Wednesday, February 06, 2019

‘மனுசங்கடா’ – சாவிலும் துரத்தும் சாதியம்
‘மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் என்பது போன்ற மாற்று முயற்சிகளின் வருகையால் சமீபத்திய தமிழ் சினிமாவின் போக்கு மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் விவேக் நகைச்சுவைக்காட்சி ஒன்றில் சொல்வது போல ‘இவற்றையெல்லாம் அனுபவிப்பதா, வேண்டாமா?’ என்று சங்கடமாக இருக்கிறது. ஏனெனில் ஒரேயொரு பெருமுதலீட்டுத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வருகையும் அதன் மீது குவியும் கவனமும், இந்தப் போக்கை கலைத்துப் போட்டு விடும் ஆபத்து இருக்கிறது. இது போன்ற ஆபத்து கடந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்த மாற்று முயற்சி திரைப்படங்களின் வரிசையில் சமீபமாக இணைந்திருப்பது ‘மனுசங்கடா’. எழுத்தாளரும் இயக்குநருமான அம்ஷன்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமையோடு, ‘இந்தியன் பனோரமா’வில் விருதையும் இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது. ஆனால், சுயாதீன சினிமாவும் சிறுமுதலீட்டுத் திரைப்படமும் எதிர்கொள்ளும் அதே விதமான பிரச்சினைகளை மைய வெளியில் வெளியாகும் போது இதுவும் சந்தித்திருக்கிறது. பெரிய திரைப்படங்களோடு மோதும் பின்புலம் இல்லை. போதுமான அரங்கங்கள் இல்லை. விளம்பரம் இல்லை. தற்போது சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சில அரங்குகளில், சில காட்சிகளில் மட்டும் வெளியாகியிருந்தது. என்றாலும் நல்ல முயற்சிகளை வரவேற்கும் சினிமா ஆர்வலர்களின் ஆதரவினால் குறிப்பிட்ட சதவீதத்தினரின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. பார்வையாளர்களின் ஆதரவு பெருகினால்தான் இது போன்ற மாற்று முயற்சிகளின் வருகை அதிகரிக்கும்.

**

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவர் பல்வேறு துன்பங்களை, அவமதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்த பின்பும் கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டே வருகிறது என்பது கசப்பான உண்மை. இறந்தவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பது தொடர்பாக பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆதிக்கச் சாதியினரின் ஆக்கிரமிப்புகள் போக எளிய சமூகத்தினருக்கென மயானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை எளிதில் கடந்து செல்ல இயலாதவாறான மோசமான வழித்தடங்களையும், ஊருக்கு வெளியே வெகு தொலைவிற்கு செல்லுமாறான அவலத்தையும் கொண்டிருக்கின்றன.  இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கிராமப்புறங்களில் இந்த அவலம் தொடர்கிறது. ‘சமரசம் உலாவும் இடமாக’ மயானங்கள் இல்லை. அப்படியொரு பிரச்சினையைத்தான் ‘மனுசங்கடா’ பேசுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படியொரு உண்மைச் சம்பவம்தான் கீழே விவரித்திருப்பது.

நாகை மாவட்டம், வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டசேரியில் வாழ்ந்த செல்லமுத்து என்கிற தலித் பெரியவர் 2016-ம் ஆண்டில் இறந்து போகிறார். அவரது உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இறந்த உடல்களை எடுத்துச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பாதை எளிதில் செல்ல முடியாததாக இருக்கிறது. இவற்றை சரி செய்து தருவோம் என்று உறுதியளித்திருந்த அரசாங்க இயந்திரம் வழக்கம் போல் மெத்தனமாக இருக்கிறது. எனவே பொதுப்பாதையில்தான் எடுத்துச் செல்வோம் என்று தலித் சமூகத்தினர் தங்கள் உரிமையைக் கோருகிறார்கள். இது தொடர்பாக முன்பே கலாட்டாக்கள் நிகழ்ந்திருக்கின்றன.

செல்லமுத்துவின் பேரன் கார்த்திக் அன்றிரவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை இதற்கான பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகும் ஆதிக்கச் சாதியினர் இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. பொதுப்பாதையை கடக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர். உள்ளூர் காவல்துறையும் அரசாங்க அதிகாரிகளும் அவர்களின் பக்கமே நிற்கிறார்கள். ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள். பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்’ என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்கள் உரிமையை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இறந்த உடல் கிடத்தப்பட்டிருக்கும் வீட்டின் மின்சாரம் பிடுங்கப்படுகிறது. இதனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் உடல் அழுகத் தொடங்குகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூன்று நாட்கள் கடந்தும் நிலைமை சீராகவில்லை.

