Monday, December 06, 2010

அம்பேத்கர்: அறிவுஜீவி அரசியல்

"இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்."

- அம்பேத்கர், பத்திரிகை தலையங்கத்தில்

 'தசாவதாரம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. மணல் கொள்ளை  அரசியல்வாதியிடம் பர்மிட்டை காண்பிக்கச் சொல்லி ஒரு தலித் அமைப்பு கேள்வி எழுப்பும். "உங்கள்ல படிச்சவங்க யாருடா இருக்கா?" என்பார் அரசியல்வாதி. 'அதெல்லாம் அந்தக் காலம். இப்பம் எங்கள்ல படிக்காதவங்க ஒருத்தனையாவது காமி பாப்போம்" என்று பதிலடி கொடுப்பார்கள். 

இவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே அடித்தளம் போட்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர். இந்தியாவின் தாழ்ததப்பட்ட மக்களின் முதல் பட்டதாரி வழக்கறிஞர்.  வாழ்வின் பெரும்பான்மை முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூக விடுதலைக்காகவும்  சிந்தித்தவர்; போராடினவர். தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா.

அம்பேத்கர் குறித்து NFDC தயாரித்து 1998-ல் உருவாக்கப்பட்டு 2000-ல் வெளியான திரைப்படமொன்று தமிழ் மொழி மாற்றத்துடன் சமீபத்தில் வெளியாகியிரு்ககிறது. 1998-ன் சிறந்தபடத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அம்பேத்கராக நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் நிதின் சந்திரகாந்த் தேசாய்க்கு சிறந்த ஆர்ட் டைரக்டர் விருதும் கிடைத்தன. காந்தி படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற பானு அதையா இதில் பணியாற்றியுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் மூலம் இத்தனை பெரிய ஆளுமையின் முழு பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாதென்றாலும், அறியாமலே இருப்பதற்கு பதிலாக இதிலிருந்து துவங்குவதற்காவது இந்தத் திரைப்படம் உதவும்.  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒர் அமைப்பு  உருவாக்கின படத்தைக் காண மக்களே போராட வேண்டிய அவலமான சூழல். பத்து வருடங்களுக்கு முன்பாகவே உருவான திரைப்படத்தை சமீபத்தில்தான் காணும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு, அதுவும் சொற்ப திரையரங்குளில், காலை நேரத்தில். சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி.

கோடிக்கணக்கான ரூபாயில் தயாராகும் வணிகக் குப்பை திரைப்படங்கள் நிமிடத்திற்கொரு முறை விஷ அம்பாக நம் மூளைகளில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபத்தமான சூழலில் அரசே முன்வந்து வரிவிலக்கு அளித்து மக்களிடம் இதை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். அதுசரி.  'பெண் சிங்கத்திற்கும்' 'மானாட மயிலாட' போன்றவைகளின் முன்னால் அம்பேத்கர் அப்படியொன்றும் அவசியமானவர் இல்லைதானே?

சரி. இப்போது அம்பேத்கர் திரைப்படத்திற்கு வருவோம்.

வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். சுமார் பத்து வருடத்திற்கு முன்பு உருவான திரைப்படத்தை இப்போது பார்ப்பதில் சில தயக்கங்கள் எனக்கு இருந்தன. ஒளிப்பதிவு எப்போது இருக்குமோ, அது நன்றாக இருந்தாலும் பிரிணட் எப்படி இருக்குமோ, முக்கியமாக தேசத் தலைவர்களின் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் பல எனக்கு அதிருப்தியையே தந்திருக்கின்றன. (காந்தி போன்றவை தவிர). சமீபத்தில் வெளியான பெரியார், காமராஜர் போன்று, எங்கே இதுவும் மோசமான உருவாக்கமாக இருக்குமோ என்று எணணிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அத்தனை தயக்கங்களையும் தகர்த்து விட்டு இத்திரைப்படம். இந்த வருடம்தான் எடுத்தது போல் அத்தனை புத்தம் புதிதான வெளித்தோற்றத்துடனும் உள்ளடக்கத்துடனும் இருக்கிறது. தேசத் தலைவர்கள் குறித்த திரைப்படங்கள் என்றாலே, பொதுவாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவும் சமுதாயத் தொடர்பைப் பற்றி மேலோட்டமாகவும் இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அம்பேத்கரின் அரசியல் குறித்த நிகழ்வுகளும் அது குறித்த உரையாடல்களும் முக்கியத்துவத்தோடு பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த அரசியல் ரீதியான முரண்பாடு அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

'காந்தி ஒரு சந்தர்ப்பவாதி அரசியல்வாதி' என்பது மாதிரியான காந்தி குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் விமர்சனமெல்லாம் அப்படியே பதிவாகியிருக்கிறது. சென்சாரில் எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. 'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது' என்கிறார் அம்பேத்கர்.

' காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து போராட்டம் செய்கிறாராம்' என்று தகவல் தருகிறார் நண்பரொருவர். அதற்கு அம்பேத்கர் சொல்வது 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு".

பரோடா சமஸ்தானம் அளிக்கும் உதவித் தொகையின் மூலமாக நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைகழகத்தில் அம்பேத்கர் கல்வி பயிலும் காட்சியோடு படம் துவங்குகிறது. 'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது' என்று கேட்கிறார்கள். 'நான் இங்கு வந்தது கல்வி பயில்வதற்காக. இப்போது அதைத்தான் முழுக்கவனத்துடன் செய்வேன்' என்கிறார் அம்பேத்கர். சமஸ்தானம் உதவியை நிறுத்திக் கொள்ள வேறு வழியின்றி இந்தியா திரும்புகிறார். அங்கு வரவு செலவு அதிகாரியாக பணி கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைக்கவில்லை.

