Wednesday, April 28, 2021

Irakal (1985) - பாவத்தின் சம்பளம்


 
 
சமீபத்தில் ஜோஜி என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாட்சியும் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தனின் சமீபத்திய திரைப்படம்.

ஒரு முதியவரின் மரணத்திற்காக அவரது வீட்டிலுள்ள உறவினர்கள் வெவ்வேறு வெறுப்புகளுடன் காத்திருக்கும் மனத்தத்தளிப்புகளையும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் மனவிகாரங்களையும் நுட்பமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தது ‘ஜோஜி. ஒளிப்பதிவு, பின்னணி இசை, குறிப்பாக ஃபகத் பாசிலின் நடிப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

இந்தச் சமயத்தில்தான் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘இரகள்’ படத்தை சில நண்பர்கள் கவனப்படுத்தினார்கள். பார்த்தேன். (யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது) ஜோஜியை விடவும் பல மடங்கு உயர்ந்த படம் என்று ‘இரகள்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஜார்ஜ் இதை எண்பத்தைந்தாம் வருடத்திலேயே இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தருகிறது.

ஜோஜியைப் போலவே ‘இரகளும்’ ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ என்கிற குறுநாவலை மெலிதாக நினைவுப்படுத்துகிறது.  பணக்கார முதியவர், அவரை உள்ளூற வெறுக்கும் இளைய மகன்கள், ரப்பர் தோட்டம் போன்ற சில பின்னணிகள் மட்டும் பொருந்திப் போகின்றன.

*

‘இரகள்’ திரைப்படத்தை மலையாளத்தின் முதல் ‘டார்க் மூவி’ என்கிறார்கள் இருக்கலாம். மனதின் இருண்மைகளை, அதன் சிக்கலான பக்கங்களை,  அகவிகாரங்களை அதிகம் மெனக்கிடாமல் இயல்பான காட்சியமைப்புகளைக் கொண்டு அதே சமயத்தில் மிக ஆழமாக பார்வையாளனுக்கு கடத்திய விதத்தை ஜார்ஜின் மேதைமையாக பார்க்கலாம்.

மாத்யூஸ் என்கிற ரப்பர் தோட்ட முதலாளிக்கு மூன்று மகன்கள். மூத்தவன் முரடன். தகப்பனைப் போலவே சட்ட விரோதமான வழிகளில் பணம் சம்பாதிக்கும் வெறியில் இருப்பவன். தகப்பன் எட்டடி பாய்ந்தால் இவன் பதினாறு அடி பாய்கிறான். தந்தைக்கு இதைக் கண்டு உள்ளூற பெருமை.

அடுத்த மகன் குடிகாரன். அவனுக்கு ரப்பர் தோட்ட சூழலில் வாழவே பிடிக்கவில்லை. மனைவியின் உபதேசப்படி அங்கிருந்து இடம் பெயர்ந்து நகரத்தில் வாழ நினைக்கிறான். ஆனால் முரட்டுத் தந்தை அதற்கு இடம் தருவதில்லை. ‘வெளியே போனா சல்லிக்காசு கிடையாது’ என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அதற்குப் பணிந்திருக்கிறான்.

மூன்றாவது மகன்தான் இந்தத் திரைப்படத்தின் உத்தேசமான ஆன்டி ஹீரோ எனலாம். கல்லூரி மாணவன். ஆனால் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறான். கொலைகள் உட்பட. ஆம். கொலைகள்.

கல்லூரி ராகிங்கில் சக மாணவனை கடுமையாக காயப்படுத்தி விட்டு அதைப் பற்றி வீட்டில் எதையுமே பேசாமல் முடங்கிக் கிடக்கிறான். காவல்துறை வந்து விசாரிக்கும் போது கூட அலட்சியமாக பதில் சொல்கிறான். வழக்கம் போல் காசையும் தன் செல்வாக்கையும் விசிறியடித்து வழக்கை மூடி மறைக்கிறார் தந்தை. (திலகன்).

சொல்ல மறந்து போனேன். மாத்யூஸிற்கு ஒரு மகளும் உண்டு. (ஸ்ரீவித்யா) Spoiled child-க்கிற்கு சரியான உதாரணம். வீட்டிற்குள் நுழையும் போதே ‘யப்பா..’ என்கிற ஒப்பாரியுடன் வரும் இவள், தன் கணவனைப் பற்றி கண்டபடி பொய் சொல்லி புலம்புவது வழக்கம்.

