Thursday, April 17, 2008

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்

இந்தப் பதிவு முழுவதும் அல்பசினோவின் புகழைப் பாடப் போகிறோனோ என்று என் மீது எனக்கே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு இந்தப் படம் முழுவதும் (Scent of a Woman) ஒரு eccentric blindman பாத்திரத்தை மிகத் திறமையாகவும் அதே சமயத்தில் அநாயசமாகவும் வாரி இறைத்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார் Alpacino. நம் தமிழ்த் திரைப்படங்களில் கண்பார்வையற்ற பாத்திரம் என்றால்........... ஒரு கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டும் .. கேனக்கூ... த்தனமாக (நன்றி சத்யராஜ்) நடிப்பார்கள். நான் கவனித்ததில் ஒரளவிற்கு இதை சிறப்பாக செய்தவர்கள்.. ராஜபார்வையில் 'கமல்ஹாசனும்' அமர்க்களத்தில் 'சார்லியும்'. (காசியில் விக்ரம் செய்தது ஒரு gimmics). அல்பசினோ இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க வேண்டி கண்பார்வையற்ற மாணவர் ஒருவரை கூர்மையாக அவதானித்தும் பிரத்யேக contact lens அணிந்தும் வெற்றிகரமாக தன்னுடைய பாத்திரத்தை நிறுவியிருக்கிறார். கண்பார்வையற்றவர்களுக்கு காது, மூக்கு, விரல்கள் ...எல்லாமே கண்கள்தான். தன்னுடைய பிரத்யேக அந்தரங்க உலகை இவற்றின் மூலமாகத்தான் தரிசிக்கின்றனர். விமானப் பணிப்பெண்ணின் பெயரை சரியாக அல்பசினோ யூகிக்கும் போது, கூட இருக்கும் சார்லி வியப்படைகிறான். "எப்படி அவள் பெயரை சரியாக கூறினீர்கள்?" 'அவள் உபயோகிக்கும் நறுமணத்தின் பிராண்ட் (Floris) அவளின் கலிபோர்னியா உச்சரிப்பு .. இவற்றின் மூலம் என்னும் அல்பசினோ தொடர்ச்சியாக பெண்களை வர்ணிக்கத் தொடங்கி இப்படியாக முடிக்கிறார்.... "there's only two syllables in this whole wide world worth hearing: pussy."

Photobucket

சார்லி சிம்ஸ் (Chris O'Donnell) அந்த நகரத்தின் உயர்தரமான பள்ளியில் ஸ்காலர்ஷிப்பில் படித்துக் கொண்டிருக்கும் ஓர் ஏழை மாணவன். விடுமுறையில் தன்னுயை ஊருக்குச் செல்ல பணம் சேர்க்க வேண்டி வாரஇறுதி விடுமுறையில் ஓரிடத்தில் வேலைக்குச் செல்கிறான். அந்தக்குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஊருக்குச் செல்லவிருப்பதால் தனிமையாக இருக்கும் அந்த நபரை அவர்கள் வரும்வரை சார்லி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஏற்பாடு. அந்த நபர்தான், அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற, குடிகாரரான, எப்போது கோபம் வரும் என்று தெரியாத சிடுமூஞ்சியான, சார் என்று அழைக்கப்படுவதை விரும்பாத... ·பிராங்க் ஸ்லேட். (Alpacino). அறிமுகத்திலேயே மிரண்டு போகும் சார்லி இந்த வேலை தன்னால் ஆகாது என்கிறான். குடும்பத்தார் அவனை கெஞ்சி, வற்புறுத்தி தலையில் கட்டிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் "சார்லி வாடா போகலாம் நியூயார்க்கிற்கு" என்று திகைத்து நிற்கிற அவனை இழுத்துக் கொண்டு செல்கிறார் அல்பசினோ. விமானத்தில்தான் மேற்சொன்ன அந்த உரையாடல் நிகழ்கிறது. தான் கண்பார்வையற்றவன் என்பது உணரப்படக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் அல்பசினோவை (என் கையை பிடிக்காதே.. தேவையென்றால் நான் உன்னை பிடித்துக் கொள்கிறேன்). ஒருவாறு சமாளிக்கிறான் சார்லி. அங்குள்ள உயர்தரமான ஹோட்டல் ஒன்றில் அறையெடுக்கும் அல்பசினோ, உணவகத்தில் தான் நியூயார்க் வந்திருப்பதின் திட்டத்தை சொல்கிறார். நல்ல ஹோட்டல்... நல்ல உணவு... புணர ஒரு நல்ல பெண்.. பின்னர்...

