Monday, February 21, 2005

நானும் என்னுடைய அந்தரங்க டைரிகளும்

உங்களில் எத்தனை பேர் டைரி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.
நான் கடந்த பத்து வருடங்களாக பிடிவாதமாக விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.



இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. யாரோ பரிசளித்த விலையுயர்நத டைரியை வருட ஆரம்பத்தில் பிரித்துப் பார்த்து அதன் வாசனையை ஆழ்ந்து நுகர்ந்த பிறகு, அந்த 'பளபளா' டைரியின் 'வழவழ' பக்கங்கள் என்னைப் பார்த்து 'ஏதாவது என் மீது எழுதேன்' என்று அழைத்த மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டதால் அந்த நல்ல டைரியை வீணாக்க விரும்பாமல் எழுத ஆரம்பித்து விட்டேன். ஆரம்பத்தில் பெரும்பாலோரை போலவே 'இன்று ரவியைச் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து 'ரதிநிர்வேதம்' திரைப்படத்திற்கு செல்லலாமென்கிற அந்த சரித்திரச் சிறப்பு பெற்ற முடிவை எடுத்தோம்' அல்லது '15பி பேருந்தில் வந்து கொண்டிருந்த போது ஜன்னலோர இருக்க¨யில் அமர்ந்திருந்த ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். நான் மறுபடி புன்னகைப்பதற்குள் அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன்' என்கிற மாதிரி அபத்தமாகத்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் நாளடைவில் எழுதுவதில் ஓர் பிடிப்பு ஏற்பட்டு என் மன உணர்வுகளை எனக்குத் தெரிந்த பாமர மொழியில் எழுத ஆரம்பித்தேன்.

என்னுடைய அழுகை, கோபம், சந்தோஷம், பரவசம், அவமானம், ஏமாற்றம், துக்கம், வன்மம், மகிழ்ச்சி, பெருமிதம், குரோதம், வெற்றி என்று கலவையாக அன்றாட தேதிவாரியாக என்னுடைய உணர்வு வெளிப்பாடுகள், கடல் மணலில் கிளிஞ்சல்களைப் போல எல்லாப் பக்கங்களிலும் இறைந்து கிடக்கின்றன. நண்பர்களிடம் நான் சொன்ன பொய்கள், அவர்கள் என்னிடம் சொன்ன பொய்கள், நான் செய்த துரோகங்கள், எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், அநீதிகள், வாழ்க்கையின் அபத்தங்கள் குறித்த என்னுடைய கேள்விகள், வலிகள், வேதனைகள் என்னுடைய வடிகட்டப்பட்ட விகார எண்ணங்கள், என்று அனைத்தையும் எழுதியிருக்கிறேன். அதுவரை புத்தகங்களில் மட்டுமே அறிந்திருந்த பாலியல் சமாச்சாரங்களை யதார்த்த உலகில் தேடப் போன அனுபவம் முதற்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நான் முயன்று பார்த்த மூன்று தற்கொலை முயற்சிகள் வரை எல்லாமும். என்னுடைய டைரிகளை ஒரு சிறந்த நூல் பதிப்பாளர் உதவி கொண்டு எடிட் செய்து பார்த்தால் ஒரு பின்நவீனத்துவ நாவல் கிடைக்கக்கூடும்.

ஆனால் எல்லாமும் என்றால் எல்லாவற்றையும் ஒளிவுமறைவில்லாமல் எழுத முடிந்ததில்லை. ஒரு நாள் யாராவது இதை எடுத்து படித்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் பல ரகசியங்கள் இன்னும் எழுதப்படாமலேயே ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல தூக்கத்தில் உளறிய கனவுகளோடு மெல்ல மெல்ல அழிந்து போயிருக்கின்றன.