தன்னுடைய பிள்ளைகளின் கீழ்மைகளை கண்டிக்காமல் அதை ஊக்கப்படுத்துவது போலவே செயல்படுகிறார் மாத்யூஸ். தன்னிடமுள்ள பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு எதையும் கீழே போட்டு மிதிக்க முடியும் என்கிற அகங்காரத்தைக் கொண்டிருக்கிறார்.

மாத்யூஸின் மனைவி ஓர் அப்பிராணி. கடவுள் பக்தி மிக்கவர். ‘நீங்க செய்யறது ஒண்ணும் நல்லால்ல’ என்று கணவருக்கு எதிராக சற்று முனகி பிறகு அவருக்கு அஞ்சி அடங்கிப் போவதோடு அவரது இருப்பு முடங்கிப் போகிறது. இந்த நல்ல பெண்மணியின் சகோதரர் சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார். (பரத் கோபி) மிதமிஞ்சிய செல்வமும் அதிகாரமும் இருக்கும் மிதப்பில் இந்தக் குடும்பம் உள்ளூற புரையோடுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் பாதிரியார். சிக்கலான நேரங்களில் வந்து மாத்யூஸிற்கு புத்தி சொல்கிறார். ஆனால் எவையும் இவர்கள் செவி மடுப்பதில்லை.

*

‘இரகள்’ என்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொருள். பணம், அதிகாரம், புகழ் போன்வற்றைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் மனதார வெறுக்கிறார்கள். குறிப்பாக அதன் தலைமையின் மீது. ஆனால் அதை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். தன்னுடைய ஆளுமையின் கீழேதான் ஒட்டுமொத்த குடும்பமும் அடங்கியிருக்க வேண்டும் என்கிற கண்டிப்பை ஒவ்வொரு காட்சியிலும் நிலைநிறுத்துகிறார் மாத்யூஸ். (இந்தத் திரைப்படத்தை இந்திரா காந்தி – சஞ்சய் காந்தி என்கிற நோக்கிலும் சில விமர்சகர்கள் காண்கிறார்கள்).

மூன்றாம் மகனான பேபி மாத்யூஸ் மட்டுமே அங்கு கலகக்காரனாக இருக்கிறான். தனது எதிர்ப்புணர்ச்சியை துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறான். தனது தந்தை லாப வெறி கொண்டு பல்வேறு வணிக கீழ்மைகளில் ஈடுபதை அவன் மனதார வெறுக்கிறான். அந்தக் குடும்பத்தில் உள்ள போலித்தனமும் பாசாங்கும் அவனை பித்துப் பிடிக்க வைக்கிறது.

தன் கழுத்தில் தானே கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை பாவனைகளை மேற்கொள்ளும் அவன் ஊசியால் விரலில் காயம் ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சுயவதைகளையும் மேற்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இவனது மனப்பித்து பெருகி இவனை ஒரு சீரியல் கில்லர் ஆக்குகிறது.

கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி பிறந்து வீட்டிற்கு வரும் இவனது சகோதரி, வேலைக்காரனுடன் கள்ள உறவு கொள்வதை ரகசியமாகப் பார்க்கும் பேபி, முதலில் வேலைக்காரனைக் கொல்கிறான். பிறகு தன்னுடைய காதலிக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளை, நெருங்கிய நண்பன் என்று இவனது மரண வேட்டை தொடர்ந்தபடியே இருக்கிறது. 
 
 

 
‘குடும்பம்தான் இருப்பதிலேயே ஆகப்பெரிய வன்முறை நிறுவனம்’ என்கிற நிர்வாண உண்மையை பல காட்சிகளில் நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ். சமூகம் கூட பிறகுதான். முதலில் குடும்பம்தான் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது. குற்றத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறது. இதன் சிறந்த உதாரணம் பேபி.

பேபி எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களும், மனவிகாரங்களும், சுயஅவஸ்தைகளும், உயிர்களை வேட்டையாடும் வேட்கையும் மிக நுட்பமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல்வேறு பாவங்களின் மூலம் அந்தக் குடும்பம் சேர்க்கும் செல்வம்தான் பேபியின் தலையில் வந்து விடிகிறது எனலாம். அவன் கொலைகளைச் செய்யும் ஆபத்தான பேர்வழியாக இருந்தாலும் இன்னொரு நோக்கில் அனுதாபத்துக்குரியவனாகவே தெரிகிறான்.

