Tuesday, January 21, 2014

புத்தக கண்காட்சி 2014

ஒருசேர நிறைய புத்தகங்களைப் பார்த்தாலே எப்போதும் நான் திகைத்துப் போய் விடுவேன். தலையெல்லாம் கிறுகிறுத்து வலிக்க ஆரம்பித்து விடும். ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் எனக்கு எப்போதுமே நிகழ்வதுதான் இது. கண்காட்சியில் என்று மாத்திரமல்ல, கன்னிமரா நூல்நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அடுக்குகளில் அத்தனை புத்தகங்களைப் பார்க்கும் போது தலைசுற்றும். அங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றும். புத்தகங்களின் காதலன் என்று ரகசிய கர்வம் கொண்டிருக்கும் நான் ஆழ்மனதில் புத்தகங்களை தீவிரமாக வெறுக்கிறேனோ என்று கூட தோன்றுகிறது. இம்முறையும் அப்படியே. அத்தனை மக்கள் கூட்டத்தையும் புத்தகங்களின் மலையையும் பார்க்கும் போது திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை மாதிரி திகைப்பாக இருந்தது. புத்தகங்களை ஒருசேர பார்க்க பிடிக்காதது போல் நெரிசலையும் அறவே பிடிக்காது. எனவேதான் கூட்டமில்லாத இறுதி நாளை தேர்ந்தெடுத்தேன்.

உண்மையில் தனக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பது ஒரு கலை. சிலர் எவ்வாறு மிகச் சரியாக தனக்கு வேண்டுமென்கிற புத்தகத்தை மாத்திரம் எடுத்து விட்டு கறாராக அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

அங்கிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் இல்லாவிட்டாலும் கூட, நான் வாங்க விரும்புகிற அத்தனை புத்தகங்களையும் அங்கிருந்து எடுத்து வர முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. புத்தகங்களை தேர்ந்தெடுப்பது பற்றி சொன்னேன் அல்லவா? நீங்கள் மிக அதிகமாக நேசிக்கிற புத்தகங்களை உங்களால் வாங்காமல் வரவே முடியாது. ஒவ்வொரு புத்தகமும் தனக்கான உபாசகனை எப்படியாவது அழைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது.

இம்முறை எந்தப்புத்தகமும் வாங்கக் கூடாது என்று வருடா வருடம் தோன்றுகிற பிரசவ வைராக்கியம் தோன்றினாலும் அந்த முடிவை சற்று தளர்த்திக் கொண்டு சினிமா தொடர்பாக தமி்ழில் வந்திருக்கும் முக்கியமான நூற்களை மாத்திரம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். சிவராமன் குறுஞ்செய்தியில் சில நூல்களை பரிந்துரைத்திருந்தார்.

சினிமா தொடர்பாக தமிழில் வெளிவந்திருக்கும் அனைத்து நூல்களையும் பற்றிய ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. சினிமா பற்றி தமிழில் எழுதப்படும் புத்தகங்களில்  நிறைய போலி நூல்களும் உண்டு. அசல்களும் உண்டு.  ஒவ்வொரு சினிமாவையும் ஆத்மார்த்தமாக கண்டு அவற்றில் மூழ்கி கவித்துவமான ரசனையுடன் எழுதப்படும் நல்ல புத்தகங்கள் உண்டு. இணையத்திலும் மற்ற நூல்களிலும் கிடைக்கும் தகவல்களையும் பத்திகளையும் கொண்டு எப்படியோ உருவாக்கப்படும் புத்தகங்களும் உண்டு. சற்று மெனக்கிட்டால் இவற்றிலுள்ள வேறுபாட்டை கண்டுபிடித்து விடலாம்.

அப்படியாக இன்று புத்தக கண்காட்சியில் வாங்கின நூற்களின் பட்டியல்.
  • புதிய அலை இயக்குநர்கள் - வெ.ஸ்ரீராம் - க்ரியா
  • திரைப்பட மேதைகள் - எஸ்.ஆனந்த் - தமிழினி
  • திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் - பிரேம் - காட்சிப்பிழை
  • சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன் - கற்பகம் புத்தகாலயம்
  • மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் - அம்ஷன் குமார் - சொல்ஏர் பதிப்பகம்
  • ஆசை முகங்கள் - (தொகுப்பு) சி,மோகன் - கயல் கவின் பதிப்பகம்
  • சினிமா: சட்டகமும் சாளரமும் - சொர்ணவேல் - நிழல்
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே - தியோடர் பாஸ்கரன் - காலச்சுவடு
  • மேதைகளின் குரல்கள் - ஜா.தீபா - மலைகள்
  • இன்னொருவனின் கனவு - குமரகுருபரன் - அந்திமழை
  • எம்தமிழர் செய்த படம் - தியோடர் பாஸ்கரன் - உயிர்மை
  • பாம்பின் கண் - தியோடர் பாஸ்கரன் - கிழக்கு
  • நிகழ் திரை - அய்யனார் விஸ்வநாத் - வம்சி
  • முகங்களின் திரைப்படம் - செழியன் - உயிர் எழுத்து

கிழக்கு, ஹரன் பிரசன்னாவின் பரிந்துரையின் பேரில்:
  • ஆர்.எஸ்.எஸ் வரலாறு - சஞ்சீவ் கேல்கர் - கிழக்கு
  • லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின் - கிழக்கு

***

சந்தித்து உரையாடிய பிரமுகர்கள் (நினைவிலிருந்து): மனுஷ்யபுத்திரன், கவிஞர் ராஜசுந்தரராஜன், தமிழினி வசந்தகுமார், இளங்கோ கல்லாணை, சுபகுணராஜன், தளவாய் சுந்தரம், சுதீர் செந்தில், வாசுதேவன் (அகநாழிகை), இகாரஸ் பிரகாஷ், என்.சொக்கன், ஹரன் பிரசன்னா, வேடியப்பன்.

காலச்சுவடு அரங்கில் சமகால இலக்கிய வழிகாட்டி கிருஷ்ணபிரபு வருகிறவர்களையெல்லாம், 'பெருமாள்முருகனை படிக்காட்டி நாசமாய்ப் போயிடுவிங்க, பாத்துக்கங்க' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

விழியன் செல்வன், 'அகில உலக குழந்தை எழுத்தாளர்' ஆவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். பிடித்த பாடல் என்னவென்று கேட்டால் கூட மழலையில் ' நிலா நிலா ஓடிவா' என்று பாட ஆரம்பித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. அமிதாப்பச்சன் அளவிற்கு உயர்ந்து வளர்ந்து நிற்கிற ஒருவரை குழந்தை எழுத்தாளர் என்று நம்ப சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஆறு வயது முதல் அறுபது வயதுவரை வாசகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அதிஷாவையும் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். வயதான, நடுத்தர, குழந்தை வயதுள்ள என்று மூன்று நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திடம் ஆவலாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆறுவயதுக் குழந்தை, குஜிலிகும்பானின் கவிதை ஏதாவதை எழுத்துக் கூட்டியாவது வாசித்திருக்குமோ என்னமோ, அதிஷாவையே திகிலாக பார்த்துக் கொண்டிருந்தது.

***

அரங்கிற்கு வெளியே திருவிழாக்கூட்டம் போலத்தான் இருக்கிறது. பெரிய ராட்டினமும் அப்பளமும்தான் இல்லை. மற்றபடி மக்கள் உற்சாகமாக தின்பண்டங்களை வாங்கியும் சாப்பிட்டும் கொண்டிருக்கிறார்கள். 25 ஊசி பத்து ரூபாயில் இருந்து சுண்டல் வரை என்னெ்னமோ விற்கிறது. மாயவரம் காபி நன்றாக இருக்கிறதென்று மக்கள் சொன்னார்களே என்று, 'சாப்பிட வாங்க' போனேன். பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு பெரிய அளவு ஸ்பூனில் தரப்பட்ட அந்த திரவம்தான் காஃபி என்றால் மாயவரம் பக்கம் போகவே நான் தயாராக இல்லை.

கனத்த பையுடனும்  காலியான பர்ஸ் உடனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான் மனதிலிருந்து சில நூல்களை வாங்காமல் விட்டு விட்டேனே என்று தோன்றியது. தோன்றினாலும் வாங்க முடிந்திருக்காது. சுரண்டுவதற்கு பர்ஸிலும் ஒன்றுமில்லை. க்ரெடிட் கார்ட் பழக்கமுமில்லை. வாங்க முடியாமல் என்னை நானே நொந்து கொண்ட நூற்களில் ஒன்று - எனக்குப் பிடித்த எழுத்தாளரான சுகுமாரனின் 'வெலிங்டன் நாவல்'.

அவ்வளவுதான்.
suresh kannan

2 comments:

rajasundararajan said...

நானும் 'வெலிங்க்டன்' வாங்கவில்லை. பிறகு எப்படியும் வாங்குவேன். கண்காட்சியில் 10% கழிவுதான், ஆனால் டிஸ்கவரி புக் பேலஸில் 20% கழிவு எனக்கு. பிரமிளுக்குத் தவிர வேறொரு தமிழ்க் கவிஞருக்கும் உரைநடை கைகூடவில்லை என்றொருவர் வாசித்தவர் சொன்னார்.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியே ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனமும் பதிவு செய்தால், பலருக்கும் பயன் தரும்... நன்றி...