Thursday, January 30, 2014

கோலி சோடா




இதன் திரைக்கதையிலேயே  தமிழ் சினிமாவிற்கான ஒரு செய்தியும் அடங்கியிருக்கிறது.

இத் திரைப்படத்தின் உள்ளடக்கத்தின் படி, பதின்ம வயது இளைஞர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு மிகப் பெரிய வில்லனை தோற்கடித்து தங்களுக்கான அடையாளத்தை மீட்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நிலவும் ஹீரோயிசம் என்கிற அபத்த பிரம்மாண்டத்தை சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் தோற்கடிப்பதற்கான சூழலின் புதிய வெளிச்சத்தை அதன் சமகால வாய்ப்பை இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது எனலாம்.  இது தொடர வேண்டும். சிறுவர்களா, இளைஞர்களா என்று கூட குறிப்பிட முடியாத நான்கு நபர்களை பிரதான பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்த அந்த துணிச்சலுக்காகவே  பிரத்யேகமான பாராட்டு.

'பசங்க' திரைப்படத்தின் வெற்றி இந்த முயற்சிக்கு உத்வேகமாக அமைந்திருக்கலாம் என யூகிக்கிறேன். அதில் சிறுவர்களாக கண்டவர்களையே இதில் சற்று வளர்ந்தவர்களாக காண முடிவது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தாலும் அத்திரைப்படத்தில் இருந்த துள்ளலும் குறும்பத்தன்மையும் அப்பாவித்தனமும் இதில் காணாமற் போவது சோகம்.

சினிமாத்தனமானதாக இருந்தாலும் வசனங்கள் சில இடங்களில் பாராட்ட வைக்கிறது. (பாண்டிராஜ்).  பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும்படியாகவே திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாகவே அமைகிறது. சாதாரணமாகத் துவங்கும் திரைக்கதை சம்பவங்களில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக அதன் வேகத்தை இயல்பாகவே கைப்பற்றுகிறது. சிறுவர்கள் உட்பட ஏறக்குறைய அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாகவே நடித்துள்ளனர். (குறிப்பாக பெரிய வில்லனும் மயில் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளவரும்).

ஆனால் இந்த திரைப்படத்தின் மிகப் பெரிய பின்னடைவு இதன் நம்பகத்தன்மை. சிறுவர்கள் அவர்களுக்கு முன்நிற்கும் சிக்கலை அவர்களால் சமாளிக்கக்கூடிய அளவிற்கான புதிய யுக்திகளால் திரைக்கதையை அமைத்திருந்தால் படத்தின் சிறப்பு பல மடங்கு கூடியிருக்கும். மாறாக அவை சினிமானத்தனமாகவே உள்ளதால் நெருடிக் கொண்டேயிருந்தது. காட்சிகளில் ஒன்ற முடியாதபடி பின்னணி இசை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. பாடல்கள் கொடூரம். காதல் என்கிற வஸ்து  இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்பது பலமுறை நிரூபணமாகியிருந்தாலும் அதை அளவாக பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

இயக்குநர் விஜய் மில்டனின் நல்ல முயற்சி. 

suresh kannan

Tuesday, January 21, 2014

புத்தக கண்காட்சி 2014

ஒருசேர நிறைய புத்தகங்களைப் பார்த்தாலே எப்போதும் நான் திகைத்துப் போய் விடுவேன். தலையெல்லாம் கிறுகிறுத்து வலிக்க ஆரம்பித்து விடும். ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் எனக்கு எப்போதுமே நிகழ்வதுதான் இது. கண்காட்சியில் என்று மாத்திரமல்ல, கன்னிமரா நூல்நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அடுக்குகளில் அத்தனை புத்தகங்களைப் பார்க்கும் போது தலைசுற்றும். அங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றும். புத்தகங்களின் காதலன் என்று ரகசிய கர்வம் கொண்டிருக்கும் நான் ஆழ்மனதில் புத்தகங்களை தீவிரமாக வெறுக்கிறேனோ என்று கூட தோன்றுகிறது. இம்முறையும் அப்படியே. அத்தனை மக்கள் கூட்டத்தையும் புத்தகங்களின் மலையையும் பார்க்கும் போது திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை மாதிரி திகைப்பாக இருந்தது. புத்தகங்களை ஒருசேர பார்க்க பிடிக்காதது போல் நெரிசலையும் அறவே பிடிக்காது. எனவேதான் கூட்டமில்லாத இறுதி நாளை தேர்ந்தெடுத்தேன்.

உண்மையில் தனக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பது ஒரு கலை. சிலர் எவ்வாறு மிகச் சரியாக தனக்கு வேண்டுமென்கிற புத்தகத்தை மாத்திரம் எடுத்து விட்டு கறாராக அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

அங்கிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் இல்லாவிட்டாலும் கூட, நான் வாங்க விரும்புகிற அத்தனை புத்தகங்களையும் அங்கிருந்து எடுத்து வர முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. புத்தகங்களை தேர்ந்தெடுப்பது பற்றி சொன்னேன் அல்லவா? நீங்கள் மிக அதிகமாக நேசிக்கிற புத்தகங்களை உங்களால் வாங்காமல் வரவே முடியாது. ஒவ்வொரு புத்தகமும் தனக்கான உபாசகனை எப்படியாவது அழைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது.

இம்முறை எந்தப்புத்தகமும் வாங்கக் கூடாது என்று வருடா வருடம் தோன்றுகிற பிரசவ வைராக்கியம் தோன்றினாலும் அந்த முடிவை சற்று தளர்த்திக் கொண்டு சினிமா தொடர்பாக தமி்ழில் வந்திருக்கும் முக்கியமான நூற்களை மாத்திரம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். சிவராமன் குறுஞ்செய்தியில் சில நூல்களை பரிந்துரைத்திருந்தார்.

சினிமா தொடர்பாக தமிழில் வெளிவந்திருக்கும் அனைத்து நூல்களையும் பற்றிய ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. சினிமா பற்றி தமிழில் எழுதப்படும் புத்தகங்களில்  நிறைய போலி நூல்களும் உண்டு. அசல்களும் உண்டு.  ஒவ்வொரு சினிமாவையும் ஆத்மார்த்தமாக கண்டு அவற்றில் மூழ்கி கவித்துவமான ரசனையுடன் எழுதப்படும் நல்ல புத்தகங்கள் உண்டு. இணையத்திலும் மற்ற நூல்களிலும் கிடைக்கும் தகவல்களையும் பத்திகளையும் கொண்டு எப்படியோ உருவாக்கப்படும் புத்தகங்களும் உண்டு. சற்று மெனக்கிட்டால் இவற்றிலுள்ள வேறுபாட்டை கண்டுபிடித்து விடலாம்.

அப்படியாக இன்று புத்தக கண்காட்சியில் வாங்கின நூற்களின் பட்டியல்.
  • புதிய அலை இயக்குநர்கள் - வெ.ஸ்ரீராம் - க்ரியா
  • திரைப்பட மேதைகள் - எஸ்.ஆனந்த் - தமிழினி
  • திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் - பிரேம் - காட்சிப்பிழை
  • சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன் - கற்பகம் புத்தகாலயம்
  • மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் - அம்ஷன் குமார் - சொல்ஏர் பதிப்பகம்
  • ஆசை முகங்கள் - (தொகுப்பு) சி,மோகன் - கயல் கவின் பதிப்பகம்
  • சினிமா: சட்டகமும் சாளரமும் - சொர்ணவேல் - நிழல்
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே - தியோடர் பாஸ்கரன் - காலச்சுவடு
  • மேதைகளின் குரல்கள் - ஜா.தீபா - மலைகள்
  • இன்னொருவனின் கனவு - குமரகுருபரன் - அந்திமழை
  • எம்தமிழர் செய்த படம் - தியோடர் பாஸ்கரன் - உயிர்மை
  • பாம்பின் கண் - தியோடர் பாஸ்கரன் - கிழக்கு
  • நிகழ் திரை - அய்யனார் விஸ்வநாத் - வம்சி
  • முகங்களின் திரைப்படம் - செழியன் - உயிர் எழுத்து

கிழக்கு, ஹரன் பிரசன்னாவின் பரிந்துரையின் பேரில்:
  • ஆர்.எஸ்.எஸ் வரலாறு - சஞ்சீவ் கேல்கர் - கிழக்கு
  • லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின் - கிழக்கு

***

சந்தித்து உரையாடிய பிரமுகர்கள் (நினைவிலிருந்து): மனுஷ்யபுத்திரன், கவிஞர் ராஜசுந்தரராஜன், தமிழினி வசந்தகுமார், இளங்கோ கல்லாணை, சுபகுணராஜன், தளவாய் சுந்தரம், சுதீர் செந்தில், வாசுதேவன் (அகநாழிகை), இகாரஸ் பிரகாஷ், என்.சொக்கன், ஹரன் பிரசன்னா, வேடியப்பன்.

காலச்சுவடு அரங்கில் சமகால இலக்கிய வழிகாட்டி கிருஷ்ணபிரபு வருகிறவர்களையெல்லாம், 'பெருமாள்முருகனை படிக்காட்டி நாசமாய்ப் போயிடுவிங்க, பாத்துக்கங்க' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

விழியன் செல்வன், 'அகில உலக குழந்தை எழுத்தாளர்' ஆவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். பிடித்த பாடல் என்னவென்று கேட்டால் கூட மழலையில் ' நிலா நிலா ஓடிவா' என்று பாட ஆரம்பித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. அமிதாப்பச்சன் அளவிற்கு உயர்ந்து வளர்ந்து நிற்கிற ஒருவரை குழந்தை எழுத்தாளர் என்று நம்ப சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஆறு வயது முதல் அறுபது வயதுவரை வாசகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அதிஷாவையும் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். வயதான, நடுத்தர, குழந்தை வயதுள்ள என்று மூன்று நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திடம் ஆவலாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆறுவயதுக் குழந்தை, குஜிலிகும்பானின் கவிதை ஏதாவதை எழுத்துக் கூட்டியாவது வாசித்திருக்குமோ என்னமோ, அதிஷாவையே திகிலாக பார்த்துக் கொண்டிருந்தது.

***

அரங்கிற்கு வெளியே திருவிழாக்கூட்டம் போலத்தான் இருக்கிறது. பெரிய ராட்டினமும் அப்பளமும்தான் இல்லை. மற்றபடி மக்கள் உற்சாகமாக தின்பண்டங்களை வாங்கியும் சாப்பிட்டும் கொண்டிருக்கிறார்கள். 25 ஊசி பத்து ரூபாயில் இருந்து சுண்டல் வரை என்னெ்னமோ விற்கிறது. மாயவரம் காபி நன்றாக இருக்கிறதென்று மக்கள் சொன்னார்களே என்று, 'சாப்பிட வாங்க' போனேன். பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு பெரிய அளவு ஸ்பூனில் தரப்பட்ட அந்த திரவம்தான் காஃபி என்றால் மாயவரம் பக்கம் போகவே நான் தயாராக இல்லை.

கனத்த பையுடனும்  காலியான பர்ஸ் உடனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான் மனதிலிருந்து சில நூல்களை வாங்காமல் விட்டு விட்டேனே என்று தோன்றியது. தோன்றினாலும் வாங்க முடிந்திருக்காது. சுரண்டுவதற்கு பர்ஸிலும் ஒன்றுமில்லை. க்ரெடிட் கார்ட் பழக்கமுமில்லை. வாங்க முடியாமல் என்னை நானே நொந்து கொண்ட நூற்களில் ஒன்று - எனக்குப் பிடித்த எழுத்தாளரான சுகுமாரனின் 'வெலிங்டன் நாவல்'.

அவ்வளவுதான்.
suresh kannan

Thursday, January 16, 2014

கேப்டன் பிலிப்ஸ்




டாம் ஹாங்ஸ் எப்போதுமே எனக்கு பிடித்தமானதொரு நடிகர். எனவே கேப்டன் பிலிப்ஸ் பார்த்தேன். நல்லதொரு திரில்லர். சோமாலிய கடற்கொள்ளையர்கள் அமெரிக்க சரக்கு கப்பலொன்றை கடத்தும் முயற்சியின் தொடர்ச்சியில் அதன் கேப்டனை சிறைபிடிக்கின்றனர். அவரை மீட்கும் முயற்சியை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 'இந்தப் படத்தில் கப்பலின் கேப்டன் பாத்திரத்தில் நடித்த  டாம் ஹாங்ஸை'  ஒரு ஹீரோ போல் சித்தரித்திருக்கிறார்கள், உண்மைச் சம்பவங்கள் வேறு மாதிரியாக இருந்தன" என்று நிஜமான கடத்தலின் போது கப்பலில் இருந்த சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். என்றாலும் திரைப்படத்தில் டாம் ஹாங்ஸ், தமிழ்நாட்டு கேப்டன் விஜய்காந்த் போல் பாய்ந்து எட்டி உதைத்தெல்லாம் சண்டை போடாமல் அந்தச் சூழலில் ஒரு வயதானவர் என்ன செய்ய முடியுமோ அதை மாத்திரமே செய்திருக்கிறார்.

டாம் ஹாங்ஸ் ஏன் அற்புதமான நடிகர் என்பதற்கான நிரூபணம் படத்தின் இறுதிக்காட்சியில் இருக்கிறது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு அந்த அதிர்ச்சியையும் திகைப்பையும் இத்தனை துல்லியமாக ஒருவரால் நடிப்பில் வெளிப்படு்த்த முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது. காட்சிகளின் நம்பகத்தன்மையை உருவாக்க அவர்களின் யோக்கியமான மெனக்கெடல்களை பிரமித்தேன்.

ஹாலிவுட்காரர்களுக்கு வில்லர்களாக சித்தரிக்க ஏதாவது ஒரு உருவகம் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ருஷ்யர்கள், இசுலாமியர்கள், எதிரி நாடுகளின் அதிபர்கள்.. இந்த விஷயத்தில் அவர்களுக்குப் பஞ்சமேயிருக்காது. உலக வரலாறு அவர்களுக்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டேயிருக்கும் அந்த வகையில் இப்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள். உலகத்தைக் காக்க வந்த பெரியண்ணன் அவதாரத்தை அமெரிக்கத் திரைப்படங்கள் தொடர்ச்சியாக கட்டமைப்பதை இந்த திரைப்படமும் பின்பற்றுகிறது.

அணுஉலைகளின் கழிவுகள் சோமாலியக் கடற்கரைகளில் கொட்டப்படுவது பற்றி, சர்வதேச கடல் எல்லையை மீறி பன்னாட்டு நிறுவனங்கள் பகாசுர கப்பல்கள் மீன்வளத்தை சுரண்டிச் செல்வதின் மூலம் ஏழை நாடுகளின் வயிற்றில் அடிப்பது பற்றி, வளர்ந்த நாடுகளின் ஆயுத வியாபாரிகள் தங்களின் விற்பனைக்காக இவ்வாறான அரசியல் குழப்பமுள்ள நாடுகளில் கலகத்தைப் பெருக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி ஏதும் உரையாடமல் 'வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா' என்று கருப்பு வெள்ளையாக சம்பவங்களை சித்தரிக்கும்  அதே முறையேயே இந்த ஹாலிவுட் திரைப்படமும் பின்பற்றுகிறது என்பதுதான் இதிலுள்ள அரசியல் ரீதியான குறைபாடு. (மீன்பிடித்தல் அராஜகம் பற்றிய ஒரே ஒரு சிறுவசனம் விதிவிலக்கு).

