Friday, January 10, 2014

உலக சினிமா எனும கற்பிதம்


தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த கருத்தரங்கம் ஒன்றில் சினிமா ஆய்வாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியன், 'இந்திய சினிமா என்கிற ஒன்று இருக்கிறதா?' என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தார். பல்வேறு பிரதேசங்களால், கலாசாரங்களால், மொழிகளால் பிரிந்திருந்தாலும் ஜனநாயகம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவில் 'இந்திய சினிமா' என்கிற பதமே ஒரு மாயை என்கிற வகையில் பாண்டியனின் கருத்தை புரிந்து கொள்ளலாம். அந்தந்த பிரதேசத்து மக்களுக்காகவே அந்தந்த பிரதேசங்களின் சினிமாக்கள் உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரத்தை, மொழியை அறியாமல் அந்த சினிமாவை முழுவதுமாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இப்படி தடையாக, இது உள்ளிட்ட பல காரணிகள் இருக்கும் போது இந்திய சினிமா என எப்படி அழைக்க முடியும் என்பதும் அதன் நூற்றாண்டை கொண்டாட முடியும் என்பதும் புறந்தள்ள முடியாத கேள்வி. மேலும் இங்கு இந்திய சினிமா என்பதே ஹிந்தி சினிமா என்பதாக முன்வைக்கப்படும் அபத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாண்டியன் மேலும் உரையாடும் போது இன்னமும் நுட்பமாக சென்று  'தமிழ் சினிமா அல்லது தமிழர் சினிமா என்ற ஒன்றும் இருக்கிறதா?' என்கிற கேள்வியை முன்வைக்கிறார். 'இந்து புராணப் படங்களை இசுலாமியர்கள் பார்ப்பதில்லை. தேவர் மகன் திரைப்படத்தை ஒரு தலித் எப்படி கவனிப்பார், விஸ்வரூபம் திரைப்படத்தை ஒரு இசுலாமியர் எவ்வாறு புரிந்து கொள்வார்' என்பது போன்ற கேள்விகளின் இதைப் புரிந்து கொள்ள முடியும். 'இந்திய சினிமா என்பது தேசியக் கட்டமைப்பை அமைக்க முயன்று தோற்றுப் போனதொரு முயற்சி' என்பதாக அவர் சிறப்புரையின் நிறைவுப்பகுதி அமைந்திருந்தது.

இந்தக் கருத்தாக்கத்தின் மீது சிந்திக்கும் போது உலக சினிமா என்பதும் ஒரு கற்பிதம் எனும் முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. மேலும் வணிக சினிமாக்களினால் மூழ்கடிக்கப்பட்ட பொதுப்புத்தி சார்ந்த மனங்கள் 'உலக சினிமா' எனும் சொல்லை எப்போதுமே எள்ளி நகையாடக்கூடிய ஒரு விஷயமாகவே பார்க்கின்றன. தமிழ்நாடு என்கிற பிரதேசம் உலகப்பந்திற்குள் இருக்கும் போது அதில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் 'உலக சினிமா' எனும் வகைமையில் வராதா என்பது இவர்கள் சாமாத்தியமாக  கேட்பதாக நினைத்து கேட்கும் பாமரத்தனமான கேள்விகளுள் ஒன்று.

எனில் உலக சினிமா என்பது ஒரு கற்பிதந்தானா? அந்தந்த பிரதேசங்களின் தனித்தன்மைகளைத் தாண்டி கலை ரசனை என்கிற நோக்கில் பிரதானப்படுத்தி பார்த்தால் அப்படியொரு வகைமை இருப்பதைப் பாாக்கலாம். உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என்று விமர்சகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்படும் நூறு திரைப்படங்களை எடுத்துப் பார்த்தால் மொழி,கலாசாரம் இன்னபிற தடைகளைத்தாண்டி அதன் உள்ளடக்கம், அரசியல், திரைமொழி, காட்சிகளின் உருவாக்கம், நகர்வு ஆகிய பலவற்றில் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் கவனிக்கலாம். மானுடத்தின் ஆதாரமான சில பிரச்சினைகள், அகச்சிக்கல்கள், அதன் மீதான அக்கறை மற்றும் பரிவு, கரிசனம் ஆகிய உலகமெங்கிலும் எளிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதைக் காணலாம். உலகமெங்கிலும் சிலாகிக்கப்பட்ட இத்தாலிய திரைப்படமான டிசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்'ஸை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவனாலும் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொள்ள அப்போதைய இத்தாலியின் அரசியல் பின்புலத்தை அறிந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அது போலவே இத்தாலியில் உள்ள திரைப்பட பார்வையாளனாலும்  சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி'யை புரிந்து கொள்ள முடியும். வறுமைக்கு இடையிலும் மானுடத்தை பிணைத்து வைத்திருக்கும் அன்பை, பாசத்தை அதன் நெகிழ்வு என்கிற இழை இரு பிரதேசத்து மனிதர்களையும் முனைகளையும் இணைக்க முடியும்.


