Saturday, February 26, 2011

நடுநிசி நாய்களின் ஆழ்மன குரைப்புகள்


 ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய அகத்தில் அந்தரங்கமான ஓர் உலகமுண்டு. (என்னைப் பொறுத்த வரை அந்தரங்கம் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு கற்பிதம். மற்றவர்கள் அறியாதது என கருதிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் அந்தரங்கமான ரகசியம் அனைத்தையும் பொதுவான வகைமைகளுக்குள் அடைத்துவிடலாம்). அந்த இருட்டான உலகத்தின் மிருகங்கள், சமூகம் கட்டமைத்திருக்கும் விதிகள் மற்றும் போதிக்கப்பட்டிருக்கும் நீதிகள் காரணமாக பதுங்கியிருக்கின்றன. சுயஒழுக்கத்தின் பழக்கத்தின் காரணமாக வெகு சிலரால் அந்த மிருகங்களை கட்டுப்படுத்த முடிகிறது. மாறாக சிலர் அந்த மிருகங்களின் கட்டுப்பாட்டிற்குள் துரதிருஷ்டமாக வந்துவிட்டால் பிரச்சினை ஆரம்பம். இவர்கள் குற்றவாளிகள் எனும் நோக்கில் அல்லாமல் நோயாளிகள் என்ற நோக்கில்தான் அணுகப்பட வேண்டும். 

கெளதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்'  திரைப்படம் இப்படியொரு நோயாளியை மையப்படுத்தி இயங்குகிறது.

தாயில்லாச் சிறுவன் சமர், வீட்டிலியே கூட்டுக்கலவியில் ஈடுபடும், ஒருபால் உறவில் ஈடுபடும் தந்தையுடன் பாதுகாப்பாற்ற வக்கிரமான சூழலில் வளர்கிறான். இவனைக் கண்டு பரிதாபப்படும் பக்கத்து வீட்டுக்காரரான நடுத்தர வயதுப்பெண் மீனாட்சி, அவனின் தந்தையை காவல்துறையில் பிடித்துக் கொடுக்க, அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாகும் சிறுவன் சமரை, வீரா என பெயர் மாற்றி வளர்க்கிறார் மீனாட்சி. கட்டற்ற பாலுறவு மற்றும்  வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட சூழலில் வளர்ந்த சமர் என்கிற வீரா, உளப்பாதிப்பு காரணமாக ஒருநிலையில் மீனாட்சியின் மீது மையல் கொண்டு வன்கலவி கொள்கிறான். அவன் மீது கோபம் கொள்ளும் மீனாட்சி, ஒருவாறாக சமாதானமாகி, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதை வீராவிடம் தெரிவிக்கிறார். அவர் மீதுள்ள பொசசிவ்னஸ் காரணமாக அவரின் கணவரை கொலை செய்கிறான் வீரா. இதில் நிகழும் தீ விபத்தில் மீனாட்சி படுகாயமடைகிறார். பின்பு... இந்தச் சம்பவங்கள் காரணமாக வீராவிற்கு ஏற்படும் உளப்பாதிப்பின் விளைவான காட்சிகளோடு படம் நீள்கிறது.

வீராவாக, இத்திரைப்படத்தின் இயக்குநான கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த வீரபாகு. முதல்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கான தேர்ந்த நடிப்பு. தன்னுடைய வாக்குமூலத்தை தரும் காட்சிகளில் இவரது முகபாவங்களும் வசன உச்சரிப்புகளின் ஏற்ற இறக்கங்களும் பாராட்டத்தக்கது.  Multiple Personality Disorder ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் நடிப்பு (இது பார்வையாளர்களுக்கு வெளிப்படும் நேரத்தில்) அந்நியனை நினைவுப்படுத்துகிறது. இத்தனை துரித கண இடைவெளிகளுக்குள் இந்த நோயுள்ளவர்களின் ஆளுமைகள் மாறுவதில்லை என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக இருந்தாலும், பார்வையாளர்களின் எளிய புரிதலுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த மிகைநடிப்பை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். இதே போல் வீரா இளைஞனாக ஆரம்பக்காட்சிகளில் கொந்தப்பட்ட தலைமுடியுடன் வரும் தோற்றமும் எரிச்சலூட்டுகிறது.

மீனாட்சியாக பாடகி ஸ்வப்னா ஆப்ரஹாம். வீரா இவரை வன்கலவி செய்யும் காட்சியில் இவரது முகம் மாத்திரம் மிகுஅண்மைக் கோணக் காட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஐந்தாறு நிமிடங்களில் இவரது பல்வேறு பட்ட விதங்களில் மாறும் இவரது முகபாவங்கள் அருமை. இன்னொரு தோற்றத்தில் இவரது நடிப்பு கவரவோ பயமுறுத்தவோ இல்லை. ஆனால்  அந்த டிவிஸ்ட் சற்று எதிர்பாராதது. இந்த பாத்திரத்திற்கு முதலில் தபுவை அணுகியிருந்தார் இயக்குநர். (அவரே தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தது). ஆனால் ஸ்கிரிப்ட்டைக் கண்டு தயங்கிய தபு நடிக்க மறுத்துவிட்டாராம். ஒருவேளை தபு நடித்திருந்தால் அது இந்தப் படத்திற்கு இன்னமும் பலமாய் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தின் பரவலாக அறியப்பட்ட ஒரே தெரிந்த முகம் சமீரா ரெட்டி. படத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு இல்லையெனினும் தான் கடத்தப்பட்டதின் வலியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் தேவாவின் (இவரும் கெளதமின் உதவி இயக்குநர்) பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

()

இந்தப்படத்தின் பெரிய பலவீனம் வலுவான கதையோட்டத்தைக் கொண்டிருக்காததும், சுவாரசியமற்ற திரைக்கதையைக் கொண்டிருப்பதும் மற்ற சில சஸ்பென்ஸ் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதும். (பிரதானமாக ஹிட்ச்காக்கின் சைக்கோ). சில காட்சிக் கோர்வைகள் பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்களை' நினைவுப்படுத்துகிறது.

இங்கே இடைவெட்டாக பாரதிராஜாவின் திரைப்படத்தைப் பற்றி ஒருசில வரிகளாவது எழுதியாக வேண்டும். கிராமப்புறத் திரைப்படங்களை தன்னுடைய வெற்றியின் அடையாளமாகக் கொண்டு வெளிப்பட்ட ஓர் இயக்குநர் அதிலிருந்து முற்றிலும் விலகி வேறொரு களததை, உள்ளடக்கத்தைக் கொண்டு உருவாக்கின அந்த துணிச்சலான முயற்சி, எப்போதும் பாராட்டத்தக்கது. அதுவும் அந்தக் கால கட்டத்தில்.

சிகப்பு ரோஜாக்களுக்கும் நடுநிசி நாய்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவெனில் முன்னது போன்று நடுநிசி நாய்கள் 'ரெமாண்டிசிசைஸ்' செய்யப்படவில்லை. நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலும் அதன் பின்னதான காட்சிகளும் அதன் இருண்மையோடும் கட்டுப்பாடற்ற தன்மைகளோடும் அப்படியே வெளிப்பட்டிருக்கின்றன. 'உளப்பாதிப்பு'ள்ள பாத்திரம் என்பதற்காக அதன் மீது அனுதாபத்தையோ அல்லது அதீத எரிச்சலையோ பார்வையாளன் வெளிப்படுத்துமாறு  கொண்டிருக்கவில்லை. இந்த சமநிலையை இறுதிவரை இயக்குநர் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்காட்சியில் காவல் அதிகாரியுடன் சண்டையிடும் வீரா, 'நாயைப் போய் சுட்டிக் கொன்னுட்டியேடா' என்று கதறுகிறான். பார்வையாளர்களின் நோக்கில் கொடூரமானவாக அதுவரை சித்தரி்க்கப்படும் வீராவிடம், அன்பிற்கான அடையாளமும் ஒளிந்திருப்பதை போகிற போக்கில் ஒரு கீற்றாக இந்தக் காட்சி சொல்லிச் செல்கிறது.

இந்தச் சுமாரான படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இந்தப் படத்தின் ஹீரோவாக அவரையே சொல்லலாம். 'ஒரு நல்ல படத்தில் ஒளிப்பதிவு துருத்திக் கொண்டு தெரியக்கூடாது' என்பதெல்லாம் ஒருநிலையில் சரியே. ஆனால் நாம் ஒளிப்பதிவாளரின் கண்களின் மூலம்தான் சினிமா பார்க்கிறோம் என்கிற வகையிலும் காட்சிகளின் அழகியல் சார்ந்தும் ஒளிப்பதிவாளரின் தனித்துவமும் முக்கியமானதே. வீரா, தனது பள்ளித் தோழி சுகன்யாவை தன்னுடைய தோட்டத்தில் துரத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் காவல்துறைஅதிகாரி ஒருவர் சந்தேகத்துடன் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏரியல் ஷாட்டில் இரண்டையும்  பார்வையாளன் பார்த்துக் கொண்டிருக்கும் போது மழை பெய்யும் காட்சியை காமிரா பதிவு செய்திருக்கும் அழகும் துல்லியமும் பிரமிக்கத்தக்கது. இது போன்று பல காட்சிகளைக் குறிப்பிடலாம். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு வற்புறுத்துவதற்கான பிரதான காரணம் மனோஜின் அட்டகாசமான ஒளிப்பதிவு. சில காட்சிகள், உண்மை சம்பவங்கள் நிகழும் போது படமெடுக்கப்பட்ட வீடியோ போலவே டாக்குமெண்டரித்தனத்துடன் உள்ளது.

இன்னொரு காரணம், பின்னணி இசையை உபயோகிக்காத காரணத்தினால் அதை சமன் செய்ய முன்னமே திட்டமிடப்பட்ட பிரத்யேக ஒலிப்பதிவு. பின்னணி இசை இல்லை என்பதை உணரவே முடியாத அளவிற்கான ஒலிப்பதிவு. இந்தியாவிலேயே இதுதான் முதனமுறை என்று நினைக்கிறேன்.  பார்வையாளர்களின் செல்போன் சிணுங்கல்கள் கூட இடையூறு ஏற்படுத்துமளவிற்கு பல மெளனமான காட்சிகள் நகர்கின்றன.

பழைய கள்ளை புதிய தொழில்நுட்ப மொந்தையில் தந்திருந்தாலும் சிலவற்றை பட்டவர்த்தனமாக முன்வைத்தற்காக கெளதம் மேனனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே. குறிப்பாக சிறுவர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலுறவு அத்துமறீல் குறித்தது. மதூர் பண்டார்கரின் 'சாந்தினி பார்' திரைப்படத்தில் ரவுடிக்கு மகன் என்கிற காரணத்தினாலேயே சிறுவன் ஒருவனை காவல்துறை சிறுவர் சிறையில் தள்ளும். அங்குள்ள மூத்தவயதுள்ள சிறுவர்கள் ரவுடியின் மகனை வன்கலவி செய்துவிடுவார்கள். விடுதலையடைந்த பிறகும் அந்தச் சம்பவத்தினால் நேர்ந்த மன அழுத்தம் தாங்காமல் எங்கிருந்தோ சம்பாதித்த ஒரு துப்பாக்கியைக் கொண்டு அவர்களை அவன் கொன்றுவிடுவான். சமூக விரோதி என்று சமூகத்தால் கருதப்படுகிறவர்களின் ஆரம்பக் காரணங்களையும் இந்தச் சமூகமே வைத்திருக்கிறது.

