Thursday, January 13, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)


எனது இந்த வலைப்பதிவு குறித்து நானே பெருமையாயும் ஆச்சரியமாயும் நினைக்குமளவிற்கு புத்தகக்காட்சியில் சில சம்பவங்கள் நடந்தேறின.(?!) 'நீங்கள் புத்தகக்காட்சி அனுபவம் குறித்து ஏன் இன்னும் எழுதவில்லை' என்றும்,  என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர். (கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்).

ஒவ்வொரு வருடமும் ஏற்படுவது போல் இம்முறையும் புத்தகக்காட்சிக்கு செல்வதற்கு சில மனத்தடைகள் இருந்தன. நான் எப்போதுமே மந்தையிலிருந்து விலகி ஓட விரும்பும் ஆடு. இப்போது புத்தகக்காட்சிக்கு செல்வதென்பது, கடுமையான விதிகள் பல நீர்த்துப் போனதொரு சமகால சபரிமலை பயணம் போல் ஒரு பேஷனாகி விட்டதோ எனத் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு ஆன்மீகமும் ஆயிற்று, சுற்றுலாவிற்கு சுற்றுலாவும் ஆயிற்று, தான் ஒரு பக்திமான என்று சமூகத்திற்கு நிருபித்தது போலவும் ஆயிற்று என்பது போல் தன்னை வாசிப்பாளனாகவும் காட்டிக் கொண்டு சமையல், ஜோதிடம், போலி ஆன்மீக புத்தகங்களை வாங்கிக் கொண்டு கேண்டீனில் புத்தக பட்ஜெட்டுக்கு அதிகமான செலவில் ஒரு வெட்டு வெட்டி விட்டுத் திரும்பினால் முடிந்தது ஒரு சமூகக் கடமை. சமையலும் ஜோதிடமும் மாத்திரம் புத்தகங்களில்லையா என்ற கேள்வி வாசிப்பவருக்கு எழக்கூடும்.  தவறில்லை. ஆனால் நம்முடைய லெளதீகத் லெளகீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயங்கள் தொடர்பான எல்லையோடு நின்றுவிடும் அந்த மேலோட்டமான தேடல்தான் சலிப்பூட்டுகிறது. அதையும் தாண்டி பரந்து கிடக்கிற பல விஷயங்களை தாண்டிச் செல்லும் அந்த அலட்சியமும். இந்தக் கூட்டத்தோடு நாமும் சேர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஈகோ அதிகபட்ச டிகிரியில் அலறியது.  (இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது).

கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற மனஉந்துதல் இல்லாததாலும் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களே 99.9% இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பதாலும் (வாங்கின புதிதில் புரட்டிப் பார்த்ததால் ஒரு 0.1சதவீதத்தை கழித்து விட்டேன்) முந்தைய வருடங்களைப் போல் எதை வாங்க வேண்டும் என்கிற கறாரான திட்டம் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒர் அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பினேன்.

()

புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில்.

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்


உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அபாயமாக சாலையைக் கடந்து புத்தகக் காடசிக்கு சென்று கொண்டிருந்த மக்களின் புத்தகார்வத்தை பார்க்க கண்ணீர் மல்கியது. 'எங்கடா தம்பி வந்த?" என்று பிளெக்சில் இருந்து எழுத்தாள பெருந்தகைகள் பெரிய சைஸில் வாசலிலேயே மிரட்டுகிறார்கள். உம்மாச்சியை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு  ஓடிச் சென்று அனுமதிச்சீட்டை வாங்கினேன். (அஞ்சு ரூபா சில்லறையா கொடுங்க' என்று பத்து பேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்).

இங்கிபிங்கிபாங்கி போட்டு இடது பக்கத்தை தேர்வு செய்து (நான் எப்போதுமே இடது சார்பாக்கும்) சென்றேன் துவக்கத்திலேயே தினத்தந்தி அரங்கம். தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் பா.ராகவனின் அழுத்தமான பரிந்துரை காரணமாக எந்த யோசிப்புமில்லாமல் 'வரலாற்றுச் சுவடுகள்' நூலை வாங்கினேன். பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.