தீண்டாமை என்னும் கருநாகம் அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. மஹர் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த பாவத்திற்காக ஆதிக்கச் சாதியினர் எல்லா இடத்திலும் அவரை மறுக்கின்றனர். பார்சி இனத்தவர்களுக்கான சத்திரத்தில் கெஞ்சிக் கூத்தாடி தங்குகிறார். ஆனால் சில நாட்களிலேயே இதை கண்டுபிடித்து பார்சிக்காரர்கள் தடி,கம்புகளுடன் வந்து அவரைத் துரத்துகின்றனர்.

தமக்கு வேலையளித்த மகாராஜாவிடமே இது குறித்து முறையிடுகிறார். 'உனக்கு வேலை தந்ததே நான் செய்த புரட்சி. மேலும் உன்னை ஆதரித்தால் எனக்கு தொல்லை ஏற்படும்' என்கிறார் மகாராஜா.

சுயபச்சாபத்தினால் ஒரு பூங்காவில் அமர்ந்து அம்பேத்கர் அழும் காட்சி ஒரே ஒரு முறை காட்டப்படுகிறது. இது போல் எத்தனை முறையோ? கல்வி எனும் சாதனம் சமூக விடுதலையைத் தேடித் தரும் என்பது பொதுவான கருத்தானாலும் அது மாத்திரமே உதவாது என்பது அவருக்கு தெளிவாக புரிந்து போகிறது. தங்களுக்கான உரிமைகளை தாங்களேதான் போராடி பெற வேண்டும்.

நீருக்கும் தீண்டாமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது போலும்.

இயற்கை அனைவருக்கும் பொதுவாக அளித்துள்ள நீரை ஆதிக்கச் சாதிக்காரர்களே ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். பணியிடத்தில் அவருக்கு கீழ் பணிபுரிகிற ஆதிக்கச் சாதிக்காரன் அவருக்கு தண்ணீர் கொண்டுவர தர மறுக்கிறான்.

கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிற சமயத்தில் அவர் தண்ணீர் அருந்த முயல்வதை மற்ற பேராசிரியர்கள் தடுக்கின்றனர். "வேண்டுமானால் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்' என்கிறார்கள். 'நான் அருந்தும் நீர் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதுவீர்களானால் அவரவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள்தான் நீர் கொண்டு வர வேண்டும்' என்று பதிலடி தருகிறார் அம்பேத்கர். மேலும் 'நீர் தீட்டுப் பட்டு விட்டால் அதைப் போக்கும் மந்திரம்தான் உங்களுக்குத் தெரியுமே. அதைக்கொண்டு நீரை சுத்தப்படுத்திக் கொள்ளுங்களேன்' என்று அவர்களின் மூக்கை உடைக்கிறார். சம்பந்தப்பட்ட மந்திரத்தையும் ஸ்பஷ்டமாக உச்சரித்துக் காட்டுகிறார்.

மக்களிடம் அவர்களின் விழிப்புணர்விற்கான செயற்பாட்டைத் துவங்கியதுமே அவர் முதலில் கையிலெடுக்கும் போராட்டம், நகர சபையினால் அங்கீரிக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிற குளங்களில் நீர் அருந்தும் போராட்டம்தான்.

பம்பாயிலிருக்கும் பிராமண எதிர்ப்புச் சங்கமொன்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்புகிறது. ஆனால் பிராமணர்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. அம்பேத்கர் தெளிவாக இதை மறுத்துவிடுகிறார். 'பிராமணர்கள் மாத்திரமல்ல, அதற்கு அடுத்தடுத்த அடுக்குகளில் இருக்கும் சாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கும் போது பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது முறையாகாது' என்பது அவரின் நிலைப்பாடு.

மேற்படிப்பைத் தொடர்வதற்காக மீண்டும் லண்டன் பயணம். இந்தியாவில் தீண்டாமையினால் அல்லறுவது போல அங்கே இனவெறியினால் கிடைக்கிற துன்பம். ஏழ்மை வேறு. ஆனால் எதுவுமே அவரின் கல்வித்தாகத்தை தடுக்க முடியவில்லை. இந்தியாவின் சாதிஅமைப்புகள் குறித்தான ஆய்வுக் கட்டுரை பல்கலைகழகத்தால் ஏற்கப்பட்டாலும் அதன் கடுமையான மொழிநடை அவர்களை பதட்டமடையச் செய்கிறது. மாற்றி எழுதித் தரச் சொல்கிறார்கள். தன் தோழியிடம் இது குறித்து ஆத்திரத்துடன் உரையாடுகிறார். "என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறாள் அவள்.

அம்பேத்கர் சொல்கிறார்: 'திருத்துவேன்'. இரு பொருள்பட என் காதில் ஒலிக்கிறது இது.

மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் முழு மூச்சாக தன் சமூகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். காந்தி சைமன் கமிஷனை புறக்கணிக்கிற போது அம்பேத்கர் அங்கு சென்று இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமையை விளக்கிச் சொல்லி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை முன்வைக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் எனினும் அவர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களை தனியாக பிரித்தால், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடைவெளி இன்னும் தீவிரமாகி இரு பிரிவுகளுக்கான ஒற்றுமை சாத்தியப்படவே படாது என்பது காந்தியின் நிலைப்பாடு.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீடிக்கிற தீண்டாமைக் கொடுமை அடுத்து வரும் சில வருடங்களில் தீரப் போவதில்லை என்பது அம்பேத்கரின் யதார்த்தமான வாதம். (அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இன்றும் கூட காலாவதியாகிவிடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது). முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் கூட தொகுதி ஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிற காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதை மறுப்பது என்ன நியாயம் என ஆவேசமாக முழங்குகிறார் அம்பேத்கர்.  தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களின் இனவெறி தாக்குதல்கள் குறித்து தெளிவாக அனுபவித்திருக்கிற காந்தி, இந்தியாவில் அதே நிலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொருத்திப் பார்க்காமல் வசதியாக மறந்து விடுவது ஏன்? என்பதும் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்வி. (ஆனால் சுதந்திர அறிவிப்பின் போது 'பாகிஸ்தான்' குறித்த ஜின்னாவின் கோரிக்கையை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளாதது குறித்து நெருடல் ஏற்படுகிறது. முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கரின் தீவிரமான விமர்சனங்கள் படத்தில் வெளிப்படவில்லை. சென்சாரில் துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை.)

அம்பேத்கர் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார். பெரும்பான்மையான மக்களின் வெறுப்பு அம்பேத்கரின் மீது படிகிறது. காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டு பிரிட்டிஷ்ஷாருடன் பேச்சு வார்த்தை நடத்தும் அவரை 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.

'தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களின் தொகுதி ஒதுக்கீடு குறித்தான அவசியத்தை காந்தியிடம் விவாதிக்கிறார். 'தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இந்துக்களிடம் பிரிவினை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை' என்கிற அதே பல்லவியை பாடுகிறார் காந்தி. '5 வருடங்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் மக்கள் மனம் மாறுவார்கள்'

இத்தனை வருடங்களாக ஏற்படாத மாற்றம் சில வருடங்களில் ஏற்படும் என்பதை அம்பேத்கர் ஏற்கத் தயாராக இல்லை. 'தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற நிலையில்தான் ஆதிக்கச் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்தாமல் இருப்பார்கள்'.



 உண்ணாவிரதம் காரணமாக காந்தியின் உயிருக்கு ஆபத்து நேரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்து நெருக்கடியும் அழுத்தமும் கூடுகிறது. வேறு வழியின்றி காந்தியை சந்தித்து தம்முடைய சமரசங்களை முன்வைக்கிறார். விடைபெறும் போது காந்தியிடம் சொல்கிறார். 'காந்திஜி, அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்'. 

தாம் நிற்கிற நிலையிலிருந்து விலக மறுக்காத காந்தியின் பிடிவாதமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முழுக்க புரிந்து கொள்ள விரும்பாத அவரின் மீது அம்பேத்கர் கொள்கிற எரிச்சலும் முரணும் இத்திரைப்படம் முழுக்க பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் மனதின் ஆழத்தில் காந்தி மீது இவர் வைத்திருக்கிற மரியாதையும். காந்தி உண்ணாவிரதமிரு்க்கிற சமயத்தில், தம்முடைய உணவை திருப்பி அனுப்பி விடுவதின் மூலம் இதை உணர முடிகிறது. 

தம்முடைய சமூகப் போராட்டத்திற்கு தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக இருப்பதே கசப்புடன் உணர்கிறார். 'தீண்டத்தகாதவன்' என்று தங்கள் மீது அழுத்தமாக குத்தப்பட்டிருக்கும் முத்திரையை இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே நீக்க முடியும் என்று நம்புகிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடும் போது தேர்தல் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்த முண்டியடிப்பது போன்று மற்ற மதங்களின் தலைவர்கள் பேரத்திற்கு வருகின்றார்கள். அவரை இந்து மதத்திலேயே தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது. பலத்த ஆலோசனைக்குப் பின் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலிருப்பதாக அவர் நம்புகிற பெளத்த மதத்தை தேர்ந்தெடுக்கிறார்.

சுமார் ஐந்து லட்சம் மக்களோடு அவர் பெளத்த மதத்தை தழுவுவதோடு படம் நிறைகிறது.  

சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பும் அவரைத் தேடிவருகிறது. இந்த ஆலோசனையை நேருவிடம் முன்வைப்பவர் காந்திதான். எந்த இடையூறுமில்லாமல் இதைச் செய்யலாம் என்கிற நேருவின் உத்தரவாதத்துடன் அதை ஏற்றுக் கொள்கிறார் அம்பேத்கர். குழுவிலுள்ள மற்ற நபர்கள் பல்வேறு காரணங்களினால் செயல்படாத நிலையில் தனியொருவராக இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கிறார். ஆனால் இந்து சட்ட மசோதா குறித்த பகுதிகளை நேரு ஏற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏமாற்றமும் கசப்பும் கொள்ளும் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.

அம்பேத்கரின் தனி வாழ்க்கையும் இடையிடையில் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு கல்வி தொடர்பான காட்சிகளின் இடையில் சிறுவயதில் அவர் சந்திக்க நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகள் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவரது மனைவியான ரமாபாய் (சோனாலி குல்கர்னி) ஒரு சாதாரண குடும்பத்தலைவி. கல்விக்காகவும் போராட்டத்திற்காகவும் தன்னை விட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிற கணவனின் அருகாமைக்கு ஏங்குகிறவர். எக்காரணம் கொண்டும் தன் குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அம்பேத்கர்.

உடல் நலிவுற்று ரமாபாய் இறக்கும் காட்சி உருக்கம். 'வெளியே மழை பெய்கிறதா' என்று பிதற்றுகிறார் ரமாபாய். பாவனையாய் அதை ஆமோதிக்கிறார் அம்பேத்கர். அவர்களின் இளவயதுத் திருமணத்தின் போது மழை பெய்த காட்சிகள் மிகப் பொருத்தமாய் இங்கு இணைகிறது.

முன்னரே குறிப்பிட்ட படி அம்பேத்கர் என்கிற ஆளுமை குறித்தான நல்லதொரு அறிமுகத்தை தருகிறது இத்திரைப்படம். 90 களில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அந்தக் காலக் கட்டத்திற்காக பின்னணிகளுக்காகவும், வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்காகவும் எவ்வித சமரசங்களுமின்றி நம்பகத்தன்மையோடு பதிவாகியிருக்கின்றன. அசோக் மேத்தாவின் சிறந்த ஒளிப்பதிவு இந்த அனுபவத்தை இன்னும் உன்னதமாக்குகிறது.

கிளிஷேவான வாக்கியமாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன். இத்திரைப்படத்தின் எந்தவொரு காட்சியிலும் எனக்கு மம்முட்டி என்கிற நடிகரே தெரியவில்லை. உருவப் பொருத்தம் முதற்கொண்டு அத்தனை கச்சிதமான தேர்வு. மம்முட்டியின் அடக்கமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததில் ஆச்சரியமில்லை.

()

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் 05.12.2010 அன்று காலை 11.15 மணிக் காட்சியில் இத்திரைப்படத்தைக் கண்டேன்.

விடாது பெய்துக் கொண்டிருந்த மழையிலும் சுமார் 40 சதவீத அரங்கம் நிரம்பியிருந்தது குறித்து மகிழ்ச்சி. திரையரங்குகளில் நடிகர்களின் புகைப்படங்களையே கண்டு எரிச்சலடைந்திருந்த கண்களுக்கு, அம்பேத்கரின் வாசகங்களும் புகைப்படங்களும் தாங்கிய பதாகைகள் மகிழ்ச்சியை ஏற்படு்த்தின. அம்பேத்கர் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு பார்வையாளர்களை வரவேற்றனர். ஓரு அரசியல் திரைப்படத்தின் காட்சிகளை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பொருத்தமான இடங்களில் கைத்தட்டல்களின் மூலம் எதிர்வினையாற்றியது குறித்தும் மகிழ்வாக இருந்தது. காந்தியைப் பற்றின அதீதமான கூச்சல்கள்தான் சங்கடத்தை ஏற்படுத்தின.

இன்னும் சில நாட்களே திரையிடப்பட இருக்கும் இதை சந்தர்ப்பத்தை வீணாக்காமல் காணுமாறு வேண்டுகிறேன். முக்கியமாக குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.

இந்தியா என்கிற தேசத்தின் உருவாக்த்தின் பின்னால் எத்தனை பேரின் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது என்பதை இளைய தலைமுறை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். நகரங்களில் மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் கிராமங்களில் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடிக்கிற தீண்டாமை என்னும் கொடிய கற்பிதத்தை பற்றி அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் நினைவு நாளான இன்று இந்தப் பதிவு எழுதப்படுவதின் பொருத்தம் குறித்த உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.   

suresh kannan

Saturday, December 04, 2010

ரத்த சரித்திரம் - பழிவாங்குதலின் பரிசுத்தம்


ஓரு அக்மார்க் ராம் கோபால் வர்மா படம்.

வர்மாவிற்கு வயதாகி விட்டதா? என்று முன்னொரு பதிவில் கேட்டிருந்தேன். இப்போது  மகிழ்ச்சியுடன் அதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். (அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் வாசிக்கவும்). ஒரு சிங்கம் போல் தன்னுடைய தோல்விகளிலிருந்து சிலிர்த்தெழுந்து கிளம்பியிருக்கிறார் RGV.

கேங்க்ஸ்ட்டர்களின் படங்களை வெறுமனே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாக்காமல் அவர்களின் அகம் சார்ந்த உணர்வு காட்சிகளோடு தொடர்ந்து உருவாக்குபவர் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸஸி. அந்த வகையில் இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வர்மாவைக் குறிப்பிடலாம். (ஹாலிவுட்டை அளவுகோலாக வைத்துத்தான் இந்திய இயக்குநர்களை மதிப்பிட வேண்டும் என்கிற அர்த்தமில்லை. அழுத்தமான புரிதலுக்காக இப்படி குறிப்பிடுகிறேன்).

இருளும் குறைந்த வெளிச்சமுமான ஒரு அறை. இரண்டு மூன்று தீவிரமான முகங்கள். பதற வைக்கும் பின்னணியிசை. இவை மாத்திரமே கொண்டு வெளியே ஏதோ ஒரு மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருப்பதான பிரமையை பார்வையாளனிடம் ஒரு தேர்ந்த இயக்குநரால் நிகழ்த்தி விட முடியும். அந்த மாதிரி ஓர் இயக்குநர் RGV.

இன்னமும் வளவளவென்று வசனம் பேசிக் கொண்டிருக்கும் இந்தியத் திரைப்படங்களிலிருந்து விலகி காட்சிகளின் மூலமாக படத்தை நகர்த்திச் செல்வதில் நம்பிக்கையுள்ள சொற்ப இயக்குநர்களில் வர்மா பிரதானமானவர். இப்படத்தின் வசனங்கள் மிகச் சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாக அமைந்துள்ளன.

பல வருடங்களாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பழிவாங்குதலில் தம்முடைய இலக்கிலிருந்து தப்பிப் போனவன் குறித்து ஆததிரத்துடன் விவாதிக்கிறது இளைஞர் குழு. 'ஆஸ்பிட்டல்ல போய் இப்பவே போட்டுடலாம்' என்று துள்ளுகிறான் ஓர் இளைஞன். "அவன் கேவலமானவனா இருக்கலாம். ஆனா முட்டாள் இல்ல. நம்மள எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்' என்கிறான் சூர்யா.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரத்தில் சூர்யாவை உபயோகித்திருந்தது மிகப் பெரிய பின்னடைவான விஷயமாக அமையலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை பின்பகுதியில் பார்க்கலாம்.

டைட் குளோசப் காமிராக் கோணங்கள், ஒரு முகத்தில் நிலை கொண்டிருக்கும் காமிரா அவுட் ஆஃப் போகஸில் தெரியும் எதிர் முகத்திற்கு மாறுவது, மெலிதான தலையசைப்பிற்குப் பிறகு தொடரப் போகும் பயங்கரங்கள், அடிவயிற்றை பதற வைக்கும் பின்னணி இசை.... என்று வர்மாவின் பிரத்யேக திரை மொழி இதிலும் தொடர்கிறது.

பரிட்டாலா ரவி என்கிற நக்சலைட் பின்னணி கொண்ட ஆந்திர அரசியல்வாதியின் சுயசரிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம். ஐந்து மணி நேரம் கொண்ட இதன் முதல் பாகம் இந்தியிலும் தெலுங்கிலும் மூன்று மாதங்களுக்கு முன் வெளியாகியது

தமிழில் வெளியாகியிருப்பது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை பார்த்து விட்டு இரண்டாம் பாகத்தை பார்ப்பதுதான் சரி என்றாலும் பார்த்திருக்காவிட்டாலும் பெரிய பாதகமில்லை. பார்வையாளர்களின் புரிதலுக்காக முதல் பாகத்தின் காட்சிகள் சுருக்கமாக முதல் 20 நிமிடங்கள் வாய்ஸ் ஓவர் பின்னணியுடன் விவரிக்கப்படுகின்றன. கடந்த கால (என்டிஆர்) ஆந்திர அரசியலின் பின்னணியை அறிந்திருப்பதன் மூலம் இப்படத்துடன் அதிகமான ஒன்ற முடியும்.

எவ்வித முன் அறிமுகமுமில்லாமல் இப்படத்தை ரசிக்க முடிவது RGV செய்திருக்கும் திரைக்கதை மாயம். என்ன பிரச்சினையெனில் குற்ற இலக்கியப் படைப்பின் முப்பதாவது பக்கத்தில் நுழைந்தது போல படத்தின் துவக்க காட்சிகள் ரத்தமும் அரிவாளுமாக சதியுமாக பரபரவென்று நகர்கின்றன.(பின்னணியில் இதை விவரித்துக் கொண்டு செல்வது இயக்குநர் கெளதம் மேனனின் குரல்) இதைச் சுதாரித்துக் கொண்டு படத்திற்குள் நுழைந்து விட்டால் பின்பு அதகளம்தான்.

இடைவேளை என்னும் கற்பிதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியத் திரைபடங்களின் 90 சதவீத திரைக்கதைகள் இடைவேளையைக் கருத்தில் கொண்டுதான் எழுதப்படுகின்றன. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாதி பெரும்பான்மையும் வெறுமனே ஆக்ஷன் காட்சிகளால் நகர்ந்தாலும் பின்பகுதி சதுரங்கக் காய்களின் நகர்த்துதல்களோடு புல்லட் வேகத்தில் பறக்கிறது.


நாம் ஒருவனை உக்கிரமாக வெறுக்கும் போது அவனைப் பழிவாங்குவதற்காக நம்முடைய ஐம்புலன்களும் ஆறாவது அறிவோடு இணைந்து ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையோடு இயங்கும். பத்திருபது ஆண்டு தியானப் பயிற்சியில் கூட இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையின் இயக்கம் நமக்குக் கிடைக்காது. நம் மனதினுள்ளேயே எல்லாவிதமான ஆற்றலும் இருக்கின்றன. நாம்தான் அவைகளை உணர்வதில்லை. தியானங்களும் ஆன்மீகத் தேடல்களுமே இதை வெளிக் கொணர்கின்றன. இவை நன்னோக்கு சிந்தனைகளை வெளிக்கொணர்கிறது என்றால், பழிவாங்குவதில் ஏற்படும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை, வன்முறையையும் வன்மத்தையும் வெளிக் கொணர்கிறது. நல்ல விஷயத்திற்காக கூட இததனை தீவிரமாக சிந்திக்காத மனிதன், இந்த எதிர்மறையான விஷயத்திற்காக கூர்மையாக செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதே சமயத்தில் வேதனையையும் ஏற்படுத்துவது.

இப்படியான பழிவாங்குதல் எனும் உணர்வு எவ்வாறு பரம்பரை பரம்பரையாக ஒரு சங்கிலி போல் தொடர்கிறது, தனது கிளைகளை பரவலாக விரித்துக் கொண்டு செல்கிறது என்பதைப் பற்றி இந்தப்படம் உரையாடுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் நிகழ்வுகளுக்கு தமிழக வண்ணம் பூசப்பட்டிருப்பது ஒட்டாமல் இருந்தாலும் இது பெரிய பின்னடைவை  ஏற்படுத்தவில்லை. மனிதனின் பொதுவான பழிவாங்குதல் குணத்தை பற்றியது என்பதால். 'இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே' எனும் வழக்கமான டிஸ்கெளைய்மருக்குப் பிறகு துவங்கும் படம் ''நிஜத்தில் நடந்த கதை' என்று தொடருவது நகைமுரண்.

பல்லைக் கடித்துக் கொண்டு கீழேயுள்ள இரண்டு பாராக்களை வாசித்து விடுங்கள்.

ஆனந்தபுரம் எனும் பகுதியில் (ஆந்திராவில் இது அனந்தபூர்) வன்முறையின் மூலம் வலிமையான அரசியல் தலைவராக விளங்குபவர் நாகேந்திர மூர்த்தி (கிட்டி). இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை பெரிதும் நம்புகிறார். வீரபத்ரன் விவசாய பாட்டாளிகளுக்காக உண்மையாக பாடுபடும் அரசியல்வாதி. இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி எனும் எம்.எல்.ஏ (கோட்டா சீனிவாசராவ்) நாகேந்திர மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்து வீரபத்ரனை வெளியேற்றச் செய்கிறார். மக்களின் ஆதரவு வீரபத்ரனுக்கு ஏற்படுகிறது. இதனால் நாகேந்திர மூர்த்தியும் நாகமணியும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை வைத்தே கொலை செய்கின்றனர். வீரபத்ரனின் மூத்த மகனையும் கொல்கின்றனர்.

வீரபத்ரனின் இளைய மகனான பிரதாப் ரவி (விவேக் ஒபராய்) தன் தந்தை கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். தந்தையின் ஆதரவாளர்களுடன் நாகேந்திர மூர்த்தியையும் நாகமணியையும் கொன்று பழி தீர்க்கிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனந்தபுரத்தில் எவரும் எதிர்க்க முடியாத ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்கிறான்.


சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா  - என்.டி.ஆர். பாத்திரம்) ஓட்டு வங்கிக்காக ஆனந்தபுரத்தில் நுழையும் அவரை சில வன்முறை சக்திகள் வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன. இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் பிரதாப் ரவி. அவனை அழைத்து வந்து அரசியலில் நுழைய வைத்து பிரதாப்பை உள்துறை மந்திரியாகவே ஆக்கி விடுகிறார். ஏற்கெனவெ உள்ள தாதா பலத்துடன் அரசியல் பலமும் இணையவே வெல்லவே முடியாத ஒரு மையமாக ஆகி விடுகிறான்  பிரதாப்.

ஆச்சா...

இதுதான் முதல் பாகத்தின் 20 நிமிடங்களில் காட்டப்படும் சுருக்.

ஆனால் பிரதாப் எதிர்பார்க்காதவிதமாக அவனைக் கொல்வதற்காக ஒருவன் பழிவாங்குதல் எனும் உணர்வே மனித வடிவத்தில் காத்திருப்பது போல் காத்திருக்கிறான். அது சூர்யா. (முதலில் குறிப்பிட்ட நாகேந்திர மூர்த்தியின் மகன்). இப்போது பிரதாப்பிற்கும் சூர்யாவிற்கும் பழிவாங்குதல் குறித்து நிகழும் ஆடுபுலி ஆட்டமும் சதுரங்க விளையாட்டுக்களுமே 'ரத்தசரித்திரம்' 



இத்திரைப்படத்தின் பிரதான பாத்திரமான பிரதாப் ரவியாக விவேக் ஓபராய். அட்டகாசமான உடல்மொழி. (இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத் தேடி வந்த போது நடந்து கொண்டதை தேடிவாசித்துப் பாருங்கள்). ஈநாடு தொலைக்காட்சியில் நாம் சாதாரணமாக காண்கிற காரசாரமான ஒரு ஆந்திர அரசியல்வாதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

இவர் சூர்யாவை கொல்வதற்காக தொடர்ந்து முயலும் போது அந்தக் குழப்பங்கள் அரசியலிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இவரது அரசியல் குருவான சிவராஜ் (என்டிஆர்) 'அரசியல்வாதியான நீ இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான சச்சரவுகளில் ஈடுபடாதே' என்று அறிவுறுத்துகிறார். எனவே தனது வன்முறைகளை கைவிட்டு விட்டு சிறையிலிருக்கும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தைக்காக போகிறான் பிரதாப்.

வன்முறை தவிர பிறவற்றை யோசிக்கத் தெரியாத ஒரு ரவுடி, ஒரு தேர்ந்த கச்சிதமான அரசியல்வாதியாக உருமாறுவதை இந்தக் காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சிறையில் இவருக்கும் சூர்யாவிற்கும் நிகழும் உரையாடல் செம காரம். (உன் வழியில நீ போ, என் வழியில நான் போறேன். - உன் வழியை அடைக்கறதுதான் என் வேலை. உன்னைச் சாகடிக்கறதுக்காகத்தான் நான் சாகாம இருக்கேன்).

சூர்யாவின் குடும்பம் முழுவதையும் பிரதாப் அழித்ததால்தான் அவன் இத்தனை வெறியோடு இருக்கிறான். ஆனால் காட்சிகளின் பின்னணியில் நிகழ்வது வேறு. தன் எதிரிகள் அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்கிற ஆபரேஷனில் அவனது ஆட்கள் உத்தரவுகள் எதுவுமின்றி தானாகவே சூர்யாவின் வீட்டில் வெடிகுண்டு வைத்து கொன்று விடுகின்றனர். இதற்காக பிரதாப் பிறகு தனது ஆட்களை கண்டிக்கிறான்.

ஒரு நிலையில் தேர்தலில் தனக்கு போட்டியாக நிற்கும் சூர்யாவின் மனைவியை (பிரியாமணி) கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப்பிற்கு ஏற்படுகிறது. பெண் என்பதால் தயங்குகிறான். ஆனால் சுற்றியுள்ள ஆட்கள், தேர்தலில் வெல்வதோடு ஒப்பிடும் போது இது சாதாரண விஷயம்' என வற்புறுத்தும் போது வேறு வழியின்றி அதை ஒப்புக் கொள்கிறான். ஆனால் அவனுடைய மனைவி இதை எதிர்க்கிறார். அவன் மனச்சாட்சியை தூண்டும்படி வாக்குவாதம் செய்கிறாள். பவானியை கொல்வதற்காக ஆட்களை அனுப்பி விட்டு காத்திருக்கும் பிரதாப், தனிமையில் தன் மனைவியுடன் நிகழ்ந்த உரையாடல்களை மனதில் நிகழ்த்திப் பார்க்கிறான். மனச்சாட்சி உறுத்துகிறது. போராட்டத்தில் அவனது மனிதம் வெல்கிறது. ஆட்களை தொடர்பு கொண்டு கொலையை நிறுத்தச் சொல்கிறான்.

இங்கே ஒரு திருப்பம். பவானியைக் கொல்லச் சென்ற பிரதாப்பின் வலது கரங்களில் ஒன்றை சூர்யாவின் சிறைநண்பன் கொல்கிறான். மனம் திருந்தி நிற்கும் பிரதாப்பிற்கு இந்தச் செய்தி கிடைக்கிறது. ஆத்திரத்தில் அழுகிறான். மனது மீண்டும் பழிவாங்கல் உணர்விற்கு மாறுகிறது.

மனிதத்தனத்திற்கும் விலங்குத்தனத்திற்கும் இடையில் நம் மனது எத்தனை நுட்பமாக ஊசலாடுகிறது என்பதை விளக்குவதற்காகவே இத்தனை நீளமாக இதை எழுதினேன். இந்தக் காட்சிகளை மிக அற்புதமான திரைமொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பிரதாப்பின் அகஉணர்வுப் போராட்டம் மிக வலுவாக இதில் வெளியாகியிருக்கிறது. இது போல் பல காட்சிகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.

வர்மாவின் மேக்கிங்கில் இரண்டு காட்சிக்கோர்வைகளை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திரைப்படம் பயில விரும்பும் மாணவர்களுக்கு இதை ஒரு பாடமாகவே வைக்கலாம் என்று குறிப்பிடுவது அதீதமாக இருக்காது என நம்புகிறேன்.

சூர்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி. அவனை பிரதாப்பின் எதிரிகள் எவரும் கொன்று விடக்கூடாது என்பதற்காக காவல்அதிகாரி (சுதீப்) கண்காணிக்கிறார். ஒரு ஃபார்மலான வக்கீலிடம் துவங்கும் இந்தக் காட்சி, பல்வேறு சந்தேக முகங்களையும் காவல் அதிகாரி மற்றும் சூர்யாவின் கூர்மையான அவதானிப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறது. நாம் கையில் சற்று அதிகமான பணத்தை வைத்துக் கொண்டு செல்லும் போது வழியில் பார்க்கும் நபர்களெல்லாம் சந்தேகப்படும் படி தெரிவது போல் எவரைப் பார்த்தாலும் கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். ஒவ்வொரு அசைவும் சந்தேகத்துக்குரியதாக தெரிகிறது.

இன்னொன்று சூர்யா, பிரதாப்பை கொல்லும் காட்சி. டைட் குளோசப் காட்சிகளும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் தீவிரமான முகபாவங்களும் மற்றவர்களின் இயல்பான இயக்கங்களும் காட்சியின் தரத்தை உயர்த்திச் செல்கின்றன. இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் காட்சிகள் இயங்குவதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.

சூர்யாவின் நடிப்பு கிராஃப் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகின்றது. வணிக மசாலாப்படங்களில் ஒருகால், வித்தியாசமான முயற்சிகளில் ஒருகால் என்று இரட்டைக்குதிரைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். பல காட்சிகளில் இவரது உடல்மொழி அபாரம். குறிப்பாக பிரதாப்பை கொன்றுவிட்டு இவர் திரும்பும் காட்சியில் பல வருடங்கள் காத்திருந்த செயலை நிகழ்த்தின ஆசுவாசமும் திருப்தியும் அதன் மூலம் வெளிப்படும் கண்ணீரும் என.. இவரின் முகபாவங்கள் அட்டகாசம். சிக்ஸ் பேக் தெரிய இவர் இடும் சண்டைக்காட்சிகள் தேவையில்லாத வணிகத் திணிப்பு

பிரியாமணிக்கு நடிப்பதற்கு அத்தனை வாய்ப்பில்லாவிட்டாலும் வருகிற காட்சிகளில் எல்லாம் இவர் மிகை ஒப்பனையுடன் வருவது சற்று எரிச்சலாகவே இருக்கிறது. இயக்குநர் இதைக் கவனித்திருக்கலாம். சுபலேகா சுதாகர் சிறிது நேரமே வந்தாலும் ஒரு அரசாங்க தரகரின் வேலையை கனகச்சிதமாக செய்கிறார்.


 பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே. இவரைப் பார்த்து விட்டு நான் அப்படியே உறைந்து அமர்ந்து விட்டேன். வெறுமனே காமத்தை கிளர்த்தும் அழகு, வணங்க வைக்கும் அழகு, தள்ளி நின்று ரசிக்க வைக்கும் அழகு என்று பெண்களை கவனிப்பதில் பல வகைகள் உண்டு என்பது என் தனி அபிப்ராயம். இவரை எவ்வாறு வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஐஸ்வர்யா ராயையும் தீபிகா படுகோனையும் இணைத்து வைத்த கலவையில் ரவிவர்மா ஓவியம் போலிருக்கிறார். தி.ஜாவின் மரப்பசு அம்மிணியை நிலைகொள்ளாமல் வாசித்த பதின்ம வயது உணர்வு மீண்டும் எனக்குள் திரும்பியது. விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மனம் பொறாமையில் வெந்து அடங்கியது. அப்பேபர்ப்பட்ட பிரமிக்க வைக்கும் அழகு. இவரின் மற்ற படங்கள் எத்தனை மொக்கையாக இருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன். :-)

சூர்யாவை இதில் நடிக்க வைத்தது இந்தப்படத்தின் ஒரு பின்னடைவாக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? ஏனென்று சொல்கிறேன். சூர்யா தோன்றும் ஆரம்பக்காட்சியில் கைத்தட்டல்கள் காதைப் பிளந்தன. சிங்கம், வேல் போன்ற வணிக மசாலா பட சூர்யாவை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். சூர்யாவின் பிம்பமே அந்த பாத்திரத்தில் பார்வையாளன் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தடையாக அமையலாம்.

ரத்த சரித்திரத்தில் ஹீரோ, வில்லன் என்று எவருமே கிடையாது. அவரவர்களின் பார்வையில் அவரவர்கள் செய்வது நியாயமே. இதைப் பார்வையாளர்கள் தெளிவாக உணரும்படிதான் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால் நாயக வழிபாட்டு ரசிகர்கள், சூர்யாவை ஹீரோவாகவும் விவேக் ஓபராயை வில்லனாகவும் உருவகித்துக் கொண்டு திரைப்படத்தைப் பார்த்தால் இயக்குநருக்கு அது ஒரு தோல்வியே. பிரதேச மொழிக்கேற்றவாறு அவரவர்களின் பகுதிகள் கூட்டியோ குறைத்தோ அமைக்கப்பட்டுள்ளன என அறிந்தேன். எனில் இந்தி வர்ஷனில் விவேக் ஓபராயின் பகுதி எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். (முதல் பாகத்தில் விவேக் மற்றும் சத்ருஹன் சின்ஹாவின் ராஜாங்கம்தான் என கேள்விப்பட்டேன்).

அமல் ராத்தோடின் காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். என்றாலும் சில காட்சிகளில் அர்த்தமேயின்றி 360 டிகிரியில் சுழன்று காட்சிப்படுத்துவது தேவையில்லாமல் சங்கடப்படுத்துகிறது. சூர்யாவும் அவனது சகாவும் சிறையில் கம்பிகளுக்கு இடையில் உரையாடும் போது நடுக்கோணத்தில் காமிரா நின்று இருவருக்கும் இடையே எந்த தடுப்பும் இல்லை என்பது போன்று படமாக்கியிருப்பது சிறப்பு. பி்ன்னணி இசை காட்சிகளின் உக்கிரத்தை மேலும் கூட்டுகிறது.

இயக்குநர் விக்ரமனின் 'லாலாலா' படங்களைப் பார்த்துப் பழகினவர்கள் இந்தப் படத்தின் வன்முறையை ஜீரணிப்பது சிரமம். வன்முறையில் உள்ள அழகியலை ரசிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரமே இதை ரசிக்க முடியும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் வன்முறை ஒளிந்திருக்கிறது என்கிற யதார்த்தத்தை புரிந்து கொண்டால் போதும். ஏனெனில் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பை இந்தப்படத்தில் எதிர்பார்க்கவே முடியாது. வனம் அதிர மோதிக் கொள்ளும் இரண்டு சிங்கங்களின் தீவிரமான அலறல்களைத்தான் இதில் கேட்கும். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மருந்திற்குக்கூட உங்களால் புன்னகைக்க முடியாது.

பழிவாங்குதலின் இந்தத் தொடர் சங்கிலியை இயக்குநர் எப்படி முடிப்பார் என்று யோசனையாக இருந்தது.

பிரதாப்பை கொன்ற சூர்யாவிடம் காவல் அதிகாரி சொல்கிறார். 'நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள். ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்" என்கிறார்.

"நிச்சயம் ஆக மாட்டேன்" என்கிறான் சூர்யா.

அடுத்தடுத்த காட்சிகளில் சூர்யா அரசியலில் இறங்கப்போகும் நேர்காணலை தொலைக்காட்சி தெரிவிக்கின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரதாப்பின் மனைவியின் கையிலிருக்கும் குழந்தையின் டைட் குளோசப்பில் படம் முடிகிறது.

பழிவாங்குதலின் தொடர்ச்சி. வர்மா டச். வர்மாவின் ரசிகர்கள் நிச்சயம் பாருங்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். இளகிய மனதுள்ளவர்களும் இத்திரைப்படத்தை தவிருங்கள்.

தொடர்புடைய பதிவு:

பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?

suresh kannan