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி நமக்கென்ன? நல்ல திரில்லர். சுவாரசியமாக ரசிக்கலாம். 

suresh kannan

Tuesday, January 14, 2014

ஜில்லா - அழகியல் சினிமாவின் வசீகர கனவுப் பொய்கை



தலைப்பைக் கண்டு பயந்து விடாமல் மனத்துணிவுடன் வாசிக்க உள்ளே நுழைந்தைமைக்காக முதற்கண் பணிவுகலந்த என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகைச்சுவை என்கிற tag-ல் போடப்பட்டால் கூட அது நகைச்சுவையாக இருக்காதோ என்கிற சந்தேக மனப்பான்மையுடன் அணுகுகிற நகைச்சுவை வறட்சி கொண்ட தமிழ் கூறும் நல்லுலகில் இந்தக் கட்டுரை எவ்வாறு புரிந்து கொள்ளப்படுமோ என்கிற திகிலுடன் தொடர்கிறேன்.

ஜில்லா திரைப்படம் கண்டு மகிழ்ந்தேன். நிற்க, இங்கே வணிக நோக்கு சினிமாக்களின் அபத்தங்களைப் பற்றியோ அதன் மூலம் பார்வையாளனாக எனக்கு நிகழும் மனத்துன்பியல்களையோ அல்லது விஜய்யையும் அவர் படங்களையும் பிரத்யேகமாக குறி வைத்து கிண்டலடிப்பதோ என் நோக்கமல்ல. ஒரு அப்பட்டமான வணிகமசாலா திரைப்படத்தில் குரசேவாவின் குறியீட்டு படிமங்களை தேடிப் பார்க்குமளவிற்கு புத்தி பேதலித்தவன் அல்ல நான். உடுப்பி ஹோட்டலில் நுழைந்து வெண்பொங்கல் ஆர்டர் செய்து விட்டு அதில் முந்திரிக்குப் பதிலாக லெக்பீஸ் இல்லையே என்று புகார் செய்வதற்கு சமமான அபத்தமது. நீண்ட காலம் கழித்து ஒரு தமிழ் சினிமாவைப் பற்றி ஜாலியாக ஒரு கட்டுரை எழுதுவதே உத்தேசம். எனவே விசய் ரசிகர்கள் உட்பட மற்ற அனைவருமே எவ்வித கலக்கமும் அன்றி இந்தக் கட்டுரையை வாசித்து மகிழலாம்.

ஜில்லா திரைப்படம் அதன் பிரத்யேக பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை குறைவில்லாமல் பூர்த்தி செய்திருக்கிறது. தங்களின் முயற்சியில் விஜய்யும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

 'இந்தப் பையன் தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வருவான்' - என்று விஜய் நடிக்கத் துவங்கிய காலத்திலேயே மாண்புமிகு மாணவனின் ஒரு ஸ்டில்லை வைத்தே தீர்க்க தரிசனம் கூறிய சுந்தரராமசாமியின் கூற்றை, (நன்றி: நினைவின் நதியில்) விஜய் வருடத்திற்கு வருடம் மெய்ப்பித்துக் கொண்டே போகிறார். (புளியோதரையில் பட்டை லவங்க மசாலாக்களைப் போட்டு அதை பிரியாணியாக்க முயல்வது போல் இலக்கிய எழுத்தாளர்களின் சில பெயர்களை தூவி விட்டால் அது இலக்கிய கட்டுரையாக மலரக்கூடும் என்கிற நடைமுறை தந்திரத்தைத்தான் நானும் முயன்று பார்த்திருக்கிறேன், கலங்க வேண்டாம்).

()


80-களின் தமிழ் சினிமாக்கள் போலவே இந்த சமகால திரைப்படமும் நாயகனின் சிறுவயதுக் காட்சிகளுடன் துவங்குகிறது. தனது தந்தை காவல்துறை அதிகாரி ஒருவரால் படுகொலை செய்யப்படுவதை கண்ணெதிரே பார்த்ததின் காரணமாக காவல்துறை மீதும் காக்கி நிறத்தின் மீதும் வெஞ்சினமும் வெறுப்பும் கொள்கிறார் சிறுவிஜய். தமிழ் சினிமா நாயகர்களின் அடிப்படைத்தகுதியான 'அநாதை' என்கிற நிலையை விஜய் அடைவதால், தன் குடும்பத்தைக் காப்பாற்றிய சிறுவன் என்கிற காரணத்தின் மீது எழுந்த அபிமானத்தில் அந்த ஊரின் தாதாவான மோகன்லால் இவரை தத்தெடுத்துக் கொள்கிறார். எவ்வித குற்றவுணர்வுமில்லாமல் தாதாவின் தீயசெயல்களுக்கு ஜாலியாக துணைபோகிறார் விஜய். ரவா உப்புமாவின் மீது வெறுப்புற்று வீட்டை விட்டு வெளியேறி வேறு உணவு தேடிப் போகும் ஒருவன் செல்லுமிடமெல்லாம் ரவா உப்புமாவால் துரத்தப்பட்டு கடைசியில் வீட்டில் செய்யப்பட்ட உப்புமாவையே உண்ண நேரும் ஒரு கர்ணபரம்பரைக் கதை  போல் காவல்துறையின் மீதும் காக்கி நிறத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டிருக்கும் விஜய் சந்தர்ப்ப சூழ்நிலையால் உலகிலேயே மிகப் பெரிய காவல்துறை அதிகாரியாக ஆகும்படியான திடுக்கிடும் திருப்பத்துடன்  திரைக்கதை சிறப்பாக அமைந்திருக்கிறது.

பெருவிஜய் அறிமுகமாகும் துவக்க காட்சியே அமர்க்களம். கிருத்துவ சேவை அமைப்பொன்று (மத நுண்ணரசியல் தேடுபவர்களுக்கான வாய்ப்பு)  தங்களது மருத்துவமனையை ரவுடிகள் கைப்பற்றிக் கொள்ளுவதால் காவல்துறையிடம் புகார் தருகிறது. போலீஸ்காரர்கள் அனைவரையும் பொறிபறக்க துரத்தி விடுகிறார் ரவுடிசார். (எதற்கு வம்பு). சட்டரீதியான இந்த முயற்சி சரிவராமல் போகவே தாதா மோகன்லாலிடம் வந்து முறையிடுகிறது கிருத்துவ அமைப்பு. லால் 50 பேர்களை அனுப்புகிறார். அவர்களும் ரவுடிசாரிடம் தோற்றுப் போய் சுவர் உடைபட பறந்து வெளியே வந்து விழுகிறார்கள். அதன்பிறகுதான் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடிவுசெய்கிறார் மோகன்லால். அந்த பிரம்மாஸ்திரம்தான் விஜய்.

'கலெக்டராலயே சாதிக்க முடியலையாம். நம்ம கிட்ட வர்றாங்க...டைவர்ஸ் கேசெல்லாம் வருதுப்பா.. போனை எடுத்தாலே நச்சு நச்சு...ன்னு... என்கிற கவுண்டரின் வசனம் உடனடி நினைவிற்கு மனதில் தோன்றினாலும் அதை அழித்து விட்டு சராசரி மனநிலையோடு பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது.  சாமான்யர்கள் யாராலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்துவதுதானே நாயகனுக்கு முன்னுள்ள சவால் என்கிற அடிப்படையை பூர்த்தி செய்யும் விதமாக அந்த ரவுடிக்கூட்டத்தை துரத்தி  அநீதியை நிலைநாட்டுகிறார் விஜய். (தப்பெல்லாம் அவர் மட்டும்தான் செய்வாராம்).

