Thursday, April 21, 2005

ஓரு மழை நேர கவிதை நூல் வெளியீட்டு விழாத் துளிகள்......

நேற்றைய சென்னையின் ஒரு ஆச்சரியமான மழை நேர மாலைப் பொழுது. வாட்டிகனில் மக்கள் வெண்புகை தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்தது போக (தகவல் நுட்பம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த காலக் கட்டத்திலும் இந்த சம்பிரதாயங்களை கட்டி மாரடிக்கத்தான் வேண்டுமா?) நான் வானத்தை சூழந்திருந்த கருமேகங்களை ஆச்சரியத்துடன் கவனித்தேன். சென்னையில் மழை பெய்வது ஓர் ஆச்சரியமென்றால் அதனோடு இன்னொரு ஆச்சரியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன் என்பதுதான் அது. மழை என்பது அபசகுனமோ அல்லது சுபசகுனமோ நானறியேன்; கவிதை என்பது நிச்சயம் அபசகுனம்தான். அதிலும் மூத்திரம் போவது போலும் கவிதை ஒரு கழிவுப் பொருளாக ஆகிவிட்ட இந்தக் காலத்தில்.

காலையில் செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருக்கும் போது (மாடுகள் கூட செய்யக்கூடிய காரியமிது) 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியில் முனியப்பராஜ் என்பவரின் 'ஒற்றனைத் தொலைத்த செய்தியிலிருந்து' என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்கவிருப்பதை அறிந்தேன். விருந்தினர் பட்டியலில் 'பெரிய தலைகள்' சில தென்பட்டதால் அந்த நிகழ்ச்சிக்கு போக முடிவு செய்தேன். 'கவிதை நூல் வெளியீட்டுக்கெல்லாம் ஏம்ப்பா போறே?' என்று இயற்கையே என்னைத் தடுக்கிறாற் போல் மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

()

கவிதை என்கிற இலக்கிய வடிவம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மிரட்சியும் பயத்தையும் கொடுத்து வந்துக் கொண்டிருக்கிறது. பாமரரர்கள் எளிதில் அணுகாதபடிக்கு நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட செய்யுள்கள் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்தின. சீர், தளை, தொடை, அல்குல், யோனி என்று எதுவும் தட்டாமல் எழுத வேண்டி தனக்குத்தானே ஒரு வலையை ஏற்படுத்திக் கொண்டு சிக்கலான மொழியில் எழுதி, யாராவது 'என்னங்க சொல்ல வர்றீங்க? என்றவுடன்
அதற்கொரு தெளிவுரையை எழுதி..... அடப் போங்கப்பா...

இதற்கு நேராக உரைநடையிலேயே சொல்ல வந்தததை நேரடியாக சொல்லி விடலாம். அதுவும் நிச்சயமாக சொல்லி விட முடியாது. நவீன எழுத்தாளர்கள் சிலருடைய படைப்புகளை அகராதியும் அமிர்தாஞ்சன் தைலமும் வைத்துக் கொள்ளாமல் படிக்க முடியாது. (உதாரணத்திற்கு, கோணங்கி எழுதியிருக்கிற 'பிதிரா' நாவலை முயற்சித்துப் பார்க்கவும்). என்றாலும் கவிதையில் இருக்கிற சூட்சுமத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு என்னை நெருங்கி ஆசுவாசப்படுத்தியவன் பாரதி என்கிற கவிதை தொழில் செய்தவன். ..... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.... என்கிற போதே என் மீது யாரோ தீக்குச்சியை கிழித்து போட்டாற் போல் உணர்ந்தாற் போன்ற கவிதைகளை எழுதியவன்.

