Thursday, December 16, 2010

காமராஜர் அரங்கமும் கவர்ச்சி இலக்கியமும்


கண்,மூக்கு வெவ்வேறு திசையிலிருக்கும் ஒழுங்கற்ற விநோதமான ஓவியங்களையும் தீவிரமான உள்ளடக்கங்களையும் இலக்கிய கோட்பாட்டு விளக்கக் கட்டுரைகளையும் கொண்டிருந்த சிற்றிதழ்களுக்கும் வணிகப் பத்திரிகைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு துல்லியமாக இருந்த இடைவெளியை நிரப்ப காலப்போக்கில் இடைநிலை இதழ்கள் உருவாகின. அவ்வாறான அடையாளங்களில் ஒன்று உயிர்மை.  பல்லை உடைக்கும் சிற்றிதழ்களின் மொழியை ஜீரணிக்கத் திணறும் வணிகப் பத்திரிகை வாசகர்கள் அதை தாவி அடைவதற்கான ஒரு படிக்கட்டுகளாக இந்த வகை இதழ்கள் திகழ்கின்றன.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து எழுந்துள்ள வணிகப் போட்டியில் பற்பசை முதல் ஆணுறை வரை அனைத்திற்கும் விளம்பரங்களும் சந்தைப்படுத்துதலின் உத்திகளும் அவசியமாகி விட்ட பிறகு இலக்கியமும் அதிலிருந்து தப்பி விட முடியுமா என்ன? 'எனது மேனியழகின் ரகசியத்திற்கு' எனச் சொல்லும் நடிகையர் இனி 'எனது சிந்தனையழகின் ரகசியத்திற்கு நான் பெரிதும் நம்புவது' ...என இவ்வாறான இதழ்களுக்கும் மாடலிங் செய்யும் நிலையை வருங்காலத்தில் காண நேரிடலாம்.

அதற்கான முன்னோட்டமோ என்று தோன்றுமளவிற்கு அமைந்திருந்தது 'உயிர்மை'யின் நூல் வெளியீட்டு விழா. சாருவின் ஏழு புத்தகங்கள். (ஏழு ஸ்வரங்கள் என்று இசையோடு தொடர்புப்படுத்தி சி(ரி)றப்பு விருந்தினர்களுள் ஒருவரான நடராஜன் இதை விழாவில் குறிப்பிட்டது புல்லரிப்பை ஏற்படுத்தியது).

உயிர்மையின் அழைப்பிதழை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். தமிழின் நவீன இலக்கியத்திற்கும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் சிலருக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்கிற ரீதியில் அந்தச் சிந்தனை அமைந்திருந்தது. கனிமொழி இயல்பிலேயே கவிஞருக்கான மரபணுக்கூறுகளைக் கொண்டவர் என்பதே அடிப்படைத் தகுதியாக இருந்திருக்கும். சரி. தமிழச்சி தங்கபாண்டியனும் சில கவிதைகளை எழுதியிருக்கிறாராம். அதோடு பளபளப்பான அழகாய் இருக்கிறார் என்பது கூடுதல் தகுதி. சரி. நல்லி செட்டியார்? அவரும் கூட சில புத்தகங்களை எழுதி 'எழுத்தாளர்' அந்தஸ்தை அடைந்தவராம். (இதோடு ஓர் உள்பாவாடைக்கான வியாபாரம் வராவிட்டாலும் கூட  இலக்கிய இதழ்களின் பின்னட்டைகளை தன்னுடைய நிறுவன விளம்பரங்களை நிரப்புவதன் மூலம் அவற்றை பல வருடங்களாய் போஷித்து வருபவராம்). சரி. நடராஜன்? நல்லியின் நிழலாய் வருவதே பெரிய தகுதியாக இருந்தாலும் இலக்கிய சம்பந்தம் ஏதேனும் இருக்குமா? இருக்கலாம். வாரமலரில் அவரின் சிறுகதைகள் ஏதேனும் பிரசுரமாகியிருக்கலாம். போதாது? மிஷ்கின் நந்தலாலா எனும் காலத்தால் அழிக்க முடியாத 'அசலான' அற்புதத்தை படைத்த காரணத்தினாலேயே அடுத்த சில நாட்களுக்கு நகரின் எல்லா விழாக்களிலும் பங்கு கொள்ளும் தகுதியை இயல்பாகவே பெற்று விடுகிறார்.

சரி. குஷ்பு? 'நடிகை என்றால் கேவலமா?' என்ற பெண்ணியம் மற்றும் முற்போக்கு சாயத்தில் தோய்க்கப்பட்ட கேள்விகளை தயக்கத்தோடு தள்ளி விட்டு யோசித்துப் பார்க்கலாம். ஏதாவது கவிதை, கிவிதை எழுதித் தொலைத்திருப்பாரோ, அப்படியெதுவும் தெரியவில்லை. பெரியார் படத்தில் மணியம்மையாய் நடித்ததனால் இருக்குமோ? கோயில் கட்டியும் இட்லிக்கு நடிகையின் பெயரைச் சூட்டி மகிழ்ந்த தமிழனின் அடிப்படை உளவியலை துல்லியமாக புரிந்து கொண்டு கூட்டம் சேர்ப்பதற்காக இந்த உத்தியோ? சேச்சே. அப்படி இருக்காது. பின் எதுதான் காரணமாய் இருக்கும் என்று குழம்பிப் போனேன்.

வரவேற்புரையாற்றின மனுஷ்யபுத்திரன் எனது இந்த மண்டைக்குடைச்சலை தீர்த்து வைத்தார். 'பொதுப்பரப்பில் தான் முன் வைத்த ஒரு கருத்திற்காக உறுதியாய் நின்று போராடின ஒரு பெண்' என்கிற காரணத்திற்காகவே குஷ்பு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று. ஆம்- அதுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். முற்போக்கு என்பதை எழுத்தில் மாத்திரம் காட்டாமல் செயலிலும் நிகழ்த்திக் காட்டும் 'உயிர்மை'யை வியக்காமலிருக்க முடியவில்லை. எனில் வருங்காலத்தில் இலக்கியக் கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகீலா கூட அழைக்கப்படலாம். 'பிட்' படத்தில் ஆபாசமாக நடித்தார் என்று அவர் மீது போடப்பட்ட வழக்கிற்காக 'பர்தா' அணிந்து நீதிமன்றத்திற்கு வந்த அவரை, இசுலாமிய அமைப்புகள் அது குறித்து எதிர்ப்பு  தெரிவித்த போது அதை உறுதியாய் எதிர்த்த காரணத்தினால். ஆனால் இப்படி தன் கருத்தில் உறுதியாய் இருப்பவர்கள் நடிகைகளாகவும் அழகாயும் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களாகவும் அமைந்திருப்பது அவசியமா அல்லது பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு 'சின்னப்பிள்ளை' போல கிழவியாகவும் இருக்கலாமா என்பதை தெளிவுப்படுத்தி விட்டால் வருங்கால விழாக்களுக்கு வாசகர்கள் வருவதா வேண்டாமா என  திட்டமிட வசதியாயிருக்கும்.

'அற்புதமான ஒரு மாலைப்பொழுது' 'விழா இனிதே நிறைவடைந்தது' என்றெல்லாம் 'மானே தேனே போட்டு எழுதியிருக்கலாம்தான். மண்டைக்குள்ளிருக்கும் நண்டு பிராண்டுது என்ன செய்ய.

()

அரங்கத்தின் வாசலிலியே வணிகத் திரைப்படங்களின் நாயகன்களுக்கு நிகரான சாருவின் பிளெக்ஸ் பேனர். அரங்கின் உள்ளே எழுத்தாளரின் பெயரைச் சொன்ன போதெல்லாம் வாசகப் பெருமக்களின் கைத்தட்டும் விசிலும். சாருவின் படத்திற்கு முன்னதாக (மதிய நேரத்தில் - என்னவொரு டைமிங்)  பீர் அபிஷேகமும் நடந்ததாய் கேள்விப்பட்டேன். திரைப்படத்தின் வணிகக் கலாச்சாரத்தின் அபத்தங்களை விமர்சித்து காரசாரமாய் எழுதும் சாரு இன்று ஒரு brand image ஆகி அந்தக் கலாசாரத்தின் ஒருபகுதியாய் நிற்கும் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு வியப்பது என்றே தெரியவில்லை.

