Monday, December 22, 2014

தமிழும் உலக சினிமாவும்
இந்தியாவில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பற்றின கட்டுரைகளில்  பொதுவாக எந்தெந்த இயக்குநர்கள் தொடர்ந்து உரையாடப்படுவார்கள் என்று ஒரு பட்டியலை சற்று Random ஆக யோசித்துப் பார்ப்போமா?  சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், கெளதம் கோஸ், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன்,பத்மராஜன், புட்டண்ணா கனகல், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவல்லி போன்ற பெயா்களே மீண்டும் மீண்டும் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படும். பிரதேச அரசியலை முன்வைப்பது எனது நோக்கமில்லையென்றாலும் இது போன்ற பட்டியல்களில் ஏன் தமிழ் சினிமாக்களைப் பற்றியோ அதன் இயக்குநர்களைப் பற்றியோ நடிகர்களைப் பற்றியோ இதர நுட்பக் கலைஞர்களைப் பற்றியோ பெரிதும் உரையாடப்படுவதில்லை? சர்வதேச தரத்திற்கு இணையான அளவில் தமிழில் படைப்பாளிகளோ அல்லது படைப்போ இல்லையா, அல்லது அரசியல் காரணமாக தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்படுகிறதா? உலகப் புகழ் பெற்ற நடிகர்களுக்கு  இணையான திறமை கொண்டவர்கள் தமிழில் இல்லையா? சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

19-ம் நூற்றாண்டில் சினிமா என்கிற நுட்பம் மேற்குலகில் அதன் ஓரளவிற்கான வளர்ச்சி நிலையை அடைந்த சில ஆண்டுகளிலேயே தமிழிற்கும்  வந்து விட்டது. 1916-ல் முதல் மெளனப்படம் நடராஜ முதலியாரால் தமிழில் உருவாக்கப்பட்டு விட்டது. பிறகு புராணங்களை அடிப்படையாகக் கொண்ட  நாடகங்கள் அப்படியே செல்லுலாயிட் வடிவத்திற்கு மாறி காமிராக் கருவி அசைக்கப்படாமல் குறிப்பிட்ட இடத்திற்குள் நடிகர்களின் அசைவுகள் மாத்திரம் அப்படியே பதிவாக்கப்பட்டன. சினிமா நுட்பம் குறித்த அறிமுகமும் கற்றலும் அப்போது இங்கு பெரிதும் இல்லாத சூழலில் அது இயல்புதான். ஆனால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகும் கூட அந்த நுட்பம் அதற்குரிய சாத்தியமான உள்ளடக்கத்துடன் தமிழ் சினிமாவில்  பயன்படுத்தப்படுகிறதா என்றால் ஒரு பெருமூச்சுடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வசனங்கள் தொடர்ந்து இறைக்கப்படும் திரைக்கதைகளுடன் திரும்பத் திரும்ப மேடை நாடக பாணிகளே ஹை-டெக்  விரயங்களுடன் இங்கு உருவாக்கப்படுகின்றன.

புராண அலை சற்று ஓய்ந்தவுடன் சமூகக் கதைகளைப் பற்றிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இவைகளிலிருந்து  வணிகரீதியாக ஒரு வெற்றிப்படத்திற்கான சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த வடிவமைப்பிலேயே மசாலா சினிமாக்கள் தொடர்ந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. அதாவது தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் அச்சமூகத்தின் கலாசார வெளிப்பாட்டு சாதனமாக, மக்களின் வாழ்வியலை யதார்த்தத்திற்கு நெருக்கமாக  பதிவு செய்யும் ஊடகமாக, அங்குள்ள அரசியலை அதன் பிரச்சினைகளை ஆவணமாக்கும் பிரதிகளாக அமையவேயில்லை. புறவடிவத்தில் அது தமிழ் சமூகத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததே ஒழிய பெரும்பாலான திரைப்படங்களின் நோக்கமும் மையமும் வணிகம் சார்ந்தும் பொழுதுபோக்கை சார்ந்தும் ஒருவகை போதைப் பொருட்களாக மாத்திரமே இருந்தன. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து விவாதங்களின் மூலம் 'செய்யப்பட்ட' கதைகள், பிறசினிமாக்களின் தழுவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழல்கள், அசட்டுத்தனமான அழுகை மெலோடிராமாக்கள், திணிக்கப்பட்ட பாடல்கள் என்று  வணிக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான ஃபேன்டசி உலகில் இயங்கின. எனவேதான் உலக சினிமா எனும் மதிப்பீட்டிலும் அளவுகோலிலும் ஒப்பிடப்படும் போது தமிழ் சினிமா என்பது ஒரு பிரதேசத்தின் மக்களின் யதார்த்தமான வாழ்வியலிலும் கலாசாரத்தில் இருந்தும் விலகி நின்று அசட்டுத்தனமான கற்பனாவாத உலகில் இயங்குவதால் பெரும்பாலும் கேலிக்குரியதாகவும்  உள்ளீடற்றதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

