ஆதவனின் சிறுகதை ஒன்றுண்டு. நடுத்தர வயது தம்பதியொருவர் கடந்து கொண்டிருக்கும் இளமையின் சலிப்போடு பரஸ்பரம் தங்களை சகித்து, வெறுத்து, சண்டையும் சிடுசிடுப்புமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பர். அவ்வாறே கடந்து முடியும் ஒரு நாளின் இரவில் தன்னிச்சையான உந்துதலில் அவர்கள் உறவு கொள்ளும் போது ஆண், பருத்துப் போன தன் மனைவியின் உடலுக்கு மாறாக அன்று பார்த்து வந்த சினிமாவில் வரும் இளமையான கதாநாயகியை நினைத்துக் கொள்வான். போலவே பெண்ணும் வழுக்கைத் தலையுடனான தன் கணவனுக்குப் பதிலாக சினிமாவின் நாயகனை நினைத்துக் கொள்வாள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளியை பகற்கனவுகள் நிரப்ப முயல்கின்றன. பெரும்பாலும் நாம் எவருமே நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாறாக நமக்குப் பிடித்ததாக கருதுகிற, நிறைவேறாத இன்னொரு வாழ்விற்காக ஏங்குகிறோம், அதை பகற்கனவுகளில் வாழ முற்படுகிறோம். BMW காரில் செல்லும் செல்வந்தன், சாலையோரத்தில் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிம்மதியான உறக்கத்தினைப் பார்த்து பொறாமை கொள்கிறான். எலெக்ட்ரிக் டிரையினின் நெரிசலில் நசுங்கி அலுவலகம் செல்லும் ஒரு நடுத்தர வர்கக மனிதனுக்கு சிறிய கார் ஒன்றினை தவணை முறையில் வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கிறது.
இதில் இன்னுமொரு சுவாரசிய முரண் என்னவெனில் பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள்தான் இதர வர்க்கப் பிரிவுகளில் உள்ளவர்களால் கூட இயலாதபடி தங்களின் எளிய மகிழ்ச்சிகளை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த ஒரு கருத்தாக்கம் உண்டு. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலோனோர்க்கு கீழிருந்து மேலே அண்ணாந்து பார்க்கும், அதை நோக்கி முன்னேறி நகர்வதில்தான் விருப்பமிருக்கிறது. பரமபத பெரிய பாம்பின் வழியாக சட்டென்று கீழே இறங்கி எளிமையில் கலக்க விரும்புவது ஒரு தற்காலிக ஏக்கம் மாத்திரமே. புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி தனிமையை விரும்பும் எந்தவொரு நடிகனும் தானாக விரும்பி சாதாரண வாழ்விற்கு சட்டென்று நிரந்தரமாக திரும்புவதில்லை. இமயமலை போன்ற சுற்றுலாப் பயணத்திற்கு சென்று வந்து விட்டு தன்னுடைய ஏக்கத்தை தற்காலிகமாக தணித்துக் கொள்கிறான். "கிராமத்துல இருக்கும் போது பழைய சோறும் பச்சை மிளகாயும் கயித்துக் கட்டிலும் வேப்பமரத்துக் காத்தும்.. ஆஹா.. அது சொர்க்கம். பிட்சா, பர்கர் -னு இப்ப வாழற வாழ்க்கை என்ன வாழக்கை' என்று சலித்துக் கொள்ளும் ஒரு என்.ஆர்.ஐ அந்த ஏக்கத்தை தற்காலிகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவதின் மூலம் தீர்த்துக் கொள்கிறானே ஒழிய நிரந்தரமாக அந்த நிலையை அடைவதை உள்ளூற விரும்புவதில்லை. அவ்வாறு திரும்பியவர்களின் சதவீதம் மிகச் சொற்பமே.
