Monday, May 29, 2017

வனநாயகன் - காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்

தொழிற்சங்கம் உருவாக முடியாத, பணிப்பாதுகாப்பில்லாத தொழிலாளா்களைக் கொண்டது ஐ.டி எனப்படும் தகவல் நுட்பம் சார்ந்த துறை. இதர துறைகளோடு ஒப்பிடும் போது இதில் வருமானம் சற்று கூடுதல்தான் என்றாலும் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களை சக்கையாக பிழிந்து விடும்  தன்மையைக் கொண்டது என்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற அபாயக்கத்தி இருக்கையின் கீீழே பதுங்கியிருக்கும். சுருங்கச் சொன்னால் திரசங்கு சொர்க்கம் அல்லது டை கட்டிய அடிமைத்தனம்.

இப்படி நிர்வாகத்தால் மனச்சாட்சியின்றி திடீரென்று வெளியேற்றப்படுவதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில ஐ.டி. பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னது திகிலாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல்  அவர் திடீரென்று  பணிநீக்கம் செய்யப்படுகிறார். அன்றைய நாள் பணிக்கு வரும் போதுதான் அவருக்கே அந்த விஷயம் தெரியும். இதை அறிந்து மேலதிகாரியின் அறைக்குச் சென்று வாக்குவாதம் கூட செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். வேதனையுடன் அவர் தன் இருக்கைக்கு திரும்பும் போது வழியிலுள்ள ஒரு கதவைத் திறப்பதற்காக தனக்கு தரப்பட்டிருந்த ஸ்வைப்பிங் கார்டை உபயோகிக்கிறார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதற்குள்ளாகவே நிர்வாகம் அதை செயலிழக்க வைத்திருக்கிறது. 'இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எத்தனை உழைத்திருப்பேன், எப்பேர்ப்பட்ட அவமானம் இது" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

***

ஆருர் பாஸ்கர் எழுதிய 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' எனும் புதினம்,  தமது பணியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்படும் ஒரு  ஐ.டி. பணியாளரைப் பற்றிய அதிர்ச்சியில் இருந்து துவங்குகிறது. ஆனால் இது ஐ.டி. ஊழியர்களின் துயரங்களைப் பற்றி பேசும் பரிதாபங்களின் தொகுப்பல்ல. மலேசியாவின் பின்னணியில் இயங்கும் இந்தப் புதினம், ஒரு திரில்லருக்கான வேகத்துடன் பணி நீக்கத்திற்கு பின்னால் உள்ள பிரம்மாண்டமான வணிக சதியை பரபரப்பான பக்கங்களில் விவரிக்கிறது. 

நூலாசிரியர் ஆருர் பாஸ்கரின் முதல் புதினமான 'பங்களா கொட்டா' கிராமப்பின்னணியில் உருவான எளிய நாவல். வனநாயகன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மலேசிய நாட்டின் பிரம்மாண்ட பளபளப்பு பின்னணியில் இயங்குகிறது. பணிக்காக தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் இளைஞனான சுதா என்கிற சுதாங்கன், அந்நிய பிரதேச காங்கிரீட் வனத்தில் எதிரி எவரென்றே தெரியாத புதிருடன், காற்றில் கத்தி வீசுவது போல தன் பிரச்சினைக்காக தன்னந்தனியாக போராடுகிறான். 

இது தொடர்பான பரபரப்பை தக்க வைத்துக் கொள்ளும் இந்தப் புதினம், அதே சமயத்தில் ' இருளின் பின்னாலிருந்து உதித்த அந்த மர்ம உருவம் கத்தியுடன் பாய்ந்தது, .தொடரும்' என்கிற ரீதியில்  மலினமான திரில்லர் நாவலாகவும் கீழிறங்கவில்லை. உடல் சார்ந்த சாகசங்களின் மிகையான அசட்டுத்தனங்கள் இல்லை. புத்திக்கூர்மையுடன் நாயகன் போடும் திட்டங்கள் எதிர் தரப்பை கச்சிதமாக வளைத்து அவனுக்கு சாதகமாகும் தற்செயல் அபத்தங்களும் இல்லை. நடுத்தர வர்க்க மனநிலையில் குழம்பித் தவிக்கும் ஓர் இளைஞன், தனக்கெதிரான அநீதியை நோக்கி  அதன் சாத்தியங்களுடன் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாயகன் செய்கிறான். இந்த தன்மையே இந்தப் புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயல்பையும்  அளிக்கிறது. 

***

மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பன் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 

புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.


***

வங்கி இணைப்பு பணியின் இறுதி நாளன்று நிகழும் விநோதமான, மர்மச் சம்பவத்தில் இருந்து துவங்கும் இந்தப் புதினம், பிறகு முன்னும் பின்னுமாக பயணிக்கும் அதே சமயத்தில்  வாசிப்பவர்களுக்கு எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் சுவாரசியமான அத்தியாயங்களுடன் விரிகிறது. புதினம் முழுக்க சுதாங்கனின் நோக்கில் தன்னிலை ஒருமையில் விவரிக்கப்படுவதால் நாமே அவனுடைய அனுபவத்திற்குள் விழுந்து விட்ட நெருக்கமான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

சுதாவின் நெருங்கிய நண்பனான ரவி, எரிச்சலூட்டும் சகவாசி ஜேகே, வாகன ஓட்டுநர் சிங், புலனாய்வு இதழ் நிருபர் சாரா, முகம் பார்க்காமல் இணைய உறவில் மட்டும் நீடித்து பிறகு அதிர்ச்சி தரும் ஓவியா,  மெல்லிய காதலோடு காணாமற் போகும் சுஜா, வெவ்வேறு முகங்கள் காட்டும் தந்திரக்கார அதிகாரிகள் சம்பத், லட்சு என்று ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் தனித்தன்மையோடு துல்லியமாக உருவாகியிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதையும் மனிதர்களின் லாபங்களுக்காகவும்  வக்கிரங்களுக்காகவும் அவை துன்புறுத்தப்படுவதையும் பற்றிய கவலைக் குறிப்புகளும் புதினத்தில் இடையில் பதிவாகியுள்ளன. 

நாயகனின் பணிநீக்கத்திற்கான காரணத்தை தேடி அலைவதான பரபரப்பின் பாவனையில் இந்தப் புதினம் இயங்கினாலும் இதன் ஊடாக இயற்கை வளங்களின் சுரண்டல், புதையலைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை, அதற்காக அவர்கள் செய்யும் கீழ்மைகள், நல்லவனற்றிற்கும் தீயவனவற்றிற்கும் இடையே நிகழும் ஒயாத  போர், தனிநபர்களின் நிறைவேறாத  ஆதாரமான விருப்பங்கள், அவற்றிற்கான தேடல்கள், உளைச்சல்கள் என பல்வேறு விஷயங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. 

ஐ.டி பணியின் சூழல், அத்துறை பணியாளர்களின் பிரத்யேகமான மனோபாவங்கள், அவைகளில் உள்ள பிளாஸ்டிக் தன்மை தொடர்பான குறிப்புகளும் அபாரமாக பதிவாகியுள்ளன. புலம் பெயர்ந்து நீண்ட காலமாகி அங்கேயே உறைந்து விட்ட எழுத்தாளர்களின் பாணி வேறு. தமிழகத்திலிருந்து சென்று தற்காலிகமான விலகலில் ஒரு குழந்தையின் கண்களுடன் புதிய உலகை விழி விரிய நோக்கி, எப்போது வேண்டுமானாலும் தாயகத்திற்கு திரும்பி விடும் நோக்கில் அமையும் படைப்புகள் வேறு. இரண்டாவது பாணியில்,  இந்தப் புதினம் சிறப்புற உருவாகியுள்ளது. 


வன நாயகன், அதன் தலைப்பிற்கேற்ப பல்வேறு மிருகங்களின் குணாதிசயங்கள் அடங்கிய நபர்களின்  இடையில் போராடி விடைகாண்பவனைப் பற்றிய பயண அனுபவமாக சுவாரசியத்துடன் உருவாகியிருக்கிறது. 




**

வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,  முதல் பதிப்பு டிசம்பர் 2016
பக்கங்கள் 304, விலை ரூ.275

(அம்ருதா இதழில் வெளியானது)

suresh kannan

Sunday, May 28, 2017

குற்றம் 23: கருப்பையில் சிக்கியிருக்கும் பெண் விடுதலை

இந்தக் கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படமான குற்றம் 23 பற்றியது.  என்றாலும் அந்த சினிமாவைப் பற்றி மட்டும் பிரத்யேகமாக உரையாடாமல் அதனுள் உட்பொருளாக அடங்கியிருக்கும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசப் போகிறது. குறிப்பாக பெண்களின் கருப்பை அரசியல் பற்றி.  அதற்கு முன் திரைப்படத்தைப் பற்றி சிறிது பார்த்து விடலாம். 

***

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கினாலும் பெரிய அளவிலான வெற்றியை ருசிக்காத துரதிர்ஷ்டசாலிகள் நிறைய பேர் உண்டு. நாயகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அதுவொரு பெரிய பட்டியல். அவர்களில் சிலர் மட்டும் சளைக்காமல் நீந்திக் கொண்டேயிருப்பார்கள். சற்று ஆவேசமாக முன்னகரும் போது நீரின் மேற்பரப்பில் அவர்களின் முகம் சற்று நேரம் தெரியும். பின்பு மீண்டும் அமிழ்ந்து விடும். என்றாலும் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார்கள். அவ்வகையான தொடர் முயற்சியாளர்களில்  ஒருவராக அருண் விஜய்யைச் சொல்லலாம்.  செல்வாக்கான பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் வெற்றி என்பது அவருக்கு அபூர்வமாகவே சாத்தியமாகியிருக்கிறது. சேரனின்  'பாண்டவர் பூமி' போன்ற சில திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர முடிகிறது. மற்றபடி நிறைய தோல்வி மசாலாக்கள்.

கெளதம் மேனனின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் என்றாலும் அதிலுள்ள சவாலுக்காகவே ஏற்ற துணிச்சலின் பரிசை அருண் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார் . 'ஈரம்' என்கிற தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த  இயக்குநர் அறிவழகனிடம் தம்மை ஒப்படைத்துக் கொண்டது அவரது அடுத்த புத்திசாலித்தனம். கெளதம் உருவாக்கும் 'போலீஸ்' திரைப்படங்களின் நாயகத்தன்மை 'குற்றம் 23' திரைப்படத்திலும் எதிரொலிக்கிறது. நேர்மையான காவல் அதிகாரி, கண்ணியமான காதலன், சமூகக்குற்றங்களை செய்யும் வில்லன்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது என்று தன் பாத்திரத்தை திறமையாக கையாண்டிருக்கிறார் அருண். 

சமூகப் பிரச்சினைகளை, தமிழ் சினிமா பெரும்பாலும் ஊறுகாயாகவே பயன்படுத்திக் கொள்ளும். அந்தச் சிக்கல்களை தீர்ப்பதின் மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல நாயகர்கள் காலம் காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் குளிர்பான விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கும் அதே ஹீரோ, மறுபுறம் நீர் ஆதாரம் சுரண்டப்படும் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக திரையில் ஆவேசமாக வசனம் பேசும் அபத்தமும் நிகழத்தான் செய்கிறது.  

'ரமணா' திரைப்படத்தின் ஒரு பகுதியைப் போன்று  மருத்துவத் துறையில் நிகழும் மோசடிகளைப் பற்றி சில தமிழ் சினிமாக்கள் ஏற்கெனவே பேசியிருந்தாலும் அவைகளில் வணிக அம்சங்களே அதிகமிருந்தன. 'குற்றம் 23' திரைப்படத்திலும் அவ்வாறான  வணிக விஷயங்கள் கலந்திருந்தாலும் தன்னுடைய மையத்தை நோக்கி முன்னகர்வதில் பெரும்பாலும் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறது. இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

சில அரிதான நேர்மை அடையாளங்களைத் தவிர்த்து விட்டு, காவல்துறை இயங்கும் லட்சணங்களை நாம் செய்திகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழ் சினிமா தனது வணிகத்திற்காக காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய மிகையான சி்த்திரங்களை முன்வைக்கிறது. சமூகத்தில் உருவாகும் குற்றங்களுக்கு சில தனிநபர்கள் மட்டுமே காரணம் என்பது போலவும் அவதார நாயகர்கள் அந்த தீயவர்களை வதம் செய்து விட்டால் குற்றங்கள் காணாமல் போய் விடும் என்பது போன்ற எளிய தீர்வுகளை முன்வைப்பதின் மூலம் குற்றங்களின் ஊற்றுக் கண்களை மழுப்பி மறைக்கும் வேலையையும் செய்கிறது. 

சமூகக் குற்றங்கள் உருவாவதற்குப் பின் இந்த அமைப்பின் பல்வேறு சிக்கலான கண்ணிகள் செயல்படுகின்றன. குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிக்கும் அசுரர்கள் அல்ல. அவர்கள் இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துதான் உருவாகிறார்கள். அவர்கள் உருவாவதற்கு இந்தச் சமூகமும் காரணமாக இருக்கிறது. இது சார்ந்த பல்வேறு பரிமாணங்களைப் பற்றி உரையாடாமல் காவல்துறை என்கிற நிறுவனத்தின் மூலம் சில தனிநபர்களை சாகடித்து விடுவதாலும் சிறையில் தள்ளி விடுவதாலும் குற்றங்கள் மறைந்து விடும் என்பது அறியாமையே. 

இது சார்ந்த சில குறைகள் இந்த திரைப்படத்தில் இருந்தாலும் இத்திரைப்படம் பயணிக்கும் ஆதாரமான பிரச்சினையில் இருந்து சில கருத்துக்களை நாமாக விரித்து சிந்தனைகளுக்கு உள்ளாக்கும் அவசியத்தை உருவாக்குகிறது



***

இந்த திரைப்படத்தின் கதையும் சம்பவங்களும் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

கிறிஸ்துவ தேவாலாயத்தில் ஒரு பெண்ணும் பாதிரியாரும் கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்து வேறு சில மரணங்கள் நிகழ்கின்றன.  உதவி ஆணையர் வெற்றி (அருண் விஜய்)  இந்த தொடர் குற்றங்களைப் பற்றி விசாரிக்கிறார். இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். ஒவ்வொரு கண்ணியாக பற்றிக் கொண்டு முன்னகரும் போது இறந்தவர்கள் அனைவரும் கர்ப்பிணிப் பெண்கள் என்று தெரியவருகிறது. இந்த ஒற்றுமை அவரை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது. இறந்து போனவர்களில் அவருடைய அண்ணியும் ஒருவர். எனவே இதை தனிப்பட்ட துயரமாகவும் எடுத்துக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார் வெற்றி. இந்த மரணங்களுக்குப் பின்னேயுள்ள மருத்துவ மோசடிகளும் சதிகளும் துரோகங்களும் ஒவ்வொன்றாக தெரியவருகின்றன. 

ஆண்களிடமுள்ள குறைபாட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களுக்கு நவீன விஞ்ஞானம் செயற்கை முறை கருத்தரிப்பு எனும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது. இதில் பல முறைகள் உள்ளன. இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் மருத்துவமனையானது அவற்றில் ஒரு முறையை தங்களை நாடி வரும் பெண்களுக்கு பரிந்துரைக்கிறது. அதன்படி கணவனின் உயிரணுக்களை எடுத்து மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுவார்கள். இயற்கையான முறையில் நிகழும் பாலுறவின் வழியாக கர்ப்பம் தரிக்கவில்லை என்கிற விஷயத்தை தவிர தன் கணவனின் மூலமாக வாரிசு ஒன்றை அடைகிறோம் என்கிற திருப்தி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும். மலடி என்று சமூகத்தால் இகழப்படும் மனப்புழுக்கத்திலிருந்தும் அவர் வெளிவரலாம். 

 மருத்துவமனையானது, வணிக நோக்த்திற்காக  ஒரு மோசடியை செய்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருடைய உயிரணுக்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான போதுமான தகுதியோடு இல்லை என்றால் வேறொரு அநாமதேய ஆணின் உயிரணுக்களை பயன்படுத்தி கர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும்   சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதை மறைப்பது குற்றம். தார்மீகமாக அநீதியும் கூட. இந்த உணர்வுரீதியான மோசடியையும் துரோகத்தையும் மருத்துவ நிலையம் செய்கிறது.  தங்களின் வழியாக உருவான வாரிசு என அந்த தம்பதியினர் நினைத்துக் கொண்டிருக்கும் போது அது அவ்வாறாக இல்லை என்றாகி விடுகிறது. முற்போக்கான எண்ணமுள்ளவர்கள் இந்த மாற்று ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள்வர். மேலைய நாடுகளில் இது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் கற்பு என்பது ஒழுக்க மதிப்பீடுகளோடு அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் இதை ஏற்பதில் நிறைய கலாசார சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மனச்சிக்கல்கள் இருக்கின்றன. 

இந்தப் பலவீனங்களைத்தான் இதில் வரும் வில்லன் பயன்படுத்திக் கொள்கிறான். மருத்துவமனை செய்யும் மோசடியின் உள்ளே நுழைந்து அதனினும் கூடுதலான துரோகத்தைச் செய்கிறான். அதற்கு அவனுடைய தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. தன் மூலமாக ஒரு வாரிசு உருவாக வேண்டும் என்பதில் வெறியாக உள்ளவன் அவன், இது குறித்து மனைவியுடன் ஏற்படும் சச்சரவு காரணமாக அவளைக் கொன்று விடுகிறான். தனது நோக்கம் தடைபட்டு விடுவதால் மருத்துவ நிலையத்தில் ரகசியமாக புகுந்து விந்து வங்கியில் தன்னுடைய உயிரணுக்களை சேர்த்து விடுகிறான். இதன் மூலம் தன்னுடைய வாரிசு பல பெண்களின் வழியாக உருவாகும் என்கிற குரூர திருப்தி அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் பணத்தாசை உள்ளவர்கள் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களைத் தொடர்பு கொண்டு இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி பணம் பறிக்கத் துவங்குகிறார்கள். இந்த மோசடி தொடர்பாகத்தான் பெண்களின் மரணங்கள் நிகழ்கின்றன. 

மருத்துவமனையால் ஏமாற்றப்படும் பெண்களைத் தவிர இதிலுள்ள ஆபத்தான வேறு சில விதிவிலக்குகளையும் படம் சுட்டிக் காட்டுகிறது. கணவருக்கு தகுதியிருந்தாலும் சில காரணங்களுக்காக வேறொரு ஆணின் உயிரணுக்களின் மூலம் கர்ப்பம் ஈட்டிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். தமக்குப் பிடித்தமான வெற்றிகரமான கிரிக்கெட் வீரனைப் போலவே தன்னுடைய குழந்தையும் உருவாக வேண்டும் என நினைக்கும் ஒரு பணக்காரப் பெண், அந்த கிரிக்கெட் வீரனின் உயிரணுக்களை ரகசியமாக பெரும் பணம் கொடுத்து வாங்கி கர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கிறாள். தன் மகளுக்கே தெரியாமல் இந்த அநீதியைச் செய்யும் ஓர் அரசியல்வாதியின் குரூரமான செயலும் படத்தில் சித்தரிக்கப்படுகிறது. 



***

ஒரு குழந்தையை, தம் வாரிசை உருவாக்குவதில் ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் இணைவதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் இது சாத்தியப்படாத சூழலில் அதற்கான காரணங்கள் ஆராயப்படாமல்  பெண்ணின் மீதுதான் எல்லாப் பழிகளும் சுமத்தப்படுகின்றன. அவள் மலடி என்று சமூகத்தால் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறாள். "அண்ணியின் சாவிற்கு நீயும்தானே காரணம், எப்ப விசேஷம்' னு கேட்டு அவங்களை சாகடிச்சிட்டே  இருந்தே" என்று இத்திரைப்படத்தின் நாயகன் தன் தாயை நோக்கி கேட்கிறான். 

