Sunday, December 30, 2012

கும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...


இரா.முருகனின் சிறுகதையில் வரும் ஒரு பகுதி (தோராயமாக) இன்னமும் என் நினைவிலிருக்கிறது. பதின்ம வயது இளைஞர்கள் 'அந்த மாதிரியான காட்சிகளை' எதிர்பார்த்து ஓர் ஆங்கிலப் படத்திற்குச் செல்வார்கள். ஆனால் படத்தில் அவ்வாறான 'காட்சிகள்' எதுவும் இருக்காது. படம் முடிந்து வரும் போது தங்களுடைய ஏமாற்றத்தை மறைக்கின்ற பாவனையுடன் இளைஞர்களில் ஒருவர் சொல்வார் "வக்காலி.. காட்டுக்குள்ள காமிராவை எப்படி எடுத்துருக்கான்ல?".

கும்கி திரைப்படம் பார்த்து விட்டு திரும்பும் பார்வையாளர்களின் கருத்தும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கிறது.

கும்கியில் ஒளிப்பதிவு பாராட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறதென்றாலும் தொழில்நுட்பமும் காடசியின் அழகியலும் மட்டும்தானா சினிமா?. ஏன் இப்படி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் காதலை மாத்திரம் பிரதானமாக வைத்துக் கொண்டு (அதையும் அரைகுறைப் புரிதலுடன்) மற்றவற்றை நுனிப்புல் மேய்ந்து ஒப்பேற்றி விட்டு 'நல்ல சினிமா' எடுத்திருக்கிறேன் என்று அலட்டிக் கொள்கிறார்கள்?.

'நல்ல நேரம்' 'அன்னை ஓர் ஆலயம்" ' சில இராமநாராயணன் திரைப்படங்கள்.. என இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் நாம் வெறும் சர்க்கஸ் யானைகளையும் விளையாட்டு சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். கும்கியில் ஒரு யானையும் பாகனும் பிரதான பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன. எத்தனை அருமையான வாய்ப்பு?. யானைகளைப் பற்றியும் அதற்கும் பாகனுக்குமான உறவைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எத்தனை நுண்தகவல்களை திரைப்படததின் உள்ளீடாக சுவாரசியமாக சொல்லியிருக்கலாம்?. யானைப்பாகன் களிடமிருந்து தரவுகளை திரட்டியும், 'காடு' என்கிற அற்புதமான நாவலை எழுதின ஜெயமோகனைப் போன்றவர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு காட்சிகளையும் திரைக்கதையையும் அமைத்திருந்தால் 'கும்கி' எத்தனை அற்புதமான படமாக அமைந்திருக்கும். இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் சாலையோரத்தில் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடுகின்றவனைப் போன்ற வாய் ஜாலத்துடன் வெறும் சவடாலிலேயே கும்கி முடிய வேண்டியிருந்த அவலம் நேர்ந்திருக்காது.

யானைகளைப் பற்றின நுண்தகவல்களை தராமலிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதனை ஏதோ எம்.என்.நம்பியார், வீரப்பா மாதிரி கொடூர வில்லனாக சித்தரித்த பிழையை என்னவென்பது? விலங்களும் பறவைகளும் மனித குலத்திற்கு எதிரானது், பயங்கரமானது என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில்  'The Birds' படத்தில் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கும் 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் சித்தரித்திருந்தது மிகுகற்பனை என்று விட்டாலும் கும்கியில் சித்தரித்திருப்பது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். 'ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. யானைகளின் வெறிச்செயல்' என்றெல்லாம் வெகுஜன அச்சு ஊடகங்கள் கட்டமைத்துத் தரும் அதே பொய்ச் செய்தியை கும்கியும் மீண்டும் காட்சி வடிவில் சொல்கிறது. விலங்குளின் வாழ்விடங்களையும் நீராதாரங்களையும் தன்னுடைய பேராசையால் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மனித இனம், வாழ்விற்கான அவற்றின் போராட்டத்தை 'வெறிச்செயல், கொலைச்செயல்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. (இத்தனை முக்கியமான செய்தியை போகிற போக்கில் ஊர்த்தலைவர் ஒரு காட்சியில் சொல்வதோடு விட்டிருக்கிறார் இயக்குநர்).

யானைகளை மாத்திரமல்ல, பழங்குடி இன மக்களையும் அரைகுறைப் புரிதலாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். கும்கி யானைக்கும் கோயில் யானைக்கும் வித்தியாசம் அறியாத அடிமுட்டாள்களாகவா அவர்கள் இருப்பார்கள்? மேலும் காலம் காலமாக காட்டைச் சுற்றி வாழும் அவர்களுக்கு விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது? காட்டில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? அவற்றிற்கு இடையூறாக இல்லாமல் புழங்குவது எப்படி என்பதெல்லாம் தெரியாமலா இருக்கும்? ஆனால் இந்தப்படம் முழுக்க அவர்கள் யானையைப் பற்றி எதிர்மறையாகவும் அச்சத்துடனும் பேசிக் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விலங்குகள் இரை காரணமாக அன்றி மற்ற உயிரினங்களின் மீது தாக்குதல் நடத்துவதை விட தம்முடைய பாதுகாப்பையே முதலில் யோசிக்கும். கூடுமானவரை ஒதுங்கியே செல்லும். அது நிகழாத பட்சத்தில்தான் தற்காப்பிற்காக தாக்குதலைத் தொடுக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கொம்பன் எனும் ஆண் யானை, அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களை மிகக் கொடூரமாக குத்திக் கொல்வது போல சித்தரிக்கப்படுகிறது. இப்படம் சித்தரிக்கும்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமலா அறுவடை செய்வார்கள்? யானைகளின் தடத்தில் மனிதர்கள் குறுக்கிடும் போது - அதுவும் யானைக்கூட்டங்களால் அல்ல, ஒற்றை யானை எனும போதுதான் - ஆபத்து நேரிடலாம். (இந்தப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்).

படத்தில் பாத்திரங்களின் வார்ப்பில், காட்சிகளின் சித்தரிப்புகளில் நிறைய தர்க்கப்பிழைகளும் உள்ளன.

இதில் பொம்மனாக வரும் யானைப் பாகனும், மாணி்க்கம் என்கிற யானையும் சிறுவயது முதலே பழகுவதாகவும் இருவரும் பாசத்தில் பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாகன், யானை ஒருமுறை சிறுகுற்றம் புரிந்த காரணத்தினால் நடு்ச்சாலையிலேயே யானையுடன் கோபித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறான். யானையும் பின்னாலேயே வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள மக்கள் பீதியுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். பாகனோ இது எதையும் கவனிக்காமல் அமர்ந்திருக்கிறான். வனக்காவலர்கள் யானையை பிடித்துச் செல்கிறார்கள். ஒரு நல்ல பாகன், யானையின் மீது உண்மையான அக்கறையுடையவன், இந்த சூழ்நிலைகளை தவிர்ப்பானா, மாட்டானா? அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா? அவன் அந்த ஊரில் தங்குவதுதான் பிரதான நோக்கம் என்றால் அதற்கான வழியா இல்லை?

படம் நெடுக கொம்பன் யானையைப் பற்றிய பிம்பம் கட்டமைத்துக் கொண்டேயிருக்கப்படுகிறது. (அந்த ஊரிலேயே ஒரே ஒரு யானைதான் இருக்கிறது போல). படத்தில் இரு வனக்காவலர்கள் வருகிறார்கள். கொம்பன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போல.. 'கொம்பன் வந்தான்னா தெரியும் சேதி' என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காமெடியாக இருக்கிறது. ஊரே அந்த யானையைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால் பாகனுடன் வந்திருக்கும் தம்பி ராமையாவிடம் 'அந்த யானையை ஒரே ஆளா நீங்க அடிச்சு கொன்னுடுவீங்க இல்ல' என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். காமெடியாம். பொம்மன், அல்லியை கவர்வதற்கு முன்பாகவே யானை மாணிக்கம் அவளை காப்பாற்றி முன்னதாகவே கரெக்ட் செய்து விடுகிறது.

வின்னர் படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' பாத்திரம் தமிழ் சினிமாவில் இன்னுமும் சாஸ்வதமாக தொடர்ந்து உலவிக் கொண்டிருப்பது தம்பி ராமையாவின் பாத்திரத்தின் மூலம் நிருபணமாகியிருக்கிறது. மனிதர் மாடுலேஷனில் பின்னியிருந்தாலும் அவரது மைண்ட் வாய்ஸில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது சலிப்பைத் தந்தாலும், அவர் இல்லாத 'கும்கி'யை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சொதப்பலாகியிருக்கும். வடிவேலுவால் தொடர்ந்து நடிக்கப்பட்டு நைந்து போனதுதான் என்றாலும், தம்பி ராமையாவின் பாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கலாம் என நம்புகிறேன். 'பருத்தி வீரன்' கார்த்தியை நினைவுப்படுத்தினாலும் விக்ரம்பிரபு தன்னால் ஆன அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தூக்கத்தைக் கெடுக்குமளவிற்கு அழகாக இருக்கிறார் லக்ஷ்மி மேனன். பழங்குடி இன மக்களுக்கான ஒப்பனையை விட சேலையில் கூடுதல் அழகு. படத்திற்கு முன்னதாக சிறப்பான அனுபவத்தை தந்த பாடல்களுக்கு ஏற்ப காட்சிகள் சிறப்பாக அல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

யானை என்றாலே டிரம்ப்பெட் மாதிரி ஒரே மாதிரி பிளிறல் ஒலியை உபயோகித்துக் கொண்டிருந்த வழக்கத்திற்கு மாறாக யானை எழுப்பும் சன்னமான ஒலிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. கோயில் யானையான மாணிக்கம், முரட்டு காட்டு யானையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற பார்வையாளனின் அவநம்பிக்கையை, அந்தச் சண்டைக்கு முன்னால் அதற்கு மதம் பிடித்திருப்பதாக சித்தரித்திருப்பதின் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு. யதார்த்தத்தை உணர்ந்து காதலை இருவரும் தியாகம் செய்வது மெலோடிராமாவாக தெரிந்தாலும் அந்த முதிர்ச்சிக்காக பாராட்டு.