நீதிமன்ற உத்தரவைப் பெற்றும் தங்களின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்னும் உளைச்சலில் மண்எண்ணைய் ஊற்றி தங்களைக் கொளுத்திக் கொள்ள முயன்று தடுக்கப்படுகிறார்கள். நிலைமை மோசமாகவே, ‘பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லலாம்’ என்கிற வாக்குறுதியை அரசாங்க அதிகாரிகள் பாவனையாக தருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நம்பி சடலத்தை எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் ‘நீங்கள் பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. காட்டுப்பாதையில்தான் செல்ல வேண்டும்’ என்கிற ஆதிக்கச்சாதியின் குரலை அதிகார தரப்பும் எதிரொலிக்கிறது. இந்த நம்பிக்கைத் துரோகத்தால் போராடத் துவங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்துத் துரத்தியும் கைது செய்தும் அப்புறப்படுத்தும் காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி தாங்களே அதை காட்டுப்பாதை வழியாக தூக்கிச் சென்று அரையும் குறையுமாக அடக்கத்தைச் செய்து முடிக்கிறார்கள்.

இது ஒரு உதாரணச் சம்பவம்தான். இது போல் பல துயரச் சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் நிறைந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஏறத்தாழ அப்படியே திரைக்கதையாக்கி ‘மனுசங்கடா’வை உருவாக்கியிருக்கிறார் அம்சன் குமார்.

வெகுசன சினிமாவின் அலங்கார ஆடம்பரம் எதுவுமில்லாமல், ஓர் ஆவணப்படத்துக்குரிய எளிமையான அழகியலோடு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் நிகழும் சம்பவங்கள் நேர்க்கோட்டுத்தன்மையோடு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளன. எவ்வித செயற்கையான திணிப்பும் இல்லாமல் நூல் பிடித்தது போல் தொடர்ச்சியாகப் பயணிக்கும் கதையாடலாக உள்ளது. பெரும்பான்மையான காட்சிகளில் இயற்கையான சப்தங்களே பயன்படுத்துள்ளன. மொத்தப் படத்திற்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை அவசியமான இடங்களில் ஒலிக்கிறது. (இசை: அரவிந்த் சங்கர்)

**

நகரத்தில், ஒரு ஸ்டீல் கம்பெனியில் பணிபுரியும் கோலப்பனுக்கு அன்றைய நாள் துயரத்துடன் விடிகிறது. ஊரில் அவனுடைய தந்தை இறந்து போன தகவல் கிடைப்பதால் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு கிளம்புகிறான். இந்தத் துயரத்தின் ஊடாக இன்னொரு தகவலும் அவனை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது. கோலப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுடைய தந்தையின் உடலை பொதுப்பாதையின் வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் மறுக்கின்றனர். இந்த விஷயம் ஏற்கெனவே அந்த ஊரில் தொடர்கதையாக இருக்கவே கோபமுறும் கோலப்பன், தன் சமூகத்தினருக்காக பாடுபடும் தலைவரை அணுகி, தன் தந்தையின் சடலத்தை மரியாதையுடன் அடக்கம் செய்ய நீதிமன்றத்தை அணுகுகிறான். அதற்கு முன் அவன் சந்திக்கும் இன்ஸ்பெக்டரும், ஆர்டிஓ-வும் மழுப்பலான பதில்களையே தருகிறார்கள். நல்லுள்ளம் படைத்த ஒரு வழக்கறிஞர் இவருக்கு உதவ முன்வருகிறார். அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதிக்க சாதியின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘இன்னமும் மூன்று மாதத்தில் அவர்களுடைய சுடுகாட்டுப்பாதையை செப்பனிட்டு தருவோம்’ என்று தற்காலிக சமாதானத்தைச் சொல்லி தங்களின் தரப்பிற்கு சாதகமாக பேசுகிறார். பொதுப்பாதையில் சடலத்தை அனுமதித்தால் ‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்’ என்கிற காரணத்தையும் சொல்கிறார்.

ஆனால் நீதிபதி இந்த வாதத்தை ஏற்பதில்லை. ‘ஒருவர் இறந்த பிறகும் கூட அவருக்கு கிடைக்க வேண்டிய இறுதி மரியாதையைக் கூடவா தர முடியாது?” என்கிற நியாயமான கேள்வியுடன் கோலப்பனின் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு தருகிறார். இனி சிக்கல் இருக்காது என்கிற நம்பிக்கையுடன் கோலப்பன் ஊர் திரும்பினாலும் அவனுக்குள் சந்தேகம் கனன்று கொண்டேயிருக்கிறது. அவன் நினைத்தபடியே ஆகிறது. நீதிமன்ற தீர்ப்பை ஆதிக்கச் சாதியினர் ஏற்பதில்லை. காவல்துறை அதிகாரியும் ஆர்டிஓவும் அவர்களுக்கு சாதகமாக சமாதானம் பேசத்தான் மறுபடியும் வருகிறார்கள். பிறகு மேலே குறிப்பிட்ட உண்மைச் சம்பவத்தில் நிகழும் அத்தனை விஷயங்களும் இதில் நடக்கின்றன.