என்னுடைய டைரியை மட்டும் படிக்க நான் யாரையும் அனுமதித்தது இல்லை. ஒரு முறை என்னறைக்கு வந்த நண்பன் விளையாட்டாக நான் மறைத்து வைத்திருந்த டைரியை படிக்கப் போக, என் வாழ்க்கையில் நான் இதுவரை அடைந்திராத உச்சபட்ச கோபத்தை அன்று அடைந்தேன். காது கூசிப் போகும் கேட்கத்தகாத வார்த்தைகள் கொண்டு அவனைத் திட்டினேன். அதற்குப் பிறகு நான் இதுவரை அவனை எங்கும் சந்திக்கவில்லை. ஆனால் என் டைரி எழுதப்பட்டிருக்கும் தொனியைப் பார்த்தால், நான் யாரோ இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதற்காக எழுதப்பட்டிருக்கிற மாதிரியே இருக்கும். சுவாரசியமாக இருக்க வேண்டுமென்பதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். யாருக்குமே காட்ட விரும்பாத டைரியை நான் ஏன் இப்படி எழுத வேண்டும்? புரியவில்லை.

O

மற்றவர்களிடம் இருந்தால் கூட கணவன், மனைவி இருவருக்கிடையிலும் அந்தரங்கமான ரகசியங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பார்கள். அபத்தம். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுதான். அவனாக அனுமதிக்காத வரை நாம் எந்த ரகசியத்தையும் அங்கிருந்து எட்டிப் பார்த்து அறிந்து விட முடியாது. அது அநாகரிகமும் கூட. 'அந்தரங்கம் புனிதமானது' என்கிற ஜெயகாந்தனின் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. உறவுமுறைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இன்னொருவரின் அந்தரங்கத்தில் தலையிடும் உரிமையை நாம் யாருக்கும் அளிக்கவியலாது.

புத்தகங்களை ஒழுங்குபடுத்த நேர்கிற சமயங்களில், புத்தகங்களிடையில் மறைந்திருக்கிற டைரிகளை எடுத்து புரட்டிப் பா¡க்கும் போது சுவாரசியமானதாகவே இருக்கிறது. சில முக்கியமான, மகிழ்வான நிகழ்வுகளை படிக்கையில் அந்தக் கணங்களை மறுபடியும் வாழ்ந்து பார்க்கிற ஒரு பரவசம் ஏற்படுகிறது. சோகமான நிகழ்வுகளுக்கும் அப்படியே. சில சமயங்களில் எவ்வளவு அபத்தமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் இந்தச் சமயத்தில் வந்த கோபத்தை தவிர்த்திருக்கலாமென்றும் மகிழ்ச்சியாக தோன்றிய சம்பவம் பிற்பாடு வருத்தத்துக்குரியதாக மாறியது என்றும் அந்த நண்பரை அவ்வாறு திட்டியிருக்கக்கூடாது என்றும் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் எதிர்வினையாற்றியதில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து நம் எதிர்கால தவறுகளை கூடுமானவரை தவிர்க்க ஒரு நல்ல சாதனமாக விளங்குகிறது பழைய டைரிகள். 'இதுவும் கடந்து போகும்' என்று நம் தற்போதைய பிரச்சினைகளை கண்டு மிரளாமல் நகைச்சுவையாகவே அணுக முடிகிறது.

என்னுடைய 17வது வயதில் சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலியை' முதன்முறையாக தொலைக்காட்சியில் இரவு 1 மணிக்கு பார்த்து முடித்துவிட்டு, அந்தப்படம் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பை கண்ணீருடன் தேதியின் எல்லைகளை கடந்து ஒரு பத்து பக்கங்களுக்கு எழுதியிருந்தேன். இரண்டு நாள் கழித்து பார்த்த 'சாருலதா' திரைப்படத்திற்கும் இவ்வாறே எழுதியிருந்தேன். குறிப்பிட்ட டைரி தொலைந்து போனதை பெரிய இழப்பாகவே கருதுகிறேன்.

