Monday, December 31, 2018

ரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை (இந்தியா டுடே கட்டுரை)





திரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின்  சினிமா பயணத்தில் ஆச்சரியமான பல மேடுகளும் அதிர்ச்சிகரமான சில பள்ளங்களும் உண்டு. இந்த நோக்கில் ‘சந்திரமுகி’ திரைப்படம் முதல் வெளிவரவிருக்கிற ‘பேட்ட’ வரையான ரஜினி சினிமாக்களின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’யை சொல்லலாம். அந்த வருடத்திய நிலைமையின் படி ஒரு திரையரங்கில் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த தென்னிந்திய திரைப்படமாக ‘சந்திரமுகி’ இருந்தது. சென்னை, சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ந்து ஓடி, தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸின்’ முந்தைய சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றி ரஜினியின் தரப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கக்கூடும். ஏனெனில், பலத்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான முந்தைய திரைப்படமான ‘பாபா’ (2002) மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் சிம்மாசனத்தில் ரஜினி அழுத்தமாக உட்கார்ந்த பிறகு அவருடைய அகராதியில் தோல்வி என்பதே பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளட் ஸ்டோன் (1988), ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்” (1991), சொந்த தயாரிப்பான வள்ளி (1993) போன்று அரிதான சில திரைப்படங்கள் முன்பு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக ரஜினியின் பிம்பம் உறுதிப்பட்ட பிறகு அவருடைய வணிகச் சந்தை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு ரஜினி திரைப்படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த திரைப்படமே முறியடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி என்று ‘பாபா’வைச் சொல்லலாம்.

வழக்கமான வணிக அம்சங்கள் பெரும்பாலும் இல்லாதது, அந்த திரைப்படம் விவரித்திருந்த ‘ஆன்மீகம்’, சுவாரசியமற்ற திரைக்கதை போன்ற காரணங்களால் ‘பாபா’ திரைப்படத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மட்டுமல்லாமல் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய உறுதியான சமிக்ஞை இந்த திரைப்படத்தில் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது மீண்டும் நிகழாததால் மனதளவில் சோர்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடுகட்டும்படியான சூழல் உருவாயிற்று.

தனது வணிக பிம்பத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை சரிக்கட்டுவதற்காக அடுத்த காலடியை கவனமாக எடுத்து வைத்தார் ரஜினி. 1993-ல் வெளியாகிய ‘மணிச்சித்ரதாழு’ என்கிற திரைப்படத்தையொட்டி ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னட திரைப்படத்தை அப்போதுதான் இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வாசு. அதை தமிழில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் ரஜினி. ஒவ்வொரு வணிக அம்சமும் இதில் மிக கவனமாக சேர்க்கப்பட்டன.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அப்போது உச்சத்தில் இருந்தார். ‘வடிவேலுவின் கால்ஷீட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சொன்ன தகவல், ‘சந்திரமுகி’ வெற்றி விழா மேடையில் தெரிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, இந்த திரைப்படத்தின் வெற்றியில் ரஜினி மிக ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ என்னும் உளக்குறைபாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மலையாள சினிமாவின் ஆன்மாவை கொன்று புதைத்தாலும் ‘சந்திரமுகி’யில் இருந்த வணிக அம்சங்கள், ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அருமையான பாடல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ‘வேட்டையன்’ என்கிற எதிர்மறையான பாத்திரத்தில் பழைய ‘ரஜினி’யை பார்க்க முடிந்தது.

இதற்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ (2007)  திரைப்படம், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதன் பின்னர் மீண்டும் இன்னொரு ரீமேக் முயற்சியில் இறங்கினார் ரஜினி. ‘கதபறயும் போள்’ என்கிற மலையாள திரைப்படத்தை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டார். ‘சந்திரமுகி’ போலவே இதுவும் வெற்றியடையக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். மலையாளத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த பாத்திரத்தில் பசுபதி நடித்தார். புகழ்பெற்ற நடிகராக மம்முட்டி ஏற்றிருந்த பாத்திரத்தை தமிழில் ரஜினி ஏற்றார். இந்தத் திரைப்படம், அடிப்படையில் ஒரு சராசரி நபருக்கும் அவரது இளமைப்பருவ நண்பராக இருந்து பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராக ஆனவருக்கும் இடையிலான உறவின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். சராசரி நபரின் கோணத்திலேயேதான் பெரும்பாலான திரைப்படமும் நகரும். மலையாளத்தில் மம்முட்டி சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் இது தமிழில் உருவாக்கப்படும் போது ரஜினிக்காக பல காட்சிகளும் வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இன்னொரு மலையாள சினிமாவை கொத்து பரோட்டா போட்ட புகழ் இயக்குநர் வாசுவிற்கு கிடைத்தது.

இந்தத் திரைப்படமும் தோல்வியடையவே மீண்டும் ஷங்கரிடம் அடைக்கலம் புகுந்தார் ரஜினி. துவக்கத்தில் கமலுக்காக உருவாக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம் சாத்தியமாகாமல் போகவே ரஜினிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வெகுசன திரைப்படத்தை உயர்தரத்தில் உருவாக்க விரும்பும் ஷங்கர், அதே சமயத்தில் சராசரி ரசிகனுக்குரிய பல அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். ஹாலிவுட்டிற்கு பழைய சமாச்சாரம் என்றாலும், ஒரு ரோபோட்டிற்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் என்பது தமிழ் சினிமாவிற்குப் புதியது என்பதாலும் ஷங்கரின் திறமையான இயக்கம் காரணமாக ‘எந்திரன்’ வணிகரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்ததாக மீண்டும் இன்னொரு தோல்விப்படம். ரஜினியின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘சுல்தானாக’ துவங்கி பிறகு கைவிடப்பட்டு ‘ராணா’வாக பரிணமித்து ரஜினியின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டு பிறகு ‘கோச்சடையனாக’ உருவானது. ஹாலிவுட்டைப் போன்று அனிமேஷன் திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான ரசிகர்களோ, வணிகச்சந்தையோ இந்தியாவில் இல்லை. சரியாக திட்டமிடப்பட்டிருந்தால் ‘கோச்சடையான்’ இந்தப் போக்கின் துவக்கப் புள்ளியாக அமைந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கக்கூடும். வெற்றிப்பட இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்” பிறகு வந்து இந்தத் திட்டத்தில் இணைந்தாலும், பல்வேறு குழப்பங்களால் ‘கோச்சடையான்’ தோல்விப்படமாக அமைந்தது. ரஜினியின் குடும்பம் நிதி சார்ந்த சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

தனது பிம்பத்தின் சரிவை சரிக்கட்டும் நெருக்கடியில் இருந்த ரஜினி, தனது அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைந்தார். விளைவாக ‘லிங்கா’ உருவானது.  இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற தம் விருப்பத்தை காவிரி நீர் விவகாரம் பற்றியெரிந்த ஒரு கணத்தில் தெரிவித்த ரஜினி, அந்தத் திட்டத்திற்காக கணிசமான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ‘லிங்கா’ திரைப்படமும் இது தொடர்பாக அமைந்தது. முல்லை பெரியார் அணை உருவானதற்கு பிரதான காரணமாக இருந்த ஜான் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயப் பொறியாளர் தொடர்பான வாழ்க்கைச் சம்பவங்களின் சாயல் இதன் திரைக்கதையில் இணைக்கப்பட்டது.

ஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அம்சங்கள் ‘லிங்கா’வில் இருந்தாலும் தேய்வழக்கு பாணியில் அமைந்த காரணத்தினாலேயே வணிகரீதியான வெற்றியை அடையவில்லை. இந்தத் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. உலக சினிமா உள்ளிட்ட மாற்று முயற்சிகளை பார்த்து வளர்ந்திருந்த இளைய தலைமுறை அப்போது பெருகி வந்திருந்தது. வெகுசன திரைப்படமென்றாலும் கூட அது வித்தியாசமாகவும் தரமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் அதிகரித்தது. இதனாலேயே தேய்வழக்கு பாணியில் அமைந்த சினிமாக்களையும் அதன் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து தீர்க்கும் பழக்கமும் பெருகியது. மேலும் திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் பெரும்பான்மை சதவீதமாக இளைஞர்களாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் வணிகரீதியான தோல்வி காரணமாக விநியோகஸ்தர்களின் கசப்புகளையும் ரஜினி தரப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஜினி தன் வயதை விட மிகக்குறைந்த நாயகிகளுடன் டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களில் சில சதவீதத்தினரே கூட விரும்பவில்லை. அமிதாப்பச்சனைப் பின்பற்றி ரஜினியும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இதுவும் ‘லிங்கா’வின் தோல்விக்கு ஒருவகை காரணமாக இருக்கக்கூடும்.


இந்தச் சூழலை ரஜினியும் உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவரது அடுத்த திரைப்படமான ‘கபாலி’யில், வழக்கமான போக்கை கைவிட்டு வயதான டானாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல வெற்றிப்பட இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது ‘இரஞ்சித்’ என்கிற இளம் இயக்குநரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்துக் கொண்டது புதிய மாற்றங்களை தேடி அவர் நகர்கிறார் என்பதை உணர வைத்தது. இதில் முக்கியமானதொரு மாற்றமும் உண்டு. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூச வேண்டும்’ என்று நிலவுடமைச் சமுதாய பெருமிதங்களைப் பேசும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ‘தலித்’ அரசியலை பிரதானமாக முன்வைக்கும் படத்தில் நடித்தது, அவரின் திரை பிம்பத்தில் உருவான முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அம்சங்களும் இருந்தன. இந்தச் சவாலை ரஜினி வெற்றிகரமாக தாண்டி வந்தார்.

‘கபாலி’யின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி அடுத்த திரைப்பட வாய்ப்பையும் இரஞ்சித்திற்கே அளித்தார். ஒரு பெருநகரின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக ஆக்கி நகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் ‘தூய்மை அரசியலை’ காலா மையப்படுத்தியது. ஆனால் இது ரஜினியின் திரைப்படமாகவும் அல்லாமல் இரஞ்சித்தின் அரசியல் சினிமாவாகவும் அல்லாமல் இருந்ததால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்ததால் அதிக வெற்றியை அடையவில்லை.

தனது சமீபத்திய திரைப்படத்தை, கார்த்திக் சுப்பராஜ் என்கிற இளம் இயக்குநரிடம் ஒப்படைத்ததில் இருந்து இளம் இயக்குநர்களின் மூளைகளையே ரஜினி அதிகம் நம்ப விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தானொரு தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் நெடுங்காலமாகவே கூறி வருகிறார். ஒரு நடிகரின் தீவிரமான ரசிகருக்கு சம்பந்தப்பட்ட நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சுவாரசியமான திருப்பம். ஒரு சராசரி ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் விஷயங்களோடு, இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் போக்குகளின் கலவையாக ‘பேட்ட’ இருக்கக்கூடும்.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 2.0. நீண்ட கால தயாரிப்பில் உள்ள இந்த திரைப்படம் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் வணிகம் பல கோடிகளைத் தாண்டி சாதனை புரிவதற்கும் அதன் சந்தை வெளிநாடுகளில் வளர்ந்து விரிந்து கொண்டே போவதற்கும் ரஜினியின் திரைப்படங்களே பிரதான காரணமாக இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.

**

ரஜினியின் அரசியல் நுழைவின் வரலாறு என்பது ஓர் அவல நகைச்சுவை நாடகத்திற்கான சிறந்த உதாரணம். ‘வரும்.. ஆனா வராது..’ என்கிற வசனத்திற்கேற்ப தன் அரசியல் வருகையை இத்தனை வருடங்களுக்கு இழுத்திருக்கக்கூடிய ஒரே நபராக ரஜினி மட்டுமே இருப்பார் என்று தோன்றுகிறது. அண்ணாமலை திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை கடுப்பேற்றதியதில் துவங்கிய உரசல், பா.ம.க.தலைவர் ராமதாஸூடன் தொடர்ந்து பற்றியெரியத் துவங்கியது. மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதான அதிருப்தியும் மக்களிடம் பெருகியது. இதன் காரணமாக ரஜினி அரசியலில் நுழைந்து ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுசமூகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் தீயில், தனது நீண்ட கால மெத்தனத்தின் மூலம் ரஜினியே நீர் ஊற்றி அணைத்தார். இன்னமும் கூட இந்த அபத்த நாடகத்தை அவர் தொடர்ந்து கொண்டேயிருப்பது துரதிர்ஷ்டமானது.  தன் அரசியல் பிரவேசத்தின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதையும் தனது திரைப்படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பயன்படுத்தி அதையும் ஒரு முதலீட்டாக்கிக் கொண்ட சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது.

சில பல விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சராசரி நபருக்கான முகத்தோற்றத்தைக் கொண்டவர், சினிமாத்துறையின் உச்சத்தை அடைந்து அதில் நீண்ட காலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினி. இன்னமும் கூட ரஜினி என்கிற பிம்பத்தின் மீதாக கவர்ச்சி பெரிதும் மங்கவில்லை. அவரது ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் மீதும் எழும் எதிர்பார்ப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப சினிமாவில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினியின் தொலைநோக்கு திறமையை பல சமயங்களில் பிரமிக்க முடிகிறது.

மாறி வரும் போக்குகளினாலும் ரஜினி என்கிற குதிரையின் வேகம் சற்று சுணங்கினாலும் அது முற்றிலுமாக குறைந்து விடவில்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை ஆமை வேகம் கூட இல்லை. நிஜத்திற்கும் நிழலிற்கும் வேறுபாடு அறியாத ரசிகர்கள் இருந்த காலக்கட்டங்கள் முடிந்து விட்டன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சினிமா, அரசியல் என்கிற இரட்டைச் சவாரியை கை விட்டு, தன்னுடைய பலமான சினிமாவில், பொருத்தமான பாத்திரங்களை ஏற்று நடித்தால் எஞ்சியிருக்கும் ரஜினியின் பிம்பம் மேலும் சேதமுறாமல் தப்பிக்கும். 

(இந்தியா டுடே - தமிழ் - ரஜினிகாந்த் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் எடிட் செய்யப்படாத வடிவம்) - நன்றி: இந்தியா டுடே


Image Courtesy: original uploader

suresh kannan

Friday, December 14, 2018

Shoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்






சென்னை சர்வதேச திரைவிழாவில் துவக்க நாளன்று பார்த்த ஜப்பானிய திரைப்படம் இது.

குடும்பம் என்கிற அமைப்பிற்குள் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது ரத்த சம்பந்தமில்லாத மனிதர்கள் இணைந்து வாழ்வதால் ஓர் அழகான குடும்பம் உருவாகிறதா என்கிற ஆதாரமான விஷயத்தை, சமகால ஜப்பானிய விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியில் இத்திரைப்படம் உரையாடுகிறது.

கேனஸ் திரைவிழாவில் அதன் மிக உயரிய விருதான ‘தங்கப் பனையோலை’ விருதைப் பெற்றிருக்கிறது. சற்று மெதுவாக நகர்வதால் சிலர் சலிப்படைந்திருக்கலாம். ஆனால் ஒரு நிலையில் படம் தன்னியல்பாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. தவறவிடக்கூடாத திரைப்படம்.

**

டோக்கியோ நகரம். நடுத்தர வயதுள்ள அந்த ஆசாமியும் ஒரு சிறுவனும் விற்பனை அங்காடியில் பொருட்களை வாங்குவது போல் பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள். காவலாளிக்குத் தெரியாத படி அந்த ஆசாமி மறைத்துக் கொள்ள பின்புறமுள்ள பையில் சில பொருட்களை திணித்துக் கொள்கிறான் சிறுவன். இருவரும் உல்லாசமாக சிரித்தபடி வெளியே வருகிறார்கள். சிறுவனுக்கு பிரியமாக தின்பண்டம் வாங்கித் தருகிறார் அவர்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் அழுது களைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியைக் காண்கிறார்கள். குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவளுடைய கையில் காயங்கள். அவளையும் இணைத்துக் கொண்டு புறாக்கூண்டு போன்ற தங்களின் குறுகிய வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

திருடி வந்த பொருட்களை குடும்பமே ரசித்து உண்கிறது. “யாரு..இந்தப் பொண்ணு.. ஏன் கூட்டி வந்தே.. நமக்கு ஏதாவது பிரச்சினை வந்துடப்போகுது” என்று எவரோ எச்சரித்தாலும் பிறகு அந்தச் சிறுமியும் மெல்ல அந்தக் குடும்பத்துடன் ஒன்றிப் போகிறாள்; அதன் செல்ல உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்படுகிறாள்.

பென்ஷன் வாங்கும் பாட்டி, சலவையகத்தில் பணிபுரியும் பெண், சிறுவனுடன் இணைந்து பொருட்களை திருடும் நேரம் போக கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஆசாமி, பாலியல் தொழிலில் ஈடுபடும் ஓர் இளம்பெண் ஆகியோரோடு புதிய உறுப்பினரான இளம் சிறுமியும் சேர்ந்தது அந்தக் குடும்பம் என்பது பிறகு பயணிக்கும் கவித்துவமான காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. வறுமை ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சிக்கும் பரஸ்பர மதிப்பிற்கும் குறைவில்லாத குடும்பம். சில செல்லச் சிணுங்கல்கள், விரோதங்கள் துவக்கத்தில் இருந்தாலும் சிறுமியை தன் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறான் சிறுவன்.

ஆனால் அது ரத்த உறவுள்ள குடும்பம் அல்ல, ஒவ்வொருவருமே வெவ்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்பட்டு தற்செயலாக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பவர்கள் என்பது மெல்லத் தெரிய வருகிறது.

மகிழ்ச்சிகரமான தருணங்களாகவே இருந்தாலும் அவற்றிற்கும் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி உண்டுதானே? கடையில் திருடும் சிறுவன் காவல்துறையினரிடம் பிடிபட, அவர்கள் சிறுமியை ‘கடத்தி’ (?!) வைத்திருக்கும் குற்றத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள். கிழவி இறந்து போயிருந்தாலும் அவளுடைய பிணத்தை வீட்டிலேயே புதைத்து வைத்து பென்ஷன் பணத்தை தொடர்ந்து வாங்கும் குற்றம் வேறு பட்டியலில் இணைகிறது. குடும்பத்தின் தலைவி அனைத்தையும் ஒப்புக் கொண்டு சிறைக்குப் போகிறாள். கைவிடப்பட்ட சிறார்களின் முகாமில் சிறுவன் சேர்க்கப்பட நடுத்தரவயது ஆசாமி தனியனாகிறான். அன்பும் அரவணைப்பும் நிலவிய அந்தக் குடும்பம் சிதறிப் போகிறது.

**

திருமணம் எனும் நிறுவனத்தின் வழியாக உருவாகி வரும் அமைப்பைத்தான் குடும்பம் என்று சட்டமும் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சில தனிநபர்கள், பரஸ்பர அன்பினால் தற்செயலாக ஒன்றிணைவதை ‘குடும்பமாக’ சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த ஆதாரமான முரணே படத்தின் மையம் என்பதாக உணர்கிறேன்.

நடுத்தரவயது ஆசாமி, சிறுவன் ஒருமுறையாவது தன்னை ‘தந்தை’ என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக தொடர்ந்து முயல்கிறான். ஆனால் உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அதைச் சொல்ல விடாதவாறு ஏதாவொன்று சிறுவனைத் தடுக்கிறது. நிரந்தரமான பிரிவு ஏற்படும் இறுதிக்காட்சியில், பேருந்தின் பின்னாலேயே ஓடிவரும் அவரைக் கண்டு கலங்கி ‘அப்பா’ என்று அவன் மனதுக்குள் முனகிக் கொள்வதில்தான் அது நிறைவேறுகிறது. என்றாலும் அவர் அதை அறிந்தாரா என்று தெரியவில்லை.

இதைப் போலவே புதிய உறுப்பினரான சிறுமியை தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறாள் வீட்டின் மூத்த பெண். குடும்ப வன்முறைக்குள் சிக்கி மனக்காயமும் உடல் காயங்களும் ஏற்பட்டிருக்கும் அந்தச் சிறுமியை அந்தக் குடும்பமே ஒன்றிணைந்து தேற்றி தூக்கி நிறுத்துகிறது. ஆனால் சட்டத்தின் பார்வையில் இவர்கள் ‘கடத்தல்காரர்களாக’ தென்படுகிறார்கள்.

படத்திற்குள் சில அபாரமான தருணங்கள் உள்ளன. முன்னாள் கணவனின் மூலம் பெண்ணின் கையில் ஏற்பட்ட காயத்தையும், தந்தையால் சிறுமியின் கையில் ஏற்பட்ட காயமும் ஒரே பிரேமில் காட்டப்படும் போது அவை பெண்ணினம் எதிர்கொண்டிருக்கும் பல்லாண்டு கால அவலத்தின் சாட்சியமாக நிற்கின்றன.

இது விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் எந்தவொரு இடத்திலும் மிகையான அழுகையாய், ஓலமாய் ஆகிவிடவில்லை என்பதே பெரும் சமானத்தை தருகிறது. அது போன்ற விகாரங்கள் எங்கும் இல்லை. அவர்களின் கொண்டாட்டங்களும் பரஸ்பர அன்பு வெளிப்படும் காட்சிகளும் மிகையின்றி கலையமைதியுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கடற்கரையில் அவர்கள் பொழுதைக் கழிக்கும் காட்சியும், வீட்டின் அந்தரத்திற்கு மேலே எங்கோ பொங்கிச் சிதறும் வாணவேடிக்கையின் வெளிச்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் கொண்டாடும் காட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

வீட்டின் மூத்த பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. பணியாளர்களில் இருவரில் ஒருவரை மட்டுமே பணியில் வைத்திருக்க முடியும் என்கிற அசந்தர்ப்பமான சூழல். ‘தனக்கு ஏன் இந்தப் பணி அவசியம்’ என்பதை இருவரும் விவாதிக்கிறார்கள். “நீ அந்தச் சிறுமியை வீட்டில் வைத்திருப்பதை வெளியே சொல்லி விடுவேன்” என்கிற வெடிகுண்டை வீசுகிறாள் இன்னொருத்தி. அந்தச் சம்பளம் கிடைக்காவிட்டால் நிதிச்சுமை அதிகரிக்கும்தான். இருந்தாலும் சிறுமியை பாதுகாப்பதற்காக தன் பணியை தியாகம் செய்கிறாள் அவள்.

ஆசிய நாடுகள் என்றாலே பிச்சைக்காரர்களும் பாமரர்களும் நிறைந்திருப்பார்கள் என்கிற மேலைய நாட்டினரின் பொதுப்புத்தியைப் போலவே, உழைப்பிற்குப் பெயர் போன ஜப்பான் போன்ற முன்னேறிய நாட்டில் பிச்சையெடுப்பவர்களும் உதிரித் திருடர்களும் இருப்பார்களா என்பது நம்மிடையே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவிலும் மாடமாளிகைகளுக்கு இடையே சேரிகளும் இருக்கிற முரண்கள் எப்போதும் இருக்கின்றன. உலகமயமாக்கத்திற்குப் பிறகு இந்தப் பொருளாதார இடைவெளிகள் இன்னமும் அகன்றபடி பயணிக்கின்றன.

படத்தின் சிறப்பான ஒளிப்பதிவு, எங்கு சாவகாசமாக நீள வேண்டுமோ அங்கு நீண்டும் சுருக்கமான நகர வேண்டிய இடங்களில் தவளைப் பாய்ச்சலுடன் குறுகியும் நகர்கிற எடிட்டிங், உறுத்தாத பின்னணி இசை போன்ற நுட்பங்கள் இந்த திரைப்படத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன.

Nobody Knows, Like Father, like Son போன்ற சிறப்பான திரைப்படங்களை இயக்கிய Hirokazu Kore-eda இதை அற்புதமாக இயக்கியிருக்கிறார். குழந்தைகளின் அக உலகமும் குடும்ப உறவுகளின் சிக்கல்களும் அதன் சுவாரசியங்களும் இவருடைய திரைப்படங்களின் நிரந்தர கருப்பொருளாக இருக்கும். Shoplifters-ம் அந்தப் பாதையில் அபாரமாக பயணிக்கிறது.




suresh kannan

Thursday, December 13, 2018

இரு தந்தைகள் - Toni Erdmann (2016)







தந்தை - மகளைப் பற்றிய திரைப்படம். விநோதமான திரைக்கதையைக் கொண்டது. ஜெர்மனி-ஆஸ்ட்ரியா தயாரிப்பு. ஆஸ்கர் விருதிற்காக நாமினேஷன் ஆனது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது  நம்முடைய இயந்திர வாழ்வின் பரபரப்பிற்கு இடையில்  நெருங்கிய உறவுகளை மட்டுமல்லாது  நகைச்சுவை உணர்வையும் கூட தொலைத்து விடுகிறோம் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டும் திரைப்படம்.


***

Winfried Conradi ஓய்வு பெற்ற இசை ஆசிரியர். விவாகரத்து ஆனவர். தன் வயதான தாயுடன் தனிமையில் வாழ்பவர். விநோதமான குணாதிசயத்தைக் கொண்டவர். பொய்ப்பல் மாட்டிக் கொண்டு, விசித்திரமான ஒப்பனை அணிந்து கொண்டு மற்றவர்களை விளையாட்டாக பயமுறுத்துவது வழக்கம். நல்லவர்தான். ஆனால் சமயம் சந்தர்ப்பமில்லாமல் வெள்ளந்தியாக இவர் சொல்லும் 'ஜோக்'  விவஸ்தையற்று இருக்கும். மற்றவர்கள் அதை தவறாக எடுத்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம்.

ஊரில் இருந்து வந்திருக்கும் தன் மகள் இனஸை காணச் செல்கிறார் கிழவர். அவளோ மொபைல் போனில் பேசிக் கொண்டே இருக்கிறாள். 'அடுத்த வாரம் உன் ஊருக்கு வருகிறேன். அங்கு சந்திக்கிறேன்' என்று கிளம்பி விடுகிறார். இனஸ் ஓர் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரியும் பொறுப்பான அதிகாரி. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவள். அவளுடைய அலுவகத்தின் வாசலிலேயே காத்திருக்கிறார் கிழவர். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகே மகள் வருகிறாள். அவள் பார்வையில் படுவது போல செல்கிறார். கோக்குமாக்கான கோலத்தில் நின்று கொண்டிருக்கும் இவரை அவள்  பாராதது போல் சென்று விடுகிறாள்.

ஏமாற்றமடையும் கிழவர்  வெளியே போகும் போது மகளுடைய உதவியாளினி ஓடி வருகிறாள். மகள் செய்திருக்கும் ஏற்பாட்டின் படி ஹோட்டலில் தங்குகிறார். மாலையில் மகள் வந்து  கேட்கிறாள். "காலைல ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா?". கிழவர் தன் வழக்கப்படி 'நீ ஒரு  மனுஷிதானா?" என்று கேட்க மகளுக்கு முகம் சுருங்கிப் போகிறது. 'சும்மா தமாசுக்கு சொன்னேன்' என்று அவர் சொன்னாலும் அந்த உறவிற்குள் சிறிய நெருடல் நுழைகிறது.

'இப்ப நான் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு போறேன். என் வாழ்க்கையோட எதிர்காலமே இதுல இருக்கு. தயவு செய்து அங்க வந்து எதையும் சொல்லித் தொலைக்காதீங்க" என்கிறாள் இனஸ். மண்டையை ஆட்டிய படி வரும் கிழவர், அந்த முக்கியமான அதிகாரியிடம் வழக்கம் போல் எதையோ சொல்லி விட்டு பின்பு விழிக்கிறார். ஆனால் அந்த அதிகாரிக்கு கிழவரை பிடித்துப் போகிறது என்பது ஆச்சரியம்.  'கிழவர் எப்போது ஊருக்கு கிளம்புவார்' என்று மகளுக்கு எரிச்சலாகிறது.

மறுநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளை எழுப்புகிறார் தந்தை. பதறிப் போய் எழுந்திருக்கும் அவள் 'ஏன் முன்னமே எழுப்பவில்லை' என்று கத்துகிறாள். அன்று அவளுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அவள் கத்துவதை திகைப்புடன் பார்க்கும் கிழவர் அன்றே ஊருக்கு கிளம்புகிறார். உள்ளூற எழும் நிம்மதியுடன் தந்தையை அனுப்பி வைத்தாலும் குற்றவுணர்வினால் அழுகிறாள் மகள்.

***

ஹோட்டலில் தன் தோழிகளுடன் இனஸ் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் அந்த உரையாடலில் குறுக்கிடுகிறார். அவரைப் பார்த்து இனஸ் திகைத்துப் போகிறாள். அது அவளது தந்தையேதான். ஊருக்கு அனுப்பி வைத்த ஆசாமி, கோட், சூட் போட்டுக் கொண்டு தலையில் கருப்பு விக்கை மாட்டிக் கொண்டு விநோதமான தோற்றத்தில் இருக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காட்டிக் கொள்வதில்லை. 'ஏன் இப்படிச் செய்கிறார்' என்று இனஸூக்கு குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.

இனஸின் பணியில் சில சிக்கல்கள் நேர்கின்றன. அதையெல்லாம் அவள் சமாளித்தாக வேண்டும். இதற்கு நடுவில் கிழவர் வேறு இவள் எங்கெல்லாம் செல்கிறாளோ தானும் அங்கெல்லாம் வருகிறார். இவளுடைய தோழிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ஏதேதோ பேசுகிறார். அவரை தனிமையில் மடக்கும் இனஸ் "அப்பா.. ஏன் இப்படிச் செய்யறீங்க?' என்று கேட்க 'ஸாரி.. நீங்க யாருன்னு தெரியல' என்று நழுவுகிறார். அவருடைய வழியிலேயே சென்று தானும் அந்த ஆட்டத்தை ஆடிப் பார்ப்பது என்று இனஸ் தீர்மானிக்கிறாள்.

தன்னுடைய அலுவலக பணிக்காக செல்லும் போது கிழவரையும் அழைத்துக் கொண்டு போய் நாடகமாடுகிறாள். பிறகு அவளுக்கே அது குறித்து சிரிப்பு வருகிறது. அந்த இடத்தில் கிழவர் ஜபர்தஸ்தாக ஒருவரை விசாரிக்க அவருடைய பணியே பறிபோகும் ஆபத்து ஏற்படுகிறது. மகளை திடீரென்று அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு செல்லும் கிழவர் அவளை 'தன்னுடைய உதவியாளினி' என்று சொல்கிறார்.  இப்படியொரு இருவருக்குள்ளும்  பரஸ்பர கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது.


***

இனஸின் அலுவலக விஷயமாக அவளுக்கு சிக்கல்களும் மனஉளைச்சல்களும் ஏற்படுகின்றன. தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டியில் அவள் விநோதமாக நடந்து கொள்கிறாள். பிரம்மாண்டமான விசித்திர உருவம்  ஒன்று வீட்டுக்குள்  நுழைவதைக் கண்டு இனஸ் முதலில் பயந்தாலும் அது தன் தந்தையின் விளையாட்டுத்தனம் என்று பிறகு தெரிகிறது. அந்த நேரத்தில் அந்தக் குறும்பு அவளுக்கு தேவையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. கண்ணீருடன் தன் தந்தையைக் கட்டியணைத்துக் கொள்கிறாள்.

சில நாட்கள் கழித்து தன்னுடைய பாட்டியின் மரணத்தின் போது தந்தையை சந்திக்க நேர்கிறது. 'வாழ்வின் ஒவ்வொரு சாத்தியமான நொடியையும் நகைச்சுவையுடன் கழிக்க முயல்வதுதான் இந்த பரபரப்பான உலகத்தை எதிர்கொள்வதற்கு அவசியமானது' என்கிற படிப்பினை அவளுக்கு கிடைக்கிறது. தனது தந்தையைப் போல தானும் ஒரு குறும்பை இனஸ் செய்வதுடன் படம் நிறைகிறது.


ஜெர்மனியைச் சேர்ந்த பெண் இயக்குநரான Maren Ade உருவாக்கிய இந்த திரைப்படத்தில் கிழவராக Peter Simonischek மற்றும் மகளாக Sandra Hüller அற்புதமாக நடித்திருக்கிறார்கள். 


suresh kannan

Saturday, September 08, 2018

மேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'







மேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆவணப்படம் என்றாலே ‘பீகாரில் வெள்ளம்’ என்கிற பொதுப்புத்தி ஒவ்வாமையுடன் இருக்கும் நமக்கு இது போன்ற முயற்சிகள் மனவிலகலைத் தருகின்றன என்று யூகிக்கிறேன். கலைப்படங்கள் என்றால் சுவாரஸ்யமற்ற நிதானத்தில் நகர வேண்டும் என்கிற போலித்தன்மையோடு சில முதிராமுயற்சிகளும் இருக்கின்றதான். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையை நிச்சயம் இதில் சேர்க்க முடியாது.

இதில் சித்தரிக்கப்படும் கலாசாரமும் மண்ணும் மக்களும் எனக்கு மிக அந்நியமானவை. என்றாலும் இந்த திரைப்படத்தை சுவாரசியத்தோடு பார்க்க முடிந்தது. ஏனெனில் மானுட குலத்தின் ஆதார உணர்ச்சியை இது பேசுகிறது. கலாசார வித்தியாசங்களைத் தாண்டி, நுண்ணுணர்வுள்ள எந்தவொரு பார்வையாளரும் இத்திரைப்படத்தை நெருக்கமாக உணர முடியும்.

ஏலக்காய் மூட்டை மலையில் இருந்து விழும் காட்சி அவலச்சுவையில் அமைந்த நாடகத் தருணம். என்றாலும்  எளிய மக்களின் வாழ்வில் துயரத்தின் சாயல் தொடர்ந்து வருவதால்தான் ‘பட்ட காலிலே படும்’ போன்ற பழமொழிகள் உருவாகியிருக்கின்றன.

இந்தத் துயரத்திற்கு இடையேயும் சில கொண்டாட்டத் தருணங்களும் இருக்கின்றன. கங்காணியை கிண்டல் செய்யும் தொழிலாளர்கள், அவர்களை கொலைவெறியுடன் துரத்தும் கங்காணி போன்றவை கலாசார வேறுபாடின்றி அனைத்து எளிய மக்களின் இடையேயும் காணக்கூடிய நையாண்டி தருணங்கள்.

எவரிடமும் இரக்கத்தைக் கோராமல் சொந்த நிலம் வாங்கத் துடிக்கும் ஒரு சாதாரண விவசாயி, அதில் தொடர்ந்து தோற்றுப் போய் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் செக்யூரிட்டியாக, உதிரிபாகமாக சுருங்கிப் போகும் அவலம்தான் இந்த திரைப்படத்தின் மையம். கலங்க வைக்கும் திரைப்படத்தின் இறுதிப்பகுதி இதைத்தான் உணர்த்துகிறது.

நகரவாசிகளால் எத்தனை தூரத்திற்கு இந்த அவலத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. நாம் தினமும் மேஜையில் காணும் உணவு வானத்திலிருந்து வந்ததல்ல. கணினியில் இருந்து download செய்யப்பட்டதல்ல. அதற்குள் முகம்தெரியாத விவசாயியின் வியர்வை இருக்கிறது. அடிப்படையான விஷயத்தை தினம் வழங்கும் அவர்களை அரசு இயந்திரம் முதற்கொண்டு எவருமே மனிதராக மதிப்பதில்லை.

ரங்கசாமி தன் வருங்கால மனைவியைச் சந்திக்கும் எவ்வித மிகையுணர்ச்சியும் இன்றி மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே பாரதிராஜாவாக இருந்தால் எத்தனை கொனஷ்டைகள் செய்திருப்பார் என்று அந்தக் கணத்தில் தோன்றியது. (அதையும் ரசித்தோம் என்றாலும்).

இந்த திரைப்படத்தில் பல விஷயங்கள் சப் –டெக்ஸ்ட்டாக உறுத்தல் இல்லாமல் பிரச்சாரத் தொனியில்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. குறுவிவசாயிகளின் குருதியை உறிஞ்சுக் குடித்து கொழுக்கும் பன்னாட்டு உரக்கம்பெனிகள் முதல் போலி கம்னியூஸ்டுகள் வரை பலதரப்பட்ட மனிதர்கள் இதில் உலவுகிறார்கள்.

ஒரு நிலப்பரப்பின் தன்மைதான் அங்கு வாழும் மக்களின் குணாதிசயமாக படிகிறது. மலை என்பது பொறுமைக்கும் தியானத்திற்குமான குறியீடு. ஓரிடத்தைக் கடப்பது என்பது எத்தனை சிரமமானது என்பது அங்குள்ளவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ஒருவருக்கொருவர் மிக இயல்பாக உதவிக் கொள்கிறார்கள். (இங்குள்ள மக்கள் பெரும்பாலும் ஏன் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இதில் பதில் இருக்கலாம்).

இயக்குநர் லெனின் பாரதி பிரக்ஞைபூர்வமாகவே இதை ஆவணப்படத்தின் சாயலுடன் உருவாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நிலையான காட்சிகளுடன் காமிரா விலகியிருந்து அவர்களைக் கவனிக்கிறது. நமக்கு எதையோ உணர்த்த முயல்கிறது. தேனி ஈஸ்வரின் காமிரா அழகுணர்ச்சியுடன் காட்சிகளை பதிவு செய்திருந்தாலும் மணிரத்தினம் திரைப்படங்களைப் போல எதையும் ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ஆச்சரியகரமாக இளையராஜாவின் இசை அடக்கி வாசிக்கிறது. அவசியமான இடங்களில் மட்டும் ஒலித்து ஆத்மார்த்தமான உணர்வை கிளப்புகிறது.

இன்னமும் விரிவாக பேசப்பட வேண்டிய திரைப்படம் இது. அதன் முன்னோட்டம்தான் இந்தப் பதிவு. தமிழ் சினிமாவின் பாதையில் முக்கியமான மைல்கல்லை நட்டிருக்கும் லெனின் பாரதிக்கு அன்பும் நன்றியும். ஏறத்தாழ சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’க்கு நிகரான படைப்பாக ‘மேற்குத் தொடர்ச்சி மலையை’ சொல்வேன். எளிய மக்களின் துயர வாழ்வு எத்தனை எழுதினாலும் தீர்க்கப்பட முடியாத அவலத்தைக் கொண்டது.


suresh kannan

Thursday, June 14, 2018

RED SPARROW (2018 ) உளவும் கற்று மற





‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்தியாசமானது. உளவுத்துறையில் இயங்குபவர்கள் எந்நேரமும் எதிர்கொள்ள வேண்டிய உயிராபத்து, இதில் உள்ள பயங்கரம், சோகம், துரோகம் ஆகிய பரிதாபங்களை சிறப்பாக இத்திரைப்படம் சித்தரித்திருக்கிறது. குறிப்பாக பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேக சிக்கல்களும் வலிகளும் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருந்தன.

Dominika சிறந்த பாலே டான்சர் ஆவதை தன் கனவாகவும் லட்சியமாகவும் கொண்டிருப்பவள். அதில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போது சக நடனக்காரர்கள் செய்யும் துரோகத்தால் விலக்கப்படுகிறாள். நோயாளியான தன் அம்மாவை பராமரிக்க வேண்டிய சிக்கல். ரஷ்ய உளவுத்துறையில் பணியாற்றும் அவளுடைய மாமா, அத்துறையில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி அறிந்திருந்தும் அதில் தள்ளி விடுகிறார். திரும்ப முடியாத ஒரு சுழலில் Dominika விழுகிறாள்.

தரப்பட்டிருக்கும் இலக்கை வசீகரித்து ரகசியங்களைக் கறப்பது இவளுடைய பணி. இதற்கான பயிற்சி முகாம் காட்சிகள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன. தனிநபரின் நுண்ணுணர்வுகளை மொத்தமாக அழித்து, இதை நிதானமான கச்சிதத்துடன் தொழிற்முறை வகுப்புகள் போல் சொல்லித் தருகிறார்கள்.