உண்மையில் உலக சினிமா என்கிற பதத்தை மிகக் கறாராகவும் தெளிவாகவும் வரையறை செய்ய முடியுமா, அல்லது அதுவொரு கற்பிதந்தானா?  தமிழ்ப்பிரதேசமும் உலகப்பந்தினுள் இருக்கும் போது  அங்கிருந்து உருவாகும் சினிமாக்கள் உலக சினிமா என்பதற்குள் வராதா? என்பது போன்ற கேள்விகள் எழலாம்.

உலகமெங்கும் வணிகநோக்கத்திற்காக மாத்திரமே உருவாக்கப்படும் சினிமாக்களைத் தவிர்த்து ஒரு மெல்லி்ய இணைகோடாக கலை சார்ந்து உருவாக்கப்படும் படைப்புகளும் கூடவே உருவாகின்றன. இவை அந்தந்த பிரதேசங்களின் கலாசாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றின் அசலான கூறுகளை நுட்பமாக பதிவு செய்கின்றன.அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பில்லாத பார்வையாளர்கள் முழுமையாக அணுகுவதற்கு  மொழி உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் அவை மானுட குலத்தின் ஆதாரமான பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது உலகத்திலுள்ள வேறு எந்தவொரு நுண்ணுணர்வு கொண்ட மனதினாலும் அந்த தடைகளைத் தாண்டி அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. திரைப்பட வரலாற்றில்  ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கிய 'நியூவேவ்' திரைப்படங்களின் துவக்க கால இத்தாலிய படைப்பான 'பைசைக்கிள் தீவ்ஸ்''ஸில் தன்னுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்கு உபயோகப்படும் முக்கிய கருவியான சைக்கிளை இழந்து விட்டு தேடி அல்லாடும் ஒரு மனிதனின் துயரத்தையும் வறுமையையும் அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பேயில்லாத இன்னொரு சமூகத்தின் அடித்தட்டு மனிதனால் கலாசார தடைகளைத் தாண்டி எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவ்வகையான திரைப்படங்களின் மையம், அவை இயங்கும் விதம், உருவாக்கப்படும் பாணி, நோக்கம், வடிவம் ஆகியவை சார்ந்து தன்னிச்சையாக பல ஒற்றுமைகள் உண்டு. இந்த வகையில் அவற்றை உலக சினிமா என்ற வகைமையில் இணைக்க முடியும்.


***

தமிழ் சினிமாவிலும் சர்வதேச தரத்திற்கான படைப்பாளிகளும் நடிகர்களும் நுட்பக் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதற்கான தடயங்களை  அபூர்வமாக மலரும் சில நல்ல படைப்புகளில் காண முடியும். மகேந்திரன் உருவாக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தின் உச்சக்காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள்.  எந்தவொரு சர்வதேச தரத்திலான சினிமாவுக்கும் சவால் விடக்கூடிய அளவிற்கு கலைத்தன்மையும் நுண்ணுணர்வுத்தன்மையும்  நுட்பமும் வாய்ந்தது அது. ஏறத்தாழ பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் கனவில் உள்ள 'சொந்த வீடு' எனும் லட்சியத்தையும் அது சுயநல அதிகாரத்தினால் சிதையும் துயரத்தையும் முன்வைத்த பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படம் எவ்வகையில் குறைந்தது? ஒரு பெண்ணின் அகவுலகு சார்ந்த உறவுச் சிக்கல்களை உளவியல் பார்வையில் தமிழ் சினிமாவில் அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவிலான, ஐரோப்பிய பாணியிலான திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக சிறப்புடன் உருவாக்கிய, சமீபத்தில் மறைந்து போன ருத்ரைய்யா (அவள் அப்படித்தான்) எந்த அளவிற்கு மற்ற உலக இயக்குநர்களை விட சாமான்யர்?, எம்.ஆர்.ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ் .... என்று எந்தவொரு உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் திறமைக்கும் சளைக்காத திறமைசாலிகள்  நம்மிடமும் இருந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் தவறான சூழலுக்குள் சிக்கிக் கொண்ட சரியான நபர்கள் என்பதுதான் துரதிர்ஷ்டமானது. தமிழ் சினிமா எனும் காலியான சட்டிக்குள் சாத்தியமான அளவில் தங்களின் திறமைகளை அள்ளி ஊற்றி விரயமான அகப்பைகள்தான் இவர்கள்.