பின்னர் தற்கொலை.

'என்னடா இது இழவு' என்று சார்லி திகைக்கிறான். ஏற்கெனவே அவன் ஒரு பிரச்சினையில் மாட்டி மனத்தை உழப்பிக் கொண்டிருக்கிறான். பள்ளியில் புதிதாக வந்திருக்கும் தலைமை ஆசிரியரின் மீது வெறுப்புறும் சில மாணவர்கள் குறும்புத்தனமான செய்கையின் மூலம் அவரை அவமானப்படுத்தி விடுகின்றனர். ஸ்தலத்தில் சார்லியும் இருந்திருப்பதால் அவர்கள் யாரென்று தனக்கு காட்டிக் கொடுக்குமாறு கூறுகிறார் த.ஆ. அவனின் மேற்படிப்புத்திட்டத்திற்கு பள்ளியின் மூலம் தன்னால் உதவ முடியுமென்றும், காட்டிக் கொடுக்காவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பள்ளியை விட்டு அவன் வெளியேற்றப்படலாம் என்றும் அந்த ஏழை அப்பாவி மாணவனை எச்சரிக்கிறார்.
·பிராங்க் தற்கொலை செய்து கொண்டாரா?.... சார்லி தன்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டானா?..... படத்தைப் பாருங்கள். ஹிஹி.

()

ஏற்கெனவே சொன்ன மாதிரி இந்தப்படம் முமுவதும் அல்பசினோவின் களம். மனிதர் அதகளம் செய்திருக்கிறார். கண்பார்வையற்ற பாத்திரத்தில் நடிப்பவர்கள் வழக்கமாக மழுப்பும் கறுப்புக் கண்ணாடி எதுவும் அணியாமல் நிர்வாண கண்களாலேயே, கண்பார்வையற்றவர்களின் உடல் மொழியை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் சந்திப்பிலேயே சார்லியை "Get out of here" என்று கத்தி விரட்டும் போது நமக்கும் அந்த மனிதர் மீது வெறுப்பு ஏற்படுகிறது.

நியூயார்க்கில் தன்னுடைய சகோதரரின் வீட்டு விருந்திற்கு அறிவிப்பில்லாமல் செல்கிறார். இவரின் பிரசித்தமான குணத்தை நன்கறிந்த அவர்கள் வெறுப்பை மறைமுகமாக காட்டுகின்றனர். அங்குள்ள ஒரு உறவினர், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அல்பசினோவிற்கு எப்படி கண்பார்வை போயிற்று என்பதை அவரை வெறுப்பேற்றும் விதமாக குரூர நகைச்சுவையுடன் விவரிக்கும் போது அவர் தவறும் இடங்களில் எல்லாம் தானே எடுத்துக் கொடுக்கிறார் அல்பசினோ. ஆனால் கூட வந்திருக்கும் சார்லி அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் போது நகைச்சுவை செய்தவன் மேல் காட்டுத்தனமாக பாய்ந்து தொண்டையில் ஒரு நண்டுப்பிடியை போடும் போது அல்பசினோவிற்கு இருக்கிற இன்னொரு பக்கத்தையும் சார்லியைப் போலவே பார்வையாளனான நம்மாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. படத்தின் மிகச் சிறப்பான காட்சிகளுள் ஒன்றிது.

வாடகை ferrari காரை தானே வேமாக ஓட்டுவது, சார்லியின் கையிலிருந்த முகவரிச்சீட்டை பிடுங்கி வாயில் போட்டு மென்றுவிடுவது, உணவகத்தில் சார்லி மது வழங்குபவரிடம் காட்டும் சைகையை உள்ளுக்குள் எப்படியோ உணர்ந்து.. dont do that .. என்பது... முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி அற்புதமான ஒரு tango நடனமாடுவது....பாலியல் தொழிலாளியிடம் போய் விட்டு வந்தபிறகு ஓரு மாதிரி தடுமாற்றமாக இருப்பது.... என்று பல காட்சிகளில் அல்பசினோவின் நடிப்பை சொல்ல ஆரம்பித்தால் முழு திரைக்கதையையும் இங்கே எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதினாலும் அது மேக்னா நாயுடுவின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டுமே பார்த்தமாதிரி அரைகுறையாகவே இருக்கும். முழுவதையும் நீங்களே பார்த்துவிடுங்கள்.

()

அல்பசினோவின் பிரம்மாண்ட நடிப்பிற்கு தன்னால் இயன்றவரை underplay செய்து ஈடுகொடுத்திருக்கிறார் சார்லியாக நடித்திருக்கும் Chris O'Donnell. தன்னுடைய பள்ளி பிரச்சினையை அல்பசினோவிடம் கூறிக் கொண்டு வரும் போது அல்பசினோ கேட்கிறார். " உன் வளர்ப்புத் தந்தை இந்தப் பிரச்சினையை கவனிக்க மாட்டாரா, ஏன்? - "Cause he's an asshole." என்கிறான் சார்லி. அல்பசினோ அதற்கு பதிலாக சொல்கிறார். "Ah. Ha-ha ! Well, that's all right, Charlie. Every family's got one nowadays.". படத்தின் ஆங்காங்கே அல்பசினோ "Hoo-aah" என்று சொல்வதே அத்தனை அழகாக இருக்கிறது.

வெளியே விறைப்பாக முன்கோபத்துடன் உலவிக் கொண்டிருக்கும் உள்ளுக்குள் தோழமைக்காக ஏங்குகிற, தன்னுடைய குறையை நினைத்து உருகுகிற அவரின் இன்னொரு பக்கத்தை உணர்ந்து கொள்கிறான் சார்லி.

()

Il buio e il miele ("Darkness and Honey") என்கிற நாவலை தழுவி 1974-ல் எடுக்கப்பட்ட Profumo di donna என்கிற திரைப்படத்தின் மறுவடிவம்தான் Scent of a Woman. இதன் இயக்குநர் Martin Brest. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அல்பசினோ பெற்றார். சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த adapted திரைக்கதை போன்ற பிரிவுகளிலும் இந்தப் படம் நாமினேஷன் தகுதியையும் பெற்றது.

அல்பசினோவின் ஆர்ப்பாட்டமான இன்னொரு பரிமாணத்தை Scarface என்கிற திரைப்படத்தில் பார்க்கலாம்.

()

எந்தவொரு மேலைநாட்டுப்படத்தையும் நம் தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிட்டு எழுதினால் அது நமது தாழ்வுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக சிலர் கூறுவர். இன்னும் சிலர் வணிக ரீதியில் அவர்களுக்கிருக்கும் சந்தைப்படுத்துதலை காரணம் காட்டுவர். அதெல்லாம் சும்மா ஹம்பக். யோசித்துப் பாருங்கள்.. இரண்டே பிரதான பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு எந்தவித டமால் டுமீல் ஆக்ஷன் பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல்.. ஒரு சுவாரசியமான திரைக்கதையையும் திறமையான இரு நடிகர்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் சாதிக்க முடியுமென்றால் நம்மால் அது முடியாதா என்கிற ஆதங்கமே இவ்வாறாக எழுத வைக்கின்றது. சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட குப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும். பெரும்பான்மை மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. பருத்திவீரன் போன்ற படங்கள் சிறந்த உதாரணம்.

suresh kannan

15 comments:

PRABHU RAJADURAI said...

'என்ன காந்தி செத்துட்டாரா?'ன்னு அடிக்கடி பின்னூட்டத்தில எழுதுவாங்க...இப்பதான் எனக்கு அர்த்தம் புரிந்தது :-))

அல்பாசினோவின் குரலை தங்களுடைய மொழியில் எப்படி விளக்குவீர்கள் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள பிரபு,

பின்னூட்டத்திற்கு நன்றி.

(இதை சிவாஜி கணேசன் குரலில் கற்பனை செய்து பார்க்கவும்):

இந்தப் படத்த கேள்விப்பட்டுருக்கேன். dvd-ஐ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். இப்பத்தான் கெடச்சுது. யய்யோ.... நான் என்ன செய்வேன்..கடவுளே...

Radha Sriram said...

நசிருதீன் ஷாவோட "ஸ்பர்ஷ்" பாத்து இருகீங்களா சுரேஷ்....??நல்லா பண்ணிருப்பார் கிடைச்சா கண்டிப்பா பாருங்க.:)

யாத்ரீகன் said...

thnx for introducing this movie..

நந்தா said...

//எந்தவொரு மேலைநாட்டுப்படத்தையும் நம் தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிட்டு எழுதினால் அது நமது தாழ்வுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக சிலர் கூறுவர். இன்னும் சிலர் வணிக ரீதியில் அவர்களுக்கிருக்கும் சந்தைப்படுத்துதலை காரணம் காட்டுவர். அதெல்லாம் சும்மா ஹம்பக். யோசித்துப் பாருங்கள்.. இரண்டே பிரதான பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு எந்தவித டமால் டுமீல் ஆக்ஷன் பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல்.. ஒரு சுவாரசியமான திரைக்கதையையும் திறமையான இரு நடிகர்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் சாதிக்க முடியுமென்றால் நம்மால் அது முடியாதா என்கிற ஆதங்கமே இவ்வாறாக எழுத வைக்கின்றது. சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட குப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும்.//

Well said....

//நான் கவனித்ததில் ஒரளவிற்கு இதை சிறப்பாக செய்தவர்கள்.. ராஜபார்வையில் 'கமல்ஹாசனும்' அமர்க்களத்தில் 'சார்லியும்'. //

இதை சொல்லும் போது எனக்கு இன்னொன்று நி்னைவுக்கு வருகிறது. ஞானி தன்னுடைய ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். ”கண்பார்வை இல்லாத கமலுக்கு எப்படி டைவ் அடிக்க வேண்டும் என்று கைகளின் ஆக்‌ஷன் மூலம் மாதவி சொல்லித்தரும் விசித்திரம் எல்லாம் இந்தப் படத்தில் உண்டு” என்று. அஃப்கோர்ஸ் இதற்கு என்னிடம் வேறு விளக்கம் இருக்கிறது.

அல்பசினோ நல்ல படம் என்பதில் சந்தேகமேயில்லை. மீதியை திரையில் காண்க என்று முடித்த போதுதான் தலையைச் சுத்திடுச்சு. மத்த படி இதன் திரைக்கதையை எவ்வளாவு சொன்னாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் அது மேக்னா நாயுடு சமாச்சாரம்தான்.

Amal said...

நீங்கள், ஹரன் ப்ரசன்னா மற்றும் சிலர் உலக திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை கடந்த 5 வருடங்களாக படித்து வந்த போதிலும் Scent of woman-ஐப் பற்றியும் அல்பசீனோ-வின் நடிப்பைப்பற்றியும் யாருமே எழுதவில்லையே, ஏன்? என்பது எனக்கு விளங்கவே இல்லை. சிலவேளை தாமதங்களும் நல்லதுதான் போலிருக்கிறது இது போன்ற நல்ல விமர்சனத்திற்காக:-).

அருமையான விமர்சனம் சுரேஷ் கண்ணன்...என்ன அந்த Jack on the Rocks-அ விட்டுடீங்க:-)

Hoo aah...

Sridhar V said...

//அல்பாசினோவின் குரலை தங்களுடைய மொழியில் //

ஆம். அந்த குரலுக்காகவே Devils Advocate படத்தை எனது நன்பர் மீண்டும் மீண்டும் பார்த்தார்.

பார்வையற்றவராக அல் பாசினோ இயல்பாக நடித்திருக்கிறார் என்று நீங்கள் வியப்படைகிறீர்கள். பொதுவாகவே ஹாலிவுட் படங்களில் எந்த வகை பாத்திரமானாலும் இயல்பான நடிப்பிற்க்கு மெனக்கெடுவார்கள். இதில் அல் பாசினோ மற்றும் தனித்துவம் என்றெல்லாம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். Blind Dating என்று 2006-ல் வெளியான படம். Chris Pine வெகு இயல்பாக நடிப்பார். சாதாரண Hinglish வகை படங்கள் மாதிரியான கதைதான். ஆனால் perfect execution. நீங்கள் கண்தெரியாமல் நடித்ததை பற்றி புகழ்ந்து எழுதியதை படித்ததினால் தோன்றியது. :-)

நல்ல விமர்ச்னம். வாழ்த்துகள்.

ஹரன்பிரசன்னா said...

//கேனக்கூ... த்தனமாக (நன்றி சத்யராஜ்) நடிப்பார்கள்.//

இப்படி எதையாவது சொன்னால்தான் நம் மனதுக்குள் இருக்கும் உணர்ச்சியின் வேகம் வெளியில் தெரியும் என்கிற மாயைக்குள் நீங்களும் வீழ்ந்தது ஆச்சரியம். Very bad.

கருப்புக் கண்ணாடி, குச்சியைத்தான் அமர்க்களத்தில் சார்லியும் செய்தார். என் நடிக்கத் தெரியாதவர்கள் பட்டியலில் சார்லிக்கு எப்போதும் இடம் உண்டு.

இந்த சிடி பார்சல். :)

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. சிலர் சில படங்களை பரிந்துரைத்திருக்கிறார்கள், அதற்கும் நன்றி.

பிரசன்னா,

//...இப்படி எதையாவது சொன்னால்தான் நம் மனதுக்குள் இருக்கும் உணர்ச்சியின் வேகம் வெளியில் தெரியும் என்கிற மாயைக்குள் நீங்களும் வீழ்ந்தது ஆச்சரியம். Very bad.//

அது ச்சும்மா.... போகிற போக்கில் எழுதினது. சத்யராஜ் பேசின முறையில் எனக்கு பெரிதும் உடன்பாடு கிடையாது.

//கருப்புக் கண்ணாடி, குச்சியைத்தான் அமர்க்களத்தில் சார்லியும் செய்தார்.//

ஆம். என்றாலும் சில நுண்ணியமான மாறுபாடுகளை கூர்மையாக வெளிப்படுத்தினார் என்பதே என் அவதானிப்பு.

rajkumar said...

What about Revathy's acting in the movie "Kai kodukkum kai"- I beleive her acting was good in that movie though movie was not that great.

பிச்சைப்பாத்திரம் said...

//What about Revathy's acting //

ராஜ்குமார்,

'கை கொடு்க்கும் கை'யை அவ்வளவு கவனமாக பார்த்ததில்லை. ஆனால்.. நல்ல வேளை..ஞாபகப்படுத்தினீர்கள்.

'அவதாரத்தில்' ரேவதியின் நடிப்பு மிகப்பிடித்திருந்தது. அதிலும் குளித்துக் கொண்டிருக்கும் ரேவதியும் அவரை துரத்தும் பாலாசிங்கும்... இருவரின் நடிப்பும் அற்புதம்.

Anonymous said...

Scent of a woman: //சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட குப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும்.//

Very true words. I remember watching the movie soem 10 years back. The Tango and Ferrari scene and the way Al Pacino would dodge teh police officer always lingers in my mind. After reading your review it pushes me to rent the DVD again and watch it. One of teh master pieces by Al Pacino.

ஜமாலன் said...

இப்படம் நான் பாரக்கவில்லை. ஒரு நணபர் பாரக்கும்படி கூறியிருந்தார். உங்கள் விமர்சனம் அந்த ஆர்வத்தை அதிகப்படுத்திவி்ட்டது.

//சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட குப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும். பெரும்பான்மை மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.?//

முற்றிலும் எனக்கு உடன்பாடான வரிகள்.

Unknown said...

Excellent review for an extra ordinary film Suresh Kannan. I should have read your review before writing mine. நீங்க தெளிவா crisp ஆ எழுதியிருக்கீங்க. மீண்டும் ஒரு முறை இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். ;)) நேரம் இருந்தால் இதையும் வாசிக்கவும்
http://umashakthi.blogspot.com/2010/06/scent-of-woman.html

Unknown said...

"Hoo-aah" என்கிற அந்த வார்த்தைப் பிரயோகம், ரொம்ப நாள் என் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

சிறப்பான படம். சிறப்பான விமர்சனம். நன்றி.