முந்தைய பதிவின் தொடர்ச்சி
வந்தாரை வாழ வைக்கும்/மனிதத்தை சாகடிக்கும் சென்னை.
நண்பர் ஒருவரின் உதவியுடன் இருக்க இடம் தேடுவதற்கான போராட்டம். திருநங்கைகளுக்கான பல தொண்டு நிறுவனங்களை அணுகுகிறார் வித்யா. திருநங்கைகளான அவர்களிடமிருந்தே கூரைக்குப் பதிலாக அறிவுரைதான் கிடைக்கிறது, ஆணாக இருந்து கொண்டே படிப்பை தொடரச் சொல்லி.
()
..... படிப்பு, சமுகம், நாலு பேர் பேசும் பேச்சுக்கள், 'நீ ஆணாக ஆண் உடையிலேயே இரு' என்று எல்லோரும் சொன்ன அதே அறிவரையை அவரும் சொன்னார். .........
.....எனக்குப் புரியவில்லை. இவர்களும் என்னைப் போலத்தானே. இவர்கள் மட்டும் பெண்ணாக மாறியிருக்க, ஏன் என்னை மட்டும் ஆணாகவே இரு என்று அறிவுறுத்த வேண்டும்? இது ஒன்றும் நான் நாடகத்தைத் தெரிவு செய்ததைப் போல விருப்பம் சார்ந்த தேர்வு அல்ல. என்னுடைய தேவை. என்னுடைய அத்தியாவசியம். என்னுடைய இருப்பு. நிலை. நான் பெண். கண்டிப்பாக ஆண் இல்லை. அது ஏன் இவர்களுக்கே புரியவில்லை? என்ன முட்டாள்தனம்! எரிச்சலாக வந்தது. (பக்கம் 87/88)
()
வித்யாவின் ஒரே தீவிரமான நோக்கம், அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு முழுமையான பெண்ணாக மாறுவது. மேற்படிப்பை தொடரச் சொல்லும் நண்பர்களின் அறிவுரைகள் அவர் காதில் விழவில்லை. சர்வே எடுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. என்றாலும் அவரால் அதைத் தொடர இயலவில்லை.
.... "என்னால முடியல குமரன். இந்த ரெட்டை வாழ்க்கை வேண்டாம்னு தோணுது. நான் பெண்ணா மட்டும் வாழணும். என்னை தயவுசெஞ்சி புரிஞ்சுக்குங்க. பிச்சை எடுத்தாலும் பெண்ணாத்தான் வாழ விரும்பறேன்" (பக்கம் 91)..
கல்வியோ திறமையோ இருந்தாலும் பிழைக்க அவர்களுக்கு முன் இருக்கும் இரண்டே வழிகள் - பிச்சை/விபச்சாரம். பகலில் அவர்களை தமக்கு நிகராக இணைத்துக் கொள்ள தயங்கும் இச்சமூகம் இருளில் மாத்திரம் தன்னருகே வக்கிரமான ஆசையுடன் அனுமதிக்கிறது. வித்யாவிற்கு இரண்டாவது தொழில் அறவே பிடிக்காத காரணத்தினால் பிச்சை எடுத்து தன்னுடைய அறுவைச் சிகிச்சைக்கான பணத்தை சேகரிக்க முடிவு செய்கிறார். சென்னையில் அதற்கான சூழல் சுமூகமாக அமையாததால் புனே-க்கு பயணமாகிறார்.
()
முதன் முதலாக பிச்சை எடுக்கச் சென்ற அனுபவத்தை அவர் விவரிக்கும் போது எனக்கு தொண்டை அடைத்தது.