தனது தந்தை மேத்யூஸ் அதிகாரச் செருக்கில் முழங்கும் போதெல்லாம் பேபிக்கு மனம் கூசுகிறது. மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவரை உள்ளூற வெறுக்கிறான். அந்த அலைக்கழிப்பே அவனை கொலைகாரனாக்குகிறது. இதர சமயங்களில் தனது தாத்தாவை பாசத்துடன் போஷிக்கும் நல்ல பேரனாகவே இருக்கிறான். இது சார்ந்த காட்சிகளும் வருகின்றன.

அந்தக் குடும்பம் செய்யும் பாவமானது எப்படி அடுத்தடுத்த பரிணாமங்களில் வளர்கிறது என்பது ஒரு காட்சியில் நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டின் மூலையில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் மாத்யூஸின் தந்தை ‘மாதாவே.. மாதாவே’ என்று பெரும்பாலான நேரங்களில் முனகியபடியே இருக்கிறார்.

அவர் ஒருமுறை பேபியை அழைத்து பேசும் போது சொல்கிறார். “நான் இங்க இருக்க காட்டை அழிச்சிருக்கேன். ஆனா மிருகங்களை கொன்னதில்லை. ஆனா உங்கப்பன் எல்லா மிருகத்தையும் சாகடிச்சிருக்கான்”

அடிப்படை உணவு உற்பத்திக்கான விவசாயம் என்பது மெல்ல மெல்ல குறைந்து மிகையான லாபம் சம்பாதிக்க உதவும் ரப்பர் போன்ற பணப்பயிர்கள் பெருகி நம் மண்ணையும் விவசாயத்தையும் எப்படி சூறையாடுகிறது என்பது நேரடியாக அல்லாமல் பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. 



இந்தக் குடும்பத்தின் ஆணவ மிக்க தலைவராக திலகன் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தனக்கலர் வேட்டி ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும் கையில் ஒரு சூட்கேஸூமாக பெரும்பாலான காட்சிகளில் தோன்றும் திலகன், உலகத்திலுள்ள எதையும் வாங்கி விடும் தன்னம்பிக்கையுடன் பேசும் காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன.

கல்லூரி மாணவன் பேபியாக கே.பி.கணேஷ்குமார் நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அதன் சுவடே தெரியாமல் இவரின் பங்களிப்பு நிறைவாக அமைந்துள்ளது. உறைந்து போன மென்சோக முகபாவத்துடன் இவர் செய்யும் காரியங்களை திகிலைக் கிளப்புகின்றன.

மாத்யூஸின் கணக்குப் பிள்ளையாக வரும் இன்னொசென்ட், ஒரு விசுவாசமான வேலைக்காரனை துல்லியமாக பிரதிபலித்துள்ளார். தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பலவற்றை எப்படி அணுக வேண்டும் என்பதை அறிந்தவராக உள்ளார் இன்னொசென்ட்.  ஆனால் ஒரு நல்ல முதலாளியின் லட்சணமாக, கணக்குப்பிள்ளையை எங்கே நிறுத்த வேண்டும் என்பது திலகனுக்குத் தெரிந்திருக்கிறது.

பணக்காரக் குடும்பத்தின் செல்லத்தால் சீரழிந்த ஒரு பெண்ணை தத்ரூபமாக சித்தரித்துள்ளார் ஸ்ரீவித்யா. தமிழ்த் திரைப்படங்களில் நாம் காணக்கூடிய ‘குடும்ப குத்துவிளக்கு’ வித்யா இல்லை. இவர் வேறு. சற்று வில்லங்கமான பாத்திரத்தை துணிச்சலாக ஏற்றுள்ளார். வீட்டுக்குள் நுழையும் போது ‘யப்பே’ என்று புலம்பியபடி கணவரைப் பற்றிய புகார்களை அடுக்கும் காட்சி துவங்கி வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பதார்த்தங்களை தின்று தீர்ப்பது வரை பல காட்சிகளில் இவரது நடிப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

ஸ்ரீவித்யாவின் கணவராக நெடுமுடிவேணு சில காட்சிகளில் வந்து போகிறார். சொற்ப காட்சிகளில் வந்தாலும் ஓர் அடங்காப்பிடாரியை மனைவியாக கட்டிக் கொண்ட துயரத்தை சிறப்பாக காட்டி விடுகிறார். மாமனரால் அடித்து விரட்டப்பட்டு இவர் கலங்கியபடி வீட்டை விட்டு வெளியே வரும் பரிதாப காட்சியானது நெடுநாள் மனதில் நிற்கும். (தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்து வெளியான ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் காட்சியும் கூடவே நினைவிற்கு வந்து போனது).

