தமிழ் சினிமாவிலும் அப்படியொரு சாத்தியம் நேராதா என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த ஏக்கத்தை சற்று தணிக்க வந்த முதல் திரைப்படமாக 'காக்கா முட்டை' திரைப்படத்தைச் சொல்லலாம். விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் பார்வையில் பயணிக்கும் இந்தத் திரைப்படமானது, சமூகத்தின் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஆழமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தியது. உயர் மற்றும் நடுத்தர வர்க்க நபர்களுக்கு மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு தின்பண்டம், ஏழை மக்களுக்கு எவ்வாறு எட்டாக்கனியாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் மாறுகிறது என்கிற அவலத்தைப் பேசிய படைப்பு 'காக்கா முட்டை'.
இந்த வரிசையில் சமீபத்திய சிறந்த வரவு என்று 'மண்டேலா' திரைப்படத்தைச் சொல்லலாம். இரானிய திரைப்படப் பாணியோடு நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும் ஏறத்தாழ அதே எளிமையையும் அழகியலையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் மிகவும் கவனிக்கத்தகுந்த படைப்பு இது எனலாம்.
தேர்தல் காலங்களில், அரசியல்வாதிகளின் பார்வையில் வாக்காளர்கள் என்பவர்கள் வெறும் வாக்குகளாக, எண்களாக மட்டுமே தெரிவார்கள். இதர நேரங்களில் அவர்களை மனிதர்களாக கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள். இதைப் போலவே பெரும்பான்மையான வாக்காளர்களும் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தரும் இலவசப்பொருட்கள், பணம் போன்வற்றை எதிர்பார்ப்பவர்களாக மாறி விட்டார்கள்.
ஒட்டு மொத்தத்தில் தேர்தல் என்பது வருங்கால தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போகும் முக்கியமான விஷயமாக அல்லாமல் இருதரப்பிலும் அவரவர்களின் லாபத்தை எதிர்நோக்கும் வணிகமாக சுருங்கி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் 'ஒரு வாக்கின்' மதிப்பு எத்தகையது, அதற்கு எத்தனை சக்தி உள்ளது என்பதை அழுத்தமாக விவரிப்பதுதான் 'மண்டேலா' திரைப்படத்தின் மையம். இதன் காட்சிகள் பயணிக்கிற போக்கில் நம் சமூகத்தைக் குறித்த பல்வேறு இயல்பான நையாண்டிகள் விமர்சன நோக்கில் நிரம்பியுள்ளன.
*
இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டது சூரங்குடி ஊராட்சி. இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி நிகழும் மோதல்களைத் தடுக்க வேண்டும் என்கிற உத்தேசத்துடன் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் அந்த ஊரின் தலைவர்.
ஆக .. நம் அரசியல் தலைவர்களில் சிலர் மனைவி, துணைவி என்று இரண்டு திருமணங்களை மேற்கொள்வது அவரவர்களின் செளகரியத்திற்காக அல்ல. சமூக நல்லிணக்கம்தான் அதன் பிரதான குறிக்கோள் என்பதை நாம் உணர வேண்டும். போகட்டும். ஆனால் ஊர்ப்பெரியவர் உண்மையிலேயே நல்லவர். இரு பிரிவுகளும் அடித்துக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் நல்லியல்புகள் காரணமாக ஊர் அவரை மதிக்கிறது.
ஆனால் அவரது வாரிசுகள் (ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு மகன்) இரண்டு பிரிவுகளாக கோஷ்டி பிரிந்து மோதிக் கொள்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் ஊரும் அதே மாதிரி பிரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சாதிப்பிரச்சினைகளுக்கு நிகரானது தமிழ் சினிமாவின் சென்சார் பிரச்சினை. எனவே இந்தப் பிரிவினருக்கு 'வடக்கூர், தெக்கூர்' என்று எளிமையாக பெயர் சூட்டி விடுகிறார் இயக்குநர். அவருக்கு வேறு வழியும் இல்லை.
