Friday, September 21, 2007

சத்தம் போடாதே - திரைப்பார்வை

ஒரு தமிழ் திரைப்படத்தின் உரையாடலில் 'அசோகமித்திரன், சுந்தரராமசாமி' போன்ற பெயர்கள் அடிபட்டால் (!) அந்தப்படம் என்னமாதிரியான வகை, யாருக்கானது என்பதை உங்களால் எளிதில் யூகித்துவிட முடியும். ஆம். இது, (கிழ) கதாநாயகன் தோன்றியவுடன் அரங்கம் அதிர விசிலடிக்கும் முட்டாள் ரசிகர்களுக்கான படமல்ல. வழக்கமான தமிழ்ச் சினிமாக்களிலிருந்து விலகி நிற்கிற, சற்றே ஆசுவாசத்தைத் தருகிற படங்களை விரும்புகிற ரசிகர்களுக்கானது என்று சொல்லலாம்.

பாலச்சந்தர் பள்ளியிலிருந்து வந்திருந்தாலும் நாடகத்தன்மையை பெருமளவிற்கு விலக்கி தன் தனித்தன்மையினால் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் வசந்த். (இவரின் 'நேருக்கு நேர்' போன்ற படங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை.) இப்படியானப்பட்டவர் எப்படி இப்படி ஒரு படத்தை shhhhhhhhhh..............சரி சொல்கிறேன்.

Warning: Spoilers: இவ்வாறு எழுதுவதே எனக்கு அபத்தமாகத் தோன்றுகிறது. ஒரு சினிமாப்படத்தின் கதையை வெளிப்படுத்திவிட்டால் பிற்பாடு திரைப்படம் பா¡க்கும் போது ரசிக்க முடியாது என்பது பாமரத்தனமான சிந்தனை. ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை அத்தனை கதை அமைப்புகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டன. பாவனை, மொழி, களம், போக்கு என்று கதை சொல்கிறவர்களின் விதவிதமான திறமைதான் ஒரு பார்வையாளனுக்கு சுவாரசியத்தை அளிக்கின்றன. புதிதான கதை அமைப்பு விஞ்ஞானக்கதைகளில்தான் சாத்தியம் என்பது என் தாழ்மையான கருத்து. வெளிநாட்டு திரைப்பட திரையிடல்களின் போது synopsis-ஐ பிரிண்ட் போட்டே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் படத்தை இன்னும் ஆழத்துடன் ரசிக்க முடிகிறது. நாம் ஏற்கெனவே பார்த்த பிடித்தமான திரைப்படத்தை மறுபடியும் ஏன் உட்கார்ந்து ஆவலுடன் பார்க்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

()

மேலே குறிப்பிட்டவாறு 'சத்தம் போடாதே' திரைப்படத்தின் கதை அமைப்பையும் ஒரு அசட்டுத் துணிச்சலுடன் ராமாயணக் கதையோடு ஒப்பிட்டால்... நாயகி கடத்தப்படுவதும் நாயகன் அவளை மீட்பதும்தான் என்று சொல்லலாம்.

மிகவும் அழகாக இருக்கின்ற காரணத்திற்காக (!) நண்பன் நிராகரித்து விட்ட பெண்ணின் மீது ஆசை கொண்டு தன்னுடைய ஆண்மையின்மையை மறைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறான் ரத்னவேல் (நிதின் சத்யா). இதை பின்னர் அறிந்து அதிர்ச்சி கொள்ளும் அவள் (பத்மபிரியா) விவாகரத்திற்குப் பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் இனிமையான உற்சாகத்துடன் குறுக்கிடும் ரவிச்சந்திரனை (பிருத்விராஜ்) திருமணம் செய்து கொள்கிறாள். தன்னுடைய மனைவியாக இருந்தவள், இன்னனொருவனுடன் சந்தோஷமாக இருப்பதா என்று குரோதத்துடன் யோசிக்கும் சற்றே மனநிலை பிறழ்ந்த முன்னாள் கணவன், அவளை கடத்திச் சென்று விடுவதும், பின்னர் பிருத்விராஜ் ..... blah... blah... blah..

