அமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வாகியுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பு வெளிவந்த அதே சமயத்தில் திரைப்படமும் வெளியான தற்செயல் ஆச்சரியம் காரணமாக பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் இதன் மீது குவிந்தது. படத்தைக் காணும் ஆவல் மிகுந்த திரை ரசிகர்கள் இதனை நோக்கி செல்ல, ‘ஐயோ.. விருதுப்படமா?” என்று மற்றவர்கள் வண்டியை வேறுபக்கம் திருப்பினார்கள்.
தான் இயக்கிய இரண்டாவது திரைப்படமே, ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட விஷயம் இயக்குநருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடும் என்றாலும் இன்னொருபுறம் ஒரு சர்ச்சையையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. 2001-ல் வெளியாகியிருந்த ‘சீக்ரெட் பேலட்’ எனும் இரானிய திரைப்படத்தின் திரைக்கதையிலிருந்து ‘நியூட்டன்’ நகலெடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளை அமித் மசூர்கர் முற்றிலுமாக மறுத்தார். ‘ஒரு நோக்கில் இரண்டு படைப்புகளின் மையமும் ஒரே மாதிரியாக தோற்றமளித்தாலும், திரைக்கதையும காட்சியமைப்புகளும் வெவ்வேறான திசையின் பயணத்தைக் கொண்டவை’ என்று வாதிட்ட அவரின் தரப்பிற்கு அனுராக் காஷ்யப் உள்ளிட்ட சில இயக்குநர்களும் ஆதரவு தந்தனர்.
இதன் உச்சக்கட்டமாக, ‘சீக்ரட் பேலட்’ திரைப்படத்தின் இயக்குநர் Babak Payami, ‘நியூட்டன்’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு ‘இது நிச்சயம் நகலெடுப்பு இல்லை. இரண்டு திரைப்படங்களும் ஒரே விஷயத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வெவ்றோன குரலில் பேசுகின்றன’ என்று சொன்ன நேர்மையான அபிப்ராயம், அமித் மசூர்கரை நிம்மதியடைய வைத்திருக்ககூடும். இந்த சர்ச்சையை ஆஸ்கர் விருது கமிட்டி தீவிரமாக எடுத்துக் கொண்டால், அது இந்திய திரைப்படம், நாமினேஷன் பட்டியலில் முன்னேறுவதற்கும் இறுதி முனையை அடைவதற்கும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
**
இந்தக் கட்டுரையில் இரானிய திரைப்படமான ‘சீக்ரெட் பேலட்’ திரைப்படத்தைப் பற்றி விரிவாக காணவிருக்கிறோம்.
இரானின் தெற்கு கடையோரப் பகுதியில் உள்ள பாலைவன தீவு. ஆள் நடமாட்டம் மிக அரிதாக உள்ள இடத்தில் துப்பாக்கியுடன் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். கடற்கரை வழியாக நிகழக்கூடிய குற்றங்களை தடுப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு விழித்திருந்த காவலாளி அலுப்புடன் உறங்கச் செல்ல, பகல் நேர பொறுப்பாளி கடமைக்கு இணையும் சோம்பலான விடியற்காலை காட்சிகளுடன் படம் துவங்குகிறது. வந்திருக்கும் பெரிய அளவு பெட்டியை பொறுப்பாக எடுத்து வைக்கிறார் அவர். மேலும் சில சோம்பலான கணங்கள் நகர்ந்த பிறகு படகில் வந்து இறங்குகிறார் ஒரு பெண்.
அதுவொரு தேர்தல் நாள். அந்தப் பகுதியின் ஏஜெண்ட்டாக அந்தப் பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத, வாக்குச்சீட்டின் பொருள் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் இல்லாத அந்தப் பகுதி மக்களை, அந்தப் பெண்மணி தேடிக் கண்டடைந்து வாக்கு சேகரிக்க வேண்டும். இதை முடித்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர் கடற்கரைக்குத் திரும்பியாக வேண்டும். இல்லையென்றால் படகு போய் விடும்.
