Tuesday, January 07, 2014

பிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை


பிரமிளின் நினைவுநாளன்று (06.01.2014) அவர் குறித்த நினைவு கூறல் நிகழ்ச்சியொன்றை பிரமிளின் தீவிரமான வாசகர்களுள் ஒருவரான அகநாழிகை வாசுதேவன், பிரமிள் படைப்புகளின் தொகுப்பாசிரியரான கால சுப்பிரமணியனின் ஒருங்கிணைப்போடு ஏற்பாடு செய்திருந்தார். பிரமிளின் இன்னொரு தீவிர வாசகரான ஜ்யோவ்ராம் சுந்தர் (ஜ்யோவ்ராம் என்பதே பிரமிள் தானே சூட்டிக் கொண்ட பல பெயர்களில் ஒன்று) அவர்களோடு இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். தன்னுடைய நிறுவனத்தின் பெயரையே எழுத்தாளர் நகுலனின் பெயரால் அமைக்குமளவிற்கு அதிதீவிர கொலைவெறி இலக்கிய வாசகர் ஜ்யோவ்ராம் சுந்தர் என்பது உபதகவல்.

எழுத்தாளர் பிரமிள் அளவிற்கு சர்ச்சையானதொரு இலக்கிய பிம்பம் தமிழ் கூறும் நல்லுலகில் வேறு எந்தவொரு எழுத்தாளருக்காவது கிடைத்திருக்குமா என தெரியவில்லை. அவரின் தீவிர வாசகர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரின் பெரும்பாலான படைப்புகளை வாசித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு குறிப்பாக பிரமிளை பெரிதும் அறிந்திராத சமகால தலைமுறைக்கு பிரமிள் என்பவரின் சித்திரம் 'சண்டைக்காரர், கிறுக்கர், கோபக்காரர், எக்சண்ட்ரிக்,' என்பது போன்ற பெரும்பாலும் எதிர்மறையானதாகவே இருந்திருக்கும். சு.ரா.வின் பிரமிள் குறித்த நினைவோடை நூலை மாத்திரம் வாசித்தவர்களுக்கு இந்த எண்ணம் உறுதிப்பட்டிருக்கக்கூடும். இதை மாற்றியமைக்கும் விதமாக அமைந்திருந்தது இந்நிகழ்வு. பிரமிளுடன் பழகியவர்கள், விலகி விலகி பழகியவர்கள், சண்டை போட்டு பழகியவர்கள் போன்றவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் அமைந்திருந்தது.


முதலில் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன், அருவம், ஸ்தூலம் ஆகிய விஷயங்களை கவிதையில் எப்படி பயன்படுத்துவது என்பதை தனக்கு சொல்லித்தந்தவர் பிரமிள் என்கிற செய்தியோடு இன்னும் பிற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'ஓர் எழுத்தாளரை அவரது இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அவரோடு பழகியதில் ஏற்பட்ட சாதாரண அனுபவங்களின் மூலமாகவும் நிரந்தரமாக எண்ணத்தில் பதிய வைத்துக் கொள்ள முடியும்' என்ற எம்.டி.முத்துக்குமாரசுவாமி, முதல் சந்திப்பிலேயே பிரமிள் தனக்கு டீக்கடையில் வடையை ஊட்டி விட்ட சம்பவத்தை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார். குற்றாலம் கவிதையரங்கில் பிரமிளோடு ஆங்கிலத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தையும்.

அவருக்கே உரிய பிரத்யேகமான உரையாடல் தொனியில் பிரமிள் குறித்த பல அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். 'பிரமிளின் குணாதியசத்தைப் பற்றி விவரித்துக் கூறியும் அவரைச் சந்திக்க விரும்பிய ஒரு இளம் கவிஞரை, பிரமிளிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை பிரமிள் தன்னுடைய வழக்கமான அலட்சிய பாணியில் அணுகியதால் முகம் சுண்டிப் போன இளைஞரை பின்பு பிரமிள் தன்னுடன் ஆதரவாக அணைத்துச் சென்றதையும் மறுநாள் அந்த இளைஞர் பிரமிளுடன் உணவருந்திக் கொண்டே பிரமிளின் கவிதையைப் பற்றிய சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்ததையும் வழக்கமாக இது போன்ற தருணங்களில் வெகுண்டெழும் பிரமிள், மிக நிதானமாக அவருக்கான விளக்கங்களை அளித்தது பற்றியுமான சம்பவத்தை பகிர்ந்தார். அமெரிக்கன் நூல்நிலைய அனுபவங்களையும், கால்நடையாகவே தூரத்தைக் கடக்கும் வழக்கமுள்ள பிரமிள் போகும் வழியெல்லாம் பிச்சைக்காரர்களுடன் உரையாடும் சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கவிஞர் இந்திரன், பிரமிளின் நூல் தொகுதியொன்றின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படத்தை கையெழுத்துடன் பிரசுரித்தது பற்றிய அனுபவத்தையும் அது குறித்த தயாரிப்புகளைப் பற்றின உரையாடலில் முகம் பார்க்கும் கண்ணாடியொன்றில் அந்த அட்டைப்படத்தை சரிபார்த்துக் கொடுத்து விட்டு பின்பு அது கைதவறி கீழே விழுந்த போது, இந்திரனின் வீட்டிலிருந்தவர்கள் அதை அபசகுனமாக நினைக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் போது, பிரமிளோ  கீழேயிருந்த கண்ணாடித் துண்டுகளைப் பாாத்து 'எத்தனை அழகாக உடைந்திருக்கிறது' என்று சிறுவனொருவனின் மனநிலையில்  அதை வியந்ததைப் பற்றின அனுபவத்தைப் பகிர்ந்தார்.