ஒருவன் தன் எண்ணங்களை தொடர்ந்து பதிந்து வைப்பது மிகவும் உபயோகமானதென்றே கருதுகிறேன். கிருத்துவ மதத்தில் சம்பிரதாயமாக உள்ள பாவமன்னிப்பு என்கிற அம்சத்தைப் போல நீங்கள் மற்றவர்களுக்கு இழைத்த குற்றங்களை உள்ளுக்குள் வைத்து புழங்கிக் கொண்டிருக்காமல் ஒரு வடிகாலாக டைரியில் பதிவது மூலம் அந்த குற்ற உணர்வுகளை குறைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

இந்தப்பழக்கம் உங்களிடமும் இருக்கிறதா?

suresh kannan

Thursday, February 17, 2005

Ashokamitran - 50 (part-2)

நான் முன்னர் அனுப்பிய பதிவு காணாமற்போன காரணத்தினால் தலைப்பை ஆங்கிலத்தில் மாற்றி மற்றொருமுறை அனுப்பியுள்யேன். ஏற்கெனவே படித்தவர்கள் பொறுத்தருளவும்.

****************

சுந்தரராமசாமியை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். காலையில் 'வாக்' போக கிளம்பிவிட்ட பெரியவர் போல் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு ஏறக்குறைய இளைஞர் போலிருந்தார்.

மலையாள உச்சரிப்பு வாடையோடு அவர் பேசியதில் சில (நினைவிலிருந்து):

# அசோகமித்திரனைப் படிக்கும் வாசகர்களை விட அவரைப் படிக்காத வாசகர்களைப் பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். சில அரசியல் இயக்கியங்கள் குறிப்பாக திராவிட இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் அவரைப் புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும்.

(அரசியல் இயக்கங்களில் உள்ள வாசகர்கள் திட்டமிட்டே ஒரு எழுத்தாளரைப் படிப்பதை புறக்கணிப்பார்களா? - எனக்குப் புரியவில்லை - சுரேஷ் கண்ணன்)


# வாசகர்களில் இரண்டுவகை உள்ளனர். தமக்கு விருப்பமான மற்றும் விருப்பமற்ற எல்லாவற்றையும் தேடிப்பிடித்து படிப்பவர்கள் ஒருவகை. மற்றொருவகை, தன் சித்தாந்தத்திற்கு ஒப்புதல் உள்ள, தாம் தீவிரமாக நம்புகிற, தன் நம்பிக்கைகளை தொந்தரவு செய்யாத படைப்புகளை மட்டும் படிப்பது. குதிரைக்கு சேணம் மாட்டினாற் போல் இருக்கிற இந்த வகை சரியானது அல்ல. முதற்வகை வாசகர்களே இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கிறார்கள்.

# அசோகமித்திரன் இதுவரை 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிகிறேன். இங்கு பேசுவதற்காக சுமார் 80 கதைகளை படித்து வந்திருக்கிறேன். 200 கதைகள் எழுதுவது பெரிய விஷயமில்லை. இதற்கு மேலும் எழுதிக்குவிக்கிற எழுத்தாளர்களையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் உழைப்பை மதிக்காதவன் கிடையாது. இம்மாதிரியான எழுத்தாளர்களை உழைப்பாளர் தினம் அன்று கொண்டாடுவோம். (அரங்கில் கைதட்டல்). ஆனால் அசோகமித்திரன் மாதிரி நுட்பமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படைப்புகளை எழுதுவது அசாதாரணமானது.

பின்பு அ.மியின் எழுத்துக்களில் துளிகூட இல்லாத வன்முறை இல்லாத தன்மையையும் அவரது எளிமையான எழுத்து நடையையும் பாராட்டிப் பேசின அவர், அசோகமித்திரனின் தீவிர வாசகர் ஒருவர் அரங்கில் உட்கார்ந்து அரங்கில் நடப்பதை அவதானித்துப்பார்த்து என்ன மாதிரியான உணர்வுகளை மனதிற்குள் வெளிப்படுத்திக் கொள்வார் என்று பேசிக்காட்டினார்.

இதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் நண்பர்களிடையே எழுந்தாலும், என்னைப் பொறுத்தவரை மிக உயர்ந்த தரத்தில் அமைந்த நகைச்சுவை (மிமிக்ரி) இது. பார்வையாளர்களிடையே இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிகத் தீவிரமான இலக்கியவாதியாக அவரை அறிந்திருந்த எனக்கு இந்தப் பேச்சு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (உயிர்மை ஆண்டுவிழாக் கூட்டத்திலும் அசோகமித்திரனும் இப்படித்தான் என்னை ஆச்சரியப்படுத்தினார்)

அசோகமித்திரன் சு.ராவின் இந்தப் பேச்சை ரசித்து அனுபவித்து சிரித்துக் கொண்டிருந்தார்.


சுந்தரராமசாமி பேசி முடித்ததும் 'அந்த மாதிரியான காட்சிகள்' முடிந்தவுடன் விரைவாக எழுந்து போகிற பரங்கிமலை ஜோதி தியேட்டர் ரசிகர்கள் மாதிரி பின்னிருக்கைகளில் இருந்த நிறையப் பேர் எழுந்து செல்ல, 'இன்னும் ஏதாவது இருக்குமோ?' என்கிற நப்பாசையுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம்.


O


'மிகச்சிறிய பாவங்களில் பெரிய பாவம் ஒரு எழுத்தாளனை பேசச் சொல்வது' என்கிற சுஜாதாவின் மேற்கோள்தான் ஞாபகத்திற்கு வந்தது, ஆர்.இரா.வேங்கடாசலபதி பேசும் போது. அவர் பேசியவை மிக முக்கியமான தகவல்கள்தான் என்றாலும், பழக்க தோஷத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வழங்குகிற பாணியிலேயே பேசிக் கொண்டு போனார்.

# ஜெயகாந்தனையோ, புதுமைப்பித்தனையோ, சுந்தரராமசாமியையோ படிக்கும் போது அவர்களது படைப்புகளில் வெளிப்படுத்தப்படும் வரிகளை புத்தகங்களில் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அ.மியின் படைப்புகளை அவ்வாறு சிறப்பாக எண்ணி அடிக்கோடிட முடியாது. ஏனெனில் அவரது படைப்புகளில் வருபவை அனைவரும் எளிய மக்கள்; எளிய மொழி பேசுகிறவர்கள். ...

# அசோகமித்திரனின் மாறாத எழுத்து நடையை வெங்கட்சாமிநாதன் 'என்னது கைமுறுக்கு சுத்துறாப் போல ஒரே மாதிரி இருக்குதே?' என்று கிண்டலடித்திருக்கிறார். ஆனால் ஒரே மாதிரியான சுவையுடன் கிடைக்கிற தரமான பண்டத்திற்காக நாம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக தயாராக இருக்கிறோம் என்பதை குறிப்பிட்டார்.

# தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டவர் அசோகமித்திரன்....

O

அடுத்துப் பேசிய ஞானக்கூத்தன் நேரமின்மை காரணமாக தாம் தயாரித்து எடுத்து வந்திருந்த கட்டுரையைப் படிக்காமல் சில விஷயங்களை (பார்க்க: பத்ரி பதிவு) சுருக்கமாக சொல்லி விட்டுப் போனார். (அந்தக் கட்டுரையை பத்ரி வாங்கி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்)

O

ஆங்கிலத்தில் பேசிய (நான் மிகவும் எதிர்பார்த்த) பால் சக்கரியா, வழக்கம் போல மலையாள எழுத்தாளர்களை ஒரு 'பிடிபிடி'த்துவிட்டு தமிழில் அசோகமித்திரனோடு மலையாளத்தில் வைக்கம் முகமது பஷீரை ஒப்பிடலாம் என்றார். (மெல்லிய குரலில் பேசியதாலோ அல்லது என்ன காரணத்தினாலோ இவர் பேசியது பின்வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு சரியாக கேட்கவில்லை).

O

ஏற்புரை ஆற்ற வந்த அசோகமித்திரன் அவர் படைப்புகளிலேயே ஒரு கதாபாத்திரம் உயிரோடு வந்திருந்தாற் போல் ஏறக்குறைய அதே தொனியிலே எளிய நகைச்சுவையுடன் பேசினார்.

# என் தந்தை எனக்கு சிறுவயதில் முக்கியமாக சொல்லிக் கொடுத்தது, இன்னொருவரை எந்த வகையிலும் அபவாதம் செய்யக்கூடாது என்பதே. எனவேதான் என் படைப்புகளில் யாரையும் மனம் நோகுமாறு எழுதுவதோ விமர்சிப்பதோ கிடையாது.

# யாரை நோக்கியும் "என் படைப்புகளை படித்தீர்களா?" என்று கூடக் கேட்பதில்லை. அதையே நான் வன்முறையாக நினைக்கிறேன்.

# என்னவோ என் கட்டுரைகளை கிழக்கு பதிப்பகத்தினர் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். பாவம். அவர்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்.

"யாருக்காவது நன்றி சொல்ல மறந்துட்டு இருந்தேன்னா, நீங்களே சேத்துக்கோங்க" என்று பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களோடு தன் எளிய பேச்சை முடித்துக் கொண்டார். சுந்தரராமசாமிக்குப் பிறகு இவர் பேசிய போதுதான் அரங்கம் உயிர்ப்போடு இருந்தது.

O

அழகிய சிங்கரின் நன்றியுரையை கேட்க பொறுமையில்லாமல் வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தக விற்பனை நிலையத்தில் அ.மி.யின் 'என் பார்வையில் சென்னை நகரம்' என்கிற கட்டுரைத்தொகுதியையும் 'மானசரோவர்' என்கிற நாவலையும் வாங்கிக் கொண்டேன். வெளியே வந்திருந்த அ.மி.யிடம் தான் வாங்கியிருந்த புத்தகங்களில் சிலர் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்க, எனக்கு எப்போதும் அந்த பழக்கம் இல்லாததால் வெளியே வந்தேன்.

இணைய நண்பர்களான அருள்செல்வன், சித்ரன், அண்ணாகண்ணன், icarus prakash ஆகியோருடனும் இரா.முருகன், பா.ராகவன், பத்ரி, ஆகியோருடன் சிறிது நேரம் பேசிய பின்னர் வீட்டிற்கு கிளம்பினேன்.

O

இந்தப் பதிவின் தலைப்பு சிலருக்கு கேள்வியை எழுப்பியிருக்கக்கூடும். அசோகமித்திரனின் கதை மாந்தர்களின் எளிமை பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவரின் சில சுய அனுபவங்களை கட்டுரையாக சிற்றிதழ்களில் படிக்கின்ற போதும், அவரை சிலமுறை நேரில் பார்த்திருந்ததனாலும், அவருக்கும் அவருடைய கதை மாந்தர்களுக்கும் அதிக இடைவெளி இருக்காது என்று யூகித்திருந்தேன். சைக்கிள் ஓட்டுபவர்கள், செயினை மாற்றும் போது அதனால் கிரீஸ் கறையை ஏற்படுத்திக் கொள்பவர்கள், பாலத்தின் மீது ஏறும் போது சைக்கிள் பஞ்சர் ஆவதால் சோர்வடைபவர்கள் என்று அந்தப் பாத்திரங்களைப் போலவே அவரும் இந்த விழாவிற்கு சைக்கிளில் வந்து இறங்கியிருந்தால் கூட நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

அவரோ ஒரு பளபள காரில் பாராவோடு அந்நியமாக வந்திறங்கி அவர் நண்பர்களை நோக்கி புன்சிரிப்புடன் போனார். அப்போது அவரின் சட்டையின் கீழிரண்டு பட்டன்கள் போடப்படாமலிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. இதனை மறதி என்பதை விட தன் தோற்றத்தின் மீது அவ்வளவாக அக்கறை செலுத்தாத ஒரு விஷயமாக என்னால் பார்க்க முடிகிறது.

