Friday, September 21, 2007

சத்தம் போடாதே - திரைப்பார்வை

ஒரு தமிழ் திரைப்படத்தின் உரையாடலில் 'அசோகமித்திரன், சுந்தரராமசாமி' போன்ற பெயர்கள் அடிபட்டால் (!) அந்தப்படம் என்னமாதிரியான வகை, யாருக்கானது என்பதை உங்களால் எளிதில் யூகித்துவிட முடியும். ஆம். இது, (கிழ) கதாநாயகன் தோன்றியவுடன் அரங்கம் அதிர விசிலடிக்கும் முட்டாள் ரசிகர்களுக்கான படமல்ல. வழக்கமான தமிழ்ச் சினிமாக்களிலிருந்து விலகி நிற்கிற, சற்றே ஆசுவாசத்தைத் தருகிற படங்களை விரும்புகிற ரசிகர்களுக்கானது என்று சொல்லலாம்.

பாலச்சந்தர் பள்ளியிலிருந்து வந்திருந்தாலும் நாடகத்தன்மையை பெருமளவிற்கு விலக்கி தன் தனித்தன்மையினால் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் வசந்த். (இவரின் 'நேருக்கு நேர்' போன்ற படங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை.) இப்படியானப்பட்டவர் எப்படி இப்படி ஒரு படத்தை shhhhhhhhhh..............சரி சொல்கிறேன்.

Warning: Spoilers: இவ்வாறு எழுதுவதே எனக்கு அபத்தமாகத் தோன்றுகிறது. ஒரு சினிமாப்படத்தின் கதையை வெளிப்படுத்திவிட்டால் பிற்பாடு திரைப்படம் பா¡க்கும் போது ரசிக்க முடியாது என்பது பாமரத்தனமான சிந்தனை. ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை அத்தனை கதை அமைப்புகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டன. பாவனை, மொழி, களம், போக்கு என்று கதை சொல்கிறவர்களின் விதவிதமான திறமைதான் ஒரு பார்வையாளனுக்கு சுவாரசியத்தை அளிக்கின்றன. புதிதான கதை அமைப்பு விஞ்ஞானக்கதைகளில்தான் சாத்தியம் என்பது என் தாழ்மையான கருத்து. வெளிநாட்டு திரைப்பட திரையிடல்களின் போது synopsis-ஐ பிரிண்ட் போட்டே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் படத்தை இன்னும் ஆழத்துடன் ரசிக்க முடிகிறது. நாம் ஏற்கெனவே பார்த்த பிடித்தமான திரைப்படத்தை மறுபடியும் ஏன் உட்கார்ந்து ஆவலுடன் பார்க்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

()

மேலே குறிப்பிட்டவாறு 'சத்தம் போடாதே' திரைப்படத்தின் கதை அமைப்பையும் ஒரு அசட்டுத் துணிச்சலுடன் ராமாயணக் கதையோடு ஒப்பிட்டால்... நாயகி கடத்தப்படுவதும் நாயகன் அவளை மீட்பதும்தான் என்று சொல்லலாம்.

மிகவும் அழகாக இருக்கின்ற காரணத்திற்காக (!) நண்பன் நிராகரித்து விட்ட பெண்ணின் மீது ஆசை கொண்டு தன்னுடைய ஆண்மையின்மையை மறைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறான் ரத்னவேல் (நிதின் சத்யா). இதை பின்னர் அறிந்து அதிர்ச்சி கொள்ளும் அவள் (பத்மபிரியா) விவாகரத்திற்குப் பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் இனிமையான உற்சாகத்துடன் குறுக்கிடும் ரவிச்சந்திரனை (பிருத்விராஜ்) திருமணம் செய்து கொள்கிறாள். தன்னுடைய மனைவியாக இருந்தவள், இன்னனொருவனுடன் சந்தோஷமாக இருப்பதா என்று குரோதத்துடன் யோசிக்கும் சற்றே மனநிலை பிறழ்ந்த முன்னாள் கணவன், அவளை கடத்திச் சென்று விடுவதும், பின்னர் பிருத்விராஜ் ..... blah... blah... blah..

முத்துராமன், சிவகுமார், மோகன் போன்ற இயல்பான கதாநாயர்களின் வெற்றிடத்தை சிறப்பாக நிரப்புகிறார் பிருத்விராஜ். குழந்தைகளுடனான பாடலில் இவரே ஒரு வளர்ந்த குழந்தை போலத்தான் இருக்கிறார். என்றாலும் 'கனா கண்டேன்' திரைப்படம் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களிலும் மாற்றி நடித்தால் தொடர்ந்து இடம் பிடிக்கலாம். வித்தியாசமாக இல்லை என்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.

முன்னாள் கணவனால் அறைக்குள் அடைக்கப்பட்ட பின்புதான் பத்மபிரியா நடிக்கத் தொடங்குகிறார் எனலாம். அதுவரை ஒரு எந்தவொரு வித்தியாசமான நடிப்பையும் இவரிடமிருந்து பார்க்க முடியவில்லை என்பதற்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளாத இயக்குநரைத்தான் குறை சொல்ல வேண்டும். இவரின் பாத்திர அமைப்பு சற்றே குழப்பமானது. இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் பாடகி சின்மயி அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.

நிதின் சத்யா. நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பாத்திரம் இவருடையது. மனிதர் இயன்றவரை subtle-ஆக நடித்து கரை சேர்ந்திருந்தாலும், பதிலாக பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்ற சிறப்பான நடிகர்களை ஒரு வேளை இயக்குநர் பயன்படுத்தியிருந்தால் இந்தப் பாத்திரத்தின் வீர்யம் கூடியிருக்கும் என்று யூகிக்கிறேன். என்றாலும் பிரதானமாக வருகிற முதல் படத்திலேயே விவகாரமான பாத்திரத்தை தைரியாக ஏற்றிருப்பதற்காக இவருக்கொரு பாராட்டு.

அறிமுக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் (?) அதிகப்பிரசங்கித்தனம் எதுவும் செய்யாமல், பார்வையாளர்களின் கண்கள் போலவே இயல்பாக படம் பிடித்திருக்கிறார். யுவனின் அற்புதமான பாடல்கள் அனைத்தையும் இயக்குநர் வீணடித்திருக்கிறார் என்றே சொல்வேன். (இந்தப் படத்திற்கு பாடல்களின் தேவையேயில்லை என்பது வேறு விஷயம்) பாடல்களை நான் முன்பே பலமுறை கேட்டிருந்ததால் நான் செய்து வைத்திருந்த கற்பனை அனைத்தும் ஒரு சதவீதம் கூட ஒட்டாமல் ஏமாற்றமளித்தது. பொதுவாக வசந்த்தின் படங்களில் பாடல்கள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். இது ஒரு விதிவிலக்கு. ('அழகு குட்டி செல்லம்' என்கிற குழந்தைப் பாடலில் "உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்" என்கிற வரிகளின் போது வேகமாக தவழ்கிற குழந்தையின் பின்னால் கேமராவை வைக்காமல், குழந்தையை வெறுமனே தூக்கிப் பிடித்திருப்பது ஸ்பஷ்டமாக தெரியும்படி படமாக்கியிருப்பது ஒரு உதாரணம்). 'காதல் பெரியதா காமம் பெரியதா' 'எந்தக் குதிரையில்' இரு பாடல்களும் ஒரே மாதிரியான பின்னணியில் அடுத்தடுத்து வந்து சலிக்க வைக்கிறது.

இதை உணர்ந்தோ என்னமோ, யுவன் பின்னணி இசையை கொட்டாவியுடன் அமைத்திருக்கிறார்.

()

பாத்திரங்களின் அமைப்பும், திரைக்கதையும் பயங்கர குழப்பங்களுடன் தமிழ்ச்சினிமாவின் வழக்கமாக சம்பிரதாயங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையற்ற நிதின்சத்யா எப்படி பத்மபிரியா மேல் மையல் கொள்கிறான் என்பதும் பிறகு எதற்காக அவளை கடத்தி தன்னுடன் "வெறுமனே" வைத்துக் கொள்கிறான் என்பதும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அவனுக்கு இருப்பது காமமா அல்லது பொசசிவ்னஸ்ஸா என்பதும் தெளிவாக இல்லை.

ஏற்கெனவே மணமான பெண்ணை எதற்காக பிருத்விராஜ் மணம் முடிக்க அத்தனை பரபரக்கிறார் என்பதும் தெரியவில்லை. இத்தனை அழகான, நல்லவனான நண்பனை வைத்துக் கொண்டு பெண்ணுக்கு அண்ணன் ஏன் மற்ற இடங்களில் வரன் தேடினார் என்பதும் புரியவில்லை.

பிருத்விராஜ் ஏன் இரண்டு பெயர்களில் பத்மபிரியாவிடம் பேசி குறும்பு செய்கிறார் என்பதும் தெளிவாக இல்லை. (இந்த sequence-ஐ வைத்துக் கொண்டு பின்வரும் காட்சிகளில் ஏதாவது அழுத்தமான ஒரு திருப்பத்தை இயக்குநர் தருவார் என்று யூகித்து வைத்திருந்தேன்). காஞ்சிபுரம், பாலவாக்கம், கொச்சின் என்று கதை வேறு பல்வேறு இடங்களில் அலைவதில், களக்குழப்பம் வேறு. கூடவே 1970-களில் வந்த நகைச்சுவை துணுக்குகள் வேறு ஆரம்பக் கட்டங்களில் வந்து நெளிய வைக்கிறது. கெட்டவனான முன்னாள் காதலன் அல்லது கணவனும் நல்லவனான இந்நாள் கணவனும் எப்படியாவது சந்தித்து பேசி பார்வையாளனுக்கு திகைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிற மாதிரியான திரைக்கதையை தடை செய்யச் சொல்லி யாரேனும் வழக்குப் போடலாம்.

இடைவேளைக்கு பின்னர் ஏற்படுத்தின திரைக்கதையின் இறுக்கத்தை முதற்பாதியிலும் ஏற்படுத்தியிருக்கலாம். பல காட்சிகளை பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிடும் படி திரைக்கதையை அமைத்திருப்பது பலவீனம். "ஆசை" படத்தின் சாயல்கள் பெருமளவிற்கு விழுந்திருப்பதை வசந்த் சாமர்த்தியமாக தவிர்க்க முயன்றிருக்கிறார். பெரும்பாலும் இன்டோரிலேயே நகர்கிற திரைக்கதை டெலிபிலிம் பார்ககிற உணர்வை ஏற்படுத்துகிறது.

வசந்திற்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். இதுமாதிரியான, மூளைக்கு அதிகம் வேலை வைக்காத சஸ்பென்ஸ் படங்களையெல்லாம் இயக்க நிறைய இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களின் பலமே, இயல்பான மனிதர்கள் பல்வேறு உணர்ச்சிகளுடன் உலாவுகிற அழுத்தமான திரைக்கதையுடன் இருக்கிற படங்களே. (சிறந்த உதாரணம்: கேளடி கண்மணி). அந்த நிலைக்கு உங்களை focus செய்து கொள்வது நலம் என்றே நான் கருதுகிறேன். (அதற்காக ஒரு இயக்குநர் ஒரே மாதிரியான படங்களைத்தான் எடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தன்னுடைய பலம் எதுவென்று உணர்ந்து அதற்கேற்ப இயங்குவது புத்திசாலித்தனமென்று தோன்றுகிறது)

()

"அண்ணாச்சி. ஸ்டாக் இல்லன்னு நெனக்கறேன். நீங்க கொடவுன்ல பாத்தீங்களா.. நான் பொறவு வாறேன்" என்று பின்னிருக்கையில் "தொணதொண"வென்று வியாபாரம் பேசிக் கொண்டிருந்தவரிடம், இந்தப்படத்தின் தலைப்பை சொல்லலாம் என்கிற வகையில் இருக்கிறதே தவிர படத்திற்கும் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. 'காதல்' பட பாதிப்பில், ஆந்திராவில் நடந்த உண்மைக்கதை என்று இறுதியில் காட்டப்படும் டைட்டில் கார்டும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற வணிக குப்பைப் படங்களை பார்க்க தயாராக இருப்பவர்கள், அவற்றை நிராகரித்து விட்டு பதிலாக இந்தப்படத்தை சற்றே வித்தியாச அனுபவத்திற்காக வேண்டுமானால் பா¡க்கலாம். மற்றபடி வழக்கமான வசந்த்தை தேடிப் போகிறவர்கள் மனதை திடப்படுத்திக் கொள்வது நல்லது.

உலக சினிமா பற்றிய போதுமான அறிவுள்ள வசந்த், தன்னுயை பாதையை மாற்றிக் கொண்டு இன்னும் வீர்யமாக வெளிப்பட வேண்டும்' என்பதைத்தான் அன்னை அபிராமி திரையரங்கில் என்னுடன் அமர்ந்து படம் பார்த்த அத்தனை ரசிகர்களும் (அதிகமில்லை சுமார் 50 பேர்தான்) நினைத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். Sorry Vasanth. Better luck next time.

Wednesday, September 12, 2007

குப்பி - திரைப்பார்வை

தூங்கி கண்விழித்த அந்த அதிகாலையில்தான் அதிர்ச்சியான அந்த செய்தி காதில் விழுந்தது. 'ராஜீவ் காந்தி படுகொலை". எங்கோ வடநாட்டில்தான் இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று பெரும்பாலோனோரைப் போல நானும் நம்பினேன். மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும், தீவிரவாதத்தின் நிழல் பெரும்பான்மையாக பரவாத தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் இது நிகழ்ந்தது என்று பின்னால் அறிய நேர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் திறுநீறு மணம் கழம தினமும் காலில் விழுந்து வணங்கி விட்டுப் போகும் மகன், பிராத்தல் கேஸில் மாட்டிக் கொண்டதைக் கேள்விப்பட்ட தகப்பன் போல் பதைபதைத்துப் போனது மனது. புலிகளின் மீதான தமிழகத்தின் பார்வை தலைகீழாக மாறிப் போன அளவிற்கு இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. புலிகளே இந்த அளவு எதிர்ப்பை யூகித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அப்போது நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தியின் குருதியைக் கொண்டு 'காங்கிரஸ்' வெற்றி என்ற வார்த்தையை பெரிய அளவில் எழுதியது.

இந்திய சார்பில் சென்ற அமைதிப்படை அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக அங்கு செய்த அட்டூழியங்கள் பற்றியும் கொதித்தெழுந்த புலிகள் இதற்கு காரணமான நபரை படுகொலை செய்ய முடிவு செய்தது குறித்த பின்னணிகளையும், காரணங்களையும் பெரும் ஆய்வுக்குட்படுத்தன் மூலம்தான் அணுக வேண்டும். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மழுப்பலான வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் 'இது ஒரு துன்பியல் சம்பவம்தான்".

Photo Sharing and Video Hosting at Photobucket



மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, விவரணப்பட பாணியில் அமைந்த திரைப்படமான 'Black Friday'-ஐ சமீபத்தில் பா¡க்க நேர்ந்த போது, தமிழில் இம்மாதிரியான பாணியில் எந்தப் படத்தையும் பார்த்த நினைவேயில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டது மனது. 'குப்பி'யை ஒருவேளை பார்த்திருந்தால் அது தேவையிருந்திருக்காது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம், தமிழில் ரீமேக் ஆகி வந்த போது (அப்படித்தான் சொல்கிறார் இயக்குநர்) பார்க்க ஆவலைத் தூண்டின படத்தை பார்க்க முடியாமலே போனது. கடந்த சனியன்று, சன் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகப் போகிறது என்பதை அறிந்தவுடனேயே இதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டேன்.

படுகொலை சம்பவம் பின்ணனி ஒலியுடன் மாத்திரமே பார்வையாளனுக்கு உணர வைக்கப்பட்டு (சென்சாரில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்) கொலையாளிகள் கர்நாடகாவிற்கு தப்பிச் செல்வது இந்திய வரைபடம் கொண்டே சொல்லப்படுகிறது. இங்கு தொடங்குகிற படம் அவர்கள் காவல் துறையினரால் round-up செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வரை நீடிக்கிறது.

இந்தப்படத்தின் முக்கிய பலமாக இதன் திரைக்கதையையும், ஆன்டனியின் துடிப்பான எடிட்டிங்கையும் சொல்லுவேன். ஏற்கெனவே உலகத்திற்கு தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும், அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்கிற ஆவலை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதில் இந்தப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. ரங்கநாத்தாக வரும் பாத்திரம் ஏற்றிருப்பவர் திறமையாக நடித்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். அவரின் மனைவியாக வரும் தாராவும் ஒரு அப்பாவி நடுத்தர வர்க்கத்து மனைவியின் சித்திரத்தை நன்றாக நம் முன் வைத்திருக்கிறார். சிவராசனாக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் ரவி காலே, உருவ ஒற்றுமையுடன் மிகச் சரியாக பொருந்திப் போனாலும் சற்றே அதீதமாக நடித்திருக்கிறாரோ என்று தோன்ற வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தி நாசரை வீணடித்திருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். "எங்கள் பிரதமரை கொன்றது தப்புத்தானே"? என்று தயக்கத்துடனும் பயத்துடனும் ரங்கநாத் எழுப்பிய வினாவிற்கு "உங்கட நாட்டில் கொன்றது தப்புத்தான்" என்று சிவராசன் சொல்வது பின்னர் நிகழ்நத சம்பவங்களை யூகித்து எழுதப்பட்ட வசனம் போல் செயற்கையாகத் தோன்றுகிறது. சுபாவாக நடித்திருக்கும் மாளவிகா, போராளியென்றாலே விறைப்பான தோற்றத்துடன் இருப்பார்கள் என்கிற cliche-ஐ தூக்கியெறிந்து, அவர்களும் எல்லாவிதமான தனிமனித நிறை, குறைகளுடன் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி விதத்தில் நடித்திருக்கிறார். சுரேஷ் மாஸ்டராக வரும் இன்னொரு போராளி, பல தமிழ்ப் படங்களில் நாயகனிடம் உதைவாங்கும் அடியாட்களில் ஒருவர். இதை தவிர்த்திருக்கலாம்.

()

கிளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் சயனைடைக் கடித்து சாக, சிவராசன் மாத்திரம் ஏன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகிறார் என்று தெரியவில்லை. நிஜத்தில் இந்த வழக்கை மிகத்திற¨மாக கையாண்ட, முன்னாள் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன், இந்தப்படத்தைப் பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்றறிய ஆவலாக இருக்கிறது.

புலிகளையும் இலங்கைத் தமிழர்களையும் சித்தரித்திருக்கின்ற திரைப்படங்களை, அவர்கள் பெருவாரியாக எதிர்மறையாக விமர்சித்திருப்பதை வாசித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவராலேயேதான் யதார்த்தமாகவும் உண்மையாகவும் படைக்க முடியும் என்கிற கருத்தின் படி, அங்கே நிலவுகிற சூழ்நிலையை அனுபவர £தியாக அறிந்த, சாய்வுநிலை கொள்ளாத ஒரு படைப்பாளியால்தான் இச்சூழலைப் பற்றின ஒரு சிறந்த படத்தை தர முடியும் என்று தோன்றுகிறது.

suresh kannan

Thursday, September 06, 2007

சஞ்சய்தத், penis, உயிர்மை........

அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்தும், ஒன்றுக்கும் உதவாத செய்திகளை ஊதிப் பெருக்கி தலைப்புச் செய்தியாக்கி (நாம் வலைப்பதிவுகளில் செய்வதைப் போல)தம்முடைய விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் வியாபாரத் தந்திரங்கள் குறித்தும் நாம் பொதுவாக அறிந்தததுதான் என்றாலும் பல சமயங்களில் எரிச்சல் உச்சந்தலையை தொடுவதை தவிர்க்க முடிவதில்லை.

சஞ்சய்தத் என்றொரு பிரகஸ்பதி. ஏ.கே.47 துப்பாக்கிகள், குண்டுகள் வைத்திருந்ததாகவும், மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டிருப்பவர்களிடமிருந்து அதை வாங்கியுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக சஞ்சய்தத் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (ஏகே 47 வைத்து காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரொம்பவும் பெரிய குடும்பம் போலிருக்கிறது.) இது ஒருபுறம் இருக்கட்டும். இதை ஊடகங்கள் கையாண்ட விதம்தான் என்னை ரொம்பவும் கடுப்பேற்றியது. அவர் கைதாகி சிறை செல்லும் வரை பின்னாலேயே வால்பிடித்துச் சென்றது முதல், சஞ்சய்தத் சிறையில் கூடை பின்னினார், காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் சப்பாத்தி சாப்பிட்டார், சிகரெட் பிடிக்க அனுமதியில்லாமல் அவதிப்பட்டார். காலையில் 07.00 மணிக்கு கக்கூஸ் போனார்........ என்கிற ரீதியில் தொடர்ச்சியாக செய்திகளை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

நடிக, நடிகையரைப் பற்றிய செய்தி போட்டால் பரபரப்பாக இருக்கும் என்கிற புராததத் தன்மை கொண்ட நிஜம், இன்றுவரை செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமை. முனியாண்டி விலாஸ், வேலு மிலிட்டரி ஹோட்டல் போன்றவற்றில் மெனுகார்டில் இல்லாத உயிரினத்தைத் தேடி, சல்மான்கான் என்கிற இன்னொரு பிரகஸ்பதி காட்டிற்குள் சென்று வேட்டையாட, அந்த நடிகரின் பின்னாலும் வீடியோ காமராக்கள் துரத்துகின்றன. பொதுநிறுவனமாக சிறைக்கூடத்திற்குள்ளும் இந்த ஊடகங்களின் கரங்கள் நீளுகின்றன. மோனிகா பேடி குளிப்பதைக் கூட படமெடுத்து ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்ப துணிகிறதென்றால், போட்டியில் ஜெயிக்க என்னவென்றாலும் செய்யத்துணிகிற வியாபார குதர்க்கம் வெளிப்படுவது ஒருபுறமென்றால், சிறைக்கூடங்களின் பாதுகாப்பு குறித்த வேள்வியும் கூடவே எழுகின்றது.

இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல் கேஸாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் முதல் நக்சலைட் தேடுதல் வேட்டை வரை சம்பந்தப்படுத்தப்பட்டு ஒரு குற்றமும் செய்யாமல் ஆண்டாண்டுகளாக சிறைச்சாலையில் அவதிப்படும் எத்தனையோ அப்பாவிகளைப் பற்றி இந்த ஊடகங்களுக்கு என்ன கவலை?

()

நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நோய்களைத் தாண்டி சில அசாதாரண, விநோதமாக நோய்களைப் பற்றி கேள்விப்படும் போது 'நல்ல வேளை' என்று பெருமூச்சு விடவே தோன்றுகிறது. ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான நோய்க்கூறுகள் .. என்று வாயில் நுழையாத நோயின் பெயரோடு ஆரம்பிக்கும் மருத்துவரின் அறிக்கைகளை பத்திரிகைகளில் படிக்கும் போது இம்மாதிரி தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. சென்ற வாரத்தில் நாளிதழொன்றின் பக்கங்களில் விரல்கள் மாத்திரம் அசுரத்தனமாக வளர்ந்திருக்கின்ற நபரின் புகைப்படத்தை பார்த்த போது அதிசயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

டெக்கான் கிரானிக்களில் பிரபல sexologist-ஆன நாராயண ரெட்டி கேள்வி-பதில் தொடரில் சமீபத்தில் பின்வரும் கேள்வியைப் படிக்கும் போது தோன்றியது மேற்சொன்ன பத்தி.


Question: My son is 11 years old. His penis, when erect, almost touches his lower abdomen and points directly to the sky. Sometimes he has a hard time keeping his penis from his face while urinating. What to do?

Answer: Get your son examined by an urologist. Some people may have an abnormal curvature of the penis and this needs to be corrected. Otherwise when he gets married, he may find intercourse difficult.

()

உயிர்மை இலக்கிய இதழ், நகுலன் மறைவு குறித்த வெளியிட்ட சிறப்பு பக்கங்களிலும், அட்டைப் படத்திலும் பிரசுரமான நகுலனின் புகைப்படங்கள் அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்டிருப்பதாக, புகைப்படங்களின் உரிமையாளர் சீனிவாசன் என்பவர், உயிர்மை மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். "Intellectual property" குறித்த அறிவும், விழிப்புணர்வும் நம்மிடமில்லை என்பதும் இந்த விஷயத்தை அறியாமையோடோ அல்லது அலட்சியத்துடனோதான் நாம் கையாளுகிறோம் என்பதுதான் இது வெளிப்படுத்துகிறது.

Tuesday, September 04, 2007

போலிகளை உடனே ஒழியுங்கள்....

தமிழக அரசியல் களத்திற்கு இணையாக தமிழ் வலைப்பதிவு உலகிலும் சுவாரசியமான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை வாருகிறார்கள் என்றால், இங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை கொட்டி வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்களை விரட்டும் பாவனையாக சிலர் கம்பும் கையுமாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்க, ... "நான் அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு முன்னால தான் நெறைய குப்பை விழுது" என்று சிலர் போலியாக கூவிக் கொண்டு அபத்தமான முறையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, கவுன்சிலர்கள் மீட்டிங் மாதிரி இதன் மீதே குறைந்தது இதுவரை ஆயிரம் தீர்மானமாவது நிறைவேறியிருக்கும். ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்வதைப் போல, இணையமும் ஒரு திறந்த வெளிதான். போக்குவரத்து விதிகளை கவனமாக நிறைவேற்றுபவர்களும், சிவப்பு விழுவதற்குள் விரைந்துவிட வேண்டி அவசரமாக சென்று சிவப்பாக சிதறுபவர்களும், பின்னால் வருபவர்களைப் பற்றிய பிரக்ஞையேயின்றி "புளிச்'சென்று துப்புபவர்களுமாக...

நாம்தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒழுங்கீனமாக நடப்பவர்களை ஒன்று சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், அல்லது வேண்டுமென்றே சீண்டுபவர்களை நம் மெளனத்தால் புறக்கணித்தாலே போதும். பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். மாறாக சொறிய சுகமாக இருக்கிறதென்பதற்காக, இதையே செய்து கொண்டிருந்தால் வலைப்பதிவுக் களம் என்பதே ரணகளமான விஷயமாக மாறிவிடும்.........


என்று நண்பர் தொடர்ந்து பேசிக் கொண்டே போக, நான் இடைமறித்து "ஹலோ, இதைப் பற்றிப் பேச இது இடமல்ல. இதற்கென்றே வேறு நிறைய இடங்களும் ரசிகர் மன்றங்களும் இருக்கின்றன. அங்கே செல்லுங்கள். என்று இடை மறிக்க வேண்டிதாயிருந்தது. :-)

()

விஷயத்திற்கு வருவோம். கடந்த பதிவொன்றில் விளையாட்டாக ஒரு இலக்கியப் புதிரை போட்டு வைக்க, தொடரச் சொல்லி வந்த நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் மூலமாக வெளிப்பட்ட அபரிதமான வரவேற்பு காரணமாக இன்னொன்றை இங்கே போட்டு வைக்கிறேன். அனைத்து சரியான விடைகளையும் முதலில் அளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் அஜீர்ண மருந்து ஷாஷே ஒன்றும் யோகாசனங்கள் (பட விளக்கங்களுடன்) பற்றிய புத்தகம் ஒன்றும் கூரியரில் அனுப்பி வைக்கப்படும். (இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள்). கூகுளிலும் விக்கிபீடியாவிலும் விடையை தேடுபவர்களுக்கு தண்டணைப் பரிசாக "வீராச்சாமி" படத்தின் dvd விரைவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

()

1) ஆண்டாள் எழுதிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

2) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். சரி. இரண்டாவது நாவல் எது? எழுதியவர் யார்?

3) 'கல்மரம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்?

4) 'காக்காய் பார்லிமெண்ட்' எனும் தமிழின் முதல் அரசியல் சிறுகதையை எழுதியவர் யார்?

5) நோபல் பரிசுத் தொகைக்கான காசோலையை வங்கியின் பணமாக்காமல் கடைசிவரை புத்தக அடையாளமாய் பயன்படுத்திய எழுத்தாளர் யார்?

6) பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நாவல் எது?

7) " In Light of India" எனும் பிரபலமான கவிதையை எழுதிய லத்தீன் கவிஞர் யார்?

8) பொருனறாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய இரு பத்துப்பாட்டு நூல்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?

9) மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலுக்கு தமிழில் கவிதை வடிவம் தந்தவர்?

10) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை இரண்டு முறை பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?

(நன்றி: புத்தகம் பேசுது - ஜூலை 2007)

விடைகள் விரைவில்