Thursday, June 27, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்


ஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவுட்’ ஆனது போல் தெரியவில்லை.

‘கீரை கப்பை யாரோ கழுவவில்லை’ என்று காலையிலேயே புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார் அபிராமி. அது சரியாக வேலை செய்தது. “ஏம்ப்பா.. ஏற்கெனவே அந்த ஊருக்கும் நம்மளுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு” என்பதால் அபிராமியின் கூச்சலை மீரா கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்திருக்கலாம். தேவையில்லாமல் கையைப் பிடித்து இழுத்து விட்டார்.

“ரெண்டு ரூவாதாண்டா.. கேட்டேன்.. அவன் என்ன கோபத்துல இருந்தானோ தெரியல. இத்தாம்பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடியைப் போல இந்தச் சந்தர்ப்பத்தை வலுவாக பயன்படுத்திக் கொண்ட அபிராமி, ‘நான் ஒண்ணும் உன் கிட்ட பேசல” என்று பதிலுக்கு எகிற “குழந்தாய்.. கோபம் என்பது உடலையும் மனதையும் அழிக்கக்கூடியது.. பி.காம்.. பி.காம்…” என்று மீரா உபதேசம் செய்ய அபிராமியின் கோபம் தக்காளியின் விலை மாதிரி சர்ரென்று ஏறியது. ‘நான் உன்கிட்ட பேசலை’ என்று அபிநய சரஸ்வதி மாதிரியான தோரணையைச் செய்தார். கோபப்படும் போது கூட நடனமுத்திரையை கச்சிதமாக காட்டுவது உண்மையான கலைஞர்களுக்கே சாத்தியம்.

பிறகு, பழைய காலத்து நடிகைகள் மாதிரி அவர் நேராகச் சென்று படுக்கையறையில் விழுந்தார். அங்குதான் வனிதா இருந்தார். அவர் இந்தப் பஞ்சாயத்தை நிச்சயம் ஊதிப் பெருக்குவார் என்கிற அபிராமியின் கணக்கு தப்பவில்லை. ‘சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா?” என்று டிரைசைக்கிளை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் வனிதா.

மீரா அவரிடமும் ‘குண்டுக் குழந்தாய்.. கோபம் ஆரோக்கிய கேடு. .. பி.காம்’ என்கிற வழக்கமான பாட்டை நிதானமாகப் பாட “ஓய்… யாரைப் பார்த்து பி.காம்’ன்ற.. நான் அதை விட பெரிய படிப்பு படிச்சிருக்கேன். எஸ்.எஸ்.எல்.சி.. தெர்மா உனக்கு’ என்று சவுண்ட் சரோஜாவாக மாற.. மெர்சலான மீரா பெண்களின் ஆதாரமான ஆயுதத்தை கையில் எடுத்தார். கண்ணீர்.. ப்பா.. இந்தப் பெண்களுக்கு எத்தனை எளிதாக கண்ணீர் வந்து விடுகிறது?! தண்ணீர் பஞ்சமே இல்லாத வரம் கிடைத்தவர்கள்.

மீரா அழத் துவங்கியவுடன் பார்வையாளர்களின் அனுதாபம் அவர் பக்கம் சாய்ந்து விடுமோ என்று கவலைப்பட்டாரோ.. என்னமோ.. அபிராமி, தானும் அதே ஆயுதத்தை எடுத்தார்.. ‘பார்ப்பமா.. உன் அழுகைக்கும்.. என் அழுகைக்கும் சோடி போடுவமா.. சோடி..’ என்று இருவரும் கூட்டு அழுகைப் போட்டி நடத்த ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஏண்டா.. கவினு.. பாப்பா அழுவுதில்ல.. சமாதானப்படுத்தேண்டா” என்று வனிதா டீம் கவினை அழைத்தது. ‘டாடி.. என்னைத் தூக்கிக்கோங்க டாடி’ என்கிற குழந்தை மோடில் அபிராமியும் ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு கூப்பிட, ‘சரி.. இதுக்கும் ஒரு டோக்கனை போட்டு வைப்போம். என்ன இப்போ..’ என்பது மாதிரியே உலவும் கவின் இந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்காமல் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மூலம் அபிராமியின் கண்ணீரை உலர வைத்தார்.