இரண்டாவது மகனாக சுகுமாரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பேபி மாத்யூஸை காதலிக்கும் பெண்ணாக ராதா சில காட்சிகளில் வந்து போகிறார். சிறு சிறு பாத்திரங்களையும் எப்படி அவசியத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும் என்பது இயக்குநர் ஜார்ஜிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

சிதறிக் கொண்டிருக்கும் மனதின் சிறுசிறு துண்டுகளை மிக கவனமாகப் பொறுக்கி காட்சியாக்குகிறார் ஜார்ஜ்.

திலகனின் குடும்பம் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதமிஞ்சிய அளவைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஒருவருமே நிம்மதியாக இல்லை. பணத்தை ஈட்டுவதே வாழ்க்கையின் வெற்றி என்கிற மிதப்பிலும் ஆவணத்திலும் இறுமாந்திருக்கும் திலகனும் கடைசியில் ஓய்ந்து விடுகிறார். ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிற வார்த்தையுடன் படம் நிறைகிறது.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி.. பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’ என்கிற பாடல் வரிதான் இந்தத் திரைப்படம் முழுக்க எனக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. பல பேர்களின் வாழ்க்கையை அழித்து கட்டப்படும் மாளிகையானது வெளியில் இருந்து பார்க்க பளபளப்பாகவும் பிரம்மாண்டாகவும் இருந்தாலும் அது உள்ளுக்குள் மெல்ல மெல்ல அழுகி புரையோடிக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை ஜார்ஜ் மிக திறமையாகச் சித்தரித்திருக்கிறார்.

அதுதான் இந்தத் திரைப்படம் சொல்ல வரும் நீதியா என்பது எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்.

தனது சகோதரனான சர்ச் பாதிரியாரிடம், திலகனின் மனைவி துயரத்துடன் புலம்புகிறார். ‘தெய்வம் ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகளைத் தருகிறது?”

அதற்கு பாதிரியார் சொல்லும் பதில்: “தெய்வம் எந்தச் சோதனையையும் தருவதில்லை. அனைத்துமே மனிதர்கள் உருவாக்கிக் கொள்வதுதான்”.

suresh kannan


ஓடும் ரயிலில் ஒரு நிற்காத வம்பு

 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூன்றாவது நிறுத்தத்திற்கு முன்பாக ஏறினேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறுவன். எதிர் இருக்கையிலிருந்த சிறுமி அந்தக் காலி இருக்கையின் மேல் கால் வைத்திருந்தது. வெயில் தந்த எரிச்சலில் 'எடும்மா' என்றேன் மென்அதட்டலாக. என்னை ஒரு மைக்ரோ செகண்ட் வெறுப்புடன் பார்த்தது.

என்ன இருந்தாலும் சிறுமிதானே? ரயிலில் வரும் காண்டாமிருகங்களே ஷூக்காலை தூக்கி இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன் மூலம் சிறுமியைச் சமாதானப்டுத்த முயன்றேன். இருந்தாலும் அம்மணிக்கு கோபம் போகவில்லை. என்னைக் குறுகுறுவென்று பார்த்தவாறிருந்தது. 
 
என்னுடைய மகளின் நினைவு வந்து போயிற்று. அவளும் அப்படித்தான். வழியில் இப்படி அவளிடம் யாராவது குறும்பு செய்தால் அங்கு அடக்கி வாசித்து வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி புலம்பித் திட்டி தீர்த்து விடுவாள். எனவே எனக்கு உள்ளுற சிரிப்பு வந்தது.

எழுத வந்தது இதுவல்ல. சிறுமியின் பக்கத்திலிருந்த அவர்களின் தாய். யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டே...... இருந்தார். நிச்சயம் குடும்ப அரசியல். அது சார்ந்த வம்பு. தொலைக்காட்சி சீரியல்களில் கேட்டுப்பழகிய தொனியில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் அவரின் மகன் போலும். சற்று எரிச்சலுடன் தாயின் நீண்ட தொலைபேசி உரையாடலை பார்த்துக் கொண்டேயிருந்தான். பின்பு மெல்ல "பேசின் பிரிட்ஜ் வரப் போகுதும்மா" என்றான். தாயின் கவனத்தைக் கலைப்பதே அவனுடைய நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பேசின் பிரிட்ஜ் நிறுத்தம் வர குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பது தினமும் போகும் அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.
 
சிறுவனின் எச்சரிக்கையைக் கேட்டதும் தாயும் சற்று பதட்டத்துடன் 'பையை எடுத்து வெச்சுக்கோ' என்பது போல் சைகை காட்டினார். அப்போதும் உரையாடலை நிறுத்தவில்லை. 

ஒருவழியாக பேசின்பிரிட்ஜ் வந்தது. பையன் பையை எல்லாம் தூக்கப் போக தாயாரோ 'இரு. இரு.. ' என்று சைகை காட்டி உரையாடலைத் தொடர்ந்தார்.
 
"ஒண்ணு வூட்டை எழுதி வை.. இல்லைன்னா.. 20 லட்சம் கொடுன்னு சொல்றாங்களாம்.. அவங்க நாத்திதான் சொன்னா.... என்ன அநியாயம் பாரேன்.."

இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று பதைபதைப்பு எழுந்தது. ஒருவேளை பேசின் பிரிட்ஜில் இறங்க வேண்டிய அவர்கள், அம்மணியின் உரையாடல் சுவாரசியத்தில் தவற விட்டார்களோ என்று தோன்றியது.  எச்சரிக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. அவர்கள் சென்ட்ரலில்தான் இறங்க வேண்டும் போல. தாயாரின் சாவகாசமான உடல்மொழியில் இருந்து அப்படி தெரிந்தது. எனக்கும் சற்று நிம்மதி.

தாயார் எப்போது  உரையாடலை முடிப்பாரோ என்று சிறுவன் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். பொறுப்புள்ள சிறுவன்தான் போல. பைகளை தயாராக கையில் வைத்திருந்தான். அவனின் பொறுமையின்மை எனக்குள்ளும் பரவி விட்டதுதான் ஆச்சரியம். அம்மணியின்  உரையாடல் அந்த லட்சணத்திற்கு நீண்டது.

சிறுமிக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அது பாட்டுக்கு ஜன்னலின் வெளியே பராக்கு பார்த்தபடி அவளின் பிரத்யேக உலகத்தில் ஆழ்ந்திருந்தது. சமயத்தில் என்னை நோக்கி ஒரு குறுகுறு. நான் புன்னகையை மறைத்து அவளைக் கவனிக்காமலிருக்க சிரமப்பட்டேன்.

சிறுவனின் பொறுமையின்மையையும் தாயின் நீண்ட வம்பு உரையாடலையும் மாற்றி மாற்றி பார்க்க எனக்கே சுவாரசியமாகத்தான் இருந்தது. சமயங்களில் அந்த தாயாரின் முகத்தையும் சற்று குறும்போடு பார்த்தேன். அப்பவாவது உரையாடலை முடிப்பாரோ என்கிற நப்பாசையோடு. எனக்கு தொடர்பில்லாததுதான். இருந்தாலும் சிறுவனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. ம்..ஹூம்.. அவர் பாட்டுக்கு கைபேசி உரையாடலில் சுவாரசியமாக இருந்தார்.

ஒருவழியாக சென்ட்ரல் நிறுத்தம் நெருங்கியது. சிறுவனும் சிறுமியும் ஏறக்குறைய எழுந்து நின்று விட்டார்கள். அப்போதும் உரையாடலைத் துண்டிக்க மனமின்றி விடைபெற்றுக் கொண்டு அந்த அம்மணி சொன்ன கடைசி வாக்கியம்தான் என் வாயிலிருந்து புன்னகையை வெடிக்க வைத்து விட்டது.  

"சென்ட்ரல் வந்துடுச்சுக்கா.. எறங்கப் போறேன். சரியா பேச முடில. கீழ இறங்கிட்டு திரும்பவும் போன் போடறேன்”

எதே!

suresh kannan