வித்தியாசமான படம் என்கிற பாவனையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கப்படும் காதலைத்தான் கும்கியும் சொல்கிறது. வேறான்றுமில்லை.

இப்போது பதிவின் தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்.


suresh kannan

Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip


'காதலைக் கடந்து வந்தவர்களால்தான் இந்தப் படத்தை ஆழமாக உணர முடியும்' என்கிற மாதிரியான சில அபிப்ராயங்களை இத்திரைப்படம் குறித்து வாசித்த போது மெலிதாக கோபம் கூட எழுந்தது. காதல் என்பது எல்லா உயிரினங்களுக்குமான ஓர் அடிப்படையான, இயற்கையான உணர்வு. அதைக் கடந்து வந்தால்தான் உணர முடியும் என்பது 'பாலுறவைக் கடந்து வந்தால்தான் சுயஇன்பத்தை உணர முடியும்' (?!)  என்பது மாதிரி அபத்தமான அறிவிக்கையாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இந்தத் திரைப்படத்தை பார்த்த பின்பு மேற்குறிப்பிட்ட அபிப்ராயங்களோடு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. மூப்பிலோ, விபத்திலோ மரணத்தை சந்தித்து விட்டு திரும்பியவர்களின் உணர்வுகளை அது போன்ற அனுபவத்தை அடைந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். என்னதான் விளக்கிச் சொன்னாலும் அந்த அகரீதியான அனுபவத்தை மற்றவர்களுக்கு கடத்தி விட முடியாது. 'படத்தில் கதை என்கிற வஸ்து இல்லை, மெதுவாகச் செல்கிறது, போரடிக்கிறது, மொக்கையாக இருக்கிறது' எனும் அகாதல்வாதிகளின் புறக்கணிக்கப்பட வேண்டிய குறிப்புகள், அவர்கள் காதல் என்னும் உன்னதத்தை சந்திக்காத அபாக்கியவான்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது.

'வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையின் தருணங்கள்' என்று படத்தின் துவக்கத்திலும் போஸ்டர்களிலும் இயக்குநர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் இதில் தமிழ் சினிமாவை வழக்கமான சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது நாம் இன்னமும் சினிமா பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஏய்... என்று கத்திக் கொண்டு ஒரு வில்லன், 'எண்ற புள்ளையையாடா காதலிக்கிற.. பசுபதி பூட்றா வண்டியை' என்று கத்தும் பெண்ணின் தகப்பன், உன்னை எப்படில்லாம் வளர்த்தம்மா' என்று கண்ணீர் விடும் அம்மா, இந்தச் சமூகத்தை திருத்தறதுதான் முக்கியம், நீ-லாம் அப்புறம்" என்று வெட்டி பஞ்ச் டயலாக் பேசும் நாயகன், போன்றவற்றை கட்டாயம் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தைத் தான் தரும்.

இந்தப்படத்தில் வரும் காதலுக்கு எதிரிகள், இந்தப் படத்தின் காதலர்களே. அதாவது அவர்களின் ஈகோ. ஆண் x பெண் என்கிற எதிர்துருவ உறவு எப்போதுமே பரஸ்பர ஈர்ப்பு இருக்கிற அளவிற்கான சிக்கல்களையும் கொண்டது. எத்தனை வயதைக் கடந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது. அத்தகைய தருணங்களின் தொகுப்பாகத்தான் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த அனுபவத்தில் ஈடுபட்ட /பட்டுக் கொண்டிருக்கிற எவருமே எந்தவொரு இடத்திலாவது மிக நெருக்கமாக இந்த தருணங்களோடு உடன்பட, ஒப்பிட்டுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு காதல் குறித்து  யோக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது நீஎபொவ. 

அதற்காக காதலிப்பவர்கள் தங்களின் ஈகோக்களை, சுயஅடையாளங்களைத் துறந்து 'ஒண்ணு மண்ணாக பழகணும்' என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி என்று புரிந்து கொண்டால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க முடியாது. அந்தந்த பருவங்களை அதற்கேயுரிய சிக்கல்களுடன் மகிழ்ச்சியுடனும்தான் கடக்க முடியும்.

பெரும்பாலும் அடித்தட்டு வாக்க இளைஞனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதிலிருந்து இப்படத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார் எனலாம். ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் அபிலாஷைகளை, குழப்பங்களை, பொருளாதார அவஸ்தைகளை, ஒப்பிடல்களை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர்கள் தங்களின் உறவு குறித்தான சிக்கல்களை விவாதிக்கும் பகுதிகள், கெளதம் மேனனின் படங்களில் தொடர்ந்து சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் அவ்வாறே. இது தொடர்பான  காட்சிகளில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மிக நீளமாக வரும் மொட்டை மாடிக் காட்சியிலும் இறுதிக் காட்சிகளிலும்.  படம் நிறைவடைவதிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தன் அகங்காரங்களை துறந்து வருணிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொள்வதின் அடையாளமாக 'I love you' என்று அவர் வெடிக்கும் போது எனக்கு  தன்னிச்சையாக கண்ணீர் பொங்கியது. (என்றாலும் அம்மணி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனது போலவே பெரும்பாலான காட்சிகளில் தோற்றமளித்தது சற்று அசெளகரியமாக இருந்தது. 'நான் ஈ'யில் கூட நன்றாக இருந்தாரே).

ஆக்ஷன் திரைப்படங்கள் உட்பட கெளதமின் எல்லா படங்களிலுமே காதல் தொடர்பான காட்சிகள் மிகச் சிறப்பாக மிக வலுவானதொரு இழையாக படம் முழுதும் படர்ந்திருக்கும். நீஎபொவ -வைக் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயின்' இன்னொரு பரிமாணமாக,நீட்சியாக கொள்ளலாம். அது இயக்குநரின் பிரத்யேகமான முத்திரைகள் என்றாலும் கெளதமின் கிளிஷேக்களாக சிலவற்றை சொல்லலாம். மூத்தவயது காதலி, அப்பாவை (பெரும்பாலும் கிருஷ்ணன்) மிக நெருக்கமாக உணரும் நாயகன், கேரளப் பயணம், மேல்தட்டு வர்க்க காதல், போன்றவற்றை சலிக்குமளவிற்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

என் மனதிற்கு மிக நெருக்கமான இளையராஜாவை, கெளதமின் திரைப்படங்களின் முன்அனுபவத் தடைகளினாலோ என்னவோ - இத்திரைப்படத்தில் மிக அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலும் அவரது பாடல்களோ, பின்னணி இசையோ (சற்று முன்பு... போன்ற அபூர்வ தருணங்களைத் தவிர்த்து) படத்தில் ஒட்டவேயில்லை. கெளதம் மறுபடியும் ஹாரிஸிற்கு திரும்புவது நல்லது. படத்தின் இன்னும் சில பின்னடைவுகள், வருண்-நித்யா தொடர்பான சிறுவயது, பள்ளிக்கூட காட்சிகள். அவைகள் இல்லாமலேயே படத்தை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும். சந்தானம் தொடர்பான காட்சிகளும். தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன் சற்றே இளைப்பாறுவதற்காக திணிக்கப்பட்ட் காட்சிகள் எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக விதாவ -வை spoof செய்திருப்பது அபத்தமானதொன்று.

ஆண்டனியின் வேகமான தாளகதியிலான படத்தொகுப்பு பிரசித்தி பெற்றது. ஆனால் இதில் மிக சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக அந்த மொட்டை மாடிக் காட்சி. எதிர்மாடி பார்வையாளனைப் போல நம்மை உணரச் செய்யும் அந்தக் காட்சிகள் டாப் ஆங்கிள் கோணத்திலிருந்து தவழந்து கீழே வந்து மறுபடியும் உயரே செல்கிறது, அவர்களது உரையாடல்களைப் போலவே. (இங்கு விதாவில் சிம்புவும் த்ரிஷாவும் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வெளியே உரையாடும் காட்சியை நினைவு கூரலாம்).

மொத்தத்தில் நீதானே என் பொன் வசந்தம், காதலின் வலியில், துயரத்தில், மகிழ்ச்சியில், வாதையில், சிக்கலில் நனைந்தவர்களுக்கானது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள். 