காதலுக்கு தூது போகும் ஆண்களை பொதுவாக.. “ஏண்டா  மாமா வேலை பார்க்கறே?” என்று இதர நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். இதே வேலையைச் செய்யும் பெண்களை எப்படி அழைப்பது? வனிதா டீம் செய்வது இதைத்தான். நீண்ட காலமாக, உண்மையாக இருக்கும் காதலாக இருந்தால் அதற்கு உதவி செய்வது நியாயமான விஷயம். ஆனால் ரியாலிட்டி ஷோவின் ‘இன்ஸ்டன்ட் காதலை’ காவியக்காதல் மாதிரி இணைத்து வைக்க முயல்வது அபத்தம்.

முதல் சீஸனிலும் இப்படித்தான் ஆயிற்று. ஆரவ் – ஓவியா விற்கு இடையில் துவங்கிய வழிசலை வையாபுரி உள்ளிட்ட பலரும் சிரித்து சிரித்து ஊதிப்பெருக்கினார்கள். பிறகு நிலைமை சிக்கலான பிறகு அவர்களே “ஏம்ப்பா.. இந்தப் புள்ள இப்படிப் பண்ணுது’ என்று புறமும் பேசினார்கள். வனிதா டீம் இதையே செய்யத் துவங்கியிருக்கிறது.

இதற்கிடையில் இன்னொரு அபத்த நாடகமும் நடந்தது. முகின் ராவுடன் நெருக்கமாக உலவினால் கவினுக்கு பொஸஸிவ்னஸ் வரும் என்று ஆதிகாலத்தை ஐடியாவை யாரோ அபிராமிக்கு சொல்ல, அவரும் அந்த நாடகத்தை மொக்கையாக நடத்தினார். ஆனால் கவின் இதற்கு அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘முகின்.. ரொம்ப நல்ல பையன்.. மா.. இனிமே உன் கண்ல நான் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்” என்று எஸ்கேப் ஆக.. அபிராமிக்கு கிடைத்தது ஆயிரம் வாட்ஸ் பல்பு.

**

ஆக்ஷன் பிளாக் முடிந்ததும் அடுத்து ஆரம்பித்தது டிராஜிடி எனும் டிராமா. உணர்வுச்சுரண்டல் என்பது ரியாலிட்டி ஷோக்களின் ஆதாரமான தாரக மந்திரம். ஆனால் இதை வெளிப்படையாக இல்லாமல் நாசூக்காக செய்ய தனித்திறமை வேண்டும். ஆனால் இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘பப்பரப்பே’ என்று வெளிப்படையாக உருவாக்கப்பட்டது.

இதில் வந்த கேள்விகளைக் கவனியுங்கள். ‘உங்கள் வீட்டில் எத்தனை இழவு விழுந்தது.. எப்போது  விழுந்தது.. அந்த நாள் நினைவிருக்கிறதா, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.. மைக்கை அவர் கிட்ட கொடுங்க’ என்கிற மோடிலேயே அனைத்துக் கேள்விகளும் இருந்தன.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பல சோகமான அனுபவங்களும் தருணங்களும் இருக்கும். அவை தன்னிச்சையாக, பொருத்தமான தருணங்களில் இயல்பாக வெளிப்பட்டால்தான் அழகு. மாறாக வாயில் கையை விட்டு வாந்தியெடுக்க முயல்வதைப் போல செயல்பட்டால் அது இப்படிப்பட்ட எபிஸோடாகத்தான் அமையும்.

என்றாலும் மோகன் வைத்யா பகிர்ந்த அனுபவங்கள் மிக உருக்கம். குறிப்பாக காது கேளாத மனைவி ரயில் விபத்தை சந்தித்த கணத்தை அவர் விவரித்த போது ‘ச்சே..என்னடா இது’ என்று அனுதாபம் ஏற்பட்டது. போலவே ரேஷ்மா பகிர்ந்த அனுபவங்களும் கொடுமை. குடும்ப வன்முறை என்பது எத்தனை கொடிய விஷயம் என்பதை மீண்டும் உணர்ந்தோம்.

அறியாத வயதில் ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ திருமணத்தில் நிகழ்ந்த கொடுமைகளின் மூலமாகவாவது ரேஷ்மா உஷாராகி, தனது அடுத்த தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் விதியின் கையால் எழுதி செல்லப்படும் நாடகங்களை பல சமயங்களில் நாம் தடுத்திருக்க முடியாது.

