Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip


'காதலைக் கடந்து வந்தவர்களால்தான் இந்தப் படத்தை ஆழமாக உணர முடியும்' என்கிற மாதிரியான சில அபிப்ராயங்களை இத்திரைப்படம் குறித்து வாசித்த போது மெலிதாக கோபம் கூட எழுந்தது. காதல் என்பது எல்லா உயிரினங்களுக்குமான ஓர் அடிப்படையான, இயற்கையான உணர்வு. அதைக் கடந்து வந்தால்தான் உணர முடியும் என்பது 'பாலுறவைக் கடந்து வந்தால்தான் சுயஇன்பத்தை உணர முடியும்' (?!)  என்பது மாதிரி அபத்தமான அறிவிக்கையாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இந்தத் திரைப்படத்தை பார்த்த பின்பு மேற்குறிப்பிட்ட அபிப்ராயங்களோடு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. மூப்பிலோ, விபத்திலோ மரணத்தை சந்தித்து விட்டு திரும்பியவர்களின் உணர்வுகளை அது போன்ற அனுபவத்தை அடைந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். என்னதான் விளக்கிச் சொன்னாலும் அந்த அகரீதியான அனுபவத்தை மற்றவர்களுக்கு கடத்தி விட முடியாது. 'படத்தில் கதை என்கிற வஸ்து இல்லை, மெதுவாகச் செல்கிறது, போரடிக்கிறது, மொக்கையாக இருக்கிறது' எனும் அகாதல்வாதிகளின் புறக்கணிக்கப்பட வேண்டிய குறிப்புகள், அவர்கள் காதல் என்னும் உன்னதத்தை சந்திக்காத அபாக்கியவான்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது.

'வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையின் தருணங்கள்' என்று படத்தின் துவக்கத்திலும் போஸ்டர்களிலும் இயக்குநர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் இதில் தமிழ் சினிமாவை வழக்கமான சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது நாம் இன்னமும் சினிமா பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஏய்... என்று கத்திக் கொண்டு ஒரு வில்லன், 'எண்ற புள்ளையையாடா காதலிக்கிற.. பசுபதி பூட்றா வண்டியை' என்று கத்தும் பெண்ணின் தகப்பன், உன்னை எப்படில்லாம் வளர்த்தம்மா' என்று கண்ணீர் விடும் அம்மா, இந்தச் சமூகத்தை திருத்தறதுதான் முக்கியம், நீ-லாம் அப்புறம்" என்று வெட்டி பஞ்ச் டயலாக் பேசும் நாயகன், போன்றவற்றை கட்டாயம் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தைத் தான் தரும்.

இந்தப்படத்தில் வரும் காதலுக்கு எதிரிகள், இந்தப் படத்தின் காதலர்களே. அதாவது அவர்களின் ஈகோ. ஆண் x பெண் என்கிற எதிர்துருவ உறவு எப்போதுமே பரஸ்பர ஈர்ப்பு இருக்கிற அளவிற்கான சிக்கல்களையும் கொண்டது. எத்தனை வயதைக் கடந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது. அத்தகைய தருணங்களின் தொகுப்பாகத்தான் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த அனுபவத்தில் ஈடுபட்ட /பட்டுக் கொண்டிருக்கிற எவருமே எந்தவொரு இடத்திலாவது மிக நெருக்கமாக இந்த தருணங்களோடு உடன்பட, ஒப்பிட்டுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு காதல் குறித்து  யோக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது நீஎபொவ. 

அதற்காக காதலிப்பவர்கள் தங்களின் ஈகோக்களை, சுயஅடையாளங்களைத் துறந்து 'ஒண்ணு மண்ணாக பழகணும்' என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி என்று புரிந்து கொண்டால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க முடியாது. அந்தந்த பருவங்களை அதற்கேயுரிய சிக்கல்களுடன் மகிழ்ச்சியுடனும்தான் கடக்க முடியும்.

பெரும்பாலும் அடித்தட்டு வாக்க இளைஞனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதிலிருந்து இப்படத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார் எனலாம். ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் அபிலாஷைகளை, குழப்பங்களை, பொருளாதார அவஸ்தைகளை, ஒப்பிடல்களை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர்கள் தங்களின் உறவு குறித்தான சிக்கல்களை விவாதிக்கும் பகுதிகள், கெளதம் மேனனின் படங்களில் தொடர்ந்து சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் அவ்வாறே. இது தொடர்பான  காட்சிகளில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மிக நீளமாக வரும் மொட்டை மாடிக் காட்சியிலும் இறுதிக் காட்சிகளிலும்.  படம் நிறைவடைவதிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தன் அகங்காரங்களை துறந்து வருணிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொள்வதின் அடையாளமாக 'I love you' என்று அவர் வெடிக்கும் போது எனக்கு  தன்னிச்சையாக கண்ணீர் பொங்கியது. (என்றாலும் அம்மணி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனது போலவே பெரும்பாலான காட்சிகளில் தோற்றமளித்தது சற்று அசெளகரியமாக இருந்தது. 'நான் ஈ'யில் கூட நன்றாக இருந்தாரே).

ஆக்ஷன் திரைப்படங்கள் உட்பட கெளதமின் எல்லா படங்களிலுமே காதல் தொடர்பான காட்சிகள் மிகச் சிறப்பாக மிக வலுவானதொரு இழையாக படம் முழுதும் படர்ந்திருக்கும். நீஎபொவ -வைக் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயின்' இன்னொரு பரிமாணமாக,நீட்சியாக கொள்ளலாம். அது இயக்குநரின் பிரத்யேகமான முத்திரைகள் என்றாலும் கெளதமின் கிளிஷேக்களாக சிலவற்றை சொல்லலாம். மூத்தவயது காதலி, அப்பாவை (பெரும்பாலும் கிருஷ்ணன்) மிக நெருக்கமாக உணரும் நாயகன், கேரளப் பயணம், மேல்தட்டு வர்க்க காதல், போன்றவற்றை சலிக்குமளவிற்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

என் மனதிற்கு மிக நெருக்கமான இளையராஜாவை, கெளதமின் திரைப்படங்களின் முன்அனுபவத் தடைகளினாலோ என்னவோ - இத்திரைப்படத்தில் மிக அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலும் அவரது பாடல்களோ, பின்னணி இசையோ (சற்று முன்பு... போன்ற அபூர்வ தருணங்களைத் தவிர்த்து) படத்தில் ஒட்டவேயில்லை. கெளதம் மறுபடியும் ஹாரிஸிற்கு திரும்புவது நல்லது. படத்தின் இன்னும் சில பின்னடைவுகள், வருண்-நித்யா தொடர்பான சிறுவயது, பள்ளிக்கூட காட்சிகள். அவைகள் இல்லாமலேயே படத்தை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும். சந்தானம் தொடர்பான காட்சிகளும். தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன் சற்றே இளைப்பாறுவதற்காக திணிக்கப்பட்ட் காட்சிகள் எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக விதாவ -வை spoof செய்திருப்பது அபத்தமானதொன்று.

ஆண்டனியின் வேகமான தாளகதியிலான படத்தொகுப்பு பிரசித்தி பெற்றது. ஆனால் இதில் மிக சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக அந்த மொட்டை மாடிக் காட்சி. எதிர்மாடி பார்வையாளனைப் போல நம்மை உணரச் செய்யும் அந்தக் காட்சிகள் டாப் ஆங்கிள் கோணத்திலிருந்து தவழந்து கீழே வந்து மறுபடியும் உயரே செல்கிறது, அவர்களது உரையாடல்களைப் போலவே. (இங்கு விதாவில் சிம்புவும் த்ரிஷாவும் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வெளியே உரையாடும் காட்சியை நினைவு கூரலாம்).

மொத்தத்தில் நீதானே என் பொன் வசந்தம், காதலின் வலியில், துயரத்தில், மகிழ்ச்சியில், வாதையில், சிக்கலில் நனைந்தவர்களுக்கானது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள். 

தொடர்புள்ள பதிவு:


suresh kannan

12 comments:

Paleo God said...

சேம் ப்ளட் :))

rajamelaiyur said...

படம் மெகாவும் இல்லை மொக்கையும் இல்லை..
பரவாயில்லை என தோனுகிறது.

rajamelaiyur said...

இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

மணிஜி said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை சுரேஷ்.. விமர்சனங்களை படித்ததினால் ஒரு வித அசட்டையான மனநிலைதான் காரணம்.. நீ.எ.பொ.வ விற்கு ஒரு 100 ரூ கூடுதலாக வசூலாகும்.. அதற்கு நீங்களே பெருமைக்குறியவராகிறீர்:-)

Mohandoss said...

சுக,

தெலுங்கு தெரியுமான்னு தெரியாது. உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால் தெலுங்கில் நிச்சயம் பாருங்க, இன்னும் அருமையா இருந்தது.

Ashok D said...

:)

குரங்குபெடல் said...

" உள்ளடக்கத்தை

அபிலாஷைகளை,

குறித்தான சிக்கல்களை

இழையாக

பரிமாணமாக,நீட்சியாக

தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன்

தாளகதியிலான

பாசாங்குகளின் அடையாளமாகத் "


ஸ் யப்பா முடியல

வருண் மற்றும் நித்யா பேச்சு போட்டிக்கு

என்ன ஒரு எலக்கிய விமர்சனம் . . . !

kathiravan said...

எனக்கு படம் மிகப்பிடித்திருந்தது ! நானும் இதை பற்றி ஒரு பதிவிட்டுள்ளேன் நண்பரே! இங்கே இந்தப் படம் புரிந்து கொள்ளப்படாது .
http://screenwings.blogspot.in/2012/12/blog-post_27.html

Cinema News said...

படம் நன்றாக உள்ளது
அதிகப்படியான எதிர்பார்ப்பே எதிர்மறை விமர்சனத்திற்கு காரணம்.

பின்னோக்கி said...

தியேட்டரில் போய் பார்த்தபோது இடை இடையே வந்த கமெண்டுகள் படத்தை ஆழ்ந்து பார்க்கும் மற்றவர்க்களுக்கு எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதனை புரிந்துகொள்ளாத ஒரு கூட்டத்தோடு இந்தப் படத்தை முதல் முறை பார்த்த போது லயிக்க முடியவில்லை.

வீட்டைப் பூட்டியாச்சா ? இண்டர்வெல் விட 5 நிமிஷம் முன்னாடி போனாதான் பாப்கார்ன் வாங்கப் போனால் தான் கூட்டமில்லாமல் இருக்கும் என்ற நினைப்புகளோடு இந்தப் படத்தைப் பார்த்தபோது லயிக்க முடியவில்லை.

வழமை போல டவுன்லோடி இதோடு 3 முறை லேப்டாப்பில் அமைதியான சூழலில் பார்த்தபோது ... பிடித்திருந்தது.. மிகவும்....

சொதப்பிட்டேன் என்று சமந்தா அழும் அந்தக் காட்சியும், க்ளைமேக்ஸில்... அவர் அழ அழ சொல்லும் காட்சியும் அழகு..

மிகவும் சொதப்பல் என்ற விமர்சனங்களுக்கு நடுவே சற்றே ஆறுதலாய் உங்களது விமர்சனம் :-)

Anonymous said...

http://blogisdummy.blogspot.in/2012/12/tamilnadu-tourist-map-for-easy.html

ஹாய் தமிழ்நாட்டு சுற்றுலா மேப்பை நான் வரைந்து இங்கு தந்துள்ளேன். அதை எடுத்து மெய்ல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.

Unknown said...

சார்.. இந்தப் படம் மொக்கை என்று கருதியவர்களெல்லாம் ‘//'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள்// படங்களில் திருப்திபட்டுக் கொள்பவர்கள் என்று சொல்லுவது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைக்கிறேன். கவுதமின் VTV-ம் இதேப்போல ஒரு காதல் கதையை கொண்டதுதான், ஆயினும் அப்படம் அனைவரையும் ஈர்த்தது. காரணம்.. அதிலிருந்த படைப்பாக்கம். நடிப்பு, இயக்கம், இசை என எல்லா தளங்களிலும் ஒரு ஒழுக்கம்,நேர்த்தி இருந்தது. இதில் அப்படி என்ன இருக்கிறது? பொருந்தாத இசை, இயக்குனரின் ஆளுமையற்ற காட்சிகள்..நகரா திரைக்கதை என திரைமொழியில் ஆதார குணயம்சங்கள் ஏதுமற்று..சுவாரசியமற்ற ஒரு படைப்பாகத்தன் இப்படம் இருக்கிறது. இப்படம் பிடிக்காமல் போவதற்கு காரணம் இவைகள் தானே தவிர..காதல் அறியா தன்மையால் அல்ல என்பது என் கருத்து.