Friday, August 27, 2010

பிறன்மனை நோக்குதலில் பிறந்த காதல் (பகுதி 1)

பரவலாக அறியப்படாத, இணையத் தமிழில் இதுவரை யாராலும் எழுதப்படாத உலக சினிமாக்களைப் பற்றி எழுதுவதே என் நோக்கம் என்றார் நண்பர் ஒருவர். எனக்கும் இதில் உடன்பாடே. ஏனெனில் உலகசினிமா என்றாலே உடனே 'பைசைக்கிள் தீவ்ஸ்' 'ரஷோமான்'... போன்ற  திரைப்படங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பொதுவாக பேசுவதில்லை. சுமார் நூற்றுக்குள் அடங்கி விடும்  இந்த பெயர்களின் கிளிஷேவான பட்டியலே பல காலமாக தொடர்ந்து சுழன்று வருகிறது. இது தவிர பல ஹாலிவுட் வணிகக் குப்பைகளும் 'உலக சினிமா' என்கிற அந்தஸ்துடனே எழுதப்படுகின்றன. இதையும் தவிர்த்து விட்டு பார்த்தால் 'ஆஸ்திரேலிய' நாட்டுத் திரைப்படம், 'பிரேசில்" நாட்டு காவியம் என்கிற அடைமொழிகளோடு  பெருமையாக எழுதப்படும் திரைப்படங்களை என்னவென்று அருகே சென்று பார்த்தால் அவை நம்மூரின் 'சுறா' 'வேட்டைக்காரன்' ரேஞ்சிற்கு கொடுமையானதாக  இருக்கின்றன. 'வெளிநாட்டு உருவாக்கம்' என்றாலே அது தரமானதாகவும் உயர்வானதாகவும்தான் இருக்கும் என்கிற முன்முடிவும் கற்பிதமும் இந்த அபத்தங்களுக்குக் காரணம்.

ஆனால் கிணற்றிலிருந்து வெளியே வந்து பார்த்தால் 'உலக சினிமா' என்பது சமுத்திரம் மாதிரி பரந்து விரிந்து கிடக்கிறது. வாயில் நுழையாத பெயர் கொண்ட சிறிய நாடுகளிலிருந்து கூட மிகத் தரமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெறுவதின் மூலம் பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்டப்படுகின்றன. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பல இணையத் தளங்களில் பல திரைப்படங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. அதன் மீதான விவாதங்களும் சிலாகிப்புகளும் விமர்சனங்களும் செய்யப்படுகின்றன.

எனவேதான் தமிழிலும், ஏற்கெனவே மற்றவரால் எழுதப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்களைப் பற்றி நாமும் எழுதுவதை தவிர்த்து மிகக் குறுகிய வட்டத்திலேயே அறியப்பட்டிருக்கிற சிறந்த திரைப்படங்களைப் பற்றி மாத்திரமே எழுத வேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் ஒரு விதியாகவே நிர்ணயித்து வைத்திருந்தேன். கூடுமானவரை இதை பின்பற்றவும் முயல்கிறேன்.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஏற்கெனவே மற்றவரால் எழுதப்பட்டிருந்தாலும் கூட நம்முடைய தரப்பையும் சொல்லி விட வேண்டும் என்கிற ஒரு தவிப்பு ஏற்படுமல்லவா? படம் பற்றின மற்றவர்களின் எண்ணங்களிடமிருந்து நம்முடையது முற்றிலும் விலகி வேறு திசையிலும் இருக்கலாமல்லவா? கலையின் அடிப்படை இயல்பே இதுதானே? 2+2 = 4  என்று யார் கூட்டினாலும் ஒரே விடை வர இதுவொன்றும் கணிதமல்லவே. பார்வையாளனின் அனுபவங்களை, நுண்ணுர்வுகளைப் பொறுத்து ஒரு படைப்பு கலைடாஸ்கோப் போல் வேறு வேறு வண்ணங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த வைப்பதுதானே ஒரு சிறந்த கலைப்படைப்பின் அடையாளமாக இருக்க முடியும்?

அந்த வகையில் நான் சமீபத்தில் பார்த்த சிறந்த திரைப்படத்தைப் பற்றி இங்கு எழுத உத்தேசம். IN THE MOOD FOR LOVE.  நான் கவனித்த வரை இதைப் பற்றி உமாசக்தியும் கருந்தேள் கண்ணாயிரமும் ஏற்கெனவே எழுதியிருப்பதால் மேற்குறி்ப்பிட்ட சுயநிர்ணய விதியின் படி நான் இதை எழுதாமலிருப்பதுதான் நியாயமாக இருக்க முடியும். அதையும மீறி இதை எழுது எழுது என்று என்னைத் தூண்டுகிற உள்ளுணர்வின் இம்சையைத் தாங்க முடியாமல் இதை எழுதுகிறேன். பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு வெளிப்படுகிற சிசுவாகவோ, நேற்று உண்ட சில்லிசிக்கன் ஜீரணமாகாமல் வேறு வடிவில் வண்ணத்தில் வருகிறதாகவோ, இந்தப் பதிவை உங்கள் விருப்பத்தின்படியும் வெறுப்பின்படியும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்.



வெகுஜன சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா அல்லது கலை சினிமா என்று அறியப்படுபடுகிறவைகளைப் பற்றி  பொதுவாக எக்காளச் சிரிப்புடன்  இவ்வாறான 'விமர்சனத்தை' முன்வைப்பார்கள். 'இன்னா ஆர்ட்டு பிலிமு. ஆம்பளயும் பொம்பளயும் டிரெஸ் இல்லாம படுத்துக் கெடப்பாங்க". ஒருத்தன் பீடி பிடிக்கறதையும் ஒண்ணுக்கு போறதையும் அரை மணி நேரம் காமிப்பான்"

நானும் இப்படித்தான் முன்பிருந்தேன். கீஸ்லோவ்ஸ்கி, தார்க்கோவ்ஸ்கி என்று எவனாவது பினாத்திக் கொண்டு அருகே வந்தால் மிகவும்  காண்டாகி அவனை கிண்டலடிக்கத் தொடங்கி விடுவேன். அது போன்ற படங்களைப் புரியாமலிருப்பதிலிருந்து எழும்  தாழ்வுணர்வும், அதை நம்மால் எளிதி்ல் அணுக முடியாமலிருப்பது குறித்த ஆழ்மனதிலிருக்கும் எரிச்சலும் பயமுமே அதை கடக்கும் முயற்சியாக மேம்போக்கான கிண்டல்களாக வெளிப்படுகின்றன என்பது பின்னால்தான் புரிந்தது.

