Saturday, December 08, 2012

உலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ

துவக்க நாளின் சம்பிரதாயங்கள் அல்லாமல் நிகழ்ச்சி நேரடியாக  துவங்கியது. பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் குறித்த வேண்டுகோள்  சாத்தியப்படாது என்பதால் இந்த நிகழ்வு குறித்து பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளை அவரது மின்னஞ்சலுக்கு (writerramki@gmail.com)  அனுப்பி கேட்கலாம் என்றார் எஸ்.ரா.

"ஏன் இந்த திரைப்படங்களை விட்டு விட்டீர்கள், இந்த விஷயத்தை விட்டு விட்டீர்கள்' என்று பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் வருகின்றன. இது உலக சினிமா மற்றும் இயக்குநர்கள் குறித்தான அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு என்பதால் ஒரு பருந்துப் பார்வையில்தான் எனது உரை இருக்கும். மற்றபடி ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே இரண்டு மணி நேரத்திற்கு உரையாடுமளவிற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான கால அவகாசமில்லை"


பின்பு பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான திரையாளுமையான பிரான்சுவா த்ருபோ பற்றிய உரை.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இத்தாலியில் தோன்றிய 'நியோ ரியலிசத்தின்' பாதிப்பில் பிரான்சிலும் 'புதிய அலை' இயக்கம் தோன்றியது. த்ருபோ அதன் முன்னோடிகளில் ஒருவர். தொழில்முறை சாராத நடிகர்கள், அரங்குகளைத் தவிர்த்து தெருக்களில் காட்சிகளை பதிவு செய்வது, நாடகத்தனத்தை விலக்கி சாதாரண மக்களைப் பற்றின 'மக்களுக்கான சினிமா'வை உருவாக்குவது போன்றவை இதன் பாணி.

ஒருவனின் பால்ய வயதுகளில் நிகழும் அனுபவங்களே அவனது பிற்கால ஆளுமையை வடிவமைக்கிறது என்பது உளவியல் உண்மை.

த்ருபோவின் தந்தை யாரென்றே அவருக்குத் தெரியாது. (பின்பு துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் இதைக் கண்டுபிடித்தார்). தாயும் அவரை சரியாக வளர்க்காமல் போக தாதிகளிடமும் பாட்டியிடமும் வளர்ந்தார். இந்தத் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் த்ருபோவின் பெரும்பாலான படங்களில் பிரதிபலித்தன. பள்ளிக் கூடத்தில் கல்வியை வெறுத்து பல முறை வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சித்து பிடிபட்டார். வீட்டைச் சுற்றி அமைந்திருந்த திரையரங்குகள்தான் த்ருபோவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தன. ஒரு முறை வீட்டில் டைப்ரைட்டரை திருட, அவரின் வளர்ப்புத் தந்தை காவல்துறையிடம் புகார் செய்ய ஒரு நாள் லாக்கப்பில் இருக்க நேர்ந்தது. பின்பு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

(இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஹிட்ச்காக்கிற்கும் நேர்ந்தது. குறும்புச் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஹிட்ச்காக்கின் தந்தை அவரை ஒரு நாள் போலீஸ் லாக்கப்பில் இருக்கச் செய்தார். இந்த ஆழ்மன அனுபவம் பின்னாளில் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் எதிரொலித்தது. காவல்துறை என்றாலே பதட்டம் கொள்ளும் சாதாரணன் ஒருவன் செய்யாத தவறுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவங்கள் பல படங்களில் வரும்).

வீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்களைப் பற்றி பேசும் போது எஸ்.ரா தன்னுடைய சுயஅனுபவத்தையும் நகைச்சுவை பொங்க விவரித்தார். ஓடிப்போவதில் உள்ள முன்னோடியாக அவனின் நண்பனொருவன் 'எம்.ஜி.ஆரை' பார்க்க சென்னைக்கு போகும் நோக்கத்தில் தவறுதலாக நாகர்கோவில் ரயிலில் ஏறி பின்னர் பிடிபடுகிறான். பின்பு எஸ்.ராவையும் அந்த நண்பன் உசுப்பேற்ற இவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். நண்பனைப் போலவே இவரும் தவறுதலாக நாகர்கோவில் சென்று விடுகிறார். (ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அப்போதே ஏற்பட்டிருக்குமோ).

நானும் இது போல் இரண்டொருமுறை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறேன். எஸ்.ரா -விற்கு இருந்தது போலவே எனக்கும் ஒரு முன்னோடி நண்பனொருவன் இருந்தான். ஓர் அதிகாலையில் கிளம்பி விட்டோம். இப்போது யோசிக்கையில் சில கிலோமீட்டர்களே நடந்த அந்த வரலாற்று பயணம் அப்போது நீண்ட தொலைவைக் கடந்து விட்ட உணர்வைத் தந்தது. மதியத்திற்குப் பிறகு கடுமையான பசி. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தொலைந்து போனதற்கு என்ன காரணம் சொல்வது? நண்பன் பேய் முழி முழிக்க, நான் ஒரு 'கதையை' உருவாக்கினேன்.

அதன் படி என்ன நிகழ்ந்தது என்றால்.. இருவரும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். ஒருவர் வந்து ஏதோ விலாசம் விசாரித்தார். நாங்கள் உதவப் போக அவர் எங்களை வண்டியில் ஏற்றி வைத்து வேகமாக ஓட்டிச் சென்றார். நெடுந்தொலைவு சென்ற பிறகு உணவகத்தில் சாப்பிட இறங்கினார். நாங்கள் 'சாமர்த்தியமாக' தப்பி' வந்துவிட்டோம்..

நான் இதை கச்சிதமாக சரியான முகபாவங்களோடு விவரிக்க வீட்டிலும் நம்பி விட்டார்கள். (ஆனால் நம்புவதாக பாவனை செய்தார்களோ என்று இப்போது தோன்றுகிறது). எனக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறான் என்பதை கண்டு கொண்ட தருணமது. எஸ்.ரா மறுநாள் வீடு திரும்பும் போது அவர் தொலைந்து போனதைக் கூட யாரும் உணரவில்லை. ஆறு சகோதரர்கள் என்பதால் யார் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள் என தெரியாது. 'எங்கேடா போயிருந்தே' என்று சாதாரணமாக கேட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது. வீட்டில் யாருமே அன்று சாப்பிடவில்லை. சமைத்த உணவு அப்படியே இருந்தது. அன்று என்ன உணவு என்பது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தொண்டை வலியுடன் சிரமப்பட்டே சாப்பிட்டேன்.

த்ருபோவிற்கு திரும்புவோம்..

தினமும் மூன்று சினிமா, புத்தகங்கள் என்றிருந்த  த்ருபோவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் André Bazin. சினிமா தொடர்பாக பல கட்டுரைகளையும் காரசாரமான விமர்சனங்களையும் எழுதினார் த்ருபோ. அவரது ஆதர்சங்களில் ஒருவரான ஹிட்ச்காக்குடன் அவர் நிகழ்த்திய நீள்நேர்காணல் மிகவும் புகழ் பெற்றது. சில குறும்படங்களை உருவாக்கின பிறகு திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். அவரின் முதல் படமான The 400 Blows மிகவும் புகழ் பெற்றது. த்ருபோவின் பால்ய வயதின் கசப்பான அனுபவங்களையே பெரிதும் இதில் படமாக்கினார். தன்னுடைய ஆருயிர்த் தோழனான Robert Lachenay- உடன் செய்த குறும்புகளையும். 



The 400 Blows-ல் வரும் சிறுவனுடைய பாத்திரத்தின் பெயர் Antoine Doinel. இந்தப் பாத்திரத்தையே அதன் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் (Antoine and Colette, Stolen Kisses, Bed and Board, Love on the Run) பாத்திரமாக உருவாக்கினார். இப்படி ஒரே பாத்திரத்தையே அடுத்தடுத்த திரைப்படங்களில் உருவாக்கியது புதிய முயற்சி. அதற்குப் பிறகும் இதுவரை அப்படி நடக்கவில்லை. இந்த திரைப்படங்களில் அனைத்திலும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த காதல்/மண வாழ்க்கை சம்பவங்களையே படமாக்கினார். இதுவே பின்னர் 'Antoine Doinel' பாணி என்று புகழ்பெற்றது. இத்தாலிய இயக்குநர்களின் பாதிப்பில் 'நியூ வேவ்' திரைப்பட இயக்கத்தை துவங்கிய த்ருபோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களை பின்பற்றினார் எனலாம். அந்தளவிற்கு த்ருபோவிடம் வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தன.

த்ருபோவின் சமகால இயக்குநரும் நண்பருமான கோடார்ட் த்ருபோவின் படங்களை காரசாரமாக விமர்சிப்பார். த்ருபோவுடன் இணைந்து எழுதி கோடார்ட் இயக்கிய முதல் திரைப்படம் 'Breathless'. ஜம்ப் கட் உள்ளிட்ட பல உத்திகள் இதில் முதன் முதலில் உருவாகியது.

த்ருபோவின் இன்னொரு முக்கியமான திரைப்படம் Fahrenheit 451. இது த்ருபோவின் முதல் வண்ணத் திரைப்படம் மற்றும்  ஆங்கிலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம். அறிவியல் புனைவு போன்றது. நகரில் உள்ள அனைத்து புத்தகங்களும் அழிக்கப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்து வைத்திருப்பவர்களின் வீடுகளில் தேடி அழிக்கும் பணி தீயணைப்புத் துறையிடம் தரப்படுகிறது. அவ்வாறு ஒளித்து வைத்திருப்பவர்களுககு தண்டனையும் கிடைக்கிறது. Guy Montag என்கிற தீயணைப்பு அதிகாரி இவ்வாறு புத்தகம் அழிப்பதில் தீவிரமாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுகிறான். இவ்வாறான தேடலி்ன் போது ஒரு பெண் வீடு முழுக்க புத்தகத்தை வைத்திருக்கிறாள். தீயணைப்பு அதிகாரிகள் புத்தகங்களை தீயிட்டு அழிக்கும் போது அந்தத் தீயில் விழுந்து உயிரை விடுகிறாள்.

Guy Montag -ன் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓர் ஆசிரிய பெண்மணி "நீ இத்தனை புத்தகங்களை அழிக்கிறாயே, ஒரு நாளாவது புத்தகத்தை வாசித்திருக்கிறாயா?" என்று கேட்கிறாள். அந்த தூண்டுதலில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலை வாசிக்கிறார். அது மிகவும் பிடித்துப் போக, தான் புத்தகங்களை எரிக்க (வேட்டையாட) செல்லுமிடங்களில் எல்லாம் மிகச் சிறந்த புத்தகத்தை எடுத்து வந்து வாசிக்கிறார். இதுவே பழக்கமாகி மற்றவர்களைப் போலவே தானும் தன் வீட்டில் புத்தகங்களை மறைத்து வைக்கிறார். இதை அவரின் மனைவி காட்டிக் கொடுக்க அவர் வீட்டிலும் தேடுதல் துவங்குகிறது. தண்டனைக்குப் பயந்து நகரத்தை விட்டு விலகிப் போகிறார். அங்கு சில மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு புத்தகமாக புதினமாக இருக்கிறார்கள்.

புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் அழிவின்மை பற்றியும் Fahrenheit 451 மிக அழுத்தமாக விவரிக்கிறது.

இத்தாலிய நியோ ரியலிசம் பற்றி எஸ்.ரா பேசும் போது அந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ருசோலினி பற்றியும் அவரின் தீராக்காதல்கள் பற்றியும் உரையாடியது சுவாரசியம்.


suresh kannan

1 comment:

Sri Lanka Tamil News said...

சுவையான பதிவு மிக்க நன்றி.