Monday, October 15, 2012

மாற்றான் - திரைக்கதையில் தோற்றான்


இப்போது உள்ளதா என தெரியவில்லை. முன்பெல்லாம் பொருட்காட்சிகளில் தலை பெண்ணாகவும் உடல் முழுக்க மீனாகவும் உள்ள ஒரு ஸ்டால் இருக்கும். ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கல்லா கட்டி விடுவார்கள். இதை அப்பாவித்தனமாக உண்மை என்று இன்றும் நம்புபவர்கள் உண்டு. இது பொய் என்று தெரிந்தும் கிளர்ச்சியால் எழும் ஆர்வத்தில் காசு செலுத்தி விட்டு பார்த்து விட்டு வருபவர்களும் உண்டு.

சமீபகாலமாக நம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் மக்களிடமிருந்து காசைப் பிடுங்குவதற்காக இந்த உத்தியை திறம்பட பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. வலுவானதொரு கதையில் அதற்கு மிகப் பொருத்தமாக உடற்குறையுள்ள பாத்திரம் இருப்பது என்பது வேறு. ஆனால் இம்மாதிரியான பாத்திரத்தை பிரதானமாக வைத்து விட்டு பின்பு அதற்கேற்றவாறு  கதையை யோசிப்பது என்பது வேறு.  இதில் அந்த பாத்திரம் பார்வையாளர்களின் ‘வேடிக்கைப் பொருளாகி’ விடும் அபாயமும் அபத்தமும் மாத்திரமே நிகழும். இயக்குநர்கள் முன்வைக்கும் வணிகத் தந்திரமும் அதுதான். இரட்டைத் தலை மனிதன்,  நான்கு தலை பாம்பு,  மூன்று மார்பகங்கள் உள்ள பெண் என்ற ஏதாவதொன்றை வேடிக்கை காட்டி காசு பிடுங்கும் தந்திரம்.

தமிழ்த் திரையில் இதை பிரதானமாக துவக்கி வைத்தவர் என கமலைச் சொல்லலாம். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா,  கல்யாண்குமார் கூனனாக நடித்த ஒரு திரைப்படம் (பெயர் நினைவில் இல்லை) பாகப் பிரிவினை 'சிவாஜி' என்று சில நல்ல முன் உதாரணங்கள் இருந்தாலும்,  இதை ஒரு கிம்மிக்ஸ் ஆக ‘வித்தியாசமாக காட்டுகிறேன் பார்’ என்ற பாவனையில் உருவாக்குபவராக ஒரு பாணியாக்கினவர் கமல். ராஜபார்வை,  அபூர்வ சகோதரர்கள், குணா,  அன்பே சிவம், என்று உடற்குறையுள்ளவர்களை வெற்றிகரமான வணிகப் பொருட்களாக்க முடியும் என்ற தந்திரத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லலாம். இதில் சற்று உருப்படியான முயற்சிகளும் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்த நோய்க்கூறு மனோநிலையின் உச்சமாக ‘தசாவதாரத்தை’ சொல்லலாம்.

 ‘வடை திருடின காகம்  vs ஏமாற்றிய நரி’ என்கிற நீதிக்கதையை கமல் திரைப்படமாக உருவாக்கினால் அதில் காகம், நரி, வடைசுடும் பாட்டி என அனைத்து வேடங்களையும்  ஏற்க கமல் விரும்புவார். ஏன் அந்த வடையாகக் கூட கமலே நடித்தால் கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. கதையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னையும் தன் ‘வித்தியாசங்களையும்’ முன்னிலைப்படுத்திக் கொள்வதாலேயே அவரின் படங்கள் சில நல்ல விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும் சர்வதேச திரைப்படங்களின் அருகில் வைத்து ஒப்பிடக் கூடிய தகுதியை இழக்கும் அபத்தத்திற்கு உள்ளாகிறது.

இம்மாதிரியான வித்தியாசமான வேடங்களை ஏற்பதில் கமலுக்கு வாரிசாக விக்ரமைச் சொல்லலாம். உடல் எடையை பெருமளவிற்கு குறைத்து ‘சேது’வில் காட்டின வித்தியாசம் நிச்சயம் நல்ல விஷயம்தான். கதையின் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமானது. ஒரு இயக்குநராக பாலா பிரகாசித்த விஷயமும் கூட. (ஆனால் இதே பாலாவே ‘அவன் இவனில்’ விஷாலைப் படுத்தி எடுத்து வேலை வாங்கி ஆனால் மோசமான கதை மற்றும் திரைக்கதையினால் அந்தப் பாத்திரத்தை கேலிக்கூத்தாக்கியது வேதனையான விஷயம்.) ஆனால் விக்ரமிற்கு ‘சேதுவின்’ வெற்றியும் முன்உதாரண கமலும் இணைந்து அவரை பைத்தியக்காரனாக்கி விட்டது போலும். சமீபத்திய 'தாண்டவம்' சிறந்த உதாரணம்.

இப்போதெல்லாம் நடிகர்களுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜூக்கு பொருந்துவதான ஆக்-ஷன் திரைப்படங்களைக் காட்டிலும் அதனோடு இணைந்து இந்த மாதிரியான 'வித்தியாச தோற்ற' விஷயங்களையும் இணைத்துக் கொள்வது உத்தரவாதமாக கால்ஷீட் வாங்குவதற்கு உபயோகமாகும் போலிருக்கிறது. ‘சார்,  இந்தப் படத்துல உங்களுக்கு வித்தியாசமான ரோல் சார். எல்லாருக்கும் மூக்குல ரெண்டு ஓட்டை இருக்குமில்லையா? உங்களுக்கு ஒரு ஓட்டைதான் இருக்கும். அதை வெச்சுதான் கிளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கோம்’. இன்னும் இரட்டை குறிகள், நான்கு புட்டங்கள், ஐந்து கிட்னிகள் உள்ள தமிழ் நாயகர்களையெல்லாம் பார்க்கப் போகிறோமோ என்கிற கற்பனையே திகிலாக இருக்கிறது.

இப்போது 'மாற்றானுக்கு' வருவோம்.

கமல், விக்ரமின் தொடர்ச்சியாக 'வித்தியாசமான' பாத்திரத்தை 'பேரழகனில்' ஏற்கெனவே சாதித்துக் காட்டியவர் சூர்யா. அதுவும் போதாமல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக 'மாற்றானில்' தோன்றியிருக்கிறார். இயக்குநர் கேவி ஆனந்த் எடுத்துக் கொண்ட கதைக்கு 'இரட்டையர்கள்' பாத்திரம் எந்த அளவிற்கு அவசியமானது? ஒன்றுமேயில்லை. பாதி படம் முடிந்த பிறகு இரட்டையர்களும் பிரிந்து விடுகிறார்கள். ஒரு மசாலா பட நாயகன் செய்யும் அதே வேலையைத்தான் இந்தப் பட நாயகனும் செய்கிறான். பின் எதற்கு இரட்டைப் பாத்திர கிம்மிக்ஸ்? ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி எதையோ வித்தியாசமாக காட்டி பார்வையாளனமிடமிருந்து பணம் பறிக்கும் அதே தந்திரம்தான் இரட்டைப் பாத்திரத்தின் நோக்கம்.

கதையை விடுத்து கே.வி.ஆனந்தின் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு பிரதியாகக் கூட அணுக முடியவில்லை. அவரின் முந்தைய படங்களில் (கனா கண்டேன், அயன், கோ) உள்ள அடிப்படையான சுவாரசியம் கூட 'மாற்றானில்' இல்லை. துவங்கும் போது மிகச்சிறப்பாகவே துவங்குகிறது. இரட்டைக் குழந்தைகளில் வளர்ந்து பெரியவர்களாவது வழக்கம் போல ஒரு பாடலின் பின்னணியில் சொல்லப்படுகிறது. பல சின்ன சின்ன சுவாரசியங்கள் இதில் வெளிப்படுகின்றன. இதற்காக உழைத்திருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். வளர்ந்த சூர்யாக்களும் வெவ்வேறு குணாதியங்களுடன் இருப்பதுவும் கூட சுவாரசியம்தான். ஆனால் இரட்டைப் பிறவிகளின் வேலை இங்கேயே முடிந்து விடுகிறது. கதையின் அவர்களுக்கான தேவை இல்லவே இல்லை. இடைவேளை வரை சற்றாவது சுவாரசியமாகச் செலகிற திரைப்படம் அதன் பிறகு ஒரு காட்டமான மசாலா நெடியுடனும் பல தர்க்கப் பிழைகளுடன் நொண்டியத்து எரிச்சலூட்டுகிறது. பில்லா - 2 திரைப்படத்தைத் தான் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று ரஷ்ய நில்ப்பின்னணியில் தனிமனிதன் ஒரு நாட்டின் ராணுவத்தையே நாயகன் சண்டையிட்டு முறியடிக்கும் அதிசாகச காமெடிகள் நிறைந்த பின்னணியில் பயணிக்கிறது. இதற்கு நடுவிலும் ஒரு கிளுகிளுப்பு பாட்டு வேண்டும்? என்ன செய்யலாம்? தான் தேடி வந்த ரஷ்ய பெண் பாலே டான்சராக இருப்பதாக காட்டலாம். அப்போதுதான் கொலைவெறிக்கு நடுவிலும் கிளுகிளுப்பாக நாயகன் 'கால் முளைத்த பூவே' என்று நடனமாட முடியும்.

ஒரு கச்சிதமான திரைக்கதையை அதன் இயல்பிற்கு நேர்மையாக பயணிக்க விடாமல் வணிகச் சினிமாவின் சூத்திரங்களை இடையில் இட்டு நிரப்பினால் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ்ச் சினிமா இதே ஆபாச சகதியினுள்தான் சிக்கிக் கொண்டிருக்கும்.

சிதறுண்ட நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தங்களின் சுற்றுலாத்தளங்களை பிரபலப்படுத்திக் கொள்ள இந்தியத் திரைப்படங்களை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. படப்பிடிப்பிற்கான இடத்தை இலவசமாகவும் வெண்ணையால் செய்த 'திமுசுக்கட்டைகளை' சலுகை விலையில் வழங்குகிறார்கள் போலும். எனவேதான் கிராமத் வறட்டி தட்டும் நாயகன் தன்னுடைய டூயட்டை வெளிநாட்டு பின்னணியில் பாடுகிறான்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகான டிராமாவை உருவாக்கியிருக்கலாம்? இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்தால்?.... இதற்கான சந்தர்ப்பமும் ஆனந்தின் திரைக்கதையில் இருந்தது. ஆனால் அதில் ஆழமாக போகாமல் சில நொடிக் காட்சிகளிலேயே விட்டு விட்டார் இயக்குநர். இதில் இவர்களின் தகப்பன்தான் வில்லனாக வருகிறார். ஒருவன் அப்பனை எதிர்ப்பனாகவும் இன்னொருவன் அவரை காப்பாற்றுவனாகவும் ஒருவரின் முயற்சியை மற்றொருவர் முறியடித்துக் கெர்ண்டே வந்தால் எத்தனை அற்புதமான திரைக்கதையாகியிருக்கும். (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நிறுத்தி்க் கொள்கிறேன்).

எஸஜே சூர்யா இயக்கிய 'வாலி' நினைவுக்கு வருகிறது. இதே போல் இரட்டையர்கள்தான். ஒரே பெண்ணை அடைய விரும்புகிறார்கள். இந்த புள்ளியை வைத்துக் கொண்டு எத்தனை சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அவர்? பாவம். ப்ளேபாய், செக்ஸ் காமெடி என்கிற சகதியில் அவரை அமிழ்த்தி அழித்து விட்டார்கள். அவரும் அதற்கு உடந்தையாய் இருந்து மறைந்து போனார்.

இருவேறு குணாதிசய பாத்திரங்களை அற்புதமாக வெளிப்படுத்திய சூர்யாவின் உழைப்பும், இரண்டு பாத்திரங்களை கச்சிதமான ஒளியில் பொருத்திக் காட்டிய ஒளிப்பதிவாளர் மற்றும் கணினி நுட்பக் குழுவின் உழைப்பும் எடிட்டர் ஆன்டனியின் உழைப்பும் (பாவம் சட்டியில் இருந்தால்தானே அவரும் அகப்பையில் கொண்டு வர முடியும். 'கோ'வில் வரும் 'அக நக' பாட்டையும் மாற்றானில் வரும் 'தீயே தீயே' பாடலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) கே.வி.ஆனந்த் என்கிற இயக்குநரின் வணிக நோக்கத்தினாலும் மோசமான திரைக்கதையினாலும்  பாழானதுதான் மிச்சம். 'இரட்டையர்களான' சுபா அடுத்த திரைப்படத்திலாவது 'கெமிக்கல்' வாசனையில்லாத ஒரு கதையை முயற்சித்துப் பார்க்கலாம்.
suresh kannan

10 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நிறைவான விமர்சனம்.

//எஸஜே சூர்யா இயக்கிய 'வாலி' நினைவுக்கு வருகிறது. இதே போல் இரட்டையர்கள்தான். ஒரே பெண்ணை அடைய விரும்புகிறார்கள். இந்த புள்ளியை வைத்துக் கொண்டு எத்தனை சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அவர்?//

நடிப்பைத் தவிர்த்து விட்டு பார்த்தால் மிக அருமையான இயக்குனர். தேவையில்லாமல் நடிப்பில் மூக்கை நுழைத்து நாறடித்துக் கொண்டார். :(

ஹாலிவுட்ரசிகன் said...

// ‘வடை திருடின காகம் vs ஏமாற்றிய நரி’ என்கிற நீதிக்கதையை கமல் திரைப்படமாக உருவாக்கினால் அதில் காகம், நரி, வடைசுடும் பாட்டி என அனைத்து வேடங்களையும் ஏற்க கமல் விரும்புவார். ஏன் அந்த வடையாகக் கூட கமலே நடித்தால் கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. //

:) :)

Anonymous said...

சிவராமனின் தசாவதாரம் விமரிசனம் நினைவுக்கு வருகிறது. குறிப்பிட்ட ஓரிரு வேடங்களைத் தவிர மற்றவை கமலின் Masturbation என்பார். சத்தியமான வார்த்தை. பல சாதாரண காமெடி படங்களில் கூட தனது மேதாவித் தனத்தை நிரூபிக்க வலிந்து காட்சிகளை , வசனங்களைத் திணிப்பது அவரது இயல்பு. ஆனால் இந்த லிஸ்டில் அன்பே சிவம், குணாவை சேர்க்க மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அதீதமான, இயல்பை மீறிய காதலை சுமக்கும் ஒருவனது பாத்திரமாக இருப்பதால் அந்த அழகுணர்வுடன் கூடிய மனப் பிறழ்வு நியாயமானதாகவே படுகிறது. அன்பே சிவத்தில் எந்த இடத்திலும் உடற்குறை என்பது பிரதானப்படுத்தப் படவில்லையே..!!! மாறாக ஒரு மனிதனின் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்கான சரியான உத்தியாகவே உள்ளது. - செல்வா

Unknown said...

அருமையான பதிவு!!!

rajasundararajan said...

முன்னுரையை வேடிக்கையாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அதில் பொதிந்திருக்கும் வேதனை...! என்ன செய்வது, மனச்சாட்சி இல்லாத புகழ்நாடிப் போலிகளாக இருக்கிறார்கள் தமிழ்த்திரைக் கூலிப்பணியாளர்கள்!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'மாற்றனை' ஒரு பிடி பிடி துள்ளிர்கள்.
எனக்குத் தெரிந்து, இயக்குனர் நன்றாகத்தான் கதை சொல்ல ஆரம்பித்திருப்பார். 'so many cook spoil the food ' என்பது போல தயாரிப்பாளருக்காக கொஞ்சம், நாயகனுக்காக கொஞ்சம்,ஒளிப்பதிவாலருக்காக கொஞ்சம் என்று காம்பரமைஸ் செய்து எடுப்பதால் இப்படி ஆகிவிடுகிறதோ என்னவோ....?

kkpsk said...

// (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நிறுத்தி்க் கொள்கிறேன்). //
ROTFL.....hahahahhahha ..ulti..

pranavviswa said...

எடிட்டர் ஆண்டனியின் உழைப்பு என பாராட்டியிருப்பதால் நண்பர்களுக்கு,
. திரைப்படத்தில் பாராட்டத்தக்க எல்லா தொழில் நுட்பத்தையும் நம்மால் பெரும்பாலும் அலசிவிடமுடியும். ஆனால் படத்தொகுப்பு சற்று கடினமே. ஏனெனில் மற்ற எல்லா துறையும் விசுவல்களாக நமக்கு தெரிகின்றன.படத்தொகுப்பு நம்மால் நுட்பமாக உணரமுடிகிற ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் அதிர்வுகளால் கதையை நகர்த்திக்கொண்டுபோகிரது. மாற்றானின் உச்சகட்ட கொடுமை எடிட்டர் ஆண்டனியின் எடிட்டிங். ஒரு சீன் முடியும்போது அடுத்த சீனை ஆரம்பிக்கும்போது அதன் மூடை ஆடியன்ஸிற்கு ஸ்த்ரப்படுத்திவிட்டு பின் அடுத்தகாட்சிக்கு நகருவார்கள்.இது கதை சொல்லலில் முக்கிய பணி.. நாம் கதை சொல்லும்போது கூட அதை உள்ளுணர்வுகொண்டோ, எதிராளியின் முகம்கொண்டோ குறைத்து நீட்டி முடிவில் சில அழகு பொய்களை சேர்த்து சுவாரஸ்யத்தை கூட்டிவிடுவோம்.
ஆனால் கேவிஆனந்த் ஒரு குப்பையை கொட்டுகிறார். அதனை முடிந்தவரை நிதானமாக கையாளாமல் கிளறிவிட்டு பார்வையாளர்களை மேலும் வெறுப்பேற்றிவிடுகிறார்.என்ன யாவரின் கோபமும் ஆனந்தின் பக்கமே திரும்பிவிடுகிறது. ஆண்டனியின் வேலையில் எப்போதும் படத்தின் தொனி, மூட் ஆகியவற்றில் ஒரு குறுக்கீடு இருக்கும். இதில் உச்சம். வேகம் மட்டுமே இருக்கும். ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் இடம்பெறும் பாடலில் நியூயார்க் நகரம் பாடலை கண்மூடி கேட்டுபாருங்கள். அதன் மென் தன்மையை,ஜீவனை எங்கோ கொண்டு சென்றிருக்கலாம். வேகம் படத்தின் கதை தீர்மானிக்கவேண்டும்.பாணி கதையமைப்பு தீர்மானிக்கவேண்டும். ஆரண்யகாண்டம் அதற்கு நல்ல உதாரணம்.

Unknown said...

Hello Suresh Kannen,

Good comments ,watch this movie "Stuck on You(2003),I like this movie very much.
YUVA

Shareef S M A said...

//ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகான டிராமாவை உருவாக்கியிருக்கலாம்? இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்தால்?....//

Remembered the film Dead Ringers directed by David Cronenberg. Its about two brothers born as Siamese twins but separated. Excellent drama..

Nice post by the way...