Saturday, February 15, 2020

‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |




ஒரு குடும்பத்தின்கண் முன்னாலேயே அவர்களின் குடும்பத் தலைவர் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சோகமானதொரு விஷயத்தை வைத்துக் கொண்டு மென்மையான நகைச்சுவையால் நிரம்பிய ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா? A Long Goodbye என்கிற இந்த ஜப்பானியத் திரைப்படம் அதை இயல்பாகவும் சுவாரசியமாகவும் சாதித்திருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் சிறந்ததொன்றாக இதை மதிப்பிடுவேன்.

ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது அவரது நினைவுகள்தான். அவை ஒவ்வொன்றாக கழன்று வெற்றிடமானால் அவர் ஏறக்குறைய ஓர் இயந்திரத்திற்கு சமமாகி விடுவார். அப்படிப்பட்ட மனிதரைப் பற்றிய திரைப்படம்தான் இது. இந்த மையத்தையொட்டி அந்தக் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட சோகங்களும் மகிழ்ச்சிகளும் மிகத் திறமையான கோர்வையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.

**
பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு சிறுமி தன் தங்கையுடன் ராட்டினம் விளையாட வருகிறாள். 'பெரியவர்கள் உடனிருந்தால்தான் அனுமதிக்க முடியும்' என்கிறார்கள். அப்போது மலங்க மலங்க விழித்த படி அங்கு வரும் வயோதிகர் ஒருவரை உதவி செய்யச் சொல்லி கேட்கிறார்கள், இந்தச் சிறுமிகள்.

அவருடைய கையில் ஏன் மூன்று குடைகளை வைத்திருக்கிறார். அவர் யார்?. இதற்கான பதில்கள், ஃபிளாஷ்பேக் காட்சிகள் வழியாக விரிகின்றன. 2007-ல் துவங்கி இரண்டிரண்டு ஆண்டுகளாகத் தாண்டி வெவ்வேறு பருவ காலங்களில் இவை சொல்லப்படுகின்றன.

Shohei பள்ளிக்கூட முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். வயது எழுபது. Dementia எனப்படும் மறதிநோய் அவரை ஆட்கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார். திருமணமாகி, கலிபோர்னியாவில் வசிக்கும் தன் மூத்த மகளை சந்திக்கும் போது "மணி எட்டு ஆயிடுச்சே.. நீ இன்னமும் ஸ்கூல் கிளம்பலையா?" என்று  எட்டாம் வகுப்பு காலத்தின் கேள்வியை கேட்குமளவிற்கு அவரது நோய் முற்றத் துவங்கியிருக்கிறது.

ஆனால் ஆச்சரியகரமாக பல வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் அவருக்கு பசுமையாக நினைவில் இருக்கின்றன. மூளையின் விந்தைகளுள் இதுவொன்று.

ஒரு வயோதிகரின் நினைவிழத்தல் பற்றிய திரைப்படமென்றாலும் ஒரு துளி  சோகம் கூட இந்தத் திரைப்படத்தில் இல்லாதது பயங்கரமான ஆச்சரியம். இதுவே இந்திய சினிமாவென்றால் ஷெனாய் வாத்தியத்தை எல்லாம் அலற விட்டு  பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். மாறாக இந்தப் படமெங்கிலும் இயல்பான நகைச்சுவை கொப்பளிக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு காட்சி: முதியவரும் அவரது மனைவியும் உறவினரின் வீட்டுக்குச் சென்று விட்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென தன் மனைவியை காதலுடன் பார்க்கும் முதியவர்.."உன்னை என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்த வேண்டும்" என்று ஏதோ நாளைதான் அவர்களின் திருமணத்திற்கான அனுமதியைப் பெறப் போவது போல் ஒரு வசனத்தைப் பேச,  இதை எதிர்பார்க்காத அவரின் மனைவிதிகைப்பும் வெட்கமுமாய் தரும் முகபாவம் அத்தனை அழகு. முதியவர் தன் கடந்த காலத்தில் உறைந்து போயிருக்கிறார் என்பதற்கான காட்சி இது. அவர்களுக்கு திருமணம் ஆகி ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கினறன.

