Monday, January 27, 2020

சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை





ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன.

‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன.

‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது.

‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது.


**

புத்தரின் வாழ்க்கையில் கடந்து போன அங்குலிமாலா என்பவரைப் பற்றிய ஒரு கதை அல்லது வரலாறு (சமயங்களில் இரண்டும் ஒன்றுதானே?!) உண்டு. இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். ‘இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்’ என்று ஒரு நேர்காணலில் மிஷ்கின் சொன்னார். படத்தைப் புரிந்து கொள்ள இந்தக் குறிப்பு  மிக அவசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கதைகளை நேரடியாக அப்படியே புரிந்து கொள்வதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. அது குழந்தைகள் தங்களின் அறியாப்பருவத்தில் செய்யும் விஷயம். ‘காக்கா எப்படி குடுவைல கல்லைப் போடும்?” என்று பெரியவர்களான பின்னரும் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமை.

நுட்பமான புனைவுகளை அப்படியே நடைமுறை இயல்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அதுவொரு தனியான உலகம். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள எழுதியவனுக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் நல்ல கற்பனை வளம் வேண்டும். ஒரு நல்ல புனைவு என்பது பல்வேறு உருவகங்கள், குறியீடுகள், புதிர்ப்பாதைகள் என்று பல வழிகளைக் கொண்டிருக்கும். ஆழமானதொரு மையத்தை மறைமுகமாக உணர்த்த விரும்பும். அந்தப் பயணத்தின் வழியே சென்றால் குறிப்பிட்ட புனைவின் ஆன்மாவை அடைய முடியும்.

அங்குலிமாலா கதையின் மையமும் அதுதான். ஒரு ஞானியால் தன் தூய வெளிச்சத்தின் மூலம் கரிய இருளை அகற்ற முடியும். தன் அன்பால், ஞானத்தால், சகிப்புத்தன்மையால் ஒரு கொடூரனை புத்தர் மனம் மாற்றிய கதை அது. இந்த மையத்தையே தன் பிரத்யேக திரைமொழியில் சொல்ல விரும்புகிறார் மிஷ்கின். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள தர்க்கப் பிழைகளை அதிகம் நோண்டிக் கொண்டிருக்க மனம் வராது. அது அவசியமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

“கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி காமிரா இருக்காதா?” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை  இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும்? அந்தச் சந்தேகத்தின் பலனை அளிக்க நாம் தயாராகவே இல்லையா?

தன் திரைப்படங்களை தனித்துவமாக உருவாக்க விரும்புகிற ஒரு படைப்பாளி, தன்னுடைய பாணியில் ஒரு பிரத்யேகமான உலகை உருவாக்குகிறார். அதில் அவர் காட்டுகிற சித்திரங்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கக்கூடும். அந்த இடைவெளிகளை ஒரு புத்திசாலியான பார்வையாளன் தன்னிச்சையாக இட்டு நிரப்பிக் கொள்வான் என்கிற துணிச்சலான அனுமானத்தில் அவர் அந்த இடைவெளிகளை விட்டுச் செல்கிறார். ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கும் அதை நுகர்கிறவனுக்கும் உள்ள பரஸ்பர புரிதலும் பகடையாட்டமும்தான் அந்த அனுபவத்தை இன்னமும் உன்னதமாக்குகிறது. 

திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற சிசிடிவி உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே! சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன?! எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா? இல்லைதானே?

‘நம்மளை விட சைக்கோ அதிக புத்திசாலி சார்’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. காவல்துறை அதிகாரியினாலேயே அது சொல்லப்படுகிறது. எனில் தன் புத்திக்கூர்மையை வைத்து அதற்கேற்ப சாதகமான சூழலை அவன் அமைத்துக் கொண்டான் அல்லது தற்செயல் அதிர்ஷ்டங்கள் அவனுக்குத் துணை புரிந்தன என்கிற கற்பனையை ஏன் நம்மால் மேற்கொள்ள முடியவில்லை?

இப்படி தர்க்கப்பிழைகளை நோண்டி கண்டுபிடிக்கும் சமயத்தில் நம் கண் முன்னாலேயே பல உன்னதமான சித்திரங்கள் திரைப்படத்தில் நழுவிக் கொண்டிருக்கும் அபத்தம் நமக்கு உறைக்கவேயில்லையா?

இந்தத் திரைப்படம் குறித்து என் பார்வையிலும் சில போதாமைகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்தன. இயக்குநரின் நோக்கில் அதற்கு விடைகள் இருக்கலாம். இவற்றிற்குப் பின்னர் வருகிறேன்.

ஆனால் இந்தப் போதாமைகளைக் கொண்டு நிச்சயம் இந்தப் படத்தை நான் 'ஹெஹ்ஹே' என்று கெக்கலி கொட்டி நிராகரிக்க மாட்டேன். ஏனெனில் பெரும்பாலும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் தனித்துவமாக செயல்படுகிற ஒரு சில படைப்பாளிகளையும் நாம் அவமதித்து, மலினப்படுத்தி நிராகரிப்பதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது.

**

இந்தத் திரைப்படத்திலுள்ள உன்னதமான விஷயங்களை முதலில் பார்த்து விடுவோம். தொழில் நுட்பங்களை கையாண்டவர்களின் வரிசையில் நான் முதலில் கைகுலுக்க விரும்புவது ஒளிப்பதிவாளரிடம்.

தன்விர் மிர் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொலையாளி தான் கடத்தி வந்த இளம் பெண்ணை பலிபீடத்தில் கிடத்தி வெட்டுவதற்கான முனைப்புகளை செய்கிறான். வேகமான உடல் அசைவுடனும் அதற்கு எதிர்மாறாக நிதானமான முகபாவத்துடனும் அவன் இந்தக் காரியத்தை செய்யும் போது அவனுடன் காமிரா சுழன்றடிக்கும் காட்சி ஒன்றே போதும், தன்விரின் மேதமையைச் சொல்ல. கொலையாளியின் உளக்கொதிப்பை காமிரா மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறது என்றே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

இது போல் பல காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் மேரிமாதாவின் பின்புலத்துடன் வருகிற அந்த பிரத்யேகமான காட்சிக்கோர்வையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். எடிட்டிங்கும் பல இடங்களில் மிக அபாரமான தன் பணியைச் செய்திருக்கிறது.

அடுத்ததாக இளையராஜா. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘குற்றமே தண்டனை’ போன்ற திரைப்படங்களில் இளையராஜாவின் இசை அநாவசியமான இடங்களிலும் மிகையாக ஒலித்துக் கொண்டே இருந்ததாக நான் உணர்ந்தேன். “முன்னணி இசை’ என்று டைட்டில் கார்டில் குறிப்பு போட்டு மிஷ்கின் இதை ‘ரொமான்டிசைஸ்’ செய்ததும் அப்போது எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. (அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் எழுதி பல ராஜா ரசிகர்களின் பகைமையை வேறு சம்பாதித்துக் கொண்டேன்).

ஆனால் இந்தத் திரைப்படத்தில் இளையராஜா ஓர் அற்புதமான மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைதியாகச் செல்ல வேண்டிய இடங்களில் மெளனத்தை நிரப்பியது ஓர் ஆச்சரியம் என்றால் பரபரப்பான தருணங்களில் ஓர் அருவி போல இசை ஆவேசமாக மேலே எழுந்து அடங்கும் பாணியானது காட்சியின் சுவாரசியத்தைக் கூட்டியதை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் பின்னணி இசையை நான் இடையூறாக உணரவே இல்லை.

மூன்று பாடல்களுமே அட்டகாசம். ‘உன்னை நெனச்சு..நெனச்சு’ ஏற்கெனவே ஹிட் ஆகி பலரின் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கிறது. இது படமான விதம், என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. (சிங்கம்புலி எப்போதுமே என்னை எரிச்சலூட்டக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இந்தப் பாடலின் சில கணங்களில் அவர் தருகிற முகபாவம் அத்தனை அற்புதமாக இருந்தது. கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்.



‘தாய் மடியில்’ பாடலுக்கு கைலேஷ் கேர்’ரின் குரலை உபயோகித்தது நல்ல தேர்வு. அவரின் கரகரப்பான குரல்தான் இந்தப் பாடலின் அடிப்படை வசீகரமே. பாடல்கள் உருவானதில் மிஷ்கினின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘வெளியே போடா’ன்னு பல சமயங்கள்ல என்னை ராஜா துரத்திடுவாரு. இருந்தாலும் கேட்டு கேட்டு இந்த விஷயங்களை வாங்கினேன்” என்று நேர்காணல்களில் சொல்கிறார் மிஷ்கின்.

போலவே இந்தத் திரைப்படத்தின் ‘சவுண்ட் டிசைனிங்கும்’ அட்டகாசம். இதற்காகவே இது நல்ல ஒலியமைப்பு உள்ள அரங்கத்தில் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. இல்லையெனில் இந்த அனுபவத்தை நிச்சயம் இழப்போம்.

**


டிரைய்லரைக் கண்டபிறகு உதய்நிதியின் மீது எனக்கு கூடுதல் அவநம்பிக்கையாக இருந்தது. மிஷ்கின் படத்தின் கனத்தை அவர் தாங்குவாரா என்பது குறித்து. பல காட்சிகளில் குளோசப் இல்லாமல், கூலிங்கிளாஸ் போட்டு  அவர் சமாளித்து விட்டாலும் (அல்லது மிஷ்கினின் உதவியுடன் சமாளிக்க வைக்கப்பட்டாலும்) உதய்நிதியின் நடிப்பில் குறையாக ஏதும் சொல்ல முடியாததே அவரின் சாதனை எனலாம். உதய்நிதியை இப்படி நடிக்க வைத்ததை மிஷ்கினின் சாதனை என்பதையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஜலதோஷம் பிடித்த மூக்கு  போன்ற அசட்டுத்தனமான சிகப்புடன் இருக்கும் அதிதி ராவின் முகத்தை என்னால் எப்போதும் அத்தனை ரசிக்க முடியாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். ‘அவன் கொலைகாரன் இல்லை. குழந்தை’ என்று ஒரு தேவதையால்தான் சொல்ல முடியும். அந்தத் தேவதைத்தனம் அவரின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் இருந்தது. (குறிப்பாக கொலைகாரன் பீடத்தில் கிடத்தி இவரை வெட்ட முனைய போது பளிங்கு போன்ற அந்தக் கழுத்தின் வெண்மை எத்தனை அழகாக இருந்தது?! நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ! அத்தனை அழகான கழுத்து).

நித்யா மேனனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றாலும் அந்தப் பாத்திரம் ஏன் அத்தனை ‘சினிக்’தனமாக நடந்து கொள்கிறது என்பது புரியவில்லை. ஒரு விபத்து அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை முடக்கிப் போட்டது குறித்தான எரிச்சலும் கோபமும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் அம்மாவை ‘வாடி போடி’ என்று அழைப்பதும் (நான் முதலில் ரேணுகாவை வேலைக்கார அம்மணி என்றே நினைத்தேன்). பார்ப்பவர்கள் அனைவரிடமும் எரிந்து விழுவதும் என அவரின் பாத்திர வடிவமைப்பு செயற்கைத்தனமாக இருந்தது. (‘அவள் ஒரு தொடர்கதை’ நாயகி ‘கவிதா’வைப் போல. ஆனால் ‘அஒதொ’வில் அதற்கான பின்னணிக்காரணங்களும் நியாயங்களும் இருந்தன.)

போலவே க்ரைம் சீனை பார்வையிடும் அசந்தர்ப்பமான நேரத்திலும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிற காவல்துறை அதிகாரி. தன் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமானதொரு மேனரிசத்தை தந்து விட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.

"எப்படியாவது தப்பிச்சிடுங்க சார்" என்று அதிதி ராவ் சாத்தியமில்லாத உபதேசத்தைச் சொல்லும் போது "முடியாதும்மா.. டயர்டா இருக்கு" என்று தன் கையறு நிலையை ஏற்றுக் கொள்ளும் காட்சியில் ராம் கவனத்தைக் கவர்கிறார்.


**

இப்போது இந்தத் திரைப்படத்தில் நான் உணர்ந்த போதாமைகளின் விஷயத்திற்கு வருவோம். முன்பே குறிப்பிட்டபடி இயக்குநரின் நோக்கில் இதற்கான விடைகள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எனக்கு உறுத்தலாக பட்டன. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் இவை பெரிதும் குறுக்கீடு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

காவல்துறையினரின் சாகசங்களை பெருமிதப்படுத்தும் விதத்தில் ‘சாமி சிங்கம்’ போன்ற மிகையான திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ‘தர்பாரிலும்’ என்கவுண்ட்டர் என்பது பெருமிதத்தின் கூச்சலாகவே இருந்தது. இப்படிப்பட்ட மிகைகள் ஒருபக்கம் என்றால் இந்தத் திரைப்படத்தில் காவல்துறையின் பங்களிப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.

ஒரு கொடூரமான மனிதனை, கண்பார்வையற்ற இளைஞன் தேடிப் பிடிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? இந்த அசாதாரணமான விஷயமும் முரணும்தான் இந்தப் படத்தின் அடிப்படை சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதற்காக உதய்நிதி பாத்திரத்தை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தி காவல்துறை ஆசாமிகளை ‘டம்மி’யாக்கியிருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கிற ஒருவரே ‘இந்தப்பா.. சம்பந்தப்பட்ட பைல்.. பல வருஷம் ஆகியும் எங்களால பிடிக்க முடியலை. நீயாவது முயற்சி பண்ணு’ என்று கொடுத்து விடுகிறார். நல்ல வேளை, அடுத்த காட்சியில் ஐ.ஜியே தன் தொப்பியைக் கழற்றி உதய்நிதியின் கையில் கொடுத்து விட்டு ‘நான் ரிசைன் பண்ணிட்டேன். நீ அந்தப் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணு’ என்பது போல் காட்சி வந்துவிடுமோ என்று பயமாகி விட்டது.

நித்யா மேனன் சிறப்பாக பணிபுரிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் சமகால அதிகாரிகளோடு பேசி வழக்கு தொடர்பான தகவல்களை வாங்க முடியாதா? இதற்காக உதய்நிதியை சிபிசிஐடி அலுவலகத்தில் திருட அனுப்புவது எல்லாம் அசாதரணமான கற்பனையாக இருக்கிறது. உதய்நிதியை ஆரம்பத்தில் ஒரு சராசரி நபர் என்கிற கோணத்தில் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய தேடலில் உள்ள சிரத்தையை காவல்துறையினரும் அறிந்து கொள்கிறார்கள். எனில் தங்களின் விசாரணையில் ஏன் அவரையும் இணைத்துக் கொள்ளவில்லை?

அதிதி ராவ் போகிற இடங்களுக்கு எல்லாம் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார் உதய்நிதி. Stalking என்கிற இந்த விஷயம் எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் மிஷ்கின் படத்திலேயே இது வருகிறது. ‘உங்க வீட்டு வாட்ச்மேன், வேலைக்காரங்களுக்கு காசு கொடுத்துதான் நீ போற இடங்களை தெரிஞ்சுப்பேன்” என்கிறான் நாயகன். இது போன்ற சில்லறைத்தனமான விஷயத்திற்கே நாயகி அவனை வெறுக்க வேண்டும். ஆனால் காதல் போல் ஏதோ ஒன்று அவளுக்குள் வந்து விடுவது அநியாயம்.

“அவன் என்னைக் காப்பாத்த வருவான்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை அதிதி ராவிற்கு வர வேண்டுமென்றால் அவர்களின் காதலும் பரஸ்பர புரிதலும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பழகத் துவங்கிய கணத்திலேயே அவள் கடத்தப்பட்டு விடும் போது அவளுக்கு எவ்வாறு அப்படியொரு நம்பிக்கை வரும்? இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக பதிவாகாததால் அதிதி ராவின் நம்பிக்கை மிகையாகத் தோன்ற வைக்கிறது.

கார் ஓட்டத் தெரிந்த ஒரு நபர் கூட இருக்கும் போது உதய்நிதியும், நித்யாவும் ஏன் அந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? கொலைகாரனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிங்கம்புலி, ஏன் எந்தவொரு உதவியும் இல்லாமல் அவனைப் பின்தொடர வேண்டும்..


இப்படி பல கேள்விகள் எனக்கும் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால்?


**

‘அவன் என்னைத் தேடி வருவான்; காப்பாத்துவான்’ என்கிற அதிதி ராவின் சவாலை ஏற்று கொலைகாரன் சில நாட்கள் அவகாசம் தருவது ஒரு கிளிஷேதான் என்றாலும் அதிலொரு வசீகரம் உள்ளது. காவல்துறை அதிகாரி சொல்வது போல ‘சராசரி நபர்களை விடவும் மனப்பிறழ்வு உள்ளவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் இயங்குவார்கள். எனவேதான் அதிதி ராவ் சொல்வது அவனுக்கு ஒரு சுவாரசியமான விளையாட்டாகப் படுகிறது. எனவேதான் உற்சாகமாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை தற்காலிகமாக சாகடிக்காமல் இருக்கிறான்.

அதே சமயத்தில் உதய்நிதி மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதை அறிந்து தோல்வியின் வாசனையையும் அவனால் உணர முடிகிறது. ‘கெளதம் வந்துட்டு இருக்கான்” என்று தன் வீழ்ச்சியை ஒப்புக் கொள்கிற இடத்திற்கு அவன் வந்து சேர்வது இந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

**

மனிதனை அவனிடமிருந்து உற்பத்தியாகிற கீழ்மைகளிலிருந்து விலக்கி, நல்லனவற்றின் பக்கம் தள்ளுவதைத்தான் ஏறத்தாழ அனைத்து மதங்களும் செய்ய முயல்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதில் நுழைக்கப்படுகிற இடைச்செருகல்கள் நஞ்சை கலந்து விடுகின்றன. சில மத நிறுவனங்களில் ‘காமம்’ என்பது பாவமானது என்கிற விஷயம் தொடர்ந்து விதைக்கப்பட்டு அது தொடர்பான குற்றவுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. மனிதனின் சில ஆதாரமான இச்சைகள் என்றுமே பாவமாக முடியாது. இது சார்ந்த விசாரணையையும் இந்தத் திரைப்படம் மேற்கொள்கிறது.

பெரும்பாலான மனச்சிக்கல்களின் ஆணிவேருக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது உளவியலின் ஆதாரமான கண்டுபிடிப்பு. ‘இயற்கையான உந்துதலால் செய்யப்பட்ட ஓர் இயல்பான காரியம், தவறு என்று கடுமையாக தண்டிக்கப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதால் ஒருவன் மிருகமாக உறுமாறுகிறான். சமூகத்தைப் பழிவாங்கத் துவங்குகிறான்.

கொடூரமான குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. இந்தச் சமூகத்தின் உள்ளே இருந்துதான் உருவாகிறார்கள். ஒருவகையில் சமூகம்தான் அவர்களை உருவாக்குகிறது எனலாம். அவர்களின் பங்களிப்பில்லாமல் குற்றவாளிகள் உருவாவதில்லை. குடும்பம், சமூகம், கல்விக்கூடம், அரசு என்று பல நிறுவனங்கள், குற்றவாளிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நீங்கள், நான், அவர்கள் என்று நாம் அனைவருமே இதற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாக இருக்கிறோம்.

எப்போதோ படித்த ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மாணவன் ஒருவன் பெரும்பான்மையான சமயங்களில் ஆபாச வசைகளை சக மாணவர்களிடம் இறைப்பதை ஓர் ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். இத்தனைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்தான். ஆனால் ஆசிரியரின் கண்டிப்பை அலட்சியப்படுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடையும் அவர், சிறுவனை இழுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறார். அவனுடைய பெற்றோர்களிடம் இவனைப் பற்றி புகார் சொல்லி கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கம். வீட்டை நெருங்கும் போது உள்ளே இருந்து பயங்கர சத்தம். சிறுவனின் பெற்றோர்கள் கர்ணகடூரமான ஆபாச வசைகளை பரஸ்பரம் இறைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஒரு கணத்தில் ஆசிரியரின் பார்வை முற்றிலுமாக மாறி விடுகிறது. சிறுவனின் ஆபாச பேச்சிற்கு காரணம் அவனல்ல என்கிற உண்மை புரிகிறது. சிறுவனின் மீதுள்ள கோபம் முற்றிலும் மறைந்து ஆசிரியரின் பார்வையில் அவன் அனுதாபத்திற்குரியவனாக அந்தக் கணத்தில் மாறி விடுகிறான்.

இந்த அடிப்படையான விஷயத்தைத்தான் மிஷ்கின் இந்தத் திரைப்படத்தில் ஒரு நேரடி நீதிக்கதையாக அல்லாமல் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வடிவத்தில் நுட்பமாக சொல்ல முனைகிறார்.

“அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தூக்குல போடுங்க சார்” என்று சந்தானத்தின் பாணியில் கூவுவது சராசரிகளின் இயல்பு. ஆனால் அறிவுத்தளம், ஆன்மீகத் தளம் போன்றவற்றின் பின்னணியில் இயங்குபவர்களால் அப்படி எளிதான. செளகரியமான தீர்விற்கு வந்து விட முடியாது. கொடூரமான குற்றவாளிகள் என்றாலும் அவர்களின் இளமைப்பருவ பிரச்சினைகளை, பின்னணிக் காரணங்களை அறிய முற்படும் அனுதாபத்துடன்தான் அவர்களால் இயங்க முடியும். அவர்கள் இந்த மனக்காயங்களுக்கு சிகிச்சையளித்து குற்றவாளிகளை மைய சமூகத்தில் கலக்க வைக்கவே முற்படுவார்கள். ஊரே அச்சத்துடன் வெறுத்து ஒதுக்கிய கொடூரன் அங்குலிமாலாவை புத்தர் தேடிக் குணப்படுத்தியது போல.

இந்தப் புரிதலுக்கும் முதிர்ச்சிக்கும் நாம் வந்தடையாவிட்டால் “ஏம்மா.. ஒரு கொடூரமான கொலைகாரனைப் போய் குழந்தைன்னு சொல்றீங்க?” என்று இந்தத் திரைப்படத்தில் வரும் பத்திரிகையாளர்களைப் போல நாமும் அதிர்ச்சியடைய வேண்டியதுதான்.

சைக்கோவாக நடித்த ராஜ்குமாரின் பங்களிப்பு அபாரம். அவருக்குள் இருக்கும் நல்லியல்பு ஒரு துவக்க காட்சியில் காட்டப்படுவதின் மூலம் ஒரு மனிதனுக்குள் உள்ள மிருகத்தின் அளவின் சதவீதமும் உணர்த்தப்படுகிறது.

மதவெறி பிடித்தவன், ஆணவக்கொலை செய்கிறவன், காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் அடிக்கிறவன் என்று நம் சமூகத்தில் பல சைக்கோக்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சைக்கோக்கள்தான். அவற்றின் சதவீதம்தான் மாறுபடுகிறது.

குற்றவாளிகளுக்குத் தரப்பட வேண்டியது தண்டனை அல்ல. மன்னிப்பு. ஏனெனில் அதன் சுமையை அவனால் தாங்கவே முடியாது. மன்னிப்புதான் குற்றங்களின் பங்களிப்பை கணிசமாக குறையச் செய்யும். தண்டனைகள் அல்ல.


suresh kannan

Thursday, January 23, 2020

'ஹீரோ' (2019) - மோசமான திரைக்கதைதான் இதன் வில்லன்




பி.எஸ். மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ஹீரோ’ என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் தலைப்பு ‘ஹீரோ’வாக இருந்தாலும் திரைக்கதைதான் இதன் வில்லன் என்று சொல்ல வேண்டும்.  இதில் இருந்த அபத்தமான ‘சினிமேட்டிக்’ தனங்களை கழித்து விட்டுப் பார்த்தால் இந்தப் படம் சொல்ல வரும் ஆதாரமான செய்தி சமகாலத்திற்கு அவசியமானதே.

அதற்கு முன் சில விஷயங்கள்.

சில வருடங்களுக்கு முன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு விநோதமான சத்தத்தை கேட்டேன். சைக்கிளில் இடியாப்பம் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து அந்தச் சத்தம் சிறிய ஸ்பீக்கரில் இருந்து ‘இடியோப்பம்… இடியோப்பம்.’ என்று தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு எழுந்த மனவெழுச்சி சொல்லில் அடக்க முடியாததாக இருந்தது. வாசிக்கும் சிலருக்கு இது நகைப்பாக, சாதாரணமானதாக கூட தோன்றலாம். ஆனால் எனக்கு அது அவசியமான ‘கண்டுபிடிப்பாக’ தோன்றியது.

சற்று யோசித்துப் பாருங்கள். சாலை வழியாக வீடு வீடாக பொருட்களை விற்றுச் செல்லும் சிறு வணிகர்கள் தங்களின் உரத்த குரலில் தாங்கள் விற்கும் பொருட்களை கூவிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டினுள் இருக்கும் இல்லத்தரசிகளின் காதில் விழுமாறு உரக்க கூவினால்தான் அவர்களின் பிழைப்பு நடக்கும். இப்படி தினமும் வருடக்கணக்கில் கூவுபவரின் தொண்டை என்னவாகும்? எத்தனை காலமாக இவர்கள் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்? ஆனால் ஒரு சிறிய கண்டுபிடிப்பு அவர்களின் பெரும் சுமைகளில் ஒன்றை இறக்கி வைத்திருப்பது எத்தனை மகத்தான விஷயம்?!

எளிய சமூகத்தின் மக்களுக்கு உபயோகமாகும், அன்றாட வாழ்வில் நாம் சிரமப்பட்டு செய்யும் விஷயங்களை எளிதில் கடக்க உதவும் ‘கண்டுபிடிப்புகள்’ உன்னதமானவை என்று எப்போதும் எனக்குத் தோன்றும். ரோபோட்டும் செயற்கைக்கோளும் மட்டும் விஞ்ஞான வளர்ச்சியில்லை. இளநீரை எப்படி எளிதாக துளையிட்டு பயன்படுத்துவது என்பது போன்ற சாதாரண ‘கண்டுபிடிப்புகளும்’ என்னளவில் முக்கியமானவையே.

நாம் பத்திரிகைகளில் அவ்வப்போது வாசித்திருப்போம். ‘+2 படிக்கும் மாணவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்தார்’ என்பது போன்று பல செய்திகள்.. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்புகளும் அவர்களும் என்னவானார்கள் என்கிற தகவலே நமக்குத் தெரியாது. அந்தக் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால் வராது.

இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போல சம்பந்தப்பட்ட மாணவர்களை ‘கார்ப்பரேட்’ ஆசாமிகள் கடத்தி கண்ணில் ஊசி போட்டு முடக்கி விடுவார்கள் என்றெல்லாம் ‘சினிமாத்தனமாக’ நம்ப நான் தயாரில்லை. அவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கவோ, பொருளுதவி செய்து ஆதரிக்கவோ எவரும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தமாக இருந்திருக்கக்கூடும். அவர்கள் அப்படியே முடங்கிப் போய் வேறு திசையில் சென்றிருப்பார்கள்.

**

இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாகவும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுவது போல நமது கல்விமுறையானது, சுயசிந்தனையற்ற, மனப்பாடக்கல்வியில் மூழ்கிய ‘ஆட்டுமந்தைகளைத்தான்’ பெரும்பான்மையாக உருவாக்குகிறது. ‘நான் டாக்டராகி ஊருக்கு சேவை செய்வேன்’ என்று இளமைப்பருவத்தில் மெய்யான ஆவலுடன் சொல்லுகிற சிறுவர்கள், வளர்ந்து சம்பந்தப்பட்ட கல்வியைக் கற்ற பிறகு அதே சேவை மனப்பான்மையுடன் பெரும்பாலும் இருப்பதில்லை. மாறாக தமது கல்வியைப் பயன்படுத்தி எப்படி அதிக பொருள் ஈட்டுவது என்கிற எண்ணம் தோன்றி அது ஒரு கட்டத்தில் அடங்காத வெறியாவும் பேராசையாகவும் மாறி விடுகிறது.

‘எந்தப் படிப்பில் படித்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்?” என்கிற சூழல்தான் பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலக்கல்வியை தீர்மானிக்கிறது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படித்தான் வழிநடத்துகிறார்கள். ஏறக்குறைய பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஒப்பான சூதாட்டம் இது. மாணவர்களின் தனித்தன்மை, திறமை, ஆர்வம் போன்வற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை.

ஒரு மாணவனின் தனித்திறமைகளை ஆரம்பக்கட்டத்திலேயே தொடர்ந்து கவனித்து அது தொடர்பான கல்விக்குள் அவனை வழிநடத்துவது தொடர்பான கல்விமுறை மேலைய நாடுகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வாறான அணுகுமுறை என்பது இங்கு துளியும் இல்லை.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, துளியும் சமூக அக்கறை இல்லாத, சுயநலத்தில் மூழ்கிய தலைமுறையினர்தான் பெருகி வருகிறார்கள். அபூர்வமாக, தியாகமும் பொதுநலமும் கொண்டு உருவாகி வருகிறவர்கள் எள்ளலாகவும் மலினமாகவும் பார்க்கப்படுகிறார்கள்; தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.


**

இந்தச் செய்தி ‘ஹீரோ’வில் மிக அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இவை சில காட்சிகளில் கூர்மையான வசனங்களாகவும் வெளிப்படுகிறது.

ஆனால் இதிலுள்ள மிகையான சினிமாத்தனங்கள், இந்த ஆதாரமான செய்தியை அமுக்கி ஒரு சலிப்பான அனுபவமாக மாற்றி விடுகிறது. இளம் திறமைகள் அடையாளம் காணப்படாததும் வளர்த்தெடுக்கப்படாததும் என்பது ஒரு சமூகப் பிரச்சினை. ஆனால் அதை இயல்பான, நம்பகத்தன்மையுடனான காட்சிகளாக சித்திரிக்காமல் பழைய கால நம்பியார், வீரப்பன் மாதிரி ‘கார்ப்பரேட் வில்லன்’ வழியாக சித்தரித்தது மோசமான கற்பனை.

தங்களின் லாபவெறிக்கு தடையாக உள்ள அனைத்தையும் கார்ப்பரேட்தனம் என்பது விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்பது உண்மைதான். ஆனால் அது இந்தத் திரைப்படத்தில் மிகையான வணிகத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே இதை ஒரு முக்கியமான சினிமாவாக ஆகி விடாத விபத்தைச் செய்திருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் என்பது ‘கண்டம்’ என்பார்கள். இதுவொரு கற்பிதம் அல்லது மூடநம்பிக்கை. ஆனால் மித்ரனும் இந்தக் கண்டத்தில் விழுந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய தொழில்நுட்பம் என்பது எத்தனை மாய வலைகளை, டிஜிட்டல் படுகுழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை, ஜனரஞ்சகமான மொழியில் தன் முதல் திரைப்படத்தில் (இரும்புத்திரை) சொல்லியிருந்தார் மித்ரன். (தோழி சமந்தா நடித்திருந்ததும் ஒரு கூடுதல் சிறப்பம்சம்). 😃 ஆனால் இரண்டாவது திரைப்படத்தில் இந்த ஜனரஞ்சகமான திரைமொழி சரிவர அமையவில்லை.