நம் வாழ்வின் இயக்கத்தில் நிகழும் இப்படியான பல அபத்தமான முரண்களை நமக்கே சுட்டிக் காட்டும் திரைப்படம் 'எனக்குள் ஒருவன்'. கன்னடத்தில் வெளியாகி பெருவாரியான வெற்றியைப் பெற்ற 'லூசியா' என்கிற திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இது. லூசியா உருவானதே ஒரு சுவாரசியமான முன்னுதாரணம். பல்வேறு கனவுகளுடன் திரையுலகில் நுழையும் ஓர் இளம் இயக்குநன் முதலில எதிர்கொள்வதே தன் கனவுகள் நிறைவேற முடியாத அல்லது நசுக்கப்படுகிற குரூர யதார்ததத்தைதான். தயாரிப்பாளர்களும் ஸ்டார் நடிகர்களும் தங்களுடைய இடையூறுகளின், நிர்ப்பந்தங்களின் மூலம் அவனுடைய கனவுகளை குரூரமாக கலைத்துப் போடுகிறார்கள். படத்தின் வணிக வெற்றி உட்பட பொருளாதாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதன்மையாக காரணியாக இருக்கிறது. இதைக் கடந்து வருவதுதான் ஓர் இயக்குநரின் முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

தன்னுடைய முதல் கன்னடத் திரைப்படமான Lifeu Ishtene வெற்றி பெற்றவுடன் தன்னுடைய அடுத்த படைப்பான 'லூசியா' விற்கு திட்டமிடுகிறார் இயக்குநர் பவன்குமார். ஆனால் தயாரிப்பாளர்களிடமிருந்தும் நடிகர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வேதனையான, கசப்பான அனுபவங்களை தன்னுடைய இணைய தளத்தில் எழுதி வெளியிடுகிறார். 'Making Enemies' என்கிற தலைப்பில் தனது இணைய தளத்தின் பார்வையாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கன்னட திரையுலகம் தனது சுயத்தை இழந்து நிற்கும் ஆற்றாமையும் இளம் இயக்குநர்கள் புறக்கணிக்கப்படும் கோபமும் வழிந்தோடுகிறது. வெற்றிகரமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக் உரிமையை அதிக பொருட்செலவில் வாங்க தயாராக இருக்கும் கன்னட தயாரிப்பாளர்கள், அதற்கு பத்து மடங்கு குறைவான தொகையைக் கூட அசலான கன்னடதிரைக்கதைக்கு செலவழிக்க தயாராக இல்லை. பவன் குமாரின் பதிவுகளைக் கண்டதும் இணையத்தில் ரசிகர்களிடையே அவருக்கான ஆதரவு பல்வேறு தரப்புகளில் இருந்து கொட்டுகிறது. அப்படியாக பிறப்பதுதான் ' Project Lucia'. சுமார் 1300-க்கும் மேற்பட்ட தனிநபர்களிடமிருந்து ரூ.70 லட்சம் வசூலான நிதியுதவியிலிருந்து உருவானதுதான் 'லூசியா' திரைப்படம். கன்னடத்தின் முதல் Crowd Funded திரைப்படம் மற்றும் கல்ட் திரைப்படமாகவும் ஆகியது. படம் வணிகரீதியான வெற்றியையும் பெற்று முதலீட்டைப் போன்று நான்கு மடங்கு தொகையை வசூலித்தது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் shortlist-ல் இடம் பெற்றது.
இவ்வாறான ஒரு சாதனை, சினிமாவையே சுவாசிக்கும், இந்திய அளவில் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் சாத்தியமாகுமா என்று யூகித்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டு நிலைமையைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது கூட சாதனை அல்ல, அதை முறையாக சந்தைப்படுத்துவதற்கும் சரியான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வியூகங்களுக்குதான் அதிக பொருட்செலவும் உழைப்பும் தேவைப்படுகிறது. வீடியோ பைரஸியையும் தாண்டி படம் ஓடுவது இன்னொரு சாதனை. இதனால்தான் பல சிறுமுதலீட்டு திரைப்படங்கள் வெளியாகமுடியாமல் பிலிம் சுருளாகவும் டிஜிட்டல் கோப்புகளாகவும் முடங்கிக் கிடக்கின்றன. கூடவே அவற்றிற்கான முதலீடும். ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக அளவில் ஒதுக்கப்படும் திரையரங்கங்கள், சிறிய நடிகர்களின், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை. சில திமிலங்கங்களின் திட்டமிட்ட ஆட்சியும் அதன் பின்னான அரசியலும். வணிக விஸ்தரிப்புதான் நோக்கம்தான் என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது போல கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டின் போது இதற்கான ஒரு தீர்வை செயல்படுத்த துணிந்தார். திரையரங்குகளையும் தாண்டி DTH, DVD, இணையம் என்று பல்வேறு வழிகளில் திரைப்படத்தை மக்களின் வரவேற்பறைக்கே கொண்டு செல்ல முனைந்த அந்த வழியை திரைப்பட சிண்டிகேட் மறித்து அப்போது தோல்வியடையச் செய்தது.