நடுநிசி நாய்களில் கூட்டுக்கலவியில் ஈடுபடும், மகனுடன் வன்கலவியில் ஈடுபடும் அந்தத் தந்தையின் சிறுவயதை ஆராய்ந்தால் அவரும் இதுபோன்ற சிக்கலில் அப்போது மாட்டிக் கொண்டவராகவோ அல்லது வேறு உளப்பாதிப்பில் உள்ளவராகவோ இருக்கக்கூடிய சாத்தியமிருக்கிறது.

படத்தின் அபத்தமான இறுதிப்பகுதி டாக்குமெண்டரித்தனத்தோடு படம் பார்த்த ஒட்டுமொத்த மனநிலையை சிதறடித்துவிடுகிறது. இயக்குநர் இதை வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்.

()

இப்போது இந்தப்படம் குறித்து இணையத்தில் வெளிவந்த சில எதிர்வினைகளைப் பார்ப்போம்.

படம் மொக்கை என்கிற ரீதியில் வெளிவந்த பார்வைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிளிஷேவான கதை, பெரிதும் சுவாரசியமற்ற திரைக்கதை என்கிற ரீதியில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால் என்னைப் பொறுத்தவரை  பின்னணி இசை இல்லாதது மற்றும் இதுவரை அல்லாத ஒரு பிரச்சினையை இயக்குநர் கையாண்டது என்கிற வகையில் ஒரு புதிய முயற்சியாகவே  இத்திரைப்படத்தை அணுகலாம். சினிமாவை நேசிப்பவனாக இந்த முயற்சி எனக்கு பிடித்தேயிருந்தது. இணையத்தில் கிடைக்கும் தேசலான பிரிண்ட்டில் பார்த்துவிட்டு குற்றஞ்சாட்டுவது முறையல்ல. முன்னரே கூறியபடி திரையரங்கில் இதை பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன.

இன்னொரு குற்றச்சாட்டு மொண்ணைத்தனமானது. இத்திரைப்படம் தமிழ் கலாசாரத்தை, விழுமியங்களை சேதப்படுத்தியிருக்கிறது என்பதும், சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்வதை பொதுவெளியில் ஏன் பிரதானப்படுத்த வேண்டும் என்பதும்.

ஒரு கட்டமைக்கப்பட்ட சமூகம் எல்லாவிதமான நிறைகளையும் குறைகளையும்  புனிதங்களையும் வக்கிரங்களையும் கொண்டது. சமூகத்தின் இருண்மையான, அழுக்கான பகுதிகளை பொதுப்பரப்பில் வெளிச்சம் போட்டுக் காட்டுபவதே ஓர் உண்மையான கலைஞனின அடிப்படைப் பொறுப்பாக இருக்க முடியும். 'கற்பு கற்பு என்று கதைக்கறீர்களே இதுதானய்யா பொன்னகரம்' என்றெழுதினார் புதுமைப்பித்தன். எல்லா வக்கிரங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் சமூகம், இந்த நிர்வாண உண்மையை எதிர்கொள்ள முடியாமல் கண்கூசுகிறது, பதட்டமடைகிறது.

இதில் சர்ச்சைக்குரியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் காட்சிகளை இயக்குநர் மிக subtle  ஆக நாகரிகமாக கையாண்டிருக்கிறார். பார்வையாளனுக்கு ஆபாசக் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கில்லை என்பது காட்சிகளை கையாண்ட விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஒருவித கையாலாகாத குற்றவுணர்வு நிலையில்தான் ஓர் ஆரோக்கிய மனநிலையில் உள்ள பார்வையாளன் அந்தக் காட்சிகளை எதிர்கொள்கிறான்.

ஆனால், நாயகியின் கையைத் தொட்டதுமே அவள் புணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றதான முகபாவத்தையும், முத்தமிட்டுக் கொள்வதை இருபூக்கள் வந்து மறைப்பதையுமே பல ஆண்டுகள் கண்டு வந்திருந்த தமிழ்ச்சினிமா ரசிகனின் பொதுப்புத்தி, அதே மொண்ணைத்தனத்தோடு இயக்குநர் காட்டியிராததையும் தனது வக்கிரததால் நிரப்பிக் கொண்டு களித்து விட்டு பிறகு போலிப் பாசாங்காக கூக்குரலிடுகிறது. நேரடி நிர்வாணத்தைவிட பார்வையாளன் இட்டு நிரப்பக்கூடிய சாத்தியத்துடன் கிளர்ச்சியை ஏற்படுத்த செயற்கையாக கட்டமைக்கப்படும் அபத்தங்கள் ஆபத்தானவை. பாலியல் வறட்சியில் அவதிப்படும் தமிழ் சமூகத்தில் இந்த ஆபத்து எரிகிற நெருப்பில் எண்ணையாய் மாறி கற்பழிப்புகளாகவும் சிறுமிகள்,குழந்தைகள் மீதான வன்கலவிகளாவும் நீள்கின்றன. ஆனால் இந்த நோய்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கான முயற்சிகளைக் கண்டு இந்தச் சமூகமே பதற்றப்படுவது நகைமுரண்.

இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களால், இத்திரைப்படம் ஆபாசமானதோ என்று தயங்கி நிற்பவர்களை, முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களை, தயங்காமல் சென்று பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சிக்கலான கதையமைப்புகளை, காட்சிகளைக் கொண்ட சில வெளிநாட்டு திரைப்பட டிவிடிகளில் 'FOR MATURE AUDIENCES ONLY' என்று போட்டிருப்பார்கள். அதனுடைய முழு அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது. கெளதம் மேனன் இதன் விளம்பரங்களில் 'பலவீனமானவர்களுக்கு அல்ல' என்று போட்டிருப்பதற்குப் பதிலாக 'தயிர்வடைவாதிகளுக்கு அல்ல' என்று போட்டிருக்கலாம்.

suresh kannan

Saturday, February 19, 2011

இன்றிரவு 'குட்டி' திரைப்படம்


 இன்று 'லோக் சபா' சானலில் ஜானகி விஸ்வநாதன் இயக்கிய 'குட்டி' திரைப்படம் (2001) ஒளிபரப்பாகிறது. சிவசங்கரியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு இசை இளையராஜா.

குழந்தைத் தொழிலாளர்களின் துன்பங்களையும் அவர்கள் மீது செலுத்தப்படும் பாலுறவு சார்ந்த அத்துமீறல்களையும் பற்றி உரையாடும் இத்திரைப்படத்தில் நடித்த ஸ்வேதாவிற்கு 'சிறந்த குழந்தை நடிகருக்கான' தேசிய விருது கிடைத்தது. இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் 'நடுவர் குழு' வழங்கிய சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். 

ஒளிபரப்பு நேரம்: (இந்திய நேரப்படி) 19.02.2011 இரவு 09.00 மணி
                                     மறுஒளிபரப்பு 20.02.2011 மதியம் 02.00 மணி

suresh kannan

Wednesday, February 09, 2011

கிழக்கு நூல்கள் - மிகக் குறைந்த விலையில்



STOCK CLEARANCE SALE  - எனும் வகையில் கிழக்குப் பதிப்பகம் மிகக் குறைந்த விலையில் தங்களின் நூல்களை விற்கும் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். பொதுநலன் கருதி நண்பர்களுக்காக அதை இங்கு பகிர விரும்புகிறேன்.

மயிலாப்பூர் குளம் எதிரே அமைந்திருந்த கிழக்கின் தற்காலிக கடைக்கு நேற்று சென்றிருந்தேன். ரூ.250·- மதிப்புள்ள நூல்கள் கூட ரூ.25, ரூ.30/- க்குக் கிடைக்கின்றன. ரூ.25·- மதிப்புள்ள சிறு அறிமுக நூல்கள் வெறும் ரூ.5/-க்கு கிடைக்கின்றன.  நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசளிக்க மிகவும் ஏற்றது. வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்ற நூல்களில் எனக்கு அதிக விருப்பமில்லை. நான் வாங்க விரும்பியது, கிழக்கின் இலக்கிய நூல்கள்.

அவ்வகையில் நான் வாங்கிய பல புத்தகங்களில் முக்கியமான சிலவற்றின்  விவரங்கள்.

யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் தொகுப்பு - ரூ. 75. (அசல் விலை ரூ.350)
அரசூர் வம்சம் - இரா. முருகன் - நாவல் - ரூ.25. (அசல் விலை ரூ.175)
சுப்ரமண்ய ராஜூ கதைகள் தொகுப்பு - ரூ.50 (அசல் விலை ரூ.200)
இரவுக்கு முன்பு வருவது மாலை  - ஆதவன் - ரூ.20  (அசல் விலை ரூ.120)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் சுயசரிதை - ரூ.30 (அசல் விலை ரூ.250)
எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - ரூ.40 (அசல் விலை ரூ.150)

இது போல் இந்திரா பார்த்தசாரதியின் சில நாவல்கள், குறிப்பாக அசோகமித்திரனின் மிக முக்கியமான நாவலான 'கரைந்த நிழல்கள்' போன்றவை ரூ.15-க்கும் ரூ.20-க்கும் கிடைக்கின்றன.ஹாய் மதன் பதில்கள், மதியின் கார்ட்டூன்கள் (அடடே!) போன்றவையும் குறைந்த விலையில். சில நூல்கள் என்னிடம் ஏற்கெனவே இருந்தாலும் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்கென்றே அவற்றை அதிக காப்பிகள் வாங்கினேன். இது தவிர, பொதுத் தலைப்பில் சில நல்ல நூல்கள், பா.ராகவனின் அரசியல் புத்தகங்கள் போன்றவை குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. அட்டைகளின், காகிதங்களின் நிறம் மங்கியுள்ளவை தவிர, நூல்களில் கண்டுபிடிக்குமளவிற்கு பெரிதாக சேதாரமில்லை. சில புத்தகங்கள் புத்தம் புதிதாக உள்ளன.

கடந்த சனி, ஞாயிறு அன்று பல வாசகர்கள் வந்திருந்து நூற்களை அள்ளிச் சென்றதாக விற்பனையாளர் தெரிவித்தார். அசோகமித்திரனின் 'மானசரோவர்' நாவல் அவரது மேஜையின் பின்புறமிருந்தது. விருப்பத்துடன் கேட்டேன். யாரோ சொல்லி வைத்திருக்கிறார்களாம். அன்புடன் மறுத்து விட்டார். அது போல நான் எதிர்பார்த்து சென்றிருந்த, ஆதவன் கதைகளின் தொகுப்பு, அசோக மித்திரனின் கட்டுரைகள் தொகுப்பு போன்றவையும் இல்லை.

