Monday, April 14, 2008

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

"புள்ளிராஜா" யாரு? என்றொரு விஷயம் முன்னர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. 'புள்ளி' வாக்கியத்தை கேட்டவுடன் சிலர் "கோலம்' போட்டு "இது ஆணுறைக்கான விளம்ரபமாகத்தான் இருக்கும் சார்" என்று கிளுகிளுப்பு ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் சென்னைப் பதிப்பையும் 'புலி வருது' பாணியில் சொல்லிக் கொண்டே இருந்ததில் இன்று வந்தே விட்டது புலி. ஆனால் இது புலியா இல்லை பூனையா என்று போகப் போகத்தான் தெரியும் போலிருக்கிறது. டெல்லியையும், பெங்களூரையும் வெற்றி வாகை சூடிய பின்னர் இப்போது சென்னையை நோக்கி பிளாஸ்கோடும், டிராவல் பையுடனும் படையெடுத்ததில் "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு' உடனே சுரம் வந்து தன்னுடைய பத்திரிகையின் விலையை இன்றிலிருந்து குறைத்து விட்டனர்.

எப்படித்தான் இருக்கிறது டைம்ஸின் சென்னை பதிப்பு? ஒரு அவசரப் பார்வை:

காலை வணக்கம் சொல்லி ஆரம்பித்த இந்தப் பத்திரிகை புதுப் பெண்டாட்டி மாதிரி ஜிலுஜிலுவென்று எல்லாப்பக்கங்களிலும் வண்ணமயமாகவும் விளம்பர புஷ்டியாக இருந்தாலும் ஒரு செய்திப்பத்திரிகையின் ஆதார விஷயமான 'செய்தி' என்பதை தேட வேண்டியதாயிருக்கிறது. இணைப்புகளில் போட விஷயத்தையும் பிரதான பக்கங்களில் வைத்து நிரப்பியிருக்கிறார்கள். உள்ளூர் செய்திகளுக்கு போதுமான இடமில்லை. திகட்டத்திகட்ட நிறைய பொதுக்கட்டுரைகளை பிரசுரித்து மேகஸைனாக்கியிருக்கிறார்கள். (இரண்டாம் பக்கத்தை கிழித்து டைம்ஸ் அலுவலகத்தில் கொடுத்து 20ந் தேதி ஏ.ஆர்.ரகுமானின் live இசை நிகழ்ச்சியை ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கார் பார்க்கிங் ஏரியா பக்கத்திலிருந்து குத்துமதிப்பாக கண்டுகளிக்கலாம்)

ஆந்திராவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான டெக்கான் கிராக்னிக்கிள் சென்னைக்கு வரும் போதும் இப்படித்தான் பரபரப்பாக இருந்தது. ஆனால் இப்போது ஓய்ந்து போய் சபர்பன் ரயில்களில் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு கசக்கி தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். ஆனால் டைம்ஸ் ஆ·ப் இந்தியா அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால் 'ஹிந்து' விழிப்பாகவே இருக்க வேண்டியிருக்கும்.

வீட்டில் டைம்ஸ் கொடுத்த அதிருப்தியில் அலுவலகத்திற்கு வந்து 'ஹிந்து'வை புரட்டினபின்தான் கைநடுக்கம் சற்று நின்றது. இதே போல் இந்த பேப்பரை படித்தால்தான் காலைக்கடனையே கழிக்க முடியும் என்ற விசுவாசிகள் இருக்கும்வரை மஹாவிஷ்ணுவிற்கு கவலையில்லை.

ஆனால்.... எதுவும் இப்போதைக்கு தீர்மானமாக சொல்லவியலாது.

suresh kannan

3 comments:

TBCD said...

அடடே..இப்பத் தான் இணைய பதிப்பை புரட்டி, தமிழகத்து மக்களுக்கு நியாயம் செய்யுமா என்றுப் பார்த்தேன். பார்த்தா அதுக்கு ஒரு விமர்சனம் அதுக்குள்ளே.. :)

பெங்களூர் டைம்ஸுடன் கம்பேர் செய்யும் போது, நடிகைகள் படம் கம்மி.

கூடிய விரைவில், நடிகைகள், நடிகர்கள் சப்பை மேட்டர்களுக்கு சென்னை டைம்ஸில் வெகு சீரியஸாக பதில் சொல்லுவதை கண்டு களிபார்கள் , சென்னை மக்கள்.

பார்ட்டி விவரம், (எவன் படிக்கிறான் அதை என்றே இன்று வரை தெரியல்ல..) பெங்களூர் பதிப்பில் இருக்கும்..சென்னை பதிப்பிலும் இருக்கு.

பத்தி எழுத்தாளர்கள் பெயரைப் பார்த்தேன், எல்லாம் சிங், கோஷ் என்று இருந்தது. லோக்கல் அரசியல் செய்தி ஒன்றுக் கூட இல்லை. உதாரணமாக, பா.ம.க செய்தியே கண்ணில் படவில்லை...அப்பறம் என்ன செய்தித் தாள்...(தினமும் அறிக்கை வுடுறார்..அதைக் கூட போடலை..:(( )

Boston Bala said...

சூடான பார்வைக்கு நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல விமர்சனம்.
இந்து'வின் வாசக வட்டம் சிறிதே கட்டமைப்பானது என எண்ணுகிறேன்,அதுவும் தரத்தில் நீர்த்தே வந்திருக்கிறது.
இப்பொதைய சூழலில் இணையத்தில் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க முடிகிறது.