Sunday, September 12, 2021

வடிவேலு: 'யானையா, குதிரையா?'

 
தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன.

ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தினம் தினம் மீள்நினைவு செய்யப்படுகின்றன. 'என்னை வாழ வைத்த மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நன்றி' என்று வடிவேலுவே நன்றி சொல்லுமளவிற்கு 'மீம்ஸ்' உலகம் வடிவேலுவால் 99% நிறைந்திருக்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் வடிவேலுவின் ஏதோ ஒரு தோற்றமும் அசைவும் வசனமும் கச்சிதமாகப் பொருந்திப் போவதும் ஆச்சரியம்தான்.

வடிவேலுவின் இந்த இரண்டாம் இன்னிங்க்ஸ் அவருக்கு பழைய செல்வாக்கை மீட்டுத் தருமா?

*

தமிழ் சமூகத்தை வடிவேலு பாதித்தது போல் வேறு எந்தவொரு நடிகரும் பாதித்ததில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம். வடிவேலுவின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து ஒவ்வொரு வசனமும் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.


இந்த அளவிற்கு தமிழ் சமூகத்துடன் இறுக்கமாக பின்னிப் பிணைந்த நடிகர் வேறு எவருமே இல்லை.  வேறு எந்த நடிகராவது நடிப்பில் இத்தனை வருடங்கள் இடைவெளி விட்டிருந்தால் நிச்சயம் தொலைந்து போயிருக்கக்கூடும் ஆனால் மக்கள் மறக்காமல் வடிவேலுவை தினம் தினம் நினைவுகூர்வது மட்டுமல்ல, அவரது மறுவருகையையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இது மிக மிக அரிதான நிகழ்வு.

*

ஆனால் வடிவேலுவின் இந்த இடைவெளிக்கு யார் காரணம்? இதனுள் பல உள்விவகாரங்கள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவரின் இந்த வீழ்ச்சிக்கு பெரும்பாலும் அவரேதான் காரணம் என்று தோன்றுகிறது. ஆம், வடிவேலு என்னும் பிரம்மாண்ட நகைச்சுவை யானை, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கதை இது.

உச்சியில் இருக்கும் எந்தவொரு பிரபலமான நடிகருக்கும் வீழ்ச்சி ஏற்படுவது இயல்பு. வளர்ச்சி என்று ஒன்றிருந்தால் வீழ்ச்சியும் அதன் கூடவே இணைந்திருக்கும். ஆனால் தன்னம்பிக்கையுள்ள நடிகர்கள்  எப்படியாவது முட்டி மோதி  மீண்டும் உச்சியை அடைந்து விடுவார்கள். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் தோல்வியை அடைந்தவுடன் 'அவ்வளவுதான்.. ரஜினியின் சகாப்தம் முடிந்து விட்டது' என்பது போல் பேச்சுகள் கிளம்பின. ஆனால், அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'நான் யானை இல்லை, குதிரை.  கீழ விழுந்தா டக்குன்னு எழுந்திருப்பேன்' என்று ரஜினி பேசினார். பிறகு அது உண்மையும் ஆயிற்று. (சந்திரமுகியின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறந்து விடக்கூடாது).

ஆனால் வடிவேலுவின் வீழ்ச்சி இயல்பானதல்ல. அவராக வரவழைத்துக் கொண்டது என்றுதான் தோன்றுகிறது.. அதே நகைச்சுவை மொழியில் சொன்னால் 'சொந்த செலவில் சூனியம்'. ஒரு மனிதனுக்கு புகழ் பெருகும் போது அதை சரியானபடி கையாளும் நிதானம்  தேவை. இல்லையென்றால் எந்த புகழ் அவரை உச்சிக்கு கொண்டு செல்கிறதோ, அதுவே கீழேயும் தள்ளி விடும்.

ஒரு முன்னணி நடிகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பூசலை அரசியல் பகையாக மாற்றிக் கொண்ட வடிவேலு, எவ்வித தீர்மானமும் இல்லாமல் திடீரென அரசியலில் குதித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசினார். அரசியல் மேடையையும் தன் தனிப்பட்ட சண்டையை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேசியதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்படி வம்பாக சென்று அரசியல் கோதாவில் குதித்தது அவருக்கு சில 'ஏழரைகளை' கொண்டு வந்திருக்கலாம். இதுவொரு காரணம்.

இன்னொன்று, தனக்கு அதீதமாக கிடைத்த புகழையும் செல்வாக்கையும் தலையில் ஏற்றிக் கொண்ட வடிவேலு, தன்னை வாழ வைக்கும் சினிமாத்துறையில் பல பிரச்சினைகளைச் செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைப்பது, திடீரென சம்பளத்தை உயர்த்துவது, விமானத்தில் பயணிக்கும் நேரத்தைக் கூட கணக்கிட்டு பணம் கேட்பது என்று அவரைப் பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டேயிருந்தன.

இதன் உச்சம்தான் 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகசேி - பகுதி 2' ல் நிகழ்ந்த சர்ச்சைகள். இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேருடனும் சர்ச்சையை ஏற்படுத்தி, நடிக்க வராததால் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க வடிவேலுவின் மீது 2018-ல் தடை விதிக்கப்பட்டது.