தன் புதிய இலக்காக அமெரிக்க உளவு ஆசாமியை சந்திக்கிறாள் Dominika. ஓர் சந்தர்ப்பத்தில் அவனுடன் காதலில் விழுகிறாள். பிறகு நேரும் சில சிக்கலான சூழல்கள் காரணமாக தன் சொந்த நாட்டிலேயே கடுமையாக துன்புறுத்தப்படுகிறாள். தன் பழிதீர்த்தலை நிகழ்த்தி அவள் எப்படி மூர்க்கமாக முன்னேறுகிறாள் என்பதை இறுதிக்காட்சிகள் விளக்குகின்றன.

**

எந்தவொரு படைப்பு என்றாலும் அது எந்த தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அடிப்படையாக கவனிப்பது என் வழக்கம். அந்த வகையில் இந்த ‘அமெரிக்க’ திரைப்படத்தைக் கவனிக்கலாம். உளவுத்துறையின் இயக்கங்கள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன என்பதை இத்திரைப்படம் உறுதிப்படுத்துகிறது. இரு வல்லரசு நாடுகளுக்கிடையேயான பனிப்போர் இன்னமும் ஓயவில்லை என்பதையும் தங்களின் போட்டி நாடுகளைக் கண்காணிக்க, வளர்ந்த நாடுகள் எந்த நிலைக்கும் செல்லும் பயங்கரத்தையும் படம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

Dominika-ஆக நடித்திருக்கும் ஜெஃனிபர் லாரன்ஸின் நடிப்பு அபாரம். ஒளிப்பதிவு, அற்புதமான பின்னணி இசை, இயக்கம் என்று ஒவ்வொரு துறையிலும் விற்பன்னர்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். முன்னாள் சிஐஏ அதிகாரி எழுதிய நாவலையொட்டி உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதால் காட்சிகளும் இதன் மையமும் நம்பகத்தன்மையோடு அமைந்திருக்கின்றன. சற்று நிதானமாக நகரும் திரைப்படம். அதுதான் இதன் அழகே. வழக்கமான சாகசங்களை எதிர்பார்ப்பவர்கள் தவிர்த்து விடலாம். 

suresh kannan

Tuesday, April 03, 2018

ரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்



நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகத்தான். அந்த விஷயம் ஒருமாதிரியாக அட்டகாசமாக நிகழ்ந்தது என்றாலும் இதற்காக படத்தின் இன்னபிற அபத்தங்களை சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தது கொடுமையான அனுபவமாக இருந்தது. சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்த்து வழக்கமான தேய்வழக்கு சினிமாவாக இருந்தது ‘ரங்கஸ்தலம்’. இது எப்படி வணிகரீதியான வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி போன்ற திரைப்படங்கள் ஒருபக்கம் தெலுங்கு சினிமாவை முன்னகர்த்திக் கொண்டு வரும் போது ரங்கஸ்தலம் போன்ற கிளிஷேக்கள் பின்னகர்த்துகின்றன.

படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் தோழி சமந்தாவின் பங்களிப்பைப் பற்றி பின்வரும் பத்திகளில் பார்த்து விடலாம்.

சமந்தா ஒரு பேரழகி, தேவதை என்கிற விஷயமெல்லாம் ஊர் அறிந்ததுதான். தன் சினிமா ஒப்பனைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு எண்பதுகளின், கிராமத்துப் பெண்ணின் எளிமையைப் பூசிக் கொண்டு இயல்பான தோற்றத்தில் வருகிறார். ஒப்பனையின்மை என்கிற விஷயம் கூட தோழியின் அழகைக் குறைக்க முடியவில்லை என்பதுதான் சிறப்பு.

குணா படத்திற்காக என்று நினைவு. சிவாஜி கமல்ஹாசனை இவ்வாறு பாராட்டினார். ‘அழகா இருக்கற ஒரு நடிகன், ஒரு பாத்திரத்திற்காக தன்னை அவலட்சணமா காட்டி நடிக்க முன்வர்றான்னா.. அவன்தான் சிறந்த கலைஞன்”. அந்த வகையில் சமந்தா ஓர் அபாரமான கலைஞி எனலாம்.

ஒரு நடிகையின் வணிகச் சந்தையும் அதன் மதிப்பும்  அவருடைய திருமணத்திற்குப் பிறகு முற்றிலும் கீழிறிங்கி விடுவது இந்தியா போன்ற கலாசார சூழலில் வழக்கமானது. ஒரு சராசரியான இந்திய ஆணின் உளவியல் சிக்கலுக்கும் இது போன்ற போக்குகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவளிடமிருந்த ‘ஏதோவொன்று’ காணாமல் போய் விட்டது என்று சராசரி ஆண் கருதுகிறான். எதையோ இழந்ததாக அவன் கருதுவதே இது போன்ற நிராகரிப்புகளுக்கு வந்து சேர்கிறது. ‘பிறன் மனை நோக்கான்’ என்றெல்லாம் இதை ஜல்லியடிக்கக்கூடாது. எதிலும் புதியதைத் தேடும் ஆதிக்க மனதின் சிக்கல் இது. இதையே திரைப்படத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கருதுகிறார்கள். பார்வையாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார்கள். அதையெண்ணி அச்சப்பட்டு திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அத்தை வேடம் தரவே தயாராக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த மரபை உடைத்த நடிககைகள் மிகச் சொற்பமே. அந்த வரிசையில் கம்பீரமாக இணைந்திருக்கிறார் சமந்தா. இந்த திரைப்படத்திற்கும் நடிகை தேர்வின் போது மேற்குறிப்பிட்ட மாதிரியான இடையூறுகளை இயக்குநர் எதிர்கொண்டிருக்கிறார். நடிகர் சிரஞ்சீவிதான் சமந்தாவின் தேர்வு குறித்து நம்பிக்கையளித்ததாக சொல்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னரும் சமந்தாவின் பிம்பம் துளியும் குறையாமல் இருப்பது, பார்வையாளர்கள் அவர் மீது வைத்துள்ள பிரியத்தைக் காட்டுகிறது. இத்திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி அவரை ரசிக்கிறார்கள்.

அவருடைய நடிப்புத் திறமையை இயக்குநர் வலிமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது பெரிய குறை. இந்தியச் சினிமாவின் சராசரியான நாயகி போலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதையும் மீறி தன் பங்களிப்பில் சமந்தா ஜ்வலிப்பதுதான் சிறப்பு. இடுப்பின் அபாரமான வளைவுகளும் ஆபத்தான இறக்கங்களும் நாபியின் பேரழகும் நமக்குள் சில சங்கடமான உணர்வுகளை உற்பத்தி செய்கின்றன.

அவர் காட்சியளிக்கும் ஒவ்வோரு பிரேமிலும் மற்ற நடிகர்களை கவனமாகத் தவிர்த்து விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட் சட்டென்று விதம் விதமாக அவருடைய முகபாவங்களை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய அழகை அள்ளி அள்ளி மனதிற்குள் நிரப்பிக் கொள்ள முயற்சித்தேன். பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்பட்ட பூனையின் பேராசை போலவே அது அமைந்தது.

**

ராம் சரணின் திரைப்படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இதுவரை பெரும்பாலும் வழக்கமான மசாலா கதாநாயகனாகவே நடித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். ரங்கஸ்தலத்தில் ஒரு வெகுசன திரைப்படத்தின் நாயக எல்லைக்குள் நின்று திறம்பட இயங்கியிருக்கிறார். நாயகனை மிகையான சூப்பர் ஹீரோவாகவே சித்தரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இருந்து விலகி செவிக்குறைபாடு உள்ள பாத்திரமாக இதில் காட்டியதே ஓர் ஆறுதலான முயற்சி எனலாம். இந்தச் சந்தர்ப்பத்தை இயன்றவரை ராம்சரண் நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலும் அவர் வெளிப்படுத்தும் ஒரே மாதிரியான முகபாவங்கள் சலிப்பூட்டுகின்றன.

எண்பதுகளின் காலக்கட்டத்தில் படம் இயங்குவதால் அது சார்ந்த பின்னணி விஷயங்கள் திறமையாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் நாயகன் எழுந்ததும் ஒரு டப்பாவைத் திறந்து வெள்ளைப் பொடியைக் கொட்டுவார். “ஏன்யா இந்தாள் எழுந்தவுடனேயே மூஞ்சிக்கு பவுடர் போடப் போகிறான்?” என்று வியந்தேன். அது அக்காலக்கட்டத்தில் பல் விளக்கும் கோல்கேட் பவுடர். பற்பசை உபயோகத்திற்கு மாறி நீண்ட காலமாக விட்டதால் இது சட்டென்று மறந்து போயிருந்தது. இது போன்ற கலை இயக்கம் சார்ந்த சின்னச் சின்ன விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு முக்கியமானது. சோளக்காட்டில் நிகழும் துரத்தல்களும் சண்டைக்காட்சிகளும் தொடர்பான ஒளிப்பதிவு அபாரம். போலவே அந்த நிலப்பரப்பின் அழகியலும் செம்மண் புழுதியும் சிறப்பாக பதிவாகியிருந்தன.

ஒரேயொரு ‘டண்டணக்கா’ மெட்டை வைத்துக் கொண்டு பல காலமாக ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் DSP. ஆந்திரர்களுக்கு இன்னமும் இது சலிக்கவில்லையோ என்னமோ. ‘ரங்கம்மா.. மங்கம்மா’ என்கிற பாடல் மட்டும் சற்று கவனத்தை ஈர்க்கிறது. மற்றதெல்லாம் டப்பாங்குத்துதான். காது வலிக்கிறது. நாயகனைப் போலவே பார்வையாளர்களும் செவிக்குறைபாடு உள்ளவர்கள்  என்று  இசையமைப்பாளர்கள் நினைத்துக் கொண்டது போல பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிகையான சத்தம்.

ஜெகபதி பாபு, பிரகாஷ் போன்றவர்கள் எத்தனையோவாவது முறையாக தாங்கள் சலிக்க சலிக்க செய்த வில்லன் பாத்திரத்தை இதிலும் தொடர்கின்றனர். அதிலும் பிரகாஷ்ராஜின் ஒப்பனையெல்லாம் கொடுமை.


கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு வருடக்கணக்காக தினமும் சவரம் செய்தும் முகத்திற்கு பவுடர் போட்டும் குணப்படுத்தி விடுகிறார் நாயகன். இது போன்ற நகைச்சுவைகள் திரைக்கதையின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றன. மிக எளிதாக யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ். இதற்கு அத்தனை பில்டப் தந்திருக்க வேண்டியதேயில்லை. ஏன் இத்திரைப்படத்தை  180  நிமிடங்களுக்கு இழுத்திருக்கிறார்கள் என்கிற மர்மம் பிடிபடவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில்தான் சிறிதாவது வேகம் எடுக்கிறது. முதற்பகுதியின் பல காட்சிகள் வீண்.

தன்னைக் கடித்து தப்பிய பாம்பினை நாயகன் தேடும் காட்சியை பல நிமிடங்கள் கழித்து வில்லனோடு இணைப்பது, நாயகனின் செவிக்குறைபாட்டை நகைச்சுவையாகவும் தீவிரமாகவும் உபயோகித்தது போன்று சில விஷயங்கள் மட்டுமே இந்த சலிப்பான திரைக்கதையில் ஆறுதலான விஷயங்கள். சமந்தா எடுத்து வரும் உணவை, ராம்சரணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் உரிமையாக கைப்பற்றிக் கொள்ளும் காட்சி ‘விக்ரமன்தனமாக’ இருந்தாலும் கவர்ந்தது.

கிராமத்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஊரையே ஆட்டிப் படைக்கும் பண்ணையார்த்தனத்தை சற்று தாமதமாகவேனும் நாயகன் எதிர்க்கும் பல படங்களில் ரங்கஸ்தலமும் ஒன்று. நவீன நுட்பத்தின் வழியாக ‘வித்தியாசமான’ படம் என்கிற பாவனையில் பழைய வடையையே சுட முயன்றிருக்கிறார்கள். வேறு ஒன்றும் புதிதாக இல்லை. சமந்தாவின் தரிசனம் மட்டுமே ஆறுதல்.

suresh kannan

Saturday, March 10, 2018

வடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’





வடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்லை ‘சென்னை’யுமில்லை, ஒரு சுக்கும் இல்லை. வடசென்னையின் எந்தவொரு அசலான நிலவெளியும் இதில் பதிவாகவில்லை. எல்லாமே சினிமாத்தனமான பின்னணிகள். A fake film.

வடசென்னையைச் சார்ந்த எழுத்தாளர் பாக்கியம் சங்கர் இந்தக் குழுவில் பணிபுரிந்ததால் சில தேசலான அடையாளங்கள் தென்பட்டது மட்டுமே ஆறுதல். ‘பிசிறில்லாம செய்யணும்’ போன்று வடசென்னைக்கேயுரிய சில நுண்மையான வசனங்கள் ஒலித்தன. ‘ஓத்தா.. ஙொம்மாள…’ போன்ற வசைகள் எப்படி தணிக்கைத் துறையில் தப்பின என்று ஆச்சரியமாக இருந்தது. இது போன்ற சொற்களை அசலான உச்சரிப்பில் அதற்கேற்ற பின்னணியில் கேட்கும் சுகமே தனி. அதிலும் பெண்கள் பேசினால் கேட்க கூடுதல் ருசியாக இருக்கும்.

இது காமெடி திரைப்படமா, சீரியஸ் ஆனதா அல்லது இரண்டுங் கலந்ததா என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. திரைக்கதைதான் சொதப்பலாக இருக்கிறது என்று பார்த்தால் casting-ம் அபத்தம். பாக்ஸர் ராஜேந்திரன் என்கிற பாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன் சென்னை வசவுகளை உச்சரிப்பதெல்லாம் போலித்தனமாக இருக்கிறது. ஆரண்ய காண்டத்தில் வந்த வில்லனைப் போன்றதொரு முகத்தை தேடிப் பிடித்து போட்டிருக்கலாம். நகைச்சுவை நடிகர் ‘கருணாகரனை’ ரவுடி பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கவெல்லாம் தனியான துணிச்சல் வேண்டும்.

அது ஏன் கிருஷ்ணா நடித்த படங்கள் எல்லாம் விளங்காமல் போகிறதென்று தெரியவில்லை. அல்லது விளங்காமல் போகும் படத்தையெல்லாம் அவர் தேடித் தேடி நடிக்கிறாரா என்பதும். மாம்பழக் கலர் பெயிண்ட் அடித்த காக்கை போல இருக்கும் நாயகியை எங்கே தேடிப் பிடித்தார்களோ! சகிக்கவில்லை. நாயகியின் தோழியாக தோன்றக் கூட லாயக்கில்லை. ஆனால் பெயர் மட்டும் ஐஸ்வர்யாவாம்.

லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் ஒரு பாடல் சகித்துக் கொள்ளும்படி இருக்கிறது. அதுவும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வின் சாயலில் உள்ளது. இசையமைப்பாளர் எலெக்ட்ரிக் கிடார் வகையறாக்களை வதம் செய்து பின்னணி இசையாக கொத்து பரோட்டா போட்டிருக்கிறார். சகிக்க முடியாத சத்தம்.

நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் பிறகு அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவோடு கூலிப்படைகளின் வணிக மையங்களாக மாறினதைச் சொல்ல முயன்ற வகையில் இதன் மையம் வலுவானதுதான். ஆனால் சுவாரசியமும் நம்பகத்தன்மையும் பெருமளவு இல்லாமல் சிதைத்திருக்கிறார்கள்.

என்னுடைய நீண்டகால புகார் அப்படியேதான் இருக்கிறது. வடசென்னையின் ஆன்மாவைக் வெளிக்கொணரும் திரைப்படம் இதுவரை உருவாகவில்லை. பாரதிராஜாவின் ‘என்னுயிர்த் தோழன்’ போன்ற சில ஆறுதல்கள் மட்டுமே உண்டு. ‘வீரா’ வைப் பார்த்த பிறகு, செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யின் மீதான மரியாதை இன்னமும் கூடுகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’யாவது என்னுடைய ஏக்கத்தை தீர்த்து வைக்குமா என்று காத்திருக்கிறேன்.


suresh kannan

Saturday, February 10, 2018

தமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்


உலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் மெல்ல அறிமுகமாகத் துவங்கியிருக்கின்றன. அவல /  அபத்த / இருண்மை நகைச்சுவை என்று இவை தமிழில் குறிப்பிடப்படுகின்றன.

கருப்பு பணம் தெரியும். அதென்ன கருப்பு காமெடி?

நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை பற்றி  நாம் அறிவோம். கிண்டல், நையாண்டி, பகடி என்று பல்வேறு பாணி வசனங்களினால் செய்யப்படுவது ஒருவகை. தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்றவர்கள் இந்த முறையில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கோணங்கித்தனமான அசைவுகளின் மூலம் சிரிக்க வைப்பது இன்னொரு வகை. சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள், வசனங்களால் மட்டுமன்றி உடலசைவுகளினாலும் நகைச்சுவையை உருவாக்கும் திறமையைப் பெற்றிருந்தார்கள்.

இவையெல்லாம் வழக்கமான நகைச்சுவை பாணிகள். இதனுள் உள்ள உபபிரிவுதான் ‘பிளாக் காமெடி எனும் அவல நகைச்சுவை’. பொதுவான நகைச்சுவை பாணியில், வார்த்தைகளில் விளையாடுவது, ஒருவரை எள்ளல் செய்வது, இகழ்வது, அடித்து உதைப்பது போன்றவையெல்லாம் ஓர் எல்லை வரை இருக்கும். ஆனால் பிளாக் காமெடி என்பது பொதுவான நகைச்சுவையோடு சேர்ந்து அதையும் தாண்டிய வதையும் துயரமும் கலந்து  பிரத்யேகமான பாணியில் அமைந்திருக்கும்.

ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் வழிய துடித்துக் கொண்டிருப்பார். ஆனால் பார்வையாளர்களாகிய நாம் திரையில் அதைக் கண்டு சிரித்துக் கொண்டிருப்போம். குறிப்பிட்ட காட்சியின் போக்கு அவ்வாறாக அமைக்கப்பட்டிருக்கும் என்பதே அதற்கு காரணம்.

மனித மனதின் ரகசியமான, இருட்டான பகுதிகளில் இருந்து ரசிக்கப்படும் மெல்லிய குரூரத்தை இவை கொண்டிருப்பதால் ‘டார்க் காமெடி’ என அழைக்கப்படுகிறதோ, என்னவோ. Coen brothers, Quentin Tarantino, Guy Ritchie போன்ற அயல்நாட்டு இயக்குநர்கள் இவ்வகை திரைப்படங்களை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள். சார்லி சாப்ளின் போன்றவர்கள் இவற்றின் முன்னோடி எனலாம்.

நிழல்உலகம், வன்முறை, குற்றம், திருட்டு, துரோகம் ஆகிய எதிர்மறை விஷயங்களோடு இந்தத் திரைப்படங்கள் பெரிதும் சம்பந்தப்பட்டிருக்கும். எதிர் அரசியல் விமர்சனங்களின் மூலம் மரபையும் புனிதங்களை கலைத்துப் போடும். நேர்மறை உணர்வுகளாக கருதப்படும் அறம், நேர்மை, வீரம் ஆகியவற்றின் எதிர் தரப்பில் நின்று எள்ளி நகையாடும்.

ஓர் உதாரணத்திற்காக, சமீபத்தில் வெளிவந்த ‘தரமணி’ திரைப்படத்தின் காட்சி ஒன்றை பார்க்கலாம். தன் காதலி வெளிநாடு செல்வதற்காக ஒரு ரயில் பயணியிடமிருந்து பணத்தை திருடிவிடுவான் ஹீரோ. அப்படி திருடியதற்காகவும், அந்தப் பயணி மாரடைப்பால் இறந்து விட்டதை பிறகு அறிந்தும் குற்றவுணர்வு அடைவான். வாழ்க்கை பல அனுபவங்களை அவனுக்கு பாடமாக கற்றுத் தந்த பிறகு மனம் திருந்தி அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று சேர்ப்பான்.

குறைந்தபட்சம் திருட்டுப் போன பணமாவது அந்தக் குடும்பத்திற்கு திரும்ப வந்து விட்டதே என்று பார்வையாளர்கள் ஆறுதல் அடைந்து கொண்டிருக்கும் போது ‘வாய்ஸ் ஓவரில்’ வரும் இயக்குநர் ராம் ஒரு வெடிகுண்டை தூக்கிப் போடுவார். பழைய 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என்பது அன்றைய நாளில்தான் அறிவிக்கப்பட்டிருக்கும்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு தாங்கள் நடைமுறையில் அனுபவித்த அவஸ்தைகள் மற்றும் திரையில் காட்டப்பட்ட துயரம் ஆகியவற்றையும் மீறி பார்வையாளர்கள் அந்த ‘வாய்ஸ் ஓவருக்கு’ தியேட்டரில் தன்னிச்சையாக சிரித்தார்கள்.  எங்கிருந்து இந்த சிரிப்பு உருவாகிறது என்பதை யோசித்தால் ‘கருப்பு நகைச்சுவை’யின் அடையாளம் புலப்பட்டு விடும். வாழ்க்கையின் அபத்த தருணங்களின் மீதாக எழும் புன்சிரிப்பே ‘பிளாக் காமெடி’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

**

உலக சினிமாக்களின் பாதிப்பினால், இந்த வகை பாணியிலான பிரத்யேக திரைப்படங்கள் தமிழில் சமீபத்தில்தான் மெல்ல உருவாகத் துவங்கியிருக்கின்றன. ஆனால் இதன் துண்டு துண்டான அடையாளங்கள் பழைய திரைப்படங்களில் ஏற்கெனவே உள்ளன. எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை சிறந்த உதாரணம். “டேய்… பூசாரி….அம்பாள் எந்தக் காலத்திலே பேசினாள்?” என்கிற கருணாநிதியின் வசனம். ‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தியின் பாத்திரம் (நாகேஷ்) போன்றவற்றில் இருண்மை நகைச்சுவையின் அடையாளங்களை காண முடியும்.

இதுவரையான தமிழ் சினிமாக்களின் வரிசையில் கருப்பு நகைச்சுவையின் கூறுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் ஒட்டுமொத்த நோக்கில் முதன்மையான முயற்சி என்று 2005-ல் வெளிவந்த ‘மும்பை எக்ஸ்பிரஸ்’  திரைப்படத்தை சொல்லலாம். திடகாத்திரமும் புத்திசாலித்தனமும் இணைந்தவர்களே அதுவரை பெரும்பாலும் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டு வந்த விதத்திலிருந்து விலகி, காதுகேட்கும் திறனில் குறைபாடுள்ளவன்தான் இதில் ஹீரோ.. ஒரு காவல்துறை அதிகாரியின் இரண்டாவது மனைவிதான் ஹீரோயின். நான்கு முட்டாள்கள் இணைந்து ஆள் கடத்தலில் ஈடுபடுவார்கள். இவர்கள் செய்யும் கோணங்கித்தனங்களின் மூலம் ஒட்டுமொத்த படமும் நகரும். அபத்த நகைச்சுவையின் பாணி படம் முழுவதும் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி அதிகம் கவனிக்கப்படவில்லை. இது போன்ற பிளாக் காமெடிக்கு தமிழ் சினிமா பார்வையாளர்கள் அதிகம் பழகாததால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் நிராகரித்தார்கள்.

புஷ்கர் – காயத்ரியின் ‘ஓரம்போ’ மற்றும் ‘வ’ ஆகிய திரைப்படங்கள், பிளாக் காமெடி வகையில் பிறகு வந்த  தொடர் முயற்சிகளாக அமைந்தன. ஒரு க்வார்ட்டருக்காக இரவு முழுவதும் அலையும் ஒருவனின் அனுபவங்கள்தான் ‘வ’. மேற்சொன்ன காரணத்தைப் போலவே ‘உலக சினிமா’ பரிச்சயமுள்ளவர்கள், இவற்றை கொண்டாடினார்களே தவிர, சராசரி பார்வையாளர்கள் திகைத்து விலகி நின்றார்கள்.

அடுத்த முயற்சி ‘ஆரண்ய காண்டம்’. சினிமா ஆர்வலர்கள் இன்னமும் கூட இந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள். கருப்பு நகைச்சுவை என்பது திறமையாகவும் வசீகரமாகவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ் திரைப்படம் என்று இதைச் சொல்லலாம். ஒரு காட்சியில் பிரதான வில்லன் ஒரு வசனம் பேசுவார். “நீ மட்டும் உயிரோட இருந்த.. கொலை பண்ணியிருப்பேன்”. அவர் பேசுவது ஒரு பிணத்தை நோக்கி. இதிலுள்ள முரண் சுவைக்காக சிரித்தீர்கள் என்றால் கருப்பு நகைச்சுவையை உணர்கிறீர்கள் என்று பொருள். இதே வில்லன் இன்னொரு காட்சியில் ‘பிரபு – குஷ்பு’ என்பார். இது எந்த சூழ்நிலையில், எப்படி சொல்லப்படுகிறது என்கிற பின்னணியை அறிந்தால் வெடித்து சிரிப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியாக உருவாகி வந்தவர் ‘நலன் குமாரசாமி’. இவர் இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ என்பது அருமையான ‘பிளாக் ஹியூமர்’ திரைப்படம். ‘மும்பை எக்ஸ்பிரஸை’ போலவே, கோணங்கித்தனமான நான்கு பேர் இணைந்து ஆள் கடத்தல் செய்வதே இந்த திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நிறைந்திருக்கும். ‘அதிகாரத்தின் மீது கைவைக்காதே’ போன்ற ஐந்து விதிகளோடு தங்களின் தொழிலைத் தொடரும் நாயகன், பேராசையால் மீறும் போது சிக்கலில் மாட்டிக் கொள்வார். ‘நலன்’ இயக்கிய அடுத்த முயற்சியான ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படமும் கருப்பு நகைச்சுவையின் தன்மை அடங்கியதுதான். உள்ளுக்குள் கோழைத்தனத்தை வைத்துக் கொண்டிருக்கிற ஒரு ரவுடியின் கதை.

நவீன் இயக்கிய ‘மூடர் கூடம்”, திரஜ் வைடியின் ‘ஜில் ஜங் சக்’ கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ போன்ற சில தொடர்ச்சியான முயற்சிகளை இந்த வகையில் குறிப்பிடலாம். ஆனால் சில முயற்சிகளைத் தவிர, இவற்றில் பெரும்பான்மையானவை அயல் சினிமாக்களின் தழுவலாக, நகலாக இருக்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அந்நியமாக இருக்கின்றன.

அனைத்துப் பிரதேச மனிதர்களின் வாழ்க்கையிலும் கருப்பு நகைச்சுவைக்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே உள்ளூர் கலாசார பின்னணியில் இந்த பிளாக் ஹியூமர் திரைப்படங்கள் அமைந்தால் இவற்றின் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும். தமிழிற்கான பிரத்யேக ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள் வருங்காலத்தில் உருவாகும் என நம்புவோம்.

{குமுதம் - சினிமா சிறப்பிதழில் வெளியானது. (நன்றி குமுதம்) }


suresh kannan

Tuesday, January 23, 2018

2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)

22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக  சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால் பண்டிதனாகி விடலாம் என்கிற கனவெல்லாம் இல்லாமல், பறக்காவெட்டி போல் கண்டதிற்கும் அலைமோதாமல் வழக்கத்திற்கு மாறாக  என்ன வாங்க வேண்டும் என்பதை கறாராக தீர்மானித்துக் கொண்டு சென்றேன். அப்படியும் தற்செயல் தேர்வில் சிலதை வாங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. 

ஆனால் வாங்க விரும்பும் நூல்களின் பட்டியல் இன்னமும் முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஜீ.முருகன் சிறுகதைகள், ஞானக்கூத்தனின் ‘கவனம்’ இதழ் தொகுப்பு (விருட்சம்), ‘என் தந்தை பாலைய்யா’ உள்ளிட்ட பல நூல்களை பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' அந்தரங்கமாக என்னை மிகவும் பாதித்த புதினம். நூலகத்தில் வாசித்தது. என் தனிப்பட்ட சேகரத்தில் இது நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் நினைவிற்கு வரவில்லை. ஜமாலனின் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' (கடந்த முறையே தவறவிட்டது), மற்றும் மௌனியின் இலக்கியாண்மை ஆகிய நூல்களையும் வாங்க இயலவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் வருங்காலத்தில் எப்படியாவது பிடித்து விடுவேன்.

புத்தகங்களின் மீதான தீராத தாகம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஏற்கெனவே வாங்கி அடுக்கியிருப்பதையும், இப்போது வாங்கியிருப்பதையும் முதலில் வாசித்து முடி’ என்கிற குரல் இன்னொருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது.  அந்த குரலைக் கவனமாக கேட்டு வாசித்த புத்தகங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன். அதுதான் இந்த நூல் வாங்க உதவியவர்களுக்கான பதில் நன்றியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

புத்தக காட்சியில் சந்தித்த நண்பர்கள், எழுத்தாளர்கள், அனுபவங்கள் போன்றவற்றை ஆகியவற்றைப் பற்றி குறிப்புகளாக எழுதும் உத்தேசம் உள்ளது. எழுதுவேன். தம்பட்டத்திற்காக அல்லாமல் எவருக்காவது உதவியாகவோ அல்லது தூண்டுதலாகவோ இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இது போன்ற புத்தக பட்டியலை பொதுவில் இடுவது.

இனி (இரண்டாம்) பட்டியல்.

1)    பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ.சிவசுப்பிரமணியன் - NCBH
2)    உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
3)    தமிழ்க் கிறிஸ்துவம் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
4)    மந்திரமும் சடங்குகளும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
5)   ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன் –      காலச்சுவடு
6)    ஆதிரை – சயந்தன் - தமிழினி
7)    சுந்தர ராமசாமி நேர்காணல்கள் – காலச்சுவடு
8)    நா.பார்த்தசாரதி – நினைவோடை – காலச்சுவடு
9)    காகங்களின் கதை – அ.கா.பெருமாள் – காலச்சுவடு
10)  பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள்முருகன் –                 காலச்சுவடு
11)    புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன் – காலச்சுவடு
12)    சங்கர் முதல் ஷங்கர் வரை – தமிழ்மகன் – உயிர்மை
13)    இடைவெளி – சம்பத் – பரிசல்
14)    சுவடுகள் – வெங்கடேஷ் சக்ரவர்த்தி - பிரக்ஞை
suresh kannan

Sunday, January 21, 2018

2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்




2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்ல உள்ளங்கள் நிதியுதவி செய்திருக்கின்றனர். இந்த நூற்களோடு அவர்களின் நினைவும் பிரியமும் உறைந்திருக்கும். ‘நீ உண்ணும் உணவில் உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்’ எனும் பொன்மொழி போல இந்த நூல்களின் மேல் அவர்களின் பெயர்களும் அரூபமாக எழுதப்பட்டிருக்கும்.

என்னதான் முன்கூட்டியே திட்டமிட்டு சென்றாலும் இது போன்ற கண்காட்சிகளில் புத்தகங்களை தேர்வு செய்வதென்பது பெரும்பாலும் தற்செயலே என்பது என் தனிப்பட்ட அனுபவம். அந்த நேரத்து மனநிலையும், நூலின் கவர்ச்சியான வடிவமைப்புகளும் தலைப்பும், சல்லிசான விலையும் எப்போதோ வாசித்திருந்த பரிந்துரைகளின் நினைவுகளும், சில தனிப்பட்ட ஆர்வங்களும், நிர்ப்பந்தங்களும் என்று பல விஷயங்கள் கூட்டாக இந்தத் தேர்வை செயல்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்.

“இன்னும் ஒண்ணும்மா. ப்ளீஸ்.’ என்று தீராத ஏக்கத்துடன் ஐஸ்கிரீம் கடையை திரும்பிப் பார்த்துக் கொண்டே இழுத்துச் செல்லப்படும் சிறுவனைப் போலவேதான் ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி அரங்கிலிருந்து திரும்புவேன். எனவே இந்தப் பட்டியல் மிக சொற்பமானதே. வாங்க விரும்பும், உத்சேத்திருக்கும் பட்டியல் இன்னமும் நீண்டது. எனவே இது இறுதியானதல்ல.

இந்த நூல்களின் சில பக்கங்களையாவது தினமும் வாசித்து விடுவது என்கிற உறுதியில் இருக்கிறேன். வெறுமனே வாசிப்பது மட்டுமல்ல, அவற்றின் நேர்மறையான கருத்துகள், என் மனதின் உள்ளே வர அனுமதிப்பதும், வாழ்நாள் முழுவதும் அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பதும்தான் இந்த வாசிப்பின் நிகர பயனாக இருக்க முடியும் என நம்புகிறேன். 

கடந்த சில வருடங்களாக, என்னுடைய கவனம் புனைவுகளிலிருந்து சற்று விலகி அபுனைவுகளின் பக்கம் அதிகம் திரும்பத் துவங்கியிருக்கிறது என்பதை எனக்கே ரகசியமான பெருமையைத் தரும் வளர்ச்சியாக கருதுகிறேன். 

இனி பட்டியல். 

**


  1)   காவேரியின் பூர்வகாதை – கோணங்கி – டிஸ்கவரி
  2)   தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி – ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
  3)   சந்நியாசமும் தீண்டாமையும் – ராமானுஜம் – மாற்று
  4)   நாவல் எனும் பெருங்களம் – அ.ராமசாமி – நற்றிணை
  5)   அடித்தள மக்கள் வரலாறு - ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
  6)   வழித்தடங்கள் – தொ.பரமசிவன் – மணி பதிப்பகம்
  7)   தொல்லிசைச் சுவடுகள் – நா.மம்மது – வம்சி
  8) சில பொழுதுகள் சில நினைவுகள் – பாவண்ணன் – வெங்கட்சுவாமிநாதனைப் பற்றியது – சந்தியா பதிப்பகம்
  9)   தென்னிந்திய குலங்களும் குடிகளும் – ந.சி.கந்தையா பிள்ளை - சந்தியா பதிப்பகம்
  10) இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி - சந்தியா பதிப்பகம்
  11) இந்தியாவின் இருண்ட காலம் – சசிதரூர் – கிழக்கு
  12) ஊழல் – உளவு – அரசியல் – சவுக்கு சங்கர் – கிழக்கு
  13) இசைக்கச் செய்யும் இசை – கருந்தேள் ராஜேஷ் – வாசகசாலை
  14) கவிதை – ஓவியம் – சிற்பம் – சினிமா – இந்திரன் – டிஸ்கவரி
  15) தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டல் – டி.செளந்தர் – டிஸ்கவரி
  16) திரை இசைத் திலகங்கள் – வி.ராமமூர்த்தி - சந்தியா பதிப்பகம்
  17) பயாஸ்கோப் – கிருஷ்ண்ன் வெங்கடாசலம் - சந்தியா பதிப்பகம்
  18) தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் – ந.முருகேச பாண்டியன்   –டிஸ்கவரி
  19) தமிழ் சினிமா – சில குறிப்புகள் – பி.எல்.ராஜேந்திரன் – சிக்ஸ்சென்ஸ்
  20) திரைக்கதை உருவமும் உள்ளடக்கமும் – கே.ராஜேஷ்வர் – புளூ ஓசன்
  21) படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் – ஷங்கர் ராமசுப்பிரமணியன் – டிஸ்கவரி
  22) மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு – யமுனா ராஜேந்திரன் – டிஸ்கவரி
  23) என் கதை – சார்லி சாப்ளின் – யூமா வாசுகி – NCBH
  24) காட்சிகளுக்கு அப்பால் – எஸ்.ரா – தேசாந்திரி
  25) இடக்கை – எஸ்.ரா. – தேசாந்திரி
  26) நாவலெனும் சிம்பொனி - எஸ்.ரா. – தேசாந்திரி
  27) உலகை வாசிப்போம் - எஸ்.ரா. – தேசாந்திரி
  28) எழுக நீ புலவன் – ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  29) நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  30) ஆஷ் அடிச்சுவட்டில் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  31) பாரதி கவிஞனும் காப்புரிமையும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  32) முச்சந்தி இலக்கியம் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  33) அந்தக்காலத்தில் காப்பி இல்லை - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  34) தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி செல்வராஜ் – வம்சி
  35) தலித்தியமும் உலக முதலாளியமும் – எஸ்.வி.ராஜதுரை  - NCBH
  36) சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை – சுகுணா திவாகர் – எதிர் வெளியீடு
  37) செவ்வி – தொ.பரமசிவன் நேர்காணல்கள்- கலப்பை பதிப்பகம்
  38) உரைகல் - தொ.பரமசிவன் - கலப்பை பதிப்பகம்
  39) தமிழ் நவீனமயமாக்கம் – க.இராசாராம் – காலச்சுவடு
  40) ஜெயலலிதா – மனமும் மாயையும் – வாஸந்தி – காலச்சுவடு
  41) தமிழக அரசியல் – காலச்சுவடு கட்டுரைகள்
  42) மொழி பெயர்ப்புப் பார்வைகள் - க.இராசாராம் – காலச்சுவடு
  43) முகங்களின் தேசம் – ஜெயமோகன் – சூரியன் பதிப்பகம்
  44) வெண்கடல் – ஜெயமோகன் – வம்சி
  45) சொல்லி முடியாதவை – ஜெயமோகன் – நற்றிணை
  46) நாளும் பொழுதும் - ஜெயமோகன் – நற்றிணை
  47) கலாச்சார இந்து - ஜெயமோகன் – நற்றிணை
  48) உச்ச வழு (சிறுகதைகள்) - ஜெயமோகன் – நற்றிணை
  49) வலசைப் பறவை - ஜெயமோகன் – நற்றிணை
  50) இன்றைய காந்தி - ஜெயமோகன் – தமிழினி
  51) தனிக்குரல் - ஜெயமோகன் – கிழக்கு
  52) மிளர்கல் – இரா.முருகவேள் – பொன்னுலகம்
  53) நாடோடித் தடம்  - ராஜசுந்தர்ராஜன் – வாசகசாலை
  54) கொல்லனின் ஆறு பெண்மக்கள் – கோணங்கி – பாரதி பதிப்பகம்
  55) சில செய்திகள் சில படிமங்கள் – கலாப்ரியா – சந்தியா
  56) அழகிய லம்பன் – எழில்வரதன் – சந்தியா
  57) நான் வடசென்னைக்காரன் – பாக்கியம் சங்கர் – பாதரசம்
  58) காற்று வளையம் – பாஸ்கர் சக்தி – டிஸ்கவரி
  59) இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – ஆர்.சிவகுமார் – பாதரசம்
  60) நடைவெளிப்பயணம் – அசோகமித்திரன் – சூரியன் பதிப்பகம்
  61) பதேர் பாஞ்சாலி – விபூதிபூஷண பந்தயோபாத்யாய் – மாற்று
  62) உயிர்காக்கும் உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி – சந்தியா
  63) மறைந்து திரியும் நீரோடை – கலாப்ரியா – சந்தியா
  64) கூண்டுப்பறவையின் தனித்த பாடல் – கவிதா முரளிதரன் – டிஸ்கவரி
  65) வல்விருந்து – நாஞ்சில்நாடன் – தமிழினி
  66) 1084-ன் அம்மா – மகாஸ்வேதா தேவி – பரிசல்
  67) பெருவலி – சுகுமாரன் – காலச்சுவடு
  68) தெற்கிலிருந்து ஒரு சூரியன் – தி இந்து
  69) அயல்சினிமா (ஜனவரி 2018 இதழ்)
  70) நம் நற்றிணை (ஜனவரி – மார்ச் 2018 இதழ்)
  71) இடைவெளி (இதழ் 3) ஜனவரி 2018
  72) பெரியார் இன்றும் என்றும் – விடியல் பதிப்பகம்
 
 




suresh kannan