ஆக IN THE MOOD FOR LOVE திரைப்படத்தைப் பற்றி இவ்வாறான பாமர பாஷையில் விவரித்தால் "படம் வேற ஒண்ணுமில்லப்பா. இவன் பொண்டாட்டிய அவ புருஷன் வெச்சிருக்கான். அவ புருஷன் இவன் பொண்டாட்டிய வெச்சிருக்கான். நடுவுல இதுங்க ரெண்டும் சேந்து லவ்வுதுங்க. இத போட்டு அறு அறு அறுத்திருக்கான் பாரு. ஒரு 'மேட்டர்' சீன் கூட இல்ல. மொக்க வேஸ்ட்டுப்படம்"

படத்தின் குறுந்தகடு இடையில் நின்று நின்று என்னை வெறுப்பேற்றின இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் என்னை ரொம்பவும் கவர்ந்தது?..

சொல்கிறேன். :)

suresh kannan

Friday, August 20, 2010

மானுடத்திற்கு எதிரான அஃறிணைகளின் சதி


 ஒர் அலட்டலுக்காக வைக்கப்பட்ட இந்தத் தலைப்பைக் கண்டு திகைத்து அஞ்சி நிற்காமல் உள்ளே வாருங்கள். பதிவின் இறுதியில் உங்களுக்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இயந்திரங்களும் பொருட்களும் மிக நெருக்கடியான நேரங்களில் எதிராக இயங்கி பழிவாங்குவதை பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். பரபரப்பான காலை நேர உணவுத் தயாரிப்பின் போது மிகச் சரியாக சிலிண்டர் வாயு தீர்ந்து போவது எப்போதும் நிகழ்வதை கவனத்திருக்கிறீர்கள் அல்லவா? முக்கி முனகி மலம் கழித்து சாவகாசமாக எழுந்த சமயத்தின் போது குழாய் நீர் வராமலிருப்பதும் அடித்துப் பிடித்து விரைந்து செல்லும் போது நாம் போக வேண்டிய ரயில் மிகச்சரியாக நம் முன்னாலேயே வாலை ஆட்டி ஒழுங்கு காட்டிக் கொண்டே செல்வதை சதி என்று சொல்லாமல் என்னவென்பது? முக்கியமான நேர்காணலுக்கு கிளம்ப பிடித்தமான வண்ண அதிர்ஷ்ட சட்டையை அணியும் போது அதிலிருந்து ஒரு பொத்தான் கழன்று விழும் போது ஒரு மனிதனுக்கு கோபம் வருமா, வராதா? வேலை வெட்டியில்லாத மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் இந்த வயிற்றெரிச்சலையும் மர்பி, பர்பி என்று ஏதாவது ஒரு விதிக்குள் அடக்கி அதன் மீது நூற்றுக் கணக்கான ஆய்வுப்புத்தகங்களையும் எழுதிக் குவித்திருப்பார்கள்.

ஏன் இத்தனை கோபமும் பீடிகையும் என்று அறிய விருப்பமுள்ளவர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.

எதாலோ அல்லது எவராலோ தூண்டப்பட்டு நல்லதொரு இசையை அல்லது திரைப்படத்தை கேட்கலாம் அல்லது பார்க்கலாம் என்று சம்பந்தப்பட்ட குறுந்தகட்டை எல்லாவற்றையும் கவிழ்த்து தேடோ தேடுவென்று தேடினால் போன வாரம் வரைக் கூட கண்ணில்பட்டு தொலைத்துக் கொண்டிருந்த அந்தச் சனியன், மிகச்சரியாக இந்தச்சமயத்தில் கண்ணாமூச்சி விளையாடி மகிழ்வதின் பின்னணியை என்னவென்று சொல்வது? இப்படித்தான் பாருங்கள். அலுவலக வேலையை விட மிக கருத்துடன் செய்யும் பணியான வலைப்பதிவு எழுதும் காவியப் பணியை தொடர்வதற்காக நீண்ட நாட்களாக வரிசையில் காத்துக் கொண்டிருந்த மிகச் சிறந்த திரைப்படம் ஒன்றை வழக்கம் போல் நள்ளிரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். முக்கால்வாசி வரைக்கும் மிக சமர்த்தாக இயங்கிக் கொண்டிருந்த அந்த குறுந்தகடு அதற்குப் பிறகு சதித்திட்டத்துடன் விழித்தெழுந்து கொடுத்த மனஉளைச்சலை வார்த்தைகளால் விளக்க முடியாது. லயித்த மனநிலையுடன் கரமைதுனம் செய்யும் போது தடாலென்று கதவைத் திறந்து கொண்டு எவரேனும் நுழைந்தால் எப்படியிருக்கும்? இந்த உதாரணம் சிலருக்கு சங்கடம் தருமென்றால் மாற்றிக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினையில்லை. 'மிகச் சிறந்த இசையை கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருக்கும் போது மின்துண்டிப்பு நிகழ்ந்தாலோ, யாராவது அதை நிறுத்திவிட்டு இரைச்சலான இசைக்கு மாற்றியமைத்தாலோ எப்படியிருக்கும்?

அப்படித்தான் ஆயிற்று. அந்த திரைப்படத்தில் மிக மிக கவித்துமான தருணம் நிகழ்ந்து கொண்டிருந்த போது திடீரென்று குறுந்தகடு திக்கித் திணற ஆரம்பித்தது. பயங்கர எரிச்சலை அடக்கி பொறுமை காத்தேன். சமயங்களில் அப்படியே சற்று நகர்ந்து நகர்ந்து சரியாகிவிடும். ஆனால் இது என்னை பழிவாங்கத் திட்டமிட்டிருக்கும் போது எப்படி சரியாகும்? அப்படியே திக்கித் திக்கி உறைந்தே போயிற்று. நீலப்படமென்றாலும் பரவாயில்லை. தூக்கிக் கடாசிவிட்டு வேறொன்றை உபயோகித்து உடல்விசாரத்தை கடந்துவரலாம். இது அப்படியில்லை. அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதை அதன் தொடர்ச்சியோடு உடனே அறியாவிடில் மண்டை காய்ந்துவிடும். அந்த குறுந்தகடை ஆராய்ந்தேன். பெரிதாக எந்த சிராய்ப்புமில்லை. இதை விட காலில் போட்டு தேய்த்த மொக்கைப்படங்களெல்லாம் பின்பு மிக ஜோராக இயங்கியிருக்கிறது. எனவே அதை பல விதங்களில் தாஜா செய்து பார்த்தேன். மிருதுவான துணியை எடுத்து அதன் உடல் முழுவதும் தூசு போக துடைத்தேன். ஒருவேளை பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தகட்டை இயக்கும் கருவியில் உள்ள குறைபாட்டிற்கு தகட்டை பழிச் சொல்கிறோமோ என்று கணினியில் இயக்கிப் பார்த்தேன். எத்தனை முறை நிகழ்த்தினாலும் ஒரே விடை என்கிற அறி(ற)வியல் தத்துவத்திற்கேற்ப திரைப்படம் கணினியிலும் மிகச்சரியாக அதே இடத்தில் உறைந்தது. தகடு இயக்கக் கருவியையும் அதற்குரிய துடைப்பான் தகட்டை வைத்து சுத்தம் செய்தேன். இறுதி முயற்சியாக எப்பவோ நண்பர் சொல்லியிருந்து யோசனைப் படி தகட்டை மென்னீரால் லேசாக கழுவி மிருதுவாக துடைத்து இளஞ்சூட்டில் காய வைத்தேன். பவுடர் போட்டு, யூனிபார்ம், ஷீ அணிவிக்காதுதான் குறை. ம்ஹூம்..

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்... மிக நல்ல திரைப்படம் என்று பரவலாக அறியப்பட்டதை மிக ஆவலுடன் காண அமர்கிறீர்கள் என்றால் எல்லாத் திசைகளிலும் வணங்கி, கடவுள்நம்பிக்கையோ, ஜாதக நம்பிக்கைகளோ இருந்தால் அதற்குரிய அனைத்து பரிகாரங்களையும் முடித்துவிட்டு அமரவும்.

இப்படியாக நான் அவஸ்தைப்பட்டு எரிச்சலின் உச்சத்தில் அந்த குறுந்தகட்டை எனக்குப்பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளரின் புத்தகத்தின் இடையில் வைத்து பழிவாங்கிய திருப்தியுடன் மறுநாள் இன்னொரு நல்ல குறுந்தகட்டை உபயோகித்து பார்த்த திரைப்படத்தைப் பற்றிதான் அடுத்த பதிவில் எழுதப் போகிறேன். எப்பூடி? திரை விமர்சனம் எழுதுவதற்காக டிரைய்லர் ஓட்டிய ஒரே இணையப் பிரகஸ்பதி நான் ஒருவனாகத்தான் இருக்கக்கூடும்.

தொடர்புடைய பதிவு:

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

suresh kannan

Tuesday, August 17, 2010

மஜித் மஜிதியும் பீம்சிங்கும்

.. அந்த நடுத்தரவயது மனிதர் பச்சைக்காக சிக்னலில் காத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் காணக்கூடிய காட்சியைப் போல ஏழைச் சிறுவர்களும் சிறுமிகளும் இயல்பாக தங்கள் மீது உண்டாகும் அனுதாபத்தை காசாக்கிக் கொள்ளும் எளிய வணிக உத்தியோடு சிறு பொருட்களை  வாகனங்களின் ஊடாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். நடுத்தர வயது மனிதரின் முன்னால் சாம்பிராணிப் புகையை தூவிய படி வந்து நின்று மந்தகாசமாக புன்னகைக்கிறாள் ஒரு சிறுமி. அவள் வயதேயுள்ள தன்னுடைய மகளின் நினைவு அவருக்கு வந்திருக்க வேண்டும். தன்னுடைய உழைப்புக் களைப்பையும் மீறி பதிலுக்கு புன்னகைக்கிறார். அந்தச் சிறுமிக்கு ஏதேனும் தர வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அவசரமாக பையிலிருந்து பணத்தை எடுக்கிறார். கையில் தட்டுப்பட்டது 500 டோமன்கள். அதைக் கூட தந்துவிடலாம்தான். ஏனோ ஒரு தயக்கம். அது அன்றாடங்காய்ச்சியான அவரது குடும்பத்தின் ஒரு நபருக்கான ஒரு வேளைக்கான உணவுப்பணமாக இருக்கக்கூடும். சில்லறை மாற்றித் தர முடிவு செய்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் சக வாகனயோட்டிகளை அணுகுகிறார். கிடைக்கவில்லை. "யோவ், இதுவே சில்லறைதான்?" என்கிறான் ஒரு தாராளமயவாதி. சிவப்பிற்கான நேரம் முடியப்போகிறது. நடுத்தர வயது மனிதருக்குள் பரபரப்பு கூடுகிறது. கடைசி தருணத்திலும் யாரும் சில்லறை தர முன்வரவில்லை. பச்சை விழுந்து வண்டிகள் நகர ஆரம்பிக்கின்றன. தடுமாற்றத்துடன் நின்றிருக்கும் இவரை ஒலிகளின் மூலம் மிரட்டுகின்றன பின்னால் வரும் வாகனங்கள். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தர விரும்பிய, இவர் திடீரென்று தீர்மானித்து பணத்தை சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு அந்தச் சிறுமியை பார்க்க விரும்பாமல் வாகன நெரிசலுக்குள் மறைகிறார். ...

நம் தமிழ் சினிமாக்கள் எத்தனை மொண்ணைத்தனமாகவும் சாதாரண மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்து எத்தனை தூரம் விலகி நிற்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாய் The Song of Sparrows-ல் சித்தரிக்கப்படும் மேற்கண்ட காட்சியைச் சொல்லலாம். ('உலகின் சிறந்த படங்களோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் புலம்பாமல் உன்னால் எழுதவே முடியாதா?' என்கிற கேள்வியின் பின்னேயுள்ள நியாயத்தை உணர்ந்தேதான் இருக்கிறேன். எந்தச் சமரசத்திற்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளாமல் நுண்ணுணர்வு மிக்க ஒரு இயக்குநராவது தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் அவரை வைத்துக் கொண்டாவது திருப்தியடைந்து கொள்ளலாம். அப்படியேதும் இல்லாத ஆதங்கமும் எரிச்சலுமே இவ்வாறு எழுதத் தூண்டுகிறது).

மேற்கண்ட காட்சியை தமிழ் சினிமாவின் ஒரு சராசரி இயக்குநர் எப்படி சித்தரித்திருப்பார் என்று யூகித்துப் பார்ப்போம். நடுத்தர வயதைத் தாண்டியும் மிகை ஒப்பனையுடன் உலகத்தை ரட்சிக்க வந்த அவதாரமாக வேண்டுமானாலும் நடிக்க முன்வருவார்களே ஒழிய, தங்களின் இயல்பான வயதிற்கு ஏற்ற பாத்திரத்தை ஏற்க மாட்டார்கள். ஏழை ரிக்ஷாக்காரன் பாத்திரமென்றாலும் ரீபாக் கேன்வாஸ் ஷூவும் லீ ஜீன்சும் அணிந்து உலாவரும் நாயகன் அந்த ஏழைச்சிறுமியின் கண்ணீரைப் பொறுக்க மாட்டாமல் தன் கையிலிருக்கும் அத்தனை பணத்தையும் அவளிடம் திணித்துவிட்டு கூடவே ஏழைகளின் துயர்நீக்க விரும்பும் சோசலிசப் பாவனைப் பாடல்ஒன்றை பாடி தன்னுடைய நாயக பிம்பத்தை ஊதிப்பெருக்கிய திருப்தியும் பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தையும் ஒருங்கே பெற்றுக் கொள்வான்.

மஜித் மஜிதியின் மேற்குறிப்பிட்ட படத்தின் உள்ளடக்கம், ஏறக்குறைய 'பா' வரிசைப் பட புகழ் ஏ. பீம்சிங்கின் வழக்கமான 'அழுகாச்சி' படங்களை ஒத்ததுதான். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், காலச் சூழ்நிலைகளினால் பிரச்சினைகளின் பால் செலுத்தப்படுவதும் அந்த அவஸ்தைகளின் உச்சியில் மீண்டும் தன் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பி பார்வையாளனை ஆசுவாசப்படுத்துவதும். ஆனால் நுண்ணுணர்வு மிக்க யதார்த்தமான காட்சிகளின் உருவாக்கத்திலிருந்தும் நடிகர்களின் பங்களிப்பிலிருந்தும் எப்படி இரு படங்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன என்பதை ஒரு சாதாரண பார்வையாளன் கூட உணர முடியும். ஒரு சினிமா இயக்குநர்,  'கலைஞன்' என்கிற உயர்நிலைப் புள்ளிக்கு உருமாறுகிற மாயத்தை அவரேதான் தீர்மானித்துக் கொள்கிறார். அவரால்தான் அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு சினிமாவா? அல்லது காலத்தை கடந்து நிற்கப் போகிறதொரு கலைப்படைப்பா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு உருவாகிற கலைஞர்கள்தான் சர்வதேச அரங்கில் 'திரைப்படைப்பாளிகளாக' அடையாளம் காட்டப்படுகின்றனர். அவர்களின் படைப்புகள் 'உலக சினிமா'வாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.



தீக்கோழி பண்ணையில் பணிபுரியும் கரீம், கோழியொன்று தப்பியோடின தவறின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். மகளின் காதுகேளா கருவியை பழுதுபார்க்க நகரத்திற்குச் செல்லும் அவரை தற்செயலான பணியை திணிப்பதின் மூலம் நகரம்  தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. நகரம் அவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. சற்று பொருளீட்ட முயன்றாலும் தன்னுடைய ஆன்மா அமைதியின்றி தவிப்பதை  அவ்வப்போது உணர்கிறார் கரீம். மறுபடியும் அவருடைய பழைய பணியை திரும்பப் பெற்றவுடன்தான் இயல்பான நிம்மதியைப் பெறுகிறார். மேலே குறிப்பிட்டபடியான பல நுட்பமான காட்சிகளின் மூலம் இத்திரைப்படம் ஓர் உன்னத அனுபவத்தைத் தருகிறது.