இந்தத் தம்பதி, சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் செல்லும் போது கிழவர் சில பொருட்களை நினைவு மறதியாக தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். வெளியே பிடித்து விடுகிறார்கள். அதன் நிர்வாகி இவர்களை அமர வைத்து சற்று கடுமையாக விசாரிக்கிறார். மனைவி கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்கிறாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாத கிழவர், மனைவி கண்கலங்குவதைப் பார்க்கிறார். ஆசிரியர் பணியில் இருந்த பழைய ஞாபகத்தில், தாமதமாக வந்த மாணவனை வெளியே நிற்கச் சொல்வது போன்ற தொனியில் நிர்வாகியை அதட்டி மிரட்டுவது ரகளையான நகைச்சுவை.

இறந்து போன சக ஆசிரியரின் இறுதிச் சடங்கிற்கு மகளின் உதவியுடன் செல்கிறார் கிழவர். அங்கு இவரை அடையாளம் கண்டு கொள்ளும் இன்னொரு நண்பர் உற்சாகமாக நலம் விசாரிக்கிறார். கூட வந்திருக்கும் மகள் இவரது மறதி நோயைப் பற்றி மெலிதாக சுட்டிக் காட்டினாலும் நண்பருக்குப் புரிவதில்லை. தொடர்ந்து உற்சாகமாக பேசுகிறார். கிழவரும் மையமாக பதிலளிக்கிறார். ஒரு கட்டத்தில் கிழவர் கேட்கிறார். "அவன் இப்ப எப்படியிருக்கான்.. நல்லா இருக்கானா?" என்று. அவர் கேட்டது இறந்த நண்பரைப் பற்றி. இப்போதுதான் உற்சாக ஆசாமிக்கு கிழவரின் நிலைமை அப்பட்டமாக உறைக்க சங்கடத்துடன் மெளனமாகிறார். இப்படியாக மென்மையான நகைச்சுவைகள் படம் பூராவும் வந்து கொண்டேயிருக்கின்றன.

**

மேற்கத்திய நாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். வயது வந்த பிள்ளைகள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி தன் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிறகு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு அருகி விடுகிறது. ஆனால் ஆசியக்கலாசாரம் முற்றிலும் இதற்கு எதிரானது. குடும்பம் என்கிற நிறுவனம் பலமாக இயங்குவதின் அடிப்படைகளில் ஒன்று தியாகம். இந்தக் கருத்தாக்கம் இந்தத் திரைப்படத்தில் பல காட்சிகளில் அழுத்தமாக வெளிப்படுகிறது.மறதி நோயில் அமிழ்ந்து கொண்டிருக்கும் வயோதிகரை அவரது மனைவியும் இரண்டு மகள்களும் தாங்கிப் பிடிப்பது பல காட்சிகளில் நெகிழ்ச்சியாக சொல்லப்பட்டிருக்கிறது.

"நான் வீட்டிற்குப் போகணும்" - இது முதியவர் அடிக்கடி சொல்லும் வசனம். "நாம 25 வருஷமா இங்கதான் இருக்கோம். இதுதான் நம்ம வீடு" என்று மனைவி பதில் சொல்கிறார்.

இது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, வெளிநாட்டில் வசிக்கும் மகள், தன் தந்தைக்கு எந்தவொரு பிரச்சினை என்று கேள்விப்பட்டாலும் உடனே டோக்கியோவிற்கு செல்ல தன் கணவரிடம் அனுமதி கேட்கிறார்.  "வீட்ல ஒரு பிரச்சினை. நான் வீட்டுக்குப் போகணும்" மனைவி அடிக்கடி பிறந்தகத்திற்கு செல்வதை விரும்பாத கணவர் கேட்கிறார் " அப்ப இது உன் வீடு இல்லையா?". 'வீடென்பது எது?' என்கிற தத்துவச் சிக்கல் தொடர்பான கேள்வியை இது போன்ற காட்சிகள் எழுப்புகின்றன.

**
குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இணைந்து வாழ்ந்தாலும் தம்பதியினருக்குள் இருக்கும் மனவிலகல் பற்றிய தெறிப்புகள் பல காட்சிகளில் வெளிப்படுகின்றன.

