Saturday, December 18, 2010

SOUL KITCHEN (2009)

சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியாதபடிக்கு சில பல பிரச்சினைகள்.தவிரவும்

1) வார நாட்களில் அலுவலக நுகத்தடியிலிருந்து விடுபட முடியாமலிருத்தல்.

2) திரையரங்களுக்கு இடையே பதட்டத்துடன் ஷட்டில் காக்காக ஓட வேண்டிய நிர்ப்பந்தம். போக்குவரத்திற்கு பேருந்து அல்லது ஆட்டோவை நம்பியிருக்கும் எனக்கு இது மிகக் கஷ்டம். வரும் வருடங்களில் நாலைந்து தியேட்டர்கள் ஒரேயிடத்தில் உள்ள காம்ப்ளெக்ஸை இதற்கு ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்.

3) பொது இடத்தில் சினிமா பார்க்கும் போது ஏற்படும் சில அசெளகரியங்கள். உலக சினிமா பரிச்சயமுள்ள பார்வையாளர்களின் இடையில் கூட திரையிடலின் போது சளசளவென பேசிக் கொண்டும், குறுக்கே நடந்து கொண்டும், தொலைபேசி உபயோகித்துக் கொண்டும் இடையூறு செய்யும் ஆசாமிகள் மீது கொலைவெறி வரும். ('மேட்டர்' காட்சிகளில் மாத்திரம் இவர்கள் படு அமைதியாகி விடுவார்கள்).

4) என்னதான் சினிமா மீது பிரேமையிருந்து தினசரி ஒன்று பார்க்கும் வழக்கமிருந்தாலும் ஒரே நாளில் நாலைந்து சினிமாவாக அதுவும் தொடர்ந்து ஒரு வாரம் பார்த்தால் மண்டைக்குள் போலிஷ், செக், ஸ்பானிஷ் என்று விதவிதமான ஒலிகள் சடுகுடு ஆடி பேஸ்து அடித்துவிடும். (தினசரி சீரியல் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் (பெண்கள் என எழுத நினைத்து சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்) அரை மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த தொடர்களுக்குள் தம்மை இயல்பாக பொருத்திக் கொள்வதை பார்க்கும் போது நெஞ்சுருக அவர்களை வணங்கவே தோன்றுகிறது).

இப்படி நிறைய நொட்ஸ் & நொள்ளைஸ் சொன்னாலும், திருவிழாவில் கலந்து கொண்டு கும்பலில் ஐக்கியமாகி கொண்டாடுவது என்பதும் வாழ்க்கையின் பிரத்யேக ருசிதான்; உன்னத அனுபவம்தான்.


சென்னை சர்வதேச திரைவிழாவின் துவக்க நாளின் திரையிடலாக ஜெர்மனி திரைப்படமான SOUL KITCHEN தேர்வு செய்யப்பட்டிருந்தமையால் ஆர்வத்துடன் அதை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.

அயல் சினிமாக்களில் என்னை குழப்பும் பல விஷயங்களில் ஒன்று, எப்படி ஒரு சினிமாவை 'காமெடி' என்ற வகைமையில் சேர்க்கிறார்கள் என்பது. 'அண்டா தலையா, மாங்கொட்டை தலையா' என்றே அதிரடியாக பார்த்துப் பழகின எனக்கு மொத்தப்படத்திலும் இரண்டே இரண்டு இடத்தில் மாத்திரம் புன்னகை பூக்க வைக்கிற சினிமாவை காமெடி என்று ஒப்புக் கொள்வது சங்கடமாக இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சாப்ளின் வகை ஸ்லாப்ஸ்டிக் காமெடி, பிளாக் காமெடி, டயலாக் காமெடி,செக்ஸ் காமெடி என்பதெல்லாம் வேறு. படம் முழுக்க அடிநாதமாக மெலிதாக நகைச்சுவை இழையோடும் படங்களும் வேறு. நகைச்சுவைக்கான தடயங்களே இல்லாத ஒன்றை எப்படி காமெடி என்று அழைக்கிறார்கள் என்பதில்தான் குழப்பம்.

