Wednesday, February 13, 2013

சமகால தமிழ் சினிமா – அவநம்பிக்கைகள், நம்பிக்கைகள்

இந்திய சினிமா நூற்றாண்டை கடந்து வரும் வேளையில் நமது தமிழ் சினிமாவின் முகம் எப்படியிருக்கிறது? அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் திரைமொழியும் முதிர்ச்சிக்கான எவ்வித அடையாளமுமி்ல்லாமல் இன்னமும் நாடக மரபிலேயே தேங்கிக் கிடக்கிறது. காட்சி ஊடகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் இன்னமும் பக்கம் பக்கம் வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அகரீதியான உணர்வுகளை பெளதீகப் பொருட்களை உதாரணம் காட்டி விளக்குவது போன்ற அபத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தன்னுடைய காதலியால் பாதிக்கப்பட்டதாக உணர்கிற இளைஞன் பாடுவதில் ஒரு வரி.. 'நெஞ்சம் ஒரு காத்தாடி'... இது காட்சிப்படுத்தப்படும் போது அந்த இளைஞனின் பின்னே காற்றாடி விடும் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். சமீபத்திய நீ தானே என் பொன் வசந்தம்சினிமாவில் வரும் காட்சி இது! எப்படி இருக்கிறது பாருங்கள்..இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு snapshot. 

தமிழ் சினிமாவின் சமகால இயக்குநர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் மாத்திரம் நவீனத்தை தேடுகிறார்கள். இந்த சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம், ‘இந்தக் கேமராவை பயன்படுத்தியிருக்கிறோம்'  'இந்த நடிகர் ஒப்பனைக்காக இத்தனை மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்திருந்தார்' போன்ற trivia-க்களே நேர்காணல்களில் புளகாங்கிதமாக சிலாகிக்கப்படுகினறன. தங்கள் படத்தின் சிறப்பம்சமாக இவற்றையே முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வெறும் தொழில்நுட்பமும் உழைப்பும் மாத்திரமா சினிமா? காட்சிகளின் அழகியல் மாத்திரமா?. தங்க நிப் கொண்ட பேனா கொண்டு எழுதினால் அது உலக இலக்கியமாகி விடுமா? 'வித்தியாசமாக' உருவாக்கியிருக்கிறோம் என்கிற பாவனையில் முன்வைக்கப்படும் இந்தத் திரைப்படங்களின் உள்ளடக்கமும் மையமும் என்னவென்று பார்த்தால் காலம் காலமாக  தமிழ் சினிமாவிற்கென்று பிரத்யேகமாக உள்ள அதே மசாலா வார்ப்புகள், சம்பிரதாயங்கள், வணிகச் சூத்திரங்கள். இதையே விதவிதமான லேபிள் ஒட்டி மார்க்கெட்டிங் செய்கிறார்கள். சர்வதேச தர அளவிலான சினிமாவுடன்  ஒப்பிடக்கூடிய அளவிற்கான தகுதியுடன் ஒரு சமகால சினிமா கூட இங்கு இல்லை. சமகால சமூகப் பிரச்சினையை வணிக நிர்ப்பந்தங்கள் ல்லாமல் யோக்கியமாக முன்வைக்கும் ஒரு வெகுஜன திரைப்படம் கூட இங்கு கிடையாது. இது ஒரு கசப்பான உண்மை. 

இதற்காக சினிமா இயக்குநர்களை மாத்திரமே குறை சொல்ல விரும்பவில்லை. இயக்குநர்களுக்குள் ஒளிந்திருக்கும் வணிகர்களும், இந்த வணிகர்களை பின்னாலிருந்து இயக்கும் தயாரிப்பாளர்களும் எது எளிதாக விற்குமோ அதையே உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். இந்த நுகர்வுக் கலாச்சார சூழலில் நமது ரசனை மாறினாலொழிய இது மாறப் போவதில்லை. சினிமா ஒரு சமூகத்தை வலுவாக பாதிக்கும் காட்சி ஊடகம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.  நம்மை ஆள்பவர்களையே சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்குமளவிற்கான அறியாமையுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்.  ஒரு சினிமாவை எப்படி அணுக வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்பது பற்றிய புரிதலே நம்மிடமில்லை. அது ஏற்படுத்தும் பாதிப்பு தன்னிச்சையாக நம் ஆழ்மனங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அதை அலட்சியமாகப் பார்க்கும் மனோபாவம்தான் பொதுவாக இருக்கிறது. 'சினிமா ரசனையை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்கிற பாலுமகேந்திராவின் குரல் இந்தச் சமயத்தில் முக்கியமானதாகத் தெரிகிறது. 

இந்த துர்ப்பாக்கியமான சூழலில் கடந்த ஆண்டில் வெளியான, ஒரளவுக்காவது கவனிக்கத்தக்க தமிழ் சினிமாக்களைப் பற்றி ஒரு பறவைப் பார்வையில் பார்க்கலாம். 

மாற்றான், தாண்டவம், பில்லா -2, சகுனி  போன்ற, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அபத்தமான சண்டைக்காட்சிகளாலும் பஞ்ச் டயலாக்குகளாலும் தங்களின் நாயக பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களின் படங்கள் மண்ணைக் கவ்வியது நல்ல சகுனம். மாறாக குறைந்த பட்ஜெட், பரவலாக அறிமுகமாகாத நடிகர்கள், அடிப்படையான தொழில்நுட்பம் போன்றவற்றுடன் இருந்தாலும் சொல்கிற கதையை நேர்மையாக, சுவாரசியமாக சொன்னால் தங்களால் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சில புதுமுக இயக்குநர்கள்.

காதலில் சொதப்புவது எப்படி? (பாலாஜி மோகன்), பீட்சா (கார்த்திக் சுப்பராஜ்), அட்டகத்தி (ரஞ்ஜித்), நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் (பாலாஜி தரணீதரன்), மதுபானக்கடை (கமலக்கண்ணன்) போன்ற அறிமுக இயக்குநர்கள் தங்களின் பிரத்யேக திறமையால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

மேலும் திறமையான முறையில் உருவாக்கப்பட்ட சிறுமுதலீட்டுப் படங்கள் வரவேற்பினைப் பெறுவதும் ஸ்டார் நடிகர்கள் நடித்த மசாலாக்கள் தோற்றுப் போவதையும் வைத்து தமிழ் சினிமாவில் புரட்சி ஏதேனும் ஏற்பட்டு விட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. இது ஒரு தற்காநிலையாக இருக்கலாம். வருகிற வருடத்தில் பெரிய பட்ஜெட் படங்கள், பஞ்ச் டயலாக் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் நிலைமை தலை கீழாக மாறலாம். 80களில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றத்தை குழி தோண்டிப் புதைத்த 'சகலகலா வல்லவனை' நினைவு கூரவும்!
 
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் டிஜிட்டல் புரட்சி. பிலிம் சுருளுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது டிஜிட்டல் யுகம். வழக்கு எண்.18/9 என்கிற திரைப்படம் கேனான் 5D என்கிற ஸ்டில் கேமிராவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படம்  உருவாவதற்கு பெரும் செலவை கோரி நிற்பதனால் சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தயக்கத்தை டிஜிட்டல் வசதி குறைக்கிறது.