‘போய் புள்ளைக் குட்டிங்களை படிக்க வைங்கடா’ என்கிற தேவர் மகன் கமல் மாதிரி “பொண்ணுங்களை அடிக்காதீங்கடா.. அவங்க தாங்க மாட்டாங்க” என்று உருக்கமாக மெசேஜ் சொன்னார் பாத்திமா. ஏறத்தாழ அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. சேரன் அப்படியே சாய்ந்து விட்டார். அடுத்த படங்களில் அவருக்கு ஏதாவது சீன் ஐடியா கிடைத்து விட்டதோ, என்னமோ.

ரேஷ்மா பகிர்ந்து கொண்ட துயர அனுபவங்களில் இருந்து ஆண்களுக்கான படிப்பினை இருந்தது. குடும்ப வன்முறை என்பது சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தை மட்டுமன்றி, வளரும் பிள்ளைகளையும உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடிய விஷயம். 
 
தன் வருங்கால கணவரைப் பற்றி அபிராமி அலட்டலாக பகிர்ந்து கொண்ட போது அவரது உடல்மொழி குமட்டலை வரவழைப்பது போல இருந்தது. ‘என்ன உடம்பு.. அப்படி வாங்குது’ என்று மதுமிதா சொன்னது சரியான விஷயம். ‘கவின் ஆல்ரெடி ரிஜக்ட்ட்’ என்று அம்மணி சொல்லியது.. ‘நரி.. திராட்சை’ கதையை நினைவுப்படுத்தியது.

**

“ஒருத்தர பார்த்தாலே அவங்க கேரக்ட்டரை கண்டுபிடிச்சுடுவேன்’ என்று அலப்பறை தந்து கொண்டிருந்தார் வனிதா “எங்கப்பன் இதைச் சொல்லிக் கொடுத்திருக்கான்’ என்று அவர் எகிறிக் கொண்டிருந்தது ஓவர். (பாவம், நாட்டாமை!) வனிதா டீமை கவனிக்கும் போது வனிதா அக்கா, முதல் சீஸன் காயத்ரியாகவும், அபிராமி ஜூலியாகவும் உருமாறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. சாக்ஷி ரைசாவை நினைவுப்படுத்துகிறார்.

ஷெரீனை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. அபிராமியும் சாக்ஷியும் பேசும் போதெல்லாம் பூனை போல பின்னாடியே வந்து ‘என்னப்பா.. ஆச்சு?” என்று மழுப்பலாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

சாண்டி செய்யும் காமெடியினால்தான் பல வருடங்களாக சிரிக்காமல் இருந்த மோகன் வைத்யா சிரித்துத் தீர்க்கிறாராம் இதுவே ஒரு காமெடி செய்திதான். சாண்டி செய்யும் அலப்பறைகள் பல சமயங்களில் கர்ணகடூரமாக இருக்கின்றன.

‘தெய்வதிருமகள்’ விக்ரம் மாதிரி.. லாஸ்லியா தனியாக நின்று பரிதாபமாக பாடிக் கொண்டிருந்தார். ஏதாவது பிக்கப் ஆகுமா என்று காமிராவும் அவரைச் சற்று நேரம் தொடர்ந்து பார்த்தது. ம்ஹூம்.. பட்டாசு புஸ்ஸூ. பாவம் லாஸ்லியா ஆர்மி. யூனிபார்மை தூக்கிப் போட்டு விட்டு விஆர்எஸ் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வழக்கம் போல் பெண்கள்தான் இந்த நிகழ்ச்சியை முன்னகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். பாவம்.. ஆண் போட்டியாளர்கள் ‘தேமே’ என்று உலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலகம் அவர்களினால் உருவாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். 

**

பிரேக் முடிந்து சீன் துவங்கும் போது காமிரா ஏதாவது ஒரு அரங்கப் பொருளில் குளோசப் கோணத்தில் நிலை கொண்டு பின்பு கட் செய்தோ அல்லது zoom out ஆகியோ காட்சிகளைத் தொடர்வது சிறப்பு. இதனால் செட் பிராப்பர்ட்டிகளின் அழகு நம் மனதில் நிற்கிறது.