'வஞ்சிக்கப்பட்ட கவிஞன் பிரமிள்' என்று ஆவேசமாக தன் உரையைத் துவங்கிய கெளதம சித்தார்த்தன், பாரதிக்குப் பிறகு பிரமிளைப் போல ஒரு கவியாளுமை தமிழில் உருவாகவே இல்லை' என்றார். பாாப்பன அரசியலால் ஒருபுறம் புறக்கணிக்கப்பட்ட பிரமிள், அவரது ஆன்மீக தேடலை தவறாகப் புரிந்து கொண்ட இடது சாரிக்காரர்களாலும் புறக்கணிக்கப்பட்டார். 'சண்டைக்காரன், கிறுக்கன்' என்று பிரமிள் குறித்த எதிர்மறையான சித்திரம் தமிழ் சூழலில் திட்டமிட்டே தொடர்ந்து அடையாளப்படு்த்தப்படும் அரசியல் தொடர்கிறது' என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் கோணங்கி எழுதிய அனுப்பிய உரையிலிருந்து சில பகுதிகளை வாசித்தார் வாசுதேவன். 

பிரமிளோடு  நேரில் உரையாடி பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காததை நொந்து கொண்ட எழுத்தாளர் ராசேந்திர சோழன் 'எழுத்தாளர்களோடு பழகி பிம்பங்கள் உடைபடாமலிருப்பதில் உள்ள செளகரியம் காரணமாக அப்படியிருப்பதும் ஒருவகையில் நல்லதே' என்றவர், பிரமிளின் சில கவிதைகளை உணர்ச்சிகரமாக வாசித்துக் காட்டினார். வெளி ரங்கராஜனும் பிரமிள குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்.

இலக்கியம் என்கிற தொடர்பில் அல்லாது பிரமிளோடு பழகிய அருள் சின்னப்பன், பிரமிளை ஒரு 'ஞானி' என்கிறார். 'பிரமிள் எப்போதும் அகரீதியாக  உயர்ந்ததொரு இடத்தில் உலவிக் கொண்டிருப்பவர், அவரோடு உரையாடுகிற எவரும் அந்த நிலையை அடைய முடியாமல் உரையாடும் போது இயல்பாகவே அவருக்கு கோபம் வந்து விடுகிறது. இதுவே பலர் அவரைச் சண்டைக்காரராக கருதிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்றவர் பிரமிள் எழுத்துக்கலையோடு சிற்பம், ஓவியம், நாடகம் என்று இன்னபிற கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதனாலேயே பாரதியை விடவும் உயர்ந்தவர் எனும் போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் 'பிரமிளை உயர்த்திச் சொல்ல பாரதியை கீழிறக்க வேண்டியதில்லை' என்று ஆவேசமடைந்தார். 'பிரமிள் சினிமாவிற்கு பாடல் எழுதியிருக்கிறாரா?" என்று இந்த இளைஞர் பின்பு கேட்டது ஒரு அபத்தமான சுவாரசியம்.

பிரமிளுடன் எவ்வித சர்ச்சைகளும் இன்றி அதிக வருடங்கள் அவருடன் பழகிய தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம், நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய போது, பிரமிள் குறித்த பல நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு பிரமிளின் படைப்புகள், கடிதங்கள், பேட்டிகள் போன்றவை முழு தொகுப்பாக வரவேண்டியதின் அவசியத்தையும் அதில் சில நூல்கள் வந்திருப்பதையும் இன்னும் பல நூல்கள் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதையும் மிக இயல்பான தொனியில் பகிர்ந்தார்.


suresh kannan

2 comments:

rajasundararajan said...

நன்றி, சுரேஷ்! மிகக் கச்சிதமாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

மணல்வீடு said...

பிரமிள் நினைவு கூறல் நிகழ்வு குறித்த உங்கள் பதிவு நன்றாக இருந்தது ...

ஹரி