Wednesday, February 02, 2011

வன்மத்தின் ஆடுகளம்


வெற்றிமாறனின் முதல்படத்தை பற்றி எழுத ஆரம்பிக்கும் போது பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றிருந்தேன். இப்போது நான் அவருக்கு கொடுக்க விரும்புவது இரண்டாவது பூச்செண்டு.

சேவற் சண்டைகளில் தொடர்ந்து ஜெயித்து பெயரையும் புகழையும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் 'பேட்டைக்காரன்' என்ற முதியவர், தன்னுடய சீடனொருவன் வெற்றியில் தன்னை முந்தி வருவதை பொறுக்க முடியாமல் மெளன வன்மத்துடன் அவனைப் பழிவாங்க நினைப்பதுதான் இப்படத்தின் மையம். தாய் முலையை தேடியலையும் கைக்குழந்தை போல் தமிழ்சினிமாவும் 'காதல்' என்கிற காம்பை இன்னும் விடாமல் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படத்திலும் ஒரு யதார்த்தமல்லாத காதல் ஊறுகாய்.

தமிழ்ச்சினிமாவில் சேவற்சண்டைக்காட்சிகள் இதற்கு முன் சில குறிப்பிட்ட விநாடிகளில் காட்டப்பட்டிருந்தாலும் , அதன் விவரணைகளோடு இதில் முதன்முறையாக காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்சார் பயத்தின் காரணமாக கிராஃபிக்ஸ் சேவல்கள் பிளாஸ்டிக் ஆவேசத்துடன் பாய்வதான செயற்கை பாவனை சகிக்கவில்லை. குழந்தைகள் பள்ளி ஒன்றில் அவர்களின் கண்ணெதிரே சேவற்சண்டையை நடத்திக் காண்பித்தது குறித்து புகைப்படத்துடன் ஆட்சேபித்திருந்து ஆங்கில நாளிதழ் ஒன்று. யதார்த்தத்தில் குழந்தைகளே நேரில் காண முடிகிற ஒன்றை திரையில் நிகழ்த்திக் காட்ட முடியாத சென்சார் விதிகளின் அபத்தங்களில் இதுவுமொன்று. 'வாடிவாசல்' எனும் குறுநாவலில் மாடுபிடிப்பதற்கான போட்டியின் உலகை வாசகர்களிடம் அற்புதமாக எழுப்பிக் காட்டினார் சி.சு.செல்லப்பா. இதில் அந்தளவிற்கான நுணுக்கமான விவரங்களை காட்டாவிட்டாலும் இருப்பதை கொண்டு திறமையாக நிரப்பியிருக்கிறார் வெற்றிமாறன். அதிலும் சேவற்சண்டைப் போட்டியின் சூழலும், கட்அவுட்களில் மன்னர் உடையுடன் தோன்றும் மதுரையின் பிரத்யேக அடையாளங்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் இன்னமும் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்ப்பது அபத்தமானது. முந்தைய காலங்களில் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருந்த மன்னர்களும், மேல்தட்டு மக்களும் பொழுதைப் போக்குவதற்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே, இந்த சேவற் சண்டைகளும், மாடுபிடி விளையாட்டுக்களும். சாராயம் செலுத்தப்பட்டு செயற்கை முரட்டுத்தனத்தோடு சீறுகிற காளையை பத்திருபது பேர் வாலைப்பிடித்து இழுத்து நிறுத்துவதில் என்ன வீரம் இருக்கிறதென்று தெரியவில்லை. இரண்டு மனிதர்கள் குத்திக் கொள்வதை சந்தோஷமாக பார்க்கிற அதே ஆழ்மனது வன்முறை விருப்பமே இவைகளில் வெளிப்படுகிறது.

ஆனால் இதில் சேவற்சண்டை என்பது ஒரு குறியீடே (ஆரம்பிச்சுட்டாம்பா). பேட்டைக்காரன் பின்னர் தனது இரு சிஷ்யர்களையும் ஆக்ரோஷமாக மோதவிடும் சூழலை ஆரம்ப சூட்சுமமாக உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்காக இருவரும் கிளைமாக்ஸில் சேவல்கள் போலவே எகிறி அடித்துக் கொள்ளும் காட்சிகளெல்லாம் ஓவர்.

இந்தப்படத்தின் பெரிய பலம், ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். 80-களின் மலையாளத் திரைப்படங்களிலிரு்நது ஒரு பாத்திரத்தை பிய்த்து எடுத்து வந்து இங்கு நட்டாற் போலிருக்கிறது. மிகையல்லாத இயல்பான நடிப்பு. குறிப்பாக, கருப்பு அவரது மனைவிக்கு தங்க வளையல் வாங்கித் தரும் காட்சியில், முகம் முழுக்க வன்மத்தோடு 'நீ யாருடா என் பொண்டாட்டிக்கு வளையல் வாங்கித் தர்றதுக்கு, வெளில போடா' எனும் காட்சியில் இவரது முகபாவமும் உடல்மொழியும் அற்புதம். கருப்பு மறைமுகமாக வாங்க  விரும்பும் சேவலை குரூர ஆவேசத்துடன் சுவற்றில் மோதி சாகடிக்கும் இன்னொரு இடம். ராதாரவியின் குரல் சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் இவருக்கு பொருந்தியிருக்கிறது.

இந்த பாத்திரத்திற்காக வெற்றிமாறன் இவரை அணுகிய போது 'என்னை நடிக்க வைப்பது ரொம்பவும் கஷ்டம்' என்று எச்சரித்தாராம். 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று களத்தில் இறங்கிய இயக்குநர், உண்மையிலேயே மிகவும் கஷ்டப்பட்டதாக நேர்காணலில் கூறியிருந்தார். அந்த உழைப்பு வீண் போகவில்லை. படத்தின் நிறமே ஒரு புதிய தொனியில் தெரிவதற்கு பிரதான காரணமே கவிஞர்தான்.

தனுஷ் - இயக்குநரிடம் தன்னை இப்படி முழுமையாக ஒப்படைத்து விட்ட இந்த நடிகனைப் பார்க்கவே அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. நான்கைந்து பேரை அடித்து வீழ்த்தும் காட்சிகள்தான் சற்று காமெடியாக இருக்கிறதே ஒழிய, சில நுட்பமான முகபாவங்களை காட்டுவதில் ஜெயிக்கிறார். தாயின் தொணதொணப்பிற்கு இவர் காட்டும் முரட்டுத்தனமான எதிர்வினை யதார்த்தம். 'கொண்டே போடுவேன்... என்று தாயைச் சொல்லலாமா என்று ஒரு விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று போலியாக கட்டமைக்கப்பட்ட உலகத்தைக் கண்டு பழகிய நமக்கு, யதார்த்த உண்மையை காண்பதில் சங்கடமாக இருப்பதை உணர முடிகிறது.

அவர் லுங்கியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஆடும் காட்சியை மிக நெருக்கமாக உணர்ந்தேன். வடசென்னைவாசியான நான் ஏறக்குறைய தினமும் சாவு ஊர்வலத்தில் இப்படி ஆடுபவர்களை பார்த்துவிடுவேன். அதிலும் இந்த சாவு மேளத்தின் இசை, ராஜநாகத்தின் விஷத்திற்கு ஒப்பானது. கேட்ட மாத்திரத்திலேயே அந்த இசை உங்கள் உடலிலும் மனதிலும் உடனடியாக பரவி வியாபித்து விடும். குறைந்தபட்சம் உடம்பை லேசாக அசைக்காமல் கூட உங்களால் இருக்க முடியாது. தனுஷ் அப்படி ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு பாடல் காட்சியில்.

பேட்டைக்காரனின் இன்னொரு சிஷ்யராக வரும் கிஷோர், அபத்தமான இரவல் தலைமுடியையும் குரலையும் மீறி சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை அவருடைய இயல்பான தோற்றம் மற்றும் குரலுடனேயே நடிக்க வைத்திருக்கலாம். (மேலேயுள்ள ஆரம்பக்கட்ட புகைப்படத்தில் கிஷோர் இயல்பான தோற்றத்தில் இருப்பதைக் கவனிக்கலாம்). இயக்குநர் ஏன் இந்த மாற்றத்தை செய்தார் எனத் தெரியவில்லை. பேட்டைக்காரனின் மனைவியாக வரும் மீனாளும் இயல்பாக நடித்திருந்தார்.

சென்னையில் முன்பு போர்ச்சுகீசுத் தெருவிலும் சேவியர் தெருவிலும் இப்போது பெரம்பூர் பேரக்ஸ் அருகிலும் நான் வேடிக்கை பார்த்த ஆங்கிலோ - இந்தியன் குடும்ப சூழலை திரையில் கொண்டு வருவதில் ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்கிறார் வெற்றிமாறன். விசித்திரவண்ணத் தலைமுடிகளுடன் செயின் அணிந்து கொண்டு சூயிங்கம் மெல்லும் அலட்சிய வாய் இளைஞர்கள் பேசும் ஆங்கிலத்தை வியந்து பார்த்திருக்கிறேன். அதிகம் நெருங்கிப் பழகாவிட்டாலும் பழகினவரைக்கும் இனிமையானவர்கள். ஜீஸ் ஜீஸ் என்பார்கள் அடிக்கடி. ஆனால் இவர்கள் கூட்டம் கூட்டமாகத்தான் வசிப்பார்கள். ஒற்றையான ஆங்கிலோ - இந்தியக் குடும்பத்தை காண்பது அரிது. இதில் நாயகி இருக்கும் ஒற்றைக்குடும்பம் - சர்ச் காட்சிகள் தவிர - மட்டுமே காட்டப்படுவது முரண்.

ஆங்கிலோ - இந்தியப் பெண்ணிற்கும் கருப்புவிற்கும் நிகழும் காதலில் யதார்த்தமேயில்லை. இன்னொருவனிடமிருந்து தப்பிக்க 'இவனைக் காதலிக்கிறேன்' என்று அவள் பொய் சொல்வதிலாவது துளி லாஜிக்காவது இருக்கிறது. பின்பு அவளே முன்வந்து கருப்புவின் காதலை ஏற்றுக் கொள்வது அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. விளிம்புநிலை இளைஞன் ஒருவனை வெளிநாட்டு வாய்ப்புள்ள ஓர் ஆங்கிலோ - இந்தியப் பெண் காதலிப்பது யதார்த்ததிற்கு முரணாக உள்ளது.

இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாய் கவர்ந்தது பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அதனதன் நிலைகளில் இருந்து பெரிதும் விலகுவதில்லை. பரம்பரை பரம்பரையாய் சேவற்சண்டை நிகழ்த்தும் வழியில் வந்த இன்ஸ்பெக்டருக்கு (நரேன்)  பேட்டைக்காரனை ஒரு முறையாவது ஜெயிப்பதுதான் லட்சியமாக இருக்கிறது. அவரின் பதவியைப் பயன்படுத்தி எளிதாக பேட்டைக்காரனை ஆரம்பத்திலேயே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் விளையாட்டிலுள்ள அடிப்படை அறத்தை அவர் மீற முயற்சிப்பதில்லை. ஆனால் நிலைமை கைமீறி விடுமோ என்கிற இறுதிப் பதட்டத்தில்தான் சாம, பேத, தான, தண்ட முறையை கையில் எடுக்கிறார்.

இன்னொருபுறம் பேட்டைக்காரன், தன்னுடைய புகழை வைத்து அதிகம் சம்பாதிக்க நினைப்பதில்லை. அந்தப் புகழின் பெருமையே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் தன்னிடம் வித்தை கற்றுக் கொண்டவனே தன்னைத் தாண்டிப் போவதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. அது தரும் வன்மத்திலும் மனப்புழுக்கத்திலும் அவனைப் பழிவாங்க முடிவெடுக்கிறார்.

பேட்டைக்காரனின் சிஷயர்களில் ஒருவனான துரையின் (கிஷோர்) பாத்திரம் மாத்திரம் சற்று தெளிவில்லாமல் இருந்தது. இன்ஸ்பெக்டரின் சாதிக்காரனான இவன், தன்னை அவர் ஒரு முறை சிறையிலிருந்து வெளியில் வந்து கொண்ட காரணத்திற்காக நன்றி பாராட்ட, பேட்டைக்காரனுக்கு துரோகம் செய்வான் என்று எதிர்பார்க்கும் போது, பெரியவர் அயூப் விபத்தில் சாகடிக்கப்பட்டவுடன், இன்ஸபெக்டர் மீது பாய்கிறான். அதே சமயம், பேட்டைக்காரனுக்கு எதிராக வெற்றி பெறும் கருப்புவையும் தூண்டி விடுகிறான். எப்படி இரண்டு சிஷ்யர்களுமே குருவை இப்படி குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் என்பது புரியவில்லை.

வேல்ராஜின் காமிரா மதுரையின் இரவுகளை அற்பதமாக படமாக்கியிருக்கிறது. குறிப்பாக பேட்டைக்காரனின் வீடு ஒரு லேண்ட்மார்க் போலவே மனதில் பதிகிறது. நள்ளிரவு நேர ஒளிப்பதிவுகளில் செயற்கைத்தனமே தெரியவில்லை. ஜி.வி. பிரகாஷின் பாடல் 'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி' என்று பாலுவை வித்தியாசமாக பாட வைத்திருப்பது நன்றாக இருக்கிறது. பின்னணி இசையையும் நன்றாக அமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையின் போது, பேட்டைக்காரர் தவிப்புடன் காத்திருக்கும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை சூழலின் கனத்தை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது.

()

சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே, வெற்றிமாறன் தனது முந்தைய படத்தின் திரைக்கதையை சற்று மாற்றி அப்படியே இதில் பயன்படுத்தியிருப்பதை உணர முடியும். 'பொல்லாதவனில்' பைக் கிடைத்தவுடன் அந்த இளைஞனின் வாழ்க்கையே மாறிப் போகிறது. துரத்திய காதலியும் கிடைக்கிறாள். ஆனால் ஒருகணத்தில் அத்தனையும் தலைகீழாக மாறி விடுகிறது. வன்முறையின் சூதாட்டத்தில் சிக்கிய அவன், போராட்டத்திற்குப் பிறகு தனது காதலியுடன் பயணிக்கத் துவங்குகிறான். 'ஆடுகளத்திலும்' இதுவேதான் வேறு விதமான பின்னணியில் அதே போன்ற காட்சிக் கோர்வைகளுடன் நகர்கிறது.

விளிம்புநிலை லும்பன்களில் ஒருவன், நடுத்தர வர்க்க பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாக பெற முயற்சிப்பது, அல்லது பெரிதான காரணங்களின்றி அந்தப் பெண்ணும் இவனே கதியாக கிடப்பது பொன்ற கதை அமைப்புகளே, வன்முறை பின்னணிகளுடன் தொடர்ந்து வருகின்றன. நவீன தமிழ் சினிமாவில் பாலாவின் 'சேது' இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து இது போன்ற படங்களே சிறுநகர, கிராமப்பின்னணியில் தொடர்ந்து வருகின்றன. ஒழுங்காக படித்து, பணிக்குச் சென்று குடும்பம் நடத்தும் ஒரு சம்சாரியின் வாழ்வில் எவ்வித சுவாரசிய சம்பவங்களும் நிகழாது என்று தமிழ்த்திரைக்கதையாசிரியர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது.
.
திரைப்படம் முன்பகுதியில் விறுவிறுப்பாகவும் பின்பகுதியில் மந்தமாகவும் சில நண்பர்கள் முன்னமே குறிப்பிட்டார்கள். இடைவேளை எனும் இந்த கற்பிதக்கோடு என்று ஒழியுமோ என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படியெல்லாம் உணரவில்லை முழுப்படமுமே விறுவிறுப்பாகத்தான் சென்றது.

படத்தின் இறுதியில் சில படங்களுக்கான கிரெடிட்டை இயக்குநர் தந்திருக்கிறார். அந்தப்பட்டியலில் உள்ள திரைக்கதையின் நான்-லீனியர் தன்மை 'ஆடுகளத்தில்' இல்லை. Amores perros அதில் வரும் நாய்ச்சண்டைக்காக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என யூகிக்கிறேன். விருமாண்டி, தேவர்மகன் போன்றவை மதுரை வட்டார வழக்கிற்காகவும், வன்ம கலாச்சாரத்தை வலுவாக வெளிப்படுத்தியதற்காகவும் இயக்குநரிடம் அதன் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் இது ஆரோக்கியமான அடையாளமே. சீடனின் மீது வன்மம் கொள்கிற குரு கதைகளின் அடிப்படையில், சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள், கே.விஸ்வநாத்தின் 'சுவாதி கிரணம்'  போன்ற படைப்புகள் இடைவெட்டாக நினைவில் வந்து போனது.

வெற்றிமாறன், காதல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு சேவற்சண்டைகளின் நுணுக்கங்களை இன்னும் நுட்பமாகவும் பிரதான பாத்திரங்களின் மனவோட்டங்களை இன்னும் ஆழமாகவும் சித்தரிக்க முயன்றிருந்தால் இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கும். வணிகக் காரணங்களுக்காக பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டிய சூழலில்தான் தமிழ்சினிமா இன்னும் உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமகால தமிழச்சினிமாக்களோடு ஒப்பிடும் போது ஆடுகளம் சிறப்பான முயற்சி. நிச்சயமாப பார்க்கலாம். கழுகு போல உயரப்பறக்க முடியாவிட்டாலும் ஊர்க்குருவியின் உயரத்திற்காவது தமிழ்சினிமாவால் பறக்க இயல்கிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்வதை ஆடுகளம் போன்ற திரைப்படங்கள் சாத்தியப்படுத்துகின்றன.

பிரத்யேக வாசகர்களுக்கான வழக்கமான புலம்பல் பின்குறிப்பு:

திரைப்படங்களை அரங்கில் வந்து பாருங்கள் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சொல்கிறார்கள். ஆனால் அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை அதற்கு முன் களைய அவர்கள் முயற்சிக்க வேண்டும். நல்ல திரைப்படம் என்று உணர முடிவதை அரங்கில் சென்று காண்பதை ஒரு கொள்கையாக வைத்துள்ள எனக்கு இம்மாதிரியான நடைமுறைச் சிக்கல்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.நான் கண்ட சங்கடங்கள் சில:

1) சில குறிப்பிட்ட ஆரம்பநாட்களுக்கு அனுமதிச்சீட்டின் விலையை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்கிற அநியாயமான சூதாட்ட விதி. ஒரு சிறிய குடும்பம் சென்று வருவதற்கே குறைந்தது ரூ.ஐந்நூறு செலவாகிவிடுகிறது. நல்லபடமா அல்லவா, என்று பார்வையாளர்களின் வாய்மொழி பரவுவதற்குள் அவனிடமிருந்து காசைப் பிடுங்கி விட வேண்டும் என்கிற ஆத்திரத்தில் உருவாக்கப்பட்ட இந்த விதிமுறையை முதலில் நீக்க வேண்டும். எனவேதான் இத்தனை நாட்கள் கழித்துதான் இந்தத் திரைப்படத்தை காண முடிந்தது.

2) சமீப திரைப்படங்களில் உரையாடப்படுகின்ற வசனங்கள்  பெரும்பாலும் தெளிவாக ஒலிக்காத சிக்கலை உணர்கிறேன். முன்பு பார்த்த மன்மதன் அம்பு திரைப்படத்திலும் சரி, ஆடுகளத்திலும் சரி, பல வசனங்கள் புரியவேயிலலை. தொலைக்காட்சி கிளிப்பிங்குளில் இப்பிரச்சினையி்ல்லை. புரியாத வசனங்களை குறுந்தகடிலாவது மீண்டும் தள்ளி வைத்துப் பார்க்க முடியும். நவீன ஒலிக்கலவைகளுக்கு திரையரங்குகளினால் ஈடுகொடுக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. (ஆடுகளத்தை சென்னை, பேபி ஆல்பர்ட்டில் பார்த்தேன்).

3) மூன்றாவது சங்கடம், சக பார்வையாளர்களிடமிருந்து. திரைப்பட ரசனையை பள்ளிக் கல்வியில் இணைக்கலாம் என்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் அதற்கு முன் பொதுச் சமூகத்தில் எவ்வாறு நாகரிகமாக நடந்து கொள்வது என்பதை பாடமாகவேனும் வைத்துத் தொலைக்க வேண்டும். பான்பராக் துப்பல்கள் முதற்கொண்டு பல எரிச்சல்கள். குறைந்தபட்சம் அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதையாவது கற்றுத்தரவேண்டும். நான் இந்த திரைப்படத்தை பார்த்த சமயத்தில், அடுத்த இருக்கையில் இருந்தவர் உரத்த குரலில் அரைமணி நேரத்திற்கொருமுறை தொலைபேசியில் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தார். சற்று கடுமையான தொனியில் அவரை கடிந்து கொண்டு அமர்ந்தால் முன்வரிசையில் இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து சிரித்துப் பேசி உரையாடிக் கொண்டேயிருந்தார்கள். இந்த வேலைகளை வெளியில் வைத்துக் கொள்ளாமல் காசு கொடுத்து வந்து அமைதியாக படத்தை ரசிக்க வேண்டிய திரையரங்குகளில் வைத்துக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. 'கொண்டே போடுவேன்' எனுமளவிற்கு கொலைவெறி ஏறுகிறது. அரங்குகளில் திரைப்படத்தை காணாமலிருப்பதற்கு இதுவுமோர் பிரதான காரணம்.

suresh kannan

16 comments:

priyamudanprabu said...

ஒழுங்காக படித்து, பணிக்குச் சென்று குடும்பம் நடத்தும் ஒரு சம்சாரியின் வாழ்வில் எவ்வித சுவாரசிய சம்பவங்களும் நிகழாது என்று தமிழ்த்திரைக்கதையாசிரியர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது.
///

ஆமாங்க.. எனக்கும் பல நேரங்களில் அப்படி தோணுது...

Anonymous said...

"சமீப திரைப்படங்களில் உரையாடப்படுகின்ற வசனங்கள் பெரும்பாலும் தெளிவாக ஒலிக்காத சிக்கலை உணர்கிறேன். முன்பு பார்த்த மன்மதன் அம்பு திரைப்படத்திலும் சரி, ஆடுகளத்திலும் சரி, பல வசனங்கள்
புரியவேயிலலை"

No problem in the ears i suppose

தர்ஷன் said...

வழமையாகவே உங்கள் திரைப்பார்வைகள் அருமையாகத்தான் இருக்கும். எனவே புதிதாய் சொல்ல எதுவுமில்லை. வழமைப்போலவே அருமை.

கிஷோர் நன்றாக நம்மில் பதிந்து போன ஒருவர். எனவே துரை என்ற பாத்திரமாகவே அவரை நம்மில் பதியச் செய்ய இயக்குனர் மேற்கண்ட மாற்றங்களை செய்திருக்கலாம்.

கிஷோர் பாத்திரத்தில் என்ன குழப்பம்
அட தனக்கொரு பிரச்சினை எனும்போது தம்மை சார்ந்தவர்கள் உதவவில்லையே எனும் ஆதங்கம் முதலில் நரேன் பாக்கம் சாயச் செய்கின்றது. தனக்கு செய்த உதவியும் பேட்டைக்கரனை பலிவாங்கத்தான் என அயூபின் கொலையுடன் புரிந்து போவதால் நரேன் மீது பாய்கிறான். துரை ஆரம்பத்தில் பேட்டைக்காரன் எதிர்ப்பது எங்கே சேவல் தோற்று தன் கௌரவம் பாதிக்கப்படுமென்பதால் என்றே நினைக்கிறான். ஆனால் சேவல் சண்டையை பார்த்து கருப்பின் சேவலில் நம்பிக்கை வருவதால் கருப்பின் எதிர்காலம் கருதி கருப்புக்கு உதவுகிறான். பேட்டைக்காரன் இத்தனை வன்மத்தை மனதில் வைத்திருப்பான் என அவன் நினைத்திருக்க மாட்டான்.

//ஒழுங்காக படித்து, பணிக்குச் சென்று குடும்பம் நடத்தும் ஒரு சம்சாரியின் வாழ்வில் எவ்வித சுவாரசிய சம்பவங்களும் நிகழாது என்று தமிழ்த்திரைக்கதையாசிரியர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது//

மாதவனின் "எவனோ ஒருவன்"

ஆமாம் நீண்ட நாளாக ஒரு சந்தேகம். ஒரு நாளும் உங்களுக்கு லாஜிக் எல்லாம் தூக்கி தூரப்போட்டு விட்டு ஒரு ரெண்டரை மணி நேரம் சந்தோஷமா ஒரு மசாலா படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?

ஜெயபாலன் said...

Nanri, ungkal anpum tharukiRa ungkamum uRchakam tharukiRathu - visjayapalan@yahoo.com

CS. Mohan Kumar said...

சில விஷயங்களில் மாறு பாடான சிந்தனை எனக்கும் உங்களுக்கும்; எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்கலை. உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கலை. ஆனாலும் படம் இருவருக்கும் பிடித்தது !!

//லுங்கியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஆடும் காட்சியை மிக நெருக்கமாக உணர்ந்தேன்//

இது மட்டும் நானும்...

Anonymous said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

H@RRY said...

"ஆனால் இதையெல்லாம் இன்னமும் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்ப்பது அபத்தமானது.முந்தைய காலங்களில் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருந்த மன்னர்களும், மேல்தட்டு மக்களும் பொழுதைப் போக்குவதற்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே, இந்த சேவற் சண்டைகளும், மாடுபிடி விளையாட்டுக்களும்."
Says who? Even if its true, eventually when majority of the population accept it, then its part of the culture. For example, cricket was started by english people. Isnt it a part of our culutre now? wont it be sheer stupidity to say that its not part of our culture because it was started by english land lords?

சாராயம் செலுத்தப்பட்டு செயற்கை முரட்டுத்தனத்தோடு சீறுகிற காளையை பத்திருபது பேர் வாலைப்பிடித்து இழுத்து நிறுத்துவதில் என்ன வீரம் இருக்கிறதென்று தெரியவில்லை. இரண்டு மனிதர்கள் குத்திக் கொள்வதை சந்தோஷமாக பார்க்கிற அதே ஆழ்மனது வன்முறை விருப்பமே இவைகளில் வெளிப்படுகிறது. " - please do not force your western influenced middle class values on the day to day life of people who are rooted in the culture. Have to note here that Britishers used to give such judgmental views dismissing indian culture. Sad to see many of us still clinging to the same view point, even though the english are long gone.

"விளிம்புநிலை இளைஞன் ஒருவனை வெளிநாட்டு வாய்ப்புள்ள ஓர் ஆங்கிலோ - இந்தியப் பெண் காதலிப்பது யதார்த்ததிற்கு முரணாக உள்ளது." - unga edarthathula kolliya vekka.

Anonymous said...

A well written review.

I agree with Dharshan's views on Kishor's character.

தமிழ்நதி said...

”ஆடுகளம்”இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு வந்து இந்த விமர்சனத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்.கவிஞர் வ.ஐ.ச.வைப் பற்றிய பந்தி மட்டும் வாசித்தேன். நன்றாக நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். தரமான சினிமாவின் காலமாக இது உருவாகிவருகிறது போலும்.

PRABHU RAJADURAI said...

திரைப்படங்களைப் பார்ப்பதை விட உங்களது விமர்சனங்களைப் படிப்பது சுவராசியமாக உள்ளது. அதற்காக, சல்லிக்கட்டு பற்றி நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை விருமாண்டி படம் பார்த்து விட்டு இதுதான் சல்லிக்கட்டு என்று நினைத்திருந்தால், சொல்வதற்கு ஏதுமில்லை. ஒரு விடயத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல், இப்படி சாராயம், வாலைப் பிடித்து பத்து பேர் இழுப்பது என்று அடித்து விடாதீர்கள். மதுரை வரும் பொழுது வீட்டிற்கு வரவும். சல்லிக்கட்டு வீடியோக்களளப் பார்க்கலாம்

குரங்குபெடல் said...

"படத்தின் இறுதியில் சில படங்களுக்கான கிரெடிட்டை இயக்குநர் தந்திருக்கிறார். அந்தப்பட்டியலில் உள்ள திரைக்கதையின் நான்-லீனியர் தன்மை 'ஆடுகளத்தில்' இல்லை. Amores perros அதில் வரும் நாய்ச்சண்டைக்காக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என யூகிக்கிறேன். விருமாண்டி, தேவர்மகன் போன்றவை மதுரை வட்டார வழக்கிற்காகவும், வன்ம கலாச்சாரத்தை வலுவாக வெளிப்படுத்தியதற்காகவும் இயக்குநரிடம் அதன் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் இது ஆரோக்கியமான அடையாளமே. "நீங்கள் பூச்செண்டு கொடுத்துவிட்ட
எரிச்சலில்
தேவையில்லாத ஒரு பகிர்வு . . .


சில மாதங்களுக்கு முன்னர்
வந்த ஒரு மாலை தினசரியில் ....
இந்த ஆடுகளம் படத்தினுடைய கதை ...
இயக்குனர் ராமிடம் பணியாற்றும்
உதவி இயக்குனர் ஒருவருடையது என்றும் . . .
அதனால் . . சில பஞ்சாயத்துகள் நடந்ததாகவும்
செய்தி வெளியாகியிருந்தது . . .

நன்றி

பிரபாகரன் said...

ரத்த சரித்திரம் படத்திற்கான உங்களுடைய விமர்சனத்தைப் படித்துவிட்டு நம்பி படம்பார்க்க சென்று மிகவும் ஏமாந்தேன். ஆனாலும் ஆடுகளத்தைப் பொருத்தவரை அருமையான விமர்சனம்தான், ஒரு சில கருத்து வேறுபாடுகளைப் பொறுத்தவரை. ஒரே ஃபார்முலாவிலேயே அனைத்து படங்களையும் பார்க்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிறது

KKPSK said...

சு.க.: வழக்கம்போல் அருமையான விமர்சனம்.
h@rry கருத்துகளுடன் உடன்படுகிறேன்.

ஆடுகளம்: வசனம் மற்றும் மதுரை சொல்வழக்கு மிகஅருமை.

குறிப்பாக அந்த ஆங்கிலோ-இந்தியன் பெண் பேசுவதாக அமைந்த வசனங்கள் (engish n tamil!)fantasstic.பெயர்கள் எல்லாம் வட்டார மக்களின் பெயர்கள்.
trivia: துரையின் வீடாக காட்டப்படுவது MLA நிலையூரில் உள்ள தளபதியின் வீடு!

Anonymous said...

நல்ல திரை அலசல் . கவிஞர் சமிபத்தில் ஆஸ்திரேலியா தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலில்
தனது கதா பத்திரத்துக்கு பின்னணி குரல் தன்னால் கொடுக்க முடியாமல் போனதிறுக்கான உள்ள அரசியல்
பற்றி சொன்னதை கவனிதிர்களா ,

முழு நேர்காணலையும் இங்கு காணலாம் .

http://kanapraba.blogspot.com/2011/02/blog-post_07.html


//அந்தப் படத்தின் பேச்சு வழக்கு என்பது ஒரு தடைக்கல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன், உங்களுக்கு ராதாரவியின் குரலை டப்பிங்கில் பயன்படுத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது நீங்களே உங்களின் குரலில் வழங்கியிருக்கலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?

உள்ளே நிறைய அரசியல் இருக்கின்றது அதையெல்லாம் சொல்லவேண்டி எதற்கு. இயக்குனர் பாலா சிங்களப்பெண்ணான பூஜாவை அவருக்கு விருது கை நழுவிப்போயிவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ் பேச வைத்திருக்கின்றார். இயக்குனர் அமீர் மலையாளப்பெண்ணான ப்ரியாமணியையும், மலையாள நடிகர்களையும் தமிழ் பேச வைத்திருக்கின்றார். யாருக்கு விருது கிடைக்கவேண்டும் கிடைக்கக்கூடாது என்பதை இயக்குனர் தீர்மானிக்கக் கூடியதாக அமைந்து விடுகின்றது.///

நன்றி
அருண்

Universys said...

பொல்லாதவனுக்கு பின் வெற்றிமாறன் மிகப்பிடித்த ஆளாகிவிட்டார் , ஆடுகளத்தை பார்க்கும்வரை விமர்சனங்களை படிக்ககூட்டாது என தள்ளிப்போட்டேன் ,

இடைவேளைக்கு முந்தையகாட்சி தேய்வழக்கான “சீட்நுனிக்கு” என்பதை எனக்கு விளக்கியது , ஒரு நல்ல நாவலை படித்த திருப்தி ,

முதல்முறை பார்க்கும்போது விமர்சகராக பார்க்காதீர்கள் என்றுதான் சொல்லத்தோன்றியது :)

Ranjani said...

Sir,

ungaludaiya tamizhai migavum rasithen. ippadi ezhudha mudiyavillaye endru romba kuraiyaga irukiradhu.