Thursday, June 17, 2010

கெளதம் மேனனின் காதல்

கொஞ்சம் லேட்தான். அதற்காக, 'என்னது! காந்தி செத்துட்டாரா, எலிசபத் டெய்லர் வயசுக்கு வந்துட்டாங்களா?'- என்றெல்லாம் கேட்கக்கூடாது.

எனக்கு தற்போது வயது முப்பதிற்கும் கூடுதலாக இருக்கக்கூடும் என்கிற தகவலை மாத்திரம் சொல்லி விட்டு மேலே நகர்கிறேன்.

பொதுவாக எல்லா பதின்மர்களையும் போலவே எனக்கு அந்த பதின்ம வயதில் ஒரு காதலை சம்பாதித்து விட வேண்டுமென்பதுதான் உயர்ந்த லட்சியமாக இருந்தது. கார்த்திகை மாதத்து நாய் போல் அலைந்து திரிந்து சம்மர்சால்ட் எல்லாம் அடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சற்று நிதானத்திற்கு வந்தவுடன்தான் புரிந்தது. 'எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி' என்கிற புகழ்பெற்ற வாக்கியத்தைப் போல 'எல்லாக் காதல்களும் யோனியை (அல்லது vice versa) நோக்கி' என்பதுதான் அது. வாத்தியார் சுஜாதாவும் ஒரு மங்கலமான காதலர் தினத்தில் கட்டுரையொன்றை எழுதி 'இது முழுக்க ஹார்மோன்களின் கபடி விளையாட்டுதான். 'காதல் என்கிற வஸ்து பூமிப்பந்தின் எந்த மூலையிலும் கிடையாது' என்று என் எண்ணத்திற்கு வலுச் சேர்த்தார். சில தினங்களுக்கு முன்புவரை கூட இந்த நிலைப்பாட்டிலிருந்து நான் சிறிது கூட மாறவில்லை. ஆனால் 'வி.தா.வ.' திரைப்படம் பார்த்தவுடன் அந்த எண்ணம் சற்று தகர்ந்து போனது நிஜம்.

காமத்தைத் தாண்டி காதல் என்கிறதொரு சமாச்சாரம் மறைபொருளாக ஆழ உறைந்திருக்குமோ?

'காதலும் காதலைச் சார்ந்த இடமும்' என்று தமிழ்சினிமாவை வகைப்படுத்தலாமென்பது போல் பெரும்பாலான படைப்புகளின் கச்சாப்பொருள் என்னவென்று பார்த்தால் காதலே. ஒரு கட்டுரையில் செழியன் சொல்லியிருந்ததைப் போல இதையாவது ஒழுங்காக எடுத்துத் தொலைத்தார்களா என்று பார்த்தால் இல்லை. இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்து எடுக்க குனிந்து நிமிர்வதற்குள் இருவரின் தலையும் இடித்துக் கொள்ள நிமிர்ந்து பார்த்தால்.. நம்தனநம்தனநம்தன.. என்று ராஜாவின் ரெடிமேட் பின்னணி இசையோடு காதல் மலர்ந்துவிடும். அல்லது இருவரும் முதலில் பூனைகள் போல் பிராண்டிக் கொண்டேயிருந்தால் இரண்டாவது ரீலில் அவர்கள் உத்தரவாதமாக காதலிக்கப் போகிறார்கள் என்பதை காண்டமலிருந்து தப்பிப்பிறக்கும் நாளைய குழந்தை கூட சொல்லிவிடும். பின்பு அவர்கள் மரத்தைச் சுற்றி.. முத்தமிடும் போது சரியாக வந்து மறைத்து நிற்கிற பூக்களில் தொடர்ந்து அப்பன்களிடமிருந்தோ, வில்லன்களிடமிருந்தோ.. தங்கள் காதலை பிய்த்துக் கொண்டு ஓடும் போது சில்அவுட்டில் இயக்குநரின் தத்துப்பித்து மெசேஜோடு படம் முடியும்.