வடிவேலுவின் திரைப்பயணத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' மிக முக்கியமானதொரு திரைப்படம். இதை இயக்கிய சிம்பு தேவன் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட். 'இம்சை அரசன்' என்பது அவரது புகழ்பெற்ற கதாபாத்திரங்களுள் ஒன்று. அதை வைத்து விதம் விதமான கார்ட்டூன்களை உருவாக்கியிருந்த சிம்புதேவனுக்கு, அதை திரைப்படமாக மாற்றுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரியாக இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. அவரது மனதில் இருந்த பாத்திரத்திற்கு வடிவேலு கச்சிதமாக உயிரூட்டினார். 'இம்சை அரசனின்' ஒவ்வொரு காட்சியும் இன்றளவிற்கும் ரசிக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் சிம்புதேவன்.

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெறுவது அரிது. கவுண்டமணியே முயன்று மண்ணைக் கவ்விய ஏரியா அது. ஆனால் சிம்புதேவனின் திறமையான இயக்கம் காரணமாக 'இம்சை அரசனை' மக்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். கொண்டாடித் தீர்த்தார்கள்.  இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டான வெற்றி காரணமாக இதே சாயலில் அமைந்த மன்னன் பாத்திரங்களில் சிலவற்றிலும் பிறகு வடிவேலு நடித்தார். ஆனால் அவை வெற்றியை அடையவில்லை. வடிவேலு ஹீரோ போன்று நடித்த 'எலி' திரைப்படத்தையும் மக்கள் நிராகரித்தனர். ஆனால் இதில் இருந்தெல்லாம் வடிவேலு பாடம் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

தனக்கு மகத்தான வெற்றியைப் பெற்று தந்த சிம்புதேவனின் மீது வடிவேலு நன்றியுணர்ச்சியுடன் இருந்தாரா. இல்லை என்றுதான் தோன்றுகிறது. இம்சை அரசனின் பாகம் இரண்டின் படப்பிடிப்பின் போது திரையில் 'புலிகேசி' செய்த அதே இம்சைகளை வடிவேலுவும் செய்தார் என்று சொல்லப்படுகிறது.  'நான் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனரைத்தான் உபயோகிக்க வேண்டும்' என்பது துவங்கி பல இடையூறுகளை அவர்  செய்தார் என்கிறார்கள். படம் நின்று போனது.  தன்னுடைய முக்கியமான வெற்றித் திரைப்படத்தை இயக்கியவராயிற்றே என்று சிம்புதேவனுக்கு எவ்வித மரியாதையையும்  வடிவேலு அளிக்கவில்லை.  இயக்குநரையும் தயாரிப்பாளரையும் நேர்காணல்களில் மலினமாக குறிப்பிட்டார்.

தன்னுடைய இந்த வீழ்ச்சிக்கு தானும் ஒரு காரணம் என்பதை வடிவேலு உணரவேயில்லை. மாறாக, ' திரைத்துறையிலிருந்து என்னை ஒதுக்க சதி நடக்கிறது' 'இனிமேல் OTT -ல் நடிப்பேன்' என்றெல்லாம் தொடர் பேட்டிகளாக தந்து கொண்டிருந்தார் . 'அதெல்லாம் இருக்கட்டும்யா.. நீ திரும்பி வந்துருய்யா' என்று மக்கள் ஒருபக்கம் உள்ளூற கதறிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஏரியாவில் வடிவேலு ஏற்படுத்திய வெற்றிடம் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. இன்னொரு முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம், ஹீரோவாக மாறி விட பரோட்டா சூரி, யோகிபாபு, சதீஷ் போன்றவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டியிருந்தது. நடிகர் விவேக் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததுதான் இதிலிருந்த பெரிய ஆறுதல். ஆனால் அவரும் சமீபத்தில் மறைந்து விட்டார்.

இந்த நிலையில் வடிவேலுவின் இந்த மறுவருகை எப்படியிருக்கும்?

ஓர் இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்த 'கத்தி சண்டை' என்கிற திரைப்படம் வெளியான போது, வடிவேலுவை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் அதில் பழைய வடிவேலுவின் இயல்பான நகைச்சுவை பெரிதும் தொலைந்து போயிருந்தது. கூடவே அவரது தோற்றத்திலும் கணிசமான மாற்றம் இருந்தது. 'வெள்ளந்தியான' தோற்றத்தில் இருந்த பழைய வடிவேலு ஏறத்தாழ காணாமல் போயிருந்தார். எனவே மக்கள் இதற்கு பெரிய வரவேற்பை அளிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான 'சிவலிங்கா', 'மெர்சல்' போன்ற திரைப்படங்களுக்கும் இதுதான் கதி. 'கிணத்தைக் காணோம்யா' என்கிற காமெடி மாதிரி 'எங்க வடிவேலு எங்கய்யா' என்று மக்கள் கதற வேண்டியிருந்தது.

இந்த இரண்டாம் இன்னிங்க்ஸை வடிவேலு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் ஒருவேளை இழந்த செல்வாக்கை அவர் மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் முன்பிருந்த வடிவேலுவை இப்போது அவராலேயே தர முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அது நிகழ்ந்தால் தமிழக மக்களைப் போல் மகிழ்ச்சியடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவரின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு அத்தகையது.

ரசிகர்களின் விருப்பம். வடிவேலு குதிரையைப் போல டக்கென்று எழுந்து கொள்வாரா? அல்லது யானையைப் போல் மீண்டும் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வாரா என்பதை காலம்தான்  சொல்ல வேண்டும்.


suresh kannan