தொடர்புள்ள பதிவு:


suresh kannan

Tuesday, December 25, 2012

நடுவுல கொஞ்சம் .....................காணோம்


டிஜிட்டல் புரட்சியால் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்திருக்கும் நல்ல முயற்சி நகொபகா. வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து ஒரே ஒரு லைனை வைத்துக் கொண்டு எங்கும் திசை மாறாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது, படம் ஒரு சிக்கலான பிரச்சினையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்க பார்வையாளர்களாகிய நாம் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். இப்படியொரு சீரியஸான காமெடி படம் தமிழில் வந்ததாக எனக்கு 'நினைவில்லை'. ஞாபகக் குறைபாடு என்னும் விஷயத்தை வைத்துக் கொண்டு 'மூன்றாம் பிறை' இயங்கிய மெலோடிராமாவிற்கு எதிர் திசையில் இயங்குகிறது இத்திரைப்படம். 
 
இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் casting. தமிழ்த் திரைக்கு அறிமுகமேயில்லாத நடிகர்கள். ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள். படம் துவங்கின சில நிமிஷங்களிலேயே நமக்கு நெருக்கமான நபர்களாக ஆகி விடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அதன் வார்ப்பில் தனித்தன்மையுடன் இயங்குகிறது. சீரியஸாக பொறுப்போடு ஒருவன், முன்கோபத்துடனும் ஈகோவுடனும் ஒருவன், மனதில் பட்டதை உடனே உளறிக் கொண்டு அசட்டுத்தனமாக விழிக்கும் ஒருவன், மெலிதாக அவர்களுக்குள் இயங்கும் ஈகோ (நீ சொன்னா மாத்திரம் எப்பிடிடா கேட்கறான் - அதற்கு மொக்கையான ஒரு ப்ளாஷ்பேக்)..எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் மருத்துவ விஷயங்களை உதிர்ப்பது...என்று படம் பார்க்கும அனைவருமே தங்களின் நண்பர்கள் குழுவை நினைவுகூர்வார்கள். குறிப்பாக சரஸாக நடித்திருக்கும் விக்னேஷ்வரனின் நடிப்பு அற்புதம். படம் முழுக்க சீரியஸாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே மாதிரியான வசனத்தை படம் முழுக்க சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் விஜய் சேதுபதிக்கு. வேறு வேறு மாடுலஷன்களில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.

முதலில் நமக்குத் தோன்றும் நெருடல் 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்பது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்தான் இது எனும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்னொன்று பிரதான பாத்திரத்திற்கு ஏற்படும் விபத்தையொட்டி மீண்டும் மீண்டும் வரும் அதே சம்பவங்கள்.. வசனங்கள். ஆனால் இதை சுவாரசியமான கதைச் சொல்லாடலின் மூலம் பெரும்பாலும் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார். குறிப்பாக கல்யாண ரிசப்ஷன் காட்சிகளின் நீளம், கிளைமாக்ஸ் போன்றவற்றில் யதார்த்தமில்லையென்று தோன்றினாலும் அதை சுவாரசிய நகைச்சுவையின் மூலம் மறக்கடித்திருக்கிறார். பாடல்களை பெருமளவு தவிர்த்திருப்பது, படத்தின் காட்சிகளை குறைத்திருப்பது போன்றவை புத்திசாலித்தனம்.

தமிழ்த் திரையின் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுள் முக்கியமானதொன்றாக நகொபகா -வைச் சொல்லலாம். இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டு.

suresh kannan

Tuesday, December 18, 2012

Amour / French / வயோதிக காதலும் துயரமும்



தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். துர்நாற்றம். படுக்கையறையில் ஒரு கிழவியின் பிணம். மலர்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

Flashback -ல் படம் பயணிக்கிறது. Georges மற்றும் Anne வயதான தம்பதிகள். தனியாக வாழ்கிறார்கள். திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளும் இவர்களுக்கு உண்டு. தம்பதிகள் பரஸ்பர அன்புடன் வாழ்கிறார்கள். அதிலும் Georges, Anne மீது இன்னமும் தீவிரமான காதலுடன் இருக்கிறார் என்பது அவருடைய கண்களிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. ஒருநாள் கிழவி, இவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சில நிமிடங்கள் உறைந்து அமர்கிறார். 'என்ன விளையாடி பயமுறுத்துகிறாய்?" என்று கோபப்படுகிறார் கிழவர். பிறகு நிகழும் மருத்துவ ஆய்வில் மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்திருப்பது தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் ரொம்பவும் பயந்து விடுகிறார் கிழவி. "இனிமேல் என்னை மருத்துவமனைக்கு செல்ல கட்டயாப்படுத்தாதே" என்று வேண்டிக் கொள்கிறாள். அறுவைச் சிகிச்சை கோளாறாகி முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் முடங்குகிறாள் கிழவி. ஒரு குழந்தையைப் போல அவளின் அனைத்து தேவைகளையும் வீட்டிலேயே அன்புடன் பூர்த்தி செய்கிறார் கிழவர். 'மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் என்ன பைத்தியக்காரத்தனம் இது?" என்று கோபிக்கிறாள் மகள்.

தானே ஒரு வயதானவராய் இருந்தாலும் கிழவியை மிக பொறுமையாக கவனித்துக் கொள்ளும் கிழவரின் பொறுமைக்கு சோதனை ஏற்படுகிறது. அவர் எடுக்கும் விபரீதமான முடிவு என்ன என்பதை திரையில் காணுங்கள்.

பெரும்பாலும் அனைத்துக் காட்சிகளும் ஒரு வீட்டிற்குள்ளேயே நிகழ்கின்றன. அதிலும் ஒரு கிழவர் மற்றும் கிழவியின் நடமாட்டங்கள் மாத்திரமே. அவுட்டோர் காட்சிகளே கிடையாது. மறுபடியும் மறுபடியும் ஒரே பின்னணியையும் நபர்களையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சவாலை முன்வைக்கும் வேலை. அவர்கள் திறமையாக சமாளித்திருந்தாலும் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்னுமளவிற்கு மிக மிக நிதானமாக, சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. 

ஆனால் அந்த அதிர்ச்சியான உச்சத்தை நோக்கி இயக்குநர் நம்மை மெல்ல மெல்ல நகர்த்திச் செல்வதால்தான் அந்தக் காட்சி பளீரென்று நமக்குள் உறைக்கிறது. என்னால் அந்த உச்சக்காட்சியை முன்பே யூகிக்க முடிந்தாலும், எந்த மாதிரியானதொரு காட்சிக் கோர்வையில் அதை இயக்குநர் நிகழ்த்த விரும்புகிறார் என்பதில்தான் அவருடைய மேதமை நமக்கு விளங்குகிறது. ஒரு காட்சியில் நீரருந்த மறுத்து அடம் பிடிக்கும் கிழவியை எதிர்பாராத தருணத்தில் அறைகிறார் கிழவர். நமக்கு வலிக்கிறது.

எந்த இடத்திலும் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாது. அந்தளவிற்கு மிக யதார்த்தமாக, இயல்பாக அந்த தம்பதிகளின் நெருக்கமும் அன்பும் அன்னியோன்மும் வெளிப்படுகிறது. இரண்டு பேருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை நோக்கி பயணிக்கும் கிழவியின் ஒப்பனை அந்த நோயின் வளர்ச்சி நிலைக்கேற்றவாறு மாறுவது அற்புதமாக இருக்கிறது. படம் மிக நிதானமாக நகர்வதால் சாவகாசமான மனநிலையில்தான் பார்க்க வேண்டும்.

கிழவி மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக காட்டப்படும் அடுத்த காட்சியில் ஆரோக்கியமான கிழவி, பியானோ வாசிப்பதாக காட்டப்படுகிறது. கிழவி சுகமாகி விட்டாளோ என்று கூட தோன்றியது. ஆனால் சற்று தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் கிழவரின் அகம் தொடர்பான காட்சிப்பிழை என்பது பிறகு புலனாகிறது. இறுதிக் காட்சியின் முன்னோட்டமாக இதைக் கொள்ளலாம். ஜன்னலில் வந்து அமரும் புறாவை முதலில் துரத்தும் கிழவர், பிறிதொரு காட்சியில் பிடிக்க முயல்வதும் கிழவருடைய மனநிலையின் அடையாளங்களே. அனைத்தையும் ஒரு குறிப்பாக கிழவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது பின்னர் புலனாகிறது.

பூட்டப்பட்ட அறையில் கிழவியின் பிணம்.. கிழவர் என்ன ஆனார்? ...

யாருக்குத் தெரியும்...?
கான் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைவிழாக்களில் விருது பெற்ற திரைப்படமிது. 10வது சென்னை சர்வதேச விழாவில் துவக்க திரைப்படமாக திரையிடப்பட்டது. The Piano Teacher, The White Ribbon  உள்ளிட்ட பல சிறந்த திரைப்படங்களின் இயக்குநரான Michael Haneke இதை இயக்கியுள்ளார்.
suresh kannan

Friday, December 14, 2012

10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012


மாலை 7.15 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த பிரெஞ்சு திரைப்படம், துவக்க விழா சம்பிரதாயங்களின் காரணமாயும் 'அவர்களே, இவர்களே' காரணமாயும் சுமார் 08.30 மணிக்குத்தான் துவங்கியது. யாராவது குத்து விளக்கை இரண்டு நொடியில் ஏற்றி வைத்து விட்டு 'படம் போடப் போறாங்கப்பா' என்று சொல்லி விலகினால் தேவலை. இரவு நேர கடைசி ரயிலை பிடித்து அகாலத்தில் வீடு திரும்ப நேரும் என்னைப் போன்றவர்களுக்கு கடுப்பாய்த்தானிருக்கும். என்றாலும் முதல் நாள் என்பதாலும் துவக்க நாள் திரைப்படமான Amour -ஐ பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றி விட்டதாலும் இவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

என்றாலும் துவக்க நாள் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாக ஏ ஆர் ரகுமானின்  K M Music Conservatory மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். அசத்தி விட்டார்கள். கவாலி பாடகர்கள் போல் உடையணிந்திருந்த சுமார் 20 மாணவர்கள், மங்கள் பாண்டேயில் வரும் Al Maddath Maula பாடலை அற்புதமாகப் பாடினார்கள். சுஃபி பாணியில் அமைந்திருக்கும் இந்த கவாலிப் பாடலை ஏகாந்தமான நேரத்தில் கேட்டால் உத்தரவாதமாக கண்ணீர் பெருகும். 'ராசாத்தி என் உசுரு என்னுதில்ல (திருடா திருடா) 'ஊர்வசி ஊர்வசி' (காதலன்) பாடல்களை unplugged வெர்சனில் சேர்ந்திசையில் வெவ்வேறு தாளகதிகளில் சில மாணவர்கள் நின்று பாடியது அருமை. ரகுமானி்ன் 'ரோஜா' தருணங்கள் மனதில் நிரம்பி ஒரு நெகிழ்ச்சியை உருவாக்கியது. இன்னும் ஒரு ஹைலைட்டாக ரகுமானின் மகன் சிறிது நேரம் பியானோ வாசித்து காண்பித்தான். ருஷ்ய பியானோ பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் வாசித்த இசையும் அருமையாக இருந்தது. 



தமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர்,இயக்குநர் ஜனநாதன் பேசும் போது 'திரையிடப்படும் படங்களின் அட்டவணையில் தமிழ் படங்களை சேர்க்க வேண்டும்' என்று வைத்த வேண்டுகோளை சுஹாசினி ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என்கிற காவியங்களை உள்ளிட்ட அந்தப் பட வரிசையை பார்த்தால் சினிமா ஆர்வலர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும். அது சரி. சட்டியில் இருந்தால்தானே எடுப்பதற்கு?.

அமீர் பேசும் போது ஒரு சுவாரசியமான டிராமாவை அரங்கேற்றினார். 'நான் பல உலகப்படவிழாக்களுக்கு போயிருக்கிறேன். அங்கெல்லாம் அந்தப் பிரதேசத்தின் கலாச்சார அடையாளங்களையே வெளிப்படுத்துகிறார்கள். இங்குதான் நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து' கூட பாடப்படவில்லை' என்று கைத்தட்டலுக்கான கல்லா கட்ட, சரத்குமார் பேசும் போது இடையில் திடீரென்று தமி்ழ்த்தாய் வாழத்தை பாடி அனைவரையும் எழுந்து நிற்க வைத்து விட்டார்.

"அய்யா, தமி்ழ்க்காவலர்களே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஒரு புறம இருக்கட்டும், இது போன்ற சர்வதேச திரைவிழாக்களில் திரையிடும் தரத்திற்கான தமிழ் சினிமாவை முதலில் உருவாக்குங்கள்' என்று கூவ வேண்டும் போலிருந்தது.

'அடுத்த வருடத்திற்கான திரைவிழாவை ஒரே இடத்தில் அமையும் படியான நவீன கலையரங்கை அரசு கட்ட வேண்டும்' என்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தன் உரையில் தெரிவித்தார். (இவர் பேச ஆரம்பித்த போது அதுவரை இருந்த சூழல் மாறி மயிலை மாங்கொல்லையில் அமர்ந்திருந்த உணர்வு வந்தது.) கலைவாணர் அரங்கம் அமைந்திருந்த இடத்தில் இந்த நவீன அரங்கம் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்பட்டு விடுமாம். பார்க்கலாம்.

Amour திரைப்படம் பற்றி அடுத்த பதிவில். 

suresh kannan

Wednesday, December 12, 2012

Rust and Bone - French - சென்னை சர்வதேச திரைப்பட விழா -2012 - 1



13.12.2012 அன்று துவங்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் திரைப்படங்களில் ஒன்று Rust and Bone. பிரெஞ்சுத் திரைப்படம். குத்துச் சண்டை போட்டியாளன் ஒருவனுக்கும் கால்களை இழந்திருக்கும் ஒரு்ததிக்கும் உள்ள காதலை பிரதானமாகக் கொண்டது.

திடகாத்திரமான உடம்பைக் கொண்ட அலி. தன் ஐந்து வயது மகனுடன் தெற்கு பிரான்சிற்கு வேலை தேடி வருகிறான். அவனுடைய சகோதரி அன்னாவுடன் ஒண்டிக் கொள்கிறான். கிளப்பில் பவுன்சர் வேலை. அங்கு ஸ்டீபன் என்கிற பெண் காயப்பட அவளுடன் அறிமுகம் ஏற்படுகிறது. அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சியளித்து வேடிக்கை காட்டும் பணியில் இருக்கிறாள். அங்கு ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழக்கிறாள். அலி, தான் முன்னர் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிக் பாக்சிங்கை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிறான்.

ஸ்டீபன், அலியை ஒரு நாள் அழைக்கிறாள். கால்கள் இல்லாத அவளுக்கு ஆதரவாக இருக்கிறான் அலி. இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. அலி தன்னுடைய மகனை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் கைவிரல்களை இழக்கிறான். இறுதியில் அவன் ஒரு சிறந்த கிக் பாக்சராக இருப்பதோடு படம் நிறைவுறுகிறது.

படத்தின் பிரதான விஷயம் அலிக்கும் ஸ்டீபனுக்கும் இடையே உள்ள காதலும் காமமும். முதல் சந்திப்பில் அவளது உடையைப் பார்த்து 'நீ ஒரு பாலியல் தொழிலாளியா?" என்று கேட்கிறான் அலி. பின்புதான் அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிப்பவள் என்று தெரியவருகிறது. கால்களை இழந்து தனிமையில் துன்புறும் அவளை வெளியே அழைத்து வந்து கடலில் குளிக்க வைக்கிறான். பின்பு 'தனிமையிலிருக்கும் உனக்கு பாலுணர்வு தோன்றவில்லையா?" என்கிறான். "ஆம். தோன்றுகிறது" என்கிறாள் ஸ்டீபன். தன்னைக் கவரும் பெண்களிடமெல்லாம் பாலுறவு கொள்ளும் அலி, இவளிடமும் அவளின் தேவையை தீர்க்கும் நோக்கத்தில் உறவு கொள்கிறான். தேவைப்படும் போதெல்லாம் தான் "ஆயுத்தமாக' இருக்கும் சமயங்களில் அழை' என்கிறான்.

ஸ்டீபனுக்கு இவனுடைய காமம் முதலில் பிடித்திருந்தாலும் எவ்வித அன்புமில்லாமல் மிருகம் போல் உறவு கொள்கிறானே என்று எரிச்சலாக இருக்கிறது. அவனிடமிருந்து பிரிய நினைக்கிறாள். இதுபற்றி அவனிடம் உரையாடும் போது அவன் எவ்வித உறவுச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போல் தோன்கிறது. 


படத்தில் வரும் ஒரு சிறந்த காட்சி: அலியும் ஸ்டீபனும் கிளப்பிற்கு செல்கிறார்கள். அங்கு நடனமாடும் ஒரு பெண்ணால் கவரப்பட்டு அலி அவள் பின்னால் போய் விடுகிறான். ஸ்டீபன் வெறுப்பில் அமர்ந்திருக்கிறாள். அப்போது அங்கு வரும் ஒருவன் ஸ்டீபனுக்கு மது வாங்கித் தருகிறான். காம நோக்கோடு அழைப்பு விடுக்கிறான். ஸ்டீபன் 'எனக்கு இப்போது அந்த உணர்வு இல்லை' என்று விலகுகிறாள். அப்போதுதான் அவளுடைய செயற்கைக் கால்களை பார்க்கும் அவன் "மன்னிக்கவும், தெரியாமல் உன்னை அழைத்து விட்டேன்" என்கிறான். ஸ்டீபன் பயங்கர ஆத்திரத்துடன் அவனைத் தாக்குகிறாள். மாற்றுத் திறனாளிகளை வெற்று அனுதாபத்துடனும் அயல்கிரக ஜீவிகளைப் போலவும் அணுகும் பொதுப்புத்தியை இந்தக் காட்சி விமர்சிக்கிறது.

அலியின் நண்பரொருவர், ஷாப்பிங் மால் முதலாளிகளின் ஆணைப்படி ஊழியர்களை ரகசியமாக கண்காணிக்க கேமராக்களை பொருத்துகிறார். அவருடன் பணிபுரிய நேரும் அலி,  'இது சட்ட விரோதமில்லையா?," என்று கேட்கிறான். 'சட்டம் என்பதன் அர்த்தமென்ன? என்று கேட்கிறார் நண்பர். இந்தக் கேமராவினாலேயே அலியின் சகோதரிக்கு வேலை பறி போவது ஒரு நகைமுரண்.

கிக் பாக்சிங் சண்டைக்காட்சியில் அலியின் ஒரு பல் மாத்திரம் குருதியோடு தெறித்து விழும் ஒரு குளோசப் காட்சி ஆயிரம் வன்முறைக் காட்சிகளுக்கு ஈடாக இருக்கிறது. குத்துச் சண்டையில் வெறியோடு சக போட்டியாளர்களை அடித்து வீழ்த்தும் அலியின் திறமை, அலியின் மகன் பனிக்கட்டியின் கீழ் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் போது பனிக்கட்டிகளை கைகளினால் உடைத்து அவனை மீட்பதற்கும் பயன்படுகிறது. ஒரு பர்த்திரத்தின் பிரதான திறமையை அல்லது பணியை சிக்கலான சூழ்நிலைக்குப் பொருந்துமாறு திரைக்கதை அமைப்பதின் நுட்பமிது.

தன் மகன் உயிராபத்திலிருந்து மீளும் அந்த தருணத்தில்தான் ஸ்டீபன் மீதுள்ள காமத்தைத் தாண்டிய காதலை அலியால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டீபனாக Marion Cotillard மிகச் சிறப்பாக நடித்திருக்கிறாள். இவரின் துண்டிக்கப்பட்ட கால்கள் தொடர்பான காட்சிகள் நம்பவே முடியாத அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கால்களை மடித்து வைத்திருக்கும் அதே உத்திதான் என்றாலும் கணினி நுட்பம் மூலமாக உண்மையாகவே கால்களை இழந்த தோற்றத்தினை மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கின்றனர். படத்தைப் பார்க்கும் போது நீங்களே அதை உணர்வீர்கள். அலியாக நடித்திருக்கும் Matthias Schoenaerts-ம் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது மகனாக வரும் சாமும், சினிமா சிறுவனைப் போல் அல்லாமல் இயல்பான ஒரு சிறுவனைப் போலவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறான்.

 Craig Davidson-ன் சிறுகதை தொகுதியை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் Jacques Audiard. 2009-ல் சிறந்த படமாக பேசப்பட்டA Prophet -ன் இயக்குநர் இவர். கான் திரைப்பட விருதில் நாமினேஷன் பட்டியலில் இருந்தது.

இந்த வருட சர்வதேச திரைவிழாவில் தவற விடக்கூடாத திரைப்படங்களில் இது ஒன்றாக இருக்கும்.
 
suresh kannan

Tuesday, December 11, 2012

உலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு நன்றி



ஏழு நாட்கள். உலக சினிமாவின் ஏழு சிறந்த கலையாளுமைகள். தினமும் சுமார் இரண்டரை மணி நேர உரை. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், ஆர்வமுள்ள சினிமா ஆர்வலர்கள்.பெரும்பாலும் இளைஞர்கள். முதியவர்கள். ஒன்றிரண்டு பெண்கள். உயிர்மை பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த உலக சினிமா பேருரையில் கலந்து கொண்ட அனைவரும் உரை நிறையும் வரையில் அமைதியாகவும் ஆர்வமாகவும் ரசித்தார்கள். (அரங்கு நிறைந்து நின்று கொண்டே நிகழ்வை கேட்டவர்களும் இதில் அடக்கம்).

சினிமா ரசனை என்பதை கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா இடைவிடாது தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகத்தில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது யதார்த்த உண்மை என்றால் நம் சமூகத்தில் அரசியல் தலைவர்களை சினிமாதான் தீர்மானிக்கிறது என்பது கசப்பான உண்மை. நம்மை ஆள்பவர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சினிமா இங்கு வலிமையான ஊடகமாக திகழ்கிறது. அத்தகையான வலிமையான ஊடகம் எத்தனை மோசமாக அழுகிக் கிடக்கிறது என்பதை சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இருந்தும் வெகுஜன ரசனை இன்னமும் துப்பாக்கி, மாற்றான் போன்ற அரைவேக்காட்டு குப்பைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இந்த ரசனை மாறினால் சமூக மாற்றத்தில் சினிமாவும் பங்கும் மகத்தானதாக இருக்கும்.

பாலுமகேந்திரா குறிப்பிடுவது பள்ளி மாணவப்பருவத்திலேயே சினிமா ரசனையை உயர்த்துவதற்கான ஆலோசனை. ஆனால் வளர்ந்தவர்களுக்கு?...

சினிமா இயக்கங்களும், அமைப்புகளும், சினிமா மீது ஆர்வம் கொண்ட தனிநபர் முயற்சிகளும், நல்ல சினிமாவைப் பற்றி தொடர்ந்து பேசும், எழுதும் படைப்பாளிகளின் பங்குதான் இங்கு முக்கியமானதாகிறது. எஸ்.ராவின் பேருரையும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.

நான் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டபடி ஓர் இயக்குநரைப் பற்றிய அறிமுகத்தை, அவரின் சிறந்த படங்களை, மிகச் சிறந்த காட்சிக் கோணங்களை தன் வாழ்வின் பல மணி நேரங்களை செலவழித்து அவதானித்ததை ரசனையோடு இரண்டரை நேரத்தில் நம்மோடு பகிர்வதென்பது சிறப்பான விஷயம். ஏற்கெனவே நமக்கு அறிமுகமான விஷயங்கள் என்றாலும் அதை ஒரு விமர்சகரின் பார்வையில் கேட்டு நம்முடைய அனுபவத்தோடு ஒப்பிட்டு அது ஒத்திருந்தால் நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அல்லது விமர்சகரின் கோணத்தில் காட்சியின் புதிய பரிமாணங்களை அறிவதென்பது போன்று பல விஷயங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக சத்யஜித்ரே -வின் ஜல்சாகர் (The Music Room) படத்தினைப் பற்றி எஸ்.ரா. விவரித்த விதம் அத்தனை அருமை. நொடித்துப் போன நிலையிலும் தன்னுடைய வறட்டுக் கெளரவத்தை, கம்பீரத்தை இழக்க விரும்பாத ஒரு ஜமீந்தாரைப் பற்றின திரைப்படம். சில வருடங்களுக்கு முன்பு பார்த்ததை மீண்டும் பார்க்க விரும்பும் ஓர் ஆவலை ஏற்படுத்தினது எஸ்.ராவின் விவரிப்பு. இவ்வாறு பல திரைப்படங்கள்.

பணிப்பளு காரணமாக என்னால் பெர்கமன், பெலினி, சாப்ளின் போன்றவர்களை தவற விட நேர்ந்தது ஒரு சோகம்.

துவக்க விழாவின் போது பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் போல சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் இவ்வாறான அறிமுகங்களும் ரசனை பரிமாற்றல்களும் நிகழ வேண்டியது அவசியம்.

சுவாரசியமான மற்றும் உபயோகமான அனுபவத்தை அளித்த எஸ்.ராவிற்கும் உயிர்மைக்கும் நன்றி.

suresh kannan

Saturday, December 08, 2012

உலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ

துவக்க நாளின் சம்பிரதாயங்கள் அல்லாமல் நிகழ்ச்சி நேரடியாக  துவங்கியது. பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் குறித்த வேண்டுகோள்  சாத்தியப்படாது என்பதால் இந்த நிகழ்வு குறித்து பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளை அவரது மின்னஞ்சலுக்கு (writerramki@gmail.com)  அனுப்பி கேட்கலாம் என்றார் எஸ்.ரா.

"ஏன் இந்த திரைப்படங்களை விட்டு விட்டீர்கள், இந்த விஷயத்தை விட்டு விட்டீர்கள்' என்று பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் வருகின்றன. இது உலக சினிமா மற்றும் இயக்குநர்கள் குறித்தான அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு என்பதால் ஒரு பருந்துப் பார்வையில்தான் எனது உரை இருக்கும். மற்றபடி ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே இரண்டு மணி நேரத்திற்கு உரையாடுமளவிற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான கால அவகாசமில்லை"


பின்பு பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான திரையாளுமையான பிரான்சுவா த்ருபோ பற்றிய உரை.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இத்தாலியில் தோன்றிய 'நியோ ரியலிசத்தின்' பாதிப்பில் பிரான்சிலும் 'புதிய அலை' இயக்கம் தோன்றியது. த்ருபோ அதன் முன்னோடிகளில் ஒருவர். தொழில்முறை சாராத நடிகர்கள், அரங்குகளைத் தவிர்த்து தெருக்களில் காட்சிகளை பதிவு செய்வது, நாடகத்தனத்தை விலக்கி சாதாரண மக்களைப் பற்றின 'மக்களுக்கான சினிமா'வை உருவாக்குவது போன்றவை இதன் பாணி.

ஒருவனின் பால்ய வயதுகளில் நிகழும் அனுபவங்களே அவனது பிற்கால ஆளுமையை வடிவமைக்கிறது என்பது உளவியல் உண்மை.

த்ருபோவின் தந்தை யாரென்றே அவருக்குத் தெரியாது. (பின்பு துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் இதைக் கண்டுபிடித்தார்). தாயும் அவரை சரியாக வளர்க்காமல் போக தாதிகளிடமும் பாட்டியிடமும் வளர்ந்தார். இந்தத் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் த்ருபோவின் பெரும்பாலான படங்களில் பிரதிபலித்தன. பள்ளிக் கூடத்தில் கல்வியை வெறுத்து பல முறை வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சித்து பிடிபட்டார். வீட்டைச் சுற்றி அமைந்திருந்த திரையரங்குகள்தான் த்ருபோவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தன. ஒரு முறை வீட்டில் டைப்ரைட்டரை திருட, அவரின் வளர்ப்புத் தந்தை காவல்துறையிடம் புகார் செய்ய ஒரு நாள் லாக்கப்பில் இருக்க நேர்ந்தது. பின்பு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

(இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஹிட்ச்காக்கிற்கும் நேர்ந்தது. குறும்புச் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஹிட்ச்காக்கின் தந்தை அவரை ஒரு நாள் போலீஸ் லாக்கப்பில் இருக்கச் செய்தார். இந்த ஆழ்மன அனுபவம் பின்னாளில் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் எதிரொலித்தது. காவல்துறை என்றாலே பதட்டம் கொள்ளும் சாதாரணன் ஒருவன் செய்யாத தவறுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவங்கள் பல படங்களில் வரும்).

வீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்களைப் பற்றி பேசும் போது எஸ்.ரா தன்னுடைய சுயஅனுபவத்தையும் நகைச்சுவை பொங்க விவரித்தார். ஓடிப்போவதில் உள்ள முன்னோடியாக அவனின் நண்பனொருவன் 'எம்.ஜி.ஆரை' பார்க்க சென்னைக்கு போகும் நோக்கத்தில் தவறுதலாக நாகர்கோவில் ரயிலில் ஏறி பின்னர் பிடிபடுகிறான். பின்பு எஸ்.ராவையும் அந்த நண்பன் உசுப்பேற்ற இவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். நண்பனைப் போலவே இவரும் தவறுதலாக நாகர்கோவில் சென்று விடுகிறார். (ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அப்போதே ஏற்பட்டிருக்குமோ).

நானும் இது போல் இரண்டொருமுறை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறேன். எஸ்.ரா -விற்கு இருந்தது போலவே எனக்கும் ஒரு முன்னோடி நண்பனொருவன் இருந்தான். ஓர் அதிகாலையில் கிளம்பி விட்டோம். இப்போது யோசிக்கையில் சில கிலோமீட்டர்களே நடந்த அந்த வரலாற்று பயணம் அப்போது நீண்ட தொலைவைக் கடந்து விட்ட உணர்வைத் தந்தது. மதியத்திற்குப் பிறகு கடுமையான பசி. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தொலைந்து போனதற்கு என்ன காரணம் சொல்வது? நண்பன் பேய் முழி முழிக்க, நான் ஒரு 'கதையை' உருவாக்கினேன்.

அதன் படி என்ன நிகழ்ந்தது என்றால்.. இருவரும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். ஒருவர் வந்து ஏதோ விலாசம் விசாரித்தார். நாங்கள் உதவப் போக அவர் எங்களை வண்டியில் ஏற்றி வைத்து வேகமாக ஓட்டிச் சென்றார். நெடுந்தொலைவு சென்ற பிறகு உணவகத்தில் சாப்பிட இறங்கினார். நாங்கள் 'சாமர்த்தியமாக' தப்பி' வந்துவிட்டோம்..

நான் இதை கச்சிதமாக சரியான முகபாவங்களோடு விவரிக்க வீட்டிலும் நம்பி விட்டார்கள். (ஆனால் நம்புவதாக பாவனை செய்தார்களோ என்று இப்போது தோன்றுகிறது). எனக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறான் என்பதை கண்டு கொண்ட தருணமது. எஸ்.ரா மறுநாள் வீடு திரும்பும் போது அவர் தொலைந்து போனதைக் கூட யாரும் உணரவில்லை. ஆறு சகோதரர்கள் என்பதால் யார் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள் என தெரியாது. 'எங்கேடா போயிருந்தே' என்று சாதாரணமாக கேட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது. வீட்டில் யாருமே அன்று சாப்பிடவில்லை. சமைத்த உணவு அப்படியே இருந்தது. அன்று என்ன உணவு என்பது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தொண்டை வலியுடன் சிரமப்பட்டே சாப்பிட்டேன்.

த்ருபோவிற்கு திரும்புவோம்..

தினமும் மூன்று சினிமா, புத்தகங்கள் என்றிருந்த  த்ருபோவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் André Bazin. சினிமா தொடர்பாக பல கட்டுரைகளையும் காரசாரமான விமர்சனங்களையும் எழுதினார் த்ருபோ. அவரது ஆதர்சங்களில் ஒருவரான ஹிட்ச்காக்குடன் அவர் நிகழ்த்திய நீள்நேர்காணல் மிகவும் புகழ் பெற்றது. சில குறும்படங்களை உருவாக்கின பிறகு திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். அவரின் முதல் படமான The 400 Blows மிகவும் புகழ் பெற்றது. த்ருபோவின் பால்ய வயதின் கசப்பான அனுபவங்களையே பெரிதும் இதில் படமாக்கினார். தன்னுடைய ஆருயிர்த் தோழனான Robert Lachenay- உடன் செய்த குறும்புகளையும். 



The 400 Blows-ல் வரும் சிறுவனுடைய பாத்திரத்தின் பெயர் Antoine Doinel. இந்தப் பாத்திரத்தையே அதன் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் (Antoine and Colette, Stolen Kisses, Bed and Board, Love on the Run) பாத்திரமாக உருவாக்கினார். இப்படி ஒரே பாத்திரத்தையே அடுத்தடுத்த திரைப்படங்களில் உருவாக்கியது புதிய முயற்சி. அதற்குப் பிறகும் இதுவரை அப்படி நடக்கவில்லை. இந்த திரைப்படங்களில் அனைத்திலும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த காதல்/மண வாழ்க்கை சம்பவங்களையே படமாக்கினார். இதுவே பின்னர் 'Antoine Doinel' பாணி என்று புகழ்பெற்றது. இத்தாலிய இயக்குநர்களின் பாதிப்பில் 'நியூ வேவ்' திரைப்பட இயக்கத்தை துவங்கிய த்ருபோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களை பின்பற்றினார் எனலாம். அந்தளவிற்கு த்ருபோவிடம் வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தன.

த்ருபோவின் சமகால இயக்குநரும் நண்பருமான கோடார்ட் த்ருபோவின் படங்களை காரசாரமாக விமர்சிப்பார். த்ருபோவுடன் இணைந்து எழுதி கோடார்ட் இயக்கிய முதல் திரைப்படம் 'Breathless'. ஜம்ப் கட் உள்ளிட்ட பல உத்திகள் இதில் முதன் முதலில் உருவாகியது.

த்ருபோவின் இன்னொரு முக்கியமான திரைப்படம் Fahrenheit 451. இது த்ருபோவின் முதல் வண்ணத் திரைப்படம் மற்றும்  ஆங்கிலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம். அறிவியல் புனைவு போன்றது. நகரில் உள்ள அனைத்து புத்தகங்களும் அழிக்கப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்து வைத்திருப்பவர்களின் வீடுகளில் தேடி அழிக்கும் பணி தீயணைப்புத் துறையிடம் தரப்படுகிறது. அவ்வாறு ஒளித்து வைத்திருப்பவர்களுககு தண்டனையும் கிடைக்கிறது. Guy Montag என்கிற தீயணைப்பு அதிகாரி இவ்வாறு புத்தகம் அழிப்பதில் தீவிரமாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுகிறான். இவ்வாறான தேடலி்ன் போது ஒரு பெண் வீடு முழுக்க புத்தகத்தை வைத்திருக்கிறாள். தீயணைப்பு அதிகாரிகள் புத்தகங்களை தீயிட்டு அழிக்கும் போது அந்தத் தீயில் விழுந்து உயிரை விடுகிறாள்.

Guy Montag -ன் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓர் ஆசிரிய பெண்மணி "நீ இத்தனை புத்தகங்களை அழிக்கிறாயே, ஒரு நாளாவது புத்தகத்தை வாசித்திருக்கிறாயா?" என்று கேட்கிறாள். அந்த தூண்டுதலில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலை வாசிக்கிறார். அது மிகவும் பிடித்துப் போக, தான் புத்தகங்களை எரிக்க (வேட்டையாட) செல்லுமிடங்களில் எல்லாம் மிகச் சிறந்த புத்தகத்தை எடுத்து வந்து வாசிக்கிறார். இதுவே பழக்கமாகி மற்றவர்களைப் போலவே தானும் தன் வீட்டில் புத்தகங்களை மறைத்து வைக்கிறார். இதை அவரின் மனைவி காட்டிக் கொடுக்க அவர் வீட்டிலும் தேடுதல் துவங்குகிறது. தண்டனைக்குப் பயந்து நகரத்தை விட்டு விலகிப் போகிறார். அங்கு சில மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு புத்தகமாக புதினமாக இருக்கிறார்கள்.

புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் அழிவின்மை பற்றியும் Fahrenheit 451 மிக அழுத்தமாக விவரிக்கிறது.

இத்தாலிய நியோ ரியலிசம் பற்றி எஸ்.ரா பேசும் போது அந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ருசோலினி பற்றியும் அவரின் தீராக்காதல்கள் பற்றியும் உரையாடியது சுவாரசியம்.


suresh kannan

Wednesday, December 05, 2012

எஸ்.ராமகிருஷ்ணன் எனும் டிராகுலா



எந்தவொரு உலக சினிமாவைப் பற்றியும் யாராவது பரிந்துரைத்தால் உடனேயே கவனமாக குறித்துக் கொள்வேன். அதிலும் ஒத்த அலைவரிசையுள்ளவர்களின் பரிந்துரை என்றால் பொக்கிஷம்தான். ஏனெனில் ஒருவர் சராசரியாக ஐந்தாறு திரைப்படங்களைப் பார்த்து விட்டுதான் அதில் சிறந்ததொன்றாக கருதுவதை மற்றவருக்கு பரிந்துரைப்பார். எனில் நாம் நேரடியாக அந்த சிறந்தததை தேர்வு செய்து மற்ற படங்களை தவிர்ப்பதின் மூலம் நம் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்தானே?. அந்த வகையில் எஸ்.ரா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் ஒவ்வொரு திரைப்படத்தையும் எப்படியாவது பார்த்துவிட முயல்வேன். பெரும்பாலும் அவரின் பரிந்துரைகள் என்னை ஏமாற்றியதில்லை. சுஜாதாவால் தூண்டப்பட்டு பின்பு ஒரு கட்டத்தில் எனக்குள் அணைந்து போயிருந்த உலகசினிமா பற்றின ஆர்வம்  மறுபடி ஏற்படுவதற்கு பிரதான காரணம் எஸ்.ரா. அவரின் கலை சார்ந்த தேடலும் அதற்கான உழைப்பும் வெளிப்பாடும் எப்போதும் நான் பிரமிக்கும் விஷயம்.

அப்படியானவர் உலக சினிமாவின் மகத்தான ஆளுமைகள் பற்றி ஆற்றப்போகும் உரைகளை நிச்சயம் தவறவிடக்கூடாதென முடிவு செய்தேன். ஏனெனில் அந்த ஆளுமை குறித்து தனது வாழ்நாள் முழுதும் தேடியடைந்த அனுபவங்களை தொகுத்து சாரமாக தரவிருக்கும் முக்கியமான தருணத்தை இழக்க விரும்பவில்லை. சினிமாவைப் பற்றின ஆங்கில நூற்களிலும் இணையத்திலும் இவ்விவரங்கள் கிடைக்கும்தான் என்றாலும் ஒரு தீவிர சினிமா ஆர்வலரின், விமர்சகரின் தனிமனித அனுபவத்தோடு இணைந்து கிடைப்பது முக்கியமானது. ஓர் உலக சினிமாவை தனியறையில் அமர்ந்து பார்ப்பதற்கும் அதே ரசனையுள்ளவர்கள் உள்ள அரங்கத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசமிது.

முதலில் பாலுமகேந்திரா பேசினார். 'சினிமா ரசனையை' பள்ளிக் கல்வித்திட்டத்தில் சோக்க வேண்டும் என்கிற அவரது வழக்கமான முறையீட்டை இங்கும் வெளிப்படுத்தினார். இது குறித்து சினிமாத் துறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற ஒரே குரல் பாலுமகேந்திராவுடையது மாத்திரமே. தமிழ்ச் சமூகத்தில் சினிமா எத்தனை வலிமையான ஊடகம் என்ற முறையில் அவரது முறையீடு மிக முக்கியமானது. அரசியல்வாதிகள் யாரும் அவரது முறையீட்டை தீவிரமாக பரிசீலிக்கவில்லை என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது. உலக சினிமா குறுந்தகடுகளின் மூலம் நம்மை ரொம்பவும் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர்த்த ஷாப்பிங் மாலில் அவர் வாங்கியதை விளக்கிய 'கால் கிலோ தக்காளி, நூறு கிராம் பச்சை மிளகாய்' ஒரு Citizen Kane  டிவிடி' என்கிற படிமம் சுவாரசியமாக இருந்தது. எஸ்.ரா, சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் பேச வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைத்தார்.

பின்பு பேசிய யூடிவி தனஞ்செயன், சினிமா,இலக்கியம், விழா,பயணம்.. என்று பல்வேறு துறைகளில் ஈடுபடுகிற எஸ்.ராவிற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியந்தார். இது குறித்து எனக்கும் பிரமிப்பு உண்டு. புத்தகக் காட்சியில் ஒரு முறை எஸ்.ராவை சந்தித்த போது இது குறித்து கேட்டேன். ஒரு நாளை, ஒரு மாதத்தை, ஓர் ஆண்டை எப்படி அவர் திட்டமிடுகிறார் என்று கேட்க ஆச்சரியமாக இருந்தது. (இடையில் ஷட்டில் காக்கும் விளையாடுகிறாராம்).

தனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. "உயிர்மை நடத்தும் விழாவில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்?..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்?" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். "தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது." என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.

எஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். "நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை."
.
மேலேயுள்ள படத்தில் என்னை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரஷோமான் டிவிடி அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.
எனக்கும் இவ்வாறான குறுந்தகடுகளை பயன்படுத்துவதில் ஓர் உறுத்தல் உண்டுதான் என்றாலும் வேறு வழியில்லை. ரேவின் படங்களின் மீது பைத்தியமாக அலைந்த காலத்தில் நான் நீண்ட ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த 'மகாநகரை' ஒரு வணிக அரங்கில் கண்டேன். விலை ரூ.600·- எனக்கு அப்போதைய மாதச் சம்பளமே ரூ.500/-தான். ஒரு கணம் அதை திருடி விடலாமா என்று கூட தோன்றியது. தைரியமில்லாத காரணத்தினால் வெளியே வந்து விட்டேன். எந்தவொரு உண்மையான கலைஞனும் வணிகக் காரணங்களைத் தாண்டி தமமுடைய படைப்புகள் உலகெங்கிலும் பரவலாக சென்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவான். ஹீப்ரு மொழியில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை அந்த இயக்குநர் கேள்வியே பட்டிராத வட சென்னையில் உள்ள நான் பார்ப்பது அறிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆச்சரியமும்தான் கொள்வார். கள்ள நகல்களின் மூலமாகவாவது நம் சமூகத்தின் சினிமா ரசனை சிறிதாவது மாறினால் அது நம் சூழலுக்கு நல்லதே. அதிலுள்ள வணிக இழப்பு நிச்சயம் அதை விட குறைவே.

()

சுமார் இரண்டு மணி நேரம் எவ்வித தடங்கலும் இடையூறுகளுமின்றி எஸ்.ரா பேசினார். நூற்றுக்கணக்கான சிறந்த இயக்குநர்கள் இருந்தாலும் தான் பேச தேர்ந்தெடுத்தி்ருக்கும் ஏழு சினிமா கலை ஆளுமைகள் குறித்தான காரணத்துடன் துவக்கினார். இந்திய சினிமா நூறு ஆண்டுகளை கொண்டாடப் போகும் இந்தக்க கட்டத்தில், காலத்தை கடந்து நிற்கும், எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை பதிவு செய்திருக்கும் சினிமா பேராசான்களை தன்னுடைய ரசனை அடிப்படையில் தேர்ந்தெடுத்ததைப் பற்றி விளக்கினார்.

பின்பு ஆரம்பித்தது அகிராவுடனான பயணம்.

பூஞ்சையான சிறுவனான அகிராவின் இளமைப்பருவம், ஓவிய ஆர்வம், ஜப்பானிய சினிமாவின் தோற்றம், அகிரா சினிமாவில் நுழையும் போது இருந்த பிரபல ஜப்பானிய இயக்குநர்கள்..Yasujirō Ozu, Kenji Mizoguchi, அகிராவின் குருநாதர் Kajirō Yamamoto, தொடர்ந்து 17 படங்களுக்கு இவரிடம் உதவியாளராக இருந்து கற்ற பயணம், அகிரா சினிமா உத்திகள், படமெடுக்கும் விதம், முக்கியமான ஷாட்கள், அகிராவின் படங்களில் உள்ள தத்துவம், ரஷோமான், செவன் சாமுராய், மதோதயா போன்ற திரைப்படங்களில் உள்ள அடிப்படையான விஷயங்கள், அகிராவின் தோல்வி, தற்கொலை முயற்சி, ஹாலிவுட் இயக்குநர்களின் வரவேற்பில் மீண்டு வந்த கதை, அவர் எழுதிய சுயசரிதம் (இதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்) போன்றவற்றைப் பற்றி எஸ்.ரா ஆற்றிய உரை உன்னதமானது. அதைக் கேட்டுதான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

ஜப்பானிய சினிமாக்களும் அகிராவின் படங்களைப் பார்த்த நினைவுகளும் என் மூளையில் நிரம்பி வழிந்தன. எஸ்.ரா என்னும் டிராகுலா என்னைக் கடித்து வைத்ததின் பயன் உடனே தெரிந்தது. சுரம் வந்தவன் போல் திரும்பி வந்தேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் அகிரா படங்களின் சில காட்சிகளை தேர்ந்தெடுத்து பார்ப்பதின் மூலம்தான் ஒரளவிற்காவது அந்த சுரத்திலிருந்து வெளிவர முடியும். 
imagecourtesy: 
https://www.facebook.com/media/set/?set=a.562891600403422.147573.100000477613498&type=1

suresh kannan

Monday, December 03, 2012

நீர்ப்பறவை


இயக்குநர் சீனு ராமசாமியின் முந்தைய திரைப்படமான 'தென்மேற்கு பருவக்காற்றை' பார்த்திராத, இயக்குநரைப் பற்றின எவ்வித அறிமுகமுமில்லாத நிலையில் 'நீர்ப்பறவை'யை ஓர் வெற்றான மனநிலையில் பார்க்கச் சென்றிருந்தேன். ஒரு நல்ல புதினத்தை வாசித்த உணர்வை திரைப்படம் தந்திருந்தாலும் திரைக்கதையை இன்னமும் நவீனமான மொழியிலும் சுவாரசியத்திலும் சொல்லியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். பார்வையாளர்களை படத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வைக்கும் ஒரு வலுவான கொக்கியில்தான் படம் துவங்குகிறது.

'உயிரோடு இருக்கிறானா, அல்லவா' என்ற நிலைமை தெரியாத, கடலுக்குள் காணாமற் போன கணவனுக்காக பல வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் எஸ்தரோடு படம் துவங்குகிறது. (பதினாறு வயதினிலே 'மயிலு' இன்னும் சாகவில்லை). ஆனால் அந்தக் கணவன் இறந்து போய் அவனுடைய பிணம் வீட்டியிலேயே புதைக்கப்பட்டிருப்பதை எஸ்தரின் மகனே வெளிப்படுத்துகிறான். காவல்துறை எஸ்தரை கைது செய்து விசாரண செய்கிறது. "ஆம். என் கணவரை நான்தான் கொன்றேன்" என்கிறாள் எஸ்தர். பல வருடங்களாக கணவனுக்காக காத்திருந்த எஸ்தரே தன் கணவனை ஏன் கொன்றாள்?' எனும் சுவாரசியமான முரண். எத்தனை அருமையான துவக்கம்?..இதை அறிந்து கொள்ள படத்தின் இறுதி வரை சில சலிப்பூட்டும் காட்சிகளைத் தாண்டி காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பும் உப்புச் சப்பற்ற முடிவால் மடிந்து போகிறது. இயக்குநர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அருளப்ப சாமி மற்றும் எஸ்தரின் காதலுக்கு இடையில் தமிழக மீனவர் பிரச்சினையும் இடையிடையில் ஓரமாக (சமுத்திரக்கனியின் பாத்திரம் மூலமாக) சற்று காரமாக சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கச்சாப் பொருளான காதலை தவிர்த்து ஓர் சமூகப் பிரச்சினையை ஊறுகாயாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மால் திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான சூழலே. அப்படியே படமெடுத்திருந்தாலும் 'துப்பாக்கி' போன்ற வணிக வழிப்பறிகளுக்கு தரும் வரவேற்பை இந்த மாதிரியான படங்களுக்கு நம் சுரணையற்ற சமூகம் தருமா என்பதையும் இணைத்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்திற்கு பிரதான முதற் காரணம் சுனைன்யா.தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் பொம்மைகளாகவும் லூசுத்தனமாகவும்  சித்தரிக்கப்படும் ஹீரோயின்களுக்கு இடையில் இதைப் போன்ற பாத்திரத்தைப் பார்த்து நீண்ட காலமாகிறது.  இவரின் தோற்றத்தை வடிவமைத்தவர்களை நிச்சயம் பாராட்டலாம். வழித்து வாரப்பட்ட கோண வகிடும், காதுகளின் அருகே சுருள் முடியும், சட்டை பாவாடையும்.. என ஒரு கிறித்துவப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகமில்லாத நிலையில் இவரது கண்களும் முகபாவங்களுமே பல இடங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றன. திறமையாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

படத்தில் பல திறமையான நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சரண்யா. தமிழ் சினிமாவின் 'அம்மா'வாக  மனோரமாவிற்கு இவரை மாற்று செய்யும் அபாயமிருந்தாலும் இவரின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் சுவாரசியம். 'ஆணி வந்தா டாப்பா வருவான்' ஹேங்ஓவரில் இருந்து உடனே வெளிவருவது இவருக்கு நல்லது. 'பூ' படத்தில் பேனாக்காரராக நடித்த 'ராம்' சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகனை ஒரு மீனவனாக ஆளாக்க முடியவில்லை என்று வருந்துமிடங்களும், குடிகார மகனை குணப்படுத்திய மருத்துவருக்கு நெகிழ்ச்சி்யுடன் மீன் பரிசளிப்பதும் தன்னுடைய பெயர் பொறித்த படகை தடவிப் பார்ப்பதும்.. என  நல்ல பங்களிப்பு. வடிவுக்கரசி போன்ற திறமைசாலிகளை இன்னமும் நம்மால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நந்திதா தாஸ் பாவம்.

படத்தின் சில இடங்களில் பாத்திரங்களின் மனநிலைக்குள் என்னால் உள்ளே செல்ல முடிந்தது. குறிப்பாக அருளப்பசாமி - எஸ்தர் காதல் தொடர்பான காட்சிகள். குடிகார இளைஞனாக இருக்கும் அருளப்பசாமிக்குள் எஸ்தர் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். அவன் குடிநோயிலிருந்து வெளிவரும் போது நானும் மகிழ்ச்சியடைந்தேன். இவ்வகையான பரவச தருணங்கள் படத்தில் அபூவர்மாகவே நிகழ்கின்றன. மற்றபடி படம் சற்று சலிப்பாகவே நகர்கிறது.

வசனம் - ஜெயமோகன் மற்றும் சீனுராமசாமி. மீனவர் பிரச்சினை தொடர்பான பஞ்ச் டயலாக்குகளை இயக்குநர் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி பாத்திரங்களின் யதார்த்த மொழியில் படம் நெடுக ஜெயமோகன் வெளிப்படுகிறார். அருளப்பசாமி காமம் தருகிற அவஸ்தையில் மனைவி எஸ்தரிடம் மல்லுக்கட்டுகிறான். அவளோ சம்பாதிக்க போகச் சொல்லி மல்லுக் கட்டுகிறாள். இந்தக் காட்சிக் கோர்வைகள் அருமையாக பதிவாகியிருக்கின்றன.

விலகிப் போகும் மனைவியிடம் "முதுகைப் பாரு... படமெடுக்கிற பாம்பு மாதிரி" என்கிறான். அருமையான படிமம். இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைவதில் இம்மாதிரியான சலுகையான ஆச்சரியங்கள் பார்வையாளனுக்கு கிடைக்கின்றன.

எந்த சாதிப்பின்புலமென்று தெரியாத, இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைக்கும்  அகதியான அருளப்பசாமியின் வாழ்க்கையில் மூன்று மதங்கள் குறுக்கிடுகின்றன. கிறித்துவம் அவனை தத்தெடுத்துக் கொள்கிறது. இந்து மதம் (காஞ்சி சாமியார் படம்) அவனை நல்வழிப்படுத்துகிறது. இசுலாமியம் அவன் பொருளாதார ரீதியில் உயர உதவுகிறது. இப்படியாக 'சமய நல்லிணக்கத்தோடு' சிந்தித்திருக்கிறார் இயக்குநர். (?!)

நெய்தல் காட்சிப் பரப்புகள், சர்ச்சின் உட்புறம் போன்றவை சில தருணங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக டாப் ஆங்கிள் காட்சிகள். தேவையில்லாத ஒரு சண்டைக்காட்சியில் அருளப்ப சாமியும் இன்னொருவனும் கடலில் ஓடிவரும் போது கேமரா மேலிருந்து நோக்குகிறது. நீல நிறப் பின்னணியில் இருவரும் துரத்தி வரும் தடயங்கள் உடனான காட்சி அற்புதம். எடிட்டரோ, அல்லது இயக்குநரோ சொற்ப கணத்திலேயே ஏனோ அதை வெட்டி விட்டிருக்கிறார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி வலுவான துவக்கத்துடனான திரைக்கதை, அதை தக்க வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக முடிவது ஏமாற்றம். என்றாலும் வழக்கமான வணிக சினிமாவிற்கு இடையில் ஒரு புதினத்தை வாசித்த அனுபவத்தைத் தருகிற 'நீர்ப்பறவை'யை ஒரு முறையாவது காணலாம். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகள் நிகழ்வதில்லை என்று புகார் சொல்கிற சினிமா ஆர்வலர்கள் 'நீர்ப்பறவைக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் நமக்கு 'துப்பாக்கிகளும் மாற்றான்களுமே' மிஞ்சும்.


suresh kannan