ஏனெனில் சினிமா என்கிற வலிமையான ஊடகத்தை அந்த நுட்பத்திற்குரிய சாத்தியங்களுடனோ, திரை மொழியுடனோ, ஒரு கலை சாதனமாகவோ அல்லது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி  உரையாடும் அரசியல் ஆயுதமாகவோ, தமிழ் சூழலின் பண்பாட்டை பதிவு செய்யும் ஆவணமாகவோ பயன்படுத்தும் பிரக்ஞையும் ரசனையும் கொண்ட சூழல் இங்கு மலரவே இல்லை. அபூர்வமாக சில விதிவிலக்குகள் உண்டுதான். ஆனால் அது ஒரு போக்காக மலராமல் போனது தமிழ் சினிமாவின் மிக துரதிர்ஷ்டமான நிலை. அந்த நிலைக்குப் போனதற்கு பல காரணங்கள் உண்டு.

ஓர் ஆளுமையை பீடத்தில் அமர்த்தி கண்மூடித்தனமாக வழிபடுவது என்பது தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே அது தமிழ் சினிமாவிலும் நீடித்தது இயல்பானது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எப்போதுமே இருபெரும் ஆளுமைகள் பிரதானமாக இருந்ததை அறிவோம். அதில் ஒருவர் எப்போதுமே சற்று மேலான நிலையில் இருப்பார். தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ சின்னப்பா ஒரு காலத்தை ஆண்டார்கள். இருவருமே அவர்களின் இசைத்திறமை காரணமாக புகழப்பட்டாலும் பாகவதர் தன்னுடைய தோற்றத்தின் கவர்ச்சி காரணமாக கூடுதல் புகழைப் பெற்றிருந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆளுமையின் வளர்ச்சிக்கு மிக திட்டமிட்டு சினிமாவை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். தீய பழக்கங்கள் ஏதுமற்றவராக பெண்களின் பாதுகாவலராக ஏழைகளை அரவணைக்கும் அவதாரமாக பல விதங்களில் தன் சித்திரத்தை வெற்றிகரமாக நிறுவிக் கொண்டார். இதன் மூலம் இவரை விடவும் திறமையான சமகாலத்திய நடிகரான சிவாஜி கணேசன் அடைய முடியாத இடத்தை அடைந்து அதிகாரத்தை கைப்பற்றினார். பிறகு ரஜினிxகமல், விஜய்xஅஜித் என்பதாக இந்த வரிசை தொடர்கிறது.

எனவே தமிழ் சினிமா ஏறக்குறைய அதன் துவக்கத்திலிருந்தே கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரும்பாலும் ஆண்மைய கருத்தாக்கங்களை மையப்படுத்தும் கதைகளாகவும் காட்சிகளாகவும் அமைய முடிந்ததே ஒழிய அந்த வட்டத்தை தாண்டி இன்றும் கூட வர முடியவில்லை. தன்னை ஆராதிக்கும் முறையில் 'உருவாக்கப்பட்ட' கதை,  தன்னுடன் நடிக்கவிருக்கும் சக நடிகர்கள், இசையமைப்பாளர்கள்,இதர நுட்பக் கலைஞர்கள் என்று அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இந்த கதாநாயகர்கள் இருக்கும் அவலம் இருப்பதால் தமிழ் சினிமாவும் இவர்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஒரு திரைப்படம் என்பது அதன் இயக்குநரின் கட்டுப்பாட்டில் அனைத்தையும் அவர் தீர்மானிக்கும் நிலையயில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?. ஆனால் திரையிசையின் ஒரு மெட்டைக் கூட அதன் ஹீரோவி்ன ஒப்புதல் இன்றி பயன்படுத்தமுடியாத சூழலே இங்கு நிலவுகிறது. சினிமாவிலுள்ள மேலோட்டமான அறிவைக் கொண்டு ஆனால் அதன் எல்லாத் துறையிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நாயகர்களே தக்கவைத்துக் கொண்டு இயக்குநர்கள் என்பவர்கள் அவர்களின் பலியாடுகளாக இருக்கும் போது எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் உருவாகும்?  இந்த நிலையை  ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்களால் சிறிதுதான் மாற்ற முடிந்தது, அவ்வளவே. எனில் எப்படி இங்கு உலக சினிமாக்கள் உருவாகும்?

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக அறியப்படுபவர் சிவாஜி கணேசன் என்பதும் தமிழ் சினிமா இயக்குநர்கள் அவரை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். என்றாலும் மிகையான நடிப்பை வழக்கமாக முன்வைப்பவர் என்று அவர் மீது விமர்சகர்கள் வைக்கும் புகாரிலும் உண்மையில்லாமல் இல்லை. அதைத் தவிர்த்து அவரால் இயல்பாகவும் நடிக்க இயலும் என்பதை 'மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன்' போன்ற சில திரைப்படங்கள் நிரூபித்துள்ளன. சோ தன்னுடைய நேர்காணல்களில் வழக்கமாக நினைவுகூரும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. சோவும், சிவாஜியும் நடிக்கும் ஒரு படப்பிடிப்பு அது. ஒருவர் இறந்து விட்ட சோகம் தாங்காமல் சிவாஜி அழ வேண்டும். இது அவருடைய பிரத்யேகமான பிடித்த ஏரியா என்பதால் ரவுண்டு கட்டி அடிக்கிறார். காட்சி முடிந்ததும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள். சோ மாத்திரம் அமைதியாக இருக்கிறார். இதைக் கவனித்த சிவாஜி அவரை தனியாக அழைத்து "ஏன் என் நடிப்பு பிடிக்கவில்லையா?' என்று கேட்கிறார். "இல்லைண்ணே.. நீங்க நடிச்சது மிகையா இருந்தது போல பட்டது" என்று சோ பதிலளிக்கிறார். "சரி. இப்ப, பாரு இந்த சீனை வேற மாதிரி செய்யறேன்" என்று அதே காட்சியின் சூழலை அந்த தனியறையில் இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். சோ -விற்கு மிக ஆச்சரியம். "ஆனா இந்த மாதிரி நடிச்சா இங்க ஒரு பய பார்க்க மாட்டான். இவங்களுக்கு இப்படித்தான் பிடிக்கும்" என்று தன் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் சிவாஜி.

தெருக்கூத்து மரபிலிருந்து உருவான நாடக உலகிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் சிவாஜி கணேசன். ஒலிப்பெருக்கிகள் இல்லாத காலத்தில் கடைசி வரிசையில் உள்ள பார்வையாளனும் அசெளகரியம் கொள்ளாத படி உரத்த குரலிலும் மிகையான உடல் மொழியிலும் நடிக்க வேண்டிய அவசியம் அப்போதிருந்தது. ஆனால் சினிமாவின் நுட்பம் வேறு. அண்மைக்காட்சிகளை கேமிரா பதிவு செய்யக்கூடியதின் மூலம் ஒரு நுட்பமான முகபாவத்தைக் கூட பார்வையாளனால் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த சாத்தியத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் மிகையாக நடித்து 'அதுதான் சிறந்த நடிப்பு' என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி அதற்குப் பின்னால் வருபவர்களும் அதையே பின்பற்றி தமிழ் சினிமா பின்னடைவின் காரணத்திற்கு சிவாஜியும் ஒரு வகையில் காரணமாய் இருந்தது துரதிர்ஷ்டம்தான். மேலும் இயல்பான நடிப்பு எது என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கும் அவர், சர்வதேச திரைப்படத்தின் தகுதிகளோடும் இலக்கணங்களோடும் சில படங்களையாவது உருவாக்குவதற்கு -  ஒருவேளை நிகழக்கூடிய வணிகரீதியான நஷ்டங்களையும் கணித்து -  தன் பங்களிப்பை செலுத்தாதது ஏன்? ஒரு காலகட்டத்திய தமிழ் சினிமாவையே ஆக்ரமித்துக் கொண்டிருந்த அவருக்கு இது எளிதான விஷயம்தானே? 'வரலாறு முக்கியம் அமைச்சரே' எனும் தத்துவத்தைக் கூடவா அவர் உணராமல் இருந்திருப்பார்?

மகேந்திரன் தன்னுடைய சினிமா பற்றிய நூலில் எழுதும் போது இளமைக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கல்லூரி பேச்சு நிகழ்வில் 'தமிழ் சினிமா மக்களின் வாழ்வியலில் இருந்து விலகி எத்தனை போலித்தனமாக இருந்திருக்கிறது' என்பதைப் பற்றி ஆவேசமாக பேசிய போது அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் 'நன்றாகப் பேசினீர்கள்' என்று பாராட்டச் செய்கிறார். பிற்காலத்தில் மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தை உருவாக்கிய போது அதை ஒரு திரையிடலில் பார்த்த எம்.ஜி.ஆர் "அன்று தமிழ் சினிமாவின் மீது முன்வைத்த குறையை நீங்களே போக்கி விட்டீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் தாம் நடித்த காலத்தில் எல்லாம் எவ்வாறான திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அது மாத்திரமல்ல, அவர் அதிகாரத்திற்கு வந்தவுடன்  'உதிரிப்பூக்கள்' திரைப்படம் போன்ற இன்னும் சில திரைப்படங்கள் மலர்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? சமகாலத்திய வணிக சினிமாவின் உச்ச அடையாளம் ரஜினிகாந்த். அவரிடம் 'நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?": என்று அவருடைய குருநாதர் பாலசந்தர் ஒரு திரை நிகழ்ச்சியில் கேட்கும் போது சட்டென்று 'முள்ளும் மலரும்' என்ற ரஜினி பதிலளிக்கிறார்.

ஆக....தமிழ் திரையுலகை ஆக்ரமித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எது நல்ல சினிமா என்பது தெளிவாகவே உள்ளூற தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தத் துறையின் மூலமே செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றவர்கள், தாம் சார்ந்திருந்த துறையின் வளர்ச்சிக்காகவும் மேம்படுவதற்காகவும்  போகிற போக்கில் சிறிதாக கூட எதையுமே ஏன் செய்யவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. நல்ல சினிமாவை உருவாக்கி விட முடியுமென்கிற கனவுகளுடனும் லட்சியங்களுடனும் ஆயிரம் இளம் இயக்குநர்கள் வாய்ப்பில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரையாவது ஆதரித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை திசை திருப்பும் படியும் சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாக்களைப் பற்றிய உரையாடல் பெருமையோடும் அமையும்படியும் ஆவதற்கான சில விஷயங்களையாவது தமிழ் சினிமாக்களை தீர்மானிக்கும் சக்திகள் செய்திருக்கலாமே என்று ஆதங்கத்துடன் யோசிக்க மாத்திரமே முடிகிறது.


