'தமிழ்த் திரையில் உள்ளது போன்ற இந்தளவிற்கான நீண்ட நகைச்சுவை நடிகர் வாிசைப் பட்டியல் வேறெந்த மொழியிலும், பிரதேசத்திலும் இருப்பது போல் தெரியவில்லை' என்றார் இயக்குநர் மகேந்திரன், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில். 'தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு போதாது' என்றார் எழுத்தாளர் சுஜாதா. இரண்டிற்கும் இடையில்தான் உண்மை இருப்பது போல் தோன்றுகிறது.
ஒருவகையில் மகேந்திரனின் கூற்றை நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது உண்மையாக இருக்கும். என்.எஸ்.கிருஷ்ணன் துவங்கி சந்தானம், சூரி வரை எத்தனை விதம் விதமான நடிகர்கள், வகை வகையான நகைச்சுவைகள்.. "எழுத்தாளன்தான் இந்த நாட்டோட முதுகெலும்புன்னேன். தட்னான் பாரு" என்ற எழுத்தாளர் பைரவனை (தங்கவேலு) மறக்க முடியுமா? எம்.ஆர்.ராதா போல வில்லத்தனத்தையும் குணச்சித்திரத்தையும் கலந்து பிரத்யேக நகைச்சுவை செய்யக்கூடிய நடிகர் உலக அளவில் ஒப்பிட்டாலும் வேறு எவரேனும் இருக்கிறார்களா? சந்திரபாபு ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள்.. என்ன ஒரு ஆளுமை அவர்...
'சபாஷ் மீனா' என்ற படம் என்று நினைவு. ரிக்ஷாக்காரராக, சிவாஜியின் கல்லூரி நண்பராக என்று இரண்டு வேடங்கள் சந்திரபாபுவிற்கு. இதில் ரிக்ஷாக்காரர் தன் மனைவியை விட்டு விட்டு காணாமற் போய் விட அந்த இடத்தில் வந்து மாட்டிக் கொள்வார், இன்னொரு சந்திரபாபு. அவருடைய மனைவி அவரை ஒழுங்காக வந்து குடித்தனம் நடத்தச் சொல்லி ஊர்க்காரரர்களிடம் ஒப்பாரி வைக்க, அவர்கள் இவரை அடித்து மிரட்டி 'புள்ளைங்களை கூட்டிக் கொண்டு போய் ஒழுங்கா இரு" என்று உபதேசம் செய்வார்கள். இவரும் வாங்கும் அடி தாங்காமல் பதட்டத்தோடு அருகிலிருக்கும் யாரோ இரண்டு குழந்தைகளை வாரி அணைத்துக் கொள்ள, இன்னொருவர் "யோவ்.. அது என் பிள்ளைங்கய்யா" என அலறுவார். நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காட்சிக் கோா்வையது.
நாகேஷின் திருவிளையாடல் தருமியையும் தில்லானா மோகனாம்பாள் வைத்தியையும் பற்றி இன்று பூராவும் பேசிக் கொண்டேயிருக்கலாம். அப்படியொரு ஆளுமை நாகேஷ். இதில் சில நடிகர்களுக்கென்றே பிரத்யேகமாக நல்ல வழக்கங்கள் உண்டு. தங்கவேலு தாம் நடிக்கும் படங்களில் தப்பித்தவறி கூட யாரையும் அமங்கலமாய் திட்டி நடிக்க மாட்டாராம். "நாசமா போ" என்பது மாதிரி. அப்படி பேச வற்புறுத்தினால் நடிக்க மறுத்து விடுவாராம். ஒருவர் உதிர்க்கும் சொற்களுக்கு வலிமையுண்டு என்று நம்புகிறவர் அவர். எஸ்.எஸ். சந்திரன், மிகுந்த செயலாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தாம் நடிக்கும் காட்சிகளில் குறைந்தது பத்து பதினைந்து நகைச்சுவை நடிகர்களாவது இருப்பது போல்தான் அதன் பகுதியை எழுதச் சொல்வாராம். அனைத்து உதிரி நடிகர்களுக்குமே தொடர்ந்து சிறு சிறு வாய்ப்பாவது கிடைக்கட்டும் என்கிற நல்லெண்ணம்.