நூல் வெளியீட்டில் உரையாற்றிய பலரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்த பிரக்ஞையோடும் முக்கியத்துவத்தோடும் பேசியது ஆச்சரியமாய் இருந்தது.

அத்தனை பெரிய காமராஜர் அரங்கத்தின் கணிசமான இருக்கைகள் நிரம்பியிருந்தாலும் (ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை நபர்கள் வருவது நிச்சயம் ஒரு தமிழக சாதனைதான்) அதில் திருப்தியுறாத ம.பு. 'காலி இருக்கைகள், கலாசார வெறுமையின் குறியீடு' என்றார். என்ன இருந்தாலும் கவிஞரல்லவா? 'கவர்ச்சி நடிகை ரகசியாவின் நடனத்தை நடத்தியாவது கூட்டத்தை சேர்ககலாம் என்று நகைச்சுவை ஆலோசனை தந்தார் மதன். 'பொதுவாக இலக்கியக் கூட்டத்திற்கு வயதானவர்களே வரும் நிலையிலிருந்து விலகி இந்தக் கூட்டத்தில் இளைஞர்களை காண முடிவது மகிழ்ச்சியை அளிப்பதாக' தமிழச்சி கூறினார். (விசில், கைத்தட்டல்).

பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் ஒரு நூல் வெளியீட்டின் வெற்றிக்கு அடையாளம் என்று இந்த அறிஞர் பெருமக்கள் தீவிரமாக நம்புகிறார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் விசிலடிக்கும் கூட்டம். அடக் கஷ்டமே. இது மாதிரியான கூட்டம்தானே  ஒரு வணிகத் திரைப்படத்தின் முதல் காட்சியிலும் அமர்ந்திருக்கிறது? சாருவின் எழுத்தில் தென்படும் கொஞ்சம் நஞ்சம் இலக்கியமும் வெகுஜன வாசகர்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அந்தக் கொஞ்சம் நஞ்சம் இலக்கியத்தையும் உதறிவிட்டு கிளர்ச்சியடைந்த அனுபவமே போதும் என்பதாகவும்  நூல் வெளியீடு என்பது ஏதோ பெரிய அப்பளமும் பாப்கார்னும் சாப்பிட்டு ராட்டினத்தில் சுற்றித் திரும்பி அத்தோடு மறந்து விடும் தீவுத்திடல் கண்காட்சி போன்ற பொழுதுபோக்கு அடையாளங்களுள் ஒன்றாக ஆகி விடக்கூடாது என்கிற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.

சாருவின் கிளர்ச்சி தரும் பிம்பத்தைத் தாண்டி இதில் எத்தனை பேர் அசலான இலக்கிய தேடலும் வாசிப்பும் அல்லது அதற்கான முயற்சியும் கொண்டிருப்பவர்கள் என்பதை ஓர் ஆய்வு செய்தால் அது தரும் விடை நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது. இது போன்ற அடையாளங்களால்தான் ஒரு பதிப்பகம் தன் பெருமையைக் கட்டிக் காக்க முடியும் என்கிற சூழலே பீதீயைத் தருவதாக இருக்கிறது. தம்முடைய கூட்டத்திற்கு வரும் அத்தனை மக்களும் தமக்குச் சாதகமான ஓட்டுக்களாக மாறிவிடக்கூடும் என்று கனவு காணும் அரசியல் கட்சிகள் போலவே கலை சார்ந்த அமைப்புகளும் நினைக்க ஆரம்பித்து அதை செயல்படுத்தத் துவங்கி விட்டால் என்ன ஆகும் என்பதே கவலையைத் தருவதாக உள்ளது.

(உயிர்மையின் மற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களின் பட்டியல் கூட ஒரளவிற்கு ஆரோக்கியமாக இருக்க, சாருவின் கூட்டத்தின் நபர்கள் மாத்திரம் ஏன் இப்படி?. இதற்கான பொறுப்பு பதிப்பகத்தினுடையதா அல்லது எழுத்தாளருடையதா என்பது தெரியவில்லை. சாருவின் எழுத்து குறித்து இணக்கமாக பேச மீண்டும் மீண்டும் இந்த நபர்களைத் தவிர வேறு எவரும் கிடைக்கவில்லையா?)

இந்த உரோமமெல்லாம் தெரிந்தும் நீ ஏன் கூட்டத்திற்குப் போனாய் என்றொரு கேள்வி இதை வாசித்துக் கொண்டிருப்பவருக்கு தோன்றலாம். நல்லது. அதற்குக் காரணம் சாரு. அவரது "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்' புதினத்தை சுஜாதா அடையாளங்காட்டியதிலிருந்து  பல்வேறு முரண்களைத் தாண்டியும் சாருவை நான் வாசித்து வருகிறேன்.  பாசாங்குகளை கழற்றி வைத்த எழுத்தின் சுவாரசியம், அதிநவீனம், அங்கதம், அயல் இலக்கியம், இசை அறிமுகம் போன்றவற்றைத் தவிர மற்றவர்களின் எழுத்தில் காணவே முடியாத சில விஷயங்களுக்காகவும் சாருவின் பிரத்யேக ஆளுமையில் உள்ள ஈர்ப்பு காரணமாகவும் -சமயங்களில் ஏற்படும் எரிச்சலைத் தாண்டியும் - கூடுமானவரை அவர் எழுதும் அனைததையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

()

இனி நிகழ்ச்சியில் நடந்ததைப் பார்ப்போம்.(நினைவிலிருந்து எழுதுகிறேன்.கருத்துப் பிழைகள் இருக்கக்கூடும்).

நித்யானந்தர் நூல் குறித்து உரையாட வந்தார் ரவிக்குமார். (இந்த நூல் பற்றிப் பேச மற்ற எவரும் மறுத்து விட்டார்களாம்). 'சாருவின் எழுத்தில் புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் எந்த இடைவெளியும் இருக்காது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் உரையாடல் கூட அடுத்த படைப்பில் வெளிவந்துவிடலாம் என்றார். (புனைவு எது நிஜம் எது என்று அடையாளம் தெரியாதவாறு எழுதுவதுதானே சாரு எழுத்தின் மகிமை). சாரு முன்பு நித்யா குறித்து 'பரவசத்துடன்' எழுதின சம்பவங்களை வைத்து சாருவையே கிண்டலடித்தார். நித்யா போல சாருவும் ஒரு ஆன்மீக குருவாகலாம் என்ற 'பஞ்ச்' உடன் முடித்த ரவிக்குமார், அதிகாரம் x மதகுருமார்கள் என்ற தலைப்பிலும் சற்று தீவிரமாகவே பேசினார்.

(நீட்ஷே,சார்த்தர் எல்லாம் கரைத்துக் குடித்த ஓர் எழுத்தாளர் சாமியாரைத் தேடிப் போவாராம். அவரிடம் ஏமாந்த வெறுப்பில் பின்பு அவரையே திட்டியும் எழுதுவாராம். பரபரப்பு சாமாத்தியங்களுடன் வெகுஜன பத்திரிகை வெளியிட்ட இந்தக் கட்டுரைகளை இலக்கிய அடையாளமாகக் கொண்டிருக்கும் பதிப்பகமும் 'சரசம் சல்லாபம் சாமியார்' என்று இலக்கியத்தனமான தலைப்புடன் வெளியிடுமாம். இப்படி வெளிப்படையாய் எல்லாவற்றையும் எழுதுவதுதான் சாருவின் பலமாம். சாருவின் கட்டுரை எழுத்துக்களில் சிலவற்றைத் தவிர வம்புகளே அதிகம்,அவற்றைத் தவிர்க்கலாம் என்று ம.பு முன்னர் உட்லண்ட்ஸ ஓட்டலில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுக்கூட்டத்தில் சொன்ன ஞாபகம்).

சார்த்தரும் சாருவும் என்ற உள்ளடக்கத்தில் தமிழச்சி பேசினார். (என்ன கொடுமை சாரு இது). எதுகை மோனையில் தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்பின் வயது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல்தான் என்றாலும் சாரு பெயரின் முதல் எழுத்திற்காக சார்த்தரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். சாக்ரடீஸ் பெயரும் அந்த எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது என்பதும் கிலியைத் தருகிறது. நோபல் பரிசை மறுத்த ஒருவரையும் அதற்காக  'எங்கே எங்கே' என்று  அலைமோதுகிற அதற்கான தகுதி கொண்ட எழுத்தை இதுவரை எழுதாத ஒருவரையும் ஒரு புள்ளியில் இணைப்பது முறையா?. சார்த்தரைப் போல இருத்தலியல்வாதிகளை விளிம்புநிலை மக்களில் கூட நிறைய பேரைக் காணலாம். சேகுவேரா'வின் ஒப்பனையில் அழகிரியை வைத்து பிளெக்ஸ் பேனரை தயார் செய்யும் அரசியல் கலாசாரத்தில் இதெல்லாம் சகஜம்தான் போலிருக்கிறது.

தமிழச்சி உரையாடின நூலான 'மழையா பெய்கிறது' என்ற கட்டுரை நூலின் தலைப்பே தனி சுவாரசியம். உலக அறிஞர்களின் வாழ்விலும் ஆன்மீக குருமார்களின் வாழ்விலும் நடந்த சுவையான சம்பவங்கள் (இவைகளில் பல கற்பனைகளாகவே இருக்கலாம்) எங்கோ பகிரப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு பின்னர் அது வரலாற்று உண்மையாக ஆகிவிடுகிற நகைச்சுவை இருக்கிறதல்லவா? அதே போன்றதுதான் நூலின் தலைப்பும்.

சாரு மூன்று நாட்களாக இங்கும் அங்கும் எங்கும் நகராமல் எழுத்து தியானத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாராம். மூன்று நாட்கள் கழித்து அவருக்குப் பேசின நண்பர் 'சென்னையே வெள்ளக்காடாக இருக்கிறதே,உங்களுக்குத் தெரியாதா" என்றாராம். சாரு அதற்கு 'மழையா பெய்கிறது?" என்கிற திருவாக்கியத்தை அருளினாராம். (என்னாங்கய்யா, எங்கள பாத்தா அவ்ளோ கேனைங்களாகவா தெரியுது).

சாருவிடம் தமக்கு ஏற்பட்ட பழைய அறிமுக நிகழ்வுகளை நூற்றி ஒன்றாவது முறையாக பகிர்ந்து கொண்டார் கனிமொழி. 'எழுத்தாளன் பொதுவெளியில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.' என்று அவர் பேசிய போது சமீபத்திய 'அரசியல் பேரம் வெளிப்பட்ட' நிகழ்வுகளும் உடனே நினைவுக்கு வந்து சிரிப்பாக வந்தது.

'இப்படி தமிழ் சினிமாவை தொடர்ந்து தாக்கி எழுதினால் உங்கள் கதாநாயக கனவு நிறைவேறாமலே போய்விடும்' என்று சாருவை நோக்கி சொன்ன மதன், பிறகு பேச்சை தமது பிரத்யேக விருப்பமான தலைப்பான 'உலக வரலாற்று' சம்பவங்களுக்குள்  இட்டுச் சென்றார். சாக்ரடீஸை கொன்றது சர்வாதிகாரம் அல்ல, ஜனநாயகம் என்றார். விமர்சனம் என்பது ஆரோக்கியமான படைப்புச் சூழலுக்கு எத்தனை முக்கியமானது என்பதும் அவர் பேச்சில் இணைந்தது. வெகுஜன ஊடகத்தில் பணியாற்றியதன் காரணமாகவே அந்த ஜாக்கிரதையுணர்ச்சியால் தம்மால் கடுமையாக எழுத முடியாமல் அதுவே இயல்பாகி விட்டது என்றவர், மிஷ்கின் நண்பர் என்பதற்காக விட்டிருக்காமல் நந்தலாலாவில் உள்ள குறைகளையும் சாரு எழுதியிருக்கலாம் என்று ஆலோசனை தந்தார்.

(இங்கே ஒரு  நகைச்சுவை சம்பவம். பேசி முடித்த பின்னர், நல்லி, நடராஜன், ரவிக்குமார், கனிமொழி, தமிழச்சி (பின்னர் திரும்பி வந்தார்) என்று அனைவரும் கிளம்பியிருக்க மதன் பேச எழுந்த போது மேடையில் ம.பு.வும் எஸ்.ராவும் மாத்திரமே அமர்ந்திருந்தனர். (மிஷ்கினும் சாருவும் எங்கோ சென்றிருந்தனர்)

'இங்கு மேடையில் அமர்ந்திருக்கும்'... என்று யாரைப் பார்த்து சொல்வது என்று மதன் பேச ஆரம்பித்த அந்தக் கணத்தில் ஒரே  சிரிப்பொலி. ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டு வருபவர்கள் அது முடியும் வரை அமர்ந்திருப்பதும் பேச்சாளரின் உரையாடலை கவனிப்பதுதானே அடிப்படை நாகரிகம்?. ("ஏண்டா இந்த நடிகனுங்க ஒவ்வொரு பொறந்த நாளைக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறாங்க. நாட்ல இவங்க மட்டும்தான் பொறந்தாங்களா, நாமளலாம் அப்ப வேஸ்ட்டா பொறந்துட்டமா" என்று கவுண்டமணியின் திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.)



மிஷ்கின்.

'தேகம்' நூலைப் பற்றி இவர் உரையாட வேண்டும். 'சரோஜா தேவி' நாவல் என்று அதைப் பற்றி ஒரே வரியில் முடித்து விட்டு 'நந்தலாலா புலம்பல் புராணத்தை பாடக் கிளம்பி விட்டார். (ஆனால் இவருக்குப் பின்னால் இந்த நாவலைப் பற்றின பேசின எஸ்.ரா அதன் மையம் குறித்து   மிகச் சிறந்த உரையை ஆற்றினார்.)  இப்போது என்ன சந்தேகம் வருகிறது என்றால் 'ஆங்கிலப் புத்தகங்களை தன்னுடைய அலுவலகத்தில் அடுக்கி வைத்து இரவும் பகலும் அவற்றை படிப்பதாக நேர்காணல்களில் சொல்லிவரும் மிஷ்கின், உண்மையாகவே அவற்றையெல்லாம் வாசிக்கிறாரா, அப்படியே வாசித்தாலும் சாருவின் நாவலை புரிந்து கொள்வது போலவே அவற்றையும் தட்டையாக ஒரே வார்த்தையில் புரிந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

(மிஷ்கின் நாவல் குறித்து உரையாடாத காரணத்திற்காக சாரு பிறகு எழுதின நண்பனின் துரோகம்' பதிவுகளை வாசித்தேன். இதற்கு முன்னர் சாரு நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட சினிமாக்காரர்கள் எவருமே (பார்த்திபன், அமீர், சசிகுமார்) சாருவின் நூலை வாசித்ததாக அவர்களின் பேச்சிலிருந்து உணர முடியவில்லை. பிறகு ஏன் சினிமாக்காரர்களை வரவழைத்து கூட்டம் கூட்டி பிறகு இதைப் புலம்ப வேண்டு்ம் என்பது புரியவில்லை. அல்லது இவையெல்லாமே நாடகத்தின் பல்வேறு காட்சிகளாக என்பதும்).

சரி. மிஷ்கினின் 'நந்தலாலா புலம்பல் புராணத்திற்கு வருவோம்.

நந்தலாலா படம் வெளிவருவதற்கு முன்னால் 'அது வரவில்லை' என்பதையே மேடைதோறும் புலம்பிக் கொண்டிருந்தவர் இப்போது படம் ஓடவில்லை என்பதற்காகவும் அதன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்காகவும் புலம்பித் தள்ளினார். (இந்தப்படம் பிளாப், உங்களுக்குத் தெரியுமா?) 'விமர்சகர்களால்தான் இந்தப் படம் தோற்றது' என்று அவர் சொன்ன போது சிரிப்புதான் வந்தது. விமர்சகர்களால் ஒரு படைப்பு தோற்றது என்பது மேற்கத்திய நாடுகளிலும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேண்டுமானால் நிகழலாமே ஒழிய தமிழகத்தில் அது சாத்தியமேயில்லை என்று மிஷ்கினுக்குத் தெரியவே தெரியாதா என்ன? வெகுஜன ஊடகங்கள் முதற்கொண்டு அவரின் நண்பரான சாருவின் கட்டுரை வரை அதைக் கண்மூடித்தனமாக புகழ்ந்து தள்ளிய பிறகும் 'படம் ஓடாததற்கு' விமர்சகர்களை குறை சொல்வது எப்படிப் பொருந்தும்?

'உங்கள் எடையைக் சரியாகக் காட்டும் இயந்திரத்தின் மீது கோபம் கொள்வீர்களா? - இது சாருவின் சினிமா பற்றிய நூலிலுள்ள ஒரு வரி. 'கறாரான விமர்சனங்களினால்தான் ஆரோக்கியமான படைப்புகள் தொடர்ந்து வர முடியும். - இது இதே மேடையில் பேசின 'மதனின்' உரையாடல்.

குற்றவுணாச்சியும் முரணும் மிஷ்கினுடைய பேச்சில் தெளிவாக வெளிப்பட்டன.

'கிக்குஜிரோவை காப்பியடிச்சுட்டேன் சொல்றாங்க. மனநிலை பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரனுடைய சம்பவங்க அது.  ஜப்பானியப்படத்த தமிழ் மக்களுக்கு கொடுக்கணும்னு நெனச்சது தப்பா? இந்த சர்ச்சைக்கு அப்புறம்தானே நீங்க கிக்குஜிரோவை தேடிப் பாத்திருப்பீங்க? அதுக்கு நந்தலாலாதானே காரணம்? முதல் ஷாட்டே ரெண்டு நிமிஷம் வெச்சேன். யாராவது அதைப் பத்தி பேசினீங்களா? சுவத்தைத் தாண்டி குதிக்கிற காட்சியில் அப்படியே நிர்வாணமா நின்னேன். அஸிஸ்டெண்ஸ்லாம் கட்டிப் பிடிச்சு அழுதுட்டாங்க. யாராவது அந்த சீனை நோட் செஞ்சீங்களா? கூலிங் கிளாஸை போட்டுப் பாத்துட்டு 'அய்யோ ராத்திரியாடுச்சு'ன்னு திரும்பக் கொடுத்துடுவேன். அந்த வசனத்த யோசிக்க ரெண்டு நாளாச்சு. (என்ன கொடுமை மிஷ்கின் இது) யாராவது அதப் பாராட்டுனீங்களா? பாலியல் தொழிலாளி பேசற ஒரு லாங் டேக்கை மாத்திரம் அஞ்சு நாளைக்கு மேலே எடுத்தேன். யாராவது அதச் சொன்னீங்களா?

'காப்பியடிச்சுட்டேன்னே சொல்றீங்க. நாலே நாலு சீனை கிடானோவுக்கு டிரிப்யூட் செய்யறதுக்காக வெச்சேன்" அது தப்பா? நல்ல படம் கொடுக்கறதுக்காக எத்தனை கஷ்டப்பட்டேன்? படிச்சவங்க இதைச் செய்யலாமா?"

... இப்படியாக மிஷ்கினின் பேச்சு நந்தலாலா குறித்தே சுழன்றது.

குப்பையான திரைப்படங்களுக்கு மத்தியில் தரமான படமொன்றைத் தருவதற்காக உறுதியுடன் போராடுகிற அவருடைய கலை மனம் குறித்து நமக்குப் புரிகிறதென்றாலும் அதற்கு ஆதரவு அளிப்பதுதான் நம் கடமை என்றாலும் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான நேர்மையில்லா விட்டால் அதற்குரிய விமர்சனங்களை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். இல்லையெனில் கமல் போல் கள்ள மெளனமாகவேனும் இதைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஷங்கரோ, மணிரத்னமோ என்றால் நிச்சயம் இதை ஒரு சம்பிரதாயப் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள். அப்படியல்லாமல் இது குறித்து தாமே முன் வந்து உரையாடின மிஷ்கினை இந்த வகையில் பாராட்டவே செய்ய வேண்டும்.

மிஷ்கின் சொன்ன இன்னொரு விஷயமும் முக்கியமானது எனக் கருதுகிறேன். தாம் உதவி இயக்குநராக இருந்த போது சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் (இதயம் கதிர்) சினிமா பற்றி எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தம் உதவியாளர்களுக்கும் அதையே பரிந்துரைப்பதாகவும் கூறினார். அகிரா குரசோவாவும் டகேஷி கிடானோவும் தம்முடைய குருக்கள் என்றும் அவர்களின் படங்களை மாத்திரம் திரும்பத் திரும்ப பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன் என்றும் கூறினார்.

மிஷ்கின் உரையாடத்தவறின 'தேகம்' புதினம் குறித்து எஸ்.ராவின் உரையாடல் அந்த மாலையின் ஆகச் சிறந்ததாக இருந்தது. 'இந்த நாவல் மனிதர்களின் மீதான வதையைப் பற்றியது' என்றவர் மனித குலம் மீது வதை பிரயோகிக்கப்பட்ட வரலாற்றை உதாரணங்களுடன் பேசினார். ஜி.நாகராஜன் குறித்த சம்பவம் ஒன்றும் இடையில். மரணத்திற்கும் பாலுணர்விற்கும் இடையிலுள்ள நெருக்கத்தைப் பற்றியுமாக அவர் பேச்சு நீண்டது.

இறுதியாக சாரு.

தன்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழாவிலும் பேசுகிற அதே விஷயங்களை எப்படித்தான் அவரால் திரும்பத் திரும்ப சொல்ல முடிகிறதோ தெரியவில்லை. தான் உருவாக்கிய பொய்களை தானே நம்பிக் கொண்டு அதை சுவாரசியமாக பகிர்வதற்கும் ஒரு கொண்டாட்ட மனநிலை வேண்டும். கணையாழியில் மகாநதிக்கு எழுதின விமர்சனம், கமல்ஹாசன் மீதான எதிர்ப்பு, கனிமொழியின் நட்பு, நல்லியின் புரவலத்தன்மையின் புனிதம், ஆங்கில மொழி பத்திரிகைகளின் அங்கீகாரத்தின் பெருமை..என்று அதே பல்லவி. பேசாமல் இதை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஒவ்வெர்ரு நிகழ்சசியிலும் ஒலிபரப்பி விடலாம்.

பாலகுமாரன் குறித்து அவர் கூறியதில் ஒரு காமெடி நடந்தது.

மாலை 05.30 மணிக்கு வந்து நிகழ்ச்சி இறுதி வரையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் பாலகுமாரனை நன்றியோடு புகழ்ந்த சாரு, பா.கு.வின் கவிதை ஒன்றையும் பதில் மொய்யாக செலுத்தி விட்டு பிறகு கூறினார்.

'நான கோயிலுக்கு போறத பாத்துட்டு பாலகுமாரனுக்கு ஒரே ஆச்சரியம். "நீங்க ஆஸ்திகரா' ன்னு கேட்டார். "ஆமாம்'னேன். அப்புறம் நாஸ்திகம் பத்தி அவர் ஒரு விஷயம் சொன்னார். ரொம்ப அருமையான விஷயம் அது. 

ஆனா என்னன்னு மறந்து போச்சு."

(விசில் கைத்தட்டல்)

தாங்க முடியாமல் 'தேகம்' நாவலை மாத்திரம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டேன். நாவலை வாசித்து விட்டு தேவையிருந்தால் அதைப் பற்றி எழுதுகிறேன்.


(பின்குறிப்பு: இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய ஆறுதலான விஷயம் குஷ்பு வராமல் போனது. வந்திருந்தால் இன்னும் என்னென்ன காமெடிகள் நடந்திருக்குமோ. பேசாமல் தலைப்பை காமெடி இலக்கியம் என்று மாற்றியிருக்கலாம்.

IMAGE COURTESY: http://picasaweb.google.com/thamizhstudio/13122010#

தொடர்புடைய பதிவுகள்

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2

சாருவும் நோபல் பரிசும்

suresh kannan

Thursday, December 09, 2010

நந்தலாலா - குறியீடுகளுடன் ஓர் உரையாடல்.


 "முதன் முறையாக தமிழ் சினிமாவில் திரைமொழி சார்ந்த குறியீடுகள் 'நந்தலாலா'வில் மிக நுட்பமாக உபயோகப்படுத்தப் பட்டிருப்பதை" முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இத்திரைப்படம் குறித்த மற்ற இணைய பதிவுகளிலும் திரை மொழி சார்ந்த குறிப்புகளும் புரிதல்களும் இடம் பெற்றிருந்ததைக் காண மகிழ்ச்சி. வணிகநோக்குத் திரைப்படங்களை அணுகுவது போல அதிலிருந்து விலகி நிற்கிற மாற்றுத் திரைப்படங்களையும் தட்டையாக அணுகுவது சரியானதல்ல. கலையுணர்வு சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள், பார்வையாளர்களும் அப் படைப்பில் பங்கு கொள்ளும் படியான அவர்களுடன் உரையாடும்படியான  இடைவெளிகளையும் அடையாளங்களையும் ஏற்படுத்தி வைப்பார்கள். அவ்வாறான இடைவெளிகளை பார்வையாளன் தம்முடைய நுண்ணுணர்வு  மற்றும் அனுபவம் சார்ந்த புரிதல்களினாலும் யூகங்களினாலும் நிரப்பும் போதுதான் அந்தப் படைப்பு முழுமையடைகிறது.

இவ்வாறான குறியீடுகள் பார்வையாளர்களுக்கு அவரவர் அனுபவம் சார்ந்து வெவ்வேறு அர்த்தங்களையும் புரிதல்களையும் தரக்கூடும். ஒருவர் தம்முடைய புரிதலை அழுத்தமாக வெளிப்படுத்தும் போது அந்த நோக்கில் அதை அணுகியிருக்காத மற்றொருவர், தம்முடைய புரிதல் ஒருவேளை தவறோ என்று மயங்கத் தேவையில்லை. ஒரு படைப்பை இவ்வாறுதான் அணுக வேண்டும் என்று எந்தக் கறாரான விதிகளும் கிடையாது.

ஆனால் அதே சமயத்தில் இந்தக் குறியீடுகளுக்கான பொதுவான அர்த்தங்களை (இதில் பல நாம் ஏற்கெனவே அறிந்தவைதான்) உணர்ந்து அந்த நோக்கில் இந்தக் குறியீட்டுக் காட்சிகளை அணுகுவது நல்லது. உதாரணமாக ஒளியும் இருளும்ஒளி என்பது உண்மை, நம்பிக்கை, நனமை, புதியவழி, வெகுளித்தனம் ஆகியவற்றின் குறியீடாகக் கொள்ளலாம்.  மாறாக இருள் என்பது பொய், தீமை, வஞ்சம், அவநம்பிக்கை, நோய் போன்றவற்றின் குறீயீடாகக் கொள்ளலாம்.

ருஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் இம்மாதிரியான படிமங்களும் குறியீடுகளும் மிக வலுமையாக அதிபூடகமாக இருக்கும். Andrey Rublyov (1966) திரைப்படத்தில் படம் முழுவதும் குதிரை எனும் விலங்கு ஒரு படிமமாகவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இதை ருஷ்ய கலாசாரத்துடன் இணைத்து புரிந்து கொள்வது சரியானது. படத்தின் இறுதியில் குதிரைகள் மழையில் நனையும் காட்சியை 'வாழ்வு எனும் நிலைக்கு' இணையானதாக தார்க்கோவ்ஸ்கி வர்ணிக்கிறார். மனதிற்கு மிக நெருக்கமானதாகவும் தோழமையானதாகவும் ருஷ்ய நிலவெளியை சுருக்கமாக விளக்கிவிடவும் குதிரை எனும் படிமம் அவருக்கு உகந்ததாக இருக்கிறது.

ஷோகே இமாமுராவின் (Shohei Imamura) The Eel திரைப்படத்தில் வரும் மனிதன் தொட்டியில் அடைக்கப்பட்ட மீனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருப்பான். பிறன்மனையை நாடின மனைவியை கொலை செய்துவிட்டு சிறைத் தண்டனை முடிந்தவுடன் யாருமறியாத தனிமையில் தன் வாழ்வைத் தொடரும் மனிதன் அவன். இங்கு தொட்டி மீன் அவனது தனிமையையும் தனிமைப்படுத்துதலையும் குறிக்கிறது. ஆற்றுக்குள்ளோ கடலுக்குள்ளோ வசித்திருந்த  மீன் இப்போது தான் தொட்டிக்குள் இருப்பதை உணர்ந்திருக்குமா? சிறையிலிருந்து வெளிவந்த மனிதன் அதை விட பெரிய சிறையான சமூகத்திற்குள் நுழைவதற்காக மகிழ்ச்சியடைய வேண்டுமா அல்லது துயரம் கொள்ள வேண்டுமா போன்ற தத்துவார்த்தமான கேள்விகளையும் இக் குறியீடுகள் நம் முன் வைக்கின்றன.

இனி 'நந்தலாலா'வில் குறியீட்டுக் காட்சிகளை என் புரிதலோடு இங்கு பதிகின்றேன். இது உங்களின் புரிதலோடு மாறுபடலாம், ஒன்றுபடலாம் அல்லது இயக்குநரின் சிந்தனையோடு ஒப்பிடும் போது தவறாகவும் இருக்கலாம். இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. உண்மையில் இவைதாம் இதிலுள்ள புதிர்த்தன்மையை ரகசியத்தை அவிழ்க்கும் மகிழ்ச்சியை தருகிறது.

நல்லதொரு திரைப்படத்தை உருவாக்க ஓர் இயக்குநர் பல ஆண்டுகள் உழைக்கிறார். அதன் மையத்தை அவர் சிறுவயதிலிருந்தே சுமந்திருந்திருக்கலாம். அவர் மனதில் அது மெல்ல மெல்ல உருப்பெறுகிறது; சிதைகிறது ; வளர்கிறது. அது பல சமரசங்களைக் கடந்து இறுதி வடிவ திரைப்படமாக வருவதற்குள் பல பரிணாமங்களை அடைந்திருக்கலாம்.  அதை வெறும் இரண்டரை மணி நேரத்தி்ல் பார்த்து புரிந்து கொள்வது சாத்தியமில்லாதது.

எனவே இத்திரைப்படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். முதன்முறை பார்த்த போது என்னை நெகிழ வைத்த சில காட்சிகள் இம்முறை மொண்ணைத்தனத்தோடு கடந்து போனது குறித்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இதில் மிஷ்கின் ஏற்றிருக்கும் பாஸ்கர் மணி என்கிற பாத்திரம் இளைஞனுக்கும் குழந்தைக்கும் உள்ள மனநிலையில் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. சுவற்றை தொட்டுக் கொண்டே நடப்பதும் வலது பக்கமாக சென்று பிறகு தீர்மானமின்றி அதற்கு எதிர்புறமாக நடப்பது குழந்தையின் மனநிலையைக் குறிக்கிறது. இறுதிக் காட்சியில் தாயைத் தேடி விரைவாக நடக்கும் போது திடீரென்று ஒரு வீட்டிற்குள் போய் அதன் கதவில் ஊஞ்சல் போல் விளையாடி விட்டு பின் தன் கடுமைக்குத் திரும்புகிறான். ரூபாய் நோட்டை வாங்காமல் சில்லறைக் காசை மாத்திரம் விரும்பி வாங்குவதும் குழந்தைமையின் அடையாளமே.

கோயில் கோபுரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் கிழிந்த காற்றாடி, புதருக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கவர், சப்பாத்திக் கள்ளி, மரத்தின் சிக்கலான வேர்கள் போன்றவை பாஸ்கர் மணியின் மனம் பிறழ்ந்த நிலையையும் அதன் இருண்மையையும் தவிப்பையும் விளக்குகின்றன.

ஆனால் 20 வருடங்களாக வெளி உலகத்தையே பார்க்காமல் மனநல காப்பகததில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவன் அதன் பாதிப்புகளோ தடயங்களோ எதுவுமின்றி வெளிசமூகத்தில் மிக சகஜமாக புழங்குவது இங்கு முரணாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் அவிழ்த்து விடப்பட்ட ஓர் எலியின் பதற்றமான உடல்மொழிதான் இங்கு பொருத்தமானது.

காப்பகத்திலிருந்து தப்பிக்கும் பாஸ்கர் மணி, அது வரை அணிந்திருந்த நோயாளி உடையை கழற்றி வீசி விட்டு (கோபத்துடன் அடிக்கவும் செய்கிறான்) காவலரின் உடையை அணிந்து கொள்கிறான். உண்மையில் அந்த உடை அவனது அப்போதைய நிலைக்கு எதிரானது . நாலு சுவற்றுக்குள் இருக்கும் போது தன் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் இயல்பாக வெளிப்படுத்தும் மனிதன், பொது சமூகத்தில் நுழையும் போது அதற்கு எதிரான 'நல்ல' முகமூடியை அணிந்து கொள்வதை இக் காட்சி பகடி செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. பாஸ்கர் மணி, தன்னுடைய அடையாளத்தை விரும்பித் தொலைப்பதற்காக அந்த உடை அவனுக்கு உதவுகிறது. இதே போல் பள்ளிச்சிறுவனும் தன் அடையாள அட்டையை பையில் ஒளித்துக் கொண்டு தன் பயணத்தை துவங்குவதை காணலாம்.

பாஸ்கர் மணி ஏன் தன்னுடைய பேண்ட்டை இறுக்கப் பிடித்த படியே நடக்கிறான் என்பது பலரின் சந்தேகம்.

இது என்னுடைய புரிதல்.

அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன்தான் என்றாலும் அதன் ஆரம்ப நிலையில் இருப்பவன். பிரச்சினையின் மையத்தை ஆய்வு செய்து எளிதில் குணப்படுத்தி விடும் நிலையில்தான் உள்ளான். ஆடையை கழற்றி வீசுபவனாகவோ அல்லது நழுவுவது கூட தெரியாமல் நிர்வாணமாக இருப்பவனோ அல்ல. ஆடை அணிவதன் அவசியம் குறித்த தன்னுணர்வுடன் இருப்பவன். அதனால்தான் அவன் சமயங்களில் இயல்பான சராசரித்தனத்துடன் நடந்து கொள்ள முடிகிறது. இதை பார்வையாளனுக்கு உணர வைப்பதற்காக இந்த உத்தியை இயக்குநர் பின்பற்றியிருக்கலாம் என யூகிக்கிறேன்.

ஏன் மாணவிக்கும் சிறுவனுக்கும் கூழாங்கற்களை அளிக்கிறான் என்பதும் பலரின் கேள்வியாக இருந்தது. இது குறித்த என்னுடைய புரிதல்.

பாஸ்கர் மணி குழந்தை மனநிலையிலும் இருக்கிறான் என்று முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? இதுவும் அதன் வெளிப்பாடே. தீப்பெட்டிகளின் அட்டைகள், விதவிதமான கோலிகள், பம்பரங்கள் போன்றவற்றோடு இது போன்ற சேகரிப்பில் இருப்பவை கூழாங்கற்களும்.

மலையிலிருந்து உருண்டு உருண்டு வந்து இயற்கையே பளபளப்பாக்கித் தந்த இது அழகியலின் குறியீடு. சலசலவென்று ஓடிக் கொண்டிருக்கும் நீரின் அடியில் தியான நிலையில் உறைந்திருக்கும் கூழாங்கற்களின் அழகை எந்த வயதிலும் ரசிக்கலாம். இந்த மாதிரியான சேகரிப்பையெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பொக்கிஷம் போல் ஒளித்து வைத்த விளையாட்டுத்தனங்கள் இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அபத்தமாய்த் தெரியலாம். நண்பர்கள் விரும்பிக் கேட்டாலும் கூட எவரிடமும் பங்கு போட மனம் வராது. வேண்டுமானால் நம்மிடம் இல்லாத ஒன்றை நண்பனிடம் வாங்கி அவனுக்குத் தேவையானதை கொடுக்கும் பண்ட மாற்று வர்த்தகம் வேண்டுமானாலும் நடக்கும். விளையாட்டுத் தோழன் பிரிந்து விலகப் போகிறான் எனும் போதுதான் நம் பொக்கிஷங்களிலிருந்து அவனுக்குப் பிரியமானதை தரும் மனது வரும்.

இத்திரைப்படத்தில் பாஸ்கர் மணி, இரண்டு முறை கூழாங்கற்களைப் பரிசளிக்கிறான். தமக்கு உதவி செய்யும் பள்ளி மாணவியை பிரியும் சமயத்தில் எங்கோ ஒளித்து வைத்திருக்கும் கூழாங் கற்களை பரிசளிக்கிறான். இரண்டாவது முறை தன் வீட்டைக் கண்டுபிடித்தவுடன் சிறுவனை பிரியும் உணர்த்தும் விதமாக அவனுக்கு கூழாற்கற்களை பரிசளிக்கிறான்.

இதில் இரண்டு விஷயங்கள் நமக்கு புலனாகிறது. அவன் தன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூழாங்கற்களை தேடி எடுக்கும் போது அது அவனது வீடு என்பது பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இரண்டு அந்தக் கற்களை அவன் ஏதோ அரை மணி நேரத்திற்கு முன்புதான் ஒளித்து வைத்தது போல அத்தனை இயல்பாக எடுத்து வருவது அவன் அப்போது அவனுடைய பால்ய காலத்து நினைவில் இருக்கிறான் என்பதும் நமக்குத் தெரிகிறது. இதில் கூழாங்கற்கள் என்பது நட்பின் குறியீடாக எனக்குத் தெரிகிறது.



பள்ளி மாணவியிடன் ஏற்பட்ட குறுகிய நேர நட்பில் பாட்டுப் பின்னணியுடன் உப்புமூட்டை தூக்கி விளையாடுமளவிற்கு நெருங்குவது அதீதம்தான் என்றாலும் உப்புமூட்டை விளையாட்டும் குழந்தைமையை வெளிப்படுத்தும் மனோநிலையே. இறுதிக் காட்சிக் கோர்வையில் தன்னுடைய தாயையும் மருத்துவத்திற்காக அவன் உப்பு மூட்டை தூக்கிச் செல்வதை கவனிக்கும் போது இந்த மாணவியையும் அவன் தாய்மை வழியும் உணர்வுடன்தான் அணுகுகிறான் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

தாய்மையைத் தேடும் பயணம் என்பதால் படத்தின் பல இடங்களில் தாய்மை சார்ந்த குறியீடுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கதறிக் கொண்டிருக்கும் குழந்தைகள், சினையுடன் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, இறுதிக்காட்சியில் நரிக்குறவன் வரும் போது அவர்கள் அமாந்திருக்கும் ஆலமரமும் அதன் விழுதுகளும் போன்றவை தாய்மையின் அடையாளங்கள். பெரும்பாலான பிரேம்களில் இளைஞன், சிறுவன், பாலியல் தொழிலாளி ஆய்த எழுத்தானபோல நிற்கும் காட்சிகள், முறையே அப்பா, அம்மா, குழந்தை எனும் ஓர் குடும்ப அமைப்பின் இழந்து போன ஏக்கத்தை அவர்கள் வெளியிடுவதாக தோன்றுகிறது.

பாலியல் தொழிலாளியை கடத்திப் போக முயலும் வண்டியின் சிவப்பு நிறம் அபாயத்தையும், வன்முறையையும், தீமையையும் குறிக்கிறது. அதில் வரும் கைத்தடியுடன் வரும் கிழவனின் உடல்மொழி சாத்தானை ஒத்ததாக இருக்கிறது.

வண்டியில் வருபவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஸ்கர் மணியை நையப் புடைக்கும் போது அவர்களை கூக்குரலிட்டு தடுக்க முயலும் பாலியல் தொழிலாளி தலைவிரி கோலமாக ஒரு கையில் கல்லுமாக கண்ணகி தோற்றத்தில் நிற்கிறாள். ஒரு பாலியல் தொழிலாளி  கண்ணகியை நினைவுப்படுத்தும் தோற்றத்தில் நிற்க வைத்திருப்பதின் மூலம் இயக்குநர் சொல்லும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டேயிருக்கும் வன்மக்காரர்களை, பாதிக்கப்பட்டவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இயற்கையே (கடவுள்) அவர்களைத் தண்டிக்கும் என்பது நமது பூர்விக நம்பிக்கை. பாலியல் தொழிலாளியைத் துன்புறுத்துவதற்காக துரத்தும் வன்முறை கும்பல், நாசரின் வண்டி காரணமாக கவிழ்ந்து விடுவது கவித்துவமான நீதி. சமயங்களில் நமக்கே தெரியாமல் இயற்கையின் (கடவுளின்) கருவியாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவது நாசர் வரும் காட்சிகள்.

அவர்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து நரிக்குறவனுக்காக காத்திருக்கும் போது சிறுவன் மீண்டும் கேட்கிறான் "அம்மாவைப் பாக்க போலாமா?" அவனுடைய அம்மா இன்னொரு குடும்பத்துடன் இருக்கும் உண்மை பாஸ்கர் மணிக்குத்தான் தெரியும். சிறுவனிடம் என்ன சொல்வது என்று யோசிக்கிறான். அப்போது அவனுடைய கண்கள் நரிக்குறவன் வைத்து விட்டுப் போகும் காகம் மற்றும் கொக்கின் இறந்த உடல்கள் மீது நிலைக்கின்றன.

முன்னரே பார்த்தபடி வெள்ளை என்பது உண்மையின் நிறமாகவும் கறுப்பு என்பதை பொய்யின் நிறமாகவும் அறியலாம். எனவே சிறுவனிடம் உண்மையைச் சொல்வதா பொய்யைச் சொல்வதா என்கிற குழப்பம் குறியீடுகளாக அவன் முன் நிற்கிறது. பாஸ்கர் மணி கறுப்பைத் தேர்ந்தெடுக்கிறான். "உங்க அம்மா செத்துப் போயிட்டா".

சிறுவன் அவனுடைய தாய் வீட்டைத் தேடி ஒவ்வொரு வீடாக அலைபாய்ந்து கேட்கும் போது பாஸ்கர் மணியின் நிழல் அவனுக்கு தவறான திசையைச் சுட்டிக் காட்டுகிறது. நிழல் = இருள் = பொய் என்பதறிக.

சிறுவனின் தாய் தங்கியிருக்கும் வீடு மற்றும் பாஸ்கர் மணியின் தாய் தங்கியிருக்கும் வீடு  என்று இரண்டு வீடுகளுக்கான தேடல்களின் போதும் பெரும்பாலான வீடுகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. இரண்டு பேருமே தங்கள் தாயைக் கண்டடைவது என்கிற உண்மையைத் தேடி அலைகிறார்கள். வெள்ளை நிறம் உண்மையைக் குறிப்பது. இருக்கிற அத்துணை உண்மைகளில் தன்னுடைய உண்மை எது என்கிற தேடலை அது குறிப்பதாயக் கருதலாம்.

மனநிலை பாதிப்பிலிருந்து பாஸ்கர் மணி எப்படி இறுதிக் காட்சியில் சராசரி மனிதனாக ஆகி விடுகிறான் என்பது சிலரது கேள்வியாக இருந்தது. எளிதில் யூகிக்கக்கூடியது இது. அதுவரை தன்னுடைய தாயை அறைந்து விடும் கோபத்திலிருக்கும் பாஸ்கர் மணி (உண்மையில் அது கோபமல்ல, தான் புறக்கணிக்கப்பட்டதின் மீது எழுந்த சுயபச்சாதாபம்) தன்னை விடவும் மோசமான மனநிலை பாதிப்பிலிருக்கும் தாயைக் கண்டவுடன் உருகி அவளை சுத்தப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைதது விடைபெறுகிறான். அதுவரை அவன் பாதுகாத்து வைத்திருந்த கோப உணர்ச்சி அனைத்தும் வடிந்து போகிறது.  தாயைச் சந்தித்த கணத்திலிருந்தே, பித்து நிலையில் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த அவன் குரல், சாதாரண நிலைக்கு மாறிவிடுவதை கவனித்திருக்கலாம்.

அவன் ஏன் அந்தப் பாலியல் தொழிலாளியை திருமணம் செய்துக் கொண்டு மூவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கக்கூடாது என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். படத்தின் இறுதியில் சுபம் போடும் போது கூட்டுக் குடும்பமாக அனைவரும் சிரித்து நிற்கும் திரைப்படங்களை பார்த்து பார்த்து இது நமக்குத் தோன்றியிருக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ முடியாத அளவிற்கான சூழல்களும் சங்கடங்களும் இருக்கலாம். நாம் நினைக்கும் படி பாத்திரங்கள் இயங்க வேண்டும் என்றும் அப்படியில்லாத பட்சத்தில் அதிருப்தி கொள்வதும் நல்ல பார்வையாளனுக்கு அழகல்ல.

பாஸ்கர் மணி சிறுவனின் தாயைச் சந்திக்கப் போகும் போது 'உங்க அம்மா எனக்கும் முத்தம் தருவாளா?' என்று களங்கமில்லாமல் கேட்கிறான்.  அவளுக்கு தருவதாக செடியிலிருக்கும் செம்பருத்திப் பூவை பறித்துச் செல்கிறான். பின்னர் அது  கீழே விழுந்து கிடக்கும்  ஒன்று குளோசப் ஷாட்டில் காண்பிக்கப்படுகிறது. படத்தின் இறுதியில் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் 'புது அம்மாவும்' அதே வகையான சிவப்பு நிற பூவை  அணிந்திருப்பதை காண முடியும். முன்னர் பார்த்திருந்த காட்சியின் தொடர்ச்சியின் பல நிமிடங்கள் கழித்து இன்னொரு காட்சியோடு தொடர்புப்படுத்தும் உத்தியிது.



இந்தப் படம் முழுவதும் தாய்மையைத் தேடுகிற உள்ளடக்கமாக மேலுக்குத் தெரிந்தாலும் அதைத் தேடி அலைகிற அந்த பயணம்தான் எனக்கு இத்திரைப்படத்தின் பிரதான அம்சமாய்த் தோன்கிறது. தொடர்ந்து வரும் நீளமான சாலைகள் அதற்கான பொருத்தமான குறியீடாக அமைந்திருக்கின்றன. மரவட்டை முதல் மனிதர்கள் வரை எங்கெங்கோ பயணம் செய்துக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் பயணங்கள் நம் அகவுணர்வுகளை விசாலாமாக்குகின்றன. இயந்திர வாழ்வின் இறுக்கத்தை தளர்த்துகின்றன. அடிக்கடி பயணம் செய்ய நேர்பவர்கள் பிறருக்கு எளிதில் உதவுபவர்களாகவும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களாகவும் இருப்பதை வைத்து சூழலை அனுசரிக்கும் பண்புள்ளவர்களாகவும் இருப்பதை நடைமுறையில் காணலாம். (விமானத்தில் பயணம் செய்து நட்சத்திர ஓட்டலில் தங்கித் திரும்புவர்களைச் சொல்லவில்லை. சமூகத்தின் அனைத்து வித மனிதர்களையும் சந்திக்கும் அனுபவங்களைத் தரும் பயணங்கள்).

எப்போதாவது பயணம் செய்பவர்கள் கூட எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களை வெறுப்புடன் நோக்கத் துவங்கி, பின்பு அவர்களுடன் முகவரி பரிமாறிக் கொள்ளும் வரை சகஜமாகி விடுவதை நாமும் கூட உணர்ந்திருக்கலாம். நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் மேற்கொள்கிறவர்கள் (குறிப்பாக லாரி டிரைவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், வணிகர்கள்) மனித நேயம் மிக்கவர்களாக இருப்பதைக் காணலாம். ஊருக்குப் போக காசில்லை என்று நடுவழியில் புலம்பும் மனிதர்களின் வலியை அவர்களால் நெருக்கமாக உணர்ந்து கொள்ள முடியும். சந்தேகப்படாமல் இயன்ற பணத்தை தந்து உதவுவார்கள். இதையே வைத்து ஏமாற்றும் நபர்களையும் அவர்களால் எளிதில் அடையாளங் காண முடியும். மனிதர்களை வாசிக்கவும் பயணங்கள் உதவி புரிகின்றன.

அவ்வகையில் பாஸ்கர் மணியும் சிறுவனும் தங்களின் பயணங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களை நம்மாலும் உணர முடிகிறது. அவ்வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த 'சாலை சினிமா'க்களில் (Road movies) இதையும் குறிப்பிட முடியும். (இன்னொரு 'சட்' உதாரணம் 'அன்பே சிவம்).

மற்ற மொழிகளில் Kikujiro (1999)  La Strada (1954)  About Schmidt (2002) The Motorcycle Diaries (2004) Le Grand Voyage (2004) Paris, Texas (1984) ஆகியவை நினைவுக்கு வருகின்றன.

நந்தலாவின் மூலப்படமான கிகுஜிரோவில் துயரம் ஒர் அடிநாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான கொண்டாட்ட மனநிலை படம் முழுவதும் வழிந்து கொண்டேயிருக்கிறது. அதில் பயணம் என்பதுதான் பிரதான குறியீடு என்பது தெளிவாக தெரிகிறது. படத்தின் இறுதியில் கிகுஜிரோ, சிறுவனிடம் 'இதை மறுபடியும் செய்யலாம்' என்று ஒரு விளையாட்டை குறிப்பிடுவது போலவே பயணத்தை குறிப்பிடுகிறார். ஆனால் நந்தலாலா கொண்டாட்டங்களின் மனநிலையைக் கொண்டிருந்தாலும், தமிழ் சினிமா ரசிகனின் மனநிலையைக் கருத்தில் கொண்டோ என்னவோ,  தாய் சென்டிமென்ட், அழுகை, பாலியல் தொழிலாளியின் வாதை போன்றவைகளைக் கொண்டு துயரத்தையே பிரதானமாக முன்வைக்கிறது.

()


மேற்சொன்ன குறியீட்டின் புரிதல்கள் 'ரூம் போட்டு யோசித்த" என்னுடைய அதீத கண்டுபிடிப்புகளாகக் கூட இருக்கக்கூடும். இயக்குநரே யோசித்திருக்காத, தன்னிச்சையாகவோ தற்செயலாகவோ அமைந்த காட்சிகளைக் கூட என்னுடைய தர்க்கச் சட்டகத்தில் பொருத்தி மகிழ்ந்திருக்கலாம். பரவாயில்லை. இவற்றை ஒரு பயிற்சியாகவே பழகினால் இயக்குநரின் அலைவரிசையோடு இணைந்து படைப்பை அணுகுகிற இன்னும் அவற்றை நெருக்கமாய் ஸ்பரிசிக்கக்கூடிய அனுபவங்கள் கிட்டக்கூடும். மனமகிழ்ச்சிக்காக பார்க்கிற திரைப்படங்களை இத்தனை சிரமத்துடன் பார்க்க வேண்டுமா என்று கேட்கிற நண்பர்களுக்கு: ராஜேஷ்குமாரை வாசிக்கிற அதே மனநிலையில் ஜேம்ஸ் ஜாய்ஸை வாசிக்க முடியாது. அதற்கான உழைப்பைச் செலுத்தியே ஆக வேண்டும். அதுவே அந்த படைப்பாளனுக்கு நாம் தருகிற மரியாதை.

இந்தப் படத்தின் பின்னணி இசை குறித்து முந்தைய பதிவில் எழுத எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. வழக்கமாக ராஜாவை வெகுவாக சிலாகிக்கும் நண்பர்கள் கூட இம்முறை என்னிடம் பேசும் போது சற்று சங்கடத்துடனே பேசினார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் மேலோட்டமாக பேசினாலே பல ஆபாசமான வசைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல்தான் இங்கு நிலவுகிறது. இசையை ரசிக்கிற உன்னதமான மனநிலையும் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறவனுக்கு அதற்கான வெளியைத் தராமல் வன்மத்துடன் வார்த்தைகளை இறைக்கும் மனநிலையும் எப்படி ஒருங்கே இணைந்து செயல்பட முடியும் என்று எனக்கு ஆச்சரியமாய் இரு்க்கிறது.

இந்தியச் சினிமாவில் ராஜாவின் பின்னணி இசை ஒரு மகத்தான சாதனையாக இருக்கிறது / இருந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக ராஜா மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியவர் என்பதும் அவரின் இசை பற்றி எதிர்மறையாக யாரும் பேசக்கூடாது என்பதும் முறையானதல்ல. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரை உண்டு, அதுதான் உலகத்தின் மிகச் சிறந்த உணவு என்று தீவிரமாக நம்புவானாயின் அது அவனது பிரச்சினை. (இந்த விஷயத்தில் இன்று தமிழன் இட்லியை கைவிட்டு பிட்ஸா வகையாறாக்களுக்கு தாவி பல வருடங்களாகி விட்டது). நம்முடைய கிணற்றுத் தவளைத்தனத்தை பறைசாற்றிக் கொள்ளவே இவை பயன்படும்.

நந்தலாலாவின் பின்னணி இசையையும் கிகுஜிரோவிற்கு இசையமைத்த Joe Hisaishi-ன் இசையையும் ஒரு பயிற்சியாகக் கூட கேட்டுப் பார்க்கலாம். கிகுஜிரோவில் தேவையான இடங்களில் மாத்திரமே பியானாவின் மெல்லிசை சலசலத்துக் கொண்டிருக்கிற நீரின் ஓசையைப் போல வழிகிறது. ஆனால் நந்தலாலாவில் ராஜா சில இடங்களில் தன்னுடைய மேதைமையை பார்வையாளனுக்கு உணர்த்தியிருந்தாலும், தேவையில்லாத இடங்களில் தன்னுடைய இருப்பை காண்பித்துக் கொண்டேயிருக்கிறார். படத்தை இரண்டாவது முறையாக பார்க்கும் போது இதை தெளிவாகவே உணர்ந்தேன். பல இடங்களில் எரிச்சலாகக் கூட இருந்தது.

இறுதியாக..

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது வெவ்வேறு அனுபவங்களையும் மனத்திறப்புகளையும் அளிப்பது ஒரு செவ்வியல் திரைப்படத்தின் அடையாளம். அந்த வகையில் நந்தலாலாவும் ஒரு செவ்வியல் படைப்பின் கூறுகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள ஆறுதலான விஷயம்.

இன்னொரு ஆறுதலான விஷயமும் இருக்கிறது. இத்திரைப்படம் குறித்து நான் எழுதும் கடைசிப் பதிவு இது என்பதுதான் அது.

image courtesy: original uploader

suresh kannan