அது எளிமை.

suresh kannan

Wednesday, February 16, 2005

அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்

கழுத்தை அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட சரோஜாவை கொலைசெய்த கொலைகாரனை அறிந்து கொள்ளும் பொருட்டு கடைசிப்பக்கத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ராஜேஷ்குமார் போன்றோர்களின் நாவல்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று விலகி வந்து கொண்டிருந்த நேரமது. சுஜாதாவின் கட்டுரை ஒன்றில்தான் 'அசோகமித்திரன்' என்கிற பெயரைப் பார்த்தேன். பின்பு நூல்நிலையத்தில் யதேச்சையாக அ.மியின் சிறுகதைத்தொகுப்பு ஒன்று கண்ணில்பட முயன்று பார்ப்போமே என்று படிக்கவாரம்பித்தேன். முதல் வாசிப்பில் அவர் என்னை அவ்வளவாக கவரவில்லை. இன்னும் ரத்த நாற்றத்திலிருந்து நான் முழுக்க வராமலிருந்தது கூட அதற்கு காரணமாயிருந்திருக்கலாம்.

பின்னர் எனக்கேற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்கள் மூலம் வாழ்க்கை என்னை சற்றுப் புரட்டிப் போட அ.மியின் படைப்புகள் எனக்கு வேறொரு பரிணாமத்தில் விரும்பக்கூடியவையாய் ஆயிற்று. அ.மியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் மென்மையானவை. உச்சக்கட்ட கோபத்தில் கூட சத்தம் போட்டு பேசாதவை. அ.மியும் அவர் கதாபாத்திரங்களைப் போலத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

அலுவலக வேலையாக நான் ஒருமுறை அண்ணாசாலை, டி.வி.எஸ் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது என்னை கடந்து சென்ற மெல்லிய உருவத்தை என்னால் கண்டுகொள்ள முடிந்தது, புத்தகங்களின் பின்னட்டையில் பிரசுரமாகியிருந்து அவரின் புகைப்படத்தின் மூலம். உலகத்தின் சோகங்களையெல்லாம் தன் முதுகில் தாங்கிக் கொண்டிருக்கிறாற் போய்க் கொண்டிருந்தவரிடம் 'என்னத்தைப் பேசறது' என்று தயக்கமாக இருந்தது.
நாளாக நாளாக அ.மி. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். அசோமித்திரன், சா.கந்தசாமி, விட்டல்ராவ் இவரின் படைப்புகளை ஆராய்ந்தால் மூவரும் ஏதாவதொரு கணத்தில் ஒரே நேர்ப்புள்ளியில் வந்து நிற்பார்கள் என்று தோன்றுகிறது. ஆரம்பித்திலிருந்து இவரின் எழுத்து நடை மாறாமல் இருப்பதை பிரமிப்புடன் கவனித்து வந்திருக்கிறேன். மிகச் சாதாரண எழுத்து நடை. முதல் வாசிப்பில் சாதாரணமாக தோன்றும் கதைகள் படிக்க படிக்க அதன் பரிணாமங்கள் விரியும் போது உணர்ச்சியின் அழுத்தங்களால் நம்மை மூச்சடைக்க வைப்பவை. இவர் கதைகளில் வரும் சில கதாபாத்திரங்களை நான் உருவகப்படுத்த நினைக்கும் போதெல்லாம், ஆர்.கே.லட்சுமணன் கார்ட்டூன்களில் வரும் மிஸ்டர்.பொதுஜனம் உருவம்தான் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும்.

நல்ல சிறுகதைகள் என்றொரு பட்டியலிடும் போது தவிர்க்கவே முடியாமல் அவரின் 'புலிக்கலைஞன்' போன்ற சிறுகதைகள் வரிசையில் வந்து நிற்கும். சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' ஒரு கோடி காட்டியதென்றால் அ.மியின் 'கரைந்த நிழல்கள்' அந்த உலகத்தின் பின்னணியில் உழைக்கும் தொழிலாளர்களின் சோகங்களின் குரூரங்களை எந்த விதமான உரத்த குரிலில்லாமல் யதார்த்தமான மொழியில் வெளிப்படுத்தியது.