***


தமிழ் சினிமாவிற்கென்று சில குறிப்பிட்ட தேய்வழக்குகள் (Cliches) உள்ளன. அவைகளிலிருந்து பெரும்பாலும் தமிழ் சினிமா வெளிவந்ததேயில்லை.  புகழ்பெற்ற ஹீரோ என்று கூட அல்ல, சாதாரண ஹீரோவாக இருந்தால் கூட அவரின் மீது யாருமே கைவைத்து விட முடியாது. வில்லன்களும் அடியாட்களும் வரிசையில் வந்து அடிவாங்கி செல்ல வேண்டும். ஹீரோவாக விருப்பப்பட்டால் ஒழிய பெருந்தன்மையுடன் இரண்டு அடிகளை முதலில் வாங்கிக் கொள்ள முன்வருவார். படத்தின் இறுதியில் ஹீரோ சாகக்கூடாது. பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் ஓடாது. எத்தனை சிக்கல்கள் வந்தாலும் படத்தின் இறுதியில் அவையெல்லாம் நீங்கி அனைவரும் புன்னகைக்கும் காட்சியுடன்தான் படம் நிறைவுற வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் திரையரங்கை விட்டு செல்வார்கள். படத்தில் வரும் பெண் பாத்திரங்களுக்கு என்று எவ்வித முக்கியத்துவமோ பிரத்யேகமான பின்புலமோ இருக்கக்கூடாது. காதலி என்றால் நாயகனுடன் ஆடிப்பாட வேண்டும். தாய் என்றால் நாயகனுக்கு பெருமை சேர்க்கும்படி அம்மா சென்ட்டிமென்ட் காட்சிகளில் தோன்றி மறைய வேண்டும். நாயகன் விரும்பாவிட்டாலும் சில பெண்கள் அரைகுறை ஆடையுடன் வலிந்து வந்து அவனை கவர முயல்வார்கள்.

இதெல்லாம் தமிழ் சினிமாக்களில் உள்ள அபத்தங்கள் குறித்தான சிறு பட்டியல்தான். இப்படி வணிகரீதியாக பல சமரசங்களுடனும் செயற்கையான கட்டுப்பாடுகளுடனும் இயங்கினால் எப்படி நல்ல சினிமாக்கள் தமிழில் உருவாகும்?

ஹீரோக்கள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்ததைப் போலவே ஓர் இசையமைப்பாளர்  தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலமும் இருந்தது. அவருடைய புகைப்படத்தை படபூஜை விளம்பரத்தில் போட்டால் படம் எப்படியாவது வியாபாரமாகி விடும் என்கிற நிலை இருந்தது. அவரும் திறமையான இசையமைப்பாளர்தான். அந்தக் காலத்தில் ஓய்வு ஒழிச்சலின்றி மாய்ந்து மாய்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். அவரது இசையிலிருந்து பல ரத்தினங்களும் சில கற்களும் கலந்துதான் வெளியாகிக் கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன் அந்த இசையமைப்பாளர் பணியாற்றிய திரைப்படம் ஒன்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு அதன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளருடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஓர் இயக்குநர் சொன்ன சம்பவம்தான் படு சுவாரசியமானது.