இந்தச் சிக்கலில் இருந்தும் மனப்புழுக்கத்தில் இருந்தும் வெளியேற பெண்ணுக்கு எவ்வித வாய்ப்பும் தரப்பட்டதேயில்லை. ஆணிடம் குறைபாடு இருந்தாலும் அந்தப் பழியையும் இணைத்து பெண்ணே ஏற்க வேண்டியிருக்கிறது. ஆனால் மறுபுறம் இதற்கான எவ்வித பழியையும் ஏற்க வேண்டியில்லாத சூழலில் வேறொரு திருமணத்தின் மூலம் ஆணுக்கு இன்னொரு வாய்ப்பையும் தர இச்சமூகம் தயாராக இருக்கிறது. 

ஆனால் நவீன மருத்துவம் இதற்கான மாற்றைக் கண்டுபிடித்திருப்பதின் மூலம் பெண்ணின்  துயரத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள பழமைவாத சிந்தனையில் ஊறிப் போன சமூகம் தயங்குகிறது. அப்போதும் பெண்ணே பலியாக வேண்டியிருக்கிறது. 

ஏன் பெண்ணைக் குறிவைத்தே இத்தனை சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன? மனித வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


***


மனித குலம் உருவாகிய காலக்கட்டத்தில் வேட்டையாடும் சமூகமாக இருந்தது. அப்போதைக்கு தேவையான உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி உண்பதின் மூலம் ஓரிடத்தில் நிலையாக தங்காமல்  நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களுக்குள் நிறைய சண்டைகள் உருவாகிக் கொண்டே இருந்தன. குழுக்கள் உடைந்து மேலும் குழுக்களாக சிதறி பூமிப்பந்தின் பல்வேறு இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது பெண்ணே குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். குழுவை வழிநடத்தினாள். மனித உறவுகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் வரையறை செய்யப்படாத சூழலில் பாலின உறவு சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தது. எவரும் எவருடனும் உறவு கொள்ளலாம் என்கிற நிலைமை. 

உடல் ரீதியாக ஒரு பெண்ணை ஆணிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம், அவளுடைய உடலின் மூலமாகத்தான் குழந்தை உருவாகிறது.. இது ஆணிற்கு அச்சத்திற்கு ஏற்படுத்தியது. அவளை கடவுளின் அம்சம் கொண்டவளாக கருதி வழிபட வைத்தது. பெண்ணின் தலைமையை ஏற்க எவ்வித மனச்சிக்கலும் இல்லாத நிலைமையை உண்டாக்கியது. தாய்வழி சமூகமாக இருந்த காலக்கட்டம் அது. 

ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு நிலத்தைச் சார்ந்த வாழ்வுமுறை உருவாகிய பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. நகர்ந்து கொண்டேயிருக்கும் நாடோடிகளாக அல்லாமல் நிலையான வாழ்வுமுறை உண்டாகியது. தாங்கள் விவசாயம் செய்யும் இடம் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிற நிலவுடமை சமூக எண்ணங்கள் உருவாகின. தனக்குப் பிறகு இந்தச் சொத்துக்களை அனுபவிக்க வேண்டிய உரிமை தன்னுடைய ரத்தத்தின் மூலமாக மட்டுமே உருவான வாரிசு தேவை என்று ஆண் கருதினான். இதற்காக அவன் பெண்ணின் கருப்பையை கட்டுப்படுத்தவும் கறாராகவும் கண்காணிக்கவும் வேண்டியிருந்தது. இதர ஆண்கள் அதை அணுகாதவாறான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. எனவே தன் உடல் வலிமையைக் கொண்டு பெண்ணின் அதிகாரத் தலைமையைக் கைப்பற்றினான். பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமான பல்வேறு தந்திரங்களின் மூலமாகவும் ஆண்சமூகம் ஏற்படுத்தியது. 


பெண்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் இதர ஆண்களை பாலியல் நோக்கில் அணுகக்கூடாது என்பதற்காக கற்பு போன்ற கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன. தாலி என்கிற அடையாளத்தின் மூலம் அவள்  இன்னாரின் மனைவி மட்டுமே என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவள் மனதாலும் கூட தன் கணவரை மட்டுமே நினைத்திருந்தால் 'கற்புக்கரசி, பத்தினி' என்றெல்லாம் போற்றப்படுவாள். மாறாக இதிலிருந்து அவள் துளி தவறினால் கூட குடும்பப் பெண்ணாக கருதப்படாமல் ஒழுக்க வீழ்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டு இகழப்படுவாள். தன் கர்ப்பப்பையை தூய்மையாக வைத்திருந்து தன்னைக் கைப்பற்றிய ஆணின் மூலமாக மட்டும் குழந்தையை உருவாக்குவதும் அந்தக் குழந்தைகளை வளர்ப்பதும் மட்டுமே அவளின் அடிப்படையான கடமை என்கிற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. குடும்பம் என்கிற நிறுவனம் இப்படித்தான் உருவாகியது. பெண்ணின் எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு பெரும்பாலானவற்றை ஆண் சமூகம் கைப்பற்றியது. 

பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமலிருந்தது. அவன் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். ஓர் ஆணுக்கு குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடுகள் இருந்தாலும் அதற்கும் பெண்ணேதான் காரணமாக இருக்க முடியும் என்று சமூகம் அழுத்தமாக நம்பியது. அவனுக்கு வேறு வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த தந்திரங்களையெல்லாம் பெண்களையே நம்ப வைத்ததுதான் ஆண் சமூகத்தின்  சாதனை. 

இந்த வரலாற்றுச் சுமையையும் ஆண்களின் துரோகத்தையும் பெண் சமூகம் பன்னெடுங்காலமாக சுமந்து வருகிறது. 


***


பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'மாதொரு பாகன்' என்கிற நாவலின் மீது சில மாதங்களுக்கு முன் சர்ச்சை உண்டாகியது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை, சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த நாவல் தங்களை இழிவுபடுத்துகிறது என்று கூறி போராட்டங்களை ஏற்படுத்தினார்கள். அந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?


அன்பான தம்பதியொருவர் தங்களின் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை. கணவனின் குடும்பத்தாரும் சரி, ஊராரும் சரி, இது சார்ந்த பல்வேறு விதமான  அழுத்தங்களை அந்தப் பெண்ணுக்கு தருகிறார்கள். அவளால் எந்தவொரு மங்கல நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிவதில்லை. கணவனுக்கும் இது வருத்தம்தான். இது சார்ந்த பரிகாரங்கள், சடங்குகள் அனைத்தையும் முயன்று பார்க்கிறார்கள். எவ்வித பலனும் இல்லை. இன்னொரு திருமணத்தை செய்து கொள் என்று சமூகம் அந்தக் கணவனுக்கு பரிந்துரைக்கிறது. தன் மனைவியின் மீதுள்ள அன்பால் அவன் அந்த ஏற்பாட்டிற்கு சம்மதிப்பதில்லை.

அந்த ஊரில் வருடந்தோறும் ஒரு திருவிழா நடைபெறும். அதன் இறுதிநாளில் ஒரு சடங்கு உள்ளது. அதன்படி குழந்தைப் பேறில்லாத பெண்கள் கணவர் அல்லாத வேற்று ஆண் ஒருவனுடன் கூடி அந்த வாய்ப்பை அடைவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படுகிறது. ஆண்களின் கூட்டத்தில் தனக்குப் பிடித்தமானவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு பெண்ணுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அடையும் குழந்தைகள் கடவுளின் வரமாக கருதப்படுவார்கள். அந்தச் சடங்கில் கலந்து கொள்ளும் ஆணும் கடவுளின் அம்சமாகவே கருதப்படுவான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்தச் சடங்கைப் பற்றி யோசித்துப் பார்த்தால் நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான 'செயற்கை கருத்தரிப்பு' என்கிற முறையை இன்னொரு பாணியில் அந்தக் காலத்திலேயே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியம் உருவாகிறது. பழமைவாத சிந்தனைகளும் கடுமையான ஆச்சார சூழல்களும் நிலவிய காலக்கட்டத்தில் ஆன்மீகம் எனும் அமைப்பு வழியாக ஒரு சடங்காக இதை அமைத்திருப்பதில் முன்னோர்களின் சமயோசிதத்தையும் முற்போக்கு எண்ணத்தையும் பாராட்டத் தோன்றுகிறது. ஆணிடம் குறைபாடு இருந்தால் அது சார்ந்த பழியையும் துயரத்தையும் காலம்பூராவும் பெண்களே ஏற்றுக் கொண்டு புழுக்கத்தில் அவதியுறும் துயரத்திலிருந்து ஒரு விடுதலையை இந்தச் சடங்கு அளிக்கிறது. அதே சமயத்தில் இது சார்ந்த குற்றவுணர்வோ, ஒழுக்க  மதிப்பீடு சார்ந்த இகழ்ச்சியோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதற்கு பக்தி முலாமும் பூசப்பட்டு விட்டது. எத்தனை அற்புதமான ஏற்பாடு?

அந்த நாவலில் வரும் நாயகி, தன் கணவன் அறியாமல் சடங்கில் கலந்து கொள்கிறாள். அவள் அதுவரை அனுபவித்த துயரங்கள் அந்த நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. இதை பின்னால் அறியும் கணவன் துயரமும் கோபமும் கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது. 

நாவலாசிரியரான பெருமாள்முருகன், இதில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பெயரை குறிப்பிட்டு விட்டதால் அந்த ஊரின் சமூகம் இது சார்ந்த கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. 'நாங்கள் என்ன, தந்தை யாரென்று அறியாத முறையற்ற வழியில் வந்த கூட்டமா?' என்று கொதிப்படைந்ததது. குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களின் துயரத்தையும், அது சார்ந்து முன்னோர்கள் ஏற்படுத்திய அற்புதமான மாற்று ஏற்பாட்டின் அவசியத்தையும் ஆண்மைய சிந்தனை உலகத்தால் சிந்திக்கவோ, சகித்துக் கொள்ளவோ முடியவில்லை. இதுவொரு குறிப்பிட்ட பிரதேசத்தின், சமூகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. பெண் சமூகம் பன்னெடுங்காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினை. 


***

குடும்பம் என்கிற அமைப்பு உங்களை சிறைப்படுத்துமானால், பெண்களே.... உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கியெறியுங்கள் என்கிற ஆவேசமான அறைகூவலை முன்வைத்தார் பெரியார்.  குழந்தையைப் பெற்று உருவாக்கி வளர்த்து தரும் இயந்திரங்களாகவே பெண்கள் ஆண்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பதால் அவர் அப்படிச் சொன்னார். கற்பு, தாய்மை, குடும்பம் போன்ற பல கருத்தாக்கங்களும் நிறுவனங்களும் அவர்களை தந்திரமாக சிறையினுள் வைத்திருக்கின்றன என்பதால் பெண்கள் விடுதலையை நோக்கி நகர்வதற்கான பல்வேறு சிந்தனைகளை முற்போக்காளர்கள் பரப்பி வருகிறார்கள்.  

பெரும்பாலான வரலாறுகளும் சாதனைகளும் ஆண்களின் பெயராலேயே உருவாக்கப்படுகின்றன. இதற்கான காரணம் மிக எளிது. ஏனெனில் பெண்களுக்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. ஆண்களின் சாதனை வெளிச்சத்திற்குப் பின்னால் உள்ள இருளில் நின்று கொண்டு பெண்கள் உதவி செய்து கொண்டிருந்தாலே போதும். இந்தக் கட்டுப்பாடுகளையும் தளைகளையும் மீறி தங்களுக்கான வரலாறுகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட பெண்கள் சிலரே. 

“உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். அடுத்த தலைமுறை உருவாதற்கான கருவிகள் மட்டுமே நாம்.  ஒவ்வொரு உயிருக்குமே அதனதன் வழியாக சுதந்திரமாக செயல்படுவதற்கான உரிமையுள்ளது. மனித குலத்தைத்தவிர இதர உயிரினங்கள் இயற்கையின் இந்த ஏற்பாட்டின் படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தங்களுக்கான பல சிக்கல்களைத் தானே உருவாக்கி வைத்துள்ளான். 

குழந்தைப் பேறு என்பது ஒரு பெண் கடந்து வரும் குறுகிய காலக்கட்டம் மட்டுமே. இயற்கை அந்த வாய்ப்பை அவளுக்கு தந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே அது.  அதுவே அவளுடைய முழுமையான வாழ்க்கையல்ல. அது சாத்தியப்படாததற்காக அவள் கூச்சப்படவோ எவ்வித அவதூறுகளுக்கும் மனம் புழுங்கவோ அவசியமேயில்லை. ஆணின் பழிகளையும் ஏற்றுக் கொண்டு அவதியுறத் தேவையேயில்லை. இயற்கையின் ஆதார நோக்கமே அடுத்தடுத்த உயிர்களை  உருவாக்கி அந்தச் சுழற்சியின் மூலம் பூமியின் உயிர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்பதே. பாலின்பம் என்பது அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணி.

தாம் ஏற்படுத்திய தந்திரங்களின் மூலமாகத்தான் பெண் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று பெரும்பாலான ஆணுலகம் நம்பிக் கொண்டிருப்பது அபத்தமானதொன்று. இந்த தளைகளை மீற வேண்டுமென்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் ஆணின் தந்திரங்களை விடவும் பல மடங்கு தந்திரங்களை அவளால் மேற்கொள்ள முடியும். பெண்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அவளது  துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதே ஆண்களின் கண்ணியமான எதிர்வினையாக இருக்க முடியும்.

குழந்தைப் பேற்றிற்காக  திருமணம் எனும் நிறுவனத்தையோ கணவன் எனும் உறவையோ சார்ந்திருக்கத் தேவையில்லை என்கிற வாயப்பை நவீன விஞ்ஞானம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஆணுலகம் உருவாக்கி வைத்திருக்கும் பழமைவாத சிந்தனைகளாலும் கற்பிதங்களாலும் இனியும் பெண்கள் குழம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் இணைந்து பாலின சமத்துவத்தோடு உருவாக்குவதே இனிமையான உலகமாக இருக்க முடியும். அதில் உருவாகும் சமநிலையற்ற தன்மைகளை, குறிப்பாக குழந்தைப் பேற்றினால் உருவாகும் சிக்கல்களை பெண்ணுலகம் இனியும் சகித்துக் கொள்ளத் தேவையில்லை என்கிற ஆதாரமான செய்தியை இத்திரைப்படம் நினைவுப்படுத்துவதாக தோன்றுகிறது. 

வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாக 'குற்றம் 23' அமைந்திருந்தாலும் பெண்ணுலகம் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலான விஷயத்தை மையப்படுத்தியாதாலேயே இது கவனிக்கத்தக்க படைப்பாக மாறியிருக்கிறது.

(ஜன்னல் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்)


suresh kannan

Sunday, May 21, 2017

மரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்




உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால்  முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீதியே. அநீதி என்று குறிப்பிடுவது  கூட குறைந்த பட்ச சொல் மட்டுமே. மானுட அறத்தையும் நாகரிகத்தையும் குழி தோண்டிப் போட்ட படுபயங்கர காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகரிகம் மெல்ல வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இனப் பேரழிவின் அட்டுழியங்கள் மெல்ல மெல்ல அம்பலமான போது உலகமே அதிர்ச்சியடைந்தது. சுமார் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் விதம்விதமாக கொல்லப்பட்டார்கள்; கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். யூதர்கள் தவிர இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இந்த வரிசையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. சொத்துக்களை இழந்து உயிர்தப்பி  அகதிகளாகவும் காணாமற் போனவர்கள் பட்டியல் வேறு.


இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே  பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்? அதற்கான பின்னணியும் காரணமும் என்ன? என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும்  முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை  ஈவுஇரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன? அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா? நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை, பெண்ணை, குழந்தையை, முதியவரை அவர்கள்  யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?  அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள், எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.  ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல். ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால்  யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச்சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது;  பின்னாலும்  இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலக்கட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.

**

இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள், ஆய்வுகள், திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன. ஹிட்லரின் உளவியல், அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழில்  இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி  கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது. அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

மருதனின் அசாதாரணமான உழைப்பில் உருவாகியுள்ள இந்த நூல் நம்மைக் கவரும் அதே வேளையில் கலங்கடிக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மரணத்தின் ஓலங்கள், வலிகளின் கதறல்கள், விடுதலையின் ஏக்கங்கள் போன்றவற்றினால் குருதியும் கண்ணீரும் வழியும் ஈரங்களோடு பதிவாகியுள்ளது. ஆனால் இதில் பதிவாகியிருக்கும் துயரம் என்பது பனிப்பாறையின் மீதான நுனி மட்டுமே  நம்மால் கற்பனையில் கூட யூகிக்க முடியாத படியான கொடுமைகள் அரங்கேறியுள்ளன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு யூதர் சொல்கிறார் 'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல. நாங்கள் அங்கு சந்தித்தவற்றை சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்து போயிருக்கின்றன.'

நூலின் பெரும்பாலான பக்கங்களில் யூதர்கள் உள்ளிட்டவர்களின் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், அதற்கான திட்டங்கள், முகாம்களை நோக்கிச் செல்லும் ரயில் பயணங்களின் அவஸ்தைகள், அவர்களின் மரணத்திற்காக யூதர்களாலேயே செய்ய வைக்கப்பட்ட முகாம் பணிகள், மரணக்குழிகள், கொத்துக் கொத்தாக மனிதர்களை எவ்வாறு எளிதில் அழிப்பது என்று செய்யப்பட்ட ஆலோசனைகள், மனித உடல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

யூதர்களை கொத்துக் கொத்தாக ரயில்களில்  மூச்சு முட்ட அடைத்து செல்வதற்காக எஸ்.எஸ். ரயில்வே துறைக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக சரக்கு ரயில்களை நாஜிகள் பயன்படுத்தினார்கள்.  உயிருள்ள மனிதர்களை சரக்குகள் என்றே தங்களின் ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். தேவையற்ற சரக்குகளை அழிப்பதற்காக வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று குறிப்பு எழுதினார்கள். முகாம்களில் அடைக்கப்பட்ட நபர்களின் தனி அடையாளங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்கள் எண்களால் குறிக்கப்பட்டார்கள். உடல் வலு இல்லாதவர்கள், குழந்தைகளை விஷவாயு அறையில் இட்டுக் கொன்றார்கள். இதர நபர்கள் முகாம்களில் கடுமையான பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். முகாமில் இருந்த ஒவ்வொருக்குமே தங்களின் விடுதலையோ மரணமோ எப்போது நிகழும் என்கிற விஷயம் அறியப்படாமல் பதட்டத்திலேயே தொடர்ந்து வைக்கப்பட்டார்கள்.

ஒரு துளி உணவிற்காகவும் இன்னபிற விஷயங்களுக்காகவும் யூதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பொருட்களை திருடத் தயாராக இருந்தார்கள். மிக அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு விலங்குகளுக்கு நிகரானவர்களாக மாறும் கொடுமையை நாஜிப்படை திட்டமிட்டு செய்தது. இறந்து போனவர்களே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுமளவிற்கு முகாமில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் உளவியல் நிலைமை பரிதாபகரமாக அமைந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் நிறைய பேர் முகாமின் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் இந்த நூல் வதைகளைப் பற்றிய விவரணைகளோடும் அவற்றைப் பற்றிய பரிதாபங்களோடும்  தொடரும் விசாரணைகளோடும் முடிந்து விடவில்லை. இனவெறுப்பின் பின்னால் உள்ள சித்தாந்தக் காரணங்கள், உளவியல் பின்னணிகள் ஆகியவற்றின் தொடர்பான தரவுகளையும் பதிவு செய்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியான நூல்களில் ஒன்றாக இதை  தயக்கமின்றி சொல்ல முடியும்.

**

ஹிட்லரின் வதைமுகாம்கள்
மருதன்
கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை ரூ.200
பக்கங்கள் - 232

(அலமாரி இதழில் பிரசுரமானது)




suresh kannan