Friday, December 07, 2007

பொல்லாதவன் - திரைப்பார்வை

முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு பூச்செண்டு.

வணிக வெற்றியையே பிரதான நோக்கமாக கொண்ட படங்கள், "சக்ஸஸ் பார்முலா" என்ற பெயரில் பரிசோதனை முயற்சி செய்யத் துணிவில்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் மத்தியில், வணிகப்படமென்றாலும் சற்றே வித்தியாசமான திரைக்கதையுடனும் இயல்பான காட்சிப் பின்னணிகளுடன் படத்தை இயக்கியிருக்கும் வெற்றி மாறனை தாராளமாகவே வரவேற்கலாம். முதல் படமென்பதால் சில கட்டாயங்களுக்காக வணிக சமரசங்களை செய்ய வேண்டியிருந்திருக்கலாம். வெற்றிப்பட இயக்குநர் ஆகி விட்டதால் அடுத்த படங்களில் தன்னுடைய சுவைக்கேற்ப இயல்பான கதையையும் யதார்த்தமாகவும் படைக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடனே இவரை அணுகலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்தின் செயலாக்கத்தின் முழுக்கட்டுப்பாடும் இயக்குநரிடம்தான் இருக்க வேண்டும். ஸ்கிரிப்ட் தயாராகி களத்திற்கு சென்று இறங்கிய பிறகு ஹீரோவின் ஒன்று விட்ட சித்தப்பா சொன்னார் என்பதற்காக ஒரு சண்டைக்காட்சியையோ பைனான்ஸியரின் முதலீட்டு நிபந்தனைக்காக 'ஐட்டம்' பாடலையோ இணைப்பது போன்ற அபத்தங்கள் படத்தின் ஜீவனையே அழித்துவிடும். துரதிர்ஷ்டவசமாக இந்தப்படத்திலும் அந்த மாதிரி நிறைய அபத்தங்கள் இருந்தாலும் திறமையான திரைக்கதை இந்த அபத்தங்களை மழுப்பி விடுகிறது.

ஒல்லியாக இருந்தாலும் ஐம்பது பேரை வீழ்த்திவிடும் நாயகர்கள் உலாவும் இந்தச் சமயத்தில் "நான் மொக்கைதானே?" என்று நாயகனை வில்லனிடம் பேச வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றிதான்.

()

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய திரைப்படமான 'பைசைக்கிள் தீவ்ஸ்'-ஸின் வாசனை இந்தப்படத்தில் அடித்தாலும் இது வேறு திசையில் பயணிக்கிறது. வெட்டியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷீக்கும் அவனுடைய அப்பாவுக்கும் வழக்கமான "தண்டச்சோறு" குறித்தான சண்டை நடக்கிறது. "ஊர்ல இருக்கற அப்பனெல்லாம் தம் புள்ளங்களுக்கு செலவு செஞ்சு வேலை வாங்கிக் கொடுக்கறான். நீ என்னா செஞ்சே?" என்று எகிறும் மகனிடம் ரூபாய் எழுபதாயிரத்தை எறிந்து "எக்கேடானாலும் கெட்டுப்போ" என்கிறார் தந்தை. தன்னுடைய நெடுநாள் கனவான அதிசக்தி இருசக்கர வாகனத்தை வாங்கும் தனுஷீக்கு, வாகனம் வந்த பிறகு எல்லாமே நேர்மறையாக அமைகிறது. இரண்டு வருடமாக திரும்பிப் பார்க்காத காதலி புன்னகைப்பதும் (?) வீட்டில் சுமூகமான சூழ்நிலையுமாக, நல்ல வேலையுமாக...

ஒரு நாள் பைக் திருடு போகும் போது அத்தனையும் எதிர்மறையாக மாற, தனுஷ் திருடு போன பைக்கை தேடிச் செல்வது அவரை வன்முறையின் வெம்மையான உலகினுள் பயணம் செய்ய வைப்பதும் அதிலிருந்து அவர் வெற்றிகரமாக (வழக்கம் போல்) மீளுவளும்தான் கதையின் அடிப்படை.

()

தனுஷை முதல் படத்தில் பார்த்த போது "தோடா! இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்' என எண்ண வைத்தவர். ஆனால் 'காதல் கொண்டேன்'-ல் அவர் விஸ்வரூபம் எடுத்த போது சிறந்த இயக்குநரால் கையாளப்பட்டால் இவரின் திறமை நன்றாக வெளிப்படும் என்று தோன்றியது. 'புதுப்பேட்டை'யில் அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்த போதும், நம்பகத்தன்மையில்லாத காட்சியமைப்புகளால் அது வெற்றி பெறவில்லை. இந்தப் படத்திலும் அதேதான் நேர்ந்திருக்கிறது. அரிவாளின் கனம் கூட இல்லாத ஒரு சராசரி இளைஞன் நாலைந்து பேரை தாக்குவதாக காட்டும் போது புன்னகைதான் வருகிறது.

என்றாலும் தனுஷ் ஒரு கீழ்நடுத்தர இளைஞனை சிறப்பாகவே பிரதிபலிக்க முயன்றிருக்கிறார். அப்பாவிடம் அடிவாங்கி விட்டு வாதாடும் போது நம் பக்கத்து வீட்டு இளைஞனின் நினைவு வருகிறாற் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவாக மலையாள நடிகர் முரளி. மகனிடம் உள்ள love & hate உறவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவாக பானுப்பிரியா... அய்யோ பாவம். (புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக ஸ்ரீதேவியை பார்த்து மூக்கை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால் எவ்வளவு அழகாக இருப்பார்.. அதுவும் அந்த exclusive கண்கள்...)

நாயகியாக திவ்யா. எப்போதும் தூங்கி எழுந்த முகத்துடனே இருக்கிற இவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்றே புரியவில்லை. இதைத் தவிர சிம்ரன், சிநேகா, அசின்... என்று தமிழர்களின் ரசனை குறித்தே எனக்கு நகைப்பாக இருக்கிறது, எப்படி ரசிக்கிறார்கள் என்று. சரி ஒழிந்து போகட்டும். இரண்டு வருடங்களாக ஹீரோவை வெறுக்கும் இவர், பைக் வாங்கியவுடன் காதல் வருவதாக காட்டியிருப்பது பெண்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. (அல்லது இதுதான் இன்றைய நிஜமோ).

டேனியல் பாலாஜி. இன்னொரு திறமையான நடிகர் இதில் எதிர்நாயகனாக வருகிறார். வில்லன் என்றவுடன் புஜபராக்கிரமசாலியாக சித்தரிக்கப்படாமல் அவரது மூத்த சகோதரரால் (கிஷோர் குமார்) "சப்பை" என்று விளிக்கப்படும் அளவிற்கு விநோதமான தந்திர கோழையாக இருக்கிறார். கிஷோரும் தன் திறமையான உடல்மொழியாலேயே வன்முறை காட்சிகளை அதிகம் ரத்தம் சிந்தாமல் வெளிக்கொணர்கிறார்.

()

முன்பே சொன்னது போல் திறமையான திரைக்கதைதான் இந்தப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. நாயகன் பார்வையாளர்களுக்கு தன் கதையை narrate செய்யும் அதே நேரத்தில் வில்லனும் தன்னுடைய பார்வையில் அதை தொடர்கிறான். திருடு போகும் பைக் சட்ட விரோத கும்பலால் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்று தொடர்ச்சியாக காட்டியிருப்பது நாம் இதுவரை கண்டிராதது.

நிகழ்வு களத்தின் பின்புலமாக வடசென்னை. இரண்டு பைக் மாத்திரமே செல்லக்கூடிய சந்துகளும், சுண்ணாம்பை நீண்ட வருடங்களாக கண்டிராத ஹவுசிங் போர்டு கட்டிடங்களும், தண்ணீர் பக்கெட்டும் கையுமாக கக்கூஸிற்கு செல்ல வேண்டிய ஒண்டுக்குடித்தன வீடுகளும், மந்திர உச்சாடனம் போல அந்த மூன்றெழுத்தை உச்சரிக்காமல் ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கத் தெரியாத பெரும்பான்மை மக்களுமாக ... ஆஹா.... எங்க ஊர்.

"கூட்னு போ. அட்ச்சி கிட்சி போட்றப் போறன்" என்று தவ்லத்தாக ஒரு ஆசாமி வருவாரே......அவர்தான் வடசென்னையின் அசலான முகம். என்றாலும் வடசென்னையை அதன் முழு வீர்யத்தோடு பயன்படுத்துகிற திரைப்படம் இனிமேல்தான் வரவேண்டும் போலிருக்கிறது.

()

'ரன்' என்கிற திரைப்படத்தை பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்: ஏன் இந்தப்பட இயக்குநரின் மீது எந்த ஒரு தாதாவும் ரவுடியும் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை? அந்தளவிற்கு ரவடிகளை ஏதோ தட்டினால் பறக்கும் தூசு போல் காட்டியிருப்பார்கள். இந்தப்படத்திலும் அதே மாதிரிதான் நேர்ந்திருக்கிறது. வன்முறையையே எதிர்கொண்டிராத ஒரு நடுத்தரவர்க்க சராசரி இளைஞன் எப்படி பத்திருபது ஆயுதபாணி ரவுடிகளை அநாயசமாக எதிர்கொள்கிறார் என்பது எனக்கு புரியாத புதிர். நாயகன் marshal arts பயின்றவர் என்று ஒரு காட்சியிலாவது establish செய்தால் கொஞ்சம் மனச்சாந்தியாவது கிடைக்கும். logic.

()

இசை G.V. பிரகாஷ். 'மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்' என்ற பாடலில் வெளிநாட்டு ஆல்பமொன்றின் வாசனை அடித்தாலும் கேட்க இனிமையாகவே இருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடலில் திரையரங்கம் அதிர்கிறது. (இந்த மாதிரி ரீமிக்ஸ்களுக்கு ஏதாவது வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் ரீமிக்ஸ் என்றால் பின்னணி இசையை மாத்திரம் நவீனப்படுத்துவார்கள் என்று கேள்வி. ஆனால் இப்போதோ அதை செயற்கை திரவங்களுடன் மிக்ஸியில் போட்டு அடித்து மேலே ஏதோ தூவி நட்சத்திர ஓட்டல் பண்டம் போல் கொடுக்கிறார்கள்) இருளும் ஒளியுமாக யதார்த்தமான விகிதத்தில் ஒளிப்பதிவாளர் (R.வேல்ராஜ் ?) சில காட்சிகளில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

()

வெற்றிமாறன் தன்னுடைய வணிக கட்டாய தடைகளையெல்லாம் தவிர்த்து தமிழ்ச் சினிமாவின் தரத்தை அங்குலமேனும் முயற்சியில் ஈடுபடுவாரா அல்லது வெற்றியின் ருசியில் அதிலேயே அமிழ்ந்து போவாரா என்பதை அவரின் அடுத்த படத்தைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்.

7 comments:

Anonymous said...

really good review...
The movie is better than many think...
It is like city of god in Brazil...
But a shorter version...

It is affected by so many hollywood movies...
Kudos to the director Vetri Maaran.

Tech Shankar said...

http://tamizh2000.blogspot.com/2007/12/blog-post_3738.html.

have a look @ there too

ஹாரி said...

//இதைத் தவிர சிம்ரன், சிநேகா, அசின்... என்று தமிழர்களின் ரசனை குறித்தே எனக்கு நகைப்பாக இருக்கிறது//

:)

I second this.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Watched this movie couple of days ago.

I liked Daniel Balaji too.

This movie reminded me of another movie 'inspired by' Bicycle Thieves. A chinese movie. 'Beijing Bicycle'.

-Mathy

சீனு said...

தீபாவளிக்கு வந்த படங்களில் இந்த படத்தை தவிற மற்ற படங்களை பார்த்தேன். 2 நாட்களுக்கு முன் தான் இந்த படத்தை பார்த்தேன்.

இயக்குநரிடம் ஒரு புத்திசாலித்தனம் தெரிகிறது. கிளைமேக்ஸ் சண்டை காட்சி அபோகலிப்டோ-வில் இருந்து சுட்டிருக்கிறார்கள். இப்படியே பார்த்தால் யார் தான் தமிழில் 'inspired' படங்களாக எடுக்காமல் சொந்த புத்தியுடன் எடுப்பார்கள் என்று தெரியவில்லை :(

மற்றபடி, படம் அசத்தலான திரைக்கதை. அதுவும் இருவருக்குமான ரிலே ரேஸ் போல கதையை தனுஷும் பாலாஜியும் பாஸ் செய்வது அருமை. ஒரு பைக்கை வைத்துக்கொண்டு இப்படி ஒரு திரைக்கதை கொடுப்பதென்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.

அதுவும் பைக் திருடு போனதும் வழக்கமாக யாரேனும் பைக்கை பற்றி தகவல் சொல்வார்கள் தான். எல்லா படங்களிலும் இந்த காட்சி வரும். அதே போல தான் இந்த படத்திலும். ஆனால் இதிலும் சற்றே வித்தியாசமான வசனம் வைத்திருப்பார் இயக்குநர். "ப்ரேக் போட்டா போகே மியூசிக் வருமே அந்த பைக்கா?" என்று கேட்பது, அந்த பைக் எடுக்கப்படும்பொழுது பார்த்தவர் ஏன் பார்த்திருப்பார் என்பதை இந்த வசனத்தில் புரிந்து கொள்ளலாம். பைக்கை தேடும்பொழுது பைக் புதைக்கப்ட்டிருப்பது போன்ற காட்சிகள், 'உன் பைக் இருந்தா எடுத்துக்கோ...' என்று புதுப்பேட்டையில் உதிடி பாகங்களை காட்டியிருப்பது புதுசு.

காட்சிகளில் சற்றே அதிகப்படியான வன்முறைகளை தவிர்த்திருக்கலாம். வீட்டில் ரத்தக்கரையை கழுவுவதும், அந்த ரத்தத்தில் பாலாஜி சும்மா கேஷுவலா கையை வைத்து கோலம் போடுவதும், வார்த்தைக்கு வார்த்தை '...த்தா' என்பது போன்றவை. ஆனால், இவையாவும் தான் கதைக்கு ஒரு நேட்டிவிட்டி கொடுக்கிறது என்பதும் உண்மை.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அதுவும் இருவருக்குமான ரிலே ரேஸ் போல கதையை தனுஷும் பாலாஜியும் பாஸ் செய்வது அருமை.//

beijing bycycle. ;)

மயிலாடுதுறை சிவா said...

இது வெற்றி படமா?

புது இயக்குனர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியே!!!

மயிலாடுதுறை சிவா...