‘சூப்பர் ஹீரோ’ என்பவன் வானத்தில் இருந்து குதித்து நம்ப முடியாத சாகசங்களைச் செய்பவன் அல்ல. தம்மைச் சுற்றி நிகழும் அநீதியைத் தட்டிக் கேட்டு அதற்காகப் போராட முனையும் எந்தவொரு சாமானியனும் ஹீரோதான்’ என்கிற செய்தியைச் சொல்வதற்காக பல்வேறு நம்பமுடியாத திருப்பங்களையும் வணிக அம்சங்களையும் இயக்குநர் பயன்படுத்தியிருப்பது திகட்ட வைக்கிறது.

“மக்களுக்கு கல்வி தர்றதுக்காக கொள்ளையடிக்க ஆரம்பிச்சேன்” என்று ‘ஜென்டில்மேன்’ கதையை அர்ஜுனின் பிளாஷ்பேக்கில் உபயோகித்தது மட்டுமல்லாமல் அதையும் அவரின் வாயாலேயே வசனமாக சொல்ல வைத்தது நல்ல நகைச்சுவை. உண்மையில் இந்தத் திரைப்படத்தை ஷங்கரின் பாணியில்தான் மித்ரன் நகலெடுக்க முயன்றிருக்கிறார். இறுதியில் பெய்யும் பணமழை (சிவாஜி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இது) முதற்கொண்டு பல தடயங்கள் தெரிகின்றன.

இத்தனை தீவிரமான செய்தியை சொல்ல வரும் இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக் கணங்கள் ஒரு மட்டமான சினிமாவின் பாணியில் இருக்கின்றன. நாயகியோடு (இயக்குநர் பிரியதர்ஷனின் மகளாமே?!. செம க்யூட்!) சிவகார்த்திகேயன் அடிக்கும் ‘ரொமான்ஸ்’ லூட்டிகள் ஆரம்பத்திலேயே சோர்வை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் துணைநடிகரின் நிலைக்கு சிவகார்த்திகேயன் சென்று விடுகிறார்.

“மிஸ்டர். லோக்கல் திரைப்படத்தின் பயங்கரமான தோல்விக்குப் பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை” சிவகார்த்திகேயனுக்கு சற்று கைகொடுத்தது. ஆனால் அவர் ‘ஹீரோ’வில் மீண்டும் சறுக்கியிருப்பது துரதிர்ஷ்டம்.

**

மாணவர்களின் சுயசிந்தனையை வளர்க்காத சமூகச் சூழல்தான் இந்தத் திரைப்படத்தின் அடிப்படை. அப்படி விதிவிலக்காக மீறியெழுகிற இளைஞர்களும் சமூகத்தின் அவலமான சூழலால் காயடிக்கப்படுகிறார்கள். “நான் கண்டுபிடிச்சத மாத்திச் சொல்லி என்னையே திருடி’ன்னு சொல்லிட்டாங்க” என்கிற மனஉளைச்சலில் வருத்தப்பட்டு சாகிறாள் இதில் வருகிற ஓர் இளம்பெண்.

வெளிவந்த பிறகு, இந்தப் படமும் அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கித் தவித்ததை அவல நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்.




suresh kannan

Tuesday, January 21, 2020

“க்வீன்” – ஆணாதிக்க உலகில் தனித்துப் போராடும் ‘சக்தி’




பிரபலமான ஆளுமைகளைப் பற்றி biopic என்னும் வகைமையில் ஹாலிவுட் துவங்கி உலகெங்கிலும் பல உன்னதமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ (1982) துவங்கி பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இவைகளில் பெரும்பாலானவை பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவதோடு சர்ச்சைகளையும் கூடவே சந்தித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவிலும் இது போன்ற திரைப்படங்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரப் போராட்டக் காலத்தில் இயங்கிய ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் மிகையுணர்ச்சியோடும் போற்றிப் பாடும் தன்மையோடும் இருக்கும். அவற்றில் உள்ள எதிர்மறைத்தன்மை, விமர்சனம், சறுக்கல் போன்றவற்றோடு சமநிலையான வடிவத்தில் இங்கு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்கி விடவே முடியாது. சகிப்புத்தன்மையும் மனமுதிர்ச்சியும் குறைவாக இருக்கும் சூழலில் மிக எளிதில் உக்கிரமான எதிர்ப்புக்குரல்களும் சர்ச்சைகளும் கிளம்பி விடும். எனவே இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறான படைப்புகளை இங்கு உருவாக்கத் தயங்குகிறார்கள்.

கடந்த கால தலைவர்களைப் பற்றியே திரைப்படங்களை உருவாக்கி விட முடியாது என்கிற சூழல் இருக்கிற போது சமீபத்திய தலைவர்களைப் பற்றிய படைப்புகளை நம்மால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் போற்றிப் புகழும் விதமாக உருவாக்குவது வேண்டுமானால் சாத்தியப்படும்.

‘இரும்பு பெண்மணி’ “புரட்சித்தலைவி’ போன்ற அடைமொழிகளோடு பல பாராட்டுக்களைப் பெற்றதற்கு நிகராக  சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தவர், தென்னிந்திய நடிகையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா. திரைப்படமாக உருவாக்கப்படுவதற்கு மிக கச்சிதமான ஆளுமைகளுள் ஒருவர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, பல உயரங்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தவர். இவரின் மறைவிற்குப் பிறகு இவரைப் பற்றி உருவாக்கப்படவிருப்பதாக இருந்த சில திரைப்பட திட்டங்கள் தோன்றி சில காரணங்களால் மறைந்து போயின. இதற்கு முன்னால் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில் இவரின் சாயலையொட்டிய பாத்திரத்தை ஐஸ்வர்யா ராய் சிறப்பாக கையாண்டிருந்தார்.

இந்தச் சூழலில் கெளதம் வாசுதேவ மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் (கிடாரி திரைப்படத்தை இயக்கியவர்) ஆகியோர்களின் இயக்கத்தில் ‘Queen’ என்கிற வெப்சீரிஸ் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அனிதா சிவகுமாரன் எழுதிய ‘The Queen’ என்கிற நாவலையொட்டி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையையொட்டிய நெருக்கமான அடையாளங்களையும் பெயர்களையும் சம்பவங்களையும் இந்தத் தொடர் கொண்டிருந்தாலும் ‘இது எந்தவொரு தனிநபரைப் பற்றிய படைப்பும் அல்ல’ என்கிற முன்ஜாக்கிரதை குறிப்புடன்  ‘புனைவு’ என்கிற ஆதாரமான பாவனையில் பயணிக்கிறது. நெருப்பின் அருகில் செல்லாமலும் அதே சமயத்தில் அதிகம் விலகாமலும் ‘குளிர் காய்வது’ போன்ற கவனத்துடன் அவர் தொடர்பான அடையாளங்கள் தென்படுகின்றன. 

அவர் சம்பந்தப்பட்ட பல பெயர்கள் சற்றே மாறுதலுடன் இதில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஜிஎம்ஆர் என்பது ஒரு பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியின் பாத்திரத்தின் பெயர். இது யார் என்பதை எளிதில் யூகித்து விடலாம். சர்ச்சைகளையும் சட்டச் சிக்கல்களையும் தவிர்ப்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

ஒரு நடிகை மற்றும் அரசியல்வாதி தொடர்பான படைப்பு என்கிற அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டும் இந்தத் தொடரை ரசித்துப் பார்ககலாம். (அவ்வாறு தவிர்ப்பது சிரமமானது என்றாலும்).

பெண்களுக்கு பல அடிப்படையான சுதந்திரங்களும் உரிமைகளும் இன்றும் கூட மறுக்கப்படுகிற சூழலில் நாற்பதுகளில் பிறந்து நடுத்தர வர்க்க பின்னணியில் வளர்கிற ஒரு பெண்ணுக்கு அவளுடைய கனவுச் சிறகுகள் எப்படியெல்லாம் ஒடிக்கப்படுகின்றன என்பதை இந்தத் தொடர் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் விவரித்துச் செல்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘ஆணாதிக்கம்’ என்னும் சுவரில் முட்டி தோல்வியோடு திரும்பும் அவலம் பெண் சமூகத்திற்கு இருப்பதையும் ஆதாரமான விஷயங்களுக்கு கூட அவர்கள் போராடிப் பெற வேண்டிய அவலத்தையும் மிகையுணர்ச்சி இல்லாமல் சித்தரிக்கிறது.

**

இந்தி நடிகையான சிமி அகர்வால் ‘Rendezvous with…’ என்கிற தலைப்பில் பிரபலமான ஆளுமைகளைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தினார். அந்த வரிசையில் 1999-ம் ஆண்டு அவர் ஜெயலலிதாவை சந்தித்தார். அந்த நேர்காணலில் தன் வாழ்க்கை தொடர்பான பல தனிப்பட்ட தகவல்களை சொன்னார் ஜெயலலிதா.

அப்படியொரு நேர்காணல் தொடர்பான காட்சிகளோடு இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ அதே மாதிரியான காமிரா கோணங்கள். நிதானமான தொனி, மெல்லிய சிரிப்பு என்று ஜெயலலிதாவின் உடல்மொழியை நன்கு நகலெடுத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவர் தன் கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவுகூரும் விதமாக ‘பிளாஷ்பேக்’ உத்தியில் காட்சிகள் விரிகின்றன.

சக்தி சேஷாத்ரி – ஆம், அதுதான் இதில் ஜெயலலிதாவின் புனைவுப் பெயர். அவரின் வாழ்க்கை மூன்று படிநிலைகளில் வெவ்வேறு வயதுகளில் சொல்லப்படுகிறது. பள்ளிச் சிறுமியாக அனிகா, இளம் வயது நடிகையாக அஞ்சனா, அரசியல்வாதியாக ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சக்தியின் வாழ்க்கையில் பெரும்பான்மையான செல்வாக்கை செலுத்தியவர்கள் என்று இரு நபர்களைச் சொல்ல முடியும். ஒன்று அவரின் தாய் ரங்கநாயகி. இன்னொருவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ஜிஎம்ஆர். இருவரின் மீதும் ஒருவகையான love & hate உறவை வைத்திருக்கிறார் சக்தி. அதற்கான பல பின்னணிக் காரணங்கள் இந்தத் தொடரில் இருக்கின்றன.

இளம் வயதில், படிப்பில் சிறந்து விளங்கும் சக்திக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருக்கிறது. அதிலும் நகரின் சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது அவருடைய பெரும் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கிறது. “அது நடக்காது சக்தி. நீ வேலைக்கு போயாக வேண்டும். நம் குடும்பம் வறுமையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது” என்றொரு குண்டைப் போடுகிறார் சக்தியின் தாய்.

சக்தியின் தாத்தா அரண்மனையில் பணிபுரிந்தவர். செல்வாக்கான குடும்பம். ஆனால் சக்தியின் தந்தை ஊதாரித்தனமாக பெரும்பாலானவற்றை செலவு செய்து விட்டு மறைந்து விடுவதால் குடும்பம் தத்தளிக்கத் துவங்குகிறது. சக்தியின் தாய் சினிமாத்துறையில் துணை நடிகையாக இருப்பவர். இந்தக் குறைகள் பெரிதும் தெரியாமல் குடும்பத்தை நடத்திச் செல்கிறார். ஆனால் சினிமா வாய்ப்புகள் மங்கத் துவங்குகின்றன. வறுமை மெல்ல மெல்ல நெருங்குகிறது. எனவே தன் மகளை சினிமாவில் கதாநாயகியாக்குவதன் மூலம் குடும்பத்தை கரையேற்ற முயல்கிறார்.

கல்லூரி கனவில் இருந்த சக்திக்கு இது பெரிய இடியாக இருந்தாலும் குடும்பத்தின் வறுமை தொடர்பான நிதர்சனத்தை உணர்ந்தவுடன் ‘ஒரேயொரு படத்தில் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொள்கிறார். வேண்டா வெறுப்பாக திரைத்துறையில் இறங்கினாலும் அவர் மனம் முழுதும் கல்லூரி கனவிலேயே இருக்கிறது. ஆனால் அது நிஜமாவதில்லை. சினிமாவிலேயே அவர் நீடிக்க வேண்டியிருக்கிறது.

“என் படத்தில் கதாநாயகியாக நீ நடிக்கிறாயா?” – தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த உச்ச நடிகரான ஜிஎம்ஆர், சக்தியின் வீட்டிற்கே வந்து அவரிடம் கேட்கிறார். ஜிஎம்ஆரின் படங்களை சிறுவயதில் கண்டு அந்தக் காட்சிகளை தன் சகோதரனுடன் விளையாட்டாக நடித்துப் பார்த்திருக்கும் சக்திக்கு, தன் கனவு நாயகனை நேரில் சந்திக்கும் அனுபவம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. திரையில் கண்டு பிரமித்த ஒரு நாயகனை நேரில் காண்பதும் அவருக்கு இணையாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் சக்தியை வாயடைத்துப் போகச் செய்கின்றன. அவர் மீதுள்ள பிரேமையும் அவர் கண்ணை மறைத்து விடுகிறது.

“முடியாது. நடிக்க மாட்டேன்” என்று அந்தச் சமயத்தில் சொல்லியிருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாக திசை மாறியிருக்கும்” என்பது போல் நேர்காணலில் சொல்கிறார் சக்தி. வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் தடுமாறாமல் உறுதியான முடிவுகளை எடுக்காவிட்டால் ஒருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படும் என்பதற்கான உதாரணக்காட்சி இது.

ஜிஎம்ஆரின் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடிக்கிறார் சக்தி. இதற்கிடையில் ஒரு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. சக்திக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அது அமைகிறது. அதன் ஹீரோ சக்திக்கு மிகவும் பிடித்தவர். ஆனால் ஜிஎம்ஆரின் தொடர் ஒப்பந்தத்தில் இருப்பதால் அது நிகழ்வதில்லை. ஜிஎம்ஆரின் மறைமுகத் தடை ஒரு காரணமாக அமைகிறது.

உயர்தர கான்வென்ட் பள்ளி, ஆங்கிலத் திரைப்படங்கள், நாவல்கள் என்று ஐரோப்பிய மனநிலையிலான சூழலில் வளர்ந்த சக்திக்கு தமிழ் சினிமாவின் அபத்தமான உருவாக்கங்கள் பிடிப்பதில்லை. தன் நடிப்புத் திறனிற்கு தீனி போடும் வகையிலான வாய்ப்புகளுக்காக ஏங்கத் துவங்குகிறார். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக அறியப்படும் ஒரு நடிகரின் திரைப்படத்தில் நாயகியாக வரும் வாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஜிஎம்ஆரின் மறைமுகமான குறுக்கீட்டினால் அதுவும் தட்டிப் போகிறது. தான் ஜிஎம்ஆரின் கட்டுப்பாட்டில் இருப்பதை கசப்புடன் உணர்கிறார் சக்தி. எனவே அவருடன் முரண்டு பிடிக்கத் துவங்குகிறார்.

ஜிஎம்ஆரின் திரைப்படங்களில் வேறு இளம் நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ‘தானும் இந்த வரிசையில் ஒருவராக இருந்தோம்’ என்கிற நிதர்சனத்தை சக்தியின் ஈகோ ஏற்பதில்லை. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு ஒருவழியாக ஜிஎம்ஆரின் பிடியிலிருந்து அப்போதைக்கு விலகுகிறார்.

தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதன் இயக்குநரான சைதன்யா ரெட்டியின் கண்ணியமான அணுகுமுறையால் வசீகரிக்கப்படுகிறார் சக்தி. இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் முடிவை நோக்கி நகர்கிறார்கள். ஆனால் திருமண நாளன்று சைதன்யா வர முடியாத சூழல் ஏற்படுகிறது. ‘ஏற்படுத்தப்படுகிறது’ என்றும் சொல்லலாம். இந்தித் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு சைதன்யாவிற்கு வருவதால் திருமணத்தை விட்டு விலகிப் போகிறார். இதற்குப் பின்னாலும் ஜிஎம்ஆரின் அசைவுகள் இருப்பதை பிறகு அறிந்து நொந்து போகிறார் சக்தி.

தாயைப் போலவே சக்திக்கும் சினிமா வாய்ப்புகள் மங்கத் துவங்குகின்றன. தாயின் மரணமும் அவரை தனிமையில் ஆழ்த்துகிறது. அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகியிருக்கும் ஜிஎம்ஆர் அரசியல் பணிகளில் ஈடுபட சக்திக்கு அழைப்பு விடுகிறார். உறுதியாக ‘நோ’ சொல்வதற்கான இன்னொரு தருணம். 

முதலில் மறுத்தாலும் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மறுக்க வேண்டாமே என்று ஏற்றுக் கொள்கிறார் சக்தி.  ஒரு நடிகையின் இந்த அரசியல் நுழைவு, முதல்வரைச் சுற்றி இருப்பவர்களுக்கு பிடிப்பதில்லை. இதனால் பல்வேறு அவமானங்களைச் சந்திக்கிறார் சக்தி. பொதுவெளியில் நுழையும் ஒரு பெண் சந்திக்கக்கூடிய பிரத்யேகமான அவமானங்களை எதிர்கொள்கிறார். சக்தி ஒரு நடிகையும் என்பதால் அது தொடர்பான கூடுதல் அவதூறுகள் சொல்லப்படுகின்றன.

இதற்கிடையில் ஜிஎம்ஆரின் மரணம் நிகழ்கிறது. தாயின் மறைவிற்குப் பிறகு இன்னொரு அதிர்ச்சியான செய்தி இது. அரசியல் ஆசானின் இழப்பின் சூடு அடங்குவதற்குள் எதிர்ப்பாளர்களின் கூக்குரல்கள் உக்கிரமாகின்றன. அரசியலை விட்டு விலகி விடலாமா என்று கூட சக்திக்கு தோன்றுகிறது.

ஆனால் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் அவதூறுகளையும் படிக்கட்டாகக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னே நகர்வதாக சக்தி முடிவு செய்யும் காட்சியோடு இந்தத் தொடர் நிறைவுறுகிறது. நேர்காணலின் மூலம் அவர் தமிழகத்தின் முதல்வராக இருப்பதையும் அறிந்து கொள்கிறோம்.

**

இந்தத் தொடரில் மொத்தம் பதினோரு எபிஸோட்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் ஐம்பது நிமிடங்களுக்கு நீடிக்கக்கூடியது. ‘This is a beginning’ என்று சக்தி சொல்லும் வசனத்தை வைத்துப் பார்க்கும் போது இதன் இரண்டாவது சீசன் விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. சக்தி சந்தித்த அரசியல் போராட்டங்கள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள் தொடர்பான காட்சிகள் அதில் விவரிக்கப்படலாம்.

சிறுவயது சக்தியாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். தாமதமாக பள்ளிக்கு வரும் மாணவிகளை பள்ளியின் கேப்டனான அவர் கனிவும் கறாருமாக கண்டிக்கும் காட்சியுடன் இந்தத் தொடர் துவங்குகிறது. தன் கல்லூரி கனவு நொறுங்கிப் போவதை அறிந்து உடைந்து அழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் அனிகாவின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

சக்தியின் தாயாக சோனியா அகர்வால் தனது மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அடக்கமான, அழுத்தமான குரலில் நிதானத்துடன் வாழ்க்கையின் நிதர்சனத்தை சக்திக்கு புரிய வைக்கும் காட்சிகள் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. இவரது பாத்திரம் துவக்கத்தில் ‘வில்லி’ போன்று எதிர்மறைத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் தொடரின் பிற்பாதியில் இவரது கையறு நிலையும் நெகிழ்ச்சியாக பதிவாகியிருக்கிறது. ஆணாதிக்க உலகில் பலியாகும் இன்னொரு பெண் இவர் என்பது சக்திக்கும் புரிய நேர்வதால் அனுதாபம் ஏற்படுகிறது.

ஜிஎம்ஆராக மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளார். தோற்றப் பொருத்தமும் உடல்மொழியும் குறை சொல்ல முடியாத வகையில் வெளிப்பட்டுள்ளது. கையை அடிக்கடி உயர்த்துவது, துள்ளிக் குதித்து நடப்பது போன்ற எம்.ஜி.ஆரின் வழக்கமான ஆரவாரங்கள் அல்லாமல் திரையில் நாம் பார்க்காத, நடைமுறையில் இருக்கக்கூடிய நிதானமான உடல்மொழியை இந்திரஜித் கடைப்பிடித்துள்ளது இயல்பாக உள்ளது. எதிராளியை எடை போடும் வகையில் கூர்மையாக கவனிப்பது, தன்னுடைய அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் உறுத்தாத வகையில் ஆனால் அழுத்தமாக செலுத்துவது என்று இவரது பாத்திர வடிவமைப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

நடிகையாக மலரும் இளம் பருவத்தின் பாத்திரத்தை அஞ்சனா ஜெயப்பிரகாஷ் ஏற்றுள்ளார். இவர் அதிகம் பிரபலமில்லாதவராக இருந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கும் தெலுங்கு நடிகருக்கும் இடையில் மலரும் காதல் தொடர்பான காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த முதல் சீஸனில் அஞ்சனா நடிக்கும் காட்சிகள்தான் அதிகம் உள்ளன.

சக்தியின் நெருக்கமான தோழி சசிகலாவாக விஜி சந்திரசேகர், ஆலோசனைகள் சொல்லும் பத்திரிகையாளர், (சோ ராமசாமி) சக்தி நடிக்கும் முதல் திரைப்படத்தின் இயக்குநராக, கெளதம் வாசுதேவ மேனன், (ஸ்ரீதர்) ஆகிய பல துணைப் பாத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஜிஎம்ஆரின் நிழல் அடியாளாக, பிரதீபன் என்கிற பாத்திரத்தில் நடிப்பவர் தனித்துத் தெரிகிறார். சக்தியை முதலில் இருந்தே வெறுக்கும் இவர் அதற்காக பல உள்ளடி வேலைகளைச் செய்கிறார். தொடரின் இறுதிப்பகுதியில் இவருக்கும் சக்திக்கும் நிகழும் உரையாடல் சற்று நாடகத்தனமாக தெரிந்தாலும் சிறப்பாக அமைந்துள்ளது.

**

இந்தத் தொடரின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநரின் பங்கை (குமார் கங்கப்பன்) பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். அந்தக் காலத்தின் மாநகர பேருந்து, திரைத்துறை வண்டி, வார இதழ்கள், உள்ளரங்கப் பொருட்கள் போன்றவற்றை மிகுந்த மெனக்கெடலுடன் சிறப்பாக உருவாக்கியுள்ளார்கள். காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு இது பெருமளவு உதவியுள்ளது. போலவே ஆடை வடிவமைப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் சிரத்தையாக உழைத்துள்ளார்கள்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. ஜிஎம்ஆரின் மூக்குக் கண்ணாடியின் ‘க்ளோசப்’ வழியாக தொடரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம். சக்தியின் நேர்காணல் வழியாக பின்னோக்கி நகரும் பிளாஷ்பேக் காட்சிகளை சிறப்பாக தொகுத்துள்ளார் எடிட்டர் பிரவீன் ஆண்டனி.

இந்தத் தொழில்நுட்ப கூட்டணியில் வசனகர்த்தா ரேஷ்மா கட்டாலாவின் பங்கை தனித்துக் குறிப்பிட வேண்டும். ஒரு நாவலையொட்டி உருவாக்கிய தொடராக இருந்தாலும் ரேஷ்மாவின் கூர்மையான வசனங்கள் சூழலுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகும் அளவிற்கு சிறப்பாகவும் தனித்துவமாகவும் எழுதப்பட்டுள்ளது.

“நீங்கள் ஜிஎம்ஆரை காதலித்தீர்கள், அல்லவா?” என்று நேர்காணல் செய்பவர் சக்தியைக் கேட்கிறார். அதற்கான பதிலை சக்தி சொல்கிறார். “Everybody loved him’ சற்று இடைவெளி விட்டு நிதானத்துடன்  “But I am not everybody” என்று சக்தி சொல்லும் இந்த இரண்டு வரி வசனத்தின் வழியாக இந்தத் தொடரின் ஒட்டுமொத்த மையமும் வந்து விட்டதாகத் தோன்றுகிறது.

தனக்கான பிரத்யேக அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஆணாதிக்க உலகில் தொடர்ந்து தேடியலையும் சக்தியின் பிடிவாதமும் மனஉறுதியும் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சினிமா கதை தொடர்பான ஒரு விவாதத்தில் சக்தி தானாக முன்வந்து சொல்லும் ஒரு திருத்தம் அனுமதிக்கப்படும் போது “என் புத்திசாலித்தனத்திற்காக முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்’ என்கிறார் ‘முதல்வர்’ சக்தி. இப்படி பல கூர்மையான வசனங்கள்.

இதில் சித்தரிக்கப்பட்டுள்ள ‘சக்தி’ என்னும் புனைவுப் பாத்திரம், நிஜத்தில் பெண்களுக்கான முன்னுதாரணம், நேர்மறைத்தன்மை போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் அதன் கூடவே அகங்காரம், ஊழல், பழிவாங்கும் உணர்ச்சி…என்று பல எதிர்மறைத்தன்மைகளையும் கொண்டதாக இருந்தது. இது தமிழ் சமூகம் அறிந்த விஷயம்தான். ஆனால் இவை இந்தத் தொடரில், சர்ச்சை கருதியோ என்னவோ, அறவே தவிர்க்கப்பட்டிருக்கிறது. ‘தனக்கான அடையாளத்தை நோக்கிப் போராடும் ஒரு பெண்’ என்கிற சித்திரமே பெரிதும் வெளிப்பட்டுள்ளது.

ஒருவரின் இளம் வயது சூழல், அனுபவம் போன்றவைதான் அவரது பிற்கால ஆளுமையையும் குணாதிசயங்களையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள், உளவியல் வல்லுநர்கள். தாயிடமிருந்து சிறிது மட்டுமே கிடைத்த அன்பு, ஆசைப்பட்ட கல்வியை படிக்க முடியாத தடை, தனக்குப் பிடிக்காத திரைத்துறையில் தள்ளிவிடப்பட்ட சூழல், ஆண்களின் அகங்கார உலகில் சிறைப்பட்ட அவலம், அடைந்த அவமானங்கள், வீழ்ச்சிகள் போன்றவை, பின்னர் வெளிப்பட்ட சக்தியின் எதிர்மறைத்தன்மைகளுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஆனால் எந்தவகையிலும் அந்த எதிர்மறைத்தன்மைகளை நியாயப்படுத்தி விடவும் முடியாது.

MX Player என்கிற நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடரை இணையத்தில் இலவசமாக பார்க்கலாம். ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம் போன்ற மொழிகளின் ‘மொழிமாற்ற’ தேர்வுகளும் இதில் உள்ளன. ஆனால் தமிழ் வடிவத்தில் பார்த்தால் ‘டப்பிங் படத்தைப்’ பார்ப்பது போலவே நெருடலாக இருக்கும். இதற்கு மாற்றாக ‘Tamil – English’ என்றுள்ள தேர்வில் பார்ப்பது சிறந்தது. தமிழ் வசனங்கள் தமிழிலும் ஆங்கில வசனங்கள் ஆங்கிலத்திலும் ஒலிப்பதால் ‘டப்பிங்’ நெருடலைத் தாண்டி வர முடியும். சப்டைட்டிலும் உள்ளதால் வசனங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று சக்தி ஆசைப்பட்டது ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையையே. ஆனால் காலமும் சூழலும் அவரை விரும்பாத பல திசைகளில் நகர்த்திச் சென்றது. அந்த வகையில் பல பெண் பிரபலங்களின் வாழ்க்கை போராட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாக இந்தத் தொடரை பார்க்க முடியும். அடுத்த சீஸன் எப்போது வெளியாகும் என்கிற ஆவலை இந்த முதல் சீஸன் ஏற்படுத்தியுள்ளது. 


(பேசும் புதிய சக்தி -  ஜனவரி 2020 இதழில் பிரசுரமானது)




suresh kannan

Sunday, January 19, 2020

சாம்பியன் (2019) சுசீந்திரனின் தொடர் விளையாட்டு



‘கென்னடி கிளப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சுசீந்திரனின் சமீபத்திய திரைப்படமான ‘சாம்பியன்’ பார்த்தேன். இதுவும் Sports genre படம்தான். இயக்குநருக்கு இந்த வகைத் திரைப்படங்கள் சற்று நன்றாக இயக்க வருகிறது என்பதற்காக இந்த வகைமையையே தொடர்வது சலிப்பூட்டுகிறது. இந்த ‘விளையாட்டுக்கு’ அவர் சற்று இடைவெளி தரலாம். இது விளையாட்டு சார்ந்த திரைப்படம் என்றாலும் அவை சார்ந்த காட்சிகள் அதிகமில்லை என்பது ஒரு சிறிய வித்தியாசம்.

வெண்ணிலா கபடி குழுவில் சாதிய அரசியல், ஜீவாவில் பிராமண அரசியல், கென்னடி கிளப்பில் வடஇந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள ஊழல் என்கிற வரிசையில் சித்தரித்த இயக்குநர், இந்தத் திரைப்படத்தில் வறுமைப் பின்னணியில் உள்ள சேரி வாழ் இளைஞர்கள், வன்முறையின் பால் எளிதில் விழுந்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதை கையில் எடுத்திருக்கிறார். (இதுவும் பழைய கருத்தாக்கமே என்றாலும்).

தனது முந்தைய திரைப்படங்கள் ஒன்றில் செய்த பிழைக்கான பரிகாரத்தை இதில் இயக்குநர் செய்திருக்கிறார் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் சில எளிய சமூகத்து இளைஞர்கள் கொடூரமான வன்முறையில் ஈடுபடுவதைக் காட்டி அதிர்ச்சியளித்திருந்தார். அவர்கள் அப்படி உருவாகி வருவதின் பின்னணி குறித்த கரிசனமோ, சமூகவியல் பார்வையின் அக்கறையோ அதில் இல்லை. இது பற்றிய விமர்சனங்கள் அப்போது வந்திருந்தன. எனவே அது குறித்தான சுயபரிசீலனையுடன் இவ்வாறானதொரு மையத்தை ‘சாம்பியன்’ திரைப்படத்தில் இயக்குநர் கையாண்டிருக்கலாம் என்பதென் யூகம். எதுவாக இருந்தாலும் இயக்குநருக்கு பாராட்டு.

**

கால்பந்து விளையாட்டுக்கும் எளிய சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு உலகெங்கிலும் உண்டு. அவ்வாறாக கால்பந்து விளையாட்டில் திறமை கொண்ட இளைஞன் ஜோன்ஸ். (விஷ்வா). வடசென்னையில் வசிப்பவன். ஆனால் அவனுடைய அம்மாவோ தன் மகன் விளையாட்டில் செல்லக்கூடாது என்று உறுதியாக தடுக்கிறாள். அதற்கொரு பின்னணிக்காரணம் உண்டு. இப்படியான தடைகள் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்கள் போன்றவற்றைத் தாண்டி தனது கோச் சாந்தா (நரேன்) உதவியுடன் விளையாட்டில் மெல்ல முன்னேறி வருகிறான் ஜோன்ஸ்.

இந்தச் சமயத்தில்தான் தனது தந்தையின் (மனோஜ்) மரணம் தற்செயலானதல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று அறிகிறான். பழிவாங்க அவன் மனம் துடிக்கிறது. தனது ஆதர்சமான கால்பந்திற்கும் பழிவாங்கும் உணர்ச்சிக்கும் இடையே தத்தளிக்கிறான். அவனது கனவு என்னவானது என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன.

**

இந்தத் திரைப்படத்தின் முன்னணி பாத்திரத்திற்காக ஒரு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநரைப் பாராட்டியாக வேண்டும். பொதுவாக முன்னணி நடிகர்களின் படத்தையே நாம் அதிகம் கவனிக்க விரும்புவோம். நல்ல கதையம்சம், இயக்கம் போன்றவற்றைக்  கொண்டிருந்தாலும் கூட அவை அறிமுகமல்லாத புதுமுகங்களால் நிறைந்திருந்தால் நாம் ஓரக்கண்ணால் மட்டுமே அறிய விரும்புவோம் அல்லது முற்றாகவே கூட புறக்கணித்து விடுவோம்.

இந்தச் சூழலில், ஜோன்ஸ் என்கிற பாத்திரத்திற்கு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறப்பான அம்சம். ஒருவேளை விஷ்வா என்கிற அந்தப் புதுமுகம், கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவனாக இருந்தது அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதுவொரு நல்ல விஷயம்.

இந்தி நடிகர் ‘நவாசுதீன் சித்திக்’கின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் இளைஞனான விஷ்வா, இந்தத் திரைப்படத்தில் தனது பங்களிப்பை அருமையாகத் தந்துள்ளார். அறிமுகம் இல்லாத பிம்பம் என்பதால் துவக்கத்தில் இவரை அசுவாரஸ்யமாக கவனித்தாலும் போகப் போக தனது பாத்திரத்தில் ஒன்றி நடித்து நம்மையும் ஈர்த்து விடுகிறார். “பழிவாங்கும் உணர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை சார்..” என்று கோச்சிடம் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

இரண்டு இளம்பெண்கள் இதில் வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சம்பிரதாய நாயகி போல அவர்களின் பாத்திரம் அமைக்கப்படவில்லை என்பதே பெரிய ஆறுதல். பள்ளிக்கூட தோழி மற்றும் காதலியுமாய் வரும் ‘புஷ்டியான’ பெண்.. (கழுக் மொழுக் என்று ‘ஸெரலேக்’ குழந்தை போல அத்தனை அழகு) ஜோன்ஸின் நலவிரும்பியாக இருக்கிறார். சரியான திசையில் நல்வழிப்படுத்துகிறார். கல்லூரித் தோழியாக வரும் பெண்ணும் அத்தனை அழகு. இவர்களின் உறவு காதலா என்பதை இவர்களே அறிவதற்குள் வர்க்க வேறுபாடு காரணமாக தடை ஏற்பட்டு விடுகிறது.

ஜோன்ஸின் தாயார் ‘ஜெயா’வாக நடித்த வாசுகியின் பங்களிப்பைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். ஏறத்தாழ ‘அசுரன்’ திரைப்படத்தில் வரும் வயதான தனுஷின் பாத்திரம்தான் இதுவும். தன் மகன் வன்முறையின் பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காக பல அவமதிப்புகளைப் பொறுத்துச் செல்கிறாள். “அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. உங்க அப்பாவை கொன்னவன் அவன்தான்” என்று தமிழ் சினிமாவின் வழக்கமான அம்மா போல மகனுக்கு பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்தெடுக்காமல் அதை அறிந்திருந்தாலும் அமைதியாக இருப்பது இந்தப் பாத்திரத்தின் இயல்பை மிகையில்லாமல் ஆக்குகிறது.

ஜோன்ஸின் தந்தையாக, பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்திருக்கிறார். குறைந்த நேரமே வந்தாலும் அவரது பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஒரு நல்ல ‘கோச்’சுக்குரிய கண்டிப்பையும் கனிவையும் நரேன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘கைதி’ ‘சாம்பியன்’ என்று குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நரேன் தொடர்வது நல்ல விஷயம். ‘ஸ்டன்’ சிவா பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ராஜிவ்காந்தி’ என்கிற பெயரில் வரும் வினோத் சாகரின் அருமையான நடிப்பு தனித்துத் தெரிகிறது.

‘தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கும்’ வழக்கமான கதைதான் என்றாலும் சுசீந்திரனின் திரைக்கதையாக்கம் குறை சொல்ல முடியாதபடி சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. சில காட்சிகளில் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை பார்வையாளர்களுக்கும் கடத்தி விடும் தனது வழக்கமான பாணியில் வெற்றி பெறுகிறார் சசீந்திரன். குறிப்பாக கால்பந்திற்கும் வன்முறைக்கும் இடையில் ஜோன்ஸ் தத்தளிக்கும் படத்தின் மையம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. பிளாஷ்பேக் உத்தி மிகப் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘அரோல் கரோலி’யின் பின்னணி இசை நன்கு அமைந்துள்ளது.

தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்றிருந்த காலக்கட்டத்தில், பல அருமையான தலைப்புகள் வெளிவந்தன. (தலைப்பு மட்டும் நன்றாக இருப்பது வேறு விஷயம்). ஆனால் இப்போது இந்தச் சலுகை நின்றவுடன் மறுபடியும் காமா சோமாவென்று தலைப்பு வைக்கிறார்கள். சுசீந்திரன் இந்தத் திரைப்படத்திற்கு தமிழில் ஒரு நல்ல தலைப்பு வைத்திருக்கலாம்.

நிச்சயம் பார்க்கத் தகுந்த திரைப்படம் – சாம்பியன்.


suresh kannan

Sunday, January 12, 2020

கென்னடி கிளப் (2019) - 'பிகிலை' விடவும் சிறந்த திரைப்படம்





ஆகஸ்ட் 2019-ல் வெளியான ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தை தமிழ் சமூகம் அவ்வளவு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதற்குப் பிறகு வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை விடவும் இது சிறந்த திரைப்படம் என்பேன்.

பொதுவாகவே இயக்குநர் சுசீந்திரனின் திரைப்படங்கள் அடிப்படையில் சுவாரசியமான திரைக்கதையையும் அதனுள் பொதிந்து வைக்கப்பட்ட நுட்பமான அரசியல் செய்தியுடனும் இருக்கும். தனது முதல் திரைப்படமான ‘வெண்ணிலா கபடி குழு’விலேயே இதை அழுத்தமாக நிரூபித்தவர் சுசீந்திரன்.

ஆனால் ஒரு கட்டத்தில் மிக பலவீனமான திரைப்படங்களில் அவரது பெயரைப் பார்க்க முடிந்தது. அது அவரது திரைப்படம்தானா என்று இன்னொரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுமளவிற்கு அவை சுமாரான உருவாக்கங்களாக இருந்தன.

‘வெண்ணிலா கபடி குழு’வைப் போலவே ‘கென்னடி கிளப்’பும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட, அதன் ஆதார வடிவமைப்பில் வந்த திரைப்படம்தான். ‘வெண்ணிலா கபடி குழு’வில் சாதிய அரசியலைப் பேசிய சுசீந்திரன், ‘ஜீவா’வில் பிராமண ஆதிக்கம் நிறைந்துள்ள கிரிக்கெட் துறையைப் பற்றி பேசினார். ‘கென்னடி கிளப்’பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு வீழ்கிறது’ என்கிற அரசியலைப் பேசியுள்ளார்.

**

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் வட்டம் என்னும் பிரதேசத்தில் படம் துவங்குகிறது.  ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான சவரிமுத்து. (இயக்குநர் பாரதிராஜா). அந்தப் பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு கபடி பயிற்சி அளிக்கும் ‘கிளப்’ ஒன்றை நடத்தி வருகிறார். விளையாட்டுத் துறையில் முன்னேற்றுவதின் வறுமையிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் என்பதே அவர் நோக்கம்.

வயது காரணமாக ஒரு கட்டத்தில் அவரால் பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. எனவே தன் முன்னாள் மாணவனான முருகானந்தத்தை (சசிகுமார்) அழைத்து பயிற்சியளிக்கச் சொல்கிறார். ஒவ்வொரு கட்டமாக முன்னேறி அந்த அணியை தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லும் முருகானந்தம், வடவர்களின் அரசியலையும் விளையாட்டுத் துறையில் உள்ள ஊழலையும் எதிர்கொள்ளத் துணிகிறார். அவர் வெற்றி பெற்றாரா என்பதை பரபரப்பான காட்சிகளின் மூலமாக சொல்லியிருக்கிறார்கள்.

**

இதுவரை பார்த்திலேயே இந்தத் திரைப்படத்தில்தான் சசிகுமார் அத்தனை ஸ்மார்ட்டான தோற்றத்தில் இருக்கிறார். சற்று ஒட்ட வெட்டப்பட்ட சிகையலங்காரம், ஃபிட்னெஸ் உடன் கூடிய தோற்றம் என்று பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறார். இவருக்கு நாயகி, டூயட் என்றெல்லாம் வைத்து திரைக்கதையை கெடுக்காத விதத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். என்னவொன்று, சசிகுமார் ஆங்கிலம், இந்தி பேசும் சமயங்களில் மட்டும் சற்று காமெடியாக இருக்கிறது. வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளித்துப் பேசும் காட்சிகளில் வசனங்களும் சசிகுமாரின் நடிப்பும் நன்றாக உள்ளன.

நடிகர் சிவாஜியை ‘முதல் மரியாதையில்’ இயல்பாக நடிக்க வைத்திருந்தாலும் பாரதிராஜாவிற்குள்ளும் ஒரு ‘சிவாஜி’ உண்டு. மேடைப் பேச்சுகளில் அதை காணலாம். அந்தத் தன்மை இத்திரைப்படத்தின் சில காட்சிகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக இறுதியில் அமைச்சரிடம் ‘நியாயத்தைப்’ பேசும் காட்சி. ஆனால் இதர காட்சிகளில் தன் பாத்திரத்திற்கு மிகுந்த நியாயம் சேர்த்துள்ளார் என்று சொல்லலாம்.

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை, கன்னத்தில் அறைந்து உபதேசம் சொல்லி பிறகு அரவணைக்கும் காட்சி, ஆணாதிக்க சமூகத்தை பெண்கள் எதிர்கொள்வதற்காக உத்வேகம் அளிக்கும் துவக்க காட்சி என்று பல இடங்களில் தன் பங்களிப்பைச் சிறப்பாக தந்துள்ளார் பாரதிராஜா.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் இளமைத் துள்ளலாக நடிப்பதை நாம் வியக்கிறோம்; பாராட்டுகிறோம். இந்த வரிசையில் பாரதிராஜாவையும் நாம் அதிகம் பிரமிக்க வேண்டும்.

அணியில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பின்னணியையும் இயக்குநர் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவை படத்தின் போக்கில் அழுத்தமாகத் தொடரவில்லை. ‘பத்தோடு’ பதினொன்று என்று ஆகி விடுகிறார்கள். ‘கவிதை’ சொல்லி இம்சை செய்யும் ‘காதல்’ இளைஞனும்.. ‘டேய் புருஷா. இங்க வாடா’ என்று அலப்பறை செய்யும் பெண்ணும் கவர்கிறார்கள். பாரதிராஜாவின் மகளாக வரும் பெண்ணின் அழகான தோற்றம் காரணமாக தனித்து ‘நிற்க’ வைக்கப்பட்டிருக்கிறார்.

சுசீந்திரனின் அறிமுகமான ‘சூரி’யின் காமெடியும் ஒரு காட்சியில் உண்டு. ஆனால், ‘சூரி’ சுயநல நோக்குடன் பயிற்சியளிக்கும் அணியும் சசிகுமாரின் அணிக்கு இணையாக முன்னேறி வருவதில் ஒரு மாதிரியான லாஜிக் பிழையிருக்கிறது. (ஹீரோவும் காமெடியனும் ஒரே தகுதியில் இருக்கலாமா?)

**

ஏறத்தாழ ஷாரூக்கானின் ‘சக்தே’ திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைப்பையே இத்திரைப்படமும் பின்பற்றியிருக்கிறது. அதில் மத அரசியல் என்றால் இதில் இன அரசியல்.

விஜய் நடித்த பிகிலுக்கு முன்பே வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் இரண்டிற்கும் சில நெருக்கமான சாயலை கவனிக்க முடிகிறது. பாரதிராஜாவின் உடல்நலம் குன்றி விடுவதால் புதிய ‘கோச்’ ஆக சசிகுமார் உள்ளே நுழைகிறார். அணியை தேசிய அளவிற்கு இட்டுச் செல்கிறார்.

‘பிகில்’ திரைப்படத்திலும் இதுவே. கோச்சாக இருந்த நண்பன் கொலை செய்யப்படவே, முன்னாள் வீரரான விஜய் புதிய ‘கோச்’ ஆக மாறுவதைப் பார்க்க முடிகிறது. (அட்லி மீது ஏற்கெனவே ஏராளமான புகார்கள் இருக்கும் போது புதிதாக நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. சும்மா… சுட்டிக் காட்டினேன்).

Sports film என்னும் போது அது குறிப்பிட்ட க்ளிஷேக்களில் சிக்கிக் கொள்வது இயல்பு. இதிலும் அப்படியான தேய்வழக்குகள் உள்ளன. என்றாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையின் மூலம் கவர்கிறார் சுசீந்திரன். குறிப்பாக விளையாட்டுப் போட்டி தொடர்பான காட்சிகள் அதற்குரிய முறையில் பரபரப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பல கோடி செலவு செய்த ‘பிகில்’ திரைப்படத்தை விடவும் இது மேன்மையானது. மேலும் ‘பிகிலில்’ இருந்த பல அலைபாய்தல்கள் இதில் இல்லை. மிக நேர்மையாக நேர்க்கோட்டுப்பாதையில் பயணித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் நிகழும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட பல காரணங்களினால், இந்தியா சர்வதேச போட்டிகளில் தோற்றுப் போய் வெளியேறும் அவலம் இத்திரைப்படத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஊழல் அதிகாரியாக முரளி சர்மா சிறப்பாக நடித்துள்ளார். பார்வையாளர்களை நன்றாகவே கோபப்படுத்துகிறார். ஆனால் தமி்ழ்நாட்டு அணியை மேம்படுத்திக் காட்ட ஏறத்தாழ அனைவரையும் வில்லனாக சித்தரிக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

‘சக்தே’ திரைப்படத்தில், அணி ஒற்றுமையில் இருக்கும் பலவீனம் பல காட்சிகளில் திறமையாக வெளிப்பட்டிருக்கும். சுசீந்திரன் இதை நகலெடுக்க முயன்றாலும் அது சரியாக வெளிப்படவில்லை. குறிப்பாக ஆரம்பம் முதலே விரோதம் இருக்கும் இரு பெண்கள், இறுதிக் காட்சியில் செயல்படும் ‘திருப்பம்’ சக்தேவில் அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஒரே முகத் தோற்றத்தைக் கொண்ட இரண்டு பெண்களை வைத்து இதிலும் ‘எதையோ’ செய்ய முயன்றிருக்கிறார் சுசீந்திரன். ஆனால் அது அழுத்தமாக வெளிப்படவில்லை.

இதைப் போலவே பாரதிராஜாவிற்கும் சசிகுமாரிற்கும் இடையே எழும் முரண்களுக்கான பின்னணி போதுமான அளவிற்கு நிறுவப்படவில்லை. இந்த அணி வெற்றி பெற இவர்களே முட்டுக்கட்டையாக இருப்பார்கள் போலிருக்கிறதே’ என்று பார்வையாளர்களுக்கு திடுக்கிடலைத் தரும் நோக்கம்தான் இதில் தெரிகிறதே ஒழிய, அதற்கான காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படவில்லை. எனவே இது செயற்கையாகத் தெரிகிறது.

ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் பெரிய பலம். இமானின் பின்னணி இசையும் உறுதுணையாக நின்றிருக்கிறது. பாடல்கள் சுமார்தான்.

குறிப்பாக எடிட்டர் ஆண்டனியின் பங்களிப்பை சொல்லியேயாக வேண்டும். போட்டி தொடர்பான பரபரப்பான காட்சிகளில் இவரது உழைப்பை அறிய முடிகிறது. நல்ல பில்டப்பைத் தந்துள்ளார்.

தனது பின்னடைவுகளைத் தாண்டி சுசீந்திரன் மேலும் அழுத்தமாக வெளிப்படுவார் என்பதை ‘கென்னடி கிளப்’ நிரூபித்திருக்கிறது. (இதற்குப் பிறகு வெளியான ‘சாம்பியன்’  திரைப்படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை).


suresh kannan

Friday, January 10, 2020

காளிதாஸ் (2019)-ம் மற்றும் தமிழ் சினிமாவின் புதிய அலையும்



காளிதாஸ் – தமிழ் சினிமாவின் முதல் பேசும் படத்தின் அதே தலைப்பைக் கொண்டு 2019-ல் வெளியாகியிருக்கும் இந்த க்ரைம் திரில்லர், இந்த வருடத்தின் கவனத்திற்குரிய திரைப்படங்களின் பட்டியலில் இறுதியாக இணைந்திருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் சீஸன்கள் ஒன்றில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ செந்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கி பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவின் புதிய அலையை இது போன்ற இயக்குநர்கள்தான் இப்போது உருவாக்கி வருகிறார்கள். இது சார்ந்த பின்னணியை சற்று பார்த்து விட்டு திரைப்படத்தைப் பற்றிய விஷயத்திற்கு செல்வோம்.

ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கான்செப்ட் வெற்றி பெற்றால் (இவை பெரும்பாலும் அமெரிக்கா போன்று மேற்கத்திய தொலைக்காட்சிகளைப் பார்த்து நகலெடுத்ததாகத்தான் இருக்கும்) இதர தமிழ் சானல்களும் அதையே சற்று கரம் மசாலா கலந்து காப்பிடியடிக்கும் போது, தமிழ் சினிமாவின் வருங்கால நம்பிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்கும் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியை வேறு தமிழ் சானல்கள் ஏனோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

முன்பு போல, வெற்றி பெற்ற ஒரு இயக்குநரின் அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பாக தவம் கிடந்து பின்பு அவரின் ஓரக்கண் பார்வை ஒருநாள் தெய்வாதீனமாக பட்டு, பத்தோடு பதினொன்றாக உதவியாளராக இணைந்து பல்வேறு முறைவாசல்கள், அவமானங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு படிநிலையாக முன்னேறி ‘குருகுல’ வாசம் செய்யும் அவசியங்கள் இப்போது உதவி இயக்குநர்களுக்கு இல்லை.

சினிமா பற்றிய அடிப்படை ஆர்வமும் தேடலும் ரசனையும் உள்ளவர்கள் குறும்படங்களை இயக்கி யூட்யூப்பில் வெளியிட்டு அதையே தனக்கான விசிட்டிங் கார்டாக வைத்து வெள்ளித் திரையிலும் முன்னேறலாம். இது போன்ற இளைஞர்களுக்கான கதவுகள் இப்போது அகல திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் தயாரிப்பாளர்களை அணுகுவது எளிதாகி விட்டிருக்கிறது. பாலாஜி மோகன் துவங்கி.. கார்த்திக் சுப்புராஜ் என்று இந்த வரிசை பெரிதாக நீள்கிறது. தமிழ் சினிமாவின் புதிய அலையைத் தோற்றுவிப்பதில் இவர்களே முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீ செந்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

ஆனால் சினிமா என்கிற கலையின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்களே இந்தத் துறையில் நுழைய வேண்டும். சினிமா தரும் பணம், புகழ், செல்வாக்கு, கவனம் போன்ற காரணங்களுக்காக பல இளைஞர்கள் இன்று தங்களின் பட்டப்படிப்புகளைத் துறந்து சினிமாவில் நுழைகிறார்கள். அதற்குக் காரணம் சமூகத்தில் சினிமா பெற்றிருக்கும் அதீதமான கவனம்.

அல்வா கிளறும் சமையல் போட்டி முதல் அணுகுண்டு பற்றி கருத்து சொல்வது வரை பிரபலமான முகங்களைத்தான் ஊடகங்கள் தேடுகின்றன. ஒரு தீவிரமான பிரச்சினை பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு அறிவோ தகுதியோ இருக்கிறதா என்பது பற்றி எவருக்கும் கவலையில்லை. இதனாலேயே பல இளைஞர்களின் கனவாக ‘சினிமா’ மாற்றப்பட்டிருக்கிறது. மிகுந்த செலவில் தாங்கள் படித்த படிப்பைக் கூட உதறி விட்டு சினிமாத்துறையில் நுழைய முட்டி மோதி சிரமப்படுகிறார்கள்.

சினிமா என்பது சமூகத்தின் ஒரு அங்கம் மட்டுமே. கல்வி, மருத்துவம், அறிவியல் என்று சமூகத்தில் பல மதிப்பு மிக்க அங்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு சினிமா நடிகருக்குள்ள புகழ் மற்றும் மதிப்பில் நூற்றில் ஒரு சதவீதம் கூட ஓர் அறிவியல் அறிஞருக்கோ, மருத்துவருக்கோ, எழுத்தாளருக்கோ இங்கு இல்லை.

சினிமாவில் நுழைவதற்காக இவர்கள் உதறித்தள்ளும் படிப்பு என்பது இன்னொருவரின் ஆதாரமான கனவு என்பதை இது போன்ற மாணவர்கள் உணர வேண்டும். பட்டப்படிப்பிற்கு முன்பே தாங்கள் செல்லப் போகும் திசை என்ன என்பதை தெளிவாக அறிய வேண்டும். தங்களின் உள்மனது சொல்லும் செய்தி என்ன என்பதை உணர வேண்டும். சினிமா போன்ற புகழ் வெளிச்சம் திசைகளை நோக்கி ஆட்டு மந்தைகளைப் போல ஓடக்கூடாது. இதில் பெற்றோர்களின் பங்கும் பிரதானமாக உள்ளது. பொருளியல் வாய்ப்பு அதிகமுள்ள துறைகளைத் தேர்வு செய்து பிள்ளைகளைத் திணிக்கக்கூடாது. அவர்களின் கனவும் ஆதாரமான தேடலும் என்ன என்பதை கண்டறிய வேண்டிய மகத்தான பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு, உயிர்மை இதழில் வெளியான பதிவை இங்கு வாசியுங்கள்.

குருகுல வாசத்தைத் தவிர்த்து தங்களின் நவீன திறமைகளின் மூலம் சினிமாத் துறையில் நுழையும் இளைஞர்களின் மீது மூத்த இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஓர் எள்ளலான பார்வையுள்ளது. ‘நாலு சினிமாவைப் பார்த்து ஷார்ட் பிலிம் எடுத்து விட்டால், இவர்களுக்கு எல்லாம் தெரிந்து விடுமா? ஒரு படப்பிடிப்பை அங்குள்ள நூறு நபர்களை கையாளும் திறமையோ, தகுதியோ இவர்களுக்கு இருக்கிறதா? ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்து அதற்குள் படத்தை உருவாக்கும் பயிற்சி இருக்கிறதா? இவற்றிற்கு நடைமுறை அறிவு வேண்டாமா?’ என்றெல்லாம் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களை முழுதும் புறந்தள்ளி விட முடியாது. கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படும் சினிமா என்னும் வணிகத்தில் அதன் நடைமுறை சார்ந்த பல்வேறு அறிவுகளை ஓர் இளம் இயக்குநர் பெறுவது அவசியமானது. ஒரு மூத்த இயக்குநரிடம் இது போன்ற அனுபவங்களை சில காலத்திற்கு அவர் பெறலாம் அல்லது அனுபவம் உள்ள தயாரிப்பு நிர்வாகி, ஒளிப்பதிவு இயக்குநர் போன்றவர்களின் உதவியுடன் இந்தத் தடையைத் தாண்டி வரலாம்.

**

ஓகே. ‘காளிதாஸ்’ சினிமா பற்றிய பார்வைக்குள் வருவோம்.

சென்னை நகரில், ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்குள்  குடியிருப்புக் கட்டிடங்களில் சில மரணங்கள் நிகழ்கின்றன. சில பெண்கள் மாடியில் இருந்து விழுந்து இறக்கிறார்கள். அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டரான பரத் அவை தற்கொலை என்று கருதுகிறார். சூழல்களும் சாட்சியங்களும் அப்படித்தான் கருத வைக்கின்றன.

பரத்திற்கும் அவரது இளம் மனைவிக்கும் இடையே சண்டையும் பிறாண்டலும் தினசரி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. பரத் தன் காவல்துறை பணியில் அதிகம் கவனம் செலுத்துவதால் வீட்டிற்கு நேரம் ஒதுக்க முடியாத சூழல். எனவே அது சார்ந்த மனஉளைச்சலில் மனைவி இருக்கிறார்.

தற்கொலையா அல்லது கொலையா என்று காவல்துறை குழம்ப வைக்கும் மரணங்கள் தொடர்கின்றன. பரத்தின் வீட்டிற்கு புதிதாக ஓர் இளைஞன் குடிவருகிறான். அவருடைய மனைவியிடம் இனிமையான வார்த்தைகள் பேசி அவரை ஈர்க்கிறான்.

மரணங்கள் தொடரவே மூத்த அதிகாரியான சுரேஷ் மேனன் இந்த விசாரணையில் பரத்துடன் இணைகிறார்.

சில சம்பவங்கள் மற்றும் திருப்பங்கள் மூலம் ‘கொலையாளி யார்?’ என்கிற சுவாரசியமான கேள்வியை பார்வையாளர்களின் முன் வைக்கிறார் இயக்குநர். வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் இளைஞன் முதல் சுரேஷ் மேனன் வரை பலர் மீதும் நமக்கு சந்தேகம் வருகிறது. ஏன் நாயகனான பரத்தின் மீதே ஒரு கட்டத்தில் சந்தேகம் வருவது போல் சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்.

‘கொலையாளி யார்?” என்கிற அதிரடியான திருப்பத்தோடு படம் நிறைவுறுகிறது.

**

ஒரு இன்ஸ்பெக்டராக பரத்தை ஏற்றுக் கொள்ள நெருடலாக இருக்கிறது. உடற்பயிற்சியின் மூலம் அவர் பெற்றிருக்கும் கட்டுடல் பொருத்தமாக இருந்தாலும் அவரின் உயரம் தடையாக இருக்கிறது. நாடகத்தில் வரும் இன்ஸ்பெக்டர் வேடம் போலவே பல சமயங்களில் தோன்றுகிறது.

நல்லவேளையாக, மூத்த அதிகாரியாக சுரேஷ் மேனனும் பல காட்சிகளில் பரத்துடன் கூடவே வருவதால் இந்த நெருடல் அதிகம் வருவதில்லை. ‘தானா சேர்ந்த கூட்டம்’ ‘ஜூங்கா’ என்று அரிதாக தலை காட்டும் சுரேஷ் மேனன், இந்தத் திரைப்படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளார். ‘நீ எப்படி சாக விரும்பறே?” என்று பரத்திடம் சினிக்கலாக கேள்வி கேட்பது முதல் ஒவ்வொருவரையும் கூர்மையாக கவனிப்பது வரை தன் பங்களிப்பைச் சிறப்பாக தந்துள்ளார். கிளைமாக்ஸ் பதில்கள் இவரின் மூலமாகத்தான் வெளிவருகின்றன.

நாயகியாக ஆன் ஷீத்தல். ‘எனக்குப் பிடிக்காத ஒரு பெண்மணியின்’ முகச்சாயலை இவர் கொண்டிருந்ததால் இவரின் தோற்றம் ஆரம்பம் முதலே எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அதிலும் எக்ஸ்ட்ராவாக ஒட்ட வைத்தது போல் முன்னால் நீட்டிக் கொண்டிருந்த குடைமிளகாய் மூக்கு வேறு அதிக நெருடலை ஏற்படுத்தியது. (பிரபுதேவா பாணியில் சொன்னால் ‘பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்). இவர் முன்னர் நடித்திருந்த திரைப்படங்களின் விவரங்களைப் பின்னர் தேடிப் பார்த்தேன். மலையாள ‘Ishq’வில் இவரைப் பார்த்த போது எவ்வித சங்கடமும் ஏற்படவில்லை. மாறாக அதில் இவரின் நடிப்பு அத்தனை அட்டகாசமாக இருந்தது. ‘காளிதாஸில்’ இவரின் பங்களிப்பு சுமார்தான்.

இது போன்ற திரில்லர் திரைப்படங்களுக்கு பாடல்கள் நிச்சயம் அநாவசியம். சாதாரண திரைப்படங்களில் பாடல் காட்சிகள் வந்தாலே எழுந்து செல்லும் பார்வையாளன், இது போன்று பரபரப்பாக நகரும் காட்சிகளின் இடையே கட்டையைப் போடுவது போல பாடல்கள் நுழையும் போது எத்தனை எரிச்சலுறுவான் என்பது இயக்குநர்களுக்குத் தெரியாதா? தமிழ் சினிமா தனது அபத்தமான சம்பிரதாயங்களை ஏன்தான் பிடிவாதமாக இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை. பரபரப்பாக நகரும் திரைக்கதையில் ஸ்பீட் பிரேக்கர் போல எரிச்சலூட்டும் பாடல்கள். தனி வீடியோவாக இருந்தாலாவது தள்ளி விட்டுப் பார்க்கலாம். தியேட்டரில் என்ன செய்வது? இந்த நோக்கில் விஷால் சந்திரசேகரின் உழைப்பு வீண். ஆனால் பின்னணி இசையில் தன் பங்களிப்பை அட்டகாசமாகத் தந்துள்ளார்.

WARNING: Spoilers Ahead: (படத்தைப் பார்க்காதவர்கள் இங்கு விலகிக் கொள்ளலாம்).

படத்தில் நிகழும் கொலைகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. அது யூகிக்க முடியாத விதமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சினை.

Schizophrenia போன்ற மனநல பாதிப்பு உள்ளவர்களை, கொடூரமான வன்முறை செய்பவர்களாக தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரிப்பது ஆபத்தான போக்கு. ‘சிவப்பு ரோஜாக்கள்’ முதல்  அந்நியன், ஆளவந்தான் என்று ஏராளமான திரைப்படங்கள், மனநல பாதிப்பு உள்ளவர்களை கொடூரமான கொலைகாரர்களாக சித்தரிக்கின்றன. சிகிச்சை அளிக்கப்படாத சிலர் அப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் அனுதாபத்திற்கு ஆளாக வேண்டியவர்கள். உடனடியாக உளநல மருத்துவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இது சார்ந்த அக்கறையும் கரிசனத்தையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மனைவியின் கூடவே இருக்கும் பரத்திற்கு மனைவியின் உளநல பாதிப்பின் சமிக்ஞைகள் சிறிது கூடவா தெரியாமல் போயிருக்கும்? (அதிலும் நாயகியின் தோழி ஒரு மனநல மருத்துவராக வேறு காட்டப்படுகிறார்) ஒரு பெண்ணால் எப்படி இந்தக் தொடர் கொலைகளை – அதிலும் அந்த பேட்டர்ன் மாறாமல் – செய்ய முடியும்? மாடியில் தங்கியிருக்கும் ‘tenant’ (?!) ஐ ஒருமுறை கூடவா பரத் சென்று பார்த்திருக்க மாட்டார்? என்று லாஜிக் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன.

மிக முக்கியமான கேள்வியாக, ‘கணவனாக நாயகி கற்பனை செய்து வைத்திருக்கும் உருவம். எப்படி அவளையே கொல்ல முன்வரும்?”

கணவனின் அன்பு கிடைக்காமல் போவதுதான் நாயகிக்கு மனபாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ இதே விஷயம், கரு.பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம்.சந்திப்போம்’ திரைப்படத்தில் இயல்பாக, யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி சில லாஜிக் பிழைகள் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியத்தையும் பரபரப்பையும் தக்க வைத்திருப்பதில் ‘காளிதாஸ்’ வெற்றி பெறுகிறார்.



suresh kannan

Thursday, January 09, 2020

ரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’



 
பொதுவாக ரஜினியின் வணிக சினிமா அரசியல் மீதும் அல்லது அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சாண்டி விளையாட்டு மீதும் பல விமர்சனங்களை வைத்தாலும் அவர் திரைப்படம் வரும் போது ‘பார்த்துதான் வைப்போமே’ என்கிற மெல்லிய ஆவல் சராசரியான நபருக்கு எழுவது இயல்புதான். வெறித்தனமான ரசிகர்கள் உருவாக்கும் ஆரம்ப அலை அடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக சென்று அவரின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு தமிழ் மரபு. அந்த வகையில் ரஜினியின் charisma இன்னமும் பெரிதாக அடங்கி விடவில்லை என்பது உண்மை.

ஆனால் ‘தர்பார்’ வெளியீட்டில் இவ்வகையான சந்தடிகள் எதையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ரஜினி மறுபடியும் ‘கமர்சியல்’ சந்தைக்குள் நுழைந்திருப்பது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதா?

தர்பார் - இது எதைப் பற்றிய திரைப்படம்?

ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) ரவுடிகளை ‘கன்னா பின்னாவென்று’ என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் ஒரு வெறி கொண்ட காவல்அதிகாரியாக நமக்கு அறிமுகமாகிறார். அவர் ஏன் அப்படி மூர்க்கத்தனமாகிறார் என்பதை ஒரு பின்கதையின் வழியாக சொல்கிறார்கள்.

ஆக.. காவல்துறை அதிகாரியின் வீரத்தை, பெருமிதத்தை, அரச பயங்கரவாதத்தின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆராதிக்கும் திரைப்படம் இது. ஹரியின் ‘சாமி’ ‘சிங்கம்’ போன்றவைகளின் இன்னொரு வெர்ஷன். அவ்வளவே. புதுமையாக எதுவுமில்லை.

ஒருவகையில் இது எழுபது, எண்பதுகளில் வெளியாகும் திரைப்படத்தைப் போலவே பலவிதமான கிளிஷேக்களுடன் உள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, எதிரிகளால் தன் பிரியமான உறவை இழப்பார். அதற்கு பழிவாங்க கிளம்புவார். ‘தர்பாரின்’ ஒன்லைனும் இதே அரதப்பழசுதான்.

**

முதலில் இந்தத் திரைப்படத்திலுள்ள நல்ல (அப்படியாகத் தோன்றும்) விஷயங்களை பார்த்து விடுவோம்.

முன்பே குறிப்பிட்டது போல ரஜினியின் வசீகரம் இன்னமும் குறையவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் வேறெந்த முன்னணி நடிகருக்கு கூட இப்படியொரு வசீகரத்தன்மை பெரிதும்  குறையாமல் இருக்குமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை செல்வாக்கு பெற்றிருந்த ஜாக்கிசானின் வெற்றி கூட இப்போது அடங்கி விட்டது.

‘தர்பாரில்’ ரஜினி ஸ்டைலாக நடக்கிறார், ஆக்ஷன் செய்கிறார், குறும்புகள் செய்கிறார். சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அப்படியொன்றும் பெரிய முரணாகத் தெரியவில்லை. மனதிற்குள்ளாக ரசிக்கத்தான் செய்கிறோம். (இளமைப் பருவம் முதல் ரஜினியைப் பார்த்து வளர்ந்ததால் அப்படித் தோன்றுகிறதா அல்லது தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான அபத்தங்கள் நம்மை அவ்வாறு கண்டிஷன் செய்து விட்டதா என்பது ஆய்வுக்குரியது). ஆக்ஷன் காட்சிகள் போலி என்பதை அறிந்தாலும் இந்த வயதில் இப்படி வேகமாக உடலை அசைப்பதே ஒரு சாகசம்தான்.

திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ‘ஆள்மாறாட்ட’ குற்றங்கள், அதைப் பற்றிய விசாரணைகள் போன்றவை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதற்குப் பிறகு படம் முழுக்க டொங்கலாகி விடுகிறது. பாவம் சுனில் ஷெட்டி. திடகாத்திரமான உடம்புடன் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் எக்ஸ்ட்ரா நடிகர் போலவே அவரை குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திடகாத்திரமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டு அவரது சுண்டுவிரலை மட்டுமே திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மெயின் வில்லனின் பாத்திரம் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்தால்தான் நாயகனின் சாகசங்களும் அதிகம் எடுபடும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இது நிரூபிக்கப்பட்டதொன்று.

இவற்றைத் தாண்டி ரஜினி செய்யும் தனிநபர் சாகசங்கள் பலவும் ‘காமெடியாக’ இருக்கின்றன. கமிஷனர் என்கிற அதிகாரத்தில் இருந்தாலும் எந்தவொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானாலும் மற்றவர்களை ஓரமாக நிற்க சொல்லி விட்டு இவரே தன்னந்தனியாக சென்று ‘ஹீரோத்தனத்தை’ நிறுவுகிறார். இப்படிப்பட்ட காட்சிகள் அபத்தமாகவும் காமெடியாகவும் இருக்கின்றன. ஒரு இண்டர்நேஷனல் குற்றவாளியைப் பிடிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும் ‘நானே தனியாப் பிடிக்கறேன்’ என்று ஹீரோத்தனம் செய்ய இவர் அடம்பிடிக்கும் போது இந்த காமெடியின் அளவு உச்சத்திற்குப் போகிறது.

ஒருபக்கம் என்கவுன்டர் போலீஸாக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் அழகான பெண்ணிடம் பேசுவதற்கு வாய் குழறுவதாக இவர் செய்யும் நகைச்சுவை இருக்கிறதே.. அபத்தம். ஒரு காரெக்ட்டரின் நம்பகத்தன்மை எப்படி சீரழிந்தால் என்ன, ஒரு திரைப்படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து நவரசக்குப்பைகளும் வந்து விட வேண்டும் என்று இயக்குநர்கள் கிணற்றுத் தவளையாக யோசிப்பதால் வரும் வினை இது.

நாயகி என்றொருவர் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நல்லவேளை, டூயட் எல்லாம் வைத்து இயக்குநர் நம்மைச் சோதிக்கவில்லை. ஆனால் டூயட் இல்லையே.. தவிர இதர அசட்டுத்தனமான ரொமான்ஸ் எல்லாம் நடக்கிறது.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். கமலின் மகளாக ஒரு படத்தில் நடித்து விட்டதால் ரஜினியின் மகளாக இன்னொன்றில் நடிக்க விரதம் இருந்தாரோ. என்னமோ. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு இதில் அழுத்தமாக வெளிப்படவில்லை. ஒருவகையில் இதுதான் பழிவாங்கலின் அடிப்படையே. என்றாலும் தன் ‘கடைசி வீடியோ’வில் இவர் பேசுவது நன்று.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு மொக்கையான கவுண்ட்டர் வசனம் பேசுவதை இன்னமும் எத்தனை நாளைக்கு ‘காமெடி’ என்று யோகிபாபுவும் பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

‘கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல ஒரு பொண்ணை வெச்சிக்கிட்டு.. இந்த வயசுல.. எங்க வீட்டு பெண்ணை லவ் பண்றியே.. நியாயமா?” என்று ரஜினியை ஒரு பாத்திரம் கேள்வி கேட்கிறது. ‘ஹே.. சூப்பர்பா..’என்று தோன்றியது அந்தக் காட்சியில்தான். தன் மகள் வயது நாயகிகளுடன் ரஜினி டூயட் பாடிய அத்தனை காட்சிகளும் அந்த ஒரு நொடியில் நம் கண் முன் வந்து போகின்றன. ரஜினி படத்திலேயே அவரை நாசூக்காக சவட்டியிருக்கும் முருகதாஸிற்கு பாராட்டு.

‘படையப்பா’ திரைப்படத்தில் உடம்பை முறுக்கி ரஜினி சண்டையிடும் காட்சியைப் பார்த்து ‘வாட் அ மேன்?’ என்று அப்பாஸ் வியக்கும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டல்லவா? அப்படியே இதிலும் ஒன்று இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ரஜினியின் முறுக்கேறிய உடலை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் VFX டிபார்ட்மெண்ட் எத்தனை தரமாக முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.

இதைப் போலவே, தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டவுடனேயே விறைப்பு குறையாமல் சல்யூட் அடித்து விட்டு தடுமாறி விழச் சென்று பிறகு சமாளித்துக் கொண்டு சிவாஜி செல்வார் அல்லவா? அப்படியொரு நகைச்சுவையும் இதில் உண்டு. முருகதாஸின் டீமில் அறுபதைக் கடந்த உதவி இயக்குநர் எவரோ இருக்கிறார் போலிருக்கிறது. அவர் ‘சிவாஜி’யின் வெறிபிடித்த ரசிகராகவும் இருக்கக்கூடும்.

மும்பையின் நிழல் உலகு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் இந்தக் காமெடி கலாட்டாவை இயக்குநர் ‘ராம்கோபால் வர்மா’ ஒருவேளை பார்த்தால் எப்படியெல்லாம் டிவிட்டரில் கிண்டலடிப்பார் என்றொரு கற்பனை ஓடியது. அப்படி கந்தர கோலமாக ரவுடிகளை ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை உள்ளிட்ட அரசு பதவிகளில் அமரத் துவங்கி விட்ட காலம் இது. ஆனால் இயக்குநருக்கோ நடிகருக்கோ இது குறித்த சமூக உணர்ச்சி எதுவுமில்லை. ‘பணம் கொடுத்தால் அவர்கள் வாழ்த்தி நடனமாடுவார்கள்’ என்பதையே காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு திருநங்கையை ‘எக்ஸ்ட்ரா’ நிமிடங்கள் கட்டிப்பிடித்து கிளுகிளுப்பாகிறார் ரஜினி. காமெடியாம்.

சந்தோஷ் சிவன் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள், இது போன்ற சாதாரண திரைப்படங்களுக்கு தங்களின் உழைப்பைக் கொட்டுவது அநீதி. அனிருத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும சரி. எதையும் அவர் ‘கிழிக்க’வில்லை. நம் காதுகள்தான் கிழிகின்றன.

‘இளம் வயது நாயகிகளுடன் டூயட் பாடி நடிப்பது எனக்கே சங்கடமாக இருக்கிறது. இனி என் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறேன்” என்று சுயபரிசீலனையுடன் தன்னை உணர்ந்து அறிவித்த ரஜினி, (அதற்கு லிங்கா போன்ற சில தோல்விகளும் காரணம்) ‘கபாலி’ ‘காலா’ என்று சரியான திசைக்கு தடம் மாறினார். அவையும் வணிகத் திரைப்படங்கள்தான் என்றாலும் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற இடம் அந்தத் திரைக்கதையில் இருந்தது. ஆனால் ஒரு தீவிர ரசிகனாக எண்பதுகளின் ரஜினியை மீண்டும் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று ‘பேட்ட’யின் மூலம்  ரஜினி என்கிற தேரை இழுத்து வந்து பழைய சாக்கடையில் இறக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

‘அடடா.. சொல்லியிருக்கக்கூடாதா.. நானும் இந்த மாதிரி பண்றதுல.. பெரிய ஆளாச்சே’ என்று முருகதாஸூம் தேர் பயணத்தை சாக்கடையில் இன்னமும் ஆழமாக இறக்கியிருக்கிறார். விளைவு ‘தர்பார்’.

இந்த அழகில் தமிழ் சினிமாவில் ‘கதை’ என்கிற வஸ்து இருப்பதாக நம்பி அதற்காக கதை, திருட்டு, பஞ்சாயத்து எல்லாம் நடப்பதாக கேள்விப்படும் போது எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.


**

இப்படிப்பட்ட க்ளிஷேக்கள், காமெடிகள், பொழுபோக்கு  போன்றவற்றைத் தாண்டி கருத்தியல் ரீதியாகவும் இதுவொரு ஆபத்தான திரைப்படம். ஏனெனில் இதில் வரும் காவல்அதிகாரியான ‘ஆதித்யா அருணாச்சலம்’ கண்மூடித்தனமான ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். இவர் சுட்டுத் தள்ளுகிறவர்கள் எல்லாம் நிச்சயம் ரவுடிகள்தானாம். இந்த லட்சணத்தில் ‘மனித உரிமை கமிஷன்’ அதிகாரியையே துப்பாக்கி முனையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வகையில் மிரட்டுகிறார். முருகதாஸின் வித்தியாசமான ‘சிந்தனை’ இது.

இந்தியாவில் இதுவரை நடந்த என்கவுன்டர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எளிய சமூகத்தினராக இருப்பதில் ஏதோ ஒரு விந்தையுள்ளது. குற்றம் செய்ததாக வலுவாக சந்தேகப்படும் ஒரு அமைச்சரின் மகனோ, அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் மகனோ ‘என்கவுண்டரில்’ போட்டுத் தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. .

காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் அழுகிப் போயிருக்கும் சூழலில் ‘கொடூரமான குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஆசாமியை, சட்டத்தின் வழியாக சென்று தண்டிக்க முடியாது என்கிற நடைமுறை காரணம் கருதி, ஒரு நேர்மையான காவல்துறை ஆசாமி ‘என்கவுன்டராக’ கொலை கூட ஏதோ ஒருவகையான நியாயமுள்ளது. நான் சட்டத்தையும் நீதியையும் முழுக்க நம்புபவன் என்றாலும் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் நடக்கும் ‘என்கவுன்டர்கள்’ எல்லாமே இப்படிப்பட்ட ‘நேர்மையுடனா” நடக்கின்றன?

ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை தற்காலிகமாக திருப்திப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றி ஒளித்து விட்டு அந்த இடத்தில் எளியவர்களை பலியிடும் சடங்காக அல்லவா ‘என்கவுன்டர்கள்’ அமைந்திருக்கின்றன?

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவும் ‘என்கவுன்டர்களை’ பெருமிதப்படுத்தி உருவாக்குவதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருப்பது போல் தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் ஒர் அற்புதமான உரையாடல் நடைபெறும். குறைந்தபட்சம் அப்படியொரு சமநிலையான காட்சி கூட இது போன்ற ‘போலீஸ்’ திரைப்படங்களில் இருப்பதில்லை.

இந்த நோக்கில் ரஜினியும் முருதாஸும் இணைந்து ‘காட்டு தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.





suresh kannan

Monday, January 06, 2020

டிசம்பர் பூக்கள் (தமிழ் திரைப்படம்) 1986





1986-ல் வெளியான இந்தத் திரைப்படத்தை  2020-ல் நான் பார்த்ததற்கு காரணம் இளையராஜாவின் இரண்டு பாடல்கள்தான். வேறு விசேஷமான காரணம் ஒன்றுமில்லை. மற்றபடி இதுவொரு சாதாரண வணிகப்படம்.

மொக்கையான திரைப்படங்கள் என்றாலும், இளையராஜா தன் வழக்கமான பாணியில் சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் தருவார் என்பது நமக்குத் தெரியும். ‘அழகாக சிரித்தது இந்த நிலவு’ ‘மாலைகள் இடம் மாறுது.. மாறுது’ ஆகிய இரண்டு பாடல்களை கேட்கும் போதெல்லாம் இந்தத் திரைப்படத்தை என்றாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அது நேற்றுதான் வாய்த்தது. எனவே அந்த மகத்தான (?!) அனுபவத்தைப் பற்றி பதிவு செய்து விடலாம் என்பதற்காகத்தான் இந்தக் குறிப்பு.

ராஜாவின் அட்டகாசமான டைட்டில் இசையோடு படம் துவங்குகிறது. ஆர்.பூபதி என்கிற இயக்குநரின் பெயரை இப்போதுதான் பார்க்கிறேன். இவர் வேறு எதுவும் திரைப்படம் இயக்கியிருக்கிறாரா என்று கூட எனக்குத் தெரியாது. இப்படி மின்மினிப்பூச்சிகள் போல ஏராளமான இயக்குநர்கள் சொற்ப படங்களோடு மறைந்திருக்கிறார்கள்.

போலவே ஒவ்வொரு திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் ‘உதவி இயக்குநர்கள்’ என்கிற பெயர் வரிசையைக் காணும் போதெல்லாம் ‘அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசிப்பேன். மிக அபூர்வமாகவே (பின்னாளில்) பிரபலமான பெயரை அந்த வரிசையில் காண முடியும். (பொதுவாக பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் இது நடக்கும்).

**

இதன் நாயகன் மோகன். இரண்டு நாயகிகள். ரேவதி மற்றும் நளினி. வழக்கம் போலவே மோகனுக்கு அதிக வேலையில்லை. அவருண்டு, அவர் அணியும் அழகான ஜிப்பாக்கள் உண்டு என்று வந்து போகிறார். பாடல் காட்சிகளில் தலையை அசைத்து, தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் தனது பிரத்யேக மேனரிஸத்தை சரியாக செய்து விடுகிறார். இவர் சட்டை அணியாத காட்சிகளில் இத்தனை பூஞ்சையான உடம்பா என்று பரிதாபமாக இருக்கிறது. மற்றபடி சூப்பர் ஹீரோக்களைத் தாண்டி சாமானிய நாயகர்களின் வரிசையில் ஒரு சிறந்த நடிகர் மோகன்.

ரேவதி துறுதுறுவென்று வந்து போகிறார். கைக்கு அடக்கமான சின்னப் பொம்மை போல அழகாக இருக்கிறார். இவருக்கும் நடிக்க அதிக வாய்ப்பில்லை. குதிரையை நினைவுப்படுத்தும் முகத்தோற்றத்தைக் கொண்ட நளினியை எப்போதுமே எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்போது மிகவும் புஷ்டியாக ‘நநளிளினினி’யாக மாறி சீரியல்களிலும் காமெடி காட்சிகளிலும் வந்து  பயமுறுத்துகிறார்.

**

இதுவொரு சாதாரண வணிகத் திரைப்படம் என்றாலும் ஒரு சம்பிரதாயமான திரைக்கதையின் ஒழுங்கையும் சுவாரசியத்தையும் சரியாகக் கொண்டிருக்கிறது. எனவே முழு திரைப்படத்தையும் எப்படியோ சகித்து பார்த்து விட முடிந்தது.

ஒரு கொலையுடன் ‘மங்கலகரமாக’ இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ‘கொலைகாரன் யார்?” என்று அறியும் சுவாரசியத்தில் சில காட்சிகள் அப்படியே நகர்ந்து விடுகின்றன. வரிசையாக கொலைகள் நிகழ்கின்றன. காவல்துறை ‘துப்பு’ துலக்கிக் கொண்டேயிருக்கிறது.

யார் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவன் ‘கொலைகாரன்’ இல்லை என்று எப்படியோ நமக்குத் தோன்றி விடுகிறது. (எத்தனை படங்களில் பார்த்திருப்போம்?!). அதன்படி சிலரை இயக்குநர் காட்டினாலும் அவர்கள் கொலைகாரர்கள் இல்லை என்று தெரிந்து விடுகிறது. என்றாலும் இதற்கான விடை இறுதியில் அறியப்படும் போது சிறிய ஆச்சரியம் வரத்தான் செய்கிறது.

**


மோகன் ஓர் ஓவியர். அதற்கு சாட்சியாக, ஆர்ட் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவர்கள். அவரது வீடெங்கும் திராபையான ஓவியங்களை சுவரெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்கள், இவருக்கும், பத்திரிகையாளரான ரேவதிக்கும் ஒரு கலாட்டாவான அறிமுகம் நிகழ்ந்து பிறகு நண்பர்களாகிறார்கள். மோகனின் நல்லியல்பை உணரும் ரேவதி அவரால் வசீகரிக்கப்பட்டு தன் காதலைச் சொல்கிறார். ஆனால் மோகனால் அதை ஏற்க முடியாத சூழல்.

ஏறத்தாழ மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ போன்ற கதைச் சூழல் இங்கு நிகழ்கிறது. இதிலும் மோகன், ரேவதி என்பது தற்செயல் ஆச்சரியம். (தமிழ் சினிமாவின் கதைகளை தொடர்ந்து ஆராய்ந்தால் இப்படி பல ‘தற்செயலான’ ஆச்சரியங்களைக் கண்டு பிடிக்க முடியும்)

ரேவதியின் காதலை மோகனால் ஏன் ஏற்க முடியவில்லை? இங்கு ஒரு பிளாஷ்பேக்.  மோகனின் மனைவியாக நளினி இருந்திருக்கிறார். அவருடைய பிரிவு காரணமாக துயரத்தில் இருக்கிறார் மோகன்.

மோகன் ஓவியர் என்பதால் ஒரு நிர்வாண மாடலாக நளினி நமக்கு அறிமுகமாகிறார். வறுமை காரணமாக இப்படி இருக்க நேர்கிறதே என்று நளினி கலங்குகிறார். இந்த இடத்தில் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு நிர்வாண மாடலுக்கும் பாலியல் தொழிலாளிக்கும் உள்ள தொழில் முரணை, அவற்றின் தரப்பு நியாயங்களை அந்தச் சிறுகதையில் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

நளினியின் பரிதாப சூழல் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் மோகன். (‘உன் மீதுள்ள அனுதாபத்தினால் இது அல்ல’ என்கிற டெம்ப்ளேட் வசனமும் வருகிறது). இன்பமாகச் சென்று கொண்டிருக்கிற அவர்களின்  திருமண வாழ்க்கையில் மோகனுக்குள்ள குடிப்பழக்கம் பெரிய இடையூறாக வருகிறது. நளினியை இழக்க நேர்கிறது.

இதுதான் ரேவதியின் காதல் மறுக்கப்பட்டதற்கான பின்னணிக் காரணம்.

கவர்ச்சிக்காக பபிதா.. ஒய்.விஜயா போன்றவர்கள் வந்து போகிறார்கள். மாறாத விளக்கெண்ணைய் முகபாவத்துடன் இன்ஸ்பெக்டராக ‘நிழல்கள்’ ரவி நடித்திருக்கிறார். (?!). ‘ஆம்பிளை’ நாட்டுக்கட்டையாக சிவச்சந்திரன் (இவருக்கு யாரோ நாராசமாக டப்பிங் குரல் தந்திருக்கிறார்கள்) அவருடைய மனைவியாக ‘குயிலி’, சிறு வில்லனாக இளவரசன் போன்றோர் வந்து போகிறார்கள். ‘ஜெய்ராம்’ என்று ஒவ்வொரு காட்சியிலும் பக்தியுடன் முணுமுணுத்தபடியே வந்து போகும், காவல்துறை உயரதிகாரி டெல்லி கணேஷ், சமகால வலதுசாரிகளை நினைவுப்படுத்துகிறார்.

வி.கோபாலகிருஷ்ணன் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். இவரைச் சரியாக கையாண்டால் நன்றாக நடிப்பார். ஆனால் ஏவிஎம் ராஜனைப் போலவே இவரை ‘மினி சிவாஜியாக’ கண்ணீர் பிழிய வைத்து பாழ்படுத்தி விட்டார்கள். இதில் நாயகியின் தந்தையாக ‘செட்’ பிராப்பர்ட்டி போல் வந்து போகிறார்.

இவரும் ரேவதியும் உணவருந்தும் ஒரு காட்சியில் திருமணப் பேச்சு தொடர்பாக நிகழும் உரையாடல்  'விசுத்தனமான' காமெடி. 

**

தமிழ் சினிமாவில் கதை இல்லாமல் படம் எடுத்து விடுவார்கள். அப்போதைக்கு ராசியான, அவசியம் தேவைப்படும் வணிகச் சமாச்சாரங்கள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். கவுண்டமணி – செந்தில் ஜோடியின் புகழ் உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் இது. எனவே அவர்களும் இருக்கிறார்கள். செந்தில் அவ்வப்போது வந்து போகிறார் என்றாலும் கவுண்டமணி தொடர்பான காட்சிகள் அதிகம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் மையக்கதை ஒரு பக்கமாகவும் அதற்குச் சம்பந்தமேயில்லாமல் ‘காமெடி டிராக்’ இன்னொரு பக்கமாகவும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் ‘கொலைகாரன் யார்?’ என்கிற இதன் மையக்கதைக்கு தொடர்பாகவே காமெடி டிராக் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறிய ஆச்சரியம். கவுண்டமணியின் ‘ஆஸ்தான காமெடி டிராக்’ எழுத்தாளர், ஏ. வீரப்பன்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.

நாயகனான மோகன் ஓவியர் என்பதால் கவுண்டமணியை கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கும் ஆசாமி பாத்திரம் தந்திருக்கிறார்கள். இவரை ‘பெயிண்டர்’ என்று எண்ணி ஒரு பெண் மயங்கும் ‘ஆள்மாறாட்டக்’ காமெடிகளும் உண்டு.

“உசுரைக் கொடுத்து இவங்க பில்டிங்க்க்கு நாம பெயிண்ட் பண்ணிக் குடுக்கிறோம். கட்டிடம் திறந்தப்பறம் நம்மளை உள்ளே அனுமதிப்பாங்களா? மாட்டானுங்க” என்று எம்.ஆர்.ராதா பாணியில் கலக காமெடி செய்யும் காட்சியுடன் கவுண்டமணியின் அறிமுகம் நிகழ்ந்தாலும் போகப் போக இவை சாதாரணக் காட்சிகளாகி விடுகின்றன. ‘நான் பத்தாங்கிளாஸ் பாஸ். அவரு படிக்காதவரு’ என்று கவுண்டமணியை செந்தில் நக்கல் அடிக்கும் வசனம் அப்போதே வந்து விட்டது.

**

ஒரு கட்டத்தில் கொலைகாரன் யார் என்பது ஏறத்தாழ இறுதிப்பகுதிக்கு முன்னால் நமக்குத் தெரிந்து விடுகிறது. அவர் ஏன் வரிசையாக பெண்களைக் கொலை செய்தார் என்பதை விளக்குவதற்காக இன்னொரு பிளாஷ்பேக் வருகிறது. கிளைமாக்ஸூக்கு முன்பு ஒரு ‘பிளாஷ்பேக்’ வைப்பது ஷங்கரின் பாணி என்று நினைத்துக் கொண்டிருந்தால் முன்பே இப்படிச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் தான் செய்த கொலைகளுக்காக ‘கொலைகாரன்’ சொல்லும் காரணத்திலுள்ள லாஜிக் மிக அபத்தமாக இருக்கிறது. அதிலும் கொலையாவது அனைத்துமே பெண்கள் என்பது ‘கிளுகிளுப்பிற்காக’ போல. இந்தப் பட்டியலில் ‘நிழல்கள்’ ரவியும் ஏன் சேர்க்கப்பட்டார் என்பதற்கான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை.

ஒரு காவியச் சோகக் காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. படத்தின் தலைப்பை ஏன் ‘டிசம்பர் பூக்கள்’ என்று இயக்குநர் வைத்தார் என்று தெரியவில்லை. டிசம்பர் பூ பார்ப்பதற்கு வண்ணமயமானது, ஆனால் வாசனையில்லாதது என்று  அசட்டுத்தனமான லாஜிக் ஏதாவது இருக்கலாம். (நல்லவேளை, இறுதி டைட்டில் கார்டில் இதற்கான விளக்கத்தை இயக்குநர் தராதது பெரிய ஆறுதல்). ‘புவனா ஒரு கேள்விக்குறி’ கிளைமாக்ஸ் பாணியில், ரேவதி இறுதியில் வெள்ளைப் புடவையுடன் தோன்றுகிறார்.

**

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இளையராஜாவின் இரண்டு பாடல்களும், சில காட்சிகளில் பின்னணி இசையும் நன்றாக அமைந்திருந்தது. கொலைகாரன் தொடர்பான காட்சிகளுக்கெல்லாம் திகிலை உண்டாக்கும் வகையில் பிரத்யேகமான இசையைத் தந்திருந்தார்.

இதன் ஒளிப்பதிவு ராஜராஜன். பொதுவாக இவரின் ஒளிப்பதிவு பாணி எனக்குப் பிடிக்கும். மிக குறிப்பாக அவுட்டோர் காட்சிகள் என்றால் இயற்கையின் பின்னணிகளையும் அதன் அழகியலையும் சிறப்பாக கொண்டு வந்து விடுவார். இதிலும் பாடல் காட்சிகளில் இவர் வைத்திருக்கும் கோணங்களும் அதிலிருந்த வசீகரமும் கவர்ந்தன. ‘இன்டோர்’ காட்சிகள் மிகச் சாதாரணமானவை.

தனியார் தொலைக்காட்சிகள் பெருகாத காலத்தில் தூர்தர்ஷன்தான் கதி. அதில் திரையிடுவதற்கென்றே சிலர் திரைப்படங்களை இயக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் வகையில் பல அசட்டுத்தனமான, சலிப்பான திரைப்படங்கள் அதில் ஒளிபரப்பாகும். சிவகுமார் நடித்த பல திரைப்படங்கள் இப்படித்தான் தோன்ற வைக்கும்.

டிசம்பர் பூக்களும் இப்படித்தான். 'டிசம்பர் மாதம் நிறைவுற்றதைக் கொண்டாட இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்' என்று நானும் ஓர் அசட்டுத்தனமான லாஜிக்கை சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறேன். 





suresh kannan