நகரப்பணிக்கு பழகிக் கொண்டிருந்தாலும் தப்பிச் சென்ற தீக்கோழி  அவருடைய அல்லறும் ஆன்மாவை பல்வேறு சமயங்களில் மறைமுகமாக தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எங்கோ இறக்கி வைக்க வேண்டிய ஒரு குளிர்பதனப் பெட்டிச் சுமையை வழிதவறுதல் காரணமாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. திருடுவது அவரது நோக்கமில்லையென்றாலும் தானாக வந்த அந்த அதிர்ஷ்டத்தை அந்த எளிய கிராம மனம் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இரவெல்லாம் அதை விக்கித்துப் பார்ததபடி அமர்ந்திருக்கிறார் கரீம். நகரத்தில் எங்காவது அதை விற்றுக் காசாக்கிக் கொள்ளும் முடிவுடன் புறப்படுகிறார். தானாகவே முன்வந்து விசாரிக்கிற காசு தருகிற வியாபாரியை புறக்கணித்து (இப்படித்தானே நம் மனம் இயங்கும்) வேண்டாமென்று துரத்துகிறவனிடம் கெஞ்சுகிறார். இப்படியாக அலைகிற போது வழியில் தென்படுகிற ஒரு காட்சி அவரை திகைத்து நிறுத்துகிறது. அது வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிற சில தீக்கோழிகள். அவை அவரின் பழைய நிம்மதியான வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றன. அடுத்த காட்சியில் குளிர்பதனப் பெட்டியை அதற்குரிய இடத்தில் கரீம் சேர்த்துவிடுகிற காட்சி காட்டப்படுகிறது.

கிராமம் என்றாலே அது வெள்ளந்தியான மனிதர்களின் இடம் போலவும் நகரம் என்றால் அது கொடூரமானது  என்கிற கறுப்பு-வெள்ளைச் சித்திரம்தான் பொதுவாக முன்வைக்கப்படும். பெரும்பாலும் கிராமத்திலிருந்து புலம்பெயர்கிற மனிதர்களுடனும்தான் நகரம் இயங்குகிறது என்கிற உண்மையை கிராமத்திலிருந்து வந்தவர்கள் செளகரியமாக மறந்துவிடுவார்கள். தவறுதலாக அதிக பணத்தை தந்து விட்டு விரைகிற செல்வந்தரை கிராமத்தனான கரீம் திருப்பித் தர துரத்துகிற அதே நகரத்தில்தான், அதிக பணத்தை பாக்கிச் சில்லறையாக தந்து விடும் கரீமிடம் அதை துரத்தி வந்து திரும்பத் தரும் நகரவாசியும் சித்தரிக்கப்படுகிறார்.

திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி. விபத்தொன்றில் சிக்கி நகரப் பணியின் வருவாயையும் இழந்து படுத்துக்கிடக்கும் கரீம், தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனக்குப்பதிலாக பணிபுரிவதை கையாலகாததனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உடம்பு ஒரளவிற்கு குணமான ஒரு தனிமையில் கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிற குருவியின் சப்தம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. எப்படியோ அறைக்குள் மாட்டிக் கொண்ட அந்தக் குருவி தப்பிக்கும் நோக்கத்துடன் கண்ணாடிச் சன்னலில் முட்டி முட்டி கீழே விழுகிறது. மெல்ல தவழ்ந்து சென்று சன்னலை திறந்து குருவியை விடுவிக்கிறார் கரீம். அதே சமயத்தில் அவரது பழைய பணி திரும்பக் கிடைக்கும் நல்ல செய்தியும் கிடைக்கிறது. குருவியைப் போல தத்தளித்துக் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுவிக்கப்படுகிற சூழலை மிகப் பொருத்தமாக உபயோகித்திருக்கிறார் இயக்குநர்.

காது கேளா மகளுடான தகப்பனின் பரஸ்பர அன்பும், தங்க மீன்கள் வளர்ப்பதன் மூலம் செல்வந்தனாகி விடலாம் என்ற கனவுடன் அலையும் அவரது மகனும், எப்பவும் அவனை கொலைவெறியுடன் துரத்தியடிக்கும் கரீமும், வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து விலகி மனைவியை நேசத்தை தனிமையில் அடைய விழைகிற கரீமின் குழைவும் அதற்கான மனைவியின் வெட்கமும், சிறுவர்களின் தங்கமீன் கனவு நிராசையில் முடிகிற அநீதியும் அதிலிருந்து துளிர்க்கிற நம்பிக்கையும்  என பல நுட்பமான காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியடையவும் பரவசமடையவும் செய்கின்றன. சிறுவர்களின் உலகை இயல்பாக காட்சிப்படுத்துகிற விதத்தில் மஜித் மஜிதியின் தனித்துவம் இதிலும் வெற்றி பெறுகிறது.

 

கரீமாக நடித்த Reza Naji-ஐ தோற்றப் பொலிவில்லாததின் காரணமாகவே நம்மூர்களில் துணைநடிகராக கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடக நடிகரான இவர் 'சில்ரன் ஆ·ப் ஹெவனின்' மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார். இரானின் நிலப்பரப்பை கூடுதல் அழகியல் கவனத்துடன் படமாக்கும் மஜித் மஜிதி இதிலும் அவ்வாறே இயங்கியுள்ளார். நகரத்தின் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.  என்றாலும்  பெரும்பாலும் மிக யதார்த்தமாக இயங்கும் ஒளிப்பதிவு, பருந்துப் பார்வையுடன் கூடிய இரண்டு ஏரியல் ஷாட் காட்சிகளில் பிரம்மாண்டமாயும் செயற்கையாயும் நம்மை உணரச் செய்து அந்நியமாய் விலகி நிற்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

மற்ற எந்த நாட்டுத் திரைப்படங்களையும் விட இரான் திரைப்படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். The Song of Sparrows-ம் அதிலொன்று.

தொடர்புடைய பதிவுகள்:

காட்சிப்பிழை

'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..

suresh kannan

Friday, August 13, 2010

'ஊருக்கு நூறுபேர்' திரையிடல்

அன்புள்ள சுரேஷ்:

இன்று மாலை பி. லெனின் இயக்கிய ஊருக்கு நூறுபேர் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம்.
இந்தப்படத்தைப்பார்க்க பலருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எல்லா நண்பர்களுக்கும் சொல்லவும்


திரையிடல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 13,2010
நேரம்: இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

--------
-- அன்புடன்,

பாரதி மணி
Bharati Mani
suresh kannan

Tuesday, August 10, 2010

எஸ்.ரா.அளித்த மகிழ்ச்சி



நேற்று எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தைப் பார்வையிட சென்ற போது அவர் மிகவும் சிலாகித்து குறிப்பிட்டிருந்த  ஒரு திரைப்படத்தை கண்டவுடன், அவர் ஏதோ என்னையே பாராட்டியது போல் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதற்கு காரணமிருக்கிறது. அதற்கு முன்னால்...