தான் வந்திருக்கும் நோக்கம் மற்றும் பணி ஆகியவற்றைப் பற்றி காவலாளியிடம் விளக்கமாக கூறுகிறார் அந்தப் பெண். ஆனால் காவலாளியோ, பெண்ணை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். “ஏஜெண்ட் என்றவுடன் ஓர் ஆண்தான் வருவார் என்று எதிர்பார்த்தேன். நிச்சயம் ஒரு பெண்ணை எதிர்பார்க்கவில்லை. என்ன அரசாங்கம் நடத்துகிறார்கள்” என்று முணுமுணுக்கிறார். ஒரு பெண் அதிகாரியுடன் இணைந்து பணிபுரிய வேண்டுமா என்று தயங்கும் பழமைவாத ஆணாக அந்த ராணுவ வீரர் இருக்கிறார்.
“உத்தரவு அப்படித்தான் சொல்கிறது. இதற்கு இணங்காவிடில் இதற்கான பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று மிரட்டலான கெஞ்சலுடன் அவரை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஏஜெண்ட். ஓணாணை மடியில் கட்டிக் கொண்டது போல, முணுமுணுத்துக் கொண்டே வரும் பாதுகாவலருடன், வாக்குச் சேகரிப்பிற்காக பாமரர்களும் கொள்ளையர்களும் நிறைந்திருக்கும் பாலைவனப்பகுதிக்குள் அந்தப் பெண் பிடிவாதமாக திரிந்து அலையும் பயணமே இந்த திரைப்படம்.
நிதானமாக நகரும் இந்த திரைப்படத்தை சற்று கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் கொப்பளிக்கும் நகைச்சுவை ஒளிந்துள்ளது. யதார்த்தத்தை முகத்தில் அறையும் அவல நகைச்சுவை. ஒரு வாக்குச்சீட்டு தம் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்பதைப் பற்றி அங்குள்ள பெரும்பாலோனோருக்கு தெரியவில்லை. அத்தனை அறியாமை நிறைந்திருக்கும் பகுதியாக அது இருக்கிறது. இரானிய நிலப்பகுதி மட்டுமல்ல, ஒருவகையில் இந்தியக் கிராமங்களுக்கும் இந்தப் படத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இதைப் போன்று உள்ள அத்தனை பிரதேசங்களுக்கும் அச்சு அசலாக பொருந்திப் போகும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஒருபக்கம், வாக்களிப்பதின் மூலம் தன் நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்கிற ஜனநாயக நம்பிக்கையின் மீதான அறியாமை ஒருபுறம்,
வாகனத்தை செலுத்தும் காவலாளி கேட்கிறார். “திருடர்களும் ரவுடிகளும் கூட வாக்களிக்கலாமா?” “ஆம். அதுதான் ஜனநாயகம்” என்று பதிலளிக்கிறார் ஏஜெண்ட். காவலாளிக்கு இதிலுள்ள முரண் புரியவில்லை. ‘திருடர்களுக்கு எதற்காக வாக்குரிமை தருகிறார்கள்? என்ன மாதிரியான அரசாங்கம் இது?” என்று அலுத்துக் கொள்கிறார்.
ஜீப்பில் துப்பாக்கியுடன் வரும் பாதுகாவலரைப் பார்த்து ஓர் இளைஞன் ஓடத் துவங்குகிறான். “அவனை துரத்திப் பிடித்து வாக்களிக்க வைக்கலாம்” என்கிறார் ஏஜெண்ட். இவர்களின் வாகனம் வேகமாக வருவதைப் பார்த்து அவன் மேலும் பயந்து ஓடுகிறான். ஒருவழியாக அவனைத் தடுத்து நிறுத்துகிறார்கள். துப்பாக்கியைப் பார்த்து அவன் மிரள்கிறான். பயங்கரவாதிகளை தடுக்கிறோம் பேர்வழி என்று பொதுமக்களின் மீதும் ராணுவத்தினர் அத்துமீறல் செய்யும் அட்டூழியங்களின் பயம், அந்த இளைஞனின் அச்சத்தில் தெரிகிறது. பயத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கிறான்.