இறுதிக்காட்சியில் தன் தந்தையின் பிணம் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என்பது கூட தெரியாமல் தரையில் வீழ்ந்து ‘கோ’வென்று கதறி அழுகிறான் கோலப்பன். பின்னணியில் கவிஞர் இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள…மனுசங்கடா நாங்க மனுசங்கடா.. என்கிற புகழ்பெற்ற பாடல் ஓங்கி ஒலிக்கிறது. இந்த திரைப்படத்திற்கென பிரத்யேகமான வரிகளை எழுதித் தந்திருக்கிறார் இன்குலாப். திரைப்படத்திற்காக அவர் எழுதிய ஒரே பாடல் இதுதான்.

**

எடுத்துக் கொண்ட விஷயத்தை கோர்வையாகவும், பிரச்சாரத் தொனியில்லாமலும் எவ்வித கவனச்சிதறல்கள் உருவாகாமலும் நேர்மையாக அணுகியிருக்கிறது ‘மனுசங்கடா’. சுயாதீன சினிமா என்பதால் அதற்குரிய பலமும் பலவீனங்களும் இருக்கின்றன. சமயங்களில் ஒரு ‘டெலிபிலிம்’ போல சாதாரணத் தொனியில் காட்சிகள் நகர்கின்றன. சில நடிகர்களின் பங்களிப்பு நாடகப் பாணியில் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. இது போன்ற சமூகநீதியை உரையாடும் படங்கள் ‘பிலிம் பெஸ்டிவல்’ வட்டத்தைத் தாண்டி வெகுசன மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இருக்க வேண்டும். அதற்காக அதிக சமரசங்கள் இல்லாமல் சில அவசியமான சுவாரசியங்களை இணைக்கலாம். வடசென்னையில் உள்ள ஓர் அரங்கில் நான் இந்த சினிமாவைப் பார்க்கும் போது இருபத்தைந்திற்கும் குறைவான பார்வையாளர்களே இருந்தனர். அவர்களில் சில இளைஞர்கள் படத்தைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தனர். படத்தின் மையம் உணர்ச்சிகரமாக அவர்களை அணுகவில்லை. இது இயக்குநரின் தவறு அல்ல, என்றாலும் இந்தப் பார்வையாளர்களையும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. இந்த இடத்தில்தான் ‘மெட்ராஸ்’ ‘பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்கள் வெல்கின்றன.

கோலப்பனாக ராஜீவ் ஆனந்த் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் எந்நேரமும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு யாரையாவது முட்டப்போவது போன்றே பெரும்பான்மையான காட்சிகளில் தெரிந்த மிகையுணர்ச்சியை தவிர்த்திருக்கலாம். ‘உங்க அழுக்கை எல்லாம் நாங்கதானே சுத்தம் பண்றோம். இந்தப் பாதைல போனா உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று உணர்ச்சிகரமாக இவர் கேட்கும் காட்சி சிறப்பானது. வழக்கறிஞராக நடித்திருக்கும் நாடகவியலாளர் கருணா பிரசாத்தின் நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. இறந்தவரின் மனைவியாக நடித்த, கூத்துப்பட்டறை ‘மணிமேகலை’க்கு ஒப்பாரிப்பாடல் பாடுவதைத் தவிர வேறு காட்சியில்லை. கோலப்பனின் வருங்கால மனைவியாக நடித்த ஷீலா ராஜ்குமாரின் இயல்பான நடிப்பு கவர்ந்தது. சில பாத்திரங்களுக்கு தோற்றப் பொருத்தமும் உடல்மொழியும் பொருந்தி வராததைக் கவனத்திருக்கலாம். கோலப்பனின் உறவினர்களாக நடித்திருப்பவர்களின் தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருந்தது.

பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவு ஆவணத்தன்மைக்குரியதைக் கொண்டிருந்தது. தொடர்புள்ள காட்சிகளின் அருகே நின்று பார்வையாளர் கவனிக்கக்கூடிய தன்மையுடன் அமைந்திருந்தது.

உ.வே.சாமிநாதய்யர், சர்.சி.வி.ராமன், சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமைகள் தொடர்பாக இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் அம்ஷன் குமார். தவில் வித்வான் யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி தொடர்பான ஆவணப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கி.ரா.வின் ‘கிடை’ என்கிற குறுநாவலையொட்டி இவர் இயக்கிய ‘ஒருத்தி’ என்கிற திரைப்படம், ‘இந்தியன் பனோரமா’வில் திரையிடப்பட்டது. ‘மனுசங்கடா’ இவரது இரண்டாவது திரைப்படமாகும்.

எளிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளை அவர்களின் நோக்கில், கோணத்தில் உரையாடும் கலை, இலக்கியம் என்பது தமிழில் மிக குறைவு. இது போன்ற சூழலில் ‘மனுசங்கடா’ போன்ற திரைப்படங்கள், மாற்று முயற்சிகள் அதிகம் உருவாக வேண்டும். இவை பார்வையாளர்களின் ஆதரவையும் பெற வேண்டும். 


(குமுதம் தீராநதி - நவம்பர் 2018 இதழில் பிரசுரமானது)


suresh kannan

No comments: