Thursday, August 13, 2015

எம்.எஸ்.வி: மெல்லிசை நாயகன்




ஒரு சராசரியான தனிநபரின் கலை சார்ந்த ரசனை என்பது அப்போதைய சமகால கலை ஆளுமைகளின் மூலமே உருவாகிறது. தன்னிச்சையான கண்டுபிடிப்புகள் அல்லது முறையான அறிமுகங்களின் மூலம் அந்த ரசனை தேங்கிப் போவதோ அல்லது மேலதிகமாக பல்கிப் பெருகுவதோ என்பது நிகழ்கிறது. இசை ரசனை என்பதும் அவ்வாறே. இசை என்றாலே பொதுவாக திரையிசையையே குறிக்கும் தமிழக சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. பாபநாசம் சிவனின் தூய செவ்வியல் இசையை ரசித்த காலத்தைச் சேர்ந்தவர்கள் கே.வி.மகாதேவனின் கர்நாடக சங்கீகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை விலகலான மனநிலையோடு கவனித்திருக்கலாம். மகாதேவனைக் கொண்டாடியவர்கள் பாரம்பரிய இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பின்னணியை அவற்றில் கலந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியை முகச்சுளிப்புடன் அணுகியிருக்கலாம். இளையராஜாவின் வருகையின் போது அவர் அழுத்தமாக பயன்படுத்திய நாட்டார் இசை துவக்கத்தில் கிண்டலடிக்கப்பட்டது. பிறகு ஒரு காலக்கட்டம் வரை அதுவே தமிழ் சினிமாவின் இசை முகமாக ஆனது வரலாறு. நவீன இசையொலியை, பாணியை தமிழிற்கு கொண்டு வந்து அதற்காக பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரஹ்மானின் மீதும் துவக்கத்தில் 'அவர் இசையமைப்பாளர் அல்ல, நுட்பத்தை திறம்பட கையாள்பவர், அவ்வளவே' என்பது போன்ற புகார்கள் அள்ளி வீசப்பட்டன.

விசுவாசமான ரசிக மனோபாவத்தினால் ஏற்படும் இந்த பரஸ்பர வெறுப்பும் விலகலும் தற்போது இணையத்தில் நிகழும் ராஜா x ரஹ்மான் விவாதம் வரை காலந்தோறும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இப்போதைய முதிரா இளைஞர்களிடம் அவர்கள் விரும்பி ரசிக்கும் அனிருத்தின் இசையை குறைகூறி விடவே முடியாது. பொதுவாக கலை சார்ந்த ரசனையில் தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாக இருப்பதற்கு இந்த ஒரு அசட்டு மனோபாவமும் காரணம். தன்னுடைய சமகால இசைதான் சிறந்தது அதை உருவாக்குபவர்கள்தான் சிற்நத கலைஞர்கள் என்று அவரவர்களின் சிறிய கிணறுகளில் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே. காலம் முன்னகர்ந்து கொண்டேயிருக்கும் போது ஏற்படும் ரசனை மாற்றத்தினால் அதற்கேற்ப புதிய பாணி இசைக்கலைக் கலைஞர்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். கிணற்றிலிருந்து வெளியே வந்து உலகமெங்கும் உருவாகும் பல்வேறு இசையை பாணியை மனச்சாய்வின்றி அடிப்படையான பயிற்சியோடு கவனிக்கும் போதுதான் இசை என்பது எத்தனை பெருங்கடலான விஷயம் என்பதை சிறிதாவது உணரக்கூடும். சிறந்த இசையானது மொழி, தேசம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி ஒவ்வொரு நபரின் ஆன்மாவுடன் அந்தரங்கமாக உரையாடும் ஒரு மொழி. தமது நுண்ணுணர்வினால் அதை அணுக முயன்றால் அதிலுள்ள பல்வேறு உன்னதங்களை நாம் கண்டுகொள்ள முடியும். இசை கேட்கும் அனுபவம் என்பது மிக அந்தரங்கமானது. அந்த உணர்வை உரையாடியோ, விவாதித்தோ வெளிப்படுத்தி விடவே முடியாது. எனில் இசை என்ற பெயரில் உருவாக்கப்படும் ஒழுங்குப்படுத்தப்பட்ட சப்தங்கள் எல்லாமே சிறந்தவைதானா என்ன? காலம் கருணையற்று நிராகரிக்கும் போது உன்னதமான, அர்ப்பணிப்புடன் இயங்கிய கலைஞர்கள் மட்டும் வடிகட்டப்பட்டு எஞ்சி மேலதிகமாக பிரகாசிப்பார்கள். அப்படியொரு உன்னத கலைஞர்தான், மெல்லிசை மன்னர் என்று  கொண்டாடப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்.