கலிபோர்னியாவில் வசிக்கும் மகளின் கணவர், ஆராய்ச்சியாளராக இருக்கிறார். மனைவியிடம் பாரா முகமாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம், இளம் வயது  முதிரா காதலில் தோற்றுப் போன மகன், வளரிளம் பருவத்திற்கேயுரிய மனச்சிக்கலோடு குடும்பத்திடம் இருந்து விலகியே இருக்கிறான். பள்ளிக்கும் சரியாக செல்வதில்லை.  இந்த இரு விஷயங்களும் மூத்த மகளை மன உளைச்சல் கொள்ள வைக்கின்றன. இவர்களுடைய மகன் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தால் நிர்வாகம் இவர்களை அழைத்து 'தனிப்பட்ட பிரச்சினைகள் உங்களிடம் இருக்கிறதா?" என்று விசாரிக்கும் போது கணவன் ஆங்கிலத்தில் மழுப்ப, அந்த மொழி புரியாத மனைவி தன் அதிரடி செயலால் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தும் காட்சி ஒரு பக்கம் சிரிக்கவும் இன்னொரு பக்கம் சிந்திக்கவும் வைக்கிறது.

இரண்டாவது மகளின் பிரச்சினை வேறு. சமையல் கலையில் திறமையுள்ள அவள் சொந்தமாக உணவகம் அமைக்க தொடர் முயற்சி எடுக்கிறாள். ஆனால் சாத்தியமாவதில்லை. முன்னாள் வகுப்புத் தோழன் ஒருவனை தற்செயலாக சந்திக்கிறாள். விவாகரத்து ஆனவன் என்றாலும் அவன் பால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுடைய ரெஸ்ட்டாரண்ட்டை நடத்தும் வாய்ப்பும் கிடைக்கிறதே என்பது அடுத்த காரணம்.

ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகும் முன்னாள் மனைவியின் மீது கணவன் காதலை இழக்காததைக் கண்டு மனம் நோகிறாள். இந்த மனவேதனையை ஒரு தனிமையான தருணத்தில் தன் தந்தையிடம் சொல்கிறாள். சொந்த மகளையே சமயங்களில் அடையாளம் தெரியாமல் நினைவுகளை இழந்து கொண்டிருக்கும் அவரால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா, என்ன? ஆனாலும் தன் உள்ளுணர்வால் அவர் பதில் அளிக்கிறார். 'எந்தவொரு பிரச்சினை வந்தாலும் 'ப்பூ' என்று ஊதிப்பார்.. போய் விடும்" என்பது போல. சிறிய உபதேசம் என்றாலும் அவளுக்கு இது மிகப் பெரிய ஆறுதலை அளிக்கிறது. படத்தின் சிறந்த காட்சிகளுள் ஒன்று இது.

**
Kanji என்பது சீன சித்திர பாணியைச் சார்ந்தது. ஜப்பானியர்கள் தங்களின் எழுத்துகளில் கலந்து பயன்படுத்துவது மரபாக இருக்கிறது. ஆனால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜப்பானியர்களுக்கு இதைக் கண்டுபிடிப்பது ஒரு சவால்தான். கிழவர் இந்த எழுத்து முறையை அடையாளம் காண்பதில் விற்பன்னராக இருக்கிறார். சமகால நினைவுகளை இழந்து கொண்டிருந்தாலும் அவருடைய ஆதாரமான திறமைகள் இன்னமும் ஞாபகம் இருக்கின்றன. தாத்தாவையும் பேரனையும் இணைக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. இந்த விஷயத்தில் தாத்தா கொண்டிருக்கும் அபாரமான ஞானத்தை பிரமிக்கும் பேரன் அவரை 'Kanji Master' என்றே அன்புடன் அழைக்கிறான். தன் இளம் பருவத்து காதலியின் பெயரை அந்த சித்திர வடிவில் எழுதித்தரச்சொல்லி அதைப் பத்திரமாக பாதுகாக்கிறான்.

அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பிரச்சினைகள் என்றாலும் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் புள்ளியாக கிழவர் இருக்கிறார். ஒரு சராசரியான ஆணைப் போலவேதான் தன் மனைவியை கிழவர் கையாண்டிருக்கிறார். அன்பை எப்போதும் வெளிப்படையாக செலுத்தியதில்லை. என்றாலும் அவரது அந்திமக் காலத்தில் துளி கூட அன்பு குறையாமல் பார்த்துக் கொள்வதில் அவர் மனைவி நெகிழ வைக்கிறார். ஒரு குறிப்பிட்ட சூழலில் இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, தன்னுடைய உடல் உபாதையையும் மீறி கிழவரைத் தேடிச் சென்று பார்ப்பது நெகிழ்ச்சியான காட்சி.

ஆண் பிள்ளைகளை விடவும் பெண் பிள்ளைகளே தங்களின் பெற்றோர்களை அவர்களின் கடைசிக்காலத்தில் சிரத்தையுடன் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நடைமுறை சார்ந்த நம்பிக்கையை இத்திரைப்படம் மெய்ப்பிக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளை மறந்து கிழவருக்கு உதவி செய்ய அவர்கள் ஒன்றுகூடுவது இந்தத் திரைப்படத்தில் அடிக்கடி நிகழ்கிறது. சுயநினைவை இழந்து கிழவர் படுத்திருக்கும் காட்சியில் அவரது பிறந்த நாளை வழக்கமான உற்சாகத்தோடு அவர்கள் கொண்டாடுவது அற்புதமான காட்சி.

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கிழவர் ஏன் மூன்று குடைகளுடன் வந்தார் என்கிற கேள்விக்கான பதிலை இப்போது பார்த்து விடுவோம்.

அந்தக் குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு சம்பவம் அது. தாயும், இரண்டு மகள்களும் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார்கள். வானம் இருட்டி மழை வருவது போல் இருக்கிறது. தன் இளைய மகள், காலையிலேயே ஜலதோஷத்தால் மூக்கை உறிஞ்சுவதை Shohei கவனித்திருக்கிறார். எனவே குடைகளை எடுத்துக் கொண்டு அவர்களை அழைத்துப் போக வந்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு அதே பழைய நினைவில் இப்போதும் கிழவர் மூன்று குடைகளுடன் பொழுது போக்கு பூங்காவிற்கு வந்திருப்பதை, அவரைக் காணாமல் பதற்றத்துடன் தேடி வரும் குடும்பத்தினர் அறிந்து நெகிழ்ந்து போகிறார்கள். படத்தின் உன்னதமான காட்சியிது. எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருக்கும் கிழவர் புன்னகைப்பதை இந்தக் காட்சியில்தான் பார்க்கிறோம்.

**
மறதி நோயால் அவதிப்படும் கிழவராக Tsutomu Yamazaki மிக அருமையாக நடித்திருக்கிறார். முதியவர்களுக்கே உரிய சிடுசிடுப்பும் கனிவுமான உடல்மொழி படம் முழுவதும் இவரிடம் தங்கியிருக்கிறது. இவரின் குடும்ப உறுப்பினர்களாக நடித்திருந்தவர்களும் தங்களின் உன்னதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு திரைப்படம் என்பதே மறந்து போய், இவர்கள் உண்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' என்றால் கூட நாம் நம்பக்கூடிய அளவிற்கு அத்தனை கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநர் Ryôta Nakano-ன் அசாதாரண திறமை இதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. வயதானவர் தொடர்பான திரைப்படம் என்பதால் காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன. சில வெளிப்புறக் காட்சிகளின் அழகியல் உறைந்த சித்திரங்களைப் போல அருமையாக இருக்கின்றன. மிக அவசியமான காட்சிகளில் அற்புதமாக ஒலிக்கும் மெலிதான பியானோ பின்னணி ஒலி படத்தின் காண்பனுபவத்தை இன்னமும் சிறப்பாக்குகிறது.

Dementia எனப்படும் மறதிநோயை இன்னொரு வகையில் 'A long Goodbye' என்கிறார்கள். இந்த நோயுள்ளவர்கள் மிக நிதானமாகவும் நீளமாகவும் கையசைத்து நம்மிடமிருந்துது விடைபெற்றுக் கொள்கிறார்களாம். இந்தத் திரைப்படத்திற்கு இதை விடவும் பொருத்தமான தலைப்பு அமைந்து விட முடியாது. கிழவர் Shohei நம் மனங்களிலிருந்து அத்தனை சீக்கிரம் விடைபெற மாட்டார் என்பதே இந்தப் படைப்பின் அற்புதமான உருவாக்கத்திற்கு சான்றாக அமையும்.


(குமுதம் தீராநதி -  FEBRUARY 2020 இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

No comments: