Saturday, March 26, 2005

கண்ணாடி பூக்கள் - திரைப்படம் குறித்து என் பார்வை

எனது முந்தைய பதிவு என்ன காரணத்தினாலோ காணாமற் போய்விட்டதால் வேறொரு தலைப்பில் மீண்டும் பதிகிறேன். ஏற்கெனவே படித்த அபாக்கியவான்கள் பொறுத்தருளவும்.

குழந்தைகள் மனமும் உடைந்து போகும் கண்ணாடிப் பூக்களும்

சக போட்டி நடிகர்களை கேமிராவை பார்த்து மறைமுகமாக ஆவேசமாக திட்டும் வணிக படக் கதாநாயகர்களின் சலிப்பூட்டும் ஒரேமாதிரியான மசாலா படங்களின் மத்தியில் ஒரு திரைப்படம் சற்றே - சற்றேதான் - மாறுதலாக வந்தால் கூட 'இது நல்ல படம்' என்கிற மாதிரி அடையாளம் காணப்படும் அளவிற்கு தமிழ்ச்சினிமாவின் நிலைமை சீர்குலைந்து போயிருப்பது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும். எந்தவித வலுவான அடித்தளமுமில்லாமல் ஒரு கதாபாத்திரம் முடியை வளர்த்துக் கொண்டு முரட்டுத்தனமாக செயல்பட்டால் கூட, அதைப் பற்றி ஆராயாமல் கைதட்டி விசிலடிக்கும் ரசிகர் குழாம் ஒரு புறமும் விருது கொடுக்கும் அமைப்புகளும் திரைப்படம் என்கிற ஊடகத்தின் அடிப்படைகள் எப்படியிருக்க வேண்டும் என்கிற தெளிவோடுதானிருக்கின்றனவா என்று புரியவில்லை.

இந்த நிலையில் சற்றே நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய அளவில், 'எண்ட வீடு அப்பூண்டயும்' என்கிற மலையாள சினிமாவிலிருந்து ரீமேக்காக தமிழிற்கு ஆறுதலாக வந்திருக்கும் திரைப்படம், கண்ணாடி பூக்கள் (ப் இல்லை)


Image hosted by Photobucket.com

கதை மிகச் சுருக்கமானது, தெளிவானது.

தாயின் முழு அன்பும் அக்கறையும் தனக்கே வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு பத்துவயது சிறுவனின்.. இல்லை ஒரு குழந்தையின் அதீத செயலால் ஏற்படும் அசம்பாவிதமும் அதன் விளைவுகளும்.

மனைவியை இழந்த, ஏழு வயது மகனுடைய பார்த்திபனை காதலித்து மணந்து கொள்கிறாள் காவேரி. அந்தச் சிறுவனுக்கு சிற்றன்னையாக இருந்தாலும் ஒரு தாயின் உண்மையான அன்பை அளவில்லாமல் வழங்குகிறாள் அவள். அவள் தன் தாயில்லை உண்மையை அறிந்திருக்கிற சிறுவனும் அவளைத் தன் தாயை போலவே பாவித்து அன்பை அள்ளி அள்ளி பருகுகிறான். இந்த நிலையில் அந்தத் தம்பதிகளுக்கென்று ஒரு குழந்தை பிறக்கிறது.

தனக்கு விளையாட்டுத் தோழன் கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் போகப் போக தாயின் அன்பும் கவனிப்பும் புதிதாக வந்திருக்கிற குழந்தை பக்கமே இருப்பதை எண்ணி எரிச்சலடைகிறான். கோபம் அதிகமாகிப் போனதொரு கணத்தில் அந்தக் குழந்தைக்கு சிறுதண்டனை அளிப்பதாக எண்ணி மருந்தடிக்கும் ஸ்ப்ரே பம்ப்பை குழந்தையின் முகத்தில் அடிக்கிறான், அதனால் குழந்தை இறந்துவிடும் என்கிற பின்விளைவை அறியாமல். பிறகு சட்டம் தன் குரூர கரங்களை அவனின் மீது நீட்டுவதும் அதனிடமிருந்து தன் மகனை மீட்க அந்த பெற்றோர்கள் போராடுவதும் அவனின் குற்ற உணர்ச்சியைப் போக்கி அவன் பழைய படி மீண்டெழ மனநல மருத்துவர் சொல்லும் முயற்சிசகளில் ஈடுபடுவதும் மீதிக் கதை.

()

சிறுவனாக மாஸ்டர் அஸ்வின் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இவரே ஆக்ரமிக்கிறார். கனமான காட்சிகளைக் கூட தன் பிஞ்சு தோளில் அனாயசமாக சுமந்திருக்கிறார். பேச்சில் அடிக்கும் மலையாள வாடை சமயத்தில் எரிச்சலடைய வைத்தாலும் தன் பிரம்மாண்டமான நடிப்பால் அதை ஈடுகட்டிவிடுகிறார்.

கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தன் பெற்றோர்கள் வராததால் சரியாக விளையாடமல் இருப்பதும் பிறகு தன் தாய் வந்து சேர்ந்ததும் ஆரம்ப சச்சின் போல் விளையாடி அணியை ஜெயிக்க வைப்பதுமாக, முன்னதில் சோகமுமாய் பின்னதில் உற்சாகமுமாய் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். தன் தம்பிக் குழந்தையின் மீது பூச்சிமருந்தை தெளித்துவிட்டு அதனால் குழந்தை மூச்சு பேச்சின்றி கிடப்பதை பார்த்து அதிர்ந்து போவதும், பிறகு மருண்ட கண்களுடன் ஓடி ஒளிந்து கொள்வதும் தன் பெற்றோர்கள் குழந்தையை பார்த்து கதறும் போது குற்ற உணர்ச்சியோடு அழுவதுமாக பின்னியெடுத்திருக்கிறான் அந்தச் சிறுவன். குறிப்பாக நீதிமன்றத்தில் தான் தன் தம்பியை தெரியாமல் சாகடித்த காரணங்களையும் தாய் தன்னை புறக்கணித்ததற்காக இவ்வாறு செய்ததாயும் அழுகையும் பயமுமாய் கூறிவிட்டு பெற்றோரையும், வக்கீல், நீதிபதிகளை பார்த்து அழுகையின் உச்சத்துடன் 'ஸாரி' என்று கேட்கும் போது கலங்கிப் போகாதவர்கள் நிச்சயம் சிமெண்டினால் வேயப்பட்ட மனதுடையவர்களாக இருக்க வேண்டும்.

தாயாக காவேரி. முதிர்ச்சியாக பாத்திரத்திற்கு இவர் அநியாய இளமையாக இருக்கிறார். என்றாலும் சிறுவனின் மீது அன்பை பொழியும் காட்சிகளிலும் அவன் ஒரு முறை செய்யும் தவறுக்காகவும் சொல்லும் பொய்க்காகவும் அவனை கண்டிக்கும் காட்சியிலும் பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் சிறுவன், 'அம்மா, நீ என் பெஸ்ட் பிரண்டில்லன்னு சொல்லிட்டாங்க' என்று குற்றத்திற்கான காரணத்தை சொல்லும் போது அதிர்ச்சியடைந்து நொறுங்கிப் போய் அழும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குரூப் போட்டோவில் ஒரத்தில் நிற்கும் நபரைப் போல வந்து போகிறார் பார்த்திபன். சென்சார் அதிகாரியாக வருகிறார். நல்ல படம் என்பதற்காக அவ்வளவாக முக்கியமல்லாத பாத்திரம் என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்டதாக இவர் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கும் போது பாராட்டத் தோன்றுகிறது. படத்திற்கு ஒரு commercial weight இவரால் கிடைப்பதை மறுக்க முடியாது. படத்தின் பிற்பகுதியில் வரும் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடத்தில் வந்து நம்மைப் 'படுத்துகிறார்'

()

7 வயதிற்கு குறைந்தவர்கள் செய்யும் குற்ற்ங்களுக்கு மட்டுமே சட்டரீதியாக தண்டனைகள் இல்லை என்று படத்தின் ஒரு வசனத்தில் கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் அனுதாபம் முழுமையும் சிறுவனுக்கு கிடைக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுவன் அறியாமல் செய்த பிழையென்றாலும், வன்மத்துடன் செய்யப்படும் தவறின் மூலம் வெளிப்படும், அவன் மனதில் உறைந்திருக்கும் கெட்ட எண்ணங்களை களைய சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒரு தீர்வும் இந்தப்படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கால குழந்தைகளுக்கு வன்முறை என்பது தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்படும் அளவிற்கு இன்றைய சூழல் வன்முறை நிறைந்ததாய் இருக்கிறது.

இயக்குநர் ஷாஜ்ஜகான் இந்தப் படத்தை சுவாரசியாக சொல்லியிருந்தாலும், திரைக்கதை இன்னும் இறுக்கமாக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. சில இடங்களில் படம் மிகுந்த நாடகத்தன்மையோடு இருந்ததை தவிர்த்திருக்கலாம்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அறிமுகமாகும் ஆரம்பக் காட்சிகள் யதார்த்த குரூரங்களோடு இருந்தாலும், போகப் போக அது ஏதோ ஒரு பொழுதுபோக்குப் பூங்கா போல இருப்பதாக முரணோடு சித்தரித்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். சிறுவனுக்கு குழந்தையின் மீது வெறுப்பு வளரும் காட்சிகளை இன்னும் படிப்படியாக அழுத்தமாக கூறியிருக்கலாம். இசையமைப்பாளர் இன்னும் எவ்வளவு நாட்களானாலும் தன் 'லல்லலா' பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார் என்று தீர்மானமாகத் தெரிகிறது.

படத்தின் சிறுசிறு குறைகளைத் தாண்டி, எந்த வித வணிக அம்சமுமில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வித்தியாச முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இவ்வாண்டின் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருது மாஸ்டர் அஸ்வினுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

suresh kannan

11 comments:

Anonymous said...

சுரேஷ்,
இந்தப்படத்தை இன்றுதான் பார்த்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் இப்படியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. அந்தச் சிறுவன் நன்றாக உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருந்தார், அவ்வாறே காவேரியும். படத்தை மீள இன்னொருமுறை நினைக்கவைத்த உங்கள் பதிவுக்கு நன்றி.

இளங்கோ-டிசே said...

The above post is mine. I don't know why it is posted in anonymous name.

DJ

Anonymous said...

இந்த படம் குறித்தி இரண்டு வரி என் பதிவில் எழுதியிருந்தேன். இப்படி பட்ட படங்கள் வருவது ஆரோக்கியமானவை.

எதிர்பார்த்தது போலவே மலையாளத்தில்ருந்து தழுவல். மலையாளத்தில் இதே பையன் மிக நன்றாக நடித்திருப்பதால் தமிழிலும் அதே பையனை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் ஒரு டப்பிங் குரல் கொடுத்திருந்தால் என்ன குறைந்துவிடப் போகிறது என்று புரியவில்லை. நன்றாய் தமிழ் பேசும் பார்தீபனுக்கும், காவேரிக்கும் அப்படி ஒரு மலையாள உச்சரிப்புடன் பேசும் பையன். படம் முழுக்க அது மட்டும் எரிச்சலை தந்தது. சில விமர்சனங்கள் இருந்தாலும், இப்படி ஒரு பிரச்சனையை தொட்டதால் முக்கியமான படம். ரோஸாவசந்த்

Anonymous said...

test mail

By: suresh kannan

Anonymous said...

நான் இந்தப் படத்தை நேற்றுதான் பார்த்தேன். இப்படம் குறித்து நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் (எரிச்சலூட்டும் மலையாள வாடை உள்பட) இந்தப் பதிவிலேயே காண முடிந்தது.

நன்றி - எனக்கு ஒரு பதிவு போடும் வேலையை குறைத்தமைக்காக!

சுரேஷ்.

Voice on Wings said...

நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் accurateஆக சுட்டிக்காட்டி ஒரு முழுமையான விமர்சனத்தை அளித்ததற்கு நன்றி :)

Anonymous said...

கண்ணாடிப் பூக்கள் திரைப்ப்டத்தைச் சிலநாட்களுக்கு முன்னால் பார்த்தேன். மிக அருமையான கதை. மலையாளப்படத்தின் மறுவாக்கம்தான் என்றாலும் அதில் என்ன தவறு இருக்கிறது ?. மலையாளத்தில் பையன் வேடத்தில் நடித்த இந்தப் பையனுக்கு அதற்காய் விருது அளிக்கப்பட்டதாய்க் கேள்வி.

Muthu said...

மேலேயுள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான்.

Anonymous said...

Suresh,

Jayaram and his son Kalidasan played the father - son roles in the Malayalam original.

era.murukan said...

The prev posting was by me.

Anonymous said...

அருமையான படம். நேற்றுதான் பார்க்க முடிந்தது. வலைப்பதிவுகளில் இந்தப்படம் பற்றி படித்ததில்லையே என்று எண்ணி, கூகிளில் தேட, உங்கள் பதிவு கிடைத்தது.

மிகவும், சுவாரஸ்யமான படம். ஆனால் எத்தனை பேர் குடும்பத்துடம் உட்கார்த்து (மனைவி,மக்களுடன்) பார்க்க முடியும் என்று தெரியவில்லை. பலர் பாதியில் எழுந்துவிடுவார்கள். சில காட்சிகள் உள்ளம் உருக்குவதாக எடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக கோர்ட் சீன். குழந்தைக்கு வரும் முதல் கடிதம்.இன்னும் பல.

முதல் குழந்தை இருக்க இரண்டாவது குழந்தைக்கு அதிகம் கவனம் தருவது குறித்து இன்னமும் நிறையவே சொல்லியிருக்கலாம். அவ்வாறில்லாமல், அந்த குழந்தை மரணித்த பிறகு, கொலை குற்றம் சாட்டப்பட்ட பையனின் மனநிலையை எப்படிக் கையாளுவது என்பதே படத்தின் மெசேஜாக மாறிவிட்டது.

இது ஒரு வேளை இயக்குனரின் குறையா அல்லது இதுதான் அவர்கள் சொல்லவந்த மெசேஜா என்பது புரியவில்லை.


தேவையில்லாத பாடல்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். முக்கியமாக பார்த்திபனின் பெண்வேடம் பாடல்.. அவசியமே இல்லாமல்.மேலும் எல்லாரும் சொல்லியது போல மலையாளப் பேச்சு. ஹார்லிக்ஸ் பையன் போல பேசுகிறான் பல நேரம்.

மொத்தத்தில் தமிழில் ஒரு நல்ல திரைப்படம்.

விமர்சனத்திற்கு நன்றி.

அன்புடன்,
சாகரன்.