***

தமிழ் சினிமாவில் செயற்கையாகத் திணிக்கப்படும் பாடல்கள் தேவையா அல்லவா என்பது நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தனியான விஷயம் என்றாலும் சாஸ்திரிய இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் சினிமா இசையை  நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல அசூயையாக அணுகின காலம் ஒன்றுண்டு என்றாலும் தமிழ் திரையிசைக்கு என்று ஒரு செழுமையான மரபும் தொடர்ச்சியும் உண்டு.  தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற அந்நாளைய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்த பாபநாசம் சிவன் முதற்கொண்டு ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், சி.எஸ்.ஜெயராமன், எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, டி.ஆர்.பாப்பா, டி.ஜி.லிங்கப்பா, கே.வி.மகாதேவன் என்று நீண்ட பட்டியலே உள்ளது. ஒரு திரைப்படத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பாடல்களை சர்வசாதாரணமாகக் கொண்ட அந்தக் காலக்கட்டத்தில்  பொதுவாக பெரும்பாலும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே உருவாக்கப்பட்டன. திரையிசைப்பாடல்களின் வருகைக்கு முன்பு செவ்வியல் இசையை பண்டிதர்கள் மட்டுமன்றி  பாமரர்களும் ரசிக்கும் காலக்கட்டம் ஒன்றிருந்தது. நிலச்சுவான்தாரர்களின் ஏற்பாட்டில் கர்நாடக இசைக்கலைஞர்கள் ஊர் ஊராக சென்று கச்சேரி செய்யும் போது குடியானவர்களும் மிக விருப்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்தாவது அந்த இசையை ரசித்துக் கேட்டனர். ராகங்களை துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்குமளவிற்கு ரசனையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தக் கண்ணி எப்போது, எதனால் அறுபட்டது என்று தெரியவில்லை.

செவ்வியல் இசையை பெரும்பாலும் அடிப்படையாக் கொண்டு ஒலித்த அதுவரையான திரையிசையில் ஐம்பதுகளின் காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழ்ந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்கிற இரட்டை இசையமைப்பாளர்கள் கூட்டணி. கர்நாடக இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பாணியையும் இசைக் கருவிகளையும் இணைத்து சிறப்பான கலவையுடன் உருவாக்கிய பாடல்களை மக்கள் கொண்டாட்டத்துடன் ஏற்றுக் கொண்டனர். இசைக்கும் பாமரர்களுக்குமான அந்தக் கண்ணியை மீண்டும் இணைத்த பெருமை இந்த ஜோடியையே சாரும். இந்தப் பாடல்கள் எந்த அளவிற்கு எளிமையான தோற்றத்துடன் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்றால் இன்றும் கூட தினமும் புறநகர் ரயிலில் வந்து செல்லும் தொழிலாள தோழர்கள் இணைந்து குழுவாகவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூட்டத்திடம் இரந்து பிழைப்பதற்காகவும் பாடுவது பெரும்பாலும் இந்தப் பாடல்களாகத்தான் இருக்கும். மேஜையில் போடும் ஒற்றைத் தாளத்தைக் கொண்டே இந்தப் பாடல்களின் சுவாரசியத்தைக் கொண்டு வந்து முடியும் என்பதுதான் இவைகளின் சிறப்பே. ஆனால் மேற்பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இவைகளை அதே நுணுக்கங்களுடனும் சங்கதிகளுடன் பயிற்சியின்றி பாடுவது அத்தனை எளிமையானதல்ல என்பதுதான் இந்த இசையமைப்பின் விசேஷமே.