ஒரு காலத்தில் திரைப்படச் சங்கங்களினாலும் ஆர்வலர்களினாலுமே சாத்தியப்பட்ட உலக சினிமாக்களின் பரிச்சயம் நுட்பத்தின் சாத்தியத்தால் இன்று இணையத்தினாலும் குறுந்தகடுகளினாலும் எளிதில் கிடைக்கக்கூடிய விஷயமாக மாறி விட்டது. கள்ளத்தனமான, தார்மீக ரீதியற்ற நுகர்வு என்பது இதிலுள்ள பிரதான குறைகளுள் ஒன்று. விளம்பரத் தொல்லைகளையும் கலாசாரக் காரணங்களுக்காக துண்டிக்கப்படும் காட்சிகள் போன்றவற்றை சகித்துக் கொண்டால் சில தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை இன்று ஒளிபரப்புகின்றன. இந்திய அரசு முன்னின்று நிகழ்த்தும் சர்வதேச திரைவிழாவைத் தவிர சில மாநிலங்களில் அரசினாலும் சில மாநிலங்களில் அங்குள்ள தன்னார்வலர்களினாலும் திரைவிழாக்கள் சாத்தியப்படுகின்றன.

அவ்வகையில் சென்னையில் 11வது சர்வதேச திரைப்படவிழா சமீபத்தில் நிகழ்ந்து முடிந்தது.  'அரசியல் காரணமாக சில திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன' என்பது உள்ளிட்ட சில புகார்களுடனும் 'மற்ற திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சிறந்த படைப்புகள் என கருதப்பட்டவை ஏன் இதில் விடுபட்டுள்ளன' எ்ன்கிற கேள்விகளையும் தாண்டி  இந்த நிகழ்வில் இந்த வருடத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கின அதற்கான பரிந்துரைகளில் உள்ள பல நல்ல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகமே இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி.


LIFE FEELS GOOD - போலந்து - இயக்குநர் - Maciej Pieprzyca

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் குறித்த திரைப்படமென்றால் அது பார்வையாளர்களிடமிருந்து அனுதாபத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி விடுகின்ற விபத்தை பெரும்பாலும் தவிர்த்திருக்கிறது இத்திரைப்படம்.

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற Mateusz என்கிற இளைஞன், 'தான் ஒரு தாவரம் அல்ல' என்கிற செய்தியை உலகத்திற்கு தெரிவித்து விடுவதற்காக செய்யும் மெளன போராட்டத்தை மையமாகக் கொண்டது. தமிழில் உருவாகியிருந்தால் தெய்வ திருமகள் போல் ஓர் அழுகாச்சி காவியமாக உருவாகியிருக்கக்கூடிய இது பெரும்பாலும் அதற்கு நேர்எதிராக துள்ளலான நகைச்சுவையுடன் நகர்கிறது. படத்தின் பின்னணி இசையும் செலோவும் ஷெனாயும் வயலினும் கொண்டு அழுகையைக் கூட்டாமல் விசில் போன்ற கலாட்டாவான இசையின் மூலம் இந்த நகைச்சுவைக்கு துணை போகிறது.

கைகளும் கால்களும் செயல்படாமல் தன் உடலால் மாத்திரமே நகர முடிகிற நிலையில் உள்ள Mateusz-ன் காமத்திற்கான தேடலையும இயல்பாக முன்வைக்கிறது. மனிதனின் தன்னகங்காரம் பொதுவாக எதிர்மறையான குணாதிசயமாக சுட்டப்படுகிறது. ஆனால் ஒருவரின் தன்னங்காரம்தான் அவனுடைய வாழ்வை துடிப்புடன் தொடர்வதற்கான உந்து விசையாக இருக்கிறது. Mateusz ஒரு ஜடம் என்பதை சமூகம் வேறு வேறு வார்த்தைகளில் அவனுக்குச் சொல்ல அவனுடைய பெற்றோர்கள்தான் அவனுக்கு  மிக ஆதரவாக இருக்கின்றனர். குறிப்பாக அவனுடைய தந்தை அவனுடைய அகங்காரத்தை தட்டியெழுப்பிய படியே இருக்கிறார். எனவேதான் அவர் இறப்பிற்குப் பின்னும் அவருடைய சொல்லை மந்திரமாகக் கொண்டு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தன் இருப்பை வெற்றிகரமாக உலகிற்கு தெரிவிக்கிறான் Mateusz. உலகமே அவனைப் புறக்கணித்தாலும் அதனையே வகுப்பறையாகக் கொண்டு தன் கல்வியை அமைத்துக் கொள்கிறான்.