இதுதான் இந்தத்திரைப்படத்தின் ஆரம்ப பின்னணி. இந்த ரத்தபூமியில் ஊராட்சிக்கான தேர்தல் வருகிறது. எண்ணிக்கையில் இரு பிரிவினரும் சமமாக இருக்கிறார்கள். ஊர்ப் பெரியவரின் வாரிசுகள் இருவரும் ஜெயிப்பதற்காக ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டுகிறார்கள். ஒரே ஒரு ஓட்டு கிடைத்தால் போதும். ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று கோடிகளில் புரளலாம்.
இந்தச் சமயத்தில்தான் அந்த ஊரில் யாராலும் மதிக்கப்படாத ஓர் எளிய வாக்காளன் இவர்களின் கண்களில் படுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமும் நகைச்சுவையுமாக சொல்லியிருக்கிறார்கள்.
நாஞ்சில்நாடன் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்கிற சிறுகதையை அற்புதமாக விரித்து திரைப்படமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின்.
*
சூரங்குடி ஆண்களில் சிலர், விடிவதற்கு முந்தைய இருட்டில் மரங்களின் பின்னால் 'ஒதுங்குவதோடு' படம் துவங்குகிறது. வடக்கூர் அரசியல்வாதியின் ஆட்கள் இவர்களை 'அலேக்காக' தூக்கி வண்டியில் அமர்த்தி கொண்டு செல்கின்றனர். "தூய்மை பாரதம்' எழுதப்பட்ட புதிய கழிப்பறையொன்று அதன் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
வடக்கூர் மக்கள் இதைத் திறப்பதற்காக முயலும் போது தெக்கூர் மக்கள் வந்து அவர்களிடம் மல்லுக்கட்டுகிறார்கள். இருதரப்பிற்கும் பயங்கர சண்டை நடக்கிறது. மண்டைகள் உடைகின்றன. இதற்கு நடுவில் புதர்களின் மறைவிலிருந்து எழுப்பி வரப்பட்ட மக்கள் கையில் சொம்புடன் பரிதாபமாக நிற்கிறார்கள். இப்படியாக துவங்கும் இந்தத் திரைப்படத்தில் அவல நகைச்சுவையானது பல காட்சிகளிலும் வசனங்களிலும் அபரிதமாக பெருகி வழிந்து ஓடிய படியே இருக்கிறது.
ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போல, தேர்தல் காலத்தில் மட்டும் மரியாதை செய்யப்படும் ஓர் அநாமதேயன் அந்த ஊரில் இருக்கிறான். அவனுக்கென்று சொந்தமாக பெயர் கூட இல்லை. பிள்ளையார் போல மரத்தடிதான் அவனது வசிப்பிடம். பெரும்பாலான கிராமத்து மக்கள் அவனை 'இளிச்சவாயா' என்று கூப்பிடுகிறார்கள். சிகையலங்காரம்தான் அவனது பிரதான தொழில். அது உட்பட பல உதிரித் தொழில்களை செய்யும் அவனுக்கு சரியான கூலியை யாருமே தருவதில்லை. அவனை புறவாசல் வழியாக வரச்சொல்லி பழைய சோறு போட்டு அனுப்பி விடுகிறார்கள். எனவே 'இளிச்சவாயன்' என்கிற பட்டம் அவனுக்கு பொருத்தம்தானே? அது மொழியாக்கம் செய்யப்பட்டு 'ஸ்மைல்' என்கிற பெயராக நிலைத்து விடுகிறது. இந்த லட்சணத்தில் சொந்தமாக ஒரு சலூன் கட்டிடம் அமைக்க வேண்டுமென்பதுதான் 'ஸ்மைலின்' கனவும் லட்சியமும்.
இப்படிப்பட்ட இளிச்சவாயன் என்கிற ஸ்மைல் பாத்திரத்தில் யோகிபாபு மிக இயல்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் செய்த முக்கியமான சாதனைகளுள் ஒன்றாக யோகிபாபுவின் கதாபாத்திரத்தை கையாண்டதை சொல்ல வேண்டும்.
ஆம். யோகிபாபுவின் பொதுவான நடிப்பு பாணி நமக்குத் தெரியும். தனக்கு எதிரேயுள்ள எவரையும் அநாயசமாக கிண்டல் செய்வதுதான் அவரது நடிப்பு பாணி. இதை ஏறத்தாழ அவரின் அனைத்துத் திரைப்படங்களிலும் காணலாம். ஆனால் இதில் முற்றிலும் வேறு மாதிரியான யோகிபாபுவை காண முடிகிறது. தனது கதாபாத்திரத்தின் தன்மையை கச்சிதமாக உணர்ந்து அதற்கேற்ப அடக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். இவரைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தாலும் இமேஜ் எதையும் பார்க்காமல் பாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயன்றிருக்கிருக்கும் யோகிபாபுவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
*
ஒரு கிராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்படுவார்கள், சாதிய நோக்கில் எவ்வாறெல்லாம் மலினமாக நடத்தப்படுவார்கள் என்பது யோகிபாபுவின் பாத்திரம் வழியாக இயல்பாக பல இடங்களில் விவரிக்கப்படுகிறது.
தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஊர் மக்களில் ஒருவர் திருடிக் கொள்வதால் மீதமிருக்கும் பணத்தை தபால் அலுவலகத்தில் சேமித்து வைப்பதற்காக செல்கிறான் 'ஸ்மைல்'. ஆனால் அந்த அரசாங்க கட்டிடத்திற்குள் செல்வதற்காக 'புறவாசல்' எங்கே இருக்கிறது என்பதை 'ஸ்மைல்' தேடுகிறான். கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்குள்ளும் முன்வாசலின் வழியே அனுமதிக்கப்படாமல் புறவாசல் வழியாக மட்டுமே அவன் செல்வதால் ஏற்பட்ட பழக்கத்தை அரசாங்க கட்டிடத்திலும் தன்னிச்சையாகப் பின்பற்ற முயல்கிறான். இது ஒரு சிறு காட்சியாக கடந்து விட்டாலும் நம சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமையை அவல நகைச்சுவையுடன் முகத்தில் அறைவது போல் பதிவு செய்திருக்கிறது.
"உன்னை யாரு சப்பாணின்னு கூப்பிட்டாலும் அவங்களை 'சப்'புன்னு அறைஞ்சுடு' என்கிற சப்பாணிக்கு ஆதரவு தருகிற பதினாறு வயதினிலே 'மயில்' போல, 'ஸ்மைலுக்கு' ஆதரவு தர முன்வருகிறாள் ஒருத்தி. தபால் அலுவலகத்தில் பணிபுரிகிற அரசு ஊழியை அவள். பணம் போட தபால் அலுவலத்திற்கு வருகிற 'ஸ்மைலின்' இயற்பெயரைக் கேட்கிறாள். அப்போதுதான் தன்னுடைய அசல் பெயர் என்ன என்பதை தேடத் துவங்குகிறான் 'ஸ்மைல்'. அவன் தன்னுடைய பெயரைத் தேடும் வைபவமும், அது கிடைக்காமல் போகவே தபால் அலுவலக ஊழியை இவனுக்கு புதிதாக பெயர் சூட்டும் சடங்கும் ரகளையான காட்சிகளாக அமைந்துள்ளன.
'ஸ்மைலுக்கு' மண்டேலா என்கிற புதிய பெயர் தபால் அலுவலகப் பெண்ணின் மூலமாக கிடைக்கிறது. தனக்கு கிடைத்த புதிய அடையாளத்தின் மூலம் 'மண்டேலா' மகிழ்ந்தாலும் தன் உதவியாளனிடம் 'ஏண்டா.. இது உயர்சாதிக்காரங்க பெயரா இருந்தா என்னடா பண்றது?" என்று சந்தேகத்துடனும் அச்சத்துடனும் கேட்கிறான். இப்படி பல இடங்களில் அமுங்கிய நகைச்சுவைக் கொடியைஅட்டகாசமாக பறக்க விட்டிருக்கிறார் இயக்குநர் .
