Friday, March 04, 2011

இரவல் அடையாளம்

 
ஈரான் நாட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர் மொசான் மெக்மல்பப் (Mohsen Makhmalbaf).

'நான்தான் அந்த இயக்குநர்' என்று போலியாக இவர் பெயரை உபயோகித்துக் கொண்டு ஒரு பணக்கார குடும்பத்தினரிடம் பழகினார் ஒரு நபர். அவர்களின் வீட்டை படப்பிடிப்பிற்காக பயன்படுத்துவதாகவும் அங்குள்ள குடும்ப உறுப்பினர்களையும் தனது திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறியிருக்கிறார். செலவுக்காக சிறிது பணத்தையும் பெற்றிருக்கிறார். சில நாட்கள் கழித்துத்தான் இவர் போலி என்பது அந்தக் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. காவல் துறையில் புகார் அளிக்க, வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த உணமைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரானின் இன்னொரு புகழ்பெற்ற இயக்குநரான 'அப்பாஸ் கிராஸ்தமி' உருவாக்கிய திரைப்படம் 'CLOSE -UP'. (பெர்ஷிய மொழியில் Nema-ye Nazdik)

சிறு குற்றமான இந்த ஏமாற்று வழக்கை திரைப்படமாக்குமளவிற்கு என்ன சுவாரசியமிருக்க முடியும் என்று சிலருக்குத் தோன்றலாம். இந்த வழக்கு விசாரணை உண்மையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிறப்பு அனுமதி பெற்று படமாக்கி அதை அப்படியே படத்தில் இணைத்திருக்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி. இதற்காக அவர் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் அனுமதிக்காக அணுகும் போது அவரும் இதையே கேட்கிறார். 'இது கொலை வழக்கு கூட அல்ல. எதற்கு இதை திரைப்படமாக பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்'.

மேற்பார்வைக்கு அசுவாரசியமாகத் தோன்றும் இந்த விஷயத்தை தனது அபாரமான கலைத்திறனால் மிகுந்த சுவாரசியமானதொரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கு விசாரணைக் காட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளும் இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் அதே போன்று நிகழத்தப்பட்டன. அது மட்டுமல்ல. உண்மையான சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் அதே பாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள், இயக்குநர்  மொசான் மெக்மல்பப் உட்பட.

அசலும்
படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஒரேயொரு இசைத் துணுக்கைத் தவிர படத்தில் வேறு பின்னணி இசையே கிடையாது. இறுதிக் காட்சியில் போலியாக நடித்த பாத்திரமும் உண்மையான மொசான் மெக்மல்பப்-ம் சந்திக்கும் போது அதை ரீ-டேக் செய்தால் சுவாரசியப்படாது என்பதற்காக, பத்திரிகையாளர்கள் தொலைவிலிருந்து படமெடுப்பதைப் போன்ற பாணியிலேயே படமெடுத்திருக்கிறார் இயக்குநர்.  இதில் மொசான் மெக்மல்பப் வைத்திருந்த மைக் சரியாக பொருத்தப்பட்டிருக்காத காரணத்தினால் சுற்றுப்புற ஒலியும் வசனமும் விட்டுவிட்டு கேட்க, அதுவும் அந்த பிழைகளோடு அப்படியே திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது இதற்கொரு அசலான தன்மையைத் தருகிறது. 

நகலும்
ஓர் உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான மிகக் கச்சிதமான உதாரணம் CLOSE-UP. படத்தின் தலைப்பிற்கேற்ப பல காட்சிகள் அண்மைக் கோணங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நீதி விசாரணை செய்யப்படும் காட்சிக் கோர்வைகள் பெரும்பாலும் அண்மைக் கோணம்தான்.

சமூகத்திலுள்ள தனிமனிதனின் அடையாளச் சிக்கலைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. ஒவ்வொரு மனிதனுமே அக்குழுவிலிருந்து தான் தனித்து அடையாளம் காணப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும்  என விரும்புகிறான். பல்வேறு திறமைகளினாலும் ஞானங்களினாலும் சமயத்தில் கீழ்மைகளினாலும் சமூகத்தினால் பரவலாக அடையாளங் காணப்படும் தகுதியை சிலரே அடைகின்றனர். அது இயலாதவர்கள், அடைந்தவர்களின் பிம்பத்தின் மீது ஏறி நிற்பதிலாவது இந்த அடையாளத்தை அடைய முடியுமா என்று பரிதவிக்கிறார்கள். இதுவே ரசிக குழுக்களாக, தொண்டர் படைகளாக  ஆறுதல் வடிகால்களாக உருமாறுகின்றன.

பிரபல இயக்குநரின் பெயரை போலியாக பயன்படுத்திக் கொண்ட நபரான அலி ஸப்ஜியான் (Ali Sabzian) நீதி விசாரணையின் போது தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுப்பதில்லை. அவர் நிதானமாக தரும் வாக்குமூலம் இத்திரைப்படத்தின் சிறப்பான காட்சிகளுள் ஒன்று.

'மிகுந்த வறுமையில் வாடும் என்னை இச்சமூகம் மதிக்கவேயில்லை. திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்ட எனக்கு, The Cyclist திரைப்படத்தில் அதன் இயக்குநரான மொசான் மெக்மல்பப் விளிம்புநிலை மக்களின் அவலமான வாழ்க்கையை யதார்ததமாக காட்டியதின் காரணமாக அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அவராகவே மனதிற்குள் என்னை உருவகித்துக் கொண்டேன். ஒரு நிலையில் என்னுடைய சுய அடையாளமே மறந்து போய் 'நானே அந்த இயக்குநர்' என்று நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். அது மிகுந்த தன்னம்பிக்கையைத் தந்தது. அவர் பெயருடன் புழங்கும் போது மக்கள் என் ஒவ்வொரு சொல்லையும் மதித்துக் கேட்டார்கள், மரியாதை செலுத்தினார்கள். இரவு வீடு திரும்பும் போது ஏழ்மையான சூழ்நிலையைக் காணும் போது எல்லாமே வடிந்து விடும்'.

இந்த அங்கீகாரத்திற்காகவே அந்தக் குடும்பத்தினருடன் பழகினேன். அங்கு எதையும் திருடும் நோக்கம் எனக்கு இல்லவே இல்லை'


ஈரான் போன்ற தேசங்களின் அடக்குமுறைகளைப் பற்றி நிறைய வாசித்திருக்கிறோம். ஆனால் இது வரும் நீதி விசாரணைக் காட்சி, இந்தியாவில் கூட காண இயலாத ஜனநாயகத்தன்மையுடன் உள்ளது. வாதி, பிரதிவாதிகளுக்கிடையே பகடையாட்டம் நிகழ்த்தும் வழக்குரைஞர்கள் எவரும் குறுக்கேயில்லை. நீதிபதியே, பாதிக்கப்பட்டவர்களிடமும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமும் நேரடியாக விசாரிக்கிறார். இது முதன்முறையாக செய்யப்படும் குற்றம் என்பதற்காகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர் குறைந்த வயதுடையவர் என்பதற்காகவும் தன்னுடைய தவறை உணர்ந்து விட்டார் என்பதற்காகவும் நீங்கள் ஏன் அவரை மன்னிக்கக்கூடாது?' என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கிறார்.

தான் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் திருப்தி தந்தது CLOSEUP தான் என்று (டிவிடியில் உள்ள) நேர்காணலில் குறிப்பிடுகிறார் இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி.

எவ்வித ரெடிமேட் மசாலாக்களும் சேர்க்காமல் உண்மைச் சம்பவத்தை யதார்த்தமாகக் கொண்ட தமிழ்த் திரைப்படம் ஏதேனும் வந்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். ஏன் உலகத் திரைப்படங்களைப் பற்றி பேசும் போது தமிழ்த் திரைப்படங்களையும் இணைத்து கிண்டலடிக்கின்றீர்கள் என்று சில நண்பர்கள் அவ்வப்போது கேட்கிறார்கள். ஆனால் இவர்களேதான் உலக சினிமா எனும் போது அதில் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ பங்கே இல்லையா என்றும் கேட்கிறார்கள்.

விசு இயக்கத்தில், பிரபு இரட்டை வேடத்தில் நடித்து 'நான் தான் அந்த திரைப்பட இயக்குநர்' என்று புளுகித் திரியும் நகைச்சுவைத் (?) திரைப்படமொன்று மங்கலாக நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் அப்பாஸ் கிராஸ்தமிக்கு முன்னரே, நாம் இந்தக் கதையமைப்பை கையாண்டு விட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளலாம்.
suresh kannan

6 comments:

Kaarthik said...

பிரபு நடித்த அந்தப் படம் காவலன் அவன் கோவலன்.

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13

உலக சினிமா ரசிகன் said...

இப்படம் 6-3-2011 ஞாயிறு அன்று எங்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது.இடம் பெர்க்ஸ் ஸ்கூல் மினி தியேட்டர்.அனுமதி இலவசம்.அனைவரும் வரலாம்

Anonymous said...

Have you had chance to watch a Korean movie called 'Oasis' on Lumière movies channel ?. Those who've Cosmo pack on Tata Sky enjoy this gem.

It is an oxymoron to mention Tamil cinema and world cinema in the same sentence.

Ashok D said...

நுனுக்கமான கச்சிதமான நெருக்கமான... பார்வை.

கடைசியில் குசும்பு :)

சேக்காளி said...

//விசு இயக்கத்தில், பிரபு இரட்டை வேடத்தில் நடித்து 'நான் தான் அந்த திரைப்பட இயக்குநர்' என்று புளுகித் திரியும் நகைச்சுவைத் (?) திரைப்படமொன்று மங்கலாக நினைவுக்கு வருகிறது//
அப்டின்னா காப்புரிமை சட்டப்படி நிஜத்தில் போலி இயக்குநராய் நடித்த நிஜ இளைஞன் மீது வழக்கு தொடுக்கலாமா?