நான் படிக்கும் காலத்தில் ஆண்டு விடுமுறையாக கிடைக்கும் இரண்டு மாதத்தில் எங்காவது வேலைக்கு பெற்றோர் அனுப்புவார்கள், அடுத்த ஆண்டுப் படிப்பிற்கு ஆகப் போகும் செலவிற்கு ஒரளவிற்காவது உதவுமே என்று. அவ்வாறான ஒரு சமயத்தில் சுமார் 13 வயதில் எனக்கு கிடைத்த வேலை லாட்டரி டிக்கெட் விற்பது. அதுவரை புத்தக பைண்டிங், அலுவலக உதவியாள் என்று உட்புற சூழ்நிலையிலேயே பணிபுரிந்த எனக்கு மிகுந்த கலக்கமாய் இருந்தது. கூடவந்த அனுபவமிக்க சிறுவன் இரண்டு கடைகளில் மாத்திரம் விற்று demo செய்து காட்டி விட்டு என்னை தனிமையில் விட்டுவிட்டு அகன்றான். முதன்முதலாக நான் ஒரு கடையில் டிக்கெட்டை விற்கச் செல்லும் போது அவமானத்திலும்/சுயபரிதாபத்திலும் கண்ணீர் வழிந்தது. என்ன முயன்றும் மதியம் வரை என்னால் இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் விற்க முடியவில்லை. முதலாளியிடம் குட்டு வாங்கிய பின் அழுகையுடன் வீட்டுக்கு ஒரே ஓட்டம். அம்மாவின் மடியைப் பிடித்துக் கொண்டு 'ஓ'வென்று அழுதேன். "இனிமே இந்த வேலைக்கு போக மாட்டேன்".
அந்தச் சமயத்தில் எட்டாவது வகுப்பு படித்த ஒரு சிறுவனான நான், விற்பனையாளனாக ஒரு பொருளை விற்கச் சென்றதற்கே அவமானமாக உணர்ந்தேன் என்றால், கல்லு¡ரிப்படிப்பை முடித்த/சுயமரியாதை உடைய, சமூகத்தின் பார்வையில் எப்போதும் கேலிப் பொருளாகவே பார்க்கப்படுகிற ஒருவர் கடை கேட்க சென்றால் எப்படி உணர்வார்?
()
..........அய்ய என்ன பாக்குற .. போய் அடுத்த கடயில கேளு' என்றாள் சட்டென்று.
எனக்குப் பகீர் என்றது. அடுத்த கடையில் நானா? திடீரென இது என்ன.... ஏன் இப்படி என்று என்னவோ போலாகி விட்டது எனக்கு. எந்த முன் தகவலும் இல்லாமல் திடுதிடுப்பென்று என்னை அடுத்தக் கடையில் போய் பிச்சையெடு என்கிறாள்.
சரி. எதிர்பார்த்துதான். தெரிந்ததுதான். செய்ய வேண்டியதும் கூட. ஆனால் கை நீட்ட நினைக்கிறேன், ஒத்துழைக்க மறுக்கிறது. கண்களில் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது. மாதக்கணக்கில் மறந்து போயிருந்த எம்.ஏ., மொழியியல் படிப்பு அப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது. என்ன சொல்வது? தயங்கி நிற்கிறேன்.
.. அய்ய இது என்னாம்மா இந்த கோத்தி.... கட கேக்க சொன்னா பே..ன்னு நிக்குது. படிச்சவங்குறதெல்லாம் இங்க பாக்கக்கூடாது. கோத்திங்கள்ல படிச்சவங்க... படிக்காதவங்க எல்லாம் ஒண்ணுதான். டக்கு டக்குன்னு கேளு... (பக்கம் 118)
()
கடை கேட்பதில் ஆரம்பத் தயக்கங்கள் இருந்தாலும், அறுவைச் சிகிச்சைதான் தன்னுடைய பிரதான நோக்கம் என்பதால் அதை நிறைவேற்றிக் கொள்ள நாளடைவில் இயல்பாகவும் திறமையாகவும் செயலாற்றுகிறார் வித்யா. தமிழகத்தைப் போலல்லாமல் வட இந்திய மக்கள் திருநங்கைகளை கிருஷ்ண அவதாரமாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் ஆசி பெறுவதால் நன்மை பயக்கும் எனும் நம்பிக்கை ஒருபுறமும் அவர்களின் சாபம் தம்மை பாதிக்கும் என்றும் நம்பிக்கையும் இருப்பதால் பெரும்பாலும் காசு கொடுக்க தயங்குவதில்லை. என்றாலும் திருநங்கைகள் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
............ நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.
தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து 'என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?' என்று கேட்டேன்.
நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன். நான் காசு கேட்டவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த எருமை மாடு அது.
"அவர்தான் ரெண்டு ரூபா தரார்ல? அப்றம் என்ன அஞ்சு ரூபா?"
ஒரு கணம் பதறிவிட்டாலும் உடனே நிதானத்துக்கு வந்துவிட்டேன். 'அடி செருப்பால. அதுக்கெதுக்குமடா கை நீட்டுற நாயே.... உன்னையா கேட்டேன்.?"
"பிச்சையெடுக்குற நாயி யார வாடா போடாங்குற"..?
அவ்வளவுதான். யார் எவரே என்றே தெரியவில்லை. நாலைந்து பேர். சேர்ந்தாற்போல் அடித்து துவம்சம் செய்தார்கள். முட்டி மோதி அங்கிருந்து சற்றுத் தள்ளிச் சென்று விட்டேன்.
கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஏன்? யாரிவர்கள்? எதற்காக இத்தனை வன்மம்? சிறிது நேரத்திற்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. ....
()
ஏறக்குறைய மரணத்தை நெருங்குகிற அபாயகரமான அந்த அறுவைச் சிகிச்சையை முடித்துக் கொண்டு பெண்மையின் முழுமையை அடையும் தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்ட வித்யாவிற்கு முன்பு போல் ஆர்வமாக கடை கேட்க இயலவில்லை. பிச்சை எடுப்பது அவமானகரமான தொழிலாக அப்போதுதான் முழுமையாக உணர்கிறார். ஏதாவது வியாபாரம் செய்தாவாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறார். இதே மனநிலையில் உள்ள இன்னொரு திருநங்கையின் துணையுடன் வழிகாட்டும் ஒரு நண்பரின் உதவியுடன் ரயிலில் மொபைல் கவர், லேஸ், கீசெயின் போன்ற பொருட்களை விற்க முனைகிறார். ஆனால்...
...... வியாபாரம் அத்தனை சுலபமாக இல்லை. பொதுவாக ரயில்களில் வாங்கும் வழக்கம் கொண்டவர்கள்கூட எங்களிடம் ஏனோ முகம் கொடுக்க மறுத்தார்கள். கைதட்டிப் பிச்சை எடுத்து போதுகூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது 'உழைச்சு திங்க வேண்டியதுதானே.. போங்க, போங்க.' என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. .. (பக்கம் 153)
.. ஒரு நல்ல நாளில் மீண்டும் பழையபடி பிச்சையெடுக்க ஆரம்பித்தோம்...
....ஒரு முறை ஹைதராபாத் வண்டி ஒன்றில் வழக்கம் போல் பிச்சையெடுத்துக் கொண்டு வந்த நான் திடுக்கிட்டுப் போனேன். கம்பார்ட்மெண்ட்டில் அமர்ந்திருந்த அவர்.....
... ஒரு கணம் எனக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது. அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே கையேந்திய கோலத்தில் நான். மலத்தை மிதித்தது போல் உணர்ந்தேன். ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை. சடாரென்று பாய்ந்து அவர் கண்ணிலிருந்து மறைந்துவிட்டேன். எத்தனை நாராசமாகிவிட்டது என் வாழ்க்கை! (பக்கம் 155/156).
(தொடரும்)
2 comments:
உங்கள் பதிவு மிக நன்றாக வந்துள்ளது
புத்தகத்தின் மீது ஒர் காந்த சக்தியை ஏற்படுத்துகிறது.
உஙகள் பதிவு எல்லொரும் அப்புத்தகத்தை படிப்பதற்கான அவச்சியத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் அடுத்த பதிவை எதிர்நோக்கும்........
சுரேஷ்..
நல்ல பதிவு. நானும் அந்த நூலை வாங்கினேன்.நேரிடையாக உணர்வுகளை சொல்லுகிறது.முடித்ததும் இரண்டு நாட்களுக்கு மனம் என்னவோ போல் இருந்தது.நீங்கள் சுட்டிக் காட்டும் வரிகளை நானும் கூர்ந்து படித்தேன்.
மனோகர்.
Post a Comment