என்னுடைய இரண்டு வயதில் பக்கத்து வீட்டிலிருந்த வெள்ளிக் கரண்டியை எடுத்து விழுங்கி விட்டேனாம். Born with neighbour's silver spoon. இந்த முக்கியமான வரலாற்றுத்தகவல் மாத்திரம் இந்த  நூலில் இல்லாவிட்டால் பாராவிடம்  சண்டை போட்டாவது ரூ.270/- ஐ திரும்ப வாங்க உத்தேசம். பெயர், முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்தார்கள். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த பதிப்பில் என் வீட்டு முகவரியும் வரக்கூடும் போலிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் இதை கடைசியாக வைத்துக் கொள்வது உததமம். ஜீன்ஸ் பட காலத்து ஐஸ்வர்யாவை முதுகில் சுமந்துச் செல்வது போல் புத்தகத்தின் எடை இன்பச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நூலகத்தில் இருந்து இப்படிப்பட்ட தடிமனான புத்தகமாக தேடி எல்லோருக்கும் தெரியும்படி பேருந்தில் பெருமையாகச் செல்வேன். கைக்குழந்தை போல் இதைத் தூக்கிக் கொண்டே மற்ற அரங்குப் புத்தகங்களை பார்க்க இம்சை. வில்லன் பொன்னம்பலம் சைஸில் உதவியாள் அழைத்துச் செல்வது இன்னும் உத்தமம்.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் இதைத்தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உயிர்மை ஸ்டாலை கண்டவுடன் சந்தாவை புதுப்பித்துக் கொண்டேன். மனுஷ்யபுத்திரன் ஒரு வாசகரிடம் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடைய நான் (நம்புங்க) சுயஅறிமுகம் செய்து கொண்டு உரையாட விரும்பும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்கள் என்னை ஆத்மார்த்தமாக ஈர்த்திருந்தால் ஒழிய அதைச் செய்ய மாட்டேன். கவிதை எனும் வடிவத்தை காலால் நடக்க ஆரம்பித்த பருவத்திலிருந்தே என்னால் விரும்பமுடியவில்லை என்றாலும் மனுஷயபுத்திரன் உரைநடை எனும் சமாச்சாரத்தை கையாளும் லாவகத்திற்கு ரசிகன் நான். உயிர்மையில் முதலில் நான் வாசிப்பது தலையங்கமே. வாக்கியங்களை அத்தனை கச்சிதமான சொற்களுட்ன் அவர் அமைப்பதை பல முறை வியந்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களுக்கு கைவராத சமாச்சாரம் இது. உதாரணமாக வைரமுத்து எழுதும் உரைநடையைப் பார்த்தால் கவிதைக்கும் உரைநடைக்கும் நடந்த திருட்டுக் கல்யாணம் போலிருக்கும். எனவே மனுஷ்யபுத்திரனை அணுகி உரையாடுவதில் எனக்கு பெரிதளவில் தயக்கம் ஏற்படவில்லை. " சார் வணக்கம். நான்... இந்த பெயரில் எழுதுகிறேன்.."  "வாசிச்சிருக்கேன்" என்றார். "உங்க நூல் விழா பற்றியெல்லாம் திட்டி எழுதியிருக்கேங்க" " இருக்கட்டும் அப்படியும் இருந்தால்தானே ஒரு சுவாரசியமிருக்கும்".

முதலில் நான் அவரிடம் வியந்த உரைநடை அம்சம் பற்றியே கேட்டேன். பாரதி, லா.ச.ரா., சு.ரா., சுஜாதா ஆகியோர்களை ஆதர்சமாகக் கொண்டிருப்பதால் இது அமைந்திருக்கலாம் என்றார். "திரும்பத் திரும்ப எடிட் செய்வீர்களா?" என்றேன். " ஒரு விஷயம் உங்களை அதிகஅளவில் பாதித்தால் அதனை எழுதுகிற வடிவம் முழுதும் ஏறத்தாழ மனதிலேயே உருவாகி விடுகிறது. எனவே முதன் முறையிலேயே அதை எழுதி விடுவேன். பெரும்பாலும் மீண்டும் வாசித்து திருத்துவதில்லை" என்கிற ரீதியில் சொன்னார்.

அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?. கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டுமென்றே அவசர கதியில் அரையும் குறையுமாக உருவாக்கப்பட்ட பிரதியென்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(வரும்)

image courtesy: original uploader

suresh kannan

Friday, January 07, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)

பகுதி 1   |   பகுதி 2  பத்ரியின் வீடியோ பதிவு 

எழுத்தாளர் ராஜேந்திர சோழன்
அதுவரை இறுக்கமாக இருக்கும் அரங்கு சில பேச்சாளர்கள் ஆரம்பித்தவுடன் இறுக்கம் தளர ஆரம்பிக்கும் அல்லவா? எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு அவ்வாறாக இருந்தது. பேச்சின் இறுதியில் மக்கள் போராளியான மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை மீதான கண்டனத்தை பதிவு செய்தது முக்கியமானது. 'எழுத்தாளர்கள் சமகால அரசியலில் இருந்து விலகி இருக்கக்கூடாது' என்கிற ஞாநியின் கருத்தை இவரும் எதிரொலித்தார்.

ராஜேந்திர சோழன் பேச்சின் ஒரு பகுதி குறித்து யோசித்தேன். 'தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் என்பதின் செயல்பாடுகள் அதீதமாகி (பகுத்தறிவு வேண்டாமென்று சொல்லவில்லை) எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்கிற பெயரில் மறுத்து தம்முடைய தொன்மங்களிலிருந்தும் பழங் கலாசாரங்களிடமிடமிருந்தும் தமிழன் துண்டிக்கப்பட்டு கிடக்கிறான்' என்பது இவர் பேசியது. வீடு திரும்பும் வழியில் இது பற்றி சிவராமனிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தேன். ராஜேந்திர சோழனின் தமிழ் தேசியப் பின்னணி ஆர்வம் குறித்து சிவராமன் விளக்கினார். (இது பற்றி மாத்திரமல்லாமல் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதச் சொல்லி அவரைக் கேட்டுக் கொண்டேன். செய்வார் என நம்புகிறேன்). 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
விழாவின் இறுதியில் ஜெயமோகன் உட்பட பார்க்கிறவர்களிடமெல்லாம் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். தானே இயற்றிய பாடலொன்றை கணீரென பாடிய குணசேகரன் தென் ஆற்காட்டின அசலான வட்டார மொழியில் கிராமத்து வெகுளித்தனத்துடன் உரையாடியது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. அவரின் பேச்சு, எழுத்தாளன் என்கிற நிலையைத் தாண்டி ஒரு சம்சாரியின் பேச்சு என்பதாகத்தான் கொள்ள வேண்டும். வெளியில் தரப்படும் விருதுகளை விட வீட்டில் (மனைவியிடம்) வாங்கும் விருது பிரதானமானது என்றதோடு பரிசு குறித்த அவரது எதிர்பார்ப்புகளும் பொருளாதாரம் சார்ந்த எளிய வேண்டுகோள்களாக இருந்தன. 'நாஞ்சில் நாடனுக்கு ஏன் எங்கும் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சலுகையை வழங்கக்கூடாது' என்றார். (குணசேகரன் போக்குவரத்து கழகத்தில் பணிமனை ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது). சாகித்ய அரசு விருதின் பரிசுத் தொகை குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

'ஏதோ பாக்கறதுக்கு முன்சொட்டை விழுந்து சாதாரணமா இருக்கறேன்னு நெனச்சுடாதீங்க. நானும் விஷயம் உள்ளவன்தான். மூணு கவிதத் தொகுதி, நாலு புதினம், ஒரு அகராதின்னு... அடிச்சுன்னு போயிட்டே இருப்பேன். நிக்காது. என்கிற போது அவரின் அசாத்திய தன்னம்பிக்கை இயல்பாக வெளிப்பட்டதும் ரசிக்கும் படி இருந்தது. விழா முடிந்தவுடன் வெளியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அவரிடம் சென்று சுயஅறிமுகம் செய்து கொண்டு 'பட்டாசு மாதிரி வெடிச்சுட்டீங்களே' என்றேன். "ஆமாம். கலக்கிட்டேன்ல' என்று அவரும் இணைந்து யாரையோ பாராட்டுவது போல மகிழ்ந்து சிரித்தார். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்த அவரின் 'கோரை' நாவல் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு சேமித்திருக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகன் தனது உரையில் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் பற்றியும்  குறிப்பாக நாஞ்சில் நாடனின் உணவின் மீதிருக்கும் காதலைப் பற்றியும் பேசினார். 'உப்புமா சாப்பிட்டேன்னு சொல்ல மாட்டார். உளுத்தம்பருப்பு தாளிச்சு கருவேப்பிலை போட்ட உப்புமா சாப்பிட்டேன்னுதான் சொல்வார்".

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஏற்புரை.

 'இந்த வெளிச்சம் கூச்சமா இருக்கு' என்று ஆரம்பித்து பேசி்க் கொண்டிருந்தவரிடம் எந்த நேரத்தில் கும்பமுனி உள்ளே புகுந்தாரோ தெரியாது. சாகித்ய அகாதமி மீது காட்டமான விமர்சனம் வைத்தார். ஏற்கெனவே அவரின் கட்டுரைகளில் எழுதியவைதான். அவர் கண்மணி குணசேகரனின் பேச்சை ரொம்பவும் ரசித்தார் என்பதை கவனித்தேன். விழா முடிவில் மாப்பிள்ளை விநாயகர் போன்று அமர்ந்திருந்த அவரிடம் 'உங்களுக்கு விருது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்' என்று உள்ளபடியே என்னிடமிருந்த மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்தினேன். 'விருதை விட வாசகர்களின் இத்தனை அன்பும் ஆதரவுமே தம்மை நெகிழ்ச்சியடைய வைப்பதாக' சொன்னார்.

சுல்தானுக்கு நினைவுப்பரிசு
விழாவில் நாஞ்சில் நாடனின் இணையத்தளத்தை நடத்தும் சுல்தானை நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்களை இத்தனை ஆர்வமாக தேடிச் சேர்க்கும் இவர் நிச்சயம் இளைஞராகத்தான் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண ஆச்சரியமாக இருந்தது. அதனால் என்ன, மனதால் இளமையானவர் போலும். அவரை தேடிச் சென்று அவரின் உழைப்பையும் ஆர்வத்தையும் பாராட்டினேன்.

தனது பிரத்யேக டிரேட் மார்க் புன்னகையோடு வந்த பத்ரியிடமும் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். 2 மணி நேர வீடியோ எடுத்திருப்பதாக சொன்னார். இயன்றால் அன்றிரவே வலையேற்ற முயலுமாறு கேட்டுக் கொண்டேன்.'பல்வேறு தலைப்புகளில் 'கிழக்கு' பதிப்பகத்தின் புயல் வேக வெளியீடுகளை கவனிக்கும் போது 'மூன்றாம் உலகப் போர்' பற்றிய புத்தகம் கூட டிராஃப்டில் இருக்கும் போலிருக்கிறதே?" என்றேன். மனிதர் ரசித்து வெடித்துச் சிரித்தார்.

பாலுமகேந்திராவை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணனிடம் அவசர ரகசியமாக 'படம் எப்ப வருது?" என்றேன். 'வர்ற பிப்ரவரில வரும். சொல்றேன்' என்றார். பாலுவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 'படித்துறை' என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 'வேணுவனம்' என்கிற வலைப்பதிவில் திருநெல்வேலி நகைச்சுவை கமழும் இவரது கட்டுரைகளை வாசித்து ரசிக்கலாம். அப்படியே சொல்வனத்தில் இவரது அருமையான இசைக்கட்டுரைகளையும். (இவரது திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிந்து திரையரங்கு கிடைக்காமல் காத்திருப்பதை இன்னொருவரிடம் அறிய நேரும் போது வருத்தமாக இருந்தது. எத்தனை படைப்பாளிகளின் திரைக்குழந்தைகள் இப்படி கருவறையிலேயே மூச்சு திணறிக் கொண்டிருக்கிறதோ?).