லெளதீக வாழ்வில் பிற்பாடு அவர்கள் லோல் படப்போவதையும் காமம் களைத்து அவர்களின் நிஜமான ஆளுமைகளை இருவருமே காணச் சகியாமல் சண்டைக் கோழிகளாக மாறுவதையும்... சொற்பமான படங்களே முன் வைத்திருக்கின்றன. இதுவொரு வெறும் இனக்கவர்ச்சிதான் என்று இந்த பிரம்மாண்டச் சுவரை முதன்முதலாக இடிக்க முயன்றது சந்தானபாரதியும் பி.வாசுவும் இணைந்து இயக்கிய 'பன்னீர் புஷ்பங்கள்' என்று நினைக்கிறேன். தற்போது பாலாஜி சக்திவேலின் 'காதல்'வரை இது நீண்டிருந்தாலும் இவற்றின் எண்ணிக்கை குறைவே. 


காதல் என்பது காமத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான் என்கிற என்னுடைய இத்தனை வருட புரிதலில், வி.தா.வ சற்று சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படைப்பையும் படைப்பாளியையும் இணைத்து யோசிக்கக்கூடாது' என்கிற அரதப்பழசான தருக்கத்திற்கு உட்படாத விமர்சனக் கோட்பாடுகளை தூக்கியெறிந்துப் பார்த்தால் கெளதம் நிச்சயமாக யாரையோ முதல் பார்வையிலேயே கண்டு விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார்; தோல்வியடைந்திருக்கிறார்; அதிலிருந்து மீண்டிருக்கிறார் என்பதை அவருடைய முதல் படத்திலிருந்து அவதானிக்கும் போது தெரிகிறது. 'மின்னலே'யில் மாதவனின் அந்த துடிப்பு நிஜமாக இருக்கிறது. குற்ற பின்ணணிகளில் நிகழ்ந்தாலும் 'காக்ககாக்கவிலும்' .வேட்டையாடு விளையாடு'விலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டன.

சமகாலநிகழ்வையும் திரைப்படத்தினுள்ளே வரும் ஒரு திரைப்படத்தையும் நான்-லீனியர் கலவையில் பிசைந்திருந்த விதாவி-ன் திரைக்கதை உத்தி எனக்குப் பிடித்திருந்தது. சிம்பு-திரிஷாவின் காதலை நெடுகச் சொல்லிக் கொண்டு செல்லும் திரைக்கதை சடக்கென்று தண்டவாளம் மாறி அதே பாவனையில் சிம்பு இயக்கும் படத்தின் காட்சிகளாக தொடர்வதும் இறுதியில்தான் அது பார்வையாளர்களுக்கு வெளிப்படுவதும் நல்ல உத்தி. சற்று zoom out செய்து பார்த்தால் கெளதமின் காதலே திரையில் விரிவடைந்தாகவும் இதனைக் கொள்ளலாம். ஒரே படத்தில் மூன்று காதல் கதைகள்.

ரொம்ப வருடங்களாக நம் கண்ணே முன்னேயே மார்க்கெட்டிலும் நிழல் சந்துகளிலும் ரவுடியாக திரிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன், திடீரென்று வெள்ளை சட்டையும் டக்இன்னுமாக பச்சை சவர வாசனையுடன் நம் வீட்டிற்கு வந்து "சார், நான் சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்திருக்கேன். ஸ்வீட் எடுத்துக்குங்க"... என்றால் எப்படி நமக்கு மகா ஆச்சரியமாய் இருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவைப் பார்த்து. (சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதுதான் சமூகத்தின் உயர்ந்த பணியா, அப்படியெனில்.. என்று யாரும் நுண்ணரசியலை தேட வேண்டாம்; சட்டென்று தோன்றின உதாரணமிது). அவரின் வழக்கமான எரிச்சலூட்டும் உடல்மொழிகள் இதில் இல்லாமலிருப்பது ஒர் ஆறுதல்.