வெறும் அழகுணர்ச்சியை கொண்டு ஏதாவதை வியந்து கொண்டும், தலைவனைப் பிரிந்த தலைவியின் காமப் பிதற்றல்களையும், அசட்டுக் காதல் கவிதைகளும் என்னை வெறுப்படையவே செய்கின்றன. இதனாலேயே கவிதைப் பக்கங்களை புத்தகங்களை கண்டவுடன் திகைப்பூண்டை மிதித்தவன் போல் (என்ன அர்த்தம் இதற்கு?) விலகிப் போகிறேன். கடந்த கால படைப்புகளில் சிறந்தவை என்பதற்கு ஓர் அளவுகோல் உண்டு. அந்தந்த கால கட்டங்களில் நடந்த சமூகப் பிரச்சினைகள், போராட்டங்கள் போன்றவை அந்தப் படைப்புகளில் எதிரொலித்திருக்க வேண்டும். இந்த நோக்கில் எழுதப்பட்ட அபூர்வமான கவிதைகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. மிகச்சிறந்த உதாரணமாக சமகால காசி ஆனந்தனைச் சொல்லலாம்.

வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள்
எப்படி மறந்தன
தம் கொம்புகளை?

(கவிதை வரிகள் சரியாக நினைவில் இல்லை)

என்ற மிகச்சிறிய அணுகுண்டுக் கவிதையில் ஒரு புரட்சிக்கான விதையே அடங்கியிருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளே ஒரு சமூக மேம்பாட்டிற்கு அதிகம் தேவை. மற்ற தலைப்புகளில் எழுதுபவர்களும் ஒரு மூலையில் எழுதித் தொலைக்கட்டும். 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்றும் 'சினிமாச்சுருள்களை எல்லாம் ஒரு சின்ன தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்' என்று கோபமாக எழுதின வைரமுத்துதான் இன்று 'ஆரிய உதடுகள் உன்னது; திராவிட உதடுகள் என்னது' என்று எழுதிக் கொண்டிருக்கிறார்.
எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை

என்று சிறுவயதில் படித்திருந்தும் நான் இன்னும் மறக்க முடியாத கவிதையை எழுதிய வாலிதான் 'எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி? என்று விஞ்ஞான ரீதியான கேள்வியை கேட்கிறார். விளக்கம் கேட்டால் அது 'கற்பனைத் தமிழ்' இது 'விற்பனைத் தமிழ்' என்று மழுப்புகிறார்.

எதுகை, மோனையின் மீது உள்ள மோகம் தமிழனுக்கு குறையாத வரையில் அவன் உருப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. இப்படியாக கவிதை என்கிற வடிவத்தின் மீது எனக்கு வெறுப்பை ஊட்டினவர்களின் பட்டியல் அதிகம்.

என்றாலும் இந்தக் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு போன போது உரையாற்றியவர்களில் பலர் என்னுடைய மேற்கூறின என் பார்வையையே எதிரொலித்தது ஒர் ஆச்சரியம். அது பற்றி அடுத்த பகுதியில் ..........

suresh kannan

6 comments:

Anonymous said...

//கவிதை என்பது நிச்சயம் அபசகுனம்தான். அதிலும் மூத்திரம் போவது போலும் கவிதை ஒரு கழிவுப் பொருளாக ஆகிவிட்ட இந்தக் காலத்தில்.//

ஆஹா, கெளம்பிட்டான்யா...



By: இன்னொருகவிதைப்பிரியன்

Anonymous said...

அடுத்த பகுதி எப்பத்தான் வரும்?
-ஹரன்பிரசன்னா

By: Haranprasanna

Anonymous said...

விரைவில்

Anonymous said...

//எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை//
இந்த வரிகள் வாலியுடையது அல்ல. தமிழன்பனுடையது என்று ஞாபகம்.

மற்றபடி கவிதையைப் பற்றிய உங்களின் அபிப்ராயங்கள் இயல்பானவையே.

இப்னு ஹம்துன் said...

//எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை//
இந்த வரிகள் வாலியுடையது அல்ல. தமிழன்பனுடையது என்று ஞாபகம்.

மற்றபடி கவிதையைப் பற்றிய உங்களின் அபிப்ராயங்கள் இயல்பானவையே.

Anonymous said...

நண்பர் இப்னு அம்துன்,

அந்த வரிகள் வாலியுடையதுதான். அவரது பொய்க்கால் குதிரைகள் என்கிற ஆரம்ப கால கவிதைத் தொகுதியில் பார்த்த ஞாபகம்.

- சுரேஷ் கண்ணன்