மேற்குத் தொடர்ச்சி
மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள்
உலகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆவணப்படம் என்றாலே ‘பீகாரில் வெள்ளம்’ என்கிற
பொதுப்புத்தி ஒவ்வாமையுடன் இருக்கும் நமக்கு இது போன்ற முயற்சிகள் மனவிலகலைத் தருகின்றன
என்று யூகிக்கிறேன். கலைப்படங்கள் என்றால் சுவாரஸ்யமற்ற நிதானத்தில் நகர வேண்டும் என்கிற
போலித்தன்மையோடு சில முதிராமுயற்சிகளும் இருக்கின்றதான். ஆனால் மேற்குத் தொடர்ச்சி
மலையை நிச்சயம் இதில் சேர்க்க முடியாது.
இதில் சித்தரிக்கப்படும்
கலாசாரமும் மண்ணும் மக்களும் எனக்கு மிக அந்நியமானவை. என்றாலும் இந்த திரைப்படத்தை
சுவாரசியத்தோடு பார்க்க முடிந்தது. ஏனெனில் மானுட குலத்தின் ஆதார உணர்ச்சியை இது பேசுகிறது.
கலாசார வித்தியாசங்களைத் தாண்டி, நுண்ணுணர்வுள்ள எந்தவொரு பார்வையாளரும் இத்திரைப்படத்தை நெருக்கமாக
உணர முடியும்.
ஏலக்காய் மூட்டை
மலையில் இருந்து விழும் காட்சி அவலச்சுவையில் அமைந்த நாடகத் தருணம். என்றாலும் எளிய மக்களின் வாழ்வில் துயரத்தின் சாயல் தொடர்ந்து
வருவதால்தான் ‘பட்ட காலிலே படும்’ போன்ற பழமொழிகள் உருவாகியிருக்கின்றன.
இந்தத் துயரத்திற்கு
இடையேயும் சில கொண்டாட்டத் தருணங்களும் இருக்கின்றன. கங்காணியை கிண்டல் செய்யும் தொழிலாளர்கள்,
அவர்களை கொலைவெறியுடன் துரத்தும் கங்காணி போன்றவை கலாசார வேறுபாடின்றி அனைத்து எளிய
மக்களின் இடையேயும் காணக்கூடிய நையாண்டி தருணங்கள்.
எவரிடமும் இரக்கத்தைக்
கோராமல் சொந்த நிலம் வாங்கத் துடிக்கும் ஒரு சாதாரண விவசாயி, அதில் தொடர்ந்து தோற்றுப் போய் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்
செக்யூரிட்டியாக, உதிரிபாகமாக சுருங்கிப் போகும் அவலம்தான் இந்த திரைப்படத்தின் மையம். கலங்க வைக்கும் திரைப்படத்தின்
இறுதிப்பகுதி இதைத்தான் உணர்த்துகிறது.
நகரவாசிகளால் எத்தனை
தூரத்திற்கு இந்த அவலத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. நாம் தினமும்
மேஜையில் காணும் உணவு வானத்திலிருந்து வந்ததல்ல. கணினியில் இருந்து download செய்யப்பட்டதல்ல.
அதற்குள் முகம்தெரியாத விவசாயியின் வியர்வை இருக்கிறது. அடிப்படையான விஷயத்தை தினம்
வழங்கும் அவர்களை அரசு இயந்திரம் முதற்கொண்டு எவருமே மனிதராக மதிப்பதில்லை.
ரங்கசாமி தன் வருங்கால
மனைவியைச் சந்திக்கும் எவ்வித மிகையுணர்ச்சியும் இன்றி மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே பாரதிராஜாவாக இருந்தால் எத்தனை கொனஷ்டைகள் செய்திருப்பார் என்று அந்தக் கணத்தில்
தோன்றியது. (அதையும் ரசித்தோம் என்றாலும்).
இந்த திரைப்படத்தில்
பல விஷயங்கள் சப் –டெக்ஸ்ட்டாக உறுத்தல் இல்லாமல் பிரச்சாரத் தொனியில்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றன.
குறுவிவசாயிகளின் குருதியை உறிஞ்சுக் குடித்து கொழுக்கும் பன்னாட்டு உரக்கம்பெனிகள்
முதல் போலி கம்னியூஸ்டுகள் வரை பலதரப்பட்ட மனிதர்கள் இதில் உலவுகிறார்கள்.
ஒரு நிலப்பரப்பின்
தன்மைதான் அங்கு வாழும் மக்களின் குணாதிசயமாக படிகிறது. மலை என்பது பொறுமைக்கும் தியானத்திற்குமான
குறியீடு. ஓரிடத்தைக் கடப்பது என்பது எத்தனை சிரமமானது என்பது அங்குள்ளவர்களுக்கு நன்கு
தெரியும். எனவே ஒருவருக்கொருவர் மிக இயல்பாக உதவிக் கொள்கிறார்கள். (இங்குள்ள மக்கள்
பெரும்பாலும் ஏன் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இதில் பதில் இருக்கலாம்).
இயக்குநர் லெனின்
பாரதி பிரக்ஞைபூர்வமாகவே இதை ஆவணப்படத்தின் சாயலுடன் உருவாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
நிலையான காட்சிகளுடன் காமிரா விலகியிருந்து அவர்களைக் கவனிக்கிறது. நமக்கு எதையோ உணர்த்த
முயல்கிறது. தேனி ஈஸ்வரின் காமிரா அழகுணர்ச்சியுடன் காட்சிகளை பதிவு செய்திருந்தாலும்
மணிரத்தினம் திரைப்படங்களைப் போல எதையும் ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ஆச்சரியகரமாக
இளையராஜாவின் இசை அடக்கி வாசிக்கிறது. அவசியமான இடங்களில் மட்டும் ஒலித்து ஆத்மார்த்தமான
உணர்வை கிளப்புகிறது.
இன்னமும் விரிவாக
பேசப்பட வேண்டிய திரைப்படம் இது. அதன் முன்னோட்டம்தான் இந்தப் பதிவு. தமிழ் சினிமாவின்
பாதையில் முக்கியமான மைல்கல்லை நட்டிருக்கும் லெனின் பாரதிக்கு அன்பும் நன்றியும்.
ஏறத்தாழ சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’க்கு நிகரான படைப்பாக ‘மேற்குத் தொடர்ச்சி
மலையை’ சொல்வேன். எளிய மக்களின் துயர வாழ்வு எத்தனை எழுதினாலும் தீர்க்கப்பட முடியாத
அவலத்தைக் கொண்டது.