தற்போது இயக்குநர் சேரன், பல்வேறு தடைகளைத் தாண்டி Cinema to Home என்று தன்னுடைய இயக்கத்தில் உருவான 'ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை DVD -யாகவும் பணம் செலுத்தி இணையத்தில் பார்க்கும் வழியாகவும் வெளியிட்டார். இதற்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் படம் வெளியான அடுத்த நாளிலேயே இதற்கான கள்ள நகல்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. இத்தனைக்கும் ஒரு டிவிடியின் விலை ரூ.50 மட்டுமே. ஒரு மல்ட்டிபெக்ஸ் தியேட்டரில் வாகன பார்க்கிங்கு ஆகும் தொகைதான். ஆனால் எப்படியிருக்கும் என்றே தெரியாத ஒரு ஸ்டார் நடிகரின் படத்திற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் நாளின் அனுமதிச் சீட்டினை அடித்துப் பிடித்து வாங்கும் ரசிகர்கள், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் உருவாகும் நல்ல முயற்சிகளை ஆதரிக்காமல் கள்ளத்தனமான நுகர விரும்பும் போது எப்படி தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் உருவாகும்? பவன்குமார் போன்று ஓர் ஆர்வமுள்ள இளம் இயக்குநர் இங்கு இணையத்தில் தன் படத்தயாரிப்பிற்கான கோரிக்கையை வைத்தால் எத்தனை பேர் இங்கு ஆதரிக்க முன்வருவார்கள்?
***
"எனக்குள் ஒருவன்' திரைக்கதை மூன்று இழைகளில் பயணிக்கிறது. விக்கி என்கிற இளைஞன் நொடிந்து கொண்டிருக்கும் ஒரு திரையரங்கில் பணிபுரிகிறான். இரவுகளில் உறக்கம் வராதது அவனுடைய பிரச்சினை. லூசியா எனும் கனவு மாத்திரை அவனுக்கு தற்செயலாக கிடைக்கிறது. அதன் மூலம் உறக்கம் வருவது மட்டுமல்ல, தாம் விரும்பும் வாழ்க்கையை கனவுகளில் வாழலாம். ஒவ்வொரு நாள் மாத்திரையின் மூலம் அந்தக் கனவு அறுபடாமல் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் போல வந்து கொண்டேயிருக்கும். திரையரங்கில் ஜோடிகளாக வரும் நபர்களைப் பார்த்து பெருமூச்சு கொள்ளும் விக்கி அன்றாட வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை கனவில் நிறைவேற்றிக் கொள்கிறான். அப்படியாக அவன் உருவாக்கும் கனவில் அவன் ஒரு மிகப் பிரபலமான நடிகன். பெண்கள் அவனுக்காக தவமிருக்கின்றனர். எல்லோருமே அவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். பணம், புகழ் எல்லாமே எளிதில் கிடைக்கிறது.
இப்படியாக விக்கி என்கிற ஒரு சராசரி இளைஞனின் அன்றாட தினங்களின் வாழ்க்கை ஒரு இழையாகவும் அவனுடைய கனவு வாழ்க்கையில் உருவாக்கப்படும் நடிகனின் வாழ்க்கை இன்னொரு இழையாகவும் ஒரு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக் காட்சிகள் மூன்றாம் இழையாகவும் காட்சிகள் விரிகின்றன. நிஜத்தில் வரும் நபர்களே கனவிலும் வேறு மாதிரியான நிறத்துடன் வருகிறார்கள். இப்படியாக நனவிற்கும் நனவின்மைக்கும் மாறி மாறி பயணிக்கிற ஒரு மாய விளையாட்டை திரைக்கதை நிகழ்த்துகிறது. எது கனவு எது நிஜம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. கனவுக்காட்சிகள் கறுப்பு - வெள்ளை நிறத்தில் வருகின்றன. படத்தின் இறுதியில் நம்முடைய பயணம் அதுவரை செய்து கொண்டிருந்ததாக நம்பியதற்கு மாறான எதிர்திசைக்குள் பாய்வது சுவாரசியம். 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்கிற மெளனியின் சிறுகதையின் வரி, இந்த திரைக்கதைக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது.