வாக்களிப்பதற்காக இவர்களைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது. ஏஜெண்ட் மகிழ்ந்து போகிறார். ஆனால் அங்கிருக்கும் பெண்களின் அனைவரின் சார்பாக வந்திருக்கும் ஓர் ஆணே வாக்களிக்கும் முடிவை எடுப்பார் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறார். “இல்லை. யாருக்கு வாக்களிப்பது என்கிற முடிவை அவரவர்கள்தான் எடுக்க வேண்டும்” என்று ஏஜெண்ட் சொல்வது அந்த ஆணுக்குப் புரிவதில்லை. “இல்லை. இவர்களின் கணவன்மார்கள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.”. இவ்வாறு பழமைவாத மனோபாவமும் ஆணாதிக்க சிந்தனைகளும் நிறைந்திருக்கும் பாமரர்களிடம் சிக்கி தத்தளிக்கிறார் அந்தப் பெண் ஏஜெண்ட். என்றாலும் சோர்ந்து விடாமல் வாக்களிக்க வேண்டிய முறையை விளக்கி தன் கடமையை பிடிவாதமான நேர்மையுடன் நிறைவேற்ற முனைந்து கொண்டேயிருக்கிறார்.
கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என்கிறார் ஏஜெண்ட். ஆனால் அவர்கள் முறையான அடையாள அட்டை இல்லாமல் கள்ளத்தனமாக இந்தப் பிரதேசத்தில் இருப்பவர்கள் என்பதால் வாக்களிக்க இயலாமல் போகிறது. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியில் உள்ள subtext-ஐயும் ஊடுருவிப் பார்த்தால் சிரிப்பும் கோபமும் ஒருசேர வருகிறது. வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களை படகில் துரத்தியாவது பிடிக்கலாம் என்கிறார் ஏஜெண்ட். அவரது கடமையுணர்ச்சியைப் பார்த்தால் ஒருபக்கம் பிரமிப்பாகவும் இன்னொரு பக்கம் நகைப்பாகவும் இருக்கிறது.
சில படித்த இளைஞர்கள் தாமாக முன்வந்து வாக்களிக்க வருகிறார்கள். இதற்காக ஏஜெண்ட்டை தேடி தொலைதூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்க விரும்பிய வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதில்லை. அது சார்ந்த முணுமுணுப்புகளை எழுப்புகிறார்கள். மோசமான தலைவர்களே நம் முன் நிறுத்தப்படுவதையும், வேறு வழியில்லாமல் அவர்களில் ஒருவரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் இந்தக் காட்சி மிக நுட்பமாக கிண்டலடிக்கிறது.
ஓர் அரசு அதிகாரியாக தன் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும் பெண் ஏஜெண்ட்டின் மீது பாதுகாவலருக்கு ஒருபக்கம் இனம் புரியாத பரிவு இருந்தாலும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது. ஆள் அரவமில்லா பிரதேசத்தில் இப்படி அலைய வைக்கிறாரே என்று. ஓரிடத்தை கடக்கும் போது, போக்குவரத்து சிக்னல் சிவப்பில் இருப்பதால் வாகனத்தை செலுத்தாமல் நிறுத்தி விடுகிறார். “இது பாலைவனம்தானே, எந்த வாகனமும் வராது. வண்டியை எடுங்கள். நான் நேரத்திற்கு சென்றாக வேண்டும்” என்று மன்றாடுகிறார் அந்தப் பெண். ஆனால் அந்தப் பெண்ணின் கடமையுணர்ச்சியை பழிப்பு காட்டும் வகையில் வாகனத்தை நகர்த்த மறுக்கிறார் பாதுகாவலர். ஏஜெண்ட் மிகவும் கெஞ்சிக் கேட்டபிறகு வாகனத்தை இயக்க முன்வருகிறார்.
உண்மையில் அந்த இடத்தில் சிக்னல் போஸ்ட் எதுவும் கிடையாது. ஆள் அரவமற்ற பாலைவனத்தில் எப்படி போக்குவரத்து சிக்கல் வரும்? இயக்குநரின் குறும்பு அது.
**
பெண்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அது சார்ந்த பரபரப்புகளுடன் பெண்கள் இயங்குகிறார்கள். பாதுகாவலர் ஆண் என்பதால் அவரை அங்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே பெண் ஏஜெண்ட் மட்டும் சென்று வாக்களிப்பதின் அவசியத்தைப் பற்றி விளக்குகிறார். “இதையெல்லாம் எங்கள் வீட்டு ஆண்கள்தான் முடிவு செய்வார்கள். நாங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது” என்கிறார்கள் பெண்கள். இந்தக் காட்சியை பார்க்கும் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் உண்மை நிலவரம் இதுதானே? கிராமப்புறம் என்றல்ல, நகர்ப்புறம் சார்ந்த எளிய சமூகத்தினரின் நிலையும் இதுதான். ‘கணவர் எந்தக் கட்சியைப் பரிந்துரைக்கிறாரோ அதிலேயே கண்மூடித்தனமாக வாக்களிக்கும் மனைவிமார்கள் இன்னமும் இருக்கிறார்கள். கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘மருமகள் வாக்கு’ சிறுகதையும் இங்கு நினைவிற்கு வருகிறது.
செல்லுமிடமெல்லாம் வாக்களிப்பதின் அவசியத்தைப் பற்றி அனத்திக் கொண்டே வருகிறார் ஏஜெண்ட். ஆனால் கேட்பதற்குத்தான் ஆளில்லை கூட வரும் பாதுகாவலர் மட்டும்தான் கேட்டுக் கொண்டு வருகிறார். ஒரு பகுதி முழுக்க பெண்மணி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் அந்த ‘பெண் நாட்டாமையை’ பார்க்கவே முடிவதில்லை. எந்த வீட்டின் கதவைத் தட்டினாலும் திறப்பதில்லை. பெண் ஏஜெண்ட் நகர்ந்த பிறகு அவர்கள் ரகசியமாக எட்டிப் பார்க்கிறார்கள். “இங்கிருக்கும் பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். நீங்கள் போகலாம்” என்று துரத்துகிறார் ஒரு பெரியவர்.
அதே சமயத்தில் பெண் நாட்டாமையிடமிருந்து இவர்கள் சாப்பிடுவதற்கான உணவு வந்து சேர்கிறது. வாக்கின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விருந்தினர்களை உபசரிக்கும் விருந்தோம்பல் உணர்வு குறித்து அறிய நெகிழ்வாக இருக்கிறது. சுவாரசியமான முரண் இது.
நேரத்திற்குள் திரும்ப வேண்டிய பதட்டத்தில் பெண் ஏஜெண்ட் இருந்தாலும் திரும்பும் வழியில் எத்தனை வாக்குகளை சேர்க்க முடியுமோ அத்தனை நல்லது என்கிற நோக்கில் மல்லுக்கட்டுகிறார். வழியில் தென்படும் வியாபாரியொருவரை அணுகுகிறார். “என்னிடம் ஏதாவது பொருளை வாங்கிக் கொண்டால் வாக்களிக்கிறேன்” என்று பேரம் பேசுகிறார் அவர். வேறு வழியில்லாமல் ஒரு பொம்மையை வாங்குகிறார். ஆனால் வியாபாரியிடம் முறையான அடையாள அட்டை இல்லை. இன்னொரு பெரியவர் “இந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு எல்லாம் நான் வாக்களிக்க மாட்டேன். கடவுளுக்கு மட்டுமே என்னுடைய ஓட்டு. அந்தப் பெயர் இதில் இருக்கிறதா?” என்கிறார். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவல நகைச்சுவை ஒவ்வொரு காட்சியிலும் கொப்பளித்துக் கொண்டேயிருக்கிறது. இது போன்ற பல விநோதமான அனுபவங்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.
பெண் ஏஜெண்ட் திரும்பும் நேரமாகி விட்டது. அவரை அழைத்துச் செல்ல வேண்டிய படகு வருவதில்லை. “இத்தனை நேரம் சுற்றிக் கொண்டிருந்தோம். உன்னுடைய வாக்கை சேகரிக்கவில்லையே” என்று பாதுகாவலரிடம் கேட்கிறார் பெண் ஏஜெண்ட். வாக்குச் சீட்டை வாங்கும் பாதுகாவலர், சீட்டின் கடைசியில் ‘பெண் ஏஜெண்ட்டின்’ பெயரை எழுதுகிறார். “உனக்குத்தான் வாக்களிக்க விரும்புகிறேன்” என்பது இதன் மூலம் அவர் சொல்லும் விளக்கம். இந்தப் பயணத்தில் இருவருக்குமான முரண்கள் நிறைய இருந்தாலும் தன்னுடைய கடமையில் மிக கவனமாக இருக்கும் பெண்ணின் மீது பாதுகாவலருக்கு ஏற்படும் தன்னிச்சையான மரியாதையையும் பிரியத்தையும் மிக நுட்பமாக இந்தக் காட்சி உணர்த்துகிறது.
பெண் ஏஜெண்ட்டை அழைத்துச் செல்லும் படகு வராததால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அவரை, சிறிய ரக விமானம் வந்து அழைத்துச் செல்கிறது. மக்களின் அடிப்படையான விஷயங்களில் போதிய கவனம் செலுத்தாத அரசு இயந்திரம், சில அநாவசியமான விஷயங்களுக்காக ஊதாரித்தனமாக செலவு செய்யும் அலட்சியத்தையும் அதிலுள்ள ஊழலையும் இறுதிக் காட்சி நையாண்டி செய்கிறது.
**
அவசியமான இடங்களில் மட்டும் ஒலிக்கும் பின்னணி இசை, இந்த திரைப்படத்தின் காண்பனுபவத்தை உன்னதமாக்குகிறது. புலர்ந்தும் புலராத விடியற்காலையின் வெளிச்சம், சுட்டெரிக்கும் நடுப்பகல், அந்தி மாலையின் அழகு என ஒரு நாளின் பயணத்தை அது சார்ந்த ரியல் டைமில் பதிவு செய்திருக்கும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது ஒளிப்பதிவு.
பெண் ஏஜெண்ட்டாக Nassim Abdi-ம் பாதுகாவலராக வரும் ராணுவ வீரரராக Cyrus Abidi-ம் மிக அற்புதமாக நடித்துள்ளனர். உண்மையில் ஒரு திரைப்படத்தை கண்டு கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு வருவதில்லை. அசலாக நடந்து கொண்டிருக்கும் காட்சிகளை அப்படியே படம்பிடித்த யதார்த்தமே பல இடங்களில் முன்நிற்கிறது. எந்தவொரு காட்சிக்கோர்வையுமே முழுமையாக இல்லை. துண்டு துண்டான காட்சிகளுடன் படம் நகர்கிறது. ஆனால் நுண்ணுணர்வுள்ள பார்வையாளன் மீதப்பகுதிகளை தன்னுடைய மனக்காட்சிகளுடன் இட்டு நிரப்பிக் கொள்ளக்கூடிய சாத்தியத்தை வழங்கியிருப்பதால் இயக்குநரின் மீது மரியாதை தோன்றுகிறது.