காக்கி நிறத்தின் மீது கடும் கடுப்பு கொண்டிருக்கும் கதாநாயகன், தன்னுடைய பால்ய நண்பனொருவன் காவல்துறையில் இணைந்து அதற்கான சீருடையை முதன்முதலில் இவரிடம் காண்பிக்க முன்வரும் போது கோபம் தாங்காமல் அவர் மீது பாய்ந்து சீருடையைக் கிழித்து முக்கால் நிர்வாணமாக்கி விடுகிறார். படத்தின் நாயகியான காஜல்அகர்வாலும் இது போன்றதொரு காக்கி சீருடையில் அறிமுகமாகும் போது, பால்ய நண்பனுக்கு நிகழ்ந்த அதே முக்கால் நிர்வாண விபத்து இவருக்கும் நிகழாதா என்று பாலியல் வறட்சிகொண்ட தமிழ் சமூகம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, தான் ஒரு தமிழ் கலாசார வெளியில் திரையிடப்போகும் பிரதி ஒன்றினுள் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற தன்ணுணர்வு காரணமாக அந்த விபத்தை தவிர்த்து விடுகிறார் விஜய். வாழ்க. (அல்லது ஒழிக).

()

படத்தில் மோகன்லால் சிவனாகவும் விஜய் சார் சக்தியாகவுமான உருவகப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இந்தப் படத்தை எதிர்ப்பதற்கு இந்து அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இந்தப் படத்தில் மறைமுகமாக உறைந்திருக்கிறது. இப்படியொரு டம்மியான சிவனை தமிழ் சினிமா உலகம் கண்டதேயில்லை. "நான் சிவன்டா.. அழிக்கப் பிறந்தவன்" என்று ஆக்ரோஷமாக முழங்கி விட்டு உடனேயே  தொண்டைக் கமறலுடன் ஒடுங்கும் ஹாலிவுட் சினிமா கம்பெனியின் சிங்கம்  போல அமைதியாக அமர்ந்து விடும் மோகன்லால் ஏன் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டார் என்றே தெரியவில்லை. சேட்டனுக்கு அப்படியென்ன பணப்பிரச்சினை? அப்படியே இருந்தாலும் அவரே பரிந்துரைக்கும் நகைக்கடன் நிறுவனம் இருக்கிறதே...

லாலேட்டன் ஏதோ சில திரைப்படங்களில் 'பாண்டிகளை' அவமதித்து வசனம் பேசியதால் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவமானப்படுத்தி அனுப்புவதுதான் இயக்குநரின் நோக்கமென்றால் அதில் அவர் கடுமையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்றே பொருள். அந்தளவிற்கு லாலேட்டன் டம்மியாக இருக்க, அதை ஈடுசெய்யும் விதத்தில் ஆழிப்பேரலையாக அதகளம் செய்கிறார் விஜய் சார் அவர்கள். 'ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் முடிவெட்டும் போது தலைகுனிந்துதான் ஆக வேண்டும்' என்கிற மேற்கோளுக்கிணங்க உலகமே போற்றிப் புகழும் நடிகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்குள் வந்தால் அதன் பிரத்யேக கட்டமைப்பிற்குள் புழுங்கி நாறத்தான் வேண்டும். அத்தனை திறமையாக கட்டப்பட்டது அது.

விஜய் அதியிளமையாக சூப்பராக தோற்றமளிக்கிறார்.. நடனமாடுகிறார், சண்டையிடுகிறார், சவால் விடுகிறார். எந்தக்குறையும் வைக்கில்லை. காமெடிதான் சற்று மட்டாக இருக்கிறது. விஜய் படங்கள் என்றாலே காமெடிதானே என்று அவரைப் பிடிக்காதோர் சங்கம் வசைபாடினாலும் காமெடி ஏரியாவிலும் வெளுத்து வாங்கும் விஜய் இதில் சற்று அடக்கியே வாசிக்கிறார். தோற்றத்தின் விஷயத்தில் இவரின் சமகால போட்டியாளரான அஜித் அவர்கள் ஏன் இத்தனை அலட்சியமாக இருக்கிறார் என்பதுதான் தெரியில்லை. 'சால்ட் அண்ட் பெப்பர்' தலைமுடியுடன் 'ஜார்ஜ் க்ளூனி' மாதிரி இருக்கிறீர்கள் என்று அவரை நன்றாக ஏற்றி விட்டிருக்கிறார்கள் போல. தலையில் சால்ட் அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. 'உங்கள் டூத்பேஸ்டில் உப்பிருக்கா?' என்பது பழகியிருந்தாலும் தலைமுடியிலும் சால்ட் அதிகமிருப்பது சரியில்லை. இவர் தமன்னாவுடன் டான்ஸ் ஆடும் காட்சியைப் பார்க்கும் போது 'இருவரையும் வைத்து தங்கமீன்கள் திரைப்படம் எடுத்திருக்கலாம்' என்று அஜித்தைப் பிடிக்காதோர் சங்கம் கூறுவதில் அவர்களுக்கிருக்கும் வன்மத்தையும் தாண்டி உண்மையிருப்பதையும் நமட்டுச் சிரிப்புடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

காவல்துறை சீருடைக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பாரம்பரியமான மரியாதையும் கட்டுப்பாடும் இருக்கிறது. நாயகன், எதிர்நாயகனின் குணாதிசயத்தோடு நடிக்கும் திரைப்படங்களில்  போலீஸ் சீருடையில் வரும் நபருக்கு மதிப்பளித்து அது நீக்கப்பட்ட பிறகே சண்டையிடத் துணிவான். (தொப்பியைக் கழற்றினால் போதும்). போலவே அந்தச் சீருடையை அணியும் நாயகர்களுக்கு அதற்குப் பிறகு தன்னிச்சையாக துணிச்சலும் உடம்பு முறுக்கேறலும் தியாகவுணர்வும் நேர்மையும் பெருக்கெடுத்து ஓடும். இத்திரைப்படமும் அந்த பாரம்பரிய விதிகளுக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது.

அதுவரை தாதாவாகிய தன்னுடைய வளர்ப்புத்  தந்தையுடன் இணைந்து கடத்தல்களையும் அநீதிகளையும் செய்து வந்திருந்த நாயகன் (அவர் செய்வதால் அது நமக்கு நன்மையாகத்தான் தெரியும்) காவல்துறை சீருடை அணிந்தவுடன் ஒரு பெரிய விபத்தில் இழக்கும் மனித உயிர்களையும் அதற்குப் பின்னே புதைந்து போகும் ஆயிரம் கனவுகளையும் கண்டவுடன் மாமன்னர் அசோக சர்க்கவாத்தி போல மனம் வெதும்பி திருந்தி, தன் தாதா தந்தையையே எதிர்க்கத் துணிகிறார். முதல் காட்சியிலேயே மோகன்லாலும் விஜய்யும் இணைந்து வாஞ்சையோடு ஆடும் நடனக் காட்சியைக் கண்டவுடனேயே, பிறகு இருவரும் சண்டைக் கோழிகளாக சிலுப்பிக் கொள்ளப் போகிறார்கள் என்பதையும் கிளைமாக்சில் மீண்டும் இணைந்து விடப் போகிறார்கள் என்பதையும் நீங்கள் யூகிக்காவிட்டால், தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியில்லாத ஒரு நபராக மாறி விடுகிறீர்கள்.

எல்லாப் பாடல்களுமே கடுமையான ராக் இசையின் பின்னணியில் நூறு எல்.ஆர்,ஈஸ்வரி இணைந்து பாடுவது போன்ற அதிதீவிர கடுமைத்தன்மையுடன் இருக்கின்றன. காலம் காலமாக நூற்றிருபது வார்த்தைகளுக்குள் இயங்கும் தமிழ் சினிமாப் பாடல்களை வைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறாராம் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி. அது போலவே சமகால இசையமைப்பாளர்களும் தான் விரும்புகிற நகலெடுக்கிற எல்லா ஒலிகளையும் மிக்சியில் போட்டு அரைத்து நாராசமான சங்கீதத்தை உருவாக்குவதில் பாண்டித்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் டிஎஸ்பி என்கிற ஒருவர் ஒரே ஒரு டப்பாங்குத்து டியூனை வைத்துக் கொண்டு ஆந்திராவையே ஆட்டிப் படைக்கும் அதகளம் இருக்கிறதே.  சொல்லி மாளாது..குரங்கொன்று கைக்கு வந்தபடி டைப்படித்து தற்செயலாக அதில் ஒன்று நவகவிதையாக உருவாகி விடுகிறது என்று நவீன கவிஞரின் மீது சொல்லப்பட்ட புகாரைப் போலவே இதிலும் அப்படி ஏதாவது ஒரு சகிக்கக்கூடிய பாடல் வந்து விடுகிறது.


சரி போதும் நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு வெகுஜன சினிமாவின் மீது எவ்வித கோபமும் கிடையாது. ஆனால் அதில் ரசிக்க வைக்கிற மாதிரி ஏதாவது ஒரு அம்சம் இருந்தால் கூட போதும். சகித்துக் கொண்டு பாராட்டி விடலாம்.ஆனால் நீண்ட காலமாக சில குறிப்பிட்ட டெம்ப்ளேட் திரைக்கதைகளை வைத்துக் கொண்டு அந்தந்த நாயகர்களுக்கு ஏற்றாற் போல்  எக்ஸ்டரா பட்டன் வைத்து அல்லது நீக்கி ரெடிமேட் சட்டைகளை தொடர்ந்து சலிப்பில்லாமல் தயாரித்துக் கொண்டே இருக்கிறதே.. இவர்களுக்கெல்லாம் சலிப்பாகவே இருக்காதா? மனச்சாட்சியே உறுத்தாதா? வணிக வெற்றியும் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்வதுமான போராட்டமும்தான் பிரதானமானதா? நகலெடுப்பதற்காக பார்க்கும் ஹாலிவுட் மற்றும் கொரியத் திரைப்படங்களில் இருக்கும் சுவாரசியத்தைக் கூட நகலெடுக்க வேண்டும் என்று தோன்றாதா என்று வழக்கமான பல கேள்விகள் தோன்றுகின்றன. இதையே காலம் காலமாக நம் பார்வையாளர்களும் எப்படி ரசிக்கிறார்கள் என்கிற மர்மத்தின் உளவியலையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் சினிமாவை திட்ட மாட்டேன் என்று சொல்லி விட்டு .. ஏன் இப்படி என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு திரைப்படத்தில் அந்நியரான செந்திலை காரணமேயில்லாமலே தன்னிச்சையான உந்துததால் அடித்துக் கொண்டேயிருப்பார் கவுண்டமணி. சில பல தாக்குதல்களுக்குப் பிறகு பொறுக்க முடியாமல் செந்தில் குறித்து இது குறித்து பஞ்சாயத்து கூட்ட எல்லோரும் கவுண்டமணியை கண்டித்து அறிவுரைப்பார்கள்.... "என்னமோ தெரியல.. இவனைப் பார்த்தாலே எனக்கு அடிக்கணும்னே தோணுது...  சரி. இங்க வாடா... உன்னை இனிமே அடிக்க மாட்டேன். பயப்படாதே.. கிட்ட வா... என்று சொல்லும் கவுண்டமணி அவர் அருகே வந்தவுடன் தன்னையறியாமல் அடிக்க ஆரம்பித்து விடுவார்.

அப்படித்தான் தமிழ் சினிமாவைப் பற்றி எழுதுவதும்.


suresh kannan

Friday, January 10, 2014

உலக சினிமா எனும கற்பிதம்


தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த கருத்தரங்கம் ஒன்றில் சினிமா ஆய்வாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியன், 'இந்திய சினிமா என்கிற ஒன்று இருக்கிறதா?' என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தார். பல்வேறு பிரதேசங்களால், கலாசாரங்களால், மொழிகளால் பிரிந்திருந்தாலும் ஜனநாயகம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவில் 'இந்திய சினிமா' என்கிற பதமே ஒரு மாயை என்கிற வகையில் பாண்டியனின் கருத்தை புரிந்து கொள்ளலாம். அந்தந்த பிரதேசத்து மக்களுக்காகவே அந்தந்த பிரதேசங்களின் சினிமாக்கள் உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரத்தை, மொழியை அறியாமல் அந்த சினிமாவை முழுவதுமாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இப்படி தடையாக, இது உள்ளிட்ட பல காரணிகள் இருக்கும் போது இந்திய சினிமா என எப்படி அழைக்க முடியும் என்பதும் அதன் நூற்றாண்டை கொண்டாட முடியும் என்பதும் புறந்தள்ள முடியாத கேள்வி. மேலும் இங்கு இந்திய சினிமா என்பதே ஹிந்தி சினிமா என்பதாக முன்வைக்கப்படும் அபத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாண்டியன் மேலும் உரையாடும் போது இன்னமும் நுட்பமாக சென்று  'தமிழ் சினிமா அல்லது தமிழர் சினிமா என்ற ஒன்றும் இருக்கிறதா?' என்கிற கேள்வியை முன்வைக்கிறார். 'இந்து புராணப் படங்களை இசுலாமியர்கள் பார்ப்பதில்லை. தேவர் மகன் திரைப்படத்தை ஒரு தலித் எப்படி கவனிப்பார், விஸ்வரூபம் திரைப்படத்தை ஒரு இசுலாமியர் எவ்வாறு புரிந்து கொள்வார்' என்பது போன்ற கேள்விகளின் இதைப் புரிந்து கொள்ள முடியும். 'இந்திய சினிமா என்பது தேசியக் கட்டமைப்பை அமைக்க முயன்று தோற்றுப் போனதொரு முயற்சி' என்பதாக அவர் சிறப்புரையின் நிறைவுப்பகுதி அமைந்திருந்தது.

இந்தக் கருத்தாக்கத்தின் மீது சிந்திக்கும் போது உலக சினிமா என்பதும் ஒரு கற்பிதம் எனும் முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. மேலும் வணிக சினிமாக்களினால் மூழ்கடிக்கப்பட்ட பொதுப்புத்தி சார்ந்த மனங்கள் 'உலக சினிமா' எனும் சொல்லை எப்போதுமே எள்ளி நகையாடக்கூடிய ஒரு விஷயமாகவே பார்க்கின்றன. தமிழ்நாடு என்கிற பிரதேசம் உலகப்பந்திற்குள் இருக்கும் போது அதில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் 'உலக சினிமா' எனும் வகைமையில் வராதா என்பது இவர்கள் சாமாத்தியமாக  கேட்பதாக நினைத்து கேட்கும் பாமரத்தனமான கேள்விகளுள் ஒன்று.

எனில் உலக சினிமா என்பது ஒரு கற்பிதந்தானா? அந்தந்த பிரதேசங்களின் தனித்தன்மைகளைத் தாண்டி கலை ரசனை என்கிற நோக்கில் பிரதானப்படுத்தி பார்த்தால் அப்படியொரு வகைமை இருப்பதைப் பாாக்கலாம். உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என்று விமர்சகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்படும் நூறு திரைப்படங்களை எடுத்துப் பார்த்தால் மொழி,கலாசாரம் இன்னபிற தடைகளைத்தாண்டி அதன் உள்ளடக்கம், அரசியல், திரைமொழி, காட்சிகளின் உருவாக்கம், நகர்வு ஆகிய பலவற்றில் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் கவனிக்கலாம். மானுடத்தின் ஆதாரமான சில பிரச்சினைகள், அகச்சிக்கல்கள், அதன் மீதான அக்கறை மற்றும் பரிவு, கரிசனம் ஆகிய உலகமெங்கிலும் எளிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதைக் காணலாம். உலகமெங்கிலும் சிலாகிக்கப்பட்ட இத்தாலிய திரைப்படமான டிசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்'ஸை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவனாலும் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொள்ள அப்போதைய இத்தாலியின் அரசியல் பின்புலத்தை அறிந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அது போலவே இத்தாலியில் உள்ள திரைப்பட பார்வையாளனாலும்  சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி'யை புரிந்து கொள்ள முடியும். வறுமைக்கு இடையிலும் மானுடத்தை பிணைத்து வைத்திருக்கும் அன்பை, பாசத்தை அதன் நெகிழ்வு என்கிற இழை இரு பிரதேசத்து மனிதர்களையும் முனைகளையும் இணைக்க முடியும்.


ஒரு காலத்தில் திரைப்படச் சங்கங்களினாலும் ஆர்வலர்களினாலுமே சாத்தியப்பட்ட உலக சினிமாக்களின் பரிச்சயம் நுட்பத்தின் சாத்தியத்தால் இன்று இணையத்தினாலும் குறுந்தகடுகளினாலும் எளிதில் கிடைக்கக்கூடிய விஷயமாக மாறி விட்டது. கள்ளத்தனமான, தார்மீக ரீதியற்ற நுகர்வு என்பது இதிலுள்ள பிரதான குறைகளுள் ஒன்று. விளம்பரத் தொல்லைகளையும் கலாசாரக் காரணங்களுக்காக துண்டிக்கப்படும் காட்சிகள் போன்றவற்றை சகித்துக் கொண்டால் சில தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை இன்று ஒளிபரப்புகின்றன. இந்திய அரசு முன்னின்று நிகழ்த்தும் சர்வதேச திரைவிழாவைத் தவிர சில மாநிலங்களில் அரசினாலும் சில மாநிலங்களில் அங்குள்ள தன்னார்வலர்களினாலும் திரைவிழாக்கள் சாத்தியப்படுகின்றன.

அவ்வகையில் சென்னையில் 11வது சர்வதேச திரைப்படவிழா சமீபத்தில் நிகழ்ந்து முடிந்தது.  'அரசியல் காரணமாக சில திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன' என்பது உள்ளிட்ட சில புகார்களுடனும் 'மற்ற திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சிறந்த படைப்புகள் என கருதப்பட்டவை ஏன் இதில் விடுபட்டுள்ளன' எ்ன்கிற கேள்விகளையும் தாண்டி  இந்த நிகழ்வில் இந்த வருடத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கின அதற்கான பரிந்துரைகளில் உள்ள பல நல்ல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகமே இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி.


LIFE FEELS GOOD - போலந்து - இயக்குநர் - Maciej Pieprzyca

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் குறித்த திரைப்படமென்றால் அது பார்வையாளர்களிடமிருந்து அனுதாபத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி விடுகின்ற விபத்தை பெரும்பாலும் தவிர்த்திருக்கிறது இத்திரைப்படம்.

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற Mateusz என்கிற இளைஞன், 'தான் ஒரு தாவரம் அல்ல' என்கிற செய்தியை உலகத்திற்கு தெரிவித்து விடுவதற்காக செய்யும் மெளன போராட்டத்தை மையமாகக் கொண்டது. தமிழில் உருவாகியிருந்தால் தெய்வ திருமகள் போல் ஓர் அழுகாச்சி காவியமாக உருவாகியிருக்கக்கூடிய இது பெரும்பாலும் அதற்கு நேர்எதிராக துள்ளலான நகைச்சுவையுடன் நகர்கிறது. படத்தின் பின்னணி இசையும் செலோவும் ஷெனாயும் வயலினும் கொண்டு அழுகையைக் கூட்டாமல் விசில் போன்ற கலாட்டாவான இசையின் மூலம் இந்த நகைச்சுவைக்கு துணை போகிறது.

கைகளும் கால்களும் செயல்படாமல் தன் உடலால் மாத்திரமே நகர முடிகிற நிலையில் உள்ள Mateusz-ன் காமத்திற்கான தேடலையும இயல்பாக முன்வைக்கிறது. மனிதனின் தன்னகங்காரம் பொதுவாக எதிர்மறையான குணாதிசயமாக சுட்டப்படுகிறது. ஆனால் ஒருவரின் தன்னங்காரம்தான் அவனுடைய வாழ்வை துடிப்புடன் தொடர்வதற்கான உந்து விசையாக இருக்கிறது. Mateusz ஒரு ஜடம் என்பதை சமூகம் வேறு வேறு வார்த்தைகளில் அவனுக்குச் சொல்ல அவனுடைய பெற்றோர்கள்தான் அவனுக்கு  மிக ஆதரவாக இருக்கின்றனர். குறிப்பாக அவனுடைய தந்தை அவனுடைய அகங்காரத்தை தட்டியெழுப்பிய படியே இருக்கிறார். எனவேதான் அவர் இறப்பிற்குப் பின்னும் அவருடைய சொல்லை மந்திரமாகக் கொண்டு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தன் இருப்பை வெற்றிகரமாக உலகிற்கு தெரிவிக்கிறான் Mateusz. உலகமே அவனைப் புறக்கணித்தாலும் அதனையே வகுப்பறையாகக் கொண்டு தன் கல்வியை அமைத்துக் கொள்கிறான்.

Dawid Ogrodnik என்பவர் Mateusz ஆக அற்புதமாக நடித்திருக்கிறார். எத்தனை அற்புதம் என்றால் இவர்தான் அந்த மாற்றுத் திறனாளியோ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களிடம் அழுத்தமாக ஏற்படுத்தும் அளவிற்கு அற்புதம். படத்தின் எண்ட் கார்ட் போடும் போது படத்தின் நிஜக்கதாநாயகனையும்  டேவிட்டின் இயல்பான தோற்றத்தையும் காணும் போதுதான் அவரின் அசுரத்தனமான உழைப்பும் நடிப்பும் நமக்கு பிடிபடுகிறது. கமல்,விக்ரம் வகையறாக்கள் கண்களில் இத்திரைப்படம் பட்டு விடக்கூடாதே என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனை.

BLUE IS THE WARMEST COLOUR - பிரெஞ்சு - இயக்குநர் - Abdellatif Kechiche.

இத்திரைவிழாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின திரைப்படம் இது, பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. பாலின அடையாளச் சிக்கலையும் அது குறித்த தேடலையும் கண்டடைதலையும் அடிப்படையாகக் கொண்டது. LGBT சமூகம் குறித்து பொதுப்புத்தி கொண்டிருக்கும் பல தவறான முன்முடிவுகளை சிதறடிக்கிறது இத்திரைப்படம். ஒருபாலின உறவுக்காரர்கள், முறையற்ற பாலுறவின் இச்சைக்காகவே  அந்த தற்காலிக உறவை அமைத்துக் கொண்டிருக்கிறவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், இயற்கைக்கு முரணான உறவைக் கொண்டிருப்பவர்கள், குடும்பம் என்கிற நிறுவனத்தின் சிதைவிற்குக் காரணமானவர்கள் என்கிற பொதுச்சமூகத்தின் பல தவறான எண்ணங்களை மாற்றியமைக்கிறது இத்திரைப்படம்.

மூன்று மணி நேரத்திற்கு நீளும் இத்திரைப்படம், அட்லி மற்றும் லியா ஆகிய இரண்டு பெண்களுக்குள்ள பாலின உறவையும் அதைத் தொடரும் அகச்சிக்கல்களையும் விரிவாகவே முன்வைக்கிறது. பொதுச் சமூகத்தில் குடும்பம் என்று அறியப்படும் அமைப்பைப் போலவே ஒருபாலின உறவிலும் குடும்ப உறவில் ஏற்படும் அதே பாசமும் பிணைப்பும் பிரிவின் போது ஏற்படும் துயரமும் வலியும் கற்பும் தன் துணையை மீண்டும் அடைவதற்கான தேடலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அட்லி என்கிற இளைஞியின் வாழ்க்கையின் ஒரு துண்டை ரத்தமும் சதையுமாக பார்த்த உணர்வைத் தருகிறது. சர்வதேச திரைப்படங்களுக்கான சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துமளவிற்கு உடனுக்குடன் நிகழும் நீளமான பாலுறவுக்காட்சிகள் உள்ளன. ஒருபாலின உறவு குறித்த சர்ச்சைகளும் சட்டமுடிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் அதற்கு மாற்றான வெளிச்சத்தையும் புரிதலையும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

YOUNG AND BEAUTIFUL - பிரெஞ்சு - இயக்குநர் -  François Ozon

தன்னடையாளத்தையும் பதின்ம வயதின் சிக்கலையும் பற்றி உரையாடும் திரைப்படம். 17 வயதான பள்ளி மாணவியான இசபெல்லா, அது தரும் சாகச உணர்விற்காக பாலியல் தொழிலை மேற்கொள்கிறாள். சக வயது இளைஞனுடன் முதலில் உறவு கொள்ளும் இவள் அதன் மூலம் அடையும் வெற்றிட உணர்வை நிரப்ப, நடுத்தர வயது மனிதர்களாகத் தேடி உறவு கொள்கிறாள். இவளின ஒரு வாடிக்கையாளர் மாரடைப்பில் இறந்து போக அதன் பிறகே இந்த விபரீதம் இவளது குடும்பத்திற்கு தெரியவருகிறது. உளவியல் நிபுணருடனான உரையாடலின் போதும் இவளுடைய பிரச்சினையின் வேர் கண்டுபிடிக்க முடிவதில்லை. 'உங்களுடைய கட்டணம் இத்தனை குறைச்சலாதனா?" என்று புன்னகைக்கிறாள். இவளுடைய மறுபுறம் அறிந்த பிறகு குடும்பத்தில் நிகழும் குழப்பங்களை மெலிதான நகைச்சுவையுடன் மீதப்பகுதிகள் சொல்கிறது. இளம் வயதிலேயே இவளின் தந்தையின் பிரி்ந்து விடும் காரணத்தின் உளவியல் பின்னணியில் இவள் நடுத்தர மனிதர்களை நாடுவதை புரிந்து கொள்வதின் மூலம் இத்திரைப்படத்தை அணுகலாம் என தோன்றுகிறது.

A TOUCH OF SIN - சீனா - இயக்குநர் -    Jia Zhangke

சமகால சீனாவின் முகம்.நவீன பொருளாதார உலகம் சீனாவின் நகர, கிராம தனிநபர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் வன்முறையையும் நிகழ்த்துகிறது என்பதை விவரிக்கும் திரைப்படம். சாதாரண தனிநபர்களின் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்குமான ஊற்றுக்கண் எங்கிருந்து பிறக்கிறது என்கிற விசாரணையின் மீதாகவும்  இத்திரைப்படத்தை அணுகலாம்.

பொதுச் சொத்தில் ஊழல் செய்யும் கிராம மேயரையும் அதற்கு துணை போகிறவர்களையும் சுட்டுக் கொல்லும் ஒருவர், குடுமபத்திற்கு தெரியாமல் அதன் பராமரிப்பிற்காக வழிப்பறியில் ஈடுபட்டு அதன் பொருட்டு கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு மனிதன், ஏற்கெனவே திருமணமானவரை காதலித்து அது நிறைவேறாத தோல்வியில் இடம்மாறி அங்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கொல்லும் ஒரு பெண், வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு சந்திக்கும் பாலியல் தொழிலாளியின் மீது காதல் கொண்டு அது நிறைவேறாமல் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வறுமையை எதிர்கொள்ளவியலாத மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளைஞன். இந்த நான்கு நபர்களின் மீதான தனித்தனி இழைகளில் இத்திரைப்படம் விரிகிறது.

எந்தவொரு வன்முறைக்கும் குற்றத்திற்கும் பின்னணியை ஆராய்ந்தால் அது ஒரே நாளில் நிகழ்வதாக அல்லாமல் அதற்குப் பின்னால் சிறுக சிறுக சேரும் பல அழுத்தங்களும் சூழல்களும் ஒரு கணத்தில் சடாரென வெடிப்பதான குற்றம் சார்ந்த உளவியல் ஆராய்ச்சியையும் இத்திரைப்படம் நிகழ்த்துவதாகப் படுகிறது.

OMAR - பாலஸ்தீனம் - இயக்குநர் -      Hany Abu-Assad

Paradise Now என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தை உருவாக்கிய இந்த இயக்குநரின் திரைப்படங்களை பாலஸ்தீனிய அரசியல் பிரச்சினையின் மீதாக புரிந்து கொள்ள முடியும். அரசியல் பிரச்சினைகளும் அதைச் சார்ந்து இயங்கும் வன்முறையும் அமைப்புகளும் தனிநபர்களின் வாழ்வில் எத்தனை தூரத்திற்கு இடையூறு செய்கிறது என்பதை இத்திரைப்படம் உரையாடுகிறது. ஒரு வணிக சினிமாவிற்குரிய திரைக்கதையின் சுவாரசியத்தையும் சாகசத்தையும் இத்திரைப்படம் கொண்டிருந்தாலும் படத்தின் மையம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவது. ஓமர் என்கிற இளைஞனின் காதலிலும் இளவயது முதலே நண்பர்களாக இருப்பவர்களுக்குள்ளும் மத அரசியல் காரணமாக நிகழும் பகைமையும் அரசியலும் அந்த தனிநபர்களின் வாழ்வில் குறுக்கிட்டு அவர்களின் இயல்பான உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளியேற்றி தங்களுக்கான பகடைக்காய்களாக மாற்றும் அபத்தமான துயரங்கள் இத்திரைப்படத்தில் விரிகின்றன. 

- உயிர்மை - ஜனவரி 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

Tuesday, January 07, 2014

பிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை


பிரமிளின் நினைவுநாளன்று (06.01.2014) அவர் குறித்த நினைவு கூறல் நிகழ்ச்சியொன்றை பிரமிளின் தீவிரமான வாசகர்களுள் ஒருவரான அகநாழிகை வாசுதேவன், பிரமிள் படைப்புகளின் தொகுப்பாசிரியரான கால சுப்பிரமணியனின் ஒருங்கிணைப்போடு ஏற்பாடு செய்திருந்தார். பிரமிளின் இன்னொரு தீவிர வாசகரான ஜ்யோவ்ராம் சுந்தர் (ஜ்யோவ்ராம் என்பதே பிரமிள் தானே சூட்டிக் கொண்ட பல பெயர்களில் ஒன்று) அவர்களோடு இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். தன்னுடைய நிறுவனத்தின் பெயரையே எழுத்தாளர் நகுலனின் பெயரால் அமைக்குமளவிற்கு அதிதீவிர கொலைவெறி இலக்கிய வாசகர் ஜ்யோவ்ராம் சுந்தர் என்பது உபதகவல்.

எழுத்தாளர் பிரமிள் அளவிற்கு சர்ச்சையானதொரு இலக்கிய பிம்பம் தமிழ் கூறும் நல்லுலகில் வேறு எந்தவொரு எழுத்தாளருக்காவது கிடைத்திருக்குமா என தெரியவில்லை. அவரின் தீவிர வாசகர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரின் பெரும்பாலான படைப்புகளை வாசித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு குறிப்பாக பிரமிளை பெரிதும் அறிந்திராத சமகால தலைமுறைக்கு பிரமிள் என்பவரின் சித்திரம் 'சண்டைக்காரர், கிறுக்கர், கோபக்காரர், எக்சண்ட்ரிக்,' என்பது போன்ற பெரும்பாலும் எதிர்மறையானதாகவே இருந்திருக்கும். சு.ரா.வின் பிரமிள் குறித்த நினைவோடை நூலை மாத்திரம் வாசித்தவர்களுக்கு இந்த எண்ணம் உறுதிப்பட்டிருக்கக்கூடும். இதை மாற்றியமைக்கும் விதமாக அமைந்திருந்தது இந்நிகழ்வு. பிரமிளுடன் பழகியவர்கள், விலகி விலகி பழகியவர்கள், சண்டை போட்டு பழகியவர்கள் போன்றவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் அமைந்திருந்தது.


முதலில் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன், அருவம், ஸ்தூலம் ஆகிய விஷயங்களை கவிதையில் எப்படி பயன்படுத்துவது என்பதை தனக்கு சொல்லித்தந்தவர் பிரமிள் என்கிற செய்தியோடு இன்னும் பிற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'ஓர் எழுத்தாளரை அவரது இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அவரோடு பழகியதில் ஏற்பட்ட சாதாரண அனுபவங்களின் மூலமாகவும் நிரந்தரமாக எண்ணத்தில் பதிய வைத்துக் கொள்ள முடியும்' என்ற எம்.டி.முத்துக்குமாரசுவாமி, முதல் சந்திப்பிலேயே பிரமிள் தனக்கு டீக்கடையில் வடையை ஊட்டி விட்ட சம்பவத்தை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார். குற்றாலம் கவிதையரங்கில் பிரமிளோடு ஆங்கிலத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தையும்.

அவருக்கே உரிய பிரத்யேகமான உரையாடல் தொனியில் பிரமிள் குறித்த பல அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். 'பிரமிளின் குணாதியசத்தைப் பற்றி விவரித்துக் கூறியும் அவரைச் சந்திக்க விரும்பிய ஒரு இளம் கவிஞரை, பிரமிளிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை பிரமிள் தன்னுடைய வழக்கமான அலட்சிய பாணியில் அணுகியதால் முகம் சுண்டிப் போன இளைஞரை பின்பு பிரமிள் தன்னுடன் ஆதரவாக அணைத்துச் சென்றதையும் மறுநாள் அந்த இளைஞர் பிரமிளுடன் உணவருந்திக் கொண்டே பிரமிளின் கவிதையைப் பற்றிய சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்ததையும் வழக்கமாக இது போன்ற தருணங்களில் வெகுண்டெழும் பிரமிள், மிக நிதானமாக அவருக்கான விளக்கங்களை அளித்தது பற்றியுமான சம்பவத்தை பகிர்ந்தார். அமெரிக்கன் நூல்நிலைய அனுபவங்களையும், கால்நடையாகவே தூரத்தைக் கடக்கும் வழக்கமுள்ள பிரமிள் போகும் வழியெல்லாம் பிச்சைக்காரர்களுடன் உரையாடும் சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கவிஞர் இந்திரன், பிரமிளின் நூல் தொகுதியொன்றின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படத்தை கையெழுத்துடன் பிரசுரித்தது பற்றிய அனுபவத்தையும் அது குறித்த தயாரிப்புகளைப் பற்றின உரையாடலில் முகம் பார்க்கும் கண்ணாடியொன்றில் அந்த அட்டைப்படத்தை சரிபார்த்துக் கொடுத்து விட்டு பின்பு அது கைதவறி கீழே விழுந்த போது, இந்திரனின் வீட்டிலிருந்தவர்கள் அதை அபசகுனமாக நினைக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் போது, பிரமிளோ  கீழேயிருந்த கண்ணாடித் துண்டுகளைப் பாாத்து 'எத்தனை அழகாக உடைந்திருக்கிறது' என்று சிறுவனொருவனின் மனநிலையில்  அதை வியந்ததைப் பற்றின அனுபவத்தைப் பகிர்ந்தார்.


'வஞ்சிக்கப்பட்ட கவிஞன் பிரமிள்' என்று ஆவேசமாக தன் உரையைத் துவங்கிய கெளதம சித்தார்த்தன், பாரதிக்குப் பிறகு பிரமிளைப் போல ஒரு கவியாளுமை தமிழில் உருவாகவே இல்லை' என்றார். பாாப்பன அரசியலால் ஒருபுறம் புறக்கணிக்கப்பட்ட பிரமிள், அவரது ஆன்மீக தேடலை தவறாகப் புரிந்து கொண்ட இடது சாரிக்காரர்களாலும் புறக்கணிக்கப்பட்டார். 'சண்டைக்காரன், கிறுக்கன்' என்று பிரமிள் குறித்த எதிர்மறையான சித்திரம் தமிழ் சூழலில் திட்டமிட்டே தொடர்ந்து அடையாளப்படு்த்தப்படும் அரசியல் தொடர்கிறது' என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் கோணங்கி எழுதிய அனுப்பிய உரையிலிருந்து சில பகுதிகளை வாசித்தார் வாசுதேவன். 

பிரமிளோடு  நேரில் உரையாடி பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காததை நொந்து கொண்ட எழுத்தாளர் ராசேந்திர சோழன் 'எழுத்தாளர்களோடு பழகி பிம்பங்கள் உடைபடாமலிருப்பதில் உள்ள செளகரியம் காரணமாக அப்படியிருப்பதும் ஒருவகையில் நல்லதே' என்றவர், பிரமிளின் சில கவிதைகளை உணர்ச்சிகரமாக வாசித்துக் காட்டினார். வெளி ரங்கராஜனும் பிரமிள குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்.

இலக்கியம் என்கிற தொடர்பில் அல்லாது பிரமிளோடு பழகிய அருள் சின்னப்பன், பிரமிளை ஒரு 'ஞானி' என்கிறார். 'பிரமிள் எப்போதும் அகரீதியாக  உயர்ந்ததொரு இடத்தில் உலவிக் கொண்டிருப்பவர், அவரோடு உரையாடுகிற எவரும் அந்த நிலையை அடைய முடியாமல் உரையாடும் போது இயல்பாகவே அவருக்கு கோபம் வந்து விடுகிறது. இதுவே பலர் அவரைச் சண்டைக்காரராக கருதிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்றவர் பிரமிள் எழுத்துக்கலையோடு சிற்பம், ஓவியம், நாடகம் என்று இன்னபிற கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதனாலேயே பாரதியை விடவும் உயர்ந்தவர் எனும் போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் 'பிரமிளை உயர்த்திச் சொல்ல பாரதியை கீழிறக்க வேண்டியதில்லை' என்று ஆவேசமடைந்தார். 'பிரமிள் சினிமாவிற்கு பாடல் எழுதியிருக்கிறாரா?" என்று இந்த இளைஞர் பின்பு கேட்டது ஒரு அபத்தமான சுவாரசியம்.

பிரமிளுடன் எவ்வித சர்ச்சைகளும் இன்றி அதிக வருடங்கள் அவருடன் பழகிய தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம், நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய போது, பிரமிள் குறித்த பல நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு பிரமிளின் படைப்புகள், கடிதங்கள், பேட்டிகள் போன்றவை முழு தொகுப்பாக வரவேண்டியதின் அவசியத்தையும் அதில் சில நூல்கள் வந்திருப்பதையும் இன்னும் பல நூல்கள் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதையும் மிக இயல்பான தொனியில் பகிர்ந்தார்.


suresh kannan