***

தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக "கேன்சர்' என்றொரு வியாதி படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. இப்படி திடீரென்று ஏதாவது ஒரு வியாதியின் பெயர் தமிழ் சினிமாவிற்கு பிடிக்க ஆரம்பித்து விடும். உடனே நாயகர்களுக்கு அந்த வியாதி வந்து விடும். ஸ்கீஸோபெர்னியா, ஷார்ட் டைம் மெமரி லாஸ், அம்னீசியா என்று. இந்த வரிசையில் சமீபத்திய வியாதி Bipolar disorder. இந்தக் குறைபாட்டை கதையின் உள்ளீடாகக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. தனுஷ் நடித்த 3, தேவையற்ற பதின்ம காதல் காட்சிகளைத் தொடர்ந்தாவது நாயகன் இந்தக் குறைபாட்டில் அவதிப்படுவதைக் காட்டியது. லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோகணம்' இன்னமும் மோசம். தொலைக்காட்சி சீரியல் போன்ற மெலோடிராமா காட்சிகளைத் தொடர்ந்து, திடீரென்று நினைத்துக் கொண்டதைப் போல வியாதியைப் பற்றிய மருத்துவரின் ஆங்கில உபன்யாசத்துடன் படம் முடிகிறது. அகரீதியான சிக்கல்களை தேவையற்ற விஷயங்கள் இல்லாமல் உளவியல் பார்வையில் தீவிரமாக அணுகிய ஒரு திரைப்படமாவது தமிழில் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. இதே மாதிரியான குறைபாட்டை வேறு ஒரு நோக்கில் அணுகின ஒரு திரைப்படத்தைப் பற்றி கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' பதின்ம வயதுகளைத் தாண்டின காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எள்ளலோடும் ஒரு தீவிரமற்ற தன்மையிலும் முன்வைத்தது. குறும்பட உலகிலிருந்து திரைப்பட உலகிற்கு வந்து வெற்றி பெற்றதின் மூலம் ஒரு முன்மாதிரியையும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தியது இத்திரைப்படம். குறும்படத்தையே இழுத்து நீளமாக்கியதின் மூலம் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வை ஒரு குறையாக இதில் காணலாம். மேலும் பிரதான பாத்திரம் திடீரென்று கேமிராவை நோக்கி பார்வையாளர்களிடம் உரையாடுவது, பெண்களின் மனவோட்டங்கள் குறித்து நாயகன் தொடர்ந்து உபன்யாசம் செய்தது போன்றவை சில தருணங்களில் சுவாரசியமானதாக இருந்தாலும் சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இதே மாதிரியான காதலில் ஏற்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கலை தீவிரமான பார்வையில் சொல்லிச் சென்றது கெளதமின் 'நீதானே என் பொன் வசந்தம்'.  இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களில் ஒன்றான 'விண்ணைத் தாண்டி வருவாயா'வின் நீட்சி அல்லது இன்னொரு பரிமாணம் என 'நீதானே என் பொன் வசந்தத்தை சொல்லலாம். ஏறக்குறைய கடைசிக் காட்சி வரை இருவரின் ஈகோவும் சளைக்காமல் பயணம் செய்தது. சமந்தா இதில் அருமையாக நடித்திருந்தார். 

இந்தக் காதல் வரிசையில் முக்கியமானதொரு திரைப்படம் 'அட்டகத்தி'. காதல் என்கிற விஷயத்தை முக்கியமான கச்சாப்பொருளாக  எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டு பயணிக்கிறது தமிழ்சினிமா. ஆனால் இதை வைத்தாவாது உருப்படியான ஒரு சினிமாவையாவது உற்பத்தி செய்திருக்கிறதா என்றால் இல்லை. காதல் குறித்து அதுவரை தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் அடித்துத் துவைத்திரு்க்கிறது 'அட்டகத்தி'.  'காதல் -ன்றது ஒருத்தனுக்கு ஒரு முறைதான் வரும்' என்று லாலாலா...பின்னணியுடன் வரும் அபத்தமான வசனங்களை எள்ளி நகையாடியிருக்கிறது 'அட்டகத்தி'. 

நாம் காலையில் உபயோகிக்கும் பற்பசை முதல் இரவில் உபயோகிக்கும் ஆணுறை வரை அனைத்தையும் தீர்மானிப்பது நம்மை ஆளும் அரசியல் என்பதை சொல்கிறது மதுபானக்கடை. இதிலும் கிளைக்கதையாக ஒரு காதல் உண்டு! மதுவிற்பனை மூலம் பெருமளவிற்கான வருவாயை ஈட்டும் இதே அரசு, 'மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' என்று பிரச்சாரம் செய்வது முரண்நகைக்கு சிறந்த உதாரணம். இந்தப் பிரச்சாரத்தை இப்போது திரைப்படக் காட்சிகளிலும் போட்டுத் தொலைக்கிறார்கள். தமிழன் அருந்தி வந்த 'கள்'  இன்று காணாமற் போய் அந்த இடத்தை விஸ்கியும் பீரும் இட்டு நிரப்பியிருக்கின்றன. பொதுக் கழிவறை போன்ற இடங்கள்தான் இன்று தமிழகத்தின் மதுக்கூடங்களாக நுரைத்து வழிகின்றன. மது அருந்துபவனை இதற்கு மேலும் அவமானப்படுத்தி விட முடியாது. என்றாலும் எல்லாவற்றையும சகித்துக் கொள்வது போல இதையும் சகித்துக் கொண்டிருக்கிறான் தமிழன். கதை என்று எதுவுமில்லாமல் மதுபானக் கடையில் நிகழும் சம்பவங்களையே கோர்வையாக தொகுத்து 'மதுபானக் கடை'யாக உருவாக்கியிருக்கும் வகையில் முக்கியமானதொரு காட்சி ஊடக ஆவணமாக திகழ்கிறது 'மதுபானக்கடை'.

வழக்கு எண் 18/9 ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்றாலும் பெண்களின் மீதான வன்முறை, வர்க்க அரசியல், நகர்மயமாயதலின் துயரம், சமகால காதல் என்று பல விஷயங்களை ஒரே திரைப்படத்தின் மூலமாக உணர்த்த வந்ததில் ஓர் ஆவணப்படத்தின் வாசனையும் பிரச்சார தொனியும் வந்து விட்டன. 'காதல்' படம் தந்த வெற்றியினாலோ என்னவோ, 'Based on a True Story' என்கிற கிளிஷேவில் பாலாஜி சக்திவேல் மாட்டிக் கொண்டிருப்பதாக  தோன்றுகிறது. வசந்தபாலனின் 'அரவானும்' கவனிக்கத்தகுந்த முயற்சி. 18-ம் நூற்றாண்டின் தென்தமிழகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை  பதிவாக்கியிருந்தது. ஆனால் சொதப்பலான திரைக்கதையால் அத்தனையும் வீணாகியது. அதுவரை ஒரளவிற்கு சீராகச் சென்று கொண்டிருந்த திரைக்கதை 'வரிப்புலியின்' பிளாஷ் பேக்கினுள் நுழைந்தவுடன் 'சினிமாத்தனமாகி' விட்டது. மேலும் அந்தக் காலக்கட்ட சித்தரிப்புகளில் நம்பகத்தன்மையில்லை. காவல்கோட்டம்' என்கிற புதினத்தின் ஒரு பகுதியிலிருந்து திரைக்கதையை கட்டி எழுப்பியிருப்பதின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும் நல்ல முயற்சிகளில் இதுவொன்று. 

ஹாலிவுட் நீண்ட காலமாக மென்று துப்பிக் கொண்டிருக்கும் 'ஹாரர்' வகைமையிலான திரைக்கதையைக் கொண்டிருந்தது 'பீட்சா'. படத்தில் தர்க்க்ப பிழையும் நம்பகத்தன்மையற்ற தன்மையும் இருந்தாலும் படத்தைப் பார்த்து முடித்த பிறகுதான் அவற்றை பற்றி யோசிக்க வைக்குமளவிற்கு சுவாரசியமான திரைக்கதையின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இந்த வருடத்தில் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது விஜய்யின் 'துப்பாக்கி'. வழக்கமான வணிகமசாலா திரைப்படமென்றாலும் ஆறுதலளிக்கும் வகையில் தனது அதிநாயக பிம்பத்தை பெருமளவிற்கு கைவிட்டிருந்தார் விஜய். நம்பகத்தன்மையற்று இருந்தாலும் வேகமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. 'இசுலாமியர்கள் தீவிரவாதிகள்' என்று பொதுப்புத்தியில் தொடர்ந்து கட்டமைக்கப்படும் அரசியலை இந்தப்படமும் கடைப்பிடித்து எதிர்ப்பைச் சம்பாதித்தது. 

தமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றி பேசும் படம் என்பதான சித்திரத்தை அது வெளிவருவதற்கு முன் அளித்திருந்தது 'நீர்ப்பறவை'. ஆனால் அது மிகப் பெரிய வதந்தியாக முடிந்து போனது சோகமான ஒன்று. மோசமான திரைக்கதை. காட்சிகள் நிகழ்வதான பிரதேசத்தையும் மொழியையும் சித்தரித்திருந்தில் உள்ள பிழைகள், காலக்குழப்பங்கள் போன்றவை படத்தை சிதைத்திருந்தன. சமூக நல்லிணத்திற்கான தேசிய விருதைப் பெறுவதற்கான முயற்சியோ என்கிற ஐயத்தை படம் ஏற்படுத்தியிருந்தது. என்றாலும் வணிகநோக்குத் திரைப்படங்களின் சம்பிரதாயங்களை இயக்குநர் தவிர்த்திருந்த காரணத்திற்காக பாராட்டுக்குரியவராகிறார். ஆனால் சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசுவதான பாவனையில் வழக்கமான காதல் படமாகவே 'நீர்ப்பறவை' அமைந்து போனது. 

தமிழ் சினிமாவில் இதுவரை ' இராமநாராயண' சர்க்கஸ் யானைகளையும் அதன் நாடகத்தனமான சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். முதன் முதலாக யானையையும் பாகனையும் பிரதான பாத்திரங்களாக அமைத்து வெளிவந்தது 'கும்கி'. அருமையான வாய்ப்பு. யானைகளுக்கும் பாகன்களுக்குமான உறவு, அதிலுள்ள நுண்தகவல்கள், யானைகளின் வழித்தடங்கள், வாழ்விடங்கள், நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைய வேண்டிய நிலை போன்றவற்றை படத்தின் ஊடாக சொல்லியிருக்கலாம். மாறாக இதையும் ஒரு காதல் படமாகவே அணுகியிருந்தார் இயக்குநர். அது மாத்திரமல்ல. 'காட்டு யானைகளின் அட்டகாசம், வெறிச்செயல்' என வெகுஜன ஊடகங்கள் சித்தரிக்கும் அதே விஷயத்தையே படத்திலும் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். விலங்குகளையும் பறவைகளையும் மனித குலத்திற்கு எதிரானவைகளாக கொடூரமானவைகளாக சித்தரிக்கும் ஹாலிவுட்தனத்தையே 'கும்கி'யும் பின்பற்றியது. 

யானை தோற்றுப் போன நிலையில் ஈ ஜெயித்திருப்பதுதான் முக்கியமான விஷயம். சூப்பர் ஸ்டார்கள், நடிகர்கள், புரட்சி தமிழர்கள், தளபதிகள் .. போன்ற ஊதிப்பெருக்கப்பட்ட அதிநாயக பிம்பங்களையே தமிழ் சினிமா நம்பியிருப்பதான மாயையை அடித்து நொறுக்கியிருக்கிறது நான் ஈ. தமிழ் சினிமாவில் கணினி நுட்பம் பொருத்தமற்ற முறையில் செயற்கையாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு ஈயை பிரதானமான பாத்திரமாக வைத்து சுவாரசியமாக கதை சொல்லியிருந்தார் ராஜமவுலி. குழந்தைக்கு கதை சொல்வதான பாவனையில் துவங்கும் இத்திரைப்படத்தை தர்க்கப்பிழைகள் பற்றிய பிரக்ஞையில்லாமல் நம்மை ஒப்படைத்துக் கொண்டால் ரசித்துப் பார்க்க முடியும். சினிமாவிற்கு பிரதான நடிகர்களோ, அவர்களின் பிம்பங்களோ தேவையில்லை, கணினி நுட்பத்தைக் கொண்டும் திரைக்கதை அமைக்கும் திறமையையும் கொண்டு வெற்றி பெற முடியும் என்கிற ஆரோக்கியமான விஷயத்தை துவக்கி வைத்திருக்கிறது நான் ஈ. 

சமகால கல்வித்துறையின் அபத்தங்களைப் பற்றி பேசுபவைகளாக மூன்று படங்களை சொல்லலாம். ஷங்கர் இயக்கிய 'நண்பன்'. ஒரு சமூகப் பிரச்சினையை முன்வைப்பதான பாவனையில் தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலாவை ஹை-டெக் முறையில் பரிமாறும் வித்தை தெரிந்தவர் ஷங்கர். இலியானாவின் இடுப்பையும் இன்ஜினியரிங் படிப்பையும் ஒரே புள்ளியில் இணைப்பவர். த்ரீ இடியட்ஸ் என்ற சுமாரான இந்திப்படத்தை தமது பாணியில் மோசமாக இயக்கியதே இவரது சாதனை. பிரகாஷ்ராஜ் இயக்கிய 'தோனி' , மதிப்பெண்தான் சிறந்த கல்வியின் அடையாளமா என்கிற கேள்வியை எழுப்பினாலும் கிரிக்கெட்டையும் ஊடாக முன்வைத்தது ஒரு நெருடல். 'சாட்டை'. இதிலும் காதல் உண்டு! அரசுப் பள்ளிகளின் ஆசிரி்யர்கள் கூலிக்காக மாரடிக்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கினால் அரசுப் பள்ளிகளும் சிறப்பான கல்வியை அளிக்க முடியும் என்பதை பிரச்சாரத் தொனியோடு சொல்கிறது.

*********

2012-
ன் சிறந்த சினிமா வாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்பதை முன்வைக்க விரும்புகிறேன். மிகச் சுமாராக உருவாக்கப்பட்ட, நாடகத்தனமான, வலுவான கதை ஏதுமில்லாத, நம்பகத்தன்மை போதாத, குறைந்தபட்சம் பிரமிக்க வைக்கும் தொழில் நுட்பம் கூட ஏதுமில்லாத 'நகொபகா' -வை ஏன் நான் சிறந்த சினிமாவாக கருதுகிறேன்?. 

தமிழ் சினிமாவில் காதல் என்கிற சமாச்சாரம் பல ஆண்டுகளாகவே முதிர்ச்சியற்ற தன்மையோடு சலிக்க சலிக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. காதலை ஓர் ஒவ்வாமையாகவே மாற்றி விட்ட தமிழ் சினிமாவில் அதைப் பற்றி பேசாத காரணத்தினாலேயே 'நகொபகா' தனித்து நிற்கிறது. மணமகளாக வரும் பெண் பாத்திரம் கூட ஏறக்குறைய படம் முக்கால்வாசியைக் கடந்த பிறகுதான் வருகிறது. அது மாத்திரமல்ல, தமிழ் சினிமாவின் வழக்கமான சம்பிதாயங்களான பாடல்கள், சண்டைக்காட்சி, சென்டிமென்ட் போன்றவைகளை தவிர்த்திருப்பதாலும் - இதுவே மாற்று சினிமாவிற்கான அடையாளங்களல்ல என்றாலும் - இத்திரைப்படம் தனித்துத் தெரிகிறது. 

திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடச் செல்கிறான் ஓர் இளைஞன். தவறி கீழே விழும் நிலையில் தலையில் அடிபட்டு தற்காலிக ஞாபகக் குறைபாடு' ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடமாகவுள்ள நினைவு முற்றிலும் அழிந்து போகிறது. அவனது திருமணத்தையும் மறக்கிறான். அவனுடைய மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தை மற்றவர்களிடமிருந்து மறைத்து மிகச் சாமர்த்தியமாக திருமணத்தை நடத்துவதும் பின்பு அவனது நினைவு மீள்வதுமாக படம் நிறைவுபெறுகிறது. மெலோடிராமாவாக கண்ணீர்க் காட்சிகளுடன் சொல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உள்ள இந்த உள்ளடக்கத்தை சிரிக்க சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை வித்தியாசப்படுத்துகிறது. 

கிரிக்கெட் விளையாடுவதில் துவங்கும் திரைப்படம் எங்கும் திசை மாறாமல் இறுதி வரை அதே கால வரிசையில் பயணிக்கிறது. எங்குமே கிளைக்கதையாகவோ, பிளாஷ்பேக்காகவோ விலகவில்லை. மங்கலகரமான வசனம் மற்றும் காட்சிகளுடன் துவங்கும் ஆச்சாரமான தமிழ் சினிமாக்களுக்கு இடையில் 'நேரமே சரியில்லடா' என்கிற வசனத்துடன்தான் படம் துவங்குகிறது. 

இந்தப் படத்தின் முக்கியமான விஷயம் பாத்திரங்களுக்கான தேர்வு. எவருமே பிரபலமான, மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர்கள் கிடையாது. நமக்குப் பக்கத்தில் இயங்கும் மனிதர்களைப் போலவே இயல்பானவர்களாக இருக்கிறார்கள். அவரவர்களுக்கான தனித்தன்மையான குணாதியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். சரஸ் என்கிற நண்பன் பொறுப்பானவனாக, பிரச்சினையை சாதுர்யமாக தீர்ப்பவனாக இருக்கிறான். பக்ஸ் என்கிற பகவதி 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்கிறான். தனது ஈகோ சிறிது சீண்டப்பட்டாலும் கோபப்படுவனாக இருக்கிறான். பாஜி என்கிற பாலாஜி சற்று வெள்ளந்தியாக இருக்கிறான். பக்ஸூக்கும் பாலாஜிக்கும் படம் பூராவும் நிகழும் மெலிதான ஈகோ மோதலும் சீண்டலும் ரசிக்கத் தக்க வைக்கும் காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்திரைப்படத்தை பார்க்கிற ஒவ்வொருமே தங்களின் நண்பர்களின் குழுவை நினைவு கூர்ந்து அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைக்கும் வகையில் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடிநாதமாக இந்த நால்வருக்குள்ளும் இயங்கும் நட்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. கிரேசி மோகன் வசனங்களைப் போல செயற்கையானதாக அல்லாமல் இயல்பான உரையாடல்களிலேயே நகைச்சுவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

பிரேமாக விஜய் சேதுபதி அருமையாக நடித்திருக்கிறார். 'என்னாச்சி.. கிரிக்கெட் விளையாடினோம்..'' என்று தமக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றிய வசனத்தை மாத்திரமே படம் பூராவும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. ஆனால் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமுள்ள  இந்த வசனமே வேறு வேறு சூழ்நிலைகளில் திறமையாக பயன்படுத்தப்பட்டு பார்வையாளர்களிடம் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. தற்காலிக ஞாபகக் குறைபாடுள்ளவனின் குழப்பமான எதிர்வினைகளை மற்றவர்களிடமிருந்து - அதுவும் ஒரு கல்யாண மேடையில் - எப்படி மறைக்க முடியும் என்கிற அடிப்படையான, தர்க்கபூர்வமான கேள்வியை பார்வையாளனிடம் எழுப்புகிறது இத்திரைப்படத்தின் கதை. இது தொடர்பான காட்சிகள் அமெச்சூராக இருந்தாலும் நகைச்சுவையால் அதை மழுப்பியிருக்கிறார்கள். ஆனால் படம் முடியும் போது இதற்கான விளக்கத்தை பார்வையாளர்களிடம் முன்வைக்கிறார் இயக்குநர். இதே போன்றதொரு சம்பவம் ஒரு தனிநபருக்கு ஏற்பட்டு - அது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரே - இதே போன்று நண்பர்களால் அவருக்கு திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஓர் உண்மைச் சம்பவத்தையே திரைப்படம் அடித்தளமாக கொண்டிருக்கிறது என்கிற செய்தியின் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளித்து விடுகிறார் இயக்குநர் 

சரி. 2013-ல் தமிழ் சினிமா எப்படியிருக்கும்? வருடத்தின் துவக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு திரைக்காவியம் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்த்தால் இதற்கான விடை நமக்கு கிடைத்து விடும். மக்களின் ரசனை மாற்றமும், திறமையான புதிய இயக்குநர்களுக்கான வணிக கட்டுப்பாடற்ற சுதந்திரமும்தான் தமிழ் சினிமாவின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச முடியும். .

- உயிர்மை - பிப்ரவரி 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

6 comments:

ராகின் said...

எது விரும்ப படுகிறதோ அதுவே கொடுக்கப் படுகிறது..ஒரு நடிகர் நல்ல நடிகனுக்கு உரிய அடிப்படை குணங்களை கொண்டு “வெறும் நடிகனாக” மட்டுமே நடிப்பதற்க்கு அவரது இருபதாவது கலைச்சேவை ஆண்டில்தான் முடிவெடுக்கிறார் என்கிற அவலமான திரைச்சூழலில், நகொபகா ஆகச் சிறந்த படைப்பு என்பதில் கடுகளவும் மாற்றுக் கருத்து கிடையாது.

manjoorraja said...

ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.





Rettaival's Blog said...