*
ஊராட்சி தேர்தலில் இரு சமூகத்தினருக்கும் சமமான எண்ணிக்கையில் வாக்குகள் இருப்பதை அவர்கள் கணக்கு போட்டு அறிகிறார்கள். எனவே ஒரேயொரு வாக்குதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாக மாறுகிறது. அது 'மண்டேலா' கையில் வைத்திருக்கும் வாக்கு. அந்த ஊரில் எவராலும் மதிக்கப்படாத 'மண்டேலா' ஒரே கணத்தில் கதாநாயகனாகிறான். 'உன் வாக்கை எனக்கு தா' என்று இரு பிரிவினரும் அவனிடம் கெஞ்சுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போலவே மண்டேலாவின் நிலைமை மாறுகிறது.
திருவிழா நாளன்று பலியிடப்படவிருக்கும் ஆட்டின் நிலைமைக்குள் 'மண்டேலா' சிக்கிக் கொள்கிறான். தற்காலிக மாலை, மரியாதைகள் கிடைத்தாலும் அதன் பிறகு அவன் பிரியாணியாகப் போகிறான் என்கிற ஆபத்தை அவன் உணர்வதில்லை. மாறாக அவனுக்கு உதவியாளனாக இருக்கும் சிறுவனும் தபால் அலுவலகப் பெண்ணும் இதைப் புரிந்து கொள்கிறார்கள். அவனை எச்சரிக்கிறார்கள். ஆனால் ஊராரின் திடீர் கருணையால் விதம் விதமான உணவுகளும், உடைகளும், பரிசுப் பொருட்களையும் பெறும் மண்டேலாவிற்கு இவர்களின் அறிவுரை காதில் விழுவதில்லை.
பிறகு நிலைமை ஒரு கட்டத்தில் மண்டேலாவிற்கு எதிராக மாறுகிறது. கதாநாயகனாக தென்பட்ட அவனே இப்போது வில்லனாகத் தோற்றமளிக்கிறான். இரு பிரிவினரும் அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒற்றை வாக்கின் மதிப்பு எத்தகையது என்பதை மண்டேலா அழுத்தமாகப் புரிந்து கொள்ளும் இறுதிக்கட்டத்தை நோக்கி திரைப்படம் பயணிக்கிறது. வாக்காளர்கள் புத்திசாலிகளாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெறுவது அவர்களே என்பதை கடைசி ஷாட்டின் மூலம் அழுத்தமாகப் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர்.
*
ஸ்மைல் என்கிற மண்டேலாவாக மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார் யோகிபாபு. முன்னரே குறிப்பிட்டபடி அவரது வழக்கமான நக்கல் பாணி நடிப்பை முற்றிலும் கழற்றி விட்டு இந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அவரை கச்சிதமாகப் பொருத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தபால் அலுவலக ஊழியையாக ஷீலா ராஜ்குமார் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கும் மண்டேலாவிற்கும் உள்ள வெளிக்காட்டப்படாத நேசமும் மெல்லிய காதலும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான ஊர்த்தலைவராக சங்கிலி முருகன், இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களாக ஜி.எம். சுந்தர் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். இதில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் அதனதன் தனித்தன்மையோடு மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு எல்லோரிடமும் வேலை வாங்கிக் கொண்டு அவர்கள் 'பணம்?" என்று கேட்கும் போது 'வேண்டாம்' என்று எகத்தாளமாக கூறும் ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால் கடைசியில் இந்தப் பாத்திரம் அதே காரணத்தை இன்னொரு பொருத்தமான இடத்தில் சொல்லும் விதமானது சிறப்பாக அமைந்துள்ளது. சண்டை வரும் போதெல்லாம் தன் செருப்பை பத்திரமாக எடுத்து வைக்கும் இன்னொரு பாத்திரமும் சுவாரசியம்.
இதைப் போலவே 'மண்டேலாவின்' உதவியாளனாக நடித்திருக்கும் சிறுவன் பட்டையைக் கிளப்பியுள்ளான். யோகிபாபுவின் பிரத்யேக நக்கல் பாணியை, இந்தச் சிறுவன் கையில் எடுத்துக் கொண்டிருப்பது சிறப்பு. பல காட்சிகளில் உத்தரவாதமான சிரிப்பிற்கு காரணமாக உள்ள இந்தச் சிறுவன், தக்க நேரத்தில் யோகிபாபுவிற்கு அறிவுரை கூறும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
*
இயல்பான காட்சிகளோடு இந்தத் திரைப்படத்தில் வரும் இயல்பான நகைச்சுவை வசனங்களும் கவர்கின்றன. இரண்டு சமூகங்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில் கூடுதல் ஒரு வாக்கிற்காக 'வேறு யாராவது இருக்கிறார்களா?' என்று விசாரிக்கப்படும் போது 'அவங்களைத்தான் நாம துரத்தி விட்டுட்டமே' என்று ஒரு வசனம் வருகிறது. தேர்தல் காலத்தில் மட்டுமே தலித் சமூகத்தின் ஓட்டுக்கள் கவனிக்கப்படும் விதத்தை இந்த வசனம் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறது.
இரண்டு பிரிவினரும் தரும் இலவசப் பொருட்களை வைத்து ஜாலியாக இருக்கிறான் 'மண்டேலா'. ஆனால் ஒரு கட்டத்தில் அவை நிலையில்லாதவையாக அவனை விட்டுப் போகின்றன. அரசாங்கம் தரும் இலவசங்களை இது தொடர்பான காட்சிகள் கிண்டல் செய்கின்றன என்பது போன்ற விமர்சனங்கள் வெளிவந்தன.
அரசு வெளியிடும் இலவச திட்டங்கள், பொருட்களின் மூலம் எளிய சமூகங்களின் வாழ்க்கையில் உருவாகும் மாறுதல்கள் முக்கியமான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் இது தொடர்பான காட்சிகள் அதைப் பற்றி பேசவில்லை. எளிய சமூகத்திடமிருந்து வாக்குகளைப் பிடுங்குவதற்காக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தரும் இலவசப் பொருட்களை மட்டுமே விமர்சிப்பதாக தோன்றுகிறது. ஒருவகையில் வாக்காளருக்கு தரப்படும் லஞ்சம் அது. வாக்காளன் அதைப் பெற்றுக் கொண்டால் பிறகு வெற்றி பெறும் வேட்பாளரை கேள்வி கேட்கும் தகுதியை தார்மீகமாக இழந்து விடுகிறான். இந்த ஆதாரமான நீதி படத்தில் அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.
*
அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் 'மண்டேலா' திரைப்படத்தின் மூலம் முதல் திரைப்படத்திலேயே கவனிக்கத்தகுந்த இயக்குநராக மாறியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பல சமூக விமர்சனங்கள் போகிற போக்கில் சொல்லப்பட்டாலும் அவை சராசரி பார்வையாளனுக்கும் சென்று சேரும்படி அழுத்தமாக ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக உருவாக்கியுள்ளார். அலவ நகைச்சுவையில் தோய்ந்த வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தைச் சிறப்பாக்கியிருக்கின்றன.
பரத் சங்கரின் எளிமையான பின்னணி இசையும் சிறப்பான பாடல்களும் மிகப் பொருத்தமான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. யுகபாரதி, அறிவு போன்றவர்களின் பாடல் வரிகள் தாங்கள் சொல்ல வரும் கருத்துகளை மிக எளிமையாக பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கின்றன. விது அய்யன்னாவின் இயல்பான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் சிறப்பான எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இந்தத் திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன.
ஒரு சராசரியான வாக்காளனுக்கு அவன் அளிக்கும் வாக்கின் மதிப்பும் முக்கியத்துவமும் இன்னமும் கூட தெரியவில்லை. இந்த ஆதாரமான விஷயத்தை மிக வலுவாக பார்வையாளனுக்கு கடத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது 'மண்டேலா'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இந்தச் செய்தி பரவலான பார்வையாளர்களைச் சென்று அடைந்திருக்கும். என்றாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் இணைய வழியில் வெளியானது மிகப் பொருத்தமானது.
கருப்பின மக்களின் சமூக மேம்பாட்டிற்கு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா. அவரது பெயரை பிரதான பாத்திரத்தின் அடையாளமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் அந்தப் பெயருக்கு நியாயத்தைச் சேர்த்திருப்பது சிறப்பு. அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் ஒரே சமயத்தில் எளிமையான பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறார் 'மண்டேலா'.
(பேசும் புதிய சக்தி - ஜூன் 2021 இதழில் வெளியானது)
suresh kannan