முத்துராமன், சிவகுமார், மோகன் போன்ற இயல்பான கதாநாயர்களின் வெற்றிடத்தை சிறப்பாக நிரப்புகிறார் பிருத்விராஜ். குழந்தைகளுடனான பாடலில் இவரே ஒரு வளர்ந்த குழந்தை போலத்தான் இருக்கிறார். என்றாலும் 'கனா கண்டேன்' திரைப்படம் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களிலும் மாற்றி நடித்தால் தொடர்ந்து இடம் பிடிக்கலாம். வித்தியாசமாக இல்லை என்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.

முன்னாள் கணவனால் அறைக்குள் அடைக்கப்பட்ட பின்புதான் பத்மபிரியா நடிக்கத் தொடங்குகிறார் எனலாம். அதுவரை ஒரு எந்தவொரு வித்தியாசமான நடிப்பையும் இவரிடமிருந்து பார்க்க முடியவில்லை என்பதற்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளாத இயக்குநரைத்தான் குறை சொல்ல வேண்டும். இவரின் பாத்திர அமைப்பு சற்றே குழப்பமானது. இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் பாடகி சின்மயி அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.

நிதின் சத்யா. நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பாத்திரம் இவருடையது. மனிதர் இயன்றவரை subtle-ஆக நடித்து கரை சேர்ந்திருந்தாலும், பதிலாக பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்ற சிறப்பான நடிகர்களை ஒரு வேளை இயக்குநர் பயன்படுத்தியிருந்தால் இந்தப் பாத்திரத்தின் வீர்யம் கூடியிருக்கும் என்று யூகிக்கிறேன். என்றாலும் பிரதானமாக வருகிற முதல் படத்திலேயே விவகாரமான பாத்திரத்தை தைரியாக ஏற்றிருப்பதற்காக இவருக்கொரு பாராட்டு.

அறிமுக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் (?) அதிகப்பிரசங்கித்தனம் எதுவும் செய்யாமல், பார்வையாளர்களின் கண்கள் போலவே இயல்பாக படம் பிடித்திருக்கிறார். யுவனின் அற்புதமான பாடல்கள் அனைத்தையும் இயக்குநர் வீணடித்திருக்கிறார் என்றே சொல்வேன். (இந்தப் படத்திற்கு பாடல்களின் தேவையேயில்லை என்பது வேறு விஷயம்) பாடல்களை நான் முன்பே பலமுறை கேட்டிருந்ததால் நான் செய்து வைத்திருந்த கற்பனை அனைத்தும் ஒரு சதவீதம் கூட ஒட்டாமல் ஏமாற்றமளித்தது. பொதுவாக வசந்த்தின் படங்களில் பாடல்கள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். இது ஒரு விதிவிலக்கு. ('அழகு குட்டி செல்லம்' என்கிற குழந்தைப் பாடலில் "உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்" என்கிற வரிகளின் போது வேகமாக தவழ்கிற குழந்தையின் பின்னால் கேமராவை வைக்காமல், குழந்தையை வெறுமனே தூக்கிப் பிடித்திருப்பது ஸ்பஷ்டமாக தெரியும்படி படமாக்கியிருப்பது ஒரு உதாரணம்). 'காதல் பெரியதா காமம் பெரியதா' 'எந்தக் குதிரையில்' இரு பாடல்களும் ஒரே மாதிரியான பின்னணியில் அடுத்தடுத்து வந்து சலிக்க வைக்கிறது.

இதை உணர்ந்தோ என்னமோ, யுவன் பின்னணி இசையை கொட்டாவியுடன் அமைத்திருக்கிறார்.