சமகால சமூகப் பிரச்சினையை வணிக நிர்ப்பந்தங்கள் இல்லாமல் யோக்கியமாக முன்வைக்கும் ஒரு வெகுஜன திரைப்படம் கூட இங்கு கிடையாது. இது ஒரு கசப்பான உண்மை.

############

இதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் த்ரீ இடியட்ஸ் சுமாரான படம் என்கிறீர்கள்.

ஏன் இந்த முரண்பாடு?

rajasundararajan said...

உங்களோடு 100% ஒத்துப் போகிறேன். ஆஹா ஓஹோ என்று விஸ்வரூப அரசியல்; அல்லது குப்பை என்று கடலில் போடும் (விமர்சன) எழுத்தாளர்கள் நடுவே, உங்களைப் போல், கோட்டமில்லாத துலாக்கோல் எழுத்தாளர்களும் உண்டு என்பதே ஆறுதல்.

சஞ்சயன் said...

நோர்வே தமிழர் திரைப்பட விழாவில் நீங்கள் கூறிய பல படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

http://www.nttf.no

Prasad Raj said...

அருமையான பதிவு. நிறைய தகவல்களை நிறைவாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவின் நிலையை திகட்டாத அளவிற்கு கச்சிதமாக அளித்துள்ளீர்கள். நன்றி.
“தங்க நிப் கொண்ட பேனா கொண்டு எழுதினால் அது உலக இலக்கியமாகி விடுமா?” நல்ல கேள்வி. “தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலாவை ஹை-டெக் முறையில் பரிமாறும் வித்தை தெரிந்தவர் ஷங்கர்.” – ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
சாட்டை படத்தை பற்றி ஒரு வரியில் கூறி விட்டு , நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணாம் – படத்தை உயரத்தில் ஏற்றி புகழ் பாடியது மனதை கொஞ்சம் சங்கட படுத்தியதோடு இல்லாமல் உங்கள் பதிப்பின் மேல் இருந்த மதிப்பையையும் கொஞ்சம் குறைத்து விட்டது.
இது வல்ல நான் சொல்ல வந்தது..
தமிழ் சினிமா - மாற வேண்டும், மாற வேண்டும் என்று சொல்லி - மாற வேண்டும் என்று கட்டாயத்துக்காக, கண்டபடி மாறிவிடுமோ என்ற பயமும் நெஞ்சினில் வருகின்றது. பெப்சி குடிப்பது, பிஸ்ஸா சாபிடுவது, பெண்கள் மார்பு முட்ட நடப்பது எல்லாம் மாற்றம் காண துடிக்கும் மக்களினால் ஏற்பட்ட மாற்றம். நமக்கு தெரிந்த ஒரே மாற்றம் , மேற்கத்திய தேசங்களில் என்ன என்ன புதுசாக இருக்கின்றதோ...அதையே கண்ணை மூடி கொண்டு பின் பற்றுவது. நம் நாட்டிற்க்கும், நமது கலச்சரதிர்க்கும் எது ஒத்து வரும் என்று ஒரு நிமிடம் கூட எண்ணுவதில்லை. கண்டதும் காதல் என்பது இந்தியாவில் நம்மிடம் மட்டும் தான் சாத்தியம். தனி மனித ஒழுக்கம் இப்படி சீர் அழிந்து சென்றுகொண்டிருக்கையில், சினிமா என்ற வலிமைபொருந்திய ஒரு கருவியை மாற்றம் என்ற பெயரில் தவறாக பயன்படுத்தி அது ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்திவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது...நினைத்தாலே நெஞ்சம் படபடக்கிறது.
என் பணிவான வேண்டுகோள் – முதலில் நாம் மாறுவோம் – தனி மனித ஒழுக்கம் ஓங்கட்டும் – பிறகு – இந்த சினிமா என்கின்ற வலிமை வாய்ந்த கருவியை., தங்க நிப்பினால் நம் ரத்தம் கொண்டு படைப்போம் – ரசிப்போம். இப்போதைக்கு – வேண்டாம்.
தவறாக என்ன வேண்டாம் – மனதில் பட்டதை சொன்னேன்.
அவ்வளவு தான் –
அன்புடன் – பிரசாத் ராஜாராமன்