விருப்பமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இந்தத் திட்டம் பிப் 13-ம் தேதி வரையே உள்ளதாக தெரிகிறது.

 suresh kannan

Wednesday, February 02, 2011

வன்மத்தின் ஆடுகளம்


வெற்றிமாறனின் முதல்படத்தை பற்றி எழுத ஆரம்பிக்கும் போது பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றிருந்தேன். இப்போது நான் அவருக்கு கொடுக்க விரும்புவது இரண்டாவது பூச்செண்டு.

சேவற் சண்டைகளில் தொடர்ந்து ஜெயித்து பெயரையும் புகழையும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் 'பேட்டைக்காரன்' என்ற முதியவர், தன்னுடய சீடனொருவன் வெற்றியில் தன்னை முந்தி வருவதை பொறுக்க முடியாமல் மெளன வன்மத்துடன் அவனைப் பழிவாங்க நினைப்பதுதான் இப்படத்தின் மையம். தாய் முலையை தேடியலையும் கைக்குழந்தை போல் தமிழ்சினிமாவும் 'காதல்' என்கிற காம்பை இன்னும் விடாமல் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படத்திலும் ஒரு யதார்த்தமல்லாத காதல் ஊறுகாய்.

தமிழ்ச்சினிமாவில் சேவற்சண்டைக்காட்சிகள் இதற்கு முன் சில குறிப்பிட்ட விநாடிகளில் காட்டப்பட்டிருந்தாலும் , அதன் விவரணைகளோடு இதில் முதன்முறையாக காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்சார் பயத்தின் காரணமாக கிராஃபிக்ஸ் சேவல்கள் பிளாஸ்டிக் ஆவேசத்துடன் பாய்வதான செயற்கை பாவனை சகிக்கவில்லை. குழந்தைகள் பள்ளி ஒன்றில் அவர்களின் கண்ணெதிரே சேவற்சண்டையை நடத்திக் காண்பித்தது குறித்து புகைப்படத்துடன் ஆட்சேபித்திருந்து ஆங்கில நாளிதழ் ஒன்று. யதார்த்தத்தில் குழந்தைகளே நேரில் காண முடிகிற ஒன்றை திரையில் நிகழ்த்திக் காட்ட முடியாத சென்சார் விதிகளின் அபத்தங்களில் இதுவுமொன்று. 'வாடிவாசல்' எனும் குறுநாவலில் மாடுபிடிப்பதற்கான போட்டியின் உலகை வாசகர்களிடம் அற்புதமாக எழுப்பிக் காட்டினார் சி.சு.செல்லப்பா. இதில் அந்தளவிற்கான நுணுக்கமான விவரங்களை காட்டாவிட்டாலும் இருப்பதை கொண்டு திறமையாக நிரப்பியிருக்கிறார் வெற்றிமாறன். அதிலும் சேவற்சண்டைப் போட்டியின் சூழலும், கட்அவுட்களில் மன்னர் உடையுடன் தோன்றும் மதுரையின் பிரத்யேக அடையாளங்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் இன்னமும் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்ப்பது அபத்தமானது. முந்தைய காலங்களில் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருந்த மன்னர்களும், மேல்தட்டு மக்களும் பொழுதைப் போக்குவதற்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே, இந்த சேவற் சண்டைகளும், மாடுபிடி விளையாட்டுக்களும். சாராயம் செலுத்தப்பட்டு செயற்கை முரட்டுத்தனத்தோடு சீறுகிற காளையை பத்திருபது பேர் வாலைப்பிடித்து இழுத்து நிறுத்துவதில் என்ன வீரம் இருக்கிறதென்று தெரியவில்லை. இரண்டு மனிதர்கள் குத்திக் கொள்வதை சந்தோஷமாக பார்க்கிற அதே ஆழ்மனது வன்முறை விருப்பமே இவைகளில் வெளிப்படுகிறது.

ஆனால் இதில் சேவற்சண்டை என்பது ஒரு குறியீடே (ஆரம்பிச்சுட்டாம்பா). பேட்டைக்காரன் பின்னர் தனது இரு சிஷ்யர்களையும் ஆக்ரோஷமாக மோதவிடும் சூழலை ஆரம்ப சூட்சுமமாக உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்காக இருவரும் கிளைமாக்ஸில் சேவல்கள் போலவே எகிறி அடித்துக் கொள்ளும் காட்சிகளெல்லாம் ஓவர்.

இந்தப்படத்தின் பெரிய பலம், ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். 80-களின் மலையாளத் திரைப்படங்களிலிரு்நது ஒரு பாத்திரத்தை பிய்த்து எடுத்து வந்து இங்கு நட்டாற் போலிருக்கிறது. மிகையல்லாத இயல்பான நடிப்பு. குறிப்பாக, கருப்பு அவரது மனைவிக்கு தங்க வளையல் வாங்கித் தரும் காட்சியில், முகம் முழுக்க வன்மத்தோடு 'நீ யாருடா என் பொண்டாட்டிக்கு வளையல் வாங்கித் தர்றதுக்கு, வெளில போடா' எனும் காட்சியில் இவரது முகபாவமும் உடல்மொழியும் அற்புதம். கருப்பு மறைமுகமாக வாங்க  விரும்பும் சேவலை குரூர ஆவேசத்துடன் சுவற்றில் மோதி சாகடிக்கும் இன்னொரு இடம். ராதாரவியின் குரல் சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் இவருக்கு பொருந்தியிருக்கிறது.