O


அ.மியின் 50 ஆண்டு படைப்புலக நிறைவு விழா பற்றிய செய்தியை அறிந்தவுடன் இதில் நிச்சயமாக கலந்து கொள்ள முடிவு செய்தேன். அயல்நாட்டுத்திரைப்படங்களைப் பார்க்க பிலிம்சேம்பருக்கு அடிக்கடி வருகின்ற காரணங்களால் சூழ்நிலை பரிச்சயமாகவே இருந்தது. நுழைந்தவுடன் எழுத்தாளர்களான பிரபஞ்சன், அழகியசிங்கர், கவிஞர் ஞானக்கூத்தன், ஆராய்ச்சியாளர் சலபதி, இரா.முருகன் மற்றும் இணைய நண்பர்கள் வெங்கடேஷ், ரஜினிராம்கி, ஷங்கர் (முதன்முறையாக டோண்டு ராகவன்) ஆகியோர்களை காண முடிந்தது.

O

என் நினைவில் இருப்பதையும் சக வலைப்பதிவாளர்கள் ஏற்கெனவே கூறியவற்றை தவிர்த்தும் இந்த நிகழ்ச்சியை விவரிக்க முயல்கிறேன்.

O

அசோகமித்திரனப்பற்றிய விவரணப்படத்துடன் (இயக்கம்: அம்ஷன்குமார் தயாரிப்பு: சாகித்ய அகடமி) விழா ஆரம்பித்தது. (இந்தப் படத்தைப் பற்றி சிற்றிதழ்களில் ஏற்கெனவே படித்திருந்திருந்தனால் இதைப் பார்க்கத்தான் மிக முக்கியமாக நான் விழாவிற்கே சென்றேன்)

அ.மி. தன் இளமைப்பருவத்தில் வாழ்ந்த Hyderabad நகரின் கடைவீதிகளிலும் அவரது பழைய இல்லங்களிலும் காமிரா அ.மி. பின்னால் அலைந்தது. அசோகமித்திரன் தன்னுடைய நாவலான 'பதினெட்டாவது அட்சக்கோடு' பற்றி சொன்ன விஷயம் பிரமிப்பாக இருந்தது. அந்த நாவல் ஒரு கிரிக்கெட் ஆடுகிற இளைஞனின் பார்வையில், அங்கு நடக்கும் ஆட்சி மாற்றங்களையும், கலவரங்களைப் பற்றினது. அந்த நகரத்திலிருந்து புலம் பெயர்ந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகே இந்த நாவலை எழுதி முடித்ததாகவும், அதுவரை அங்கே போகாமலே இருந்ததாகவும், அப்படி போக நேர்ந்தால் அங்கிருக்கும் புதிதான சூழ்நிலைகளைப் பார்க்க நேர்ந்து, தன்னுடைய மனத்தில் பதிந்திருக்கிற பழைய பிம்பங்களில் சேதம் ஏற்பட்டு அது படைப்புக்கு ஏதும் இடையூறாக இருக்குமோ என்று எண்ணியதாகவும் குறிப்பிட்டார். பொதுவாக எழுத்தாளர்கள் குறிப்பிட்ட நகரைப் பின்னணியாக கொண்டு எழுத அந்த நகருக்கு சென்று சுற்றிப்பார்த்து எழுதுவதிலிருந்து இது முற்றிலும் மாறாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

அ.மி.யின் மகனுடனான பேட்டியில் 'தம் தாய்தான் குடும்பத்தை சிரமமான சூழ்நிலையிலும் நடத்தியதாக குறிப்பிட்டார். அ.மி எழுதிய நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் காட்டப்பட்டன. (பழைய காலண்டரின் பின்புறங்களிலும் துண்டுச் சீட்டுகளிலும் தம் படைப்புகளை எழுதியிருக்கிறார்). ஜெமினி ஸ்டுடியோவில் இருந்து தாம் விலகிய சூழ்நிலையையும் பின்பு கணையாழியில் ஆசிரியராக இருந்த காலகட்டங்களையும் விவரித்தார். எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, வாசந்தி பதிப்பாளர் மகாலிங்கம் ஆகியோரது கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன.

