Thursday, February 17, 2005

Ashokamitran - 50 (part-2)

நான் முன்னர் அனுப்பிய பதிவு காணாமற்போன காரணத்தினால் தலைப்பை ஆங்கிலத்தில் மாற்றி மற்றொருமுறை அனுப்பியுள்யேன். ஏற்கெனவே படித்தவர்கள் பொறுத்தருளவும்.

****************

சுந்தரராமசாமியை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். காலையில் 'வாக்' போக கிளம்பிவிட்ட பெரியவர் போல் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு ஏறக்குறைய இளைஞர் போலிருந்தார்.

மலையாள உச்சரிப்பு வாடையோடு அவர் பேசியதில் சில (நினைவிலிருந்து):

# அசோகமித்திரனைப் படிக்கும் வாசகர்களை விட அவரைப் படிக்காத வாசகர்களைப் பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். சில அரசியல் இயக்கியங்கள் குறிப்பாக திராவிட இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் அவரைப் புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும்.

(அரசியல் இயக்கங்களில் உள்ள வாசகர்கள் திட்டமிட்டே ஒரு எழுத்தாளரைப் படிப்பதை புறக்கணிப்பார்களா? - எனக்குப் புரியவில்லை - சுரேஷ் கண்ணன்)


# வாசகர்களில் இரண்டுவகை உள்ளனர். தமக்கு விருப்பமான மற்றும் விருப்பமற்ற எல்லாவற்றையும் தேடிப்பிடித்து படிப்பவர்கள் ஒருவகை. மற்றொருவகை, தன் சித்தாந்தத்திற்கு ஒப்புதல் உள்ள, தாம் தீவிரமாக நம்புகிற, தன் நம்பிக்கைகளை தொந்தரவு செய்யாத படைப்புகளை மட்டும் படிப்பது. குதிரைக்கு சேணம் மாட்டினாற் போல் இருக்கிற இந்த வகை சரியானது அல்ல. முதற்வகை வாசகர்களே இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கிறார்கள்.

# அசோகமித்திரன் இதுவரை 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிகிறேன். இங்கு பேசுவதற்காக சுமார் 80 கதைகளை படித்து வந்திருக்கிறேன். 200 கதைகள் எழுதுவது பெரிய விஷயமில்லை. இதற்கு மேலும் எழுதிக்குவிக்கிற எழுத்தாளர்களையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் உழைப்பை மதிக்காதவன் கிடையாது. இம்மாதிரியான எழுத்தாளர்களை உழைப்பாளர் தினம் அன்று கொண்டாடுவோம். (அரங்கில் கைதட்டல்). ஆனால் அசோகமித்திரன் மாதிரி நுட்பமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படைப்புகளை எழுதுவது அசாதாரணமானது.

பின்பு அ.மியின் எழுத்துக்களில் துளிகூட இல்லாத வன்முறை இல்லாத தன்மையையும் அவரது எளிமையான எழுத்து நடையையும் பாராட்டிப் பேசின அவர், அசோகமித்திரனின் தீவிர வாசகர் ஒருவர் அரங்கில் உட்கார்ந்து அரங்கில் நடப்பதை அவதானித்துப்பார்த்து என்ன மாதிரியான உணர்வுகளை மனதிற்குள் வெளிப்படுத்திக் கொள்வார் என்று பேசிக்காட்டினார்.

இதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் நண்பர்களிடையே எழுந்தாலும், என்னைப் பொறுத்தவரை மிக உயர்ந்த தரத்தில் அமைந்த நகைச்சுவை (மிமிக்ரி) இது. பார்வையாளர்களிடையே இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிகத் தீவிரமான இலக்கியவாதியாக அவரை அறிந்திருந்த எனக்கு இந்தப் பேச்சு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (உயிர்மை ஆண்டுவிழாக் கூட்டத்திலும் அசோகமித்திரனும் இப்படித்தான் என்னை ஆச்சரியப்படுத்தினார்)

அசோகமித்திரன் சு.ராவின் இந்தப் பேச்சை ரசித்து அனுபவித்து சிரித்துக் கொண்டிருந்தார்.


சுந்தரராமசாமி பேசி முடித்ததும் 'அந்த மாதிரியான காட்சிகள்' முடிந்தவுடன் விரைவாக எழுந்து போகிற பரங்கிமலை ஜோதி தியேட்டர் ரசிகர்கள் மாதிரி பின்னிருக்கைகளில் இருந்த நிறையப் பேர் எழுந்து செல்ல, 'இன்னும் ஏதாவது இருக்குமோ?' என்கிற நப்பாசையுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம்.


O


'மிகச்சிறிய பாவங்களில் பெரிய பாவம் ஒரு எழுத்தாளனை பேசச் சொல்வது' என்கிற சுஜாதாவின் மேற்கோள்தான் ஞாபகத்திற்கு வந்தது, ஆர்.இரா.வேங்கடாசலபதி பேசும் போது. அவர் பேசியவை மிக முக்கியமான தகவல்கள்தான் என்றாலும், பழக்க தோஷத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வழங்குகிற பாணியிலேயே பேசிக் கொண்டு போனார்.

# ஜெயகாந்தனையோ, புதுமைப்பித்தனையோ, சுந்தரராமசாமியையோ படிக்கும் போது அவர்களது படைப்புகளில் வெளிப்படுத்தப்படும் வரிகளை புத்தகங்களில் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அ.மியின் படைப்புகளை அவ்வாறு சிறப்பாக எண்ணி அடிக்கோடிட முடியாது. ஏனெனில் அவரது படைப்புகளில் வருபவை அனைவரும் எளிய மக்கள்; எளிய மொழி பேசுகிறவர்கள். ...

# அசோகமித்திரனின் மாறாத எழுத்து நடையை வெங்கட்சாமிநாதன் 'என்னது கைமுறுக்கு சுத்துறாப் போல ஒரே மாதிரி இருக்குதே?' என்று கிண்டலடித்திருக்கிறார். ஆனால் ஒரே மாதிரியான சுவையுடன் கிடைக்கிற தரமான பண்டத்திற்காக நாம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக தயாராக இருக்கிறோம் என்பதை குறிப்பிட்டார்.

# தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டவர் அசோகமித்திரன்....

O

அடுத்துப் பேசிய ஞானக்கூத்தன் நேரமின்மை காரணமாக தாம் தயாரித்து எடுத்து வந்திருந்த கட்டுரையைப் படிக்காமல் சில விஷயங்களை (பார்க்க: பத்ரி பதிவு) சுருக்கமாக சொல்லி விட்டுப் போனார். (அந்தக் கட்டுரையை பத்ரி வாங்கி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்)

O

ஆங்கிலத்தில் பேசிய (நான் மிகவும் எதிர்பார்த்த) பால் சக்கரியா, வழக்கம் போல மலையாள எழுத்தாளர்களை ஒரு 'பிடிபிடி'த்துவிட்டு தமிழில் அசோகமித்திரனோடு மலையாளத்தில் வைக்கம் முகமது பஷீரை ஒப்பிடலாம் என்றார். (மெல்லிய குரலில் பேசியதாலோ அல்லது என்ன காரணத்தினாலோ இவர் பேசியது பின்வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு சரியாக கேட்கவில்லை).

O

ஏற்புரை ஆற்ற வந்த அசோகமித்திரன் அவர் படைப்புகளிலேயே ஒரு கதாபாத்திரம் உயிரோடு வந்திருந்தாற் போல் ஏறக்குறைய அதே தொனியிலே எளிய நகைச்சுவையுடன் பேசினார்.

# என் தந்தை எனக்கு சிறுவயதில் முக்கியமாக சொல்லிக் கொடுத்தது, இன்னொருவரை எந்த வகையிலும் அபவாதம் செய்யக்கூடாது என்பதே. எனவேதான் என் படைப்புகளில் யாரையும் மனம் நோகுமாறு எழுதுவதோ விமர்சிப்பதோ கிடையாது.

# யாரை நோக்கியும் "என் படைப்புகளை படித்தீர்களா?" என்று கூடக் கேட்பதில்லை. அதையே நான் வன்முறையாக நினைக்கிறேன்.

# என்னவோ என் கட்டுரைகளை கிழக்கு பதிப்பகத்தினர் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். பாவம். அவர்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்.

"யாருக்காவது நன்றி சொல்ல மறந்துட்டு இருந்தேன்னா, நீங்களே சேத்துக்கோங்க" என்று பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களோடு தன் எளிய பேச்சை முடித்துக் கொண்டார். சுந்தரராமசாமிக்குப் பிறகு இவர் பேசிய போதுதான் அரங்கம் உயிர்ப்போடு இருந்தது.

O

அழகிய சிங்கரின் நன்றியுரையை கேட்க பொறுமையில்லாமல் வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தக விற்பனை நிலையத்தில் அ.மி.யின் 'என் பார்வையில் சென்னை நகரம்' என்கிற கட்டுரைத்தொகுதியையும் 'மானசரோவர்' என்கிற நாவலையும் வாங்கிக் கொண்டேன். வெளியே வந்திருந்த அ.மி.யிடம் தான் வாங்கியிருந்த புத்தகங்களில் சிலர் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்க, எனக்கு எப்போதும் அந்த பழக்கம் இல்லாததால் வெளியே வந்தேன்.

இணைய நண்பர்களான அருள்செல்வன், சித்ரன், அண்ணாகண்ணன், icarus prakash ஆகியோருடனும் இரா.முருகன், பா.ராகவன், பத்ரி, ஆகியோருடன் சிறிது நேரம் பேசிய பின்னர் வீட்டிற்கு கிளம்பினேன்.

O

இந்தப் பதிவின் தலைப்பு சிலருக்கு கேள்வியை எழுப்பியிருக்கக்கூடும். அசோகமித்திரனின் கதை மாந்தர்களின் எளிமை பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவரின் சில சுய அனுபவங்களை கட்டுரையாக சிற்றிதழ்களில் படிக்கின்ற போதும், அவரை சிலமுறை நேரில் பார்த்திருந்ததனாலும், அவருக்கும் அவருடைய கதை மாந்தர்களுக்கும் அதிக இடைவெளி இருக்காது என்று யூகித்திருந்தேன். சைக்கிள் ஓட்டுபவர்கள், செயினை மாற்றும் போது அதனால் கிரீஸ் கறையை ஏற்படுத்திக் கொள்பவர்கள், பாலத்தின் மீது ஏறும் போது சைக்கிள் பஞ்சர் ஆவதால் சோர்வடைபவர்கள் என்று அந்தப் பாத்திரங்களைப் போலவே அவரும் இந்த விழாவிற்கு சைக்கிளில் வந்து இறங்கியிருந்தால் கூட நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

அவரோ ஒரு பளபள காரில் பாராவோடு அந்நியமாக வந்திறங்கி அவர் நண்பர்களை நோக்கி புன்சிரிப்புடன் போனார். அப்போது அவரின் சட்டையின் கீழிரண்டு பட்டன்கள் போடப்படாமலிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. இதனை மறதி என்பதை விட தன் தோற்றத்தின் மீது அவ்வளவாக அக்கறை செலுத்தாத ஒரு விஷயமாக என்னால் பார்க்க முடிகிறது.

அது எளிமை.

suresh kannan

1 comment:

Anonymous said...

ungal ezhuththukkal ellame vasikka nanraga irukkirathu.