இந்த பாத்திரத்திற்காக வெற்றிமாறன் இவரை அணுகிய போது 'என்னை நடிக்க வைப்பது ரொம்பவும் கஷ்டம்' என்று எச்சரித்தாராம். 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று களத்தில் இறங்கிய இயக்குநர், உண்மையிலேயே மிகவும் கஷ்டப்பட்டதாக நேர்காணலில் கூறியிருந்தார். அந்த உழைப்பு வீண் போகவில்லை. படத்தின் நிறமே ஒரு புதிய தொனியில் தெரிவதற்கு பிரதான காரணமே கவிஞர்தான்.

தனுஷ் - இயக்குநரிடம் தன்னை இப்படி முழுமையாக ஒப்படைத்து விட்ட இந்த நடிகனைப் பார்க்கவே அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. நான்கைந்து பேரை அடித்து வீழ்த்தும் காட்சிகள்தான் சற்று காமெடியாக இருக்கிறதே ஒழிய, சில நுட்பமான முகபாவங்களை காட்டுவதில் ஜெயிக்கிறார். தாயின் தொணதொணப்பிற்கு இவர் காட்டும் முரட்டுத்தனமான எதிர்வினை யதார்த்தம். 'கொண்டே போடுவேன்... என்று தாயைச் சொல்லலாமா என்று ஒரு விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று போலியாக கட்டமைக்கப்பட்ட உலகத்தைக் கண்டு பழகிய நமக்கு, யதார்த்த உண்மையை காண்பதில் சங்கடமாக இருப்பதை உணர முடிகிறது.

அவர் லுங்கியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஆடும் காட்சியை மிக நெருக்கமாக உணர்ந்தேன். வடசென்னைவாசியான நான் ஏறக்குறைய தினமும் சாவு ஊர்வலத்தில் இப்படி ஆடுபவர்களை பார்த்துவிடுவேன். அதிலும் இந்த சாவு மேளத்தின் இசை, ராஜநாகத்தின் விஷத்திற்கு ஒப்பானது. கேட்ட மாத்திரத்திலேயே அந்த இசை உங்கள் உடலிலும் மனதிலும் உடனடியாக பரவி வியாபித்து விடும். குறைந்தபட்சம் உடம்பை லேசாக அசைக்காமல் கூட உங்களால் இருக்க முடியாது. தனுஷ் அப்படி ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு பாடல் காட்சியில்.

பேட்டைக்காரனின் இன்னொரு சிஷ்யராக வரும் கிஷோர், அபத்தமான இரவல் தலைமுடியையும் குரலையும் மீறி சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை அவருடைய இயல்பான தோற்றம் மற்றும் குரலுடனேயே நடிக்க வைத்திருக்கலாம். (மேலேயுள்ள ஆரம்பக்கட்ட புகைப்படத்தில் கிஷோர் இயல்பான தோற்றத்தில் இருப்பதைக் கவனிக்கலாம்). இயக்குநர் ஏன் இந்த மாற்றத்தை செய்தார் எனத் தெரியவில்லை. பேட்டைக்காரனின் மனைவியாக வரும் மீனாளும் இயல்பாக நடித்திருந்தார்.

சென்னையில் முன்பு போர்ச்சுகீசுத் தெருவிலும் சேவியர் தெருவிலும் இப்போது பெரம்பூர் பேரக்ஸ் அருகிலும் நான் வேடிக்கை பார்த்த ஆங்கிலோ - இந்தியன் குடும்ப சூழலை திரையில் கொண்டு வருவதில் ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்கிறார் வெற்றிமாறன். விசித்திரவண்ணத் தலைமுடிகளுடன் செயின் அணிந்து கொண்டு சூயிங்கம் மெல்லும் அலட்சிய வாய் இளைஞர்கள் பேசும் ஆங்கிலத்தை வியந்து பார்த்திருக்கிறேன். அதிகம் நெருங்கிப் பழகாவிட்டாலும் பழகினவரைக்கும் இனிமையானவர்கள். ஜீஸ் ஜீஸ் என்பார்கள் அடிக்கடி. ஆனால் இவர்கள் கூட்டம் கூட்டமாகத்தான் வசிப்பார்கள். ஒற்றையான ஆங்கிலோ - இந்தியக் குடும்பத்தை காண்பது அரிது. இதில் நாயகி இருக்கும் ஒற்றைக்குடும்பம் - சர்ச் காட்சிகள் தவிர - மட்டுமே காட்டப்படுவது முரண்.

ஆங்கிலோ - இந்தியப் பெண்ணிற்கும் கருப்புவிற்கும் நிகழும் காதலில் யதார்த்தமேயில்லை. இன்னொருவனிடமிருந்து தப்பிக்க 'இவனைக் காதலிக்கிறேன்' என்று அவள் பொய் சொல்வதிலாவது துளி லாஜிக்காவது இருக்கிறது. பின்பு அவளே முன்வந்து கருப்புவின் காதலை ஏற்றுக் கொள்வது அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. விளிம்புநிலை இளைஞன் ஒருவனை வெளிநாட்டு வாய்ப்புள்ள ஓர் ஆங்கிலோ - இந்தியப் பெண் காதலிப்பது யதார்த்ததிற்கு முரணாக உள்ளது.

இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாய் கவர்ந்தது பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அதனதன் நிலைகளில் இருந்து பெரிதும் விலகுவதில்லை. பரம்பரை பரம்பரையாய் சேவற்சண்டை நிகழ்த்தும் வழியில் வந்த இன்ஸ்பெக்டருக்கு (நரேன்)  பேட்டைக்காரனை ஒரு முறையாவது ஜெயிப்பதுதான் லட்சியமாக இருக்கிறது. அவரின் பதவியைப் பயன்படுத்தி எளிதாக பேட்டைக்காரனை ஆரம்பத்திலேயே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் விளையாட்டிலுள்ள அடிப்படை அறத்தை அவர் மீற முயற்சிப்பதில்லை. ஆனால் நிலைமை கைமீறி விடுமோ என்கிற இறுதிப் பதட்டத்தில்தான் சாம, பேத, தான, தண்ட முறையை கையில் எடுக்கிறார்.

இன்னொருபுறம் பேட்டைக்காரன், தன்னுடைய புகழை வைத்து அதிகம் சம்பாதிக்க நினைப்பதில்லை. அந்தப் புகழின் பெருமையே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் தன்னிடம் வித்தை கற்றுக் கொண்டவனே தன்னைத் தாண்டிப் போவதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. அது தரும் வன்மத்திலும் மனப்புழுக்கத்திலும் அவனைப் பழிவாங்க முடிவெடுக்கிறார்.

பேட்டைக்காரனின் சிஷயர்களில் ஒருவனான துரையின் (கிஷோர்) பாத்திரம் மாத்திரம் சற்று தெளிவில்லாமல் இருந்தது. இன்ஸ்பெக்டரின் சாதிக்காரனான இவன், தன்னை அவர் ஒரு முறை சிறையிலிருந்து வெளியில் வந்து கொண்ட காரணத்திற்காக நன்றி பாராட்ட, பேட்டைக்காரனுக்கு துரோகம் செய்வான் என்று எதிர்பார்க்கும் போது, பெரியவர் அயூப் விபத்தில் சாகடிக்கப்பட்டவுடன், இன்ஸபெக்டர் மீது பாய்கிறான். அதே சமயம், பேட்டைக்காரனுக்கு எதிராக வெற்றி பெறும் கருப்புவையும் தூண்டி விடுகிறான். எப்படி இரண்டு சிஷ்யர்களுமே குருவை இப்படி குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் என்பது புரியவில்லை.

வேல்ராஜின் காமிரா மதுரையின் இரவுகளை அற்பதமாக படமாக்கியிருக்கிறது. குறிப்பாக பேட்டைக்காரனின் வீடு ஒரு லேண்ட்மார்க் போலவே மனதில் பதிகிறது. நள்ளிரவு நேர ஒளிப்பதிவுகளில் செயற்கைத்தனமே தெரியவில்லை. ஜி.வி. பிரகாஷின் பாடல் 'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி' என்று பாலுவை வித்தியாசமாக பாட வைத்திருப்பது நன்றாக இருக்கிறது. பின்னணி இசையையும் நன்றாக அமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையின் போது, பேட்டைக்காரர் தவிப்புடன் காத்திருக்கும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை சூழலின் கனத்தை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது.

()

சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே, வெற்றிமாறன் தனது முந்தைய படத்தின் திரைக்கதையை சற்று மாற்றி அப்படியே இதில் பயன்படுத்தியிருப்பதை உணர முடியும். 'பொல்லாதவனில்' பைக் கிடைத்தவுடன் அந்த இளைஞனின் வாழ்க்கையே மாறிப் போகிறது. துரத்திய காதலியும் கிடைக்கிறாள். ஆனால் ஒருகணத்தில் அத்தனையும் தலைகீழாக மாறி விடுகிறது. வன்முறையின் சூதாட்டத்தில் சிக்கிய அவன், போராட்டத்திற்குப் பிறகு தனது காதலியுடன் பயணிக்கத் துவங்குகிறான். 'ஆடுகளத்திலும்' இதுவேதான் வேறு விதமான பின்னணியில் அதே போன்ற காட்சிக் கோர்வைகளுடன் நகர்கிறது.

விளிம்புநிலை லும்பன்களில் ஒருவன், நடுத்தர வர்க்க பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாக பெற முயற்சிப்பது, அல்லது பெரிதான காரணங்களின்றி அந்தப் பெண்ணும் இவனே கதியாக கிடப்பது பொன்ற கதை அமைப்புகளே, வன்முறை பின்னணிகளுடன் தொடர்ந்து வருகின்றன. நவீன தமிழ் சினிமாவில் பாலாவின் 'சேது' இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து இது போன்ற படங்களே சிறுநகர, கிராமப்பின்னணியில் தொடர்ந்து வருகின்றன. ஒழுங்காக படித்து, பணிக்குச் சென்று குடும்பம் நடத்தும் ஒரு சம்சாரியின் வாழ்வில் எவ்வித சுவாரசிய சம்பவங்களும் நிகழாது என்று தமிழ்த்திரைக்கதையாசிரியர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது.
.
திரைப்படம் முன்பகுதியில் விறுவிறுப்பாகவும் பின்பகுதியில் மந்தமாகவும் சில நண்பர்கள் முன்னமே குறிப்பிட்டார்கள். இடைவேளை எனும் இந்த கற்பிதக்கோடு என்று ஒழியுமோ என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படியெல்லாம் உணரவில்லை முழுப்படமுமே விறுவிறுப்பாகத்தான் சென்றது.

படத்தின் இறுதியில் சில படங்களுக்கான கிரெடிட்டை இயக்குநர் தந்திருக்கிறார். அந்தப்பட்டியலில் உள்ள திரைக்கதையின் நான்-லீனியர் தன்மை 'ஆடுகளத்தில்' இல்லை. Amores perros அதில் வரும் நாய்ச்சண்டைக்காக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என யூகிக்கிறேன். விருமாண்டி, தேவர்மகன் போன்றவை மதுரை வட்டார வழக்கிற்காகவும், வன்ம கலாச்சாரத்தை வலுவாக வெளிப்படுத்தியதற்காகவும் இயக்குநரிடம் அதன் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் இது ஆரோக்கியமான அடையாளமே. சீடனின் மீது வன்மம் கொள்கிற குரு கதைகளின் அடிப்படையில், சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள், கே.விஸ்வநாத்தின் 'சுவாதி கிரணம்'  போன்ற படைப்புகள் இடைவெட்டாக நினைவில் வந்து போனது.

வெற்றிமாறன், காதல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு சேவற்சண்டைகளின் நுணுக்கங்களை இன்னும் நுட்பமாகவும் பிரதான பாத்திரங்களின் மனவோட்டங்களை இன்னும் ஆழமாகவும் சித்தரிக்க முயன்றிருந்தால் இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கும். வணிகக் காரணங்களுக்காக பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டிய சூழலில்தான் தமிழ்சினிமா இன்னும் உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமகால தமிழச்சினிமாக்களோடு ஒப்பிடும் போது ஆடுகளம் சிறப்பான முயற்சி. நிச்சயமாப பார்க்கலாம். கழுகு போல உயரப்பறக்க முடியாவிட்டாலும் ஊர்க்குருவியின் உயரத்திற்காவது தமிழ்சினிமாவால் பறக்க இயல்கிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்வதை ஆடுகளம் போன்ற திரைப்படங்கள் சாத்தியப்படுத்துகின்றன.

பிரத்யேக வாசகர்களுக்கான வழக்கமான புலம்பல் பின்குறிப்பு:

திரைப்படங்களை அரங்கில் வந்து பாருங்கள் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சொல்கிறார்கள். ஆனால் அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை அதற்கு முன் களைய அவர்கள் முயற்சிக்க வேண்டும். நல்ல திரைப்படம் என்று உணர முடிவதை அரங்கில் சென்று காண்பதை ஒரு கொள்கையாக வைத்துள்ள எனக்கு இம்மாதிரியான நடைமுறைச் சிக்கல்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.நான் கண்ட சங்கடங்கள் சில:

1) சில குறிப்பிட்ட ஆரம்பநாட்களுக்கு அனுமதிச்சீட்டின் விலையை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்கிற அநியாயமான சூதாட்ட விதி. ஒரு சிறிய குடும்பம் சென்று வருவதற்கே குறைந்தது ரூ.ஐந்நூறு செலவாகிவிடுகிறது. நல்லபடமா அல்லவா, என்று பார்வையாளர்களின் வாய்மொழி பரவுவதற்குள் அவனிடமிருந்து காசைப் பிடுங்கி விட வேண்டும் என்கிற ஆத்திரத்தில் உருவாக்கப்பட்ட இந்த விதிமுறையை முதலில் நீக்க வேண்டும். எனவேதான் இத்தனை நாட்கள் கழித்துதான் இந்தத் திரைப்படத்தை காண முடிந்தது.

2) சமீப திரைப்படங்களில் உரையாடப்படுகின்ற வசனங்கள்  பெரும்பாலும் தெளிவாக ஒலிக்காத சிக்கலை உணர்கிறேன். முன்பு பார்த்த மன்மதன் அம்பு திரைப்படத்திலும் சரி, ஆடுகளத்திலும் சரி, பல வசனங்கள் புரியவேயிலலை. தொலைக்காட்சி கிளிப்பிங்குளில் இப்பிரச்சினையி்ல்லை. புரியாத வசனங்களை குறுந்தகடிலாவது மீண்டும் தள்ளி வைத்துப் பார்க்க முடியும். நவீன ஒலிக்கலவைகளுக்கு திரையரங்குகளினால் ஈடுகொடுக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. (ஆடுகளத்தை சென்னை, பேபி ஆல்பர்ட்டில் பார்த்தேன்).

3) மூன்றாவது சங்கடம், சக பார்வையாளர்களிடமிருந்து. திரைப்பட ரசனையை பள்ளிக் கல்வியில் இணைக்கலாம் என்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் அதற்கு முன் பொதுச் சமூகத்தில் எவ்வாறு நாகரிகமாக நடந்து கொள்வது என்பதை பாடமாகவேனும் வைத்துத் தொலைக்க வேண்டும். பான்பராக் துப்பல்கள் முதற்கொண்டு பல எரிச்சல்கள். குறைந்தபட்சம் அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதையாவது கற்றுத்தரவேண்டும். நான் இந்த திரைப்படத்தை பார்த்த சமயத்தில், அடுத்த இருக்கையில் இருந்தவர் உரத்த குரலில் அரைமணி நேரத்திற்கொருமுறை தொலைபேசியில் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தார். சற்று கடுமையான தொனியில் அவரை கடிந்து கொண்டு அமர்ந்தால் முன்வரிசையில் இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து சிரித்துப் பேசி உரையாடிக் கொண்டேயிருந்தார்கள். இந்த வேலைகளை வெளியில் வைத்துக் கொள்ளாமல் காசு கொடுத்து வந்து அமைதியாக படத்தை ரசிக்க வேண்டிய திரையரங்குகளில் வைத்துக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. 'கொண்டே போடுவேன்' எனுமளவிற்கு கொலைவெறி ஏறுகிறது. அரங்குகளில் திரைப்படத்தை காணாமலிருப்பதற்கு இதுவுமோர் பிரதான காரணம்.

suresh kannan