Thursday, January 09, 2020

ரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’



 
பொதுவாக ரஜினியின் வணிக சினிமா அரசியல் மீதும் அல்லது அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சாண்டி விளையாட்டு மீதும் பல விமர்சனங்களை வைத்தாலும் அவர் திரைப்படம் வரும் போது ‘பார்த்துதான் வைப்போமே’ என்கிற மெல்லிய ஆவல் சராசரியான நபருக்கு எழுவது இயல்புதான். வெறித்தனமான ரசிகர்கள் உருவாக்கும் ஆரம்ப அலை அடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக சென்று அவரின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு தமிழ் மரபு. அந்த வகையில் ரஜினியின் charisma இன்னமும் பெரிதாக அடங்கி விடவில்லை என்பது உண்மை.

ஆனால் ‘தர்பார்’ வெளியீட்டில் இவ்வகையான சந்தடிகள் எதையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ரஜினி மறுபடியும் ‘கமர்சியல்’ சந்தைக்குள் நுழைந்திருப்பது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதா?

தர்பார் - இது எதைப் பற்றிய திரைப்படம்?

ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) ரவுடிகளை ‘கன்னா பின்னாவென்று’ என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் ஒரு வெறி கொண்ட காவல்அதிகாரியாக நமக்கு அறிமுகமாகிறார். அவர் ஏன் அப்படி மூர்க்கத்தனமாகிறார் என்பதை ஒரு பின்கதையின் வழியாக சொல்கிறார்கள்.

ஆக.. காவல்துறை அதிகாரியின் வீரத்தை, பெருமிதத்தை, அரச பயங்கரவாதத்தின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆராதிக்கும் திரைப்படம் இது. ஹரியின் ‘சாமி’ ‘சிங்கம்’ போன்றவைகளின் இன்னொரு வெர்ஷன். அவ்வளவே. புதுமையாக எதுவுமில்லை.

ஒருவகையில் இது எழுபது, எண்பதுகளில் வெளியாகும் திரைப்படத்தைப் போலவே பலவிதமான கிளிஷேக்களுடன் உள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, எதிரிகளால் தன் பிரியமான உறவை இழப்பார். அதற்கு பழிவாங்க கிளம்புவார். ‘தர்பாரின்’ ஒன்லைனும் இதே அரதப்பழசுதான்.

**

முதலில் இந்தத் திரைப்படத்திலுள்ள நல்ல (அப்படியாகத் தோன்றும்) விஷயங்களை பார்த்து விடுவோம்.

முன்பே குறிப்பிட்டது போல ரஜினியின் வசீகரம் இன்னமும் குறையவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் வேறெந்த முன்னணி நடிகருக்கு கூட இப்படியொரு வசீகரத்தன்மை பெரிதும்  குறையாமல் இருக்குமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை செல்வாக்கு பெற்றிருந்த ஜாக்கிசானின் வெற்றி கூட இப்போது அடங்கி விட்டது.

‘தர்பாரில்’ ரஜினி ஸ்டைலாக நடக்கிறார், ஆக்ஷன் செய்கிறார், குறும்புகள் செய்கிறார். சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அப்படியொன்றும் பெரிய முரணாகத் தெரியவில்லை. மனதிற்குள்ளாக ரசிக்கத்தான் செய்கிறோம். (இளமைப் பருவம் முதல் ரஜினியைப் பார்த்து வளர்ந்ததால் அப்படித் தோன்றுகிறதா அல்லது தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான அபத்தங்கள் நம்மை அவ்வாறு கண்டிஷன் செய்து விட்டதா என்பது ஆய்வுக்குரியது). ஆக்ஷன் காட்சிகள் போலி என்பதை அறிந்தாலும் இந்த வயதில் இப்படி வேகமாக உடலை அசைப்பதே ஒரு சாகசம்தான்.

திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ‘ஆள்மாறாட்ட’ குற்றங்கள், அதைப் பற்றிய விசாரணைகள் போன்றவை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதற்குப் பிறகு படம் முழுக்க டொங்கலாகி விடுகிறது. பாவம் சுனில் ஷெட்டி. திடகாத்திரமான உடம்புடன் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் எக்ஸ்ட்ரா நடிகர் போலவே அவரை குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திடகாத்திரமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டு அவரது சுண்டுவிரலை மட்டுமே திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மெயின் வில்லனின் பாத்திரம் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்தால்தான் நாயகனின் சாகசங்களும் அதிகம் எடுபடும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இது நிரூபிக்கப்பட்டதொன்று.

இவற்றைத் தாண்டி ரஜினி செய்யும் தனிநபர் சாகசங்கள் பலவும் ‘காமெடியாக’ இருக்கின்றன. கமிஷனர் என்கிற அதிகாரத்தில் இருந்தாலும் எந்தவொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானாலும் மற்றவர்களை ஓரமாக நிற்க சொல்லி விட்டு இவரே தன்னந்தனியாக சென்று ‘ஹீரோத்தனத்தை’ நிறுவுகிறார். இப்படிப்பட்ட காட்சிகள் அபத்தமாகவும் காமெடியாகவும் இருக்கின்றன. ஒரு இண்டர்நேஷனல் குற்றவாளியைப் பிடிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும் ‘நானே தனியாப் பிடிக்கறேன்’ என்று ஹீரோத்தனம் செய்ய இவர் அடம்பிடிக்கும் போது இந்த காமெடியின் அளவு உச்சத்திற்குப் போகிறது.

ஒருபக்கம் என்கவுன்டர் போலீஸாக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் அழகான பெண்ணிடம் பேசுவதற்கு வாய் குழறுவதாக இவர் செய்யும் நகைச்சுவை இருக்கிறதே.. அபத்தம். ஒரு காரெக்ட்டரின் நம்பகத்தன்மை எப்படி சீரழிந்தால் என்ன, ஒரு திரைப்படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து நவரசக்குப்பைகளும் வந்து விட வேண்டும் என்று இயக்குநர்கள் கிணற்றுத் தவளையாக யோசிப்பதால் வரும் வினை இது.

நாயகி என்றொருவர் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நல்லவேளை, டூயட் எல்லாம் வைத்து இயக்குநர் நம்மைச் சோதிக்கவில்லை. ஆனால் டூயட் இல்லையே.. தவிர இதர அசட்டுத்தனமான ரொமான்ஸ் எல்லாம் நடக்கிறது.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். கமலின் மகளாக ஒரு படத்தில் நடித்து விட்டதால் ரஜினியின் மகளாக இன்னொன்றில் நடிக்க விரதம் இருந்தாரோ. என்னமோ. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு இதில் அழுத்தமாக வெளிப்படவில்லை. ஒருவகையில் இதுதான் பழிவாங்கலின் அடிப்படையே. என்றாலும் தன் ‘கடைசி வீடியோ’வில் இவர் பேசுவது நன்று.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு மொக்கையான கவுண்ட்டர் வசனம் பேசுவதை இன்னமும் எத்தனை நாளைக்கு ‘காமெடி’ என்று யோகிபாபுவும் பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

‘கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல ஒரு பொண்ணை வெச்சிக்கிட்டு.. இந்த வயசுல.. எங்க வீட்டு பெண்ணை லவ் பண்றியே.. நியாயமா?” என்று ரஜினியை ஒரு பாத்திரம் கேள்வி கேட்கிறது. ‘ஹே.. சூப்பர்பா..’என்று தோன்றியது அந்தக் காட்சியில்தான். தன் மகள் வயது நாயகிகளுடன் ரஜினி டூயட் பாடிய அத்தனை காட்சிகளும் அந்த ஒரு நொடியில் நம் கண் முன் வந்து போகின்றன. ரஜினி படத்திலேயே அவரை நாசூக்காக சவட்டியிருக்கும் முருகதாஸிற்கு பாராட்டு.

‘படையப்பா’ திரைப்படத்தில் உடம்பை முறுக்கி ரஜினி சண்டையிடும் காட்சியைப் பார்த்து ‘வாட் அ மேன்?’ என்று அப்பாஸ் வியக்கும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டல்லவா? அப்படியே இதிலும் ஒன்று இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ரஜினியின் முறுக்கேறிய உடலை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் VFX டிபார்ட்மெண்ட் எத்தனை தரமாக முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.

இதைப் போலவே, தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டவுடனேயே விறைப்பு குறையாமல் சல்யூட் அடித்து விட்டு தடுமாறி விழச் சென்று பிறகு சமாளித்துக் கொண்டு சிவாஜி செல்வார் அல்லவா? அப்படியொரு நகைச்சுவையும் இதில் உண்டு. முருகதாஸின் டீமில் அறுபதைக் கடந்த உதவி இயக்குநர் எவரோ இருக்கிறார் போலிருக்கிறது. அவர் ‘சிவாஜி’யின் வெறிபிடித்த ரசிகராகவும் இருக்கக்கூடும்.

மும்பையின் நிழல் உலகு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் இந்தக் காமெடி கலாட்டாவை இயக்குநர் ‘ராம்கோபால் வர்மா’ ஒருவேளை பார்த்தால் எப்படியெல்லாம் டிவிட்டரில் கிண்டலடிப்பார் என்றொரு கற்பனை ஓடியது. அப்படி கந்தர கோலமாக ரவுடிகளை ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை உள்ளிட்ட அரசு பதவிகளில் அமரத் துவங்கி விட்ட காலம் இது. ஆனால் இயக்குநருக்கோ நடிகருக்கோ இது குறித்த சமூக உணர்ச்சி எதுவுமில்லை. ‘பணம் கொடுத்தால் அவர்கள் வாழ்த்தி நடனமாடுவார்கள்’ என்பதையே காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு திருநங்கையை ‘எக்ஸ்ட்ரா’ நிமிடங்கள் கட்டிப்பிடித்து கிளுகிளுப்பாகிறார் ரஜினி. காமெடியாம்.

சந்தோஷ் சிவன் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள், இது போன்ற சாதாரண திரைப்படங்களுக்கு தங்களின் உழைப்பைக் கொட்டுவது அநீதி. அனிருத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும சரி. எதையும் அவர் ‘கிழிக்க’வில்லை. நம் காதுகள்தான் கிழிகின்றன.

‘இளம் வயது நாயகிகளுடன் டூயட் பாடி நடிப்பது எனக்கே சங்கடமாக இருக்கிறது. இனி என் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறேன்” என்று சுயபரிசீலனையுடன் தன்னை உணர்ந்து அறிவித்த ரஜினி, (அதற்கு லிங்கா போன்ற சில தோல்விகளும் காரணம்) ‘கபாலி’ ‘காலா’ என்று சரியான திசைக்கு தடம் மாறினார். அவையும் வணிகத் திரைப்படங்கள்தான் என்றாலும் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற இடம் அந்தத் திரைக்கதையில் இருந்தது. ஆனால் ஒரு தீவிர ரசிகனாக எண்பதுகளின் ரஜினியை மீண்டும் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று ‘பேட்ட’யின் மூலம்  ரஜினி என்கிற தேரை இழுத்து வந்து பழைய சாக்கடையில் இறக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

‘அடடா.. சொல்லியிருக்கக்கூடாதா.. நானும் இந்த மாதிரி பண்றதுல.. பெரிய ஆளாச்சே’ என்று முருகதாஸூம் தேர் பயணத்தை சாக்கடையில் இன்னமும் ஆழமாக இறக்கியிருக்கிறார். விளைவு ‘தர்பார்’.

இந்த அழகில் தமிழ் சினிமாவில் ‘கதை’ என்கிற வஸ்து இருப்பதாக நம்பி அதற்காக கதை, திருட்டு, பஞ்சாயத்து எல்லாம் நடப்பதாக கேள்விப்படும் போது எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.


**

இப்படிப்பட்ட க்ளிஷேக்கள், காமெடிகள், பொழுபோக்கு  போன்றவற்றைத் தாண்டி கருத்தியல் ரீதியாகவும் இதுவொரு ஆபத்தான திரைப்படம். ஏனெனில் இதில் வரும் காவல்அதிகாரியான ‘ஆதித்யா அருணாச்சலம்’ கண்மூடித்தனமான ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். இவர் சுட்டுத் தள்ளுகிறவர்கள் எல்லாம் நிச்சயம் ரவுடிகள்தானாம். இந்த லட்சணத்தில் ‘மனித உரிமை கமிஷன்’ அதிகாரியையே துப்பாக்கி முனையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வகையில் மிரட்டுகிறார். முருகதாஸின் வித்தியாசமான ‘சிந்தனை’ இது.