**
இந்திய சுதந்திரப் போராட்டம் மிக தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட அது பற்றிய செய்தியோ தகவலோ முற்றிலும் அறியாத இந்தியக் கிராமங்கள் பல இருந்தன. தகவல் நுட்பம் போதிய அளவு இல்லாதது ஓர் உபகாரணமே தவிர, பாமரத்தன்மையும் விழிப்புணர்வு இன்மையும் நிறைந்திருந்ததே பிரதான காரணம். பெரும்பானமை சமூகம் இப்படி அறியாமையுடன் நீடிப்பதைத்தான் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள். சில சில்லறை மீன்களை அவர்களை நோக்கி வீசுவதின் மூலம் அதிகாரம் எனும் பெரிய திமிங்கலத்தை எளிதாக கைப்பற்றி விட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். மக்களின் அறியாமைதான் மிகப்பெரிய மூலதனமாக இருக்கிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் என்றல்ல, தகவல் நுட்பம் பெருகி வழிந்தோடும் இன்றைய காலக்கட்டத்திலும் கூட இது சார்ந்த அறியாமை ஏறத்தாழ அப்படியேதான் நீடிக்கிறது. கிராமப்புறங்கள், சிறுநகரங்கள் என்றல்ல நகர்ப்புறங்களும் இதில் விதிவிலக்கல்ல. தாம் விரும்பும் வேட்பாளரை அது சார்ந்த சரியான காரணங்களுடனும் பிரக்ஞையுடனும் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் சதவீதம் மிக குறைவு. அதனால்தான் நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தேர்தல் காலங்களில் கிடைக்கும் தற்காலிகமான, அற்ப ஆதாயங்கள், ‘இந்தக் கட்சிதான் பெரும்பான்மையாக வரப்போகிறது, பிறகு ஏன் நம் வாக்கை வீணடிக்க வேண்டும்?” என்கிற அசட்டுத்தனமான கணக்குகள் உள்ளிட்ட பல காரணங்களால் முறையான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அரிதான நேர்மையாளர்கள் கடுமையாக நிராகரிக்கப்பட்டு, நீண்டகால ஊழல்வாதிகளே மறுபடியும் மறுபடியும் அதிகாரத்திற்கு வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது அந்த தொகுதியின் மக்களுக்கே நினைவில் இருப்பதில்லை. துறை சார்ந்த அமைச்சர்கள் யார் யார் என்கிற தகவலே பலருக்கு தெரிவதில்லை. யாரோ ஒருவருக்கு வாக்களித்து விட்ட பிறகு தம் கடமை முடிந்து விட்டது என்று நினைப்போரே அதிகம். ஆனால் ‘நிலைமையில் பெரிதும் மாற்றமில்லையே, நாம் இப்படி அவதிப்படுகிறோமே’ என்கிற புலம்பல்களும் ஒருபக்கம் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம்தானே நல்லாட்சி கிடைக்கும் என்கிற அடிப்படையான நீதியை பலரும் செளகரியமாக மறந்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் என்பதும் வாக்கு என்பதும் வெற்று சம்பிரதாயமாக அசட்டுத்தனமான கேலிக்கூத்தாகவே நீடிக்கும் என்கிற செய்தியை இந்த திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வும் கல்வியறிவும் வளராமல், அந்தப் பெண் ஏஜெண்ட் போல கண்ணுங்கருத்துமாக பணியாற்றும் அதிகாரிகளின் உழைப்பு பாலைவனத்தில் வீசப்பட்ட நீர் போல எவருக்கும் பயனில்லாமல்தான் போகும்.
Babak Payami இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஈரான் தேசத்திற்கு மட்டுமானதல்ல, அரசியல் உணர்வில்லாத பாமரர்கள் நிறைந்திருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொருத்தமானது.

(குமுதம் தீராநதி இதழில் பிரசுரமானது)
suresh kannan
suresh kannan