()

பாத்திரங்களின் அமைப்பும், திரைக்கதையும் பயங்கர குழப்பங்களுடன் தமிழ்ச்சினிமாவின் வழக்கமாக சம்பிரதாயங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையற்ற நிதின்சத்யா எப்படி பத்மபிரியா மேல் மையல் கொள்கிறான் என்பதும் பிறகு எதற்காக அவளை கடத்தி தன்னுடன் "வெறுமனே" வைத்துக் கொள்கிறான் என்பதும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அவனுக்கு இருப்பது காமமா அல்லது பொசசிவ்னஸ்ஸா என்பதும் தெளிவாக இல்லை.

ஏற்கெனவே மணமான பெண்ணை எதற்காக பிருத்விராஜ் மணம் முடிக்க அத்தனை பரபரக்கிறார் என்பதும் தெரியவில்லை. இத்தனை அழகான, நல்லவனான நண்பனை வைத்துக் கொண்டு பெண்ணுக்கு அண்ணன் ஏன் மற்ற இடங்களில் வரன் தேடினார் என்பதும் புரியவில்லை.

பிருத்விராஜ் ஏன் இரண்டு பெயர்களில் பத்மபிரியாவிடம் பேசி குறும்பு செய்கிறார் என்பதும் தெளிவாக இல்லை. (இந்த sequence-ஐ வைத்துக் கொண்டு பின்வரும் காட்சிகளில் ஏதாவது அழுத்தமான ஒரு திருப்பத்தை இயக்குநர் தருவார் என்று யூகித்து வைத்திருந்தேன்). காஞ்சிபுரம், பாலவாக்கம், கொச்சின் என்று கதை வேறு பல்வேறு இடங்களில் அலைவதில், களக்குழப்பம் வேறு. கூடவே 1970-களில் வந்த நகைச்சுவை துணுக்குகள் வேறு ஆரம்பக் கட்டங்களில் வந்து நெளிய வைக்கிறது. கெட்டவனான முன்னாள் காதலன் அல்லது கணவனும் நல்லவனான இந்நாள் கணவனும் எப்படியாவது சந்தித்து பேசி பார்வையாளனுக்கு திகைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிற மாதிரியான திரைக்கதையை தடை செய்யச் சொல்லி யாரேனும் வழக்குப் போடலாம்.

இடைவேளைக்கு பின்னர் ஏற்படுத்தின திரைக்கதையின் இறுக்கத்தை முதற்பாதியிலும் ஏற்படுத்தியிருக்கலாம். பல காட்சிகளை பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிடும் படி திரைக்கதையை அமைத்திருப்பது பலவீனம். "ஆசை" படத்தின் சாயல்கள் பெருமளவிற்கு விழுந்திருப்பதை வசந்த் சாமர்த்தியமாக தவிர்க்க முயன்றிருக்கிறார். பெரும்பாலும் இன்டோரிலேயே நகர்கிற திரைக்கதை டெலிபிலிம் பார்ககிற உணர்வை ஏற்படுத்துகிறது.

வசந்திற்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். இதுமாதிரியான, மூளைக்கு அதிகம் வேலை வைக்காத சஸ்பென்ஸ் படங்களையெல்லாம் இயக்க நிறைய இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களின் பலமே, இயல்பான மனிதர்கள் பல்வேறு உணர்ச்சிகளுடன் உலாவுகிற அழுத்தமான திரைக்கதையுடன் இருக்கிற படங்களே. (சிறந்த உதாரணம்: கேளடி கண்மணி). அந்த நிலைக்கு உங்களை focus செய்து கொள்வது நலம் என்றே நான் கருதுகிறேன். (அதற்காக ஒரு இயக்குநர் ஒரே மாதிரியான படங்களைத்தான் எடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தன்னுடைய பலம் எதுவென்று உணர்ந்து அதற்கேற்ப இயங்குவது புத்திசாலித்தனமென்று தோன்றுகிறது)

()