இந்தியாவில் இதுவரை நடந்த என்கவுன்டர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எளிய சமூகத்தினராக இருப்பதில் ஏதோ ஒரு விந்தையுள்ளது. குற்றம் செய்ததாக வலுவாக சந்தேகப்படும் ஒரு அமைச்சரின் மகனோ, அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் மகனோ ‘என்கவுண்டரில்’ போட்டுத் தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. .

காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் அழுகிப் போயிருக்கும் சூழலில் ‘கொடூரமான குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஆசாமியை, சட்டத்தின் வழியாக சென்று தண்டிக்க முடியாது என்கிற நடைமுறை காரணம் கருதி, ஒரு நேர்மையான காவல்துறை ஆசாமி ‘என்கவுன்டராக’ கொலை கூட ஏதோ ஒருவகையான நியாயமுள்ளது. நான் சட்டத்தையும் நீதியையும் முழுக்க நம்புபவன் என்றாலும் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் நடக்கும் ‘என்கவுன்டர்கள்’ எல்லாமே இப்படிப்பட்ட ‘நேர்மையுடனா” நடக்கின்றன?

ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை தற்காலிகமாக திருப்திப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றி ஒளித்து விட்டு அந்த இடத்தில் எளியவர்களை பலியிடும் சடங்காக அல்லவா ‘என்கவுன்டர்கள்’ அமைந்திருக்கின்றன?

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவும் ‘என்கவுன்டர்களை’ பெருமிதப்படுத்தி உருவாக்குவதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருப்பது போல் தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் ஒர் அற்புதமான உரையாடல் நடைபெறும். குறைந்தபட்சம் அப்படியொரு சமநிலையான காட்சி கூட இது போன்ற ‘போலீஸ்’ திரைப்படங்களில் இருப்பதில்லை.

இந்த நோக்கில் ரஜினியும் முருதாஸும் இணைந்து ‘காட்டு தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.





suresh kannan

Monday, January 06, 2020

டிசம்பர் பூக்கள் (தமிழ் திரைப்படம்) 1986





1986-ல் வெளியான இந்தத் திரைப்படத்தை  2020-ல் நான் பார்த்ததற்கு காரணம் இளையராஜாவின் இரண்டு பாடல்கள்தான். வேறு விசேஷமான காரணம் ஒன்றுமில்லை. மற்றபடி இதுவொரு சாதாரண வணிகப்படம்.

மொக்கையான திரைப்படங்கள் என்றாலும், இளையராஜா தன் வழக்கமான பாணியில் சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் தருவார் என்பது நமக்குத் தெரியும். ‘அழகாக சிரித்தது இந்த நிலவு’ ‘மாலைகள் இடம் மாறுது.. மாறுது’ ஆகிய இரண்டு பாடல்களை கேட்கும் போதெல்லாம் இந்தத் திரைப்படத்தை என்றாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அது நேற்றுதான் வாய்த்தது. எனவே அந்த மகத்தான (?!) அனுபவத்தைப் பற்றி பதிவு செய்து விடலாம் என்பதற்காகத்தான் இந்தக் குறிப்பு.

ராஜாவின் அட்டகாசமான டைட்டில் இசையோடு படம் துவங்குகிறது. ஆர்.பூபதி என்கிற இயக்குநரின் பெயரை இப்போதுதான் பார்க்கிறேன். இவர் வேறு எதுவும் திரைப்படம் இயக்கியிருக்கிறாரா என்று கூட எனக்குத் தெரியாது. இப்படி மின்மினிப்பூச்சிகள் போல ஏராளமான இயக்குநர்கள் சொற்ப படங்களோடு மறைந்திருக்கிறார்கள்.

போலவே ஒவ்வொரு திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் ‘உதவி இயக்குநர்கள்’ என்கிற பெயர் வரிசையைக் காணும் போதெல்லாம் ‘அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசிப்பேன். மிக அபூர்வமாகவே (பின்னாளில்) பிரபலமான பெயரை அந்த வரிசையில் காண முடியும். (பொதுவாக பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் இது நடக்கும்).

**

இதன் நாயகன் மோகன். இரண்டு நாயகிகள். ரேவதி மற்றும் நளினி. வழக்கம் போலவே மோகனுக்கு அதிக வேலையில்லை. அவருண்டு, அவர் அணியும் அழகான ஜிப்பாக்கள் உண்டு என்று வந்து போகிறார். பாடல் காட்சிகளில் தலையை அசைத்து, தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் தனது பிரத்யேக மேனரிஸத்தை சரியாக செய்து விடுகிறார். இவர் சட்டை அணியாத காட்சிகளில் இத்தனை பூஞ்சையான உடம்பா என்று பரிதாபமாக இருக்கிறது. மற்றபடி சூப்பர் ஹீரோக்களைத் தாண்டி சாமானிய நாயகர்களின் வரிசையில் ஒரு சிறந்த நடிகர் மோகன்.

ரேவதி துறுதுறுவென்று வந்து போகிறார். கைக்கு அடக்கமான சின்னப் பொம்மை போல அழகாக இருக்கிறார். இவருக்கும் நடிக்க அதிக வாய்ப்பில்லை. குதிரையை நினைவுப்படுத்தும் முகத்தோற்றத்தைக் கொண்ட நளினியை எப்போதுமே எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்போது மிகவும் புஷ்டியாக ‘நநளிளினினி’யாக மாறி சீரியல்களிலும் காமெடி காட்சிகளிலும் வந்து  பயமுறுத்துகிறார்.

**

இதுவொரு சாதாரண வணிகத் திரைப்படம் என்றாலும் ஒரு சம்பிரதாயமான திரைக்கதையின் ஒழுங்கையும் சுவாரசியத்தையும் சரியாகக் கொண்டிருக்கிறது. எனவே முழு திரைப்படத்தையும் எப்படியோ சகித்து பார்த்து விட முடிந்தது.

ஒரு கொலையுடன் ‘மங்கலகரமாக’ இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ‘கொலைகாரன் யார்?” என்று அறியும் சுவாரசியத்தில் சில காட்சிகள் அப்படியே நகர்ந்து விடுகின்றன. வரிசையாக கொலைகள் நிகழ்கின்றன. காவல்துறை ‘துப்பு’ துலக்கிக் கொண்டேயிருக்கிறது.

யார் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவன் ‘கொலைகாரன்’ இல்லை என்று எப்படியோ நமக்குத் தோன்றி விடுகிறது. (எத்தனை படங்களில் பார்த்திருப்போம்?!). அதன்படி சிலரை இயக்குநர் காட்டினாலும் அவர்கள் கொலைகாரர்கள் இல்லை என்று தெரிந்து விடுகிறது. என்றாலும் இதற்கான விடை இறுதியில் அறியப்படும் போது சிறிய ஆச்சரியம் வரத்தான் செய்கிறது.

**


மோகன் ஓர் ஓவியர். அதற்கு சாட்சியாக, ஆர்ட் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவர்கள். அவரது வீடெங்கும் திராபையான ஓவியங்களை சுவரெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்கள், இவருக்கும், பத்திரிகையாளரான ரேவதிக்கும் ஒரு கலாட்டாவான அறிமுகம் நிகழ்ந்து பிறகு நண்பர்களாகிறார்கள். மோகனின் நல்லியல்பை உணரும் ரேவதி அவரால் வசீகரிக்கப்பட்டு தன் காதலைச் சொல்கிறார். ஆனால் மோகனால் அதை ஏற்க முடியாத சூழல்.

ஏறத்தாழ மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ போன்ற கதைச் சூழல் இங்கு நிகழ்கிறது. இதிலும் மோகன், ரேவதி என்பது தற்செயல் ஆச்சரியம். (தமிழ் சினிமாவின் கதைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் இப்படி பல ‘தற்செயலான’ ஆச்சரியங்களைக் கண்டு பிடிக்க முடியும்)

ரேவதியின் காதலை மோகனால் ஏன் ஏற்க முடியவில்லை? இங்கு ஒரு பிளாஷ்பேக்.  மோகனின் மனைவியாக நளினி இருந்திருக்கிறார். அவருடைய பிரிவு காரணமாக துயரத்தில் இருக்கிறார் மோகன்.

மோகன் ஓவியர் என்பதால் ஒரு நிர்வாண மாடலாக நளினி நமக்கு அறிமுகமாகிறார். வறுமை காரணமாக இப்படி இருக்க நேர்கிறதே என்று நளினி கலங்குகிறார். இந்த இடத்தில் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு நிர்வாண மாடலுக்கும் பாலியல் தொழிலாளிக்கும் உள்ள தொழில் முரணை, அவற்றின் தரப்பு நியாயங்களை அந்தச் சிறுகதையில் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

நளினியின் பரிதாப சூழல் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் மோகன். (‘உன் மீதுள்ள அனுதாபத்தினால் இது அல்ல’ என்கிற டெம்ப்ளேட் வசனமும் வருகிறது). இன்பமாகச் சென்று கொண்டிருக்கிற அவர்களின்  திருமண வாழ்க்கையில் மோகனுக்குள்ள குடிப்பழக்கம் பெரிய இடையூறாக வருகிறது. நளினியை இழக்க நேர்கிறது.

இதுதான் ரேவதியின் காதல் மறுக்கப்பட்டதற்கான பின்னணிக் காரணம்.

கவர்ச்சிக்காக பபிதா.. ஒய்.விஜயா போன்றவர்கள் வந்து போகிறார்கள். மாறாத விளக்கெண்ணைய் முகபாவத்துடன் இன்ஸ்பெக்டராக ‘நிழல்கள்’ ரவி நடித்திருக்கிறார். (?!). ‘ஆம்பிளை’ நாட்டுக்கட்டையாக சிவச்சந்திரன் (இவருக்கு யாரோ நாராசமாக டப்பிங் குரல் தந்திருக்கிறார்கள்) அவருடைய மனைவியாக ‘குயிலி’, சிறு வில்லனாக இளவரசன் போன்றோர் வந்து போகிறார்கள். ‘ஜெய்ராம்’ என்று ஒவ்வொரு காட்சியிலும் பக்தியுடன் முணுமுணுத்தபடியே வந்து போகும், காவல்துறை உயரதிகாரி டெல்லி கணேஷ், சமகால வலதுசாரிகளை நினைவுப்படுத்துகிறார்.

வி.கோபாலகிருஷ்ணன் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். இவரைச் சரியாக கையாண்டால் நன்றாக நடிப்பார். ஆனால் ஏவிஎம் ராஜனைப் போலவே இவரை ‘மினி சிவாஜியாக’ கண்ணீர் பிழிய வைத்து பாழ்படுத்தி விட்டார்கள். இதில் நாயகியின் தந்தையாக ‘செட்’ பிராப்பர்ட்டி போல் வந்து போகிறார்.

இவரும் ரேவதியும் உணவருந்தும் ஒரு காட்சியில் திருமணப் பேச்சு தொடர்பாக நிகழும் உரையாடல்  'விசுத்தனமான' காமெடி. 

**

தமிழ் சினிமாவில் கதை இல்லாமல் படம் எடுத்து விடுவார்கள். அப்போதைக்கு ராசியான, அவசியம் தேவைப்படும் வணிகச் சமாச்சாரங்கள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். கவுண்டமணி – செந்தில் ஜோடியின் புகழ் உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் இது. எனவே அவர்களும் இருக்கிறார்கள். செந்தில் அவ்வப்போது வந்து போகிறார் என்றாலும் கவுண்டமணி தொடர்பான காட்சிகள் அதிகம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் மையக்கதை ஒரு பக்கமாகவும் அதற்குச் சம்பந்தமேயில்லாமல் ‘காமெடி டிராக்’ இன்னொரு பக்கமாகவும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் ‘கொலைகாரன் யார்?’ என்கிற இதன் மையக்கதைக்கு தொடர்பாகவே காமெடி டிராக் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறிய ஆச்சரியம். கவுண்டமணியின் ‘ஆஸ்தான காமெடி டிராக்’ எழுத்தாளர், ஏ. வீரப்பன்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.

நாயகனான மோகன் ஓவியர் என்பதால் கவுண்டமணியை கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கும் ஆசாமி பாத்திரம் தந்திருக்கிறார்கள். இவரை ‘பெயிண்டர்’ என்று எண்ணி ஒரு பெண் மயங்கும் ‘ஆள்மாறாட்டக்’ காமெடிகளும் உண்டு.

“உசுரைக் கொடுத்து இவங்க பில்டிங்க்க்கு நாம பெயிண்ட் பண்ணிக் குடுக்கிறோம். கட்டிடம் திறந்தப்பறம் நம்மளை உள்ளே அனுமதிப்பாங்களா? மாட்டானுங்க” என்று எம்.ஆர்.ராதா பாணியில் கலக காமெடி செய்யும் காட்சியுடன் கவுண்டமணியின் அறிமுகம் நிகழ்ந்தாலும் போகப் போக இவை சாதாரணக் காட்சிகளாகி விடுகின்றன. ‘நான் பத்தாங்கிளாஸ் பாஸ். அவரு படிக்காதவரு’ என்று கவுண்டமணியை செந்தில் நக்கல் அடிக்கும் வசனம் அப்போதே வந்து விட்டது.

**

ஒரு கட்டத்தில் கொலைகாரன் யார் என்பது ஏறத்தாழ இறுதிப்பகுதிக்கு முன்னால் நமக்குத் தெரிந்து விடுகிறது. அவர் ஏன் வரிசையாக பெண்களைக் கொலை செய்தார் என்பதை விளக்குவதற்காக இன்னொரு பிளாஷ்பேக் வருகிறது. கிளைமாக்ஸூக்கு முன்பு ஒரு ‘பிளாஷ்பேக்’ வைப்பது ஷங்கரின் பாணி என்று நினைத்துக் கொண்டிருந்தால் முன்பே இப்படிச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் தான் செய்த கொலைகளுக்காக ‘கொலைகாரன்’ சொல்லும் காரணத்திலுள்ள லாஜிக் மிக அபத்தமாக இருக்கிறது. அதிலும் கொலையாவது அனைத்துமே பெண்கள் என்பது ‘கிளுகிளுப்பிற்காக’ போல. இந்தப் பட்டியலில் ‘நிழல்கள்’ ரவியும் ஏன் சேர்க்கப்பட்டார் என்பதற்கான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை.

ஒரு காவியச் சோகக் காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. படத்தின் தலைப்பை ஏன் ‘டிசம்பர் பூக்கள்’ என்று இயக்குநர் வைத்தார் என்று தெரியவில்லை. டிசம்பர் பூ பார்ப்பதற்கு வண்ணமயமானது, ஆனால் வாசனையில்லாதது என்று  அசட்டுத்தனமான லாஜிக் ஏதாவது இருக்கலாம். (நல்லவேளை, இறுதி டைட்டில் கார்டில் இதற்கான விளக்கத்தை இயக்குநர் தராதது பெரிய ஆறுதல்). ‘புவனா ஒரு கேள்விக்குறி’ கிளைமாக்ஸ் பாணியில், ரேவதி இறுதியில் வெள்ளைப் புடவையுடன் தோன்றுகிறார்.

**

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இளையராஜாவின் இரண்டு பாடல்களும், சில காட்சிகளில் பின்னணி இசையும் நன்றாக அமைந்திருந்தது. கொலைகாரன் தொடர்பான காட்சிகளுக்கெல்லாம் திகிலை உண்டாக்கும் வகையில் பிரத்யேகமான இசையைத் தந்திருந்தார்.

இதன் ஒளிப்பதிவு ராஜராஜன். பொதுவாக இவரின் ஒளிப்பதிவு பாணி எனக்குப் பிடிக்கும். மிக குறிப்பாக அவுட்டோர் காட்சிகள் என்றால் இயற்கையின் பின்னணிகளையும் அதன் அழகியலையும் சிறப்பாக கொண்டு வந்து விடுவார். இதிலும் பாடல் காட்சிகளில் இவர் வைத்திருக்கும் கோணங்களும் அதிலிருந்த வசீகரமும் கவர்ந்தன. ‘இன்டோர்’ காட்சிகள் மிகச் சாதாரணமானவை.

தனியார் தொலைக்காட்சிகள் பெருகாத காலத்தில் தூர்தர்ஷன்தான் கதி. அதில் திரையிடுவதற்கென்றே சிலர் திரைப்படங்களை இயக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் வகையில் பல அசட்டுத்தனமான, சலிப்பான திரைப்படங்கள் அதில் ஒளிபரப்பாகும். சிவகுமார் நடித்த பல திரைப்படங்கள் இப்படித்தான் தோன்ற வைக்கும்.

டிசம்பர் பூக்களும் இப்படித்தான். 'டிசம்பர் மாதம் நிறைவுற்றதைக் கொண்டாட இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்' என்று நானும் ஓர் அசட்டுத்தனமான லாஜிக்கை சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறேன். 





suresh kannan