Sunday, December 05, 2004

ஐராவதம் என்றொரு எழுத்தாளர்

மேற்குறிப்பிட்டிருக்கிறவரின் 'மாறுதல்' என்கிற பழைய சிறுகதைத் தொகுதியை படித்துக் கொண்டிருக்கிறேன். (1976-ல் பிரசுரமானது).

இவ்வாறான பல பழைய புத்தகங்களை பிளாட்பாரங்களில் வாங்கும் போது அதில் தமிழ்நாட்டு அரசு நூலக முத்திரை இருப்பதையோ அல்லது அது அழிக்க முற்பட்டிருப்பதையோ பார்த்திருக்கிறேன். இதை பாதி விலையில் வாங்கும் போது ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும், இந்த மாதிரியான புத்தகங்கள் கிடைப்பது அபூர்வமானது என்பதால் மனச்சாட்சியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு உடனே வாங்கிவிடுவது வழக்கம்.

இம்மாதிரியான பல புத்தகங்கள் வாங்கி வந்ததோடு அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டு அதில் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே இருக்கின்றன. சமீபத்திய புத்தக கண்காட்சியில் வாங்கின புத்தகங்களில் 75 சதவீதம் கூட இன்னும் படிக்கப்படாமலேயே இருக்கின்றன. இது எல்லோருக்கும் நிகழ்வதுதானா என்று தெரியவில்லை. கன்னிமரா நூலகத்திலும், தேவநேய பாவாணர் நூலகத்திலும் எடுத்துவரும் (எடுத்துவரும் என்றால் இரவலாக எடுத்துவரும் என்று படிக்கவும்) புத்தகங்களையும் மற்றும் மாத சிற்றிதழ்களை படிப்பதிலேயே பெரும்பாலான நேரம் போய்விடுகிறது.

ஆறேழு புத்தகங்களை வேறு வேறு இடைவெளிகளில் படிப்பதே என் வழக்கம். இவ்வாறு கலந்துகட்டி படிப்பது சரியானதா என்று தெரியவில்லை. அவ்வாறே வழக்கமாகிவிட்டது.

அவ்வாறு இப்போது படித்துவரும் நூல்கள்:

1) புதுமைப்பித்தன் கட்டுரைகள் - வேங்கடாசலபதி தொகுத்த அனைத்துக் கட்டுரைகள் அடங்கிய செம்பதிப்பு.
2) வன்முறை வாழ்க்கை - காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
3) அழிந்த பிறகு - கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் எழுதிய நாவல் (மூன்றாவது முறையாக படிக்கிறேன்)
4) பெரியார் வாழ்க்கை வரலாறு - சாமி சிதம்பரனார் எழுதியது
5) சரஸ்வதி களஞ்சியம் - விஜயபாஸ்கரன் நடத்திக் கொண்டிருந்த சரஸ்வதி இதழ்களின் தொகுப்பு
6) லுமூம்பா இறுதி நாட்கள் - காங்கோ இனத்திற்காக போராடி மடிந்த ஒரு புரட்சியாளனின் இறுதிநாட்களின் நடந்த் நிகழ்வுகளின் தொகுப்பு


சரி. ஐராவதத்தின் சிறுகதைத் தொகுதிக்கு வருகிறேன்.

O

"ஏண்டி அம்புஜம் காப்பி போட்டாச்சா?" என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தார் சுப்புணி' என்று சமைலறைக்குள்ளேயே சிறுகதைகள் சுற்றிக் கிடந்த காலகட்டத்திலேயே (குசினி இலக்கியம் என்று இதை கிண்டலடித்திருக்கிறார் எஸ்.பொ) ஆண், பெண் மன உணர்வுப் போராட்டங்களை, மிகச்சிறந்த எழுத்துநடையில் உளவியல் நோக்கில் எழுதியிருக்கிறார் ஐராவதம். இந்த தொகுதியிலிருந்து ஏதாவது ஒரு கதையை எடுத்து வருஷம் குறிப்பிடாமல், தற்போதையை அச்சுப் பத்திரிகைகளில் பிரசுரித்தால் எந்த மாற்றமும் தெரியாத அளவிற்கு, அப்போதே ஒரு தேர்ந்த நடையை உபயோகித்திருக்கிறார்.
அந்தத் தொகுதியில் அவர் எழுதிய தன்னுரையிலிருந்து ஒரு பகுதி:

O

.......சிறுகதை ஆசிரியன் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் கொண்டிருக்கத் தேவையில்லை. சில காட்சிகளைச் சித்திரங்களாக்குகிற, சில சலனங்களை மன ஏட்டில் பதிவு செய்கிற ரசவாத வித்தை மட்டுமே அவன் செய்வது. நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நெகிழ்ச்சிகளைப் பிரதிபலிப்பது மேலானது.
சொற்கள் சூன்யத்திலிருந்து மலர்ந்து மீண்டும் சூன்யத்தில் மறைய எத்தனிப்பவை. படைப்பிலக்கியத்தின் வெற்றியே வாசகனின் கலா ரசனையில்தான் நிறைவு பெறுகிறது. ஒரு கை தட்டினால் ஒலி எழும்பாது என்னும் ஜென் தத்துவத்தின் மகா வாக்கியத்தை இங்கு நினைவில் கொள்வது நல்லது.

தர்க்க நியதிகளுக்கு அப்பாற்போட்டவை கலையும் அதன் தத்துவமும், பிரத்தியட்சத்தின் பரிமாணத்தை கலைஞன் காட்டுவதாகச் சொல்வது தவறு; சாட்சாத்காரமாக நாம் உணர்வதே பிரம்மத்தின் பிரதிபலிப்புதான் என்னும் போது பிரதிபலிப்பின் பிரதிபலிப்பாக கலை பரிணமிக்கிறது. கலைஞன் சிருஷ்டிக்கும் உலகம் ஒருவகையான மாயா உலகமே.

O

சிறுகதைகளில் சில விவரணைகள் சமீபத்தில் எழுதுகிற எந்த இளைய படைப்பாளிகளுக்கும் சோடை போகாத மாதிரி இருக்கிறது.

மாறுதல் என்கிற சிறுகதையின் ஒரு பகுதி:

"யு நோ, கல்யாணி ஹாஸ் விர்ஜினிடி காம்ப்ளெக்ஸ்' என்று ஆரம்பித்தான்.

"எக்ஸ்ப்ளெய்ன்" என்றேன் நான்.

"அதாவது அவள் தன்னுடைய கன்னித்தன்மைக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கிறாள். அவள் சிறு வயதிலேயே தந்தையை இழந்திருக்க வேண்டும். தாயாருடன் தனித்து வாழ்ந்திருக்க வேண்டும். யாரோ முகம் தெரியாத அந்நியனுடன் தன் தாயார் கூடி வாழ்ந்ததின் விளைவாகவே தான் பிறந்திருக்கிறோம் என்கிற தவறான எண்ணம் அவள் பிஞ்சு மூளையிலே பதிந்து விட்டிருக்கிறது. தன் தகப்பனாரைப் பற்றி அவளுக்கு சரியாகத் தெரிவிக்கப் படவில்லை. தவறு தாயாருடையதாகவும் இருக்கலாம். எனவே ஆண்கள் மீது தவறான வெறுப்பு, அதே நேரம் பெண்ணின் வளர்ச்சி கருதி வாழ்க்கையின் பிரதான பகுதியை ஆண் துணையில்லாமலேயே கழித்துவிட்ட தாயாரின் மீதும் வெறுப்பு. இதைப் போக்க ஒரே வழி இவன் தாயார் மறுமணம் செய்து கொள்வதுதான்."

"ஸ்ரீதரா, நீ பாஷை புரியாத பிரெஞ்சு, ஜெர்மன் படங்களை அதிகம் பார்க்காதே என்று நான் உன்னை முன்னமேயே எச்சரித்திருக்கிறேன்."

O

இந்த எழுத்தாளரின் பெயரை பல விமர்சனக் கட்டுரைகளில் படித்திருக்கிறேனேயன்றி இவரைப் பற்றி முழுமையாக அறிந்ததில்லை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.


suresh kannan

4 comments:

Badri Seshadri said...

சுரேஷ்: வலைப்பதிவு ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம்! உங்கள் எழுத்துக்களுக்கு யாஹூ! குழுமத்தை விட வலைப்பதிவுதான் சரியான வடிகால்.

தொடரவும். தமிழ்மணத்தில் (இன்னமும் சேர்க்காதிருந்தால்) சேர்த்துவிடவும்.

சன்னாசி said...

Jsri: க் சரிதானென்பது என் அபிப்ராயம்.
சுரேஷ்: 'அழிந்த பிறகு' ஒரு அற்புதமான புத்தகம். யசவந்தர் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் பாத்திரம் என்று அதைப் படித்தபோது பட்டது. வாய்ப்பிருப்பின் காரந்த்தின் சோமனதுடியையும் படித்துவிடுங்கள்....

Anonymous said...

Suesh

Happy to see your blog. It will be a good repostiory for your thoughts. Wishing you a productive and continuous blogging.

Regards
S.Thirumalai

Anonymous said...

அரசு நூலகங்கள் தம் பழைய நைந்த புத்தகங்களை ஏலத்தில் விடுவது வழக்கம். அவற்றையே பழைய புத்தக வியாபாரிகள் வாலங்கி விற்கிறார்கள். இவை வாசகர்களால் திருடப்பட்டு விற்கப்பட்ட புத்தகங்கள் அல்ல. எனவே குற்ற உணர்ச்சி சிறிதும் தேவையில்லை. பழைய கழிக்கப்பட்ட புத்தகங்கள் அரசு நூலகத்தில் கூறு கட்டி விற்கப்பட்டுவதை நானே பார்த்திருக்கிறேன்.

சரவணன்