அ்நத இசையமைப்பாளரை தங்கள் படத்தில் பணியாற்றச் சொல்லி பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அன்புத்தொல்லையும் நெருக்கடியும் தருகிறார்கள். அவர் படத்தைப் போட்டாலே வியாபாரமாகி விடுகிறதே? ஒரு சமயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க இசையமைப்பாளர் பொதுவில் ஒரு நிபந்தனையைப் போடுகிறார். 'என்னிடம் சிறந்த ஐந்து மெட்டுக்கள் உள்ளன. அந்த மெட்டுக்களுக்கு ஏற்ப எந்த இயக்குநர் ஒரு கதையை எழுதிக் கொண்டு வருகிறாரோ,அவருடன் பணியாற்ற சம்மதிக்கிறேன்'. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை பகிர்ந்த இயக்குநரும் ஒரு கதையை 'உருவாக்கி' இசையமைப்பாளரிடம் ஒப்புதல் வாங்கி இசையைப் பெற்று படத்தையும் வெளியிடுகிறார். அதாவது தமிழ் சினிமாவில் அதுவரை மெட்டுக்கு பாட்டு எழுதியதுதான் வழக்கமாக இருந்திருக்கும். ஆனால் மெட்டுக்கேற்ப ஒரு திரைப்படமே உருவாகின அதிசய அபத்தமெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.  இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றியும் பெற்றது. இப்படியிருக்கிறது நம்முடைய ரசனை. ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக அடிநாதமாக பயணிக்க வேண்டிய கூறுகளுள் ஒன்று இசை. ஆனால் இயக்குநர் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசையும் இசையமைப்பாளருமே திரைப்படத்தின் உருவாக்கங்களை தீர்மானிக்ககூடிய இடத்தில் இருப்பது என்னவொரு துரதிர்ஷ்டமான நிலை? சினிமா எனும் கலையில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் இது போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்னதான் கலை கலை என்று கூப்பாடு போட்டாலும் சினிமா என்பது பெரும் பொருளை கோரியும் வணிகத்தை சார்ந்தும் நிற்கிற விஷயம். எந்தவொரு ஊடகத்தையும் விட வலிமையுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக  நிழல் நாயகர்களை நிஜமென்று நம்பி அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க கூடிய செல்வாக்குள்ளதாக சினிமா ஊடகம் திகழ்கிறது. எனவே, ஒன்றைப் போட்டால் பத்தை எடுக்கலாம் என்கிற வணிக நோக்குச் சிந்தனையாளர்களாலும் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயலும் குறுக்கு வழியாக சினிமாவைப் பார்க்கிறவர்களாலும் இது ஈர்க்கப்படுவது இயல்புதான். எனவே இவர்கள் உருவாக்கும் திரைப்படங்களும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து காசு பிடுங்கும் உற்பத்தி பொருள்களாக  மாத்திரமே இருக்கும். வாடிக்கையாளர்கள் மாறினால் உற்பத்தியாளர்களும் அதற்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்கிற சந்தை விதிக்கேற்ப, தமிழ் பார்வையாளர்கள் தேய்வழக்கு மசாலா திரைப்படங்களை கறாராக புறக்கணித்து நல்ல முயற்சிகளை மாத்திரம் தொடர்ந்து ஆதரித்து வந்தால் தமிழ் சினிமாவின் போக்கும் அதற்கேற்ப மாறும். சினிமா ரசனை என்பதை பள்ளிக் கல்வித் திட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒற்றைக் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்த பாலுமகேந்திராவின் கருத்தும் இந்த சூழலை எதிர்பார்த்துதான் அமைந்திருக்கிறது. எனவே ரசனை மாற்றம் என்பதுதான் தமிழ் சினிமாவின் சிறப்பான எதிர்காலத்திற்கான வழி.

மேலும், இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சத்யஜித்ரே போன்ற, சமரசத்திற்கு உட்படாத இயக்குநர்கள் தமிழிலும் வருங்காலத்தில் தோன்றினால் தமிழ் சினிமாவையும் அதன் சாதனையாளர்களையும் பற்றிய உரையாடல்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளில் பதிவாவது தன்னாலேயே நிகழும். 

- உயிர்மை - டிசம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

2 comments:

manjoorraja said...

இந்தக் கட்டுரையை திரையுலகில் உள்ள ஒரு 10 சதவிகிதம் பேராவது வாசித்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் தவறுகள் என்ன என்பது கொஞ்சமாவது விளங்கும்.

Shekar Venkat said...

Dear Suresh

Very well presented comments.. deeply thought out and written.

I am deeply pained to see that despite some world class inherent talents and potential, Tamil Cinema has not really scaled up in Class...

You are absolutely right about Nagesh..It was most unfortunate that he was born in India, that too in TN. Truly marvelous artist,grossly underutilized!!!

Of late I find some of the Bollywood movies are very finely crafted and executed.. Their focus on the plot and screen play in such movies are very evident. One such movie I saw was "Chalo Delhi" ... The protagonist is Vinay Patak. ... Not a top notch celebrity... The plot is about two totally different characters travelling together from Mumbai to Delhi.. A wonderful performance by Vinay!!

In my opinion, there are 3-4 core issues(related to the film community)which compromise the quality of Tamil films..

1. Obnoxious hero worship(We just have to watch some of the TV Channels Award functions... the Mutual Admiration mill works overboard and turns that virtuous quality into, nothing less than sleaze).

2. Scarcity of good and serious plots ... I can't believe that we do not have good talented writers/Plots...It is the commitment to such plots, which is lacking.

3 Of course, the commercial compromise. This dilutes the intensity of the story and the screen play ( Sudden shots in Foreign locales for the duet songs.. etc)

4 Perverted creativity... Shockingly this is widely appreciated and the younger minds who aspire for a career in films get caught on a wrong path.

The streak of hope for good healthy cinema which shines with the odd 1 or 2 odd films every year, also quickly dies out with the release of big budget masala films