ஒரு சமகால காதல் அவதி இளைஞனை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக திரையில் பிரதிபலித்திருந்தார் சிம்பு. காதல் ஏற்றுக் கொள்ளப்படும் வரைக்குமான இவரின் தவிப்பும் பின்பான நிராகரிப்பின் வேதனையும் எதிர்ப்புகள் தரும் சோர்வையும் தனக்காக திருமணத்தை நிறுத்தி விட்டாள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியும்.. என நிஜமான ஒரு பாத்திரம். இப்படி இவர் அருவி மாதிரி பொங்கிக் கொண்டிருக்க மறுமுனையில் திரிஷா பக்கெட் நீர் மாதிரி மொண்ணைத்தனத்தோடு இருந்தது எரிச்சலாக இருந்தது. அந்த நடுஇரவில் வீட்டிற்கு வெளியே, "ஏன் தன்னை அவன் திருமணம் செய்து கொள்ள முடியாது?' என்று விளக்குகிற (பின்பு சிம்பு கைபேசியை தூக்கியெறிந்து உடைக்கிற) காட்சியில் மாத்திரமே அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிம்புவின் நண்பராக வரும் கணேஷின் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) யதார்த்தமான நடிப்பும் பேச்சுமொழியும் சுவாரசியமானதாக இருந்தது.

ரஹ்மானின் 'ஷாம்பெயின்' வழியும் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக 'ஹோசன்னா' பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் பின்னணி நிலப்பரப்புகளும் மிக அருமை. தமிழத்திரைக்கு புதிய பாணி வரவான 'ஆரோமலே' பாடலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அரதப்பழசான கருப்பொருளாக இருந்தாலும் ஒரு இயக்குநரால் நுண்ணுனர்வுகள் நிரம்பிய காட்சிகளோடு அதை ஒரு உன்னத அனுபவமாக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் மிக கச்சிதமானதொரு உதாரணம்.

மேலே எனது வயதைக் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா? இதுவரை அழகான, திடகாத்திரமானதொரு பெண் எதிரே வந்தால், உடனே உலக சினிமாவின் சப்-டைட்டிலை வாசிப்பது போல் (நன்றி பேயோன், டிவிட்டர்) முகத்திலிருந்து சற்று இறங்குமுகமாகவே நோக்கத்தெரிந்த எனக்கு, எல்லாவற்றையும் உதறிவிட்டு யாரையாவது துரத்தி துரத்தி புனிதமாக காதலிக்க வேண்டும் போலிருந்தது. அந்தளவிற்கான மனவெழுச்சியை ஏற்படுத்தியது விதாவ. 

suresh kannan

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

உங்கள் பதிவு அருமை

ஆனால் என்னுள் அந்த படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஒருவேளை மிகுந்த எடிர்ப்பார்புகளுடன் நான் பார்த்ததாலோ என்னவோ.

காதல், பருத்தி வீரன், காதலுக்கு மரியாதை போன்று இந்த படம் என்னை தாக்க வில்லை.

அதுவும் போக சிம்புவும், த்ரிஷாவும் உண்மையான வாழ்வில் சிறந்த நண்பர்கள், நானே சில முறை அவர்களை பார்க் ஹோட்டலில் அவர்கள் நண்பர்குல்டன் சாப்பிடுவதை பார்து இருக்கிறேன். எனவே எனக்கு முதல் காட்சியிலேயே ஒரு காதலர்களாய் அவர்களை பார்க்க முடிய வில்லை.

எனக்கு பல காட்சிகளில் கிளிஞ்சல்கள் படம் (மோகன், பூரினிமா) ஞாபகத்திற்கு வந்தது.

பாடல்கள் மிக அருமை. Hosanna song is wow.


நீங்களாவது விளக்கம் சொல்லுங்கள்.

என் இதயம் உடைத்தாய் மறு இதயம் தருகிறேன்- இது காந்திய தத்துவமா அல்லது வேறு ஏதும் செய்தியா

யாசவி said...

// (சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதுதான் சமூகத்தின் உயர்ந்த பணியா, அப்படியெனில்.. என்று யாரும் நுண்ணரசியலை தேட வேண்டாம்; சட்டென்று தோன்றின உதாரணமிது)//

உசாராத்தான் இருக்கிங்க

சரளாமான நடை கலக்கிறீங்க நல்லா இருக்கு படமும் உங்க விமர்சனமும்.

Chithran Raghunath said...

சுரேஷ் கண்ணன்,
நான் தனியாள் இல்லை என்று உணரவைத்த கட்டுரை. விதாவி எனக்கு பிடித்ததற்குக் காரணம் படம் முழுக்க விரவி நிற்கிற மெல்லிய ரொமான்ஸ். அந்தக் காட்சிகளில் ரஹ்மான் நிரடி நிரடி அடிக்கிற உயிர் சிலுப்பும் கிடார். அப்றம் ஆரோமலே! ஒரு புன்னகையை உசுப்பி சில ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளறியது. ஒன்றுமேயில்லாமல் ஒரு படம் எடுத்து ஓட்ட கவுதமுக்கு தைரியம் ஜாஸ்திதான் என்றார்கள். எனக்கென்னவோ நிறைய இருக்கிறார்போல் இருந்தது.

Mohan said...

//சிம்பு-திரிஷாவின் காதலை நெடுகச் சொல்லிக் கொண்டு செல்லும் திரைக்கதை சடக்கென்று தண்டவாளம் மாறி அதே பாவனையில் சிம்பு இயக்கும் படத்தின் காட்சிகளாக தொடர்வதும் இறுதியில்தான் அது பார்வையாளர்களுக்கு வெளிப்படுவதும் நல்ல உத்தி//

இதே உக்தியைத்தான் கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜாவும் உபயோகித்திருந்தார்

புலிகேசி said...

@Mohan,

//இதே உக்தியைத்தான் கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜாவும் உபயோகித்திருந்தார்//

இதே உத்தியைத்தான் 'வேலு பிரபாகரனின் காதல் கதை'யிலும் உபயோகித்து இருந்தார்கள் :D தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல உலக அளவிலும் இந்த உத்தி நிறைய படங்களில் ஏற்கனவே உபயோகித்து உள்ளார்கள்.

Jey said...

3 மணி நேரம் பார்த்த படத்தை பத்தி 3 நாள் யோசிச்சிருப்பீங்க போலயே.
நீங்க ஒரு படம் டைரக்ட் பண்ண போலாம் சார்.

சாணக்கியன் said...

/* மறுமுனையில் திரிஷா பக்கெட் நீர் மாதிரி மொண்ணைத்தனத்தோடு இருந்தது எரிச்சலாக இருந்தது. */

இது படம் பார்க்கும்போது மிகப்பெரிய அலுப்பைத் தந்தது.

உண்மையில் வாரணம் ஆயிரம் ஏற்படுத்திய மன எழுச்சியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை. அழகாக படமாக்கியுள்ளார். அற்புதமான பாடல்கள். ஸ்ரேயா கோசலில் கிரீடத்தில் மற்றுமொரு வைரம், ‘மன்னிப்பாயா’ பாடல். நிறைய குறைகளும் உள்ளன. இரண்டாம் முறை பார்த்தால் தெரியும்!

அகல்விளக்கு said...

just Wowww......

இயக்குனர் சார்லஸ் said...

மிக நல்ல பதிவு, சுரேஷ் கண்ணன்.
பொதுவாக நான் கவணித்த ஒரு விஷயமும், வி.தா.வ பற்றி எதிர்மறையாக விமரிசத்தவர்கள் எல்லாருமே 30 வயதைக் கடந்த, வாழ்க்கையின் வேறு சிக்கல்களால் ருசி வறண்டவர்கள். உங்களையும் என்னையும் போல சிலரே விதிவிலக்கு (எனக்கு 36). என்னுடைய நெருங்கிய சில நண்பர்கள் வி.தா.வ வெளியான புதிதில் மிக மோசமாக விமர்சித்தார்கள், நான் அந்தப் படத்தைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது, ஏன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்குப் புரியவே இல்லை. எனக்கு ஒரு சிறு குறை கூட இல்லை, திரிஷாவின் கதாபாத்திரத்தின் தன்மை கூட மிகவும் பிடித்திருந்தது, ஒரு நாவலில் வரும் பாத்திரம் போல இருந்தது. முழுவதும் சிம்புவின் பார்வைக் கோணத்திலிருந்தே அவளுடைய பாத்திரமும், சம்பவங்களும் விவரிக்கப்பட்டிருப்பதுதான் படத்துக்கு ‘ஒருமையை’க் கொடுத்திருக்கிறது.

இயக்குனர் சார்லஸ் said...

// கெளதம் நிச்சயமாக யாரையோ முதல் பார்வையிலேயே கண்டு விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார்; தோல்வியடைந்திருக்கிறார்; அதிலிருந்து மீண்டிருக்கிறார் //

என்கிற முடிவுக்கு நீங்கள் வந்ததைப் போலவே, அவர் போலீஸ் அதிகாரியாகவும் வேலை பார்த்தார் என்று அவரின் சில படங்களை வைத்து முடிவெடுத்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நகைச்சுவைக்காகச் சொன்னேன்..

காதலில் உருகாதவர்கள் யார் இருக்கிறார்கள்? காதலிக்கும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் குறைந்தபட்சம் பகல் கனவிலாவது உருகியிருப்பார்கள். நேரடி அனுபவங்களை விடவும் பகற்கனவுகளே படைப்பாளியை உருவாக்கும் என்பது என் நம்பிக்கை. மின்னலே, வாரணம் ஆயிரம், வி.தா.வ, நாயகர்களுக்குள் எப்படி கௌதம் ஒளிந்துகொண்டிருக்கிறாரோ அதைப்போல போலீஸ் அதிகாரி வேடத்துக்குள் இருப்பதும் அவரே. அது அவருடைய இன்னொரு பகல் கனவாக இருக்கலாம்.

பின்னோக்கி said...

காதல் காட்சிக்கு கௌதம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்பானவர்கள். இந்தப் படமும் பார்க்க நன்றாக இருந்தது. மிகவும் எளிமையான கதை. த்ரிஷா கேரக்டர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். 1. அவள் மிகவும் குழப்பவாதி என்பதை டைரக்டர் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார். 2. சிம்புவை விட வயது அதிகம் என்று காட்டப்பட்டிருப்பதால் ஒரு இறுக்கம் வேண்டும் என்று டைரக்டர் கேட்டிருக்கலாம்.

Selvakumar said...

உங்களின் எத்தனையோ பதிவுகளைப் பார்த்து வியந்திருக்கிறேன்..உங்கள் ரசனை எப்படி என்னுடையதுடன் ஒத்திருக்கின்றது என. இந்தப் பதிவைப் படித்தவுடன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உங்கள் மனதிலிருப்பதை அழகாக, தெளிவாக, கோர்வையாக படத்தைப் போலவே ஒரு கலைப் படைப்பாகவே முன் வைப்பது நிரம்பப் பிடித்திருக்கிறது. நான் 32. காதலின் அழகும், வசீகரமும், ஆளை அடிக்கும் அதன் பிரமாண்ட உணர்வலைகளும் பதின்மம் போலவே இன்றும் என்னை ஆக்கிரமிப்பதுண்டு...வி.தா.வ போன்ற படைப்புகளையோ, சில கவிதைகளையோ ரசிக்கும் போது. ஆனாலும் வாத்தியாரின் கூற்றில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதிக ரசனை, கற்பனைத் திறன், நுண்ணுணர்வுகள் எல்லாம் நம்மை நமது அடிப்படை instinct களிடமிருந்து வெகுவாக தள்ளி நிறுத்துகின்றன. அந்நிலையிலிருந்து பார்க்கும் போது காமத்திற்கும் நம் மனம் கட்டி எழுப்பும் காதல் என்ற உன்னதமான வஸ்துவிற்கும் உள்ள மகா பெரிய இடைவெளியில் இது போன்ற சுகமான மயக்கங்கள் உருவாவதுண்டு. இது மதுவினதை விட மிக ரசனையான போதை.
// படம் முழுக்க விரவி நிற்கிற மெல்லிய ரொமான்ஸ். அந்தக் காட்சிகளில் ரஹ்மான் நிரடி நிரடி அடிக்கிற உயிர் சிலுப்பும் கிடார். அப்றம் ஆரோமலே! //
ஐநாக்ஸ் திரையரங்கில் இப்படத்தை நான்கு முறை பார்த்தேன். பிடித்த பாடலை கண்களை மூடி பல முறை ரசிப்பது போலவே... இதன் பின்னணி இசையும் படம் எழுப்பும் உணர்வுகளும்... அடடா...
// ஒரு நாவலில் வரும் பாத்திரம் போல இருந்தது. முழுவதும் சிம்புவின் பார்வைக் கோணத்திலிருந்தே அவளுடைய பாத்திரமும், சம்பவங்களும் விவரிக்கப்பட்டிருப்பதுதான் படத்துக்கு ‘ஒருமையை’க் கொடுத்திருக்கிறது. // சார்லஸின் இக்கருத்து ஓர் சிறந்த அவதானம்.

மேவி... said...

"காதல் ஜெய்ச்சவங்களுக்கு நினைச்சு பார்க்குற சந்தோசம், தோதவங்களுக்கு வாழ்க்கை முழுக்க வர வலி" ன்னு ஜீவா உன்னாலே உன்னாலே படத்துல ஒரு வசனம் வச்சு இருப்பாரு.......

காதலை முழுமையா அனுபவிச்சவங்களுக்கே தெரியும் ..அதோட சுகமும் வலியும்.....


பதிவு அருமை .....

கருந்தேள் கண்ணாயிரம் said...

நண்பர் சுரேஷ் கண்ணன்...

நிஜமாகவே நண்பர் கார்த்திகேயன் (அறிவுத்தேடல்) உங்களது பதிவைப்பற்றிக் கூறியபோது, “என்னாது !! காந்திய சுட்டுட்டாங்களா?” என்ற எனது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.. அப்புறம் பதிவையும் படித்தேன்..

எனது வாழ்வில் நான் சந்தித்த காதலை இப்படத்தில் மறுபடி கண்டேன் நண்பரே.. அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.. இப்படம் வெளிவந்த போது நான் அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்..

நல்ல பதிவு.. நன்றி சுரேஷ் கண்னன் !! ;-) (இது ஒரு ஜாலி கமெண்ட்டு.. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)

Thekkikattan|தெகா said...

நல்ல விமர்சனம் -

வாத்தியார் சொல்லிட்டார்னா எல்லாமே சரியா இருக்கணும்னு என்ன எழுதப் படாத சட்டமா சுரேஷ்.

'காதலில்' அது எதன் மீதானதாகவும் இருக்கலாம் லயித்து தன்னை இழந்து ரசனையில் வாழ்வதற்கு குவாண்டிஃபையிங் மண்டையை உள்ளே நுழைத்தால் வேலைக்கு ஆகாது என்பது என்னுடைய படிப்பினை. அந்த பீலின்ஸ் அளவிட முடியாதது, அதில இருக்கணும், அனுபவிக்கணும், ஆராயப்பிடாது ரகம் அந்த நிகழ்வு - அதில சிக்கி அதன் சுவையை ருசிச்சிருக்கலன்னா வாழ்க்கையில் இருக்கும் கட்டற்ற மற்ற சாத்தியங்கள் புலப்படாது :D ...

KKPSK said...

//கொஞ்சம் லேட்தான். அதற்காக, 'என்னது! காந்தி செத்துட்டாரா// ROTFL :)

சித்ரன்: வரிக்கு வரி வழிமொழிகிறேன்..

theatre-லிருந்து வெளியே வரும் போது இசையில் நனைந்தது போன்ற உணர்வு...இடையில் வரும் முஸ்தபா..முஸ்தபா ஹம்மிங்/bgm ARR-ன் நக்கல் ரசித்தேன்.

"சார்லஸ் சொன்னா "ஒருமைதன்மை" அருமை..

இந்த படத்தில் த்ரிஷாவின் character was portrait-ed well without compromise confidently. முன்னாடியே படித்தாலும் இன்னிக்குதான் டைம் கிடைச்சுது..

கண்ணன்.கா said...

உங்களுடைய எழுத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருக்கிறது. காலையில் ஆரம்பித்தேன் படிக்க, இன்னும் முடியவில்லை. தொடருங்கள். உங்களுடைய சினிமா விமர்சனம் அருமை. (சிலதை தவிர்த்து)ஒவ்வொன்றுக்கும் படித்ததும் பின்னூட்டம் இட ஆர்வம் இருந்தும், அடுத்து என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தால் முடியவில்லை. நாம் சொல்ல நினைக்கும், பிடித்த பிடிக்காத விசயத்தை அதன் சுவை குன்றாமல், நகைச்சுவையோடும் அதே நேரம் அதன் வீரியம் குறையாமலும், எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். நானும் எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் உங்களுடைய சரளமான எழுத்து நடையைப் படித்த பிறகு எனக்கு கொஞ்சம் தயக்கம் வருவது என்னமோ உண்மை. தொடரட்டும்