Wednesday, June 02, 2010

சாரு என்கிற சமூக வியாதி (1)


 கருத்து ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஒருவரிடம் என்னதான் பகைமை இருந்தாலும் இப்படியா ஒருவர் தன்னுடைய வன்மத்தை நீர்த்துப் போகாமல் தொடர்ச்சியாக பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்று திகைப்பாக இருக்கிறது.

சாரு தன்னுடைய இணையப்பக்கத்தில் ஜெயமோகன் குறித்து மிகக் குரோதமாக எழுதப்பட்ட ஒரு வலைப்பதிவை தன்னுடைய வாசகர்களுக்கு பரிந்துரை செய்து அகமகிழ்ந்திருக்கிறார். (அந்த வலைப்பக்கத்தில் உள்ள நபரின் புகைப்படமும் சுயக்குறிப்பும் வாசிப்பவரை மிரட்டுவது போலவே அமைந்திருப்பது திட்டமிட்ட ஏற்பாடா என தெரியவில்லை). சாருவிற்கும் ஜெயமோகனிற்கும் இதுவரை நிகழ்ந்திருக்கும் தனிமனித குரோத விளையாட்டுக்கள் நாம் அறிந்ததே. ஒரளவிற்கான நாகரிக எல்லைக்குள் எழுதும் வாழைப்பழ ஊசி நடையில் ஜெமோ விற்பன்னர் என்றால் தன்னை வெள்ளந்தி, அப்பாவி என சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் சொல்லிக் கொள்ளும் சாருவின் மொழியோ ஜெமோ என்று வந்துவிட்டால் தனிமனித காழ்ப்புணர்ச்சியும் வன்மமும் நிறைந்ததாக மாறுகிறது. இந்தச் சகதியிலிருந்து தற்சமயம் ஜெமோ ஒதுங்கி நின்றாலும் சாருவின் வன்மம் அடங்குவதாயில்லை.

அவர் தனது வாசகர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் இடுகை, ஜெயமோகனை மாத்திரமல்லாது அவரது குடும்ப உறுப்பினர்களையும் தனிப்பட்ட விஷயங்களையும் கூட குரோதமான மொழியில் தொட்டுச் செல்கிறது. இதைப் பரிந்துரைத்திருப்பவர், தன்னை தமிழில் எழுதும் உலக எழுத்தாளர் எனவும் அதற்கான சர்வதேச அங்கீகாரம் இல்லையே என்று தொடர்ந்து புலம்புபவர். அடக் கஷ்டகாலமே! எழுத்தாளனாகக் கூட வேண்டாம், ஒர் அடிப்படை மனிதனாகக் கூட இல்லாதவரா தமிழ் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிநிதி?

இரண்டு தனிநபர்களுக்குள் (எழுத்தாளர்களுக்குள்) நிகழும் குரோத விளையாட்டில் சம்பந்தமேயில்லாத ஒருபாவமும் அறியாத அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் (குழந்தைகளையும் விட்டு வைக்கில்லை) இழுப்பது எந்தவகையான அறம் என தெரியவில்லை. கருத்து ரீதியாக மோதியும் ஈகோக்களால் சண்டையிட்டும் அரிப்பு தீரவில்லையென்றால் இரண்டு நபர்களும் (எழுத்தாளர்களும்) குத்துச் சண்டையிட்டாவது தங்களின் வெற்றியை நிர்ணியித்துக் கொண்டு தொலையலாம். அதை விட்டு எங்கு அடித்தால் நன்கு வலிக்கும் என்று தெரிந்து கொண்டு  சக எழுத்தாளனின் குழந்தையைக் கூட இடுப்பின் கீழ் தாக்குவது எந்தவகையான போர் நியாயம் என்றும் தெரியவில்லை.

‘ஜெயமோகனின் தனிப்பட்ட விஷயத்தை எழுதிவிட்டீர்கள் என்று சில அசடுகள் கத்தும்’ பொருட்படுத்தாதீர்கள் என்று ‘பெரியாரியவாதியான’ தன்னுடைய வாசகரை முன்யூகமாக ஊக்கப்படுத்துகிறார் சாரு. இதுவல்லவா ஒர் எழுத்தாளனின் தார்மீக கடமை. முன்பொரு முறை பதிவர் சிவராமன் தன்னுடைய பதிவொன்றில் ‘சாரு தன்னுடைய மகளை வன்புணர்ச்சி செய்துவிட்டார்’ என்கிற பாவனையுடன் எழுதிய வாக்கியங்களுக்கே ‘நாசமாப் போயிடுவே’ என்று மண்ணைத் தூற்றி சாபம் விட்டவரும் வழக்கு போடுவேன் என்று மிரட்டியவருமான சாருவும் இந்த வகையில் அசடா அல்லது காரியக்கார அசடா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

()


என்னுடைய கடந்த பதிவொன்றில்,  ‘சாரு’வை சர்வதேச விருதுடன் சம்பந்தப்படுத்தி எழுதியிருந்த போது 'ஏன் அவ்வாறு செய்தீர்கள்" என சில நண்பர்கள் ஆதங்கப்பட்டிருந்தார்கள். அது ஒருவகையான பகடி என்பதை சில பேர்களாலேயே உணர முடிந்தது. “கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்துக்கு போறேன்னானாம்’ என்பது ஒரு சொலவடை. அதுபோல் உள்ளூரிலேயே எந்த விருதும் வாங்கத் தகுதியில்லாதவர், வாங்கினால் சர்வதேச விருதைத்தான் வாங்குவேன் என்று சவடால் அடிப்பது அபத்தமான நகைச்சுவை. மேலும் ஒரு காலத்தில் ஏதோ எழுதி இன்று காலி பெருங்காய டப்பாவாக இருக்கும் சாரு, வெளியே மழை பெய்வது தெரியாமலும் மூத்திரத்தை அடக்கிக் கொண்டும்.. அப்படி என்னதான் எழுதி வருகிறார் என்று பார்த்தால் முக்கி முக்கி உயிர்மைக்கு மாதத்திற்கு ஒரு சினிமா கட்டுரையை கடைசி நேரத்தில் எழுதி கொடுக்கிறாராம். இதை விட ஆழமான சினிமா கட்டுரைகளை இன்று வலைப்பதிவர்களே எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றபடி மெரினாவிற்கு வாக்கிங் சென்றதையும்.. வஞ்சிரமீன் வாங்கின மொக்கைகளையும் எழுதுவதற்கே இத்தனை பில்டப் கொடுப்பது ஒருபுறமிருக்கட்டும். (இந்த அழகில் ஒரு காவல் அதிகாரி ‘தினமும் எழுதிவில்லையென்றால் முட்டிக்கு முட்டி தட்டுவேன்’ என்றாராம். இதுவும் வழக்கமான கற்பனைக் கடிதங்களில் ஒன்று என்று யூகிக்க முடிந்தாலும் அது நிஜமாகவே இருக்கும் பட்சத்தில் அந்த காவல் அதிகாரி 'இனிமே ஏதாவது எழுதினே, முட்டிக்கு முட்டி தட்டுவேன்' என்றுதான்  சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது).

இப்போது திடீர் பரவசத்தில் கவிதை வேறு எழுதுகிறாராம். என்னடா இது தமிழிற்கு வந்த சோதனை? இப்படியே போய்க் கொண்டிருந்தால் சாகித்ய அகாதமி அல்ல,  கண்ணம்மா பேட்டை குடியிருப்போர் (?) நலசங்க விருது கூடக் கிடைக்காது.

சக எழுத்தாளர்களை எப்படி திட்டலாம் என்பதை யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு தன்னுடைய பலமான புனைவிலும் பத்தி கட்டுரைகளிலும் இன்னும் நிறைய புதிய விஷயங்களை சாரு தந்தால் அல்லக்கைகள் அல்லாத உருப்படியான வாசகர்களைப் பெறலாம்.

(தொடரும்)

பிற்சேர்க்கை 1: இந்த இடுகை எழுதப்படும் முன்பு வரை சாருவின் தளத்தில் இருந்த அந்த பரிந்துரைப் பதிவு தற்போது எதனாலோ நீக்கப்பட்டிருக்கிறது. சாரு திருந்தியிருக்கிறாரா அல்லது பதுங்கியிருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிற்சேர்க்கை 2: சாரு பரிந்துரைத்த வலைப்பக்கத்தின் புரொபைலில் இருந்த புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது. (முன்பிருந்த , உடற்பயிற்சி செய்யும் ஒரு திடகாத்திரரின் புகைப்படத்திற்கு பதிலாக (இது சாருவின் பதிவிலும் இருந்தது) சிங்கத்தின் புகைப்படம் தற்சமயம் உள்ளது).

 suresh kannan

Tuesday, June 01, 2010

ஜெயலலிதாவின் திகிலான நேர்காணல்

எச்சரிக்கை:  பழைய (மீள்) பதிவு 

கடந்த வாரம் பி.பி.சி. தொலைக்காட்சியில் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் (?!) ஒன்றை காண நேரிட்டது. இந்தியாவின் மோசமான முதல்வர்களில் ஜெ. முதலில் வந்தாலும், மோசமாக பேட்டி கொடுப்பவர் என்கிற சர்வே எடுத்தாலும் இவர்தான் முதலில் வருவார் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் தலைப்பான HARD TALK என்பதை ரொம்பவும் கடுமையாகத்தான் பேச வேண்டும் என்று தவறாய் புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது. கிட்டத்தட்ட படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டரை இன்னொரு முறை பி.பி.சியில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. கேமராக்காரர் வேறு டைட் க்ளோசப்பில் கேமரா கோணத்தை வைத்து ஜெ. நறநறவென்று பல்லைக் கடிக்க நினைத்தாலும் தெளிவாக தொ¢யுமாறு  வைத்திருந்தார்.

இரண்டு முறையும் ஆரம்ப காட்சிகளை தவறவிட்டேன் என்றாலும் கரண் தாப்பருடன் கைகுலுக்க மறுத்துவிட்ட அந்த கண்ணியமான கிளைமாக்சை கண்டு ரசிக்க முடிந்தது.

பழைய தமிழ்ச் சினிமாப் படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நாயகி தமிழ்ப் பண்பாட்டில் ஊறித்திளைத்தவள், கற்புமிக்கவள் என்பதற்கு இந்த காட்சிகளை உதாரணமாய் காட்டுவர். வெளிநாட்டில் இருந்து வந்த வில்லனோ, கதாநாயகனோ மேனாட்டு பாணியில் பேசிவிட்டு கைகுலுக்கப் போக, இந்த கலாசாரத்தின் அடையாளப் பெண்ணோ, அதை மறுத்து கை கூப்பி விடைகொடுப்பாள். ஜெ.வுக்கு இந்த பழைய சினிமா ஞாபகம் வந்து இந்த மாதிரி செய்தாரா என்று தெரியவில்லை.





ஜெ.வின் மிரட்டலான பார்வையை சட்டை செய்யாமல் கரண் தாப்பரும் அதற்கிணையான பார்வையில் கேள்விகளை அடுக்க, இவ்ளோ தில்லா ஒரு ஆளா என்று பிரமிக்க நோ¢ட்டது. அவருக்கு நம் ஊரின் ஆட்டோ அடியாட்களைப் பற்றியும், அதிமுக மகரணியின், பார்க்க கண்கோடி வேண்டிய கலைநிகழ்ச்சிகளைப் பற்றியும்  தெரியுமா என்று தெரியவில்லை.

ஓரு நிலையில், எங்கே முதல்வன் திரைப்படம் போல், 'நீ ஒரு நாள் முதல்வராக இருந்து பாரேன். அப்போ இந்த முள் கீரிடம் உனக்கு புரியும்' என்று ஜெ. கேட்டுவிடுவாரோ என்று எனக்கு பயமாக இருந்தது. அதே சமயம் நல்ல முதல்வராக தமிழ்நாட்டுக்கு கிடைக்கக் கூடாதா என்று ஏங்குகிற நம் நப்பாசையும் நனவாகுமோ என்று சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் நம் ஆட்கள் உஷாராக அரசாங்க விடுமுறை நாளைத்தான் முதல்ராக இருக்க வேண்டிய நாளை கொடுப்பார்கள் என்றும் தோன்றியது.

ஏதோ ஒரு பதிலிற்கு குறிப்புகளை பார்த்து படித்த ஜெ.வை கரண் ஆட்சேபிக்க, 'நான் உங்கள் கண்கள் பார்த்துத்தான் பேசுகிறேன்' என்று ஆக்ரோஷித்த ஜெ, இன்னொரு முறை கரண் ஏதோவொரு குறிப்பை பார்த்து கேள்வி கேடக, 'நீங்கள் (நீ - ?!) மட்டும் குறிப்புகளை பார்த்து கேள்வி கேட்கலாமா என்று கேள்வி கேட்டு என்ன கிள்ளினியா, உன்னையும் நான் கிள்ளுவேன் என்கிற மாதிரி பழி தீர்த்துக் கொண்டார். ஒரு பள்ளிக்கூடச் சிறுமியின் மனப்பான்மை உள்ள ஒருவரா நமக்கு முதல்வர் என்று நமக்குத்தான் திகிலாக இருந்தது.

2006-ல் ஆட்சிக்கு வர முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பொதுமக்கள் என்று சிலபேர் இருக்கிறார்கள், அவர்கள் தேர்தலில் ஒட்டுப் போட்டால்தான் தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நினைப்பில் இல்லாதவர் போல், என்னமோ நீலாங்கரையில் அடுத்த வருடத்திற்குள் வீடு வாங்கி விடுவேன் என்பவர் போல் 'பொறுத்திருந்து பாருங்கள்.' என்று அழுத்தமான குரலில் சொன்னதைப் பார்த்தவுடன் தேர்தலின் போது 'எனக்கு எதிராக ஒட்டளிப்பவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள்' என்று நமக்கு மிரட்டல் அறிக்கை கொடுப்பாரோ என்று பயமாக இருந்தது.

மறந்தும் எம்.ஜி.ஆரைப்பற்றி பேசாதவர், தான் அரசியலில் சுயமுயற்சியில்தான் வெற்றி பெற்றதாக கூறினார். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்கிற அடிப்படை அறிவியல் உண்மை நல்லவேளையாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இல்லையென்றால் தான் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு குதித்திருப்பேன் என்று கூட சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.

தான் மூடநம்பிக்கை இல்லாதவர் என்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அண்ணாவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லியிருப்பதாக கூறியவர், 'அப்போது ஏன் ஒரு கோயில் விடாமல் எல்லா தெய்வங்களின் பின்னாலும் சுற்றுகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால், தான் தானமாக கொடுத்த யானையை விட்டு கரணின் தலையை மிதிக்க சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றியது.

பேட்டி எடுப்பது மாதிரி பேட்டி கொடுப்பதும் ஒரு கலை. இந்த கலை ஜெ.வுக்கு சுத்தமாக தெரியாது என்று தோன்றுகிறது. ஒரு சன் டி.வியில் ரபி பெர்னார்ட் வைரமுத்துவை, "ரஜினியை ஏதோ ஒரு நாட்டின் பேரரசர் போல் புகழ்ந்து எழுதுகிறீர்களே?" என்று காய்ச்சி எடுக்கிற கேள்வியை கேட்டார்.

வைரமுத்து கண்களை உருட்டி பார்க்கவில்லை. பற்களை நறநறவென்று கடிக்க வில்லை. சிரித்துக் கொண்டே "நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? இந்த இளவயதில் இவ்வளவு புத்தியா?" என்கிற மாதிரி பேட்டி எடுத்தவருக்கே ஒரு ஜஸ்பாரை போட்டு அந்தக் கேள்வியை சாமர்த்தியமாக திசைதிருப்பி விட்டார்.

மொத்தத்தில் இந்த பி.பி.சி பேட்டி திகிலுடன் கூடிய காமெடிப் படத்தை பார்த்தது போலிருந்தது.

நேர்காணலை அசு்சு வடிவில் வாசிக்க

suresh kannan