(விவரணப்படம் நிறைந்தவுடன், பின்னால் அமர்ந்திருந்த நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் பேசிவிட்டு. இடைவேளைக்காக வெளியே வந்து சென்ற இடைவெளியில் கவிஞர் வைத்தீஸ்வரனின் பேச்சை தவறவிட்டேன்)

தலைமை உரை ஆற்றிய எழுத்தாளர் பிரபஞ்சன், அயல்நாடுகளில் எழுத்தாளர்கள் மக்களாலும், அமைப்புகளாலும் கொண்டாடப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அது குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார். (இலக்கியவாதிகள் என்றாலே முரட்டுக்கதராடையும், ஜோல்னாப்பையும், முகத்தில் தாடியுமாக இருப்பார்கள் என்கிற பிமபத்தை உடைத்தெறிந்து எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றப் பொலிவோடு இருக்கிறார் பிரபஞ்சன். முன்னரொருமுறை சென்னையின் வேறொரு பகுதியில் இவரை வேறொரு சூழ்நிலையில் பார்க்க நேர்ந்ததை நான் விவரிக்க விரும்பவில்லை)

அடுத்துவந்தார் சுந்தரராமசாமி.

(தொடரும்)

suresh kannan

Wednesday, February 02, 2005

எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ்ச் சினிமாவில் நுழைகிறார்?

இரண்டு நாட்களுக்கு முன்பான ஒரு மாலை செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த போது அதில் ஒரு செய்தி என்னை வசீகரித்தது. அதன் சுருக்கம்:

பிரபல மலையாள டைரக்டர் லோகிதாஸ் தயாரித்த 'கஸ்தூரி மான்' என்கிற மலையாள திரைப்படம் பெரும்வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றது. அதன் நாயகியான மீரா ஜாஸ்மினுக்கும் பல விருதுகள் கிடைத்தன. அதே திரைப்படத்தை லோகிதாஸ் தமிழில் திரைக்கதை, இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். பைவ் ஸ்டார் மற்றும் அழகிய தீயே படங்களின் நாயகன் பிரசன்னா கதாநாயகனாக நடிக்க மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம். இசை - இளையராஜா.

இந்தப் படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதவிருப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.

O

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் இருந்தாலும், இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் நல்ல செய்திதான். இலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சினிமாவிற்கும் பாலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வர வேண்டும் சினிமாவில் உள்ள அறிவுஜீவிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இது நல்ல சகுனம்தான். முன்னர் ஜெயகாந்தன் சில நல்ல முயற்சிகளை செய்து வைத்து விட்டு போயிருந்தாலும் சுஜாதாவும் பாலகுமாரனும் வணிக ரீதியிலான படங்களிலேயே பங்கேற்பதால் மலையாள சினிமா பட உலகில் வெற்றிகரமாக விளங்கிய எம்.டி. வாசுதேவன் நாயரை போல் தமிழில் நம்மால் யாரையும் பார்க்க முடியவில்லை.

இன்னொரு நவீன இலக்கியவாதியான எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற பாபாவும், பாப்கார்னும் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியிருப்பதால், கதாநாயகியின் தொப்புளுக்கு குளோசப் ஷாட் வைக்கக்கூட சகுனம் பார்க்கிற நம் தமிழ்ச்சினிமாக்காரர்கள் அவரை உபயோகப்படுத்த தயங்கலாம். மற்றபடி சிறந்த எழுத்தாளர் தமிழ்ச்சினிமாவில் சம்பந்தப்பட்டிருப்பது மிக சொற்பமான அளவிலேயே இருக்கும் இந்தச் சூழ்நிலையில்...

வாங்க ஜெயமோகன்.

suresh kannan