"அண்ணாச்சி. ஸ்டாக் இல்லன்னு நெனக்கறேன். நீங்க கொடவுன்ல பாத்தீங்களா.. நான் பொறவு வாறேன்" என்று பின்னிருக்கையில் "தொணதொண"வென்று வியாபாரம் பேசிக் கொண்டிருந்தவரிடம், இந்தப்படத்தின் தலைப்பை சொல்லலாம் என்கிற வகையில் இருக்கிறதே தவிர படத்திற்கும் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. 'காதல்' பட பாதிப்பில், ஆந்திராவில் நடந்த உண்மைக்கதை என்று இறுதியில் காட்டப்படும் டைட்டில் கார்டும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற வணிக குப்பைப் படங்களை பார்க்க தயாராக இருப்பவர்கள், அவற்றை நிராகரித்து விட்டு பதிலாக இந்தப்படத்தை சற்றே வித்தியாச அனுபவத்திற்காக வேண்டுமானால் பா¡க்கலாம். மற்றபடி வழக்கமான வசந்த்தை தேடிப் போகிறவர்கள் மனதை திடப்படுத்திக் கொள்வது நல்லது.

உலக சினிமா பற்றிய போதுமான அறிவுள்ள வசந்த், தன்னுயை பாதையை மாற்றிக் கொண்டு இன்னும் வீர்யமாக வெளிப்பட வேண்டும்' என்பதைத்தான் அன்னை அபிராமி திரையரங்கில் என்னுடன் அமர்ந்து படம் பார்த்த அத்தனை ரசிகர்களும் (அதிகமில்லை சுமார் 50 பேர்தான்) நினைத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். Sorry Vasanth. Better luck next time.

11 comments:

கார்த்திக் பிரபு said...

good one sir

ஹரன்பிரசன்னா said...

எனக்கு சில சந்தேகங்கள்.

01. வசந்த் பாலசந்தரின் பள்ளியிலிருந்து விலகி எடுத்த படங்கள் எவை எவை எனச் சொல்லமுடியுமா? (கேளடி கண்மணி நல்ல படங்கள் என்பது சரி. வசந்த் எப்போது இயல்பான படங்கள் எடுத்தார்? நேருக்கு நேர் படத்தை விட்டுவிட்டால் கூட, வசந்தின் உருப்படியான படங்கள் மிகமிகக் குறைவு. உருப்படியான படங்கள் இல்லாமல், கொஞ்சம் இயல்பை நோக்கி நகரும் படங்கள் என்று பார்த்தாலும் ஒன்றிரண்டு கூடத் தேறாது போல. :( ஏய் நீ ரொம்ப அழகா இருக்கேவும் வசந்த் படம்தான்!)

02. சிவகுமார் இயல்பான கதாநாயகரா? எந்தப் படத்தில்? (எனக்குத் தெரிந்து மறுபடியும் படத்தில் அவர் சாகக்கிடக்கும் கிழவராக வரும் சமயங்களில் மட்டுமே சிறப்பாக நடித்ததாகத் தோன்றுகிறது. மற்ற (கிட்டத்தட்ட!) எல்லா படங்களிலும் அவர் செயற்கைத்தனத்துடனும் மிகை நடிப்புடனும்தான் நடித்தார்!

03. வசந்த் சொதப்பிய பாடல்களும் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, தனியே தன்னந்தனியே. :)

04. அபத்தம் இல்லாமல் ஒரு பதிவு கூட வராதா? :)

Anonymous said...

வசந்த் எப்போதும் எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார்.

அதிலும் கேளடி கண்மனி படத்தைப் பார்த்து விட்டு, S.P.B, ராதிகா,அஞ்சுவை நம்பி தனது முதல் படமாக இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்று வசந்த் எனும் கலைஞன் மீது பெரிய மதிப்பு வந்தது.

அப்புறம் அவரின் ரிதம் போன்ற படங்கள் அவ்வப்போது அவரின் அழகுணர்ச்சியை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது.

ஆனால் சத்தம் போடாதே படத்தின்
ட்ரெய்லரைப் பார்த்த போதே அதில் ஏதோ ஒன்று மிஸ் ஆகி இருப்பது போலவோ, ஆல்து ஆசையின் சாயலோ தென் படுவது போலத் தோன்றியது. ஹ்ம்ம்ம் எப்படியும் ஒரு சில சீன்களிலாவது வசந்தின் டச் இருக்கும் அப்படி ஏதேனும் கவிதை போன்ற சீன்களை ரசிக்கவாவது போய்ப் பார்க்க வேண்டும்.