தனது அட்டகாசமான 'பைப்' இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட சதவீத கவர்ச்சியை இழந்திருந்த பாரதி மணியிடம் சில நிமிடங்கள். அவரின் மிகச் சுருக்கமான உரையைப் பற்றி விசாரிப்பு. "இத்தனை நிமிஷத்துக்குள்ள பேசிடணும்னு சொல்லிட்டாலே எனக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சுடும். அதனால 'நாஞ்சில் நாடனை மற்றவர்கள் பாராட்டுவதை ரசிக்கவே வந்திருக்கிறேன்' என்று சொல்லி அமர்ந்து விட்டேன்" என்றார். "ஆனா நெறைய பேசணும்னு வந்தேன்" என்றவரிடம் "அதனால என்ன, எல்லாத்தையும் எழுதுங்க சார்" என்றேன். தான் ஒரு எழுத்தாளர் என்பதை அழிச்சாட்டியமாக ஏற்க மறுக்கிறார். 'நாடக நடிகர்' என்கிற அடையாளமே போதுமாம். எழுத்துக் கூட்டி எழுத தெரிந்து விட்டாலே தம்மை எழுத்தாளன் என்று எண்ணிக் கொள்ளும் நபர்களுக்கு இடையில் 'சுஜாதா' பாராட்டிய இவர் இப்படி.

இசை விமர்சகர் ஷாஜியிடம் அவரின் மலேசியா வாசுதேவன், மற்றும் ஸ்வாணலதா கட்டுரைகள் பற்றியும் அதன் மொழிபெயர்ப்பு பற்றியும் சில நிமிடங்கள் பேச்சு. 'இணையததில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாசிக்கிறீர்களா?' என்றேன். "ஆம். நெறைய பேரு லிங்க் அனுப்பி வைக்கிறாங்க. அதெல்லாம் ரொம்ப பெரிசா எடுத்துக்கறதில்ல" என்றார்.

நண்பர்கள் சிலரை சில ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அவ்வாறு சந்தித்த எழுத்தாளர் கம் வலைப்பதிவர்களின் பட்டியல் ஒரு ஞாபக சேமிப்பிற்காக.

விழியன் (photography), ஜ்யோவ்ராம் சுந்தர், உருப்படாதது நாராயணன், சங்கர், நிர்மலா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, சிறில் அலெக்ஸ், அரவிந்த், அண்ணா கண்ணன, கே.ஆர்.அதியமான், உண்மைத் தமிழன், அதிஷா. குறிப்பாக 'கலையாளுமை' அரங்கசாமி எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியது என் வாழ்வின் பெரும் பேறு.

விழாவில் 'நாஞ்சில் நாடனின்' சமீபத்திய சிறுகதைகளின் தொகுதியான 'கான்சாகிப்' என்கிற நூலும் வெளியிடப்பட்டது. பாலுமகேந்திரா வெளியிட பாரதிமணி பெற்றுக் கொண்டார்.  முன்பே குறிப்பிட்டது போல் இந்த விழா எனக்கு பெரும் மனவெழுச்சியை அளித்தது. 'எழுத்தாளன் என்பவன் ஒரு சாதாரண அங்கீகாரத்திற்காக தன் இறுதிக்காலம் வரை (அதுவும் அதிர்ஷ்டமிருந்தால்தான்) காத்திருக்க வேண்டிய தமிழக சூழல் எரிச்சலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களின் பணியை செய்து கொண்டிருக்கும் படைப்பாளிகளின் உழைப்பும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்.

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam

suresh kannan