Dawid Ogrodnik என்பவர் Mateusz ஆக அற்புதமாக நடித்திருக்கிறார். எத்தனை அற்புதம் என்றால் இவர்தான் அந்த மாற்றுத் திறனாளியோ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களிடம் அழுத்தமாக ஏற்படுத்தும் அளவிற்கு அற்புதம். படத்தின் எண்ட் கார்ட் போடும் போது படத்தின் நிஜக்கதாநாயகனையும்  டேவிட்டின் இயல்பான தோற்றத்தையும் காணும் போதுதான் அவரின் அசுரத்தனமான உழைப்பும் நடிப்பும் நமக்கு பிடிபடுகிறது. கமல்,விக்ரம் வகையறாக்கள் கண்களில் இத்திரைப்படம் பட்டு விடக்கூடாதே என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனை.

BLUE IS THE WARMEST COLOUR - பிரெஞ்சு - இயக்குநர் - Abdellatif Kechiche.

இத்திரைவிழாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின திரைப்படம் இது, பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. பாலின அடையாளச் சிக்கலையும் அது குறித்த தேடலையும் கண்டடைதலையும் அடிப்படையாகக் கொண்டது. LGBT சமூகம் குறித்து பொதுப்புத்தி கொண்டிருக்கும் பல தவறான முன்முடிவுகளை சிதறடிக்கிறது இத்திரைப்படம். ஒருபாலின உறவுக்காரர்கள், முறையற்ற பாலுறவின் இச்சைக்காகவே  அந்த தற்காலிக உறவை அமைத்துக் கொண்டிருக்கிறவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், இயற்கைக்கு முரணான உறவைக் கொண்டிருப்பவர்கள், குடும்பம் என்கிற நிறுவனத்தின் சிதைவிற்குக் காரணமானவர்கள் என்கிற பொதுச்சமூகத்தின் பல தவறான எண்ணங்களை மாற்றியமைக்கிறது இத்திரைப்படம்.

மூன்று மணி நேரத்திற்கு நீளும் இத்திரைப்படம், அட்லி மற்றும் லியா ஆகிய இரண்டு பெண்களுக்குள்ள பாலின உறவையும் அதைத் தொடரும் அகச்சிக்கல்களையும் விரிவாகவே முன்வைக்கிறது. பொதுச் சமூகத்தில் குடும்பம் என்று அறியப்படும் அமைப்பைப் போலவே ஒருபாலின உறவிலும் குடும்ப உறவில் ஏற்படும் அதே பாசமும் பிணைப்பும் பிரிவின் போது ஏற்படும் துயரமும் வலியும் கற்பும் தன் துணையை மீண்டும் அடைவதற்கான தேடலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அட்லி என்கிற இளைஞியின் வாழ்க்கையின் ஒரு துண்டை ரத்தமும் சதையுமாக பார்த்த உணர்வைத் தருகிறது. சர்வதேச திரைப்படங்களுக்கான சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துமளவிற்கு உடனுக்குடன் நிகழும் நீளமான பாலுறவுக்காட்சிகள் உள்ளன. ஒருபாலின உறவு குறித்த சர்ச்சைகளும் சட்டமுடிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் அதற்கு மாற்றான வெளிச்சத்தையும் புரிதலையும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

YOUNG AND BEAUTIFUL - பிரெஞ்சு - இயக்குநர் -  François Ozon

தன்னடையாளத்தையும் பதின்ம வயதின் சிக்கலையும் பற்றி உரையாடும் திரைப்படம். 17 வயதான பள்ளி மாணவியான இசபெல்லா, அது தரும் சாகச உணர்விற்காக பாலியல் தொழிலை மேற்கொள்கிறாள். சக வயது இளைஞனுடன் முதலில் உறவு கொள்ளும் இவள் அதன் மூலம் அடையும் வெற்றிட உணர்வை நிரப்ப, நடுத்தர வயது மனிதர்களாகத் தேடி உறவு கொள்கிறாள். இவளின ஒரு வாடிக்கையாளர் மாரடைப்பில் இறந்து போக அதன் பிறகே இந்த விபரீதம் இவளது குடும்பத்திற்கு தெரியவருகிறது. உளவியல் நிபுணருடனான உரையாடலின் போதும் இவளுடைய பிரச்சினையின் வேர் கண்டுபிடிக்க முடிவதில்லை. 'உங்களுடைய கட்டணம் இத்தனை குறைச்சலாதனா?" என்று புன்னகைக்கிறாள். இவளுடைய மறுபுறம் அறிந்த பிறகு குடும்பத்தில் நிகழும் குழப்பங்களை மெலிதான நகைச்சுவையுடன் மீதப்பகுதிகள் சொல்கிறது. இளம் வயதிலேயே இவளின் தந்தையின் பிரி்ந்து விடும் காரணத்தின் உளவியல் பின்னணியில் இவள் நடுத்தர மனிதர்களை நாடுவதை புரிந்து கொள்வதின் மூலம் இத்திரைப்படத்தை அணுகலாம் என தோன்றுகிறது.

A TOUCH OF SIN - சீனா - இயக்குநர் -    Jia Zhangke

சமகால சீனாவின் முகம்.நவீன பொருளாதார உலகம் சீனாவின் நகர, கிராம தனிநபர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் வன்முறையையும் நிகழ்த்துகிறது என்பதை விவரிக்கும் திரைப்படம். சாதாரண தனிநபர்களின் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்குமான ஊற்றுக்கண் எங்கிருந்து பிறக்கிறது என்கிற விசாரணையின் மீதாகவும்  இத்திரைப்படத்தை அணுகலாம்.

பொதுச் சொத்தில் ஊழல் செய்யும் கிராம மேயரையும் அதற்கு துணை போகிறவர்களையும் சுட்டுக் கொல்லும் ஒருவர், குடுமபத்திற்கு தெரியாமல் அதன் பராமரிப்பிற்காக வழிப்பறியில் ஈடுபட்டு அதன் பொருட்டு கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு மனிதன், ஏற்கெனவே திருமணமானவரை காதலித்து அது நிறைவேறாத தோல்வியில் இடம்மாறி அங்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கொல்லும் ஒரு பெண், வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு சந்திக்கும் பாலியல் தொழிலாளியின் மீது காதல் கொண்டு அது நிறைவேறாமல் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வறுமையை எதிர்கொள்ளவியலாத மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளைஞன். இந்த நான்கு நபர்களின் மீதான தனித்தனி இழைகளில் இத்திரைப்படம் விரிகிறது.

எந்தவொரு வன்முறைக்கும் குற்றத்திற்கும் பின்னணியை ஆராய்ந்தால் அது ஒரே நாளில் நிகழ்வதாக அல்லாமல் அதற்குப் பின்னால் சிறுக சிறுக சேரும் பல அழுத்தங்களும் சூழல்களும் ஒரு கணத்தில் சடாரென வெடிப்பதான குற்றம் சார்ந்த உளவியல் ஆராய்ச்சியையும் இத்திரைப்படம் நிகழ்த்துவதாகப் படுகிறது.

OMAR - பாலஸ்தீனம் - இயக்குநர் -      Hany Abu-Assad

Paradise Now என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தை உருவாக்கிய இந்த இயக்குநரின் திரைப்படங்களை பாலஸ்தீனிய அரசியல் பிரச்சினையின் மீதாக புரிந்து கொள்ள முடியும். அரசியல் பிரச்சினைகளும் அதைச் சார்ந்து இயங்கும் வன்முறையும் அமைப்புகளும் தனிநபர்களின் வாழ்வில் எத்தனை தூரத்திற்கு இடையூறு செய்கிறது என்பதை இத்திரைப்படம் உரையாடுகிறது. ஒரு வணிக சினிமாவிற்குரிய திரைக்கதையின் சுவாரசியத்தையும் சாகசத்தையும் இத்திரைப்படம் கொண்டிருந்தாலும் படத்தின் மையம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவது. ஓமர் என்கிற இளைஞனின் காதலிலும் இளவயது முதலே நண்பர்களாக இருப்பவர்களுக்குள்ளும் மத அரசியல் காரணமாக நிகழும் பகைமையும் அரசியலும் அந்த தனிநபர்களின் வாழ்வில் குறுக்கிட்டு அவர்களின் இயல்பான உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளியேற்றி தங்களுக்கான பகடைக்காய்களாக மாற்றும் அபத்தமான துயரங்கள் இத்திரைப்படத்தில் விரிகின்றன. 

- உயிர்மை - ஜனவரி 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

No comments: