Wednesday, September 12, 2007

குப்பி - திரைப்பார்வை

தூங்கி கண்விழித்த அந்த அதிகாலையில்தான் அதிர்ச்சியான அந்த செய்தி காதில் விழுந்தது. 'ராஜீவ் காந்தி படுகொலை". எங்கோ வடநாட்டில்தான் இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று பெரும்பாலோனோரைப் போல நானும் நம்பினேன். மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும், தீவிரவாதத்தின் நிழல் பெரும்பான்மையாக பரவாத தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் இது நிகழ்ந்தது என்று பின்னால் அறிய நேர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் திறுநீறு மணம் கழம தினமும் காலில் விழுந்து வணங்கி விட்டுப் போகும் மகன், பிராத்தல் கேஸில் மாட்டிக் கொண்டதைக் கேள்விப்பட்ட தகப்பன் போல் பதைபதைத்துப் போனது மனது. புலிகளின் மீதான தமிழகத்தின் பார்வை தலைகீழாக மாறிப் போன அளவிற்கு இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. புலிகளே இந்த அளவு எதிர்ப்பை யூகித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அப்போது நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தியின் குருதியைக் கொண்டு 'காங்கிரஸ்' வெற்றி என்ற வார்த்தையை பெரிய அளவில் எழுதியது.

இந்திய சார்பில் சென்ற அமைதிப்படை அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக அங்கு செய்த அட்டூழியங்கள் பற்றியும் கொதித்தெழுந்த புலிகள் இதற்கு காரணமான நபரை படுகொலை செய்ய முடிவு செய்தது குறித்த பின்னணிகளையும், காரணங்களையும் பெரும் ஆய்வுக்குட்படுத்தன் மூலம்தான் அணுக வேண்டும். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மழுப்பலான வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் 'இது ஒரு துன்பியல் சம்பவம்தான்".

Photo Sharing and Video Hosting at Photobucketமும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, விவரணப்பட பாணியில் அமைந்த திரைப்படமான 'Black Friday'-ஐ சமீபத்தில் பா¡க்க நேர்ந்த போது, தமிழில் இம்மாதிரியான பாணியில் எந்தப் படத்தையும் பார்த்த நினைவேயில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டது மனது. 'குப்பி'யை ஒருவேளை பார்த்திருந்தால் அது தேவையிருந்திருக்காது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம், தமிழில் ரீமேக் ஆகி வந்த போது (அப்படித்தான் சொல்கிறார் இயக்குநர்) பார்க்க ஆவலைத் தூண்டின படத்தை பார்க்க முடியாமலே போனது. கடந்த சனியன்று, சன் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகப் போகிறது என்பதை அறிந்தவுடனேயே இதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டேன்.

படுகொலை சம்பவம் பின்ணனி ஒலியுடன் மாத்திரமே பார்வையாளனுக்கு உணர வைக்கப்பட்டு (சென்சாரில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்) கொலையாளிகள் கர்நாடகாவிற்கு தப்பிச் செல்வது இந்திய வரைபடம் கொண்டே சொல்லப்படுகிறது. இங்கு தொடங்குகிற படம் அவர்கள் காவல் துறையினரால் round-up செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வரை நீடிக்கிறது.

இந்தப்படத்தின் முக்கிய பலமாக இதன் திரைக்கதையையும், ஆன்டனியின் துடிப்பான எடிட்டிங்கையும் சொல்லுவேன். ஏற்கெனவே உலகத்திற்கு தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும், அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்கிற ஆவலை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதில் இந்தப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. ரங்கநாத்தாக வரும் பாத்திரம் ஏற்றிருப்பவர் திறமையாக நடித்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். அவரின் மனைவியாக வரும் தாராவும் ஒரு அப்பாவி நடுத்தர வர்க்கத்து மனைவியின் சித்திரத்தை நன்றாக நம் முன் வைத்திருக்கிறார். சிவராசனாக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் ரவி காலே, உருவ ஒற்றுமையுடன் மிகச் சரியாக பொருந்திப் போனாலும் சற்றே அதீதமாக நடித்திருக்கிறாரோ என்று தோன்ற வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தி நாசரை வீணடித்திருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். "எங்கள் பிரதமரை கொன்றது தப்புத்தானே"? என்று தயக்கத்துடனும் பயத்துடனும் ரங்கநாத் எழுப்பிய வினாவிற்கு "உங்கட நாட்டில் கொன்றது தப்புத்தான்" என்று சிவராசன் சொல்வது பின்னர் நிகழ்நத சம்பவங்களை யூகித்து எழுதப்பட்ட வசனம் போல் செயற்கையாகத் தோன்றுகிறது. சுபாவாக நடித்திருக்கும் மாளவிகா, போராளியென்றாலே விறைப்பான தோற்றத்துடன் இருப்பார்கள் என்கிற cliche-ஐ தூக்கியெறிந்து, அவர்களும் எல்லாவிதமான தனிமனித நிறை, குறைகளுடன் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி விதத்தில் நடித்திருக்கிறார். சுரேஷ் மாஸ்டராக வரும் இன்னொரு போராளி, பல தமிழ்ப் படங்களில் நாயகனிடம் உதைவாங்கும் அடியாட்களில் ஒருவர். இதை தவிர்த்திருக்கலாம்.

()

கிளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் சயனைடைக் கடித்து சாக, சிவராசன் மாத்திரம் ஏன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகிறார் என்று தெரியவில்லை. நிஜத்தில் இந்த வழக்கை மிகத்திற¨மாக கையாண்ட, முன்னாள் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன், இந்தப்படத்தைப் பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்றறிய ஆவலாக இருக்கிறது.

புலிகளையும் இலங்கைத் தமிழர்களையும் சித்தரித்திருக்கின்ற திரைப்படங்களை, அவர்கள் பெருவாரியாக எதிர்மறையாக விமர்சித்திருப்பதை வாசித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவராலேயேதான் யதார்த்தமாகவும் உண்மையாகவும் படைக்க முடியும் என்கிற கருத்தின் படி, அங்கே நிலவுகிற சூழ்நிலையை அனுபவர £தியாக அறிந்த, சாய்வுநிலை கொள்ளாத ஒரு படைப்பாளியால்தான் இச்சூழலைப் பற்றின ஒரு சிறந்த படத்தை தர முடியும் என்று தோன்றுகிறது.

suresh kannan

5 comments:

Anonymous said...

நானும் இந்தப்படம் பார்த்தேன். எந்தப்பக்கமும் சாயாமல் நல்ல முறையில் எடுத்திருக்கிறார்கள்.

Anonymous said...

http://sinnakuddy1.blogspot.com/2007/09/blog-post_04.html

சீனு said...

ரொம்ப நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம், எதிர்பாராமல் பார்த்தாகிவிட்டது. நானும் யதேச்சையாக சேனல் மாற்றும் பொழுது மாளவிகா தெரிந்தார். பின் ஒருவாறு யூகித்து படம் பார்த்தேன். படம் உண்மையில் நிகழ்ந்தவை என்பதால் எந்த சினிமா காம்பிரமைஸும் எதிர்பார்க்க கூடாது. ஆனால் நன்றாகவே இருந்தது. ஆனால் படம் தர வேண்டிய தாக்கத்தை தரவில்லையோ என்ற எண்ணம் தான் எழுந்தது. மற்றபடி ஒரு சிறப்பான படம் தான் இது.

முகமூடி said...

// படுகொலை சம்பவம் பின்ணனி ஒலியுடன் மாத்திரமே பார்வையாளனுக்கு உணர வைக்கப்பட்டு (சென்சாரில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்) //

இயக்குனர் சென்சாரை நினைத்து செய்ந்திருந்தாலும், பார்வையாளர்களின் அனுபவத்தை பொறுத்து அந்த சம்பவத்தை அவர்களே கற்பனையாக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு தருவதன் மூலம் இந்த யுக்தியே நேரடியாக காண்பிப்பதை விட தாக்கம் ஏற்படுத்தக்கூடியது என்பது என் கருத்து... பம்பாய் திரைப்படத்தில் மசூதி இடிப்பை "பார்த்த" போது ஏற்பட்ட அனுபவத்தை விட ஃபாரன்ஹீட் 9-11 திரைப்படத்தில் இரட்டை கோபுரம் இடிந்ததை "கேட்ட" மட்டும்போது ஏற்பட்ட தாக்கம் அதிகம்.

*

வித்தியாசமான முயற்சிகளை சிலாகித்து எழுதிய உங்களின் முந்தைய ஒரு பதிவை படித்த போதே நான் ரசித்த வித்தியாச பட்டியலை உங்களுடன் பகிர நினைத்தேன். இன்னமும் வேளை வரவில்லை. நேற்று Dogville என்ற திரைப்படம் பார்த்தேன். உங்களை நினைத்துக்கொண்டேன். வெறுமே ஒரு நூறடி x நூறடி அரங்கில் இரவு பகல் வேறுபாட்டுக்கு ஒளியை மட்டும் துணைக்கு கொண்டு கதாபாத்திரங்களின் முகபாவங்களை மட்டுமே முக்கிய விஷயமாக முன்னிருத்தி ஒரு முன்னுரை + ஒன்பது அத்தியாங்கள் என்று அந்தக்கால நாடக பாணியில் எடுக்கப்பட்ட படம். படம் மிகவும் நீளம், ஆனால் ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து இது நமக்குள் (குறைந்த பட்சம் எனக்குள்) கிளறும் சிந்தனைகள் முக்கியமானவை. கிடைத்தால் பாருங்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

முகமூடி, உங்கள் பரிந்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட பார்க்க முயற்சிக்கிறேன்.