எபிஸோடில் நடக்கும் கொடுமைகளைக் கூட ஒருவழியாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது முடியும் நேரத்தில் அசரிரீ மாதிரி ஒரு ‘வாய்ஸ்ஓவர்’ ஸ்டேட்மெண்ட் வருகிறதே.. அதை மட்டும் தாங்க முடியவில்லை. ‘பாஸ்.. அப்ப நாம காட்டியும் குடுக்கிறோம்.. கூட்டியும் கொடுக்கிறோமா’.. மோமெண்ட்.

suresh kannan

14 comments:

நுனிப்புல் said...

செம்ம...

Lakshmi Chockalingam said...

என் கேள்வி , எப்படி சீட்டு எடுக்கும் போது ஓரே மாதிரி 3 கேள்விகள் இருவருக்கும் வருகிறது ?

RAHUL ARVIND said...

அப்ப நீங்க ஆனந்தவிகடனில் எழுத மாட்டீர்களா?

CIBI CHAKRAVARTHY said...

அருமை சார். உங்கள் எழுத்திற்கு நான் ரசிகன்.

கார்த்திக் said...

அட்டகாசம்

இமேஜ் நெஸ்ட் ஷிவா said...

பிக்பாஸ் பாக்குறோமோ இல்லீயோ உங்க விமர்சனம் செம்ம இன்ட்ரஸ்ட்டிங்.

Paganeri said...

அருமை சில குறிப்புகள் ஆரம்பிச்சு முழு குறிப்பு எழுத ஆரம்பிச்சாச்சு..

Paganeri said...

அருமை சில குறிப்புகள் ஆரம்பிச்சு முழு குறிப்பு எழுத ஆரம்பிச்சாச்சு..

Smiling Ram said...

உங்க விமர்சனம் என்பது கோணார் கையேடு மாதிரி. இதை படிச்சாதான் திருப்தியாக இருக்குது.

Gopi Chakrabani said...

செம முதல் இரண்டு Paragraph படிச்சதும் சிரிப்பை அடக்க முடியவில்லை...
நன்றி தொடர்ந்து எழுதுங்கள்...

rajureva said...

நான் நினைத்ததும் அதுதான் காயத்ரி மாதிரியாக தனக்கு அடிமையாக இருக்க அபிராமியை வனிதா நன்றாக பிடித்து கொண்டார். மோகன் வைத்யா வின் குடும்ப கதை பாவமாக இருந்தாலும் பிக் பாசில் தான் சிரிப்பதாக சொன்னது over react ஆக தோன்றுகிறது. 90% camera conscious ஆக எல்லாருமே இருப்பதாக தோன்றுகிறது இதுவரை

Raju Krishnan -Ghana

Unknown said...

செம்ம சார்... பிக்பாஸ் பாக்கறத விட உங்க விமர்சனம் கலக்கல்... நாம நினைக்கறது சரியா என்று உங்க விமர்சனத்தை வைத்து புரிந்துக்கொள்ள முடிகிறது...கரெக்டா அந்த சீட்டை எடுத்து பேசுற எபிசோடை உணர்வு சுரண்டல்னு விமர்ச்சிருக்கீங்க...

malar said...

மிக அருமையா மனோ ரீதியா அலசி எழுதிய பதிவு .

அந்த அழுகாச்சி டாஸ்க்கால் அங்குள்ளவர்களின் மனவலிமை திடம் இன்னமும் வீக் ஆகும் .எப்பவும் மனவியல் ரீதியாஒருவரை உற்சாகமூட்டுவதற்கும் அழவைப்பதுக்கும் வித்யாசமிருக்கு .சந்தோஷத்தின் வீரியத்தைவிட துக்கத்தின் வீரியம் அதிகம் .athaithaan bigg boss expect panraar

இன்று நாம் நடக்கும் நடந்துகொள்ளும் விதம் நாளை நமக்கு கண்ணாடியில் பிம்பமாய் காட்டும் .(நாட்டாமைக்கு இது )
என்னைப்பொறுத்தவரை யாரையும் ஒரு அவசரப்பட்டு நியாயம் தீர்க்காம பொறுமையா இருக்கணும்னு சொல்ல தோணுது .ஆனா எங்கே நம் மக்கள் அதுக்குள்ளே ஆர்மி //எலிமினேஷன் என்றெல்லாம் அவசரப்ஸ்ட்றாங்க .
ஆக மொத்தம் உலக நாயகர் சொன்னபோல் வெளிப்படுவது அந்த 15 பேரின் முகங்களல்லா நமது அகத்தின் அழகுகளே (அழுக்குகளே )


AquaNasav said...

Super sir. I am waiting everyday