இத்திரைப்படத்தையும் காமெடி என்றே நினைத்து பார்க்க அமர்ந்தால் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் நான் சிரித்தேன், இல்லை புன்னகைத்தேன். அவ்வளவுதான்.

முதுகுவலியால் தொடர்ந்து அவதிப்படும் ஜினோஸ், ஒரு பெண் பிசியோதெரப்பிஸ்டிடம் போகிறான். அண்டர்வேர் தவிர மற்றவற்றை உருவி அவனை மேஜையில் மல்லாக்க படுக்க வைத்து இடுப்புப் பகுதியில் தசைகளை உருவி மெல்ல விடுகிறாள். சங்கடத்தால் நெளியும் ஜினோஸ், நான் வேறு வேண்டுமானால் திரும்பி படுத்துக் கொள்ளவா? என்று கேட்கிறான். "இங்கே மசாஜ் செய்வது மிக அவசியமானது" என்கிறாள். "மன்னிக்கவும். தவிர்க்க முடியவில்லை. எனக்கு சங்கடமாக இருக்கிறது" என்கிறான்.

அடுத்த காட்சி இரண்டு பேரையும் மிட்-ஷாட்டில் காண்பிக்கிற போதுதான் தெரிகிறது, அவனின் குறி விரைப்படைந்து நெட்டுக்குத்தலாக நிற்கிறது. "இதற்காக நீ மகிழ்ச்சியடையவே வேண்டும். ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று அர்த்தம்".

இதைத் தவிரை மருந்திற்குக் கூட நான் வேறெங்கும் நான் புன்னகைக்கவில்லை.

சரி. பரவாயில்லை. இனி திரைப்படத்தினுள் நுழைவோம். ஆகோ ஓகோவென்று புகழ வேண்டிய படமில்லை இது. அதே சமயத்தில் மோசமானதாக நொந்து போகச் செய்யும் உருவாக்கமும் அல்ல.

தன் வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் தோல்வியையும் துரோகத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்கும் ஒருவன் எப்படி அதிலிருந்து மீள்கிறான் என்பது இப்படத்தின் மையம். அதற்காக 'வெற்றி நிச்சயம்' என்று ஒரே பாடலில் எல்லா வேலைகளையும் செய்து செல்வந்தனாக ஆகும் அபத்தமாக இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. படம் ஒரு  நதி போல இயல்பாக அதன் போக்கில் ஓடுகிறது. படத்தின் இறுதியில் வரும் ஏலக்காட்சியின் நாடகத்தனத்தைத் தவிர வேறெங்கும் தர்ககப் பிழைகளே இல்லை.

ஜெர்மனியில் குடியேறியிருக்கும் கிரேக்க வம்சாவளியான ஜினோஸ், ஒரு பழைய தொழிற்சாலையை உணவகமாக மாற்றி சிரமத்தில் நடத்திக் கொண்டு வருகிறான். வரி பாக்கிக்காக அவனைத் துரத்தும் அரசு அதிகாரிகள், உணவக நிலத்தை அவனிடமிருந்து பிடுங்குவதற்காக தொடர்ந்து சதி செய்யும் பால்ய நண்பன், சிறையிலிருந்து பரோலில் வரும் பெர்றுப்பில்லாத சகோதரன், வேற்று நாட்டில் சீனக்காரனை தேடிக் கொள்ளும் காதலி, படத்தின் பெரும்பாலும் துரத்தும் முதுகு வலி போன்ற துயரங்கள் அவனைச் சூழ்கின்றன.

இதிலிருந்து மெல்ல மெல்ல அவன் விடுபடுவதை மீதிப்படம் காட்டுகிறது.

இதில் செஃப் ஆக வரும் சாய்ன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். மாற்றங்களை விரும்பாமல் ஒரே மாதிரியான உணவு உண்பவர்களை, Taste Fascists என திட்டுகிறான். உணவு தயாரிப்பை அழகியலோடு இணைத்து சிந்திக்கும் இவன் தன் பிடிவாதத்திற்காக பணியை இழக்க நேரிடுகிறது. அமிதாப் பச்சனின் சீனி கம்'மை நினைவுப்படுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது.

ஸ்பானிய உணவை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர், அது சூடாக பரிமாறப்பட வேண்டும் என விரும்புகிறார். வெளியே வந்து அவருடன் விவாதிக்கும் அவன் பாரம்பரிய முறைப்படி அது குளிர்ச்சியாகத்தான் பரிமாறப்பட வேண்டும் என்கிறான். 'இதை சூடாக்கித் தருவதில் உனக்கென்ன பிரச்சினை?' என்று கேட்கும் வாடிக்கையாளரிடம் "எப்பவாவது நான் உங்கள் பணியில் வந்து ஆலோசனை சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?" என்கிறான். விவாதத்தின் உச்சமாக சமையல் கத்தியை நடு மேஜையில் ஓங்கி குத்தி விட்டு "வேண்டுமானால் என் விந்தை அதில் விடுகிறேன். சூடாகட்டும்' என்று சத்தமிட்டு பணியை இழக்கிறான். இவனை தன்னுடைய உணவகத்தில் பணியில் அமர்த்திக் கொள்ளும் ஜினோஸ், மரபான வாடிக்கையாளர்களிடம் முதலில் தோல்வியைச் சந்தித்தாலும் புதிய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகிறான்.


இத் திரைப்படத்தின் இயக்குநர் Fatih Akın. துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஜெர்மனியில் பிறந்தவர். அயல்தேசத்தில் குடியேறியவர்களின் கலாசார முரண்கள், அடையாள குழப்பங்கள், சிக்கல்கள், விரோதங்கள் போன்றவை இவர் படங்களின் அடிநாதமாக இருக்கும்.

இவரின் முந்தைய படமான The Edge of Heaven (2007) திரைப்படத்தைப் பற்றி முன்பு இங்கு எழுதியிருக்கிறேன். Head-on (2004)-ம் முக்கியமான திரைப்படம்.

SOUL KITCHEN திரைப்படத்தில் இசை ஒரு முக்கியமான பணியை வகிக்கிறது. இவனது உணவகத்தை இசைக்குழு ஒன்று தங்களது பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுவே உணவகத்தின் வெற்றிக்கு பின்னர் அடித்தளமாக அமைகிறது. இத்திரைப்படத்தின் இசைக்காக இரண்டு வருடங்களை செலவழித்திருக்கிறார் இயக்குநர். புலம்பெயர்ந்தவர்களின் துயரங்களைச் சொல்லும் பாடல்களை தேடி அதிக பொருள் செலவில் உரிமை பெற்று பின்னர் ஒவ்வொரு பாடலையும் பலமுறை கேட்டு அதற்கேற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார். சீரியஸான படங்களை இயக்கி விட்டு 'ஓர் ஆறுதலுக்காக' இந்த நகைச்சுவைப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இவருடன் இணைந்து திரைக்கதையை எழுதின Adam Bousdoukos-ன் உண்மையான உணவக அனுபவங்களைக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற இத்திரைப்படத்தை அதன் சிறப்பான திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

suresh kannan

3 comments:

Kaarthik said...

அப்பாடா. இப்போதுதான் எனக்கு திருப்தியாக இருக்கிறது. திரைப்பட விழாவின் முதல்நாள் திரையிடப்படும் அளவிற்கு இதில் என்ன இருந்தது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். இப்படத்தைப் பற்றிய மாமல்லனின் பதிவு மேலும் குழப்பியது. இந்திய உணவுப் பொருளான பட்டையை உபயோகித்து செய்யப்படும் பொது அரங்கில் பலத்த கைத்தட்டல் :-)

Did u f*** the Tax Officer? என்று Zinos Neumann- இடம் கேட்கையில் "I do that all the time" என்ற பதில் கூட ஒரு வகையான Black Comedy என்று எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஒன்றும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை. Ilias-ன் நடிப்பு சிறப்பாக இருந்தது

Ashok D said...

அப்படியே மத்த படங்களை பார்த்து என் ஆற்றாமையை தீர்க்கவும் :)

Anonymous said...

ஒரு நாடகத்தின் முடிவை பொறுத்து கிரேக்க முறை படி comedy அல்லது tragedy என வகை படுத்தலாம்.

http://en.wikipedia.org/wiki/Comedy_drama_film

ஜெயகாந்த்