எனக்கு உலக சினிமாவின் மீதான ஆர்வமேற்படுவதற்கு எஸ்.ராவின் எழுத்துதான் மிகப் பெரிய உந்துதலாக இருந்தது / இருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறேன். இதுவரை நான் சினிமா பற்றி 122 பதிவுகள் எழுதியிருப்பதை சமீபத்தில் கவனித்த போதும், சினிமா விமர்சனங்கள் பற்றி தமிழில் எழுதப்படும் பதிவுகளில் குறிப்பிடத்தகுந்ததாக இந்த வலைப்பதிவையும் ஜெயமோகன் குறிப்பிட்ட போதும் நான் நன்றியுடன் எஸ்.ரா.வை நினைத்துக் கொண்டேன்.

சுயதம்பட்டத்தை நிறுத்திக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன். Le Grand Voyage என்ற திரைப்படத்தைப் பற்றி எஸ்.ரா சமீபமாக எழுதும் போது 'கடந்த சில வருசங்களில் நான் பார்த்த ஆகச்சிறந்த படம் இதுவே என்பேன்.' என்கிறார். இதில் எனக்கு உடனே உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் எவ்வித அறிமுகமுமில்லாமல் எதிர்பார்ப்புமில்லாமல் இயல்பாக இத்திரைப்படத்தை பார்த்தேன். பாரம்பரியங்களை கைவிடாத பழமைவாதியாக தோற்றமளிக்கும் தந்தை - இதற்கு நேரெதிராக நவீன உலக இன்பங்களை இலக்கில்லாமல் துய்க்க விரும்பும் மகன் .. என்று இரண்டு முரண்பட்ட பாத்திரங்கள் நீண்ட தொலைவிற்கு பயணிக்க நேரும் ஒரு ROAD MOVIE. தலைமுறை இடைவெளி காரணமாக ஏற்படுகிற உணர்வு மோதல்களை, முரண்களை இத்தனை கச்சிதமாக, யதார்த்தமாக எந்தவொரு திரைப்படத்திலும் நான் பார்த்ததில்லை. பிரமித்து அமர்ந்துவிட்டேன்.

ஏறத்தாழ என்னுடைய அலைவரிசையிலேயே சிந்திக்கும் ரசனையுடைய ஒரு நண்பரிடம் இந்தப் படத்தை காணக் கொடுத்தேன். "ரொம்பச் சாதாரணமான படம். இதுக்குப் போய் ஏன் இத்தனை எக்சைட்மெண்ட்' என்று அசுவாரசியமாய் குறுந்தகட்டை திரும்பக் கொடுத்தார் . என்னுடைய புரிதலில்தான் தவறிருக்கிறதோ என்று குழப்பமேற்பட்டது. சமயங்களில் இப்படியாகிவிடும். பரவலாக மிகவும் அதிகம் சிலாகிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைக் காண நேரும் போது மிக மோசமாக படமாக்கப்பட்ட, தொடர்பில்லாத மொண்ணைத்தனமான காட்சிகளுடன் இயங்கும் அது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரலாம். 'இதை அப்படியே வெளியில் சொன்னால் நம்முடைய ரசனையை சந்தேகிப்பார்களோ' என்பதனால் கூட அந்த ஏமாற்றத்தை அப்படியே விழுங்கி விட நேரிடும். மாறாக நாமும் அந்த சிலாகிப்பு கும்பலோடு இணைந்து கொண்டு "ரொம்ப பாதிச்ச படங்க. அதிலும் அந்த சீன்ல கேமரா டிராவல் ஆகுது பாருங்க. ச்சே.. சான்ஸே இல்ல" என்ற பாவனையை செய்ய நேரிடும். (இங்கு இரா.முருகனின் ஏதோவொரு சிறுகதையில் உள்ள வரிகள் நினைவுக்கு வருகிறது. 'பலான காட்சிகள்' நிறைந்திருப்பதாக நம்பி ஓர் ஆங்கிலப்படத்திற்குச் செல்லும் நண்பர்கள் அவ்வாறு பெரிதாக எந்தவொரு காட்சியும் இல்லாத ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் மனநிலையுடன் "..வக்காலி. அந்த காட்டுக்குள்ள எப்படி படம் எடுத்திருக்கான் பாருடா" என்று பாவனையாக இயல்புக்குத் திரும்ப விழைவார்கள்).

நண்பரின் மறுதலிப்பு காரணமாக நானும் இவ்வாறான குழப்பத்திற்கு ஆளானேன். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். முன்பைவிடவும் அதிகமாக பிடித்துப் போயிற்று. எப்படியும் இதை இந்தத் தளத்தில் எழுதி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அது இயலவில்லை. முன்னர் எனக்குள் படிந்திருந்த குழப்ப உணர்வு ஆழ்மனதில் உறைந்து 'இதை எழுத விடாமல் தடுத்துக் கொண்டிருந்ததோ' என்று  இப்போது யோசிக்கும் போது  தோன்றுகிறது.

இப்படியாக என்னை குழப்பிக் கொண்டிருந்த ஒரு படத்தை, மிகுந்த சிலாகிப்புடன் நான் மிக விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளர் குறிப்பிட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னுடைய ரசனை எஸ்.ராவின் பதிவின் மூலமாக உறுதிப்பட்டதன் விளைவிது. இனி காணவிருக்கும் திரைப்படங்களை எவ்வித குழப்பங்களுமில்லாமல், மற்ற விமர்சனங்கள் ஏற்படுத்தும் கற்பிதங்களின் பாதிப்புகளுமில்லாமல், எழுதுவதற்கான ஓர் உறுதியையும் தெளிவையும் எஸ்.ராவின் பதிவு அளித்திருக்கிறது.

suresh kannan

Thursday, August 05, 2010

லெனின் விருது - குறும்படங்கள் திரையிடல்

 லெனின் விருது

இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகனான படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்கள் தமிழின் மிக முக்கியமான படத்தொகுப்பாளர்.

மிக உச்சத்தில் இருக்கும்போதே படத்தொகுப்பு வேலைகளை குறைத்துக் கொண்டு குறும்படத் துறையில் தனது கவனத்தை திசை திருப்பினார். மேலும், தமிழில் குறும்படங்களுக்கான ஒரு அலையை தோற்றுவித்தார். இவர் இயக்கிய "நாக் அவுட்" என்கிற குறும்படம்தான் தமிழில் முதலில் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் எடுத்த குறும்படமாகும். இக்குறும்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து குறும்படங்களுக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவழித்து வருகிறார். குறும்படங்கள் சார்ந்து கிராமப் புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல், அவர்களை குறும்படம் எடுக்க ஊக்குவித்தல் என பல பணிகளை செய்து வருகிறார். மேலும் யாருமே செய்யத் துணியாத பணியாக தனது ஸ்டுடியோவில் குறும்படங்களுக்கு இலவசமாக படத்தொகுப்பை செய்து வருகிறார்.

குறும்படங்கள் சார்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். தனது பணியைக் கூட அவ்வளவாக கவனிக்காமல் குறும்படங்களுக்காக தொடர்ந்து போராடும் இவர், குறும்படங்களுக்கு தமிழக அரசு விருதுகளும், உதவிகளும் செய்து ஊக்குவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இன்னும் சொல்லப்படாத இவரது சாதனைகள் ஏராளம். இவரது எளிமை ஊரறிந்த ஒன்று.

இத்தகைய சிறப்பு வாய்ந்த படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்களின் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதில் தமிழ் ஸ்டுடியோ.காம் பெருமிதம் கொள்கிறது. மேலும் இந்த ஆண்டு குறும்படத் துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை திரு. லெனின் அவர்களுக்கு கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ.காம் மேலும் பெருமிதம் கொள்கிறது. இந்த விருது அவரை கௌரவிப்பதற்காக அல்ல. இந்த விருதை பெறுவதன் மூலம் அவர்தான் தமிழ் ஸ்டுடியோவை கவுரவிக்கிறார். இதுமட்டுமின்றி இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை உலகத் தமிழ் குறும்பட தினமாக கொண்டாட தமிழ் ஸ்டுடியோ.காம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று (லெனின் அவர்களின் பிறந்த தினத்தில்) அந்த ஆண்டு குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு லெனின் விருது வழங்கப்படும். இந்த விருது, பட்டயத்துடன் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. மேலும் விருது பெரும் ஆளுமை குறித்த ஆவணப்படமும், அவர் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படும். இது அவர் பற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள உதவும்.

மேலும் இந்த விருதைப் பெற யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுடையவர்கள் எங்கிருந்தாலும் விருது அவர்களை வந்தடையும். இதற்காக தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை இறுதியாக மூன்று பேர்கள் அடங்கிய நடுவர்கள் குழு தீர்மானிக்கும். இந்த நடுவர்கள் குழுவில், குறும்படம், இலக்கியம் சார்ந்த இருவரும், அனுபவம் வாய்ந்த ஒருவரும் இடம்பெற்றிருப்பர்.
------------------------------------------------------------------------------------------------------
திரையிடல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 07 முதல் 13 வரை
நேரம்: இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

------------------------------------------------------------------------------------------------------

லெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)

------------------------------------------------------------------------------------------------------

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா
மற்றும்"லெனின் விருது" துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்படத் திருவிழா!!


படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

அதன் விபரம்:

ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன். (கல்லூரி, ரெட்டை சுழி)

ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் (என் பெயர் பாலாறு)

ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: தொலைகாட்சி நகைச்சுவை எழுத்தாளர் திரு. பழனி (சின்ன பாப்பா, பெரிய பாப்பா)

ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ்

ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: மற்ற மொழிக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் திரு. ஹரிஹரன்

ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர், நடிகர் அஜயன் பாலா

ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். திரு. பி. லெனின்

திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்...

திரையிடல் நடைபெறும் இடம்:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024


suresh kannan

Sunday, August 01, 2010

எந்திரன் இ(ம்)சை



When in Rome, do as the Romans do  என்பதற்கேற்ப தற்போதைய பரபரப்பான 'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவு.

மெல்லக் கொல்லும் விஷம் போன்றது ரஹ்மானின் இசை என்று வைரமுத்து ஏற்கெனவே சொல்லி விட்டார். சில உருவாக்கங்களைத் தவிர ரஹ்மானின் இசை முதல் கவனிப்பில் பொதுவாக அத்தனை கவர்வதில்லை. (வந்தே மாதரம்' முதல் கவனிப்பிலேயே ஆவேசமாக பிடித்திருந்தது). மற்ற பாடல்கள் தன்னுடைய மாய முடிச்சுகளிலிருந்து சிறிது சிறிதாக அவிழ்ந்து பெரும்பாலான இசையழகை நம்முன் காட்டின பின்புதான் நம்முடைய நிரந்தர விருப்பப் பட்டியலில் இணைகிறது.  'ரோஜா' திரைப்படப் பாடல்களை முதன்முறை கேட்கும் போது என்னை அதிகம் கவர்ந்தது 'காதல் ரோஜாவே'. பிறகு சுனாமி மாதிரி ஊரையே காலி செய்த 'சின்ன சின்ன ஆசை'யை அப்போது நான் கண்டுகொள்ளவேயில்லை.

ரஹ்மான் தன்னுடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும் பல லேயர்களை அடுக்கி அதில் பல ஆச்சரியங்களை ஒளித்து வைக்கிறார் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். குறிப்பாக நள்ளிரவு அமைதியில் கேட்கும் போது துரித நேரத்தில் ஒலித்து அடங்கும் ஓர் இசைத்துணுக்கை திடீரென கவனிக்கும் போது 'ஏன் இதை இத்தனை நாள் கவனிக்கவில்லை' என்ற ஆச்சரியத்தோடு ஏதோ நானே ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போல் பெருமிதமாயிருக்கும்.

எந்திரன் இசை ரஹ்மானின் தரத்தில் இல்லை. எதிர்பார்த்தது போலவே ஷங்கர் + ரஜினி தரத்தில்தான் இருக்கிறது. உலகத்தரமான நுட்பத்தைக் கொண்டு உள்ளூர் மூளையோடு சிந்திப்பவர் ஷங்கர். அவரின் படங்கள்  ஏதோ வித்தியாசமான பாவனையில் இருந்தாலும் அடிப்படையில் எம்.ஜி.ஆர் படங்களின் உள்ளடக்கத்தைத் தாண்டுவதில்லை. அவரின் இயக்க செயற்பாடுகள் முழுவதும் வெகுஜன ரசனையையும் வணிகத்தையும் வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்பது வெளிப்படை. எனவேதான் ஆஸ்கர் விருது தரததிலிருக்கும் ரஹ்மானிடமிருந்து கூட புதுமையான இசையை எதுவும் அவரால் கேட்டு வாங்க முடியவில்லை. கெளதம் மேனன் கூட தன்னுடைய சமீப படமான வி.தா.வில் சற்று மாறுபட்ட இசையை வாங்கியிருந்தார். 'ஆரோமலே' கூட ரஹ்மானே முன்வந்து விருப்பப்பட்டு அமைத்த பாடல் என்பது ஒரு trivia. இப்படியான ஒரு துளி மாற்றத்தைக் கூட எந்திரன் இசையில் காணமுடியவில்லை.

'அன்பு வழி வெறுப்பு வழி' என்று இரண்டு வழிகள் என் முன்னே இருந்தன. நான் அன்பு வழியை தேர்ந்தெடுத்தேன்' என்றார் ரஹ்மான் தனது ஆஸ்கர் விருது ஏற்புரையில். அந்த வழிமுறையையே தாம் இசையமைக்க ஒப்புக் கொள்ளும் படங்களுக்கும் ரஹ்மான் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வணிக மூளையைக் கொண்டே சிந்திக்கும் இயக்குநர்களை புறக்கணித்து விட்டு ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வரும் புதிய இயக்குநர்களை ஆதரிக்கலாம். என்ன அவ்வளவாக சில்லறை பெயராது.

எந்திரன் இசையின் தற்போதைய கவனிப்பில் 'அரிமா அரிமா'வும் 'காதல் அணுக்கள்'-ம் ஒரளவு உடனே கவர்கின்றன. அதில் அரிமா கூட .. வன்னே வன்னே..முதல்வனே'யை நினைவுப்படுத்துகிறது என்றால் இரண்டாவது 'தெனாலி'யின் 'சுவாசமே..'யை நினைவுப்படுத்துகிறது. 'கிளிமாஞ்சாரோவை' உப விருப்பமாக இணைக்கலாம். ரஹ்மானின் பெரிய பலமான percussion திறமை இதில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

நவீன நுட்பத்தின் மூலமாக நாம் இழந்ததின் பட்டியலில் திரையிசைப் பாடல்களையும் இணைத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் பாடுவது எந்தப் பாடகர் என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். பி.சுசிலா என்றால் நம் காதுகள் குதூகல தன்னிச்சையுடன் கூர்மையடையும். ஆனால் இப்போது அது அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை. இசையமைப்பாளர் பாடகரின் குரலை மிகஸியில் அடித்து நுட்ப ஜூஸாக தரும் போது பாடுவது சின்மயியா, மடோனாவா என்று சந்தேகம் வருகிறது. பாடகர்களின் தனித்தன்மையை அழித்தொழித்து விட்டது நுட்பமும் அதை பெரிதும் சார்ந்திருக்கும் இசையமைப்பும்.

பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முன்பெல்லாம் பாடலாசிரியர்கள் வருவதற்கு முன்னால் மெட்டுக்கேற்ற 'டம்மி' வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடலை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். கண்ணதாசன் போன்ற வித்தகர்கள் வந்தவுடன் அந்த இசையை தம்முடைய அற்புத தமிழ் வரிகளால் நிரப்புவார்கள். ஆனால் இன்றைய நிலைமை அந்த டம்மி வார்த்தைகளோடே முடிந்துவிடுகிறது. உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் எந்திரன் பாடல் வரிகளை வாசித்துப் பாருங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டு துண்டான வரிகளாக மிக நகைச்சுவையாக இருக்கும். பாடலுக்கு துணையாக இருக்க வேண்டிய இசை முன்னால் நின்று இரைச்சலாக ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. 'மீட்டருக்குள்' அடங்க வேண்டிய வார்த்தைகளுக்காக பாடலாசிரியர்கள் தமிழை மென்று அதில் துப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். எந்திரனுககு மாத்திரமல்ல ஏறக்குறைய இன்றைய அனைத்து திரையிசைப் பாடல்களுக்குமே இதே நிலைதான். அறிவியல் துணுக்குகளை கிழித்து ஆங்காங்கே ஒட்டி வைக்கும் செயற்கைத்தனத்தை வைரமுத்து 'காதலன்' திரைப்படத்திலேயே ஆரம்பித்து விட்ட ஞாபகம். இதிலும் அவ்வாறே கைக்குக் கிடைக்கும் விஞ்ஞான வார்த்தைகளை இறைத்துப் போட்டு தமிழ்த் தொண்டாற்றியிருகிறார். ஒரு காலத்தில் வானத்தை போதிமரமாகக் கொண்டவரின் நிலைமை இன்று இத்தனை பரிதாபகரமாக ஆகியிருப்பது காலத்தின் கட்டாயம்தான் போலிருக்கிறது.

எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே.  தொடர்ந்த மீண்டும்  சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம். ரஹ்மானின் பலமும் பலவீனமும் இதுவே.

suresh kannan