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனின் மறைவிற்குப் பின்னர் அவரிடம் ஹார்மோனியம் வாசிப்பவராக பணியாற்றிக் கொண்டிருந்த விஸ்வநாதனும் வயலின் வாசித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியும் இணைந்து என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய பணம் (1952) என்கிற திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் (1965) வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். இது போன்று இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இயங்கும் மரபானது இந்தி சினிமாவில் அதிகமாக உள்ளது. சங்கர்-ஜெய்கிஷண், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், கல்யாண்ஜி-ஆனந்ஜி, நதீம்-ஸ்ரவண், ஆனந்த்-மிலிந்த், ஜதின்-லலித், நிகில்-வினய் போன்ற பல ஜோடிகளை சொல்ல முடியும். இங்கு சங்கர்-கணேஷ், மனோஜ்-கியான் என்று குறைவான இரட்டையர்களே உள்ளனர். இந்த வரிசையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயங்கிய காலக்கட்டத்தை தமிழ் சினிமா இசையின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல முடியும். தமிழ் சினிமாவிற்கான மெல்லிசை என்கிற பாதையை உருவாக்கிக் கொடுத்த முன்னோடிகள் இவர்கள்தான். எனவேதான் பிற்கால இசையமைப்பாளர்களான இளையராஜாவும் ரஹ்மானும் 'தாங்கள் உருவாக்கும் இசைக்கு ஆதாரம் எம்.எஸ்.வி-ராமமூர்த்தி செப்பனிட்டு தந்த உன்னதமான வழிதான்' என்று உருகுவதில் தன்னடக்கம் மாத்திரமல்ல, பெரும் உண்மையும் இருக்கிறது. 1965-ல் இந்த ஜோடி பிரிந்தது. இதற்குப் பின்னால் ராமமூர்த்தியால் 20-க்கும் குறைவான திரைப்படங்களுக்கு மட்டுமே தனியாக இசையமைக்க முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரிவு விஸ்வநாதனின் தொடர்ச்சியான வெற்றியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதற்குப் பிறகும் மேலதிகமாக பலநூறு திரைப்படங்களுக்கு அவர் தொடர்ந்து வெற்றிகரமாக  இசையமத்தார் என்பதில் விஸ்வநாதனின் தனித்துவமான மேதைமையை அறிய முடிகிறது.

***

கண்ணதாசனை தவிர்த்து விட்டு விஸ்வநாதனின் இசைப் பயணத்தைப் பற்றி தனியாக உரையாடவே முடியாது. அந்த அளவிற்கு கண்ணதாசனின் எழுத்தும் விஸ்வநாதனின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. வயதில் மூத்தவரான கண்ணதாசனின் மீது சகோரத்துவ பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார் விஸ்வநாதன். 'இசையைத் தவிர்த்தால் விசுவிற்கு உலக நடப்பு எதுவுமே தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், இசை, இசை, இசை மட்டுமே' என்பதுதான் கண்ணதாசனின் கிண்டல் கலந்த  கருத்தாக இருந்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கிய சம்பவங்களை வாசித்தால் அது ஏதோ நண்பர்களுக்கிடையான விளையாட்டு என்பது போலவே தோன்றும். இது தொடர்பாக பல சுவையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

உதாரணத்திற்கு, திருலோகசந்தர் இயக்கி சிவாஜி நடித்திருந்த 'அவன்தான் மனிதன்' திரைப்படத்திற்காக ஒரு டூயட் பாட்டை உருவாக்க வேண்டியிருந்தது. மே மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் குறிப்பிட்டு விட்டதால் நழுவிக் கொண்டேயிருந்த கண்ணதாசனிடம் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார் விஸ்வநாதன். நச்சரிப்பு தாங்காத கண்ணதாசன் "என்னய்யா .. மே.. மே.. ன்னு தொல்லை பண்றே..இந்தா பிடி.. என்று எழுதித்தந்த பாடல்.. 'அன்பு நடமாடும் கலைக்கூடமே.. ஆசை மழை மேகமே.. கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே ...கன்னித் தமிழ் வண்ணமே... என்று பாடல் வரிகள் பெரும்பாலும்  மே என்று முடியும்படி எழுதியிருக்கிறார். பாடல் சூழ்நிலையை இயக்குநர் விளக்கிய அடுத்த கணமே அதற்கான மெட்டையும் பாடலையும் உடனே உருவாக்கி விடுவதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பிறவி மேதைகளாக இருந்ததிதனால்தான் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை உருவாக்க முடிந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிலும் ஒரு பாடலை தனித் தனிக் கூறுகளாக உருவாக்கி இணைத்துக் கொள்ளும்  இன்றைய தொழில் நுட்ப வசதிகள் அல்லாத,  பாடகர்களும் இசைக்கலைஞர்களும்  எவ்வித தவறுமின்றி ஒரே தருணத்தில் இணைந்து இயங்குவதை பதிவு செய்ய வேண்டிய சிக்கலான காலக்கட்டத்தில், இத்தனை பாடல்களை, அதிலும் பெரும்பான்மையாக வெற்றிகரமான பாடல்களை உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. காதல், சோகம், வீரம், தத்துவம், நகைச்சுவை, துள்ளல், அழுகை, கிண்டல் என்று நவரசங்களிலும் உருவாக்கப்பட்ட பாடல்கள் தமிழ் சமூகத்தின் ஒரு காலக்கட்டத்திய உணர்ச்சி வடிகால்களாகவும் பண்பாட்டுப் பதிவுகளாகவும் அமைந்தன. அவற்றில் புதுமையான, பரிசோதனைப் பாடல்களும் இருந்தன.  எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கும் சிவாஜியின் நடிப்பார்வத்திற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களை உருவாக்கியதை விஸ்வநாதனின் சாதனை என்றே சொல்ல வேண்டும். கண்ணதாசன் மட்டுமின்றி வாலியுடன் இணைந்து விஸ்வநாதன் பல அருமையான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்ணதாசன்,விஸ்வநாதன், டி.எம்.செளந்தரராஜன்,பி.சுசிலா என்றமைந்த கூட்டணியை இயற்கையால் நிகழ்ந்த அற்புதம் என்று சொல்லலாம். அதிலும் இந்திக்கு ஒரு லதா மங்கேஷ்கர் போல தமிழிற்கு ஒரு சுசிலா கிடைத்தது தமிழர்களுக்கு அடித்த லாட்டரிப் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். சுசிலாவின் அசாத்தியமான திறமை பல பாடல்களில் வெளிப்படுமாறு உபயோகித்துக் கொண்டார் விஸ்வநாதன்.. இந்தக் கூட்டணியில் கண்ணதாசன் தவிர்த்து மற்றவர்கள் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்பதைக்  கவனியுங்கள். இது மட்டுமல்ல, தமிழ் திரையிசைக்கு பங்களித்த பல பாடகர்கள், கலைஞர்கள் தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வேற்று மாநிலத்தைச் சார்ந்தவர்களே. திறமை எங்கிருந்தாலும் அதை அரவணைக்கத் தவறாதது தமிழ் சமூகம் என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. இசை என்பது தன்னளவிலேயே ஒரு முழுமையான கலை என்றாலும் பாடலுக்கு ஏற்ப இசை அமைப்பதே மரபு. ஆனால் நாளடைவில் பாடல் வரிகளுக்கேற்ப மெட்டமைக்க சிரமப்பட்ட இசையமைப்பாளர்கள், மெட்டுகளுக்கேற்ப பாடல் வரிகளை ஒடித்து மடித்து போட்டு மொழியைச் சித்திரவதை செய்வது பெருகிக் கொண்டே போகிறது. ஆனால் 'பாட்டுக்குத்தான் மெட்டு' என்கிற கருத்தில் தீ்ர்மானமாக இருந்தவர் விஸ்வநாதன்.

1952-ம் ஆண்டு முதல் ராமமூர்த்தியுடனும் 1965 முதல் தனி இசையமைப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகரமாக தமிழ் திரையிசையை ஆட்சி செய்த விஸ்வநாதனின் இசை, 1976-ல் அன்னக்கிளியின் மூலம் புயலென புகுந்த இளையராஜாவின் வருகைக்குப் பிறகு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது காலத்தினால் தவிர்க்க முடியாத மாற்றம். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்த இளையராஜாவின் ஆகிருதியின் பிரகாசத்திற்கு முன்னால் விஸ்வநாதனின் புகழ் மங்கிப் போனது வரலாற்று உண்மை. தவிர்க்க முடியாத இதே ரசனை மாற்றத்தை காலம் பின்னர் ரஹ்மானின் மூலம் உருவாக்கியது.விஸ்வநாதனின் நீட்சியாக அவர் செப்பனிட்ட வைத்திருந்த பாதையில் நாட்டார் இசையை இணைத்து வெற்றி கண்டது இளையராஜாவின் தனித்துவமான சாதனை.என்றாலும் இளையராஜா மெல்ல மெல்ல பிரம்மாண்டமாகிக் கொண்டிருந்த துவக்க காலத்தின் இடையேயும் விஸ்வநாதன் சில சிறந்த பாடல்களின் மூலம் தன் இருப்பை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலக்கட்டத்தை தாண்டிய நவீன சூழலின் முன்னாலும் தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்ற கலைஞனின் அடிப்படையான பிடிவாதம் அது. உதாரணமாக பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஓர் இசைக் கொண்டாட்டமாக திருவிழா அனுபவத்தை ஏற்படுத்தியது. முந்தைய காலக் கட்டத்தில் இயக்குநர் ஸ்ரீதர் போன்றவர்களும் பிந்தைய காலக்கட்டத்தில் பாலச்ந்தர் போன்றவர்களும் விஸ்வநாதனுக்கு சவாலான பாடல் சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான படைப்புகள் வெளிவர பிரதான காரணமாயிருந்தார்கள்.