***
இந்த வரிசையில் மிக முக்கியமான நடிகர் என்று வடிவேலுவைச் சொல்ல வேண்டும். நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இவர் நடித்த திரைப்படங்களை வசனங்களை, காட்சிகளை நாம் வேடிக்கையாக உபயோகிக்கும், உதாரணம் காட்டும் அளவிற்கு வேறெந்த நகைச்சுவை நடிகரின் வசனங்களையாவது உபயோகித்திருக்கிறோமா என்றால் இல்லையென்றே கூற வேண்டியிருக்கும். அந்தளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் சில பிரத்யேக வசனங்களை அவருடைய பாணியிலேயே தினம் தினம் தன்னிச்சையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இடையில் சில காலம் வடிவேலு நடிப்பதில் இடைவெளி இருந்த போதில் காமெடி சானல்களால் இவரைத் தவிர்த்து இயங்க முடியவில்லை. பழைய திரைப்படங்களின் காட்சிகளையே மறுபடி மறுபடி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரின் பாதிப்பின் செல்வாக்கு வலுவாக உள்ளது.
எனக்கு கூட ஒன்று தோன்றும். சில நடிகர்கள் அல்லது நுட்பக் கலைஞர்கள் ஒரு சில படங்களில் நடித்து காணாமற் போய் விடுவார்கள், மக்களின் நினைவிலிருந்து உடனே மறக்கப்பட்டும் போவார்கள். சில வருடங்கள் கழித்து சாதாரண பேச்சில் கூட யாரும் அவர்களை நினைவு கூர மாட்டார்கள். இந்த துயரத்தை கடக்க ஒரு சுலபமான வழியுள்ளதாகத் தோன்றுகிறது. அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் குறைந்தபட்சம் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் மட்டுமாவது சிறப்பாக அமையும்படி பார்த்துக் கொண்டால் கூட போதும். எனில் இம்மாதிரியான காட்சிகள் தொலைக்காட்சிகளில் மறுமறுபடியும் நினைவுகூரப்பட்டு மக்களின் நினைவுகளில் இருந்து அவர்கள் அழியாமலிருப்பதற்கான வழிகளுள் ஒன்று என்று தோன்றுகிறது. தங்கவேலுவின் பழைய திரைப்படத்தின் காமெடி காட்சிகளை சமகால இளைஞர்கள் கூட ரசித்துப் பார்ப்பதை கவனியுங்கள். பாடல்கள் தவிர்த்து ராமராஜனை இன்று யாராவது நினைவு கூர்வார்களா என்ன?
***
இந்த வரிசையில் வடிவேலுவின் இடம் சாஸ்வதமாகி விட்டது என்றுதான் தோன்றுகிறது. அவர் நடித்த படங்களை நினைவு கூராமல் இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவையைப் பற்றி பேசவே முடியாது என்கிற நிலைக்கு உயர்ந்து விட்டார். ஒரு காலக்கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடி நிலையான அதிக புகழ் பெற்றிருந்தது. அடிப்படையில் கவுண்டமணி மிக இயல்பான, திறமையான நடிகர். இரண்டு படப்பிடிப்புகளில் அவர் நடித்ததை பாாத்திருக்கிறேன். வசனங்களை உள்வாங்கி அதனை தம்முடைய பாணியில் திணறாமல் அநாயசமாக நடித்து விட்டுப் போவார். என்றாலும் இவரைக் கழித்து விட்டால் செந்தில் ஏறத்தாழ பூஜ்யம்தான். அதுதான் பிற்பாடு உண்மையானது.
இன்று கவுண்டமணி காணாமற் போய், மரபுகளையும் நடிக பிம்பங்களையும் பகடி செய்த சில செமி எம்.ஆர்.ராதா அம்சங்களுக்காக திருவுருவாகி விட்டார் என்றாலும் இவருடைய நகைச்சுவையில் அருவருப்பூட்டும் சில அம்சங்கள் உண்டு. எதிரில் இருப்பவரை எட்டி உதைப்பது, முகத்தில் துப்புவுது, வயது வித்தியாசமின்றி வசவு வார்த்தைகளை உதிர்ப்பது போன்றவை. இவருடன் நடித்தவர்களை இப்போது கேட்டால் கதை கதையாக சொல்லக்கூடும்.
அப்படியல்லாமல் வடிவேலுவின் நகைச்சுவையில் உள்ள பிரதான அம்சமே, தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது. சுயபகடிதான் அவருடைய பெரும்பான்மையான நகைச்சுவையின் அடிப்படையே. இன்றுள்ள தோற்றத்திற்கு தொடர்பேயில்லாமல் 'என் ராசாவின் மனதிலே' திரைப்படத்தில் முதலில் தோன்றி பிறகு சில பல படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்தாலும் இவரது மேல்நோக்கிய பயணம் துல்லியமாக எங்கே துவங்கியது என்று பார்த்தால், அது 'வின்னர்' திரைப்படம். 'கைப்புள்ள'யாக தோன்றி எல்லோர் மனதிலும் நீங்காமல் நிறைந்து விட்டார். எல்லோர் மனதிலும் உள்ளே உறைந்திருக்கும் 'கைப்புள்ள தனத்தை' விதம் விதமாக சித்தரித்ததே இவர் நகைச்சுவையின் பெரும்பாலான பலம். இந்த பாணி நகைச்சுவையைத்தான் பெரும்பாலான திரைப்படங்களில் மாற்றி மாற்றி உருவாக்கினார் என்பதை காண முடியும். அன்றாட வாழ்வில் நாமே காணும், ஆனால் அதை நகைச்சுவை பிரக்ஞையோடு உணர முடியாத பல சம்பவங்களை இவர் வாய் விட்டு சிரிக்கும் படியான நுட்பத்துடன் உருமாற்றியிருப்பதை காண முடியும்.
இப்படி துண்டு துண்டான நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலு, 2005-ல் முழுநீளத் திரைப்படமாக நடித்த 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி' அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமானதொரு பரிணாம வளர்ச்சி. அவரின் ஏற்கெனவே நிறுவப்பட்ட ஆளுமைக்கு 'இம்சை அரசன்' என்கிற கோணங்கித்தனமான சித்திரம் மிக கச்சிதமாகப் பொருந்தியது. இதில் இயக்குநர் சிம்புதேவனின் பங்கும் கணிசமானது. ஏனெனில் 'இம்சை அரசன்' பாத்திரம் அவர் ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு தொடர்ச்சியாக கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்த விஷயம். அந்தப் பாத்திரத்தின் அசைவுகள், நுணுக்கங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. எனவே அதை வடிவேலுவின் மீது பொருத்துவதற்கு சிரமமேதுமில்லை. மேலும் அது அவருக்கு உற்சாகமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இத்தனை நாளாக கோடுகளில் மாத்திரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்த உருவம், ரத்தமும் சதையுமாக திரையில் சித்தரிப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு நல்ல அனுபவம். பார்வையாளர்களும் இதை வரவேற்று ஏற்று, கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
ஆனால் சிம்புதேவனால் இந்த முதல் வெற்றிக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த படங்கள் எதுவும் (இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் மட்டும் சற்று பரவாயில்லை) தரமுடியவில்லை என்பதை கவனிக்கலாம். ஏனெனில் ஆனால் அடுத்தடுத்த படங்களில் உருவாக்கிய முயற்சிகளின் கலவையும், உழைப்பும் சரியாகப் பொருந்தி வரவில்லை. முதல் படத்திற்கான அர்ப்பணிப்பையும் மெனக்கெடலையும் அடுத்தடுத்த திரைப்படங்களில் காணமுடியவில்லை. அவருடைய சமீபத்திய திரைப்படமான ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், 'ரன் லோலா ரன்' என்கிற ஜெர்மனிய சினிமாவின் மோசமான மொழிபெயர்ப்பு.
***
வடிவேலுவின் புகழையும் மக்கள் அபிமானத்தையும் 'இம்சை அரசன்' திரைப்படம் இன்னமும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது உண்மை. ஆனால் இந்த வெற்றியே அவரின் மனதில் உயர்வு மனப்பான்மையை உருவாக்கி தாம் செய்யும் எதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ண வைத்திருக்கலாம். எனவே புலிகேசியின் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு அதன் நகலைப் போன்று 2007-ல் உருவாக்கப்பட்ட (இயக்கம்: தம்பி ராமையா) 'இந்திரலோகத்தில் அழகப்பன்' தோல்வியைச் சந்தித்தது. என்றாலும் வடிவேலு அதிலிருந்து பாடம் கற்கவில்லை. மீண்டும் 2014-ல் இதே வகைமையில் உருவாக்கப்பட்ட 'தெனாலிராமன்' திரைப்படமும் தோல்வியே. இடையில் வழக்கம் போல் நகைச்சுவை நடிகராக அவர் நடித்த பகுதிகளை ஏற்றுக் கொண்ட மக்கள், சரியாக உருவாக்கப்படாத திரைக்கதையினால் அவரை ஒரு திரைப்படத்தின் நாயகராக ஏற்க மறுத்து விட்டனர் என்பதில் 'நகைச்சுவை நடிகர்களுக்கே'யுண்டான ஒரு செய்தி உள்ளது.
துண்டு துண்டாக நடித்து வெற்றியைப் பெற்றுக் கொண்டு வரும் ஒரு நடிகர் அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக தம் முழுத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு திரைப்படத்தின் நாயகராக நடிக்க விரும்புவதில் தவறொன்றுமில்லை. ஆனால் அது அவரது பிரத்யேக நகைச்சுவை திறமையை வெளிப்படுத்துவதாகவும் மிகையாக அமையாமலும் இருக்க வேண்டும். சிறந்த உதாரணமாக நாகேஷ் நடித்த 'சர்வர் சுந்தரத்தை' குறிப்பிடலாம். மாறாக நட்சத்திர நடிகர்களின் பிம்பங்களை நகலெடுக்கத் துவங்கினால் அது பொருந்தாமல்தான் போகும். கவுண்டமணி கூட முன்பு இது போன்ற மனோபாவத்தினால் நான்கைந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் அந்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பதும் இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? கவுண்டமணியை பொதுவாக இன்று எவ்வாறாக மக்கள் நினைவு கூர்கின்றனர்? நகைச்சுவை நடிகராகத்தானே? நடிகர் விவேக்கும் பரிசோதனை முயற்சியாக அவரது பிம்பத்திற்கு முற்றிலும் எதிராக நடித்த 'நான் பாலா' வெற்றியடையாததையும் கவனிக்கலாம்.
ஒரு சக நடிகர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட பகைமை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாகவே வடிவேலு 2011-ல் நிகழ்ந்த தமிழக பொதுத் தேர்தலில் எதிர்அணியில் தேவையில்லாமல் வம்படியாக குதித்து அரசியல் பிரச்சாரம் செய்தார்.. பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த மக்களைக் காண காண அவருக்கு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் மிகுந்தது. இன்றும் அதன் காணொளிகளைக் கண்டால் இதை உணர முடியும். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்ததால் பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் அதிகார பயம் காரணமாக அவர் திரையுலகில் தனிமைப்படுத்தப்பட்டார். என்றாலும் நாயகனாக நடித்து தன்னுடைய பிம்பத்தை மீட்டெடுத்து விட முடியும் என்பதற்காக அவரும் கூட மற்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்த சில வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வடிவேலுவின் விலகலால் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை சந்தானம், சூரி, கஞ்சா கருப்பு போன்றவர்கள் சரியாக உபயோகித்துக் கொண்டனர் எனலாம்.
***
இந்த நிலையில் வெளியாகியிருக்கிறது, வடிவேலு நாயகராக நடித்த 'எலி' திரைப்படம். வடிவேலுவின் அதே தன்னம்பிக்கையை இத்திரைப்படம் குறித்த அவரது காணொளி பேட்டிகளிலும் பத்திரிகை நேர்காணல்களிலும் காண முடிகிறது. தெனாலிராமன் திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநர். அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த வாயப்பை வழங்குகிறார் வடிவேலு. மீண்டும் எடுக்கப்பட்ட ஒரு அபத்தமான முடிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். 'எலி' திரைப்படத்தின் மோசமான உருவாக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. வடிவேலு என்கிற ஒற்றைப் பிம்பத்தை மட்டும் நம்பி அதன் மீது பலவீனமான, பழமை நெடியடிக்கும் சீட்டுக்கட்டு மாளிகையை கட்டியிருக்கிறார் இயக்குநர். சில காட்சிகளை கூட தாண்ட முடியாத பலவீனத்துடன் திரைப்படம் பொலபொலவென்று சரிந்து விழுகிறது.
உண்மையில் இத்திரைப்படத்திற்கு எதற்காக 1960-காலக் கட்டத்திய பின்னணி தேவையென்கிற காரணமே புரியவில்லை. பலவீனமான திரைக்கதையென்றாலும் கூட அது அப்போதைய காலக்கட்டத்தைக் கோரும் வலுவான அம்சம் எதையுமே படத்தில் கொண்டிருக்கவில்லை. "ஏதோ வித்தியாசமாக செய்ய முயலும்" இயக்குநரின் ஆர்வக் கோளாறு மட்டுமே தெரிகிறது. 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் வெற்றியைப் பார்த்து அதே மாதிரியான உருவாக்கத்துடன் வெளிவந்த போலி 'பிரீயட்' படங்கள் சூடு போட்டுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அத்திரைப்படத்தின் காலக்கட்டத்தின் பின்னணி திரைக்கதையுடன் தர்க்கரீதியாக பொருந்தி வருவதை இந்த இயக்குநர்கள் மறந்து விடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பான்மையாக இருந்த 80-களில் வறுமையில் வாடிய இளைஞர்கள் சாதிய மற்றும் வன்முறை அரசியலின் பக்கம் எவ்வாறு எளிதாக ஈர்க்கப்பட்டார்கள் என்பதை பின்னணியாகக் கொண்டதினாலேயே சுப்பிரமணியபுரத்தின் திரைக்கதை அதற்கு இசைவாகப் பொருந்தி வெற்றி பெற்றது. குறிப்பிட்ட பாணி திரைப்படம் அபாரமாக வெற்றி பெற்றால் உடனே அதைப் போன்ற சாயலுடைய திரைப்படங்கள் வெகுவாக வரும் வழக்கத்தைப் போலவே எவ்வித உள்ளடக்க பொருத்தமும் இல்லாமல் சுப்பிரமணியபுரத்தின் சாயல்கள் வந்து தோற்று ஓடின.
வடிவேலுவின் 'எலி' திரைப்படமும் இதைப் போன்று திரைக்கதை வலுவாகக் கோராத 60-களின் காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு செயற்கையாக இயங்குகிறது. கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் இது புரிந்திருக்கும் போல. இருக்கும் பட்ஜெட்டில் இயன்றதை உருவாக்கி அமைத்திருப்பதின் காரணமாக டிராமா செட் போல காட்சிகளின் பின்னணிகள் செயற்கைத் தோற்றத்தில் அமைந்திருக்கின்றன. அறுபதுகளில் நிகழ்ந்திருப்பதுதான் என்றாலும் சிகரெட் கடத்தல், அதற்குப் பின் இயங்கும் கும்பல் என்கிற இப்போதைக்கு சாதாரணமாக தோன்றும் விஷயங்களையெல்லாம் சமகால பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதையாவது இயக்குநர் யோசித்திருக்கலாம். வடிவேலுவும் தன்னுடைய அத்தனை வருட திறமையையும் பிரத்யேக கோணங்கித்தனங்களையும் கொட்ட முயன்றுதான் இருக்கிறார். ஆனால் திரைக்கதை வலுவாக அமையாததால் உளவு பார்ப்பதற்காக கொள்ளையர் கும்பலில் நுழையும் ஒரு சில்லறைத் திருடனின் கதையையொட்டிய பழைய 'பில்லா' திரைப்படத்தின் மோசமான நகலாக அமைந்து விட்டது. புலிகேசி என்கிற கார்ட்டூன் கேரக்டரை முழு திரைப்படமாக கச்சிதமாக உருவாக்கியிருந்ததைப் போல மதன் கார்ட்டூனில் உருவான 'சிரிப்புத் திருடன் சிங்காரவேலு' பாத்திர வடிவமைப்பில் இதன் திரைக்கதையை அமைத்திருந்தால் ஒருவேளை படம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
வடிவேலுவின் முன்னால் இன்று இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, பழையபடி நகைச்சுவைப் பகுதிகளில் மட்டும் நடித்து மக்களின் அபிமானத்தில் தொடர்வது அல்லது வீம்பாக நாயகராக மட்டும்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பாராயின் தன்னுடைய ஆளுமைக்கேற்ற திரைக்கதையை கச்சிதமாக தயார் செய்த பிறகு அதை திரைப்படமாக மாற்றுவது பற்றி யோசிப்பது. காமெடி சானல்களில் ஒளிபரப்பாகும் அவரது பழைய நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் எத்தனை தூரம் அவரை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அந்த இழப்பை சோகத்துடன் நினைவுகூர முடிகிறது. ஒரு கலைஞன் கால மாற்றத்தின் காரணமாக மெல்ல மெல்ல மறைந்து போவதென்பது மாற்ற முடியாத விஷயம். ஆனால் அந்தப் பகுதியை நிறைவு செய்வதற்குள் அபத்தமான முடிவுகளினால் தானே அந்த மறைதலுக்கு காரணமாக இருப்பது புத்திசாலித்தனமற்ற விஷயம். ஓர் உன்னதக் கலைஞனாக வடிவேலு அவ்வாறு காணாமல் போய்விடக்கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும்.

அம்ருதா - ஆகஸ்டு 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)
suresh kannan