சாதாரண இளைஞனான விக்கி தன்னுடைய கனவில் ஏன் தன்னை நடிகனாக புனைந்து கொள்கிறான்? பொதுச் சமூகத்தின் பகற்கனவுகளுக்கான மிகப்பெரிய புகலிடமும் வடிகாலும் இன்று சினிமாதான். மிக வலிமையான ஊடகமாக அது வளர்ந்திருப்பதற்கு இதுவொரு பிரதானமான காரணம். ஒருவன் அன்றாட வாழ்வில் நிறைவேறாத தன்னுடைய அந்தரங்கமான ஏக்கங்களை, கனவுகளை திரையில் நிகழும் சலனக்காட்சிகளின் மூலம் சமன் செய்து கொள்கிறான். ஏனெனில் தன்னுடைய கனவுகளை அவனால் கட்டுப்படுத்த இயலாது, மீள்நினைவு செய்ய முடியாது. எனவே சினிமா அவனுக்கு எளிமையான வடிகால். தாம் விரும்பும் பெண்ணுடன் எல்லாம் அங்கே உறவு கொள்ள முடிகிறது. பேருந்தில் தன்னுடைய காலை மிதித்து விட்டு அலட்சியமாக செல்லும் திடகாத்திரனை நிஜத்தில் ஒன்றும் செய்ய முடியாத சுயபச்சாதாபத்தை, திரையில் நாயகன் வில்லன்களை அடித்து புரட்டிப் போடும் போது அந்த உற்சாகத்தில் கரைத்துக் கொள்ள முடிகிறது. எனவேதான் சினிமாவில் நல்லவர்களாக, புனிதர்களாக சித்தரிக்கப்படும் நடிகர்களை, அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்கள் என்பதாக நம்பி தம்மை ஆளும் அதிகாரத்தையே அவர்களிடம் ஒப்படைக்கும் அளவிற்கு இந்த பகற்கனவுகளின் நீட்சி அமைகிறது.
இப்படி சினிமா என்பது நிஜத்தில் நிறைவேறாத ஏக்கங்களின் வடிகாலாக இருந்தாலும் சரியாக கையாளப்படாத பூமராங் ஆயுதத்தைப் போல அது திருப்பி வந்தும் தாக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சமயத்தில் பெண்களின் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் அதிகரித்தன. பெரும்பாலும் அடித்தட்டு சமூகத்தைச் சோந்த பெண்கள். இது குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அவர்களின் தற்கொலைகளுக்கு சினிமாவும் ஒரு காரணம் என தெரிய வருகிறது. மிக ஆடம்பரமான பின்னணிக் காட்சிகள், அவற்றிலுள்ள பணக்காரத்தன்மை, அழகான, ஆதரவான, வீரமான ஆண்கள், ஆசைப்படும் அனைத்தும் எளிதில் கிடைக்கும் தன்மை, ஒரே பாட்டில் நிறைவேறும் லட்சியம் போன்றவைகளை தங்களின் அன்றாட வாழ்வின் தரித்திரங்களோடும் எத்தனை முயன்றும் நிறைவேறாத யதார்த்தங்களோடும் குடித்து விட்டு அடித்து இரவில் புணரும் ஆண்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் பெண்கள் அந்த வேறுபாடுகள் குறித்த மன உளைச்சலில் தற்கொலைக்கு முயல்வதாக அந்த ஆய்வின் முடிவு பதிவு செய்கிறது.
***
லூசியா திரைப்படம் வெளிவந்த போது இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனடியாக அதைப் பார்த்து ஆதரவளித்திருக்கிறார். இவ்வாறு பாராட்டிய திரையுலக நபர்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். எனவே இதை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சியை அவர் எடுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. மாஸ் ஹீரோ நிலையை தக்க வைத்துக் கொள்ளுதல், அதிக லாபம் ஆகிய குறிக்கோள்களையே கொண்டு வெறும் வணிகச் சக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கும், ஒப்பனைக்காக கூட அதிகம் மெனக்கெடாத கொலுப்பொம்மை நாயகர்களுக்கு மத்தியில் எதையாவது வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருக்கும் சித்தார்த்தின் இந்த ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருடைய முந்தைய திரைப்படமான,வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவனும்' ஒரு கவனிக்கத்தக்க முயற்சியே.
சராசரி இளைஞனுக்கும் புகழ் பெற்ற நடிகனுக்குமான வேறுபாட்டை உடல்மொழி முதற்கொண்டான வித்தியாசத்தோடு வெளிப்படுத்தியிருக்கும் சித்தார்த்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. என்றாலும் சாதாரண இளைஞன் என்பதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டு கறுப்பு நிறத்தை பூசிக் கொள்ளும் அபத்தத்தையெல்லாம் தவிர்த்திருக்கலாம். கன்னட திரைப்படத்தில் நடித்திருப்பவர் இவ்வாறான கோணங்கித்தனங்கள் எல்லாம் இல்லாமல் இயல்பான தோற்றத்திலேயே நடித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் முன்தயாரிப்புகளில் பவன்குமார் ஒத்துழைத்திருந்தாலும் அசல் திரைப்படத்தின் ஆன்மாவை நகலெடுத்த பிரதியானது அத்தனை கச்சிதமாக பின்பற்றவில்லை என்று தோன்றுகிறது. நனவிற்கும் நனவின்மைக்குமான காட்சிகளின் தொடர்ச்சியும் விலகலும் ஒரு விதமான தர்க்க நியாயங்களுடனும் லயத்துடனும் கன்னடப் படத்தில் அமைந்திருந்தது. ஆனால் தமிழில் அது ஒரளவிற்கே சாத்தியப்பட்டிருக்கிறது. இது போன்ற கனவு விளையாட்டை பிரிட்டிஷ் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தன்னுடைய Inception திரைப்படத்தில் இன்னமும் சிக்கலான உள்முரண்களுடன் சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்.
'Your small life is someone else's big dream' என்கிற வாசகத்துடன் நிறைகிற இத்திரைப்படத்தின் இந்த வரிதான் திரைக்கதையின் மையம். 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே' என்கிற வரிகளையும் நினைவுக்கு வருகிறது. 'ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்' என்கிற தத்துவ வரிகளையெல்லாம் நாம் அறிந்திருந்தாலும் நிறைவேறிய ஆசைகளுடன் திருப்தியுறாமல் எதிர் திசையிலுள்ள நிறைவேறாத ஆசைகளுக்காக தொடர்ந்து ஏங்கிக் கொண்டேயிருப்பதும் அதை கைப்பற்றுவதாக கனவு கண்டு கொண்டிருப்பதுமே நம்முடைய உளச்சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்கிற நீதியை இத்திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது.

டெயில்பீஸ்: இதுவோர் அதிகப்பிரசங்கித்தனமான பின்குறிப்புதான். தனிநபர் அந்தரங்கத்தில் நுழையும், சினிமா வம்புகளின் மீது அமைந்ததுதான். என்றாலும் இத்திரைப்படம் இயங்கும் மையத்தின் தொடர்புடையது என்பதால் அந்தப் பொருத்தம் கருதி, ஒரு சுவாரசியமான யூகமாக இணைத்திருக்கிறேன். நடிகர் சித்தார்த்திற்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அதில் பிளவு ஏற்பட்டு அவர்கள் விலகிவிட்டதாகவும் பத்திரிகைகளின் சினிமாப்பக்க செய்திகள் அல்லது கிசுகிசுக்கள் வெளியாகின. இந்த trivia-க்களின் நம்பகத்தன்மை மீது நமக்கு ஆர்வமில்லா விட்டாலும், சித்தார்த்தின் இணையாக, அற்புதமாக நடித்திருந்த கன்னட நடிகையான தீபா சன்னிதி ஏன் சமந்தாவின் சாயலில் இருக்கிறார், சித்தார்த் தனது நிறைவேறாத பகற்கனவை சாத்தியமாக்கிக் கொள்ளும் முயற்சியா அது? என்று திரையைத் தாண்டி யூகிப்பது தேவையற்றதாக இருந்தாலும் ஒரு சுவாரசியமான கோணமாக இருந்தது.
- உயிர்மை - ஏப்ரல் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
suresh kannan