***

பொதுவாகவே இசைக்கும் ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உள்ளுணர்விற்கேற்ப ஆன்மாவைத் தேடும் அந்தரங்கமான தேடல் என்கிற வகையில் இரண்டுமே ஒரு திசையில் பயணிக்கின்றன. உன்னதமான இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம். விஸ்வநாதனும் இதில் விதிவிலக்கல்ல. தன்னுடைய இசையின் வெற்றி குறித்த தலைக்கனம் ஏதுமில்லாதவராக அவர் இருந்தார். மற்ற  இசைக்கருவிகளைப் போலவே இசையை வெளிப்படுத்துவதற்கு தானும் ஒரு கருவியே என்பதை தீர்மானமாக நம்பினார். இந்த அடக்கத்தை இறுதி வரையிலும் பின்பற்றிய மேதையாக இருந்தார் விஸ்வநாதன். பிற கலைஞர்களை மனந்திறந்து பாராட்டுவதும் அவரது பண்புகளில் ஒன்றாக இருந்தன. உதாரணமாக டி.ராஜேந்தர் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். ஆனால் நாளடைவில் அவர் 'டண்டணக்கா' பாட்டை உருவாக்கியவராகவே மட்டுமே அறியப்படுவது துரதிர்ஷ்டம். 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்திற்காக டி.ஆர். இசையமைத்த 'வைகைக் கரை காற்றே நில்லு' என்கிற மெல்லிசைப் பாடலின் எளிமையும் சிறப்பையும் கவனித்த விஸ்வநாதன், டி.ராஜேந்தரிடம் தம்முடைய பாராட்டையும் அன்பையும் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக் கலைஞர்களான இளையராஜா, ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா போன்றவர்களிடம் இணைந்து பணியாற்றவும் அவர் எவ்வித தயக்கமும் கொண்டிருந்ததில்லை.

சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக இசை மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் நடிப்பின் மீதுதான் விஸ்வநாதனுக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது ஜூபிடர் பிக்சர்ஸ் உருவாக்கிய 'கண்ணகி' திரைப்படத்தில் இளம் வயது கோவலனாக  நடிக்கும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் கண்ணகியாக நடித்த பெண்ணை விட தோற்றத்தில் இவர் இளையவராக இருந்ததால் அந்த வாய்ப்பு தொடரவில்லை. என்றாலும் பிற்காலத்தில் சிலரின் வற்புறுத்தலின் பேரில் காதல் மன்னன், காதலா காதலா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இசைத் துறையோடு மட்டும் அவர் தீர்மானமாக நின்றிருக்கலாம் என்பதற்கான உதாரணங்களாக அவை இருந்தன.

இளம் வயதிலேயே தந்தையை இழந்து, மிகுந்த வறுமையான சூழலில் இருந்தாலும் ஆர்வத்துடன் இசை கற்று, வேற்று மொழி மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தின் ஒரு காலக்கட்டத்திய திரையிசையையே ஆட்சி புரிந்த விஸ்வநாதனின் அற்புதமான இசைக் கோலங்கள்  ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாது காற்றிலும் அப்படியே உறைந்திருக்கும். இது போன்ற ஆளுமைகள் அவர்களின் அஞ்சலிக் கட்டுரைகளில் மட்டும் நினைவுகூரப்படும் அவலம் தொடராமல், வாழும் போதும் மறைந்த பின்பும் அவர்களது படைப்புகள் பற்றிய உரையாடல்களும், மறுகண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

- உயிர்மை - ஆகஸ்ட் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

No comments: