விட முயற்சி செய்வார்கள். பணம் தராமல் மல்லுக்கு நிற்பவர்களும் உண்டு. கஷ்டமில்லாமல் வரும் பணத்தின் காரணமாக சில ஆண்களும் பெண் உடையில் இப்படி திருநங்கைகளாக வேடமணிந்து வருவார்கள் என நண்பரொருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது.

'இவர்கள் உழைத்துப் பிழைக்காமல் ஏன் இப்படி பிச்சையெடுக்கிறார்கள்?' என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. ஆனால் வித்யா தான் வியாபாரம் செய்யப் போன கொடுமையை விவரித்ததைப் படித்தவுடன் முழுக்கவும் புரிந்து போயிற்று. சிலரால்தான் வியாபார உலகில் அதன் வேதனைகளையும் தாண்டிப் பிழைக்க முடியும்.

......திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி...

()


திருநங்கைகளின் கோரிக்கைகள் மிக எளிமையானவை. சக குடிமகன்கள் அடிப்படையாக, இயல்பாக பெறுவது. அடையாள அட்டை. பால் என்கிற பிரிவில் Third sex என்று குறிக்கப்பட வேண்டும் என்பது; ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை. (இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சமீபத்தில் Male/Female/Eunuch) என குறிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அங்கீகாரம்) ஆனால் அவற்றை அதிகார மையங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும், ஏற்க வைப்பதற்கும் நீண்ட போராட்டங்களை அவர்கள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

சட்டப்பிரிவு 377 - பாலுறவு தொடர்பான ஷரத்து. ஆண்/பெண் பாலுறவு/குறிப்பாக யோனி வழிப் பாலுறுவு மட்டுமே இயற்கையானது (Natural), இயல்பானது (Normal) எனக் குறிப்பிடுவதின் மூலம் ஓரினப்புணர்ச்சி, அரவாணியருடனான உறவு ஆகியவை சட்டத்திற்குப் புறம்பானவையாகின்றன. சட்டர £தியாக அரவாணிகள் கொள்ளும் பாலுறவு அங்கீகரிக்கப்பட்டால்தான் அவர்கள் தமக்கான திருமண உரிமை கோர முடியும். குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை பெற முடியும்.

()

அரசுகளின் அலட்சியம் ஒருபுறம் இருக்கட்டும்; பொதுப்புத்தி சார்ந்த வெளிப்பாடுகள் இன்னொரு புறமான கொடுமை. உடல் ஊனமுற்றவர்கள் மீது காட்டும் அனுதாபத்தைக்கூட நாம் திருநங்கைகளிடம் காட்டுவதில்லை, மாறாக அருவருப்பையும் கேலியையும்தான். அவர்களிடம் காட்ட வேண்டியது அனுதாபம் கூட இல்லை. அவர்களையும் நம் சக மனிதர்களாக இயல்பாக உணரச் செய்வதுதான் நியாயமான செயலாக இருக்க முடியும். அதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக இந்தப் புத்தகம் அமையக் கூடும்.

இந்தப் பதிவில் பல இடங்களில் புத்தகத்திலுள்ள வரிகளையே மீள்பிரசுரம் செய்யக் காரணம், என்னதான் அவர்களின் வலியை எழுத்தில் நான் பெயர்க்க முயன்றாலும் அது செயற்கைத் தன்மையோடு மொண்ணையாக இருக்கும். அதனாலேயே நூலாசிரியரின் மொழியையே பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மொழி என்று சொல்லும் இன்னொன்றை குறிப்பிட வேண்டியிருக்கிறது. வித்யாவின் சில பதிவுகளை நான் சமீபத்தில் படிக்கும் போது அதில் காணப்படும் 'சுளீர்' என்கிற கோபமும் கடுமையும் இந்தப் புத்தகத்தில் மட்டுப்பட்டிருக்கிறது. அச்சு ஊடகம் என்பதால் politcally correct-ஆக எழுத வேண்டும் என்பதாலோ அல்லது பதிப்பகத்தின் வழிநடத்துதலின் படி இது நிகழ்ந்தா என்று தெரியவில்லை. என்றாலும் விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தப்பதிவை எழுத அ.மங்கை எழுதின 'எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே' என்கிற சிறுநூலும் (பாரதி புத்தகாலயம்) உதவியாய் இருந்தது. அதற்கும் நன்றி.

2 comments:

ச.மனோகர் said...

சுரேஷ் கண்ணன்..

இரண்டு பதிவுகளும் அருமை..நானும் இந்த புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்கி படித்தேன்.படித்து முடித்து இரண்டு நாட்களும் புத்தகத்தின் வரிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

Dubukku said...

புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக எழுதியுள்ளீர்கள். தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2008/02/05/naanvidhya/