ஏமாறவேண்டாமென்று எதிர்பார்ப்பில்லாமலேயே போகிறேன்.

//('அழகு குட்டி செல்லம்' என்கிற குழந்தைப் பாடலில் "உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்" என்கிற வரிகளின் போது வேகமாக தவழ்கிற குழந்தையின் பின்னால் கேமராவை வைக்காமல், குழந்தையை வெறுமனே தூக்கிப் பிடித்திருப்பது ஸ்பஷ்டமாக தெரியும்படி படமாக்கியிருப்பது ஒரு உதாரணம்).//

இதைப் படித்தவுடன், சில நாட்களிற்கு முன்னால் வேட்டையாடு விளையாடு படத்திற்கு ஒருவர் எழுதிய விமர்சனம் ஞாபகத்திற்கு வருகிறது.

பார்த்த முதல் நாளே பாட்டை எடுத்த விதம் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது. பாடல் வரிகளை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். "காலை எழுந்தவுடன்" என்று வரிகள் வந்தால் அவர்கள் தூங்கி எழுவதை அப்படியே காண்பிக்கிறார்கள். என்று ஒருவர் விமர்சனம் எழுதி இருந்தார்.

ஒவ்வொரு விமர்சகரும் ஒரு ரகம்.

Boston Bala said...

பாடல் வெளியீட்டு விழா... படம்... நூறாவது நாள் விழாவுக்கு போகும் வாய்ப்பு உண்டா ;)

பிச்சைப்பாத்திரம் said...

கார்த்திக் பிரபு:

நன்றி.

பிரசன்னா:

பாலச்சந்தரின் பெரும்பான்மையான படங்களில் இருந்த நாடகத்தன்மை வசந்த்தின் படங்களில் அவ்வளவாக இருக்காது என்பதே என் அவதானிப்பு. தனக்கென ஒரு பாணியை நிறுவிக் கொள்வதென்பது படைப்புலகில் கடினமான கடினமான காரியம். வசந்த் அதை முதல் படத்திலேயே சாத்தியமாக்கினார் என்று நான் கருதுகிறேன். பிற்பாடு அவர் எடுத்த சில வணிகப்படங்களை தவிர்த்துப் பார்த்தால், நீ பாதி நான் பாதி, ரிதம், அப்பு போன்ற படங்களை சிறந்த படங்களாகவே எனக்குத் தோன்றுகிறது.

சிவகுமார், எனக்கும் பிடித்தமான நடிகரல்ல, சிந்து பைரவி போன்ற படங்களைத் தவிர்த்து பார்த்தால். ஆனால் நான் குறிப்பிட முனைந்தது, கதாநாயக அலட்டல்கள், அல்டாப்புகள் ஆகியவைகளை ஒதுக்கி விட்டு தரப்பட்ட பாத்திரத்திற்குள் தன்னை இயல்பாக பொருத்திக் கொள்கிற இமேஜ் பராமரிக்காத நடிகர்களில் அவரும் ஒருவர்.

கடைசி கேள்வி குறித்து: "என்ன அபத்தமான கேள்வி இது?" :-)

நந்தா:

பாடல் வரிகளை அப்படியே படமாக்குவது என்பது பழசாகிப் போன விஷயம்தான். டி.ராஜேந்தர் படங்களில் இதயம் என்கிற வார்த்தை வந்தால் மெகா சைஸ் இதயங்களை வைத்து செட் போட்டு அலர்ஜியை ஏற்படுத்தியிருப்பார். என்றாலும் சம்பந்தப்பட்ட காட்சி, பாடல் வரிகளுக்கேற்ப எடுக்கப்பட்டிருக்கப்பட்டதால் என்னுடைய கற்பனையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

பாலாஜி:

-)

ஒலிபெருக்கி said...

உங்களின் ரசிப்புத் தன்மைக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் பார்த்து ரசித்துச் சென்ற காட்சிகளாட்டும் குற்றம் சொல்லும் காட்சிகளாகட்டும் மிகச்சரியான ஒரு ரசிகனை பிரதிபளிக்கிறது. உண்மையில் கதை சொல்லலில் உள்ள அந்த குறைபாடுகள் ஏற்புக்குறியதே ஆனால் இங்கே, அவருடைய முந்தைய படங்களை ஒப்பிட்டு பார்த்து அதில் இருக்கும் இயல்பு இல்லை, இரண்டாம் பாகம் வலுவிழந்த தொலைகாட்சி தொடாராய் நகர்கிறது... என்று நல்ல ரசனைக்கு வழிகோலும் நீங்கள் நித்தின் சத்தியாவிற்கு பதில் மற்றவர்கள் நடித்திருக்கலாம் எனும் போதும் அவளுக்கு நடிப்பே இல்லை என்று பத்மபிரியாவை சொல்லும் போதும்(நடிப்பு என்பது நடித்ததே தெரியக்கூடாது என்பது)... உங்கள் உள்ளார்ந்த நாடக ரசிகர் வெளிப்படுகிறhர். இதனை தவறென்று நான் சொல்லவில்லை இது தான் நமது தமிழ்நாட்டு மக்களின் மனநிலை அதனால் இவர் போன்ற நல்ல இயக்குனர்களுக்கு திரைப்படம் எடுப்பதில் குழப்பம் நேறுகிறது.(இந்த படத்திற்கு பாடல் தேவையில்லை என்று சொல்லும் போது உங்களிடம் நல்ல சினிமா வரவேற்பு பெறும் என்று நம்புகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

கினிமா:

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

வணிகப்படங்கள் எல்லா நாட்டிலும் மொழியிலும் வந்துக் கொண்டுதானிருக்கின்றன என்றாலும் அதற்கு இணையாக உலகத்தரத்திலான மாற்று முயற்சிகளும், வித்தியாசமான திரைப்படங்களும் பயணிக்கின்றன. ஆனால் தமிழின் சாபக்கேடு, சற்றே வணிகப்படங்களிலிருந்து விலகி நிற்பவைகளையே நாம் சிறந்த படமென்று கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கியமான சூழலில் நிற்கிறோம்.

இந்தப்படமென்று இல்லை, எந்த திரைப்படத்திலும் பாடல்கள் அநாவசியம் என்பதே என் பார்வை.

அபுல் கலாம் ஆசாத் said...

//கதாநாயக அலட்டல்கள், அல்டாப்புகள் ஆகியவைகளை ஒதுக்கி விட்டு தரப்பட்ட பாத்திரத்திற்குள் தன்னை இயல்பாக பொருத்திக் கொள்கிற//

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி தவிர்த்து அனைவரும் அப்படித்தான் இருந்தார்கள்.
கதாநாயக அலட்டல்கள் தமிழ்த்திரையில் எழுபதுகளின் இறுதியில்தானே வரத்துவங்கின....எம்.ஜி.ஆர். ஒதுங்கிய பிறகு. (மு.க.முத்து விதிவிலக்கு)

பிரசன்னா, சொல்றத சரியா சொல்லுங்க. ஏய் நீ அழகா இருக்கே நல்ல படமா? டப்பா படமா? தொங்கல்ல வுட்டா எப்படி?

அன்புடன்
ஆசாத்

ஹரன்பிரசன்னா said...

பாய், சிநேகா நடிச்சதால அது டப்பா படமாவாவது ஆச்சு. இல்லேன்னா இன்னும் மோசமாயிருந்திருக்கும். :)) சந்தோஷமா இருங்க.

கார்த்திக் பிரபு said...

hi add me my page link in ur blog

its a googlepage for tamil free e